பிராயச் சித்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2024
பார்வையிட்டோர்: 168 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று அம்பாரை, மாவட்ட அரச ஆதார வைத்தியசாலை வெகு சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. 

அங்கு வழமையாகவே மருந்து பெறுவதற்காக வெளி நோயாளர் அதிக அளவிலே மொய்ப்பர். அன்று புதன் கிழமை ‘கிளினிக்’களுமிருந்ததால் திமு திமு வென்று ஜனத்திரள். 

அம்மருத்துவ மனையின் பிரதான வாயிலை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருந்த பிரதான மண்டபத்தில் வாயிலைத் தொட்ட படி, தென்புறமாய், வழியை நோக்கியவாறு போடப்பட்டிருந்த முப்பத்தெட்டு நாற்பது கதிரைகளிலும் அவற்றின் எதிரே வடபுற மாய் சுவரின் பக்கமாக இடப்பட்டிருந்த இரு நீண்ட வாங்குகளிலும் வந்தவர்களில் ஒரு பகுதியினர் அமர்ந்திருந்தனர். 

சிலர், அங்குமிங்கும் அலைமோதினர். வேறு சிலர், அங்குமிங்கும் கூடிக் கூடி நின்றனர். அம்மண்டபத்தின் மத்தியி லிருந்து வட திசை நோக்கிச் செல்லும், ஆறு ஏழு அடி அகலமான வழியில் ‘கிளினிக்’களுக்கு வந்திருந்தவர்களின் ‘கியூ’ வரிசைகள். அவ்வழியின் இரு மருங்குகளிலும் அமைந்திருந்த அறைகளில், அவர்களுக்கான ‘கிளினிக்’கள் நடந்து கொண்டிருந்தன. 

மண்டபத்தின் வட திசையில் அமைந்திருந்தது போல வழியும், அறைகளும் மண்டபத்தின் தென் திசையிலும். 

அவ்வழியிலோ, மருந்து பெறுவதற்காக வந்திருந்த வெளி நோயாளர்களின் ‘கியூ’ வரிசை, வைத்தியசாலையின் முன்னால் சென்ற பிரதான சாலை போல், நீண்டு நெளிந்து கிடந்தது. 

மண்டபத்தின் தென்புறமாய், மண்டபத்தோடு ஒட்டியிருந்த முதலாவது அறையில், டாக்டர்கள் இருவர், வரிசையில் வந்தவர் களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தனர். 

மெல்ல மெல்ல அக்’கியூ’ வரிசை கரைந்து கொண்டிருந்தது. 

மண்டபத்தின் வடபுறச் சுவரில், வழியின் மேல் பொருத்தப் பட்டிருந்த சுவர்க்கடிகாரம் பத்து மணியைக் காட்டிக் கொண்டிருந்தது. 

பிரதான வாயிலின் முன்பாய், விரைவாக வந்து நின்ற ஒரு காரிலிருந்து விபத்துக்குள்ளான ஒருவரை, அவரைக் கொண்டு வந்திருந்த இருவர் தூக்கியெடுத்து, அங்கே வருவிக்கப்பட்ட, ஒரு ‘ஸ்ரெச்சரில்’ கிடத்தினர். 

வைத்தியசாலை ஊழியர் ஒருவர், அந்த ‘ஸ்ரெச்சரை’ பிரதான மண்டபத்தின் ஊடாக ஆட்களை விலக்கியவாறு தள்ளிக் கொண்டு போய் தென்புறமாய் மண்டபத்தோடு ஒட்டியிருந்த முதலாவது அறைக்குள் நிறுத்தினார். விபத்துக்குள்ளானவரைக் கொண்டு வந்திருந்தவர்களும் கூட வந்திருந்தனர். 

அந்த அறைக்குள் வெளிநோயாளரைப் பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டர்கள் இருவரும் தமது பணியை நிறுத்தி விட்டு, விபத்துக்குள்ளானவரைத் தாங்கி வந்திருந்த ‘ஸ்ரெச்சரை’ப் பார்த்தனர். அவர்களில் டாக்டர் பௌமி, தீயிலே மிதித்து விட்ட வன் போல் தனது ஆசனத்தைப் பின்னே தள்ளிவிட்டு, துள்ளி எழுந்தான். அந்த ‘ஸ்ரெச்சரி’ன் பக்கமாக வந்து அதிலே, தலை யும், மார்பும், கால் பகுதியும் இரத்தம் தோய்ந்த நிலையிலே மயக்கமுற்றவராய்க் கிடந்த விபத்துக்குள்ளானவரைப் பார்த்தான் டாக்டர் பௌமி. அவனுக்கு பகீரென்று நெஞ்சுக்குள்ளும் நெருப்புப் பற்றிக் கொண்டது போலிருந்தது. அண்ணாந்து அவரைக் கொண்டு வந்திருந்தவர்களைப் பார்த்தான். 

