தொழிற்சங்கவாதியான பரமானந்தம் மேடையில் ஏறி மைக்கைப் பிடித்துப் பேச ஆரம்பித்தார் “எனதருமைத் தொழிலாளர் தோழர்களே கதிரவனைப் போன்றவன் தொழிலாளி அவன் தன் இயக்கத்தை ஒரு நாள் நிறுத்தினால் உலகமே ஸ்தம்பித்துப் போகும்.காலம் காலமாக உழைக்கும் வர்க்கத்தை தொழிலாளர் தினத்தன்று மட்டும் புகழ்ந்து பேசிவி்ட்டு மற்ற தினங்களில் அலட்சியப்படுத்தினால்,உழைக்கும் கரங்களெல்லாம் ஒரு நாள் ஒன்று சேரும்,இந்தப் பூமிப்பந்தைக் கூட இரும்புத்தடி கொண்டு நெம்பி எங்களால் புரட்டிப் போட முடியும்.நமது வியர்வைக் கடலிலிருந்து தான் நீ்ர் ஆவியாகிச் சென்று மண்ணை வளப்படுத்தும் மழையாகப் பெய்கிறது.மற்றவர்கள் போல் எங்களுக்கும் செங்குருதி தான் உடலில் ஓடுகிறது;தொழிலாளர்களின் உதிரத்தை வாகன டீசல் போல இயந்திரமாய் இயங்க உதவும் எரிபொருளாக நீங்கள் கருதினால்,எழுவோம் ஆழிப்பேரலையாய்;தகர்ப்போம் அடிமைத் தளைகளை;அடைவோம் தொழிலாளர்களின் உரிமைகளை;அதுவரை அயர்ந்து துயில் கொள்ளோம் எத்தனை இரவானாலும்;எங்கள் வாழ்க்கையில் விடியல் பிறப்பதை தடுப்பது விண்ணானாலும் அஞ்சாமல் மோதித் தகர்ப்போம்!
ஓங்குக நமது ஒற்றுமை!
என உரையை முடித்துக் கொண்டு தொழிலாளர்களின் எழுச்சியோடு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.
அதன் பிறகு நடந்த சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தென் இந்தியாவிலேயே அதிக முதலீடு கொண்ட இரசாயனத் தொழிற்சாலை அமைவதற்கு தகுந்த இடம் தேடி ஆய்வு செய்த குழுவினர் விழுதூரையும் சேர்த்து மூன்று இடங்களைப் பரிந்துரை செய்துள்ளதைப் பற்றி விவாதித்தார்கள்.
இதில் வளர்ச்சியடையாத மாவட்டத்திலுள்ள விழுதூரில் தான் அத்தொழிற்சாலை அமைய வேண்டுமென வலியுறுத்தி கடையடைப்பு,மறியல்,உண்ணாவிரதம் எனத் தொடர் போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.இம்முடிவு தொழிலாளர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்கூட்டத் திடலிலிருந்து வெளியேறிய செல்லக்கண்ணு வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தான்.அவனது கைகளிரண்டும் இயந்திரத்தின் கைப்பிடியைப் பிடித்து காய்த்துப் போயிருந்தது.உராய்வினால் ஒவ்வொரு மிதித்தலுக்கும் பெடலிலிருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது.இரைப்பையை ஒரு வேளை கூட முழுவதுமாக நிரப்ப வழியில்லாத வறுமை அவனைச் சூழ்ந்திருந்தது.ஆனால் என்றாவது ஒருநாள் தங்கச் சூரியன் கீழ்வானத்தில் உதிக்கும் என்ற நம்பிக்கையில் காலத்தை எதிர்ப்பார்ப்புகளோடு கடத்திக் கொண்டிருந்தான்.உலக அரங்கில் நடப்பவற்றை எல்லாம் இரண்டு ரூபாய் நாளிதழில் அறிந்து கொள்ளும் பார்வையாளனாய் தினசரி நாட்கள் கழிந்து கொண்டிருந்தது அவனுக்கு.
எங்கோ ஓர் கோடியிலிருந்து யாரோ ஒருவர் போடும் கையெழுத்து கடைக்கோடியிலுள்ள தன்னைப் போன்ற தொழிலாளர்களின் தலையெழுத்தை மாற்றிப் போடுவதை எண்ணி நண்பர்களிடம் அடிக்கடி கொள்கை முழக்கமிடுவான்.அவனது உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் வேள்வித் தீயில் நெய் ஊற்றியது போலாயிற்று பரமானந்தத்தின் எழுச்சியுரை அவனுடைய மனதில் இன்னும் அவர் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
பசியெனும் இப்பிறவியில் அவனைப் பிடித்திருந்த பிணி கொஞ்சம் கொஞ்சமாக அவனைச் சித்தாந்தத்தை மறக்கச் செய்து தன் குடும்பநிலையை உணரச் செய்தது.செக்கு மாடு போல தன் இரையை தின்ன முற்படும் வேட்கை மற்றவருக்கு எண்ணெயாய் பயன்படுவதை எண்ணி நொந்து கொண்டான்.இந்த மெஷின் ஆப்ரேட்டர் வேலையை நம்பி இரு குழந்தைகளையும் படிக்க வைத்து குடும்பத்தை நகர்த்திச் செல்லும் தன் மனைவியை நினைத்துக் கொண்டான்.அந்த தொழிற்சாலை மட்டும் நம் ஊருக்கு