“இது பாயிஸ் சேர் அல்லவா… என்ன நடந்த…” என்றான். 

“ஓம்… பாயிஸ் சேர்தான்… இவர் காலையில ஊரிலரிந்து ஏதோ ஒரு வேலையா மோட்டச் சைக்கிள்ள அம்பாரைக்கு வந்திருக்கவேணும்…. இப்ப கொஞ்ச நேத்தைக்கு முதல்லதான் டவுண்ல வெச்சி இவர் ஓடிவந்த மோட்டச் சைக்கிளும், ஒரு ஆட்டாவும் மோதியிருக்கு. இவர்ர காலத்திக்கு அம்பாரைக்கு வேங்கில் ஒரு வேலையா வந்த நாங்களும் அவ்விடத்திக்கு வந்து சேர்ந்திட்டம். உடனேயே நாங்க கொண்டு வந்திருந்த காரிலேயே இவர இஞ்ச கொண்டு வந்தும் சேர்த்திட்டம்.” ஆசிரியர் பாயிஸைக் கொண்டு வந்திருந்தவர்களில் ஒருவர் பதிலளித்தார். 

டாக்டர் பௌமி,தனது கையில் வைத்திருந்த ‘ஸ்டெதஸ் கோப்பை’ காதுகளில் பொருத்தி, ஆசிரியர் பாயிஸின் இதயத் துடிப்பை அவதானித்தான். அவனுள் வேகம் இறக்கை விரித்தது. தனக்கு எதிரே நின்ற பெண் தாதிகள் மூவரையும் அவசர அவசரமாகப் பார்த்தான். 

“உடனேயே இவரை வார்ட்டில் சேர்ப்பதற்கான ஒழுங்கு களைச் செய்யுங்கள். நானும் இதோ வந்துவிடுகிறேன்.” சிங்களத் தில் பணித்துவிட்டு மேசையின் பக்கமாகத் திரும்பினான் பௌமி. 

வைத்தியசாலை ஊழியர் அந்த ஸ்ரெச்சரை அங்கிருந்து வெளியிலே தள்ளிக் கொண்டு விரைந்தார். 

டாக்டர் பௌமியின் கட்டளையைத் தலைமேற்கொண்ட பெண் தாதிகளோ, வெண் புறாக்களாய், அந்த வைத்தியசாலை ஊழியரை முந்திக் கொண்டு பறந்தனர். 

உடனேயே டாக்டர் பௌமியும், ஆசிரியர் பாயிஸை எடுத்துப்போயிருந்த ‘வார்ட்’களின் பக்கமாகவிருந்த அந்த அறைக்கு வந்து சேர்ந்தான். 

அவன், ஆசிரியர் பாயிஸினது தலையின் இடது பக்கமாய் குத்திப் பிளந்திருந்த காயத்துக்கும், இடது கை மணிக்கட்டு, இடது கால் தொடை, வலது கால் கெண்டை, நெஞ்சு ஆகிய வற்றில் கீறிக் கிழித்திருந்த காயங்களுக்கும், மற்றும் காயங்களுக் கும் அவசர சிகிச்சை மேற்கொண்டான். 

சில நிமிடங்களில், ஆசிரியர் பாயிஸ், இரண்டாம் வார்ட் டிலே, வட திசையில் மூன்றாவது கட்டிலில் வைக்கப்பட்டு, அவ ருக்கு சேலைன் பாய்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப் பட்டன. 

டாக்டர் பௌமி வார்ட்டுக்குள்ளும் வந்து ஆசிரியரைக் கவனித்தான். 

பாயிஸுக்கு, சேலைன் பாய்ந்து கொண்டிருந்தது டாக்டர் பௌமிக்கு, மிக்க திருப்தியை அளித்தது. என்றாலும், அவர் பிரக்ஞையின்றிக் கிடந்தது பௌமிக்கு கவலையைத் தோற்று வித்தது. 

பாயிஸுக்கு உணர்வு திரும்பும் வரை நிம்மதி இழந்து தவித்தான டாக்டர் பௌமி. அவனுக்கு, எதுவும் செய்யத் தோன்ற வில்லை. வார்ட்டுக்குள் அங்குமிங்குமாக நடந்தான். 

ஆசிரியர் பாயிஸுக்கு, உணர்வு திரும்ப ஒன்று ஒன்றரை மணித்தியாலங்கள் ஆகின. அதன் பின்பே டாக்டர் பௌமியும் நிம்மதியடைந்தான். 

அவன், வார்ட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த பாயிஸை வைத்தியசாலையில் கொண்டுவந்து சேர்த்தவர்களில் ஒருவரை தனக்கு அருகிலே அழைத்து அவரிடம் இவ்வாறு கூறினான்: 

“பாயிஸ் சேருக்கு, காயங்கள்ளரிந்து ரெத்தம் கொஞ்சம் கூட வெளியே வந்திட்டுப் போலவும் தெரியிது. சேலைன் பாய்ச்சி முடிஞ்சத்துக்குப் பிறகு அவருக்கு ரெத்தமும் பாய்ச்ச வேணும்… அதுக்கான ஒழுங்குகளும் செய்யணும்… இதற்கிடையில, சேர், எக்சிடன்ட் பட்டு அவர் இங்கே வாட்டில இருக்கிற விசயம் ஊர்ல அவர்ர ஆக்களுக்குத் தெரியுமோ என்னவோ தெரியாது.” 

“காத்தான்குடிதான் பாயிஸ் மாஸ்டர் பிறந்த இடம். ஆனா… அவர் நிந்தவூர்லதான் கலியாணம் முடிச்சிருக்கார். நாங்க நிந்தவூர்ல எங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கு டெலிபோன் கோளெடுத்து பாயிஸ் மாஸ்டர்ர பொஞ்சாதிக்கு விசயங்களச் சொல்லச் சொல்லி இஞ்ச நடந்த எல்லா விசயங்களையும் அவருக்கிட்ட விளக்கமா எடுத்துச் சொல்லியிருக்கம். இன்னம் கொஞ்ச நேத்தையால அங்கிருந்தும் அவர்ர ஆக்கள் இஞ்ச வந்து சேந்திருவாங்க.” 

“ஆ… அப்ப விசயங்கள நீங்கதான் அறிவிச்சிருக்கிங்க… அதக் கேக்கிறத்துக்குத்தான் உங்களக் கூப்பிட்ட… சரி…” 

டாக்டர் பௌமி திரும்பி நடந்தான். அவனுடன் உரை யாடிக் கொண்டிருந்தவரும் வார்ட்டுக்கு வெளியே அடி பதித்தார். 

டாக்டர் பௌமி, அந்த வார்ட்டை நோக்கியவாறு அதன் கிழக்குக் கரையிலே போடப்பட்டிருந்த ஒரு மேசையின் பக்கமாகக் கிடந்த ஒரு கைக் கதிரையில் வந்தமர்ந்தான். 

“ம்..ஹூ…” என்று நெடு மூச்சொன்றை விட்டுக் கொண்டான். தனக்கு எதிரே வலது புறமாய் மூன்றாவது கட்டிலில் ‘சேலைன்’ பாய்ந்து கொண்டிருந்த தனது ஆசிரியரைப் பார்த்துக் கொண்டி ருந்தான். அவனின் மனத்திலே பத்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. 


அப்பொழுது, பௌமி, சாய்ந்தமருதுவில் அமைந்திருந்த பிரபல்யம் வாய்ந்த ஒரு கல்லூரியில், க.பொ.த. உயர்தர விஞ்ஞா னப் பிரிவில் இறுதி வருட மாணவன். பரீட்சைக்கு சில மாதங்களே இருந்த ஒரு சூழ்நிலையில் ஒரு நாள்… 

வழமை போல கல்லூரியில், சரியாக காலை 8.00 மணிக்கு, ‘கணீர்…கணீர்…’என்று முதலாவது பாடவேளை மணி ஒலித்தது. 

அப்போது, கல்லூரியின் கிழக்குப் பக்கமாகவிருந்த மூன்று மாடிக்கட்டடத்தின் முதலாவது மாடியில், பிரதான வாயிலின் தென்புறமாய் அமைந்திருந்த உயிரியல் விஞ்ஞான மாணவர் வகுப்பறையிலும் அமைதி அரியாசனமேறியது. 

கம்பீரமாக வந்த ஆசிரியர் பாயிஸ், அவ்வகுப்பறைக்குள் நுழைந்து, கைக் கதிரையைப் பின்னே இழுத்து விட்டு அதன் முன்னே இடப்பட்டிருந்த ஆசிரியர் மேசையில் தான் கொண்டு வந்திருந்த பைல், குறிப்புக் கொப்பிகள், புத்தகங்கள் ஆகியவற்றை அப்படியே வைத்து விட்டு நிமிர்ந்தார். ஆசிரியரைப் பார்த்ததுமே வகுப்பிலிருந்த அத்தனை மாணவரும் எழுந்து நின்றனர்; “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றனர். 

ஆசிரியரும், “வ அலைக்குமுஸ்ஸலாம் இருங்கள்…” என்று விட்டு தனது ஆசனத்திலே அமர்ந்து கொண்டார். 

அவ்வகுப்பில், பதினைந்து பதினாறு மாணவர்களிருந்தனர். அத்தனை பேரின் கவனமும், ஆசிரியரின் மேல் பதிந்திருந்தது. 

ஆசிரியர், தான் கொண்டுவந்து மேசைமீது வைத்திருந்த பைல், குறிப்புக் கொப்பிகள், புத்தகங்கள் போன்றவற்றைச் சரி செய்து விட்டு வகுப்பைப் பார்த்தார். வதனம் சிரிப்பை விழுங்கி விட்டு ஏப்பம் விட்டது. 

தனது பாடங்களில் கரிசனையாகவிருந்த ஆசிரியர், தனது பாடங்களுக்கு வராத மாணவர் மேல் மிக்க கண்டிப்போடு நடந்து கொள்ள எண்ணினார். 

“எங்க மொனிட்டர்… பெரம்பெடுத்து வா…” என்று விட்டு, “நேற்று… பள்ளிக்கு வராத ஆக்கள் இஞ்சால வாங்க…” என்றவாறு வதனத்தை இன்னும் கடுமையில் தோய்த்துக் கொண்டார். 

நான்கு மாணவர்கள் பதட்டத்தோடு கால்கள் பின்னப் பின்ன வகுப்பின் முன்னே, ஆசிரியரின் பக்கமாக வந்து நின்றனர். 

ஆசிரியர், மாணவர்தலைவர் மேசையிலே கொண்டுவந்து வைத்த பிரம்பை கையிலே எடுத்துக் கொண்டு எழுந்தார்;மாண வரை அண்மினார். 

“நேற்று பள்ளிக்கு வந்திருந்தா என்ட பாடங்கள் விடுபட் டிருக்க மாட்டாதே. நேற்று சில முக்கியமான விசயங்களப் பார்த்தோமே…சே…” அலுத்துக் கொண்டார் ஆசிரியர் பாயிஸ். 

ஆழமான ஆற்றில், தலையைப் பிடித்து அப்படியே அமிழ்த்துவது போன்றிருந்தது மாணவர்களுக்கு. 

“நேற்று ஏன் பள்ளிக்கு வரல்ல…” ஆசிரியர் ஒவ்வொரு வரிடமும் வினவினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை முன்வைத்தனர். என்றாலும், அவர்கள் கூறிய எந்தக் காரணமும் முக்கியமானதாகப் படாமையினால், அவர், எவரிடமும் தலை சாய்ந்து போகவில்லை. 

“நீட்டு கைய… நீட்டு கைய…”என்றார். மாணவர்களும், மௌனமாய் ஒவ்வொருவராக கையை நீட்டி நீட்டிக் கொடுத்தனர். ஆசிரியரின் கையிலிருந்த பிரம்பு வெறி கொண்டு அவர்கள் ஒவ்வொருவரின் கைப்படத்திலும் மும்மூன்று முறை “விசுக் விசுக்’ கென்று பாய்ந்து பாய்ந்து தாக்கியது. 

நான்காவது மாணவன் பௌமியின் முறை வந்தது. 

“நேற்று ஏன் பள்ளிக்கு வரல்ல…” ஆசிரியர் பாயிஸ், பௌமியிடமும் கடுமையான தொனியில் வினவினார். 

“நேற்று எங்கட குடும்பத்துக்க ஒரு கலியாணம். அதுக்குப் போன சேர்… அதுதான் நான்…” 

”உங்களுக்குப் படிப்பில கவனமில்ல… என்ன கலியாணமும் மண்ணாங்கட்டியும்… நீட்டு கைய…” 

“இல்ல சேர்… எனக்கு அடிக்க வேணா… எங்கிட வாப்பா தான் என்ன கலியாண வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போன… அதுவுமில்லாம எங்கட வீட்டில இதுவரையில எங்கட வாப்பாவோ, உம்மாவோ யாருமே என்ன அடிக்கவுமில்ல…” பௌமி கையை நீட்டாது, நிலத்திலே ஆழமாய் வேரோடிவிட்ட ஒரு விருட்சம் போல் நின்றிருந்தான். 

“ஒங்கட குடும்பம் பேர் பெற்ற ஒரு பெரிய குடும்பமாக விருக்கலாம்… உங்கட வாப்பாவும் ஒரு புறக்டராகவிருக்கலாம்… நீங்க எப்படித்தான் இருந்தாலும் எனக்கொண்டுமில்ல… இஞ்ச எல்லோரும் எனக்குச் சமன்தான். நீட்றா கைய…” ஆசிரியர் பாயிஸ் பிரம்பை உயர்த்திக் கொண்டு வேங்கை போல் பாய்ந்தார். 

“தயவு செய்து அடியாதங்க சேர்…” இப்போதும் பௌமி முன்பு போலவே கையை நீட்டாது நின்றிருந்தான். 

பௌமி, மாணவர் மத்தியில் தனது கட்டளையை உதா சீனம் செய்தது ஆசிரியர் பாயிஸுக்கு மேலும் ஆத்திரத்தைக் கிளறி விட்டது. 

அவரின் விழிகளிலிருந்து நெருப்புப் பொறி பறந்தது. கையிலிருந்த பிரம்பை மேசை மீது வீசி எறிந்தார். 

“என்ட ரெண்டு பாடங்களுக்குமுரிய கொப்பிகள் எடுத்துக் கிட்டு வா…” பௌமியிடம் கடுமையான கட்டளை. 

அவனோ, தனது இடத்துக்கு விரைந்து ஆசிரியர் வேண்டிக் கொண்டபடி, விலங்கியல், தாவரவியல் ஆகிய அவரது இரு பாடங்களுக்குமுரிய இரு கொப்பிகளையும் எடுத்து வந்து அவரின் கரத்தில் ஒப்படைத்தான். ஒவ்வொன்றும் நூறு, நூறு தாள்கள் கொண்டதாகவிருக்க வேண்டும். அல்லது அதைவிடவும் அதிக மாகவிருக்க வேண்டும். நன்கு கனமாகவிருந்தன. 

ஆசிரியர் பாயிஸ், தான் வாங்கி எடுத்த கொப்பிகளில் ஒன்றை மேசைமீது போட்டு விட்டு, கையிலிருந்ததை விரித்து சுக்கு நூறாகக் கிழித்து கீழே போட்டார். மறுகணமே,மேசையில் இட்ட மற்றைய கொப்பியையும் தாவி எடுத்து அதனையும் முன்பு கிழித்தது போலவே கிழித்து கீழே சிதறவிட்டார். அப்போதும் அவரது ஆத்திரம் அடங்கவில்லை. கிழிக்கப்பட்ட கொப்பிகளின் துணிக்கைகள் அனைத்தையும் அப்படியே அள்ளியெடுத்து வகுப்பறைக்கு வெளியே வெறுந்தரையிலே கொண்டுவந்து போட்டார். நீளக் காற்சட்டைப் பைக்குள்ளிருந்து, தீப்பெட்டியை எடுத்து அவற்றிற்கு நெருப்பு வைத்தார். தீ,நாக்கை நீட்டி நீட்டி பசியைத் தணித்துக் கொண்டிருந்தது. சில வினாடிகள் அதனை அவதானித்துவிட்டு வகுப்பறைக்குள் மீண்டார் ஆசிரியர் பாயிஸ். 

அவரின் வருகையினால், வகுப்பின் மேற்குப்புற ஜன்னல் வழியாய், வெளியே நிகழ்ந்த அக்காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்த பௌமியும், வகுப்பின் சக மாணவர்களும் கல்லில் விழுந்த கண்ணாடிப் பாத்திரம் போல் சிதறினர். 

பௌமி மட்டும், ஆசிரியரின் முன்னே வந்து நிற்க, ஏனைய வர்கள் தத்தம் இடங்களுக்கு விரைந்து இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். 

ஆசிரியர் பாயிஸ், தன் எதிரிலே வந்து நின்ற பௌமியை வேண்டாத ஒரு பொருளைப்போல் பார்த்தார். 

“இன்னும் என்னத்துக்கு இஞ்ச நிண்டுக்கிட்டிருக்காய்… போ…வெளியே…நீ இனிமேல் ஒரு நாளும் என்ட பாடங்களுக்கு வந்திரப்பொடா…” பாம்யாய்ச் சீறினார். 

அதன் பின்பும் பௌமி, அங்கு நிற்க விழையவில்லை. பெரிதும் கலக்கமுற்றவனாய், வகுப்பறையை விட்டு வெளியேறினான். 

மறுநாள், அவனது தந்தை அவனையும் அழைத்துக் கொண்டு வந்து, கல்லூரியின் காரியாலயத்தில் அதிபரைச் சந்தித்தார். கல்லூரியில், தனது புதல்வனுக்கு நடந்த விடயத்தை எடுத்துக் கூறினார். 

ஏற்கனவே, அதிபருக்கு இவ்விசயம் தெரிந்திருந்தும் எது வுமே தெரியாதவர் போல் பாசாங்கு செய்தார். அதுமட்டுமல்ல, அவர், தனது உரையின் போது ஆசிரியரைக் கண்டிக்காமல் விட்டு விட்டாலும், வந்தவர்களுக்கு ஓர் ஆறுதல் வார்த்தையாவது பகரவுமில்லை. 

அதிபரின் இந்நிலமையினால் மேலும் வெறுப்படைந்த பௌமியின் தந்தை, உடனேயே தனது புதல்வனையும் அழைத் துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். 

ஆசிரியர் பாயிஸின் கொடிய நடவடிக்கையினால் மனம் குழம்பிப்போன பௌமி, அவ்வாண்டு நடைபெற்ற, க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை. என்றாலும், அவன், அத்தோடு தனது படிப்புக்கு விடைகொடுத்து விடவுமில்லை. 

ஆண்டு ஆறு முதல் கல்வி கற்று வந்த அக்கல்லூரியை மனவிருப்பமின்றியே விட்டு விலகி, அங்கிருந்து வடதிசையில் ஒன்று ஒன்றரை மைல்களுக்கு அப்பாலுள்ள மற்றுமொரு கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தான் பௌமி. ஒரு வருடம் நகர்ந்தது. அதன் பின்னர் நடைபெற்ற, க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அதி உயர் சித்தி எய்தினான். 

பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று ஐந்து ஆண்டுகள் பயின்று டாக்டராக மலர்ந்தான் பௌமி. 

தலைநகரிலே உள்ள, அரசாங்க மத்திய மருத்துவ மனை யில் தனது தொழிலைத் தொடங்கிய அவன் இரு வருடங்களின் பின், அம்பாரை அரசாங்க ஆதார வைத்தியசாலைக்கு இடமாற் றம் பெற்று வந்து அங்கும் ஒரு வருடத்தைக் கழித்து விட்டிருந்தான். 


வைத்தியசாலையில், மதியம் பன்னிரெண்டு மணியைப் பகிரங்கப்படுத்தும் வகையிலே, “டங்…டங்…டங்” என்ற சத்தம் ஓங்கி ஒலித்தது. சுய நிலை எய்திய டாக்டர் பௌமி, சுற்றும் முற்றும் தனது பார்வையைச் சுழல விட்டான். அணையை உடைத்துக்கொண்டு ஓடி வருகின்ற வெள்ளம் போல் மக்கள் அவ்வார்ட்டினுள் நுழைந்தனர். 

அவர்களில், ஆசிரியர் பாயிஸை வைத்தியசாலையில் கொண்டு வந்து சேர்த்த இரு ஆண்களும், வேறு இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் பாயிஸின் கட்டிலின் பக்கமாய் விரைந்து அவரை மொய்த்துக் கொண்டனர். சில நிமிடங்களில் அவர்கள் கிழக்குப்புறமாய் -வார்ட்டை நோக்கியவாறு இடப்பட் டிருந்த ஒரு மேசையின் முன்னே கைக்கதிரை ஒன்றிலே உட்கார்ந் திருந்த டாக்டர் பௌமியிடம் வந்தனர். 

பௌமி அவர்களை ஊன்றி அவதானித்தான். 

“சேர்…இன்னா நிக்கிற இவகதான் பாயிஸ் மாஸ்டர்ர பெண்சாதி… இவகளுக்குப் பக்கத்தில நிக்கிற இவக அவர்ர மாமினாரு… மத்த இவர் அவர்ர மச்சினன்…” பாயிஸை வைத்திய சாலையில் கொண்டுவந்து சேர்த்தவர்களுள் ஒருவர், புதிதாக வந்தவர்களை டாக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார். 

“ஆ… பாயிஸ் சேர்ர குடும்பத்தில முக்கியமானவங்கதான் வந்திருக்காங்க.” மெல்லிய புன்னகையொன்றை இதழ்களில் நெளிய விட்டுக் கொண்டான் டாக்டர் பௌமி. 

“சேர்… மச்சானுக்கு ரெத்தம் பாச்ச வேணுமெண்டு சொன் னிங்களாம். ரெத்தம் தேவையாகவிருந்தா, நான் இவகளுக்கு ரெத்தம் தாறத்துக்கு ஆயத்தமாகயிருக்கன். இன்னா என் கூட நிற்கிற எங்கட வாப்பாவுக்கும் நல்ல வயசாப்போச்சி… தம்பியும் வருத்தக்காரனாயிருக்கான்… இவர்களுக்கிட்டரிந்து ரெத்தம் எடுக்க ஏலா… நானே தாறன்…” ஆசிரியர் பாயிஸின் மனைவி, மனத்தைத் திறந்து பேசினாள். 

”பாயிஸ் சேருக்கு ரெத்தம் தேவைதான். அவர்ர குறூப் ரெத்தம் இஞ்ச ரெத்த வங்கியிலயும் இல்லாமலிருக்கு, என்ட ரெத்தமும் அவர்ர குறூப்பைச் சேர்ந்த ரெத்தமாக விருக்கிறத்தால நானே அவருக்கு ரெத்தம் குடுக்கத் தீர்மானிச்சிருக்கன்.”

“இவக சுகமடைவதற்காக, நீங்க எவ்வளவோ, பாடுபட்டுக் கொண்டிருக்கிங்க… இவகளுக்கு ரெத்தமும் நீங்கதானா கொடுக்கிற… அப்ப நாங்க இருக்கிறத்தில என்ன அர்த்தம்?’ 

“இவங்க எனக்குப் படிச்சுத்தந்தவங்க. என்ட சேருக்குத்தான் நான் ரெத்தம் கொடுக்கப்போறன். அதுவுமில்லாம, உங்கட ரெத்தமும், இவகட ரெத்தமும் ஒரே குறூப்பைச் சேர்ந்ததாக விருக்குமோ, என்னவோ தெரியாது, அதுவும், சோதித்துப்பார்க்க வேணும். இது ஒண்டும் நமக்குத் தேவையில்ல. நானே இவகளுக்கு ரெத்தம் கொடுக்கிறத்துக்குத் தீர்மானிச்சிருக்கன். அதில எந்த விதமான மாற்றமுமில்ல… நீங்க எதைப்பத்தியும் இனி யோசிக்க வேணா…” 

டாக்டர் பௌமியின் உறுதியான வார்த்தைகளைச் செவி மடுத்த ஆசிரியர் பாயிஸின் மனைவி அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். 

“நில்லுங்க…நான் வாறன்…” பௌமி வார்ட்டிலிருந்து வெளியேறினான். 

அவ்விரு சாராரும் அன்று மாலை 5.00 மணியளவில், மீண்டும் சந்தித்தனர். 

“பாயிஸ் சேருக்கு ரெத்தம் பாய்ச்சியாச்சு, இனிப் பயப்படத் தேவையில்ல… இன்டைக்கும், நாளைக்கும் இஞ்ச இருக்கட்டும். நாளண்டைக்கு மத்தியானம் போல அவர வீட்ட கூட்டிக்கொண்டு போங்க.” 

டாக்டர் பௌமி வந்திருந்தவர்களிடம் வேண்டிக் கொண்டான். மூன்றாவது தினம், டாக்டர் பௌமியை வைத்திய சாலையில் அவரது அறையில், ஆசிரியர் பாயிஸும், அவரது மனைவி, மாமனார், மைத்துணர் ஆகியோரும் சந்தித்தனர். 

ஆசிரியர் பாயிஸைக் கண்டதும், டாக்டர் பௌமி தனது இருக்கையை விட்டு எழுந்து நின்றான். தனக்கு எதிரே, மேசையின் மறுபக்கமாகக் கிடந்த ஒரு கைக்கதிரையைச் சுட்டிக்காட்டி, “இதில இருங்க சேர்…” என்று அவரை அதிலே உட்காரச்செய்து தானும் தனது இருக்கையிலே, அவமர்ந்து கொண்டான். 

“இனிப் பிரச்சின இல்ல… வீட்ட போகலாம்… எக்ஸிடன்ட் பட்டதும் உடனேயே இஞ்ச கொண்டந்ததும் நல்லதாப் பேய்த்து…” இது டாக்டர். 

“நீங்க என்ட உயிரக் காப்பாத்திரத்துக்காகப் பட்ட பாட்டை யும், எடுத்த நடவடிக்கைகளையும் என்ன ஆஸ்பத்திரியில கொண்டு வந்து சேர்த்தவங்க விபரமாக எடுத்துச் சொன்னாங்க. எனக்கு உணர்வு வந்தத்துக்குப்பிறகு நீங்க மேற்கொண்ட நடவடிக்கை களையும், நானே நேரடியாகவும் பார்த்தன். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கட ரெத்தத்தையும் எனக்குத் தந்திருக்கிங்க… இவற்றிற்கெல்லாம் தங்களுக்கு, நான் எவ்வாறு கைமாறு செய்வ தென்றே எனக்கு விளங்கவில்லை. என்னைப்பொறுத்த வரையில, நீங்க எனக்கு எந்தச் சிறிய உதவியும் செய்திருக்கப் பொடா… நான் கொடியவன்…” ஆசிரியர் பாயிஸ் பொரிந்து தள்ளினார். 

“நீங்க… அப்படிச் சொல்லப்பொடா… ஓர் உயிர் என்ற வகையில, என்ட கடமையையும், எனது ஆசிரியர் என்ற வகை யில, என்னால் முடிந்த அத்தனை உதவிகளையும், நான் தங்களுக்குச் செய்தேன்.” 

“நீங்க…ஏயெல் சோதின எழுதுவதற்கான காலம் நெருங் கிக் கொண்டிருந்த வேளையில், உங்கட குறிப்புக் கொப்பிகளைக் கிழித்து எரித்து, உங்கட படிப்ப இடைநடுவில் குழப்பிவிடப் பார்த்தன். ஆனா, நீங்களோ, அதற்கு இரையாகிப் போய்விடாமல் அதை மேவி, ஓர் உயர்ந்த நிலையையும் எட்டிட்டீங்க… தங் களிடம் ஆற்றலும், கெட்டித்தனமும், ஆர்வமும் நிறைந்திருந்த தால, என்னால் தங்களை அழிக்க முடியவில்லை. ஆனா, நீங்க சாதாரணமான ஒரு மாணவனாக இருந்திருந்தால், அன்றே அழிந்திருப்பீங்க. அன்று நான் நடந்து கொண்ட முறையை எண்ணிப்பார்க்கும் பொழுது, எனக்கே வெட்கமாகவிருக்கிறது. நான் ஆசிரியனே இல்லை; அக்கிரமக்காரன்.” 

”அப்படிச் சொல்லாதிங்க சேர்… நானும் மற்றவர்களைப் போல நன்றாகச் சித்தியடைய வேண்டும், உயர் நிலையை எய்த வேண்டும்… என்று எனது நன்மையை உத்தேசித்தே நீங்களும் அவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கை கொஞ்சம் கூடிவிட்டது. அவ்வளவுதான்.” 

“நீங்கள் கூறுவது போல தங்களது நன்மை கருதி, நான் தங்களைத் தண்டிக்க முற்பட்டது உண்மைதான். ஆனால், எதிர்பாராத வகையிலே, நான் என்ற அகங்காரத்தினால் என்னுள் ஏற்பட்ட ஒரு வெறித்தனம் என்னைப் படுமோசமாக நடந்து கொள்ளச் செய்துவிட்டது… நான், அன்று நடந்து கொண்ட முறையை எந்த வகையிலும், நியாயப்படுத்த முடியாது. நான் செய்தது பிழையேதான். என்னை மன்னித்து விட்டேன் என்று நீங்கள் சொன்னால்தான், நான் செய்த அந்தப் பாபமும் என்னை விட்டுத் தொலையும், நானும் இவ்விடத்தை விட்டு நகர்வேன்.” 

ஆசிரியர் பாயிஸ், ஆசனத்திலிருந்து எழுந்து, டாக்டர் பௌமியின் அருகிலே சென்றார். 

டாக்டர் பௌமியும் தனது இருக்கையை விட்டு எழுந்து நின்றான். 

இருவரின் கண்களும் கலங்கிக் கொண்டன. 

– வடக்கு-கிழக்கு மாகாண மீலாத் நினைவு மலர் -1999, கல்முனை.

– சாணையோடு வந்தது… (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2007, முகாமைத்துவ தொழில்நுட்பக் கல்லூரி, இலங்கை.

உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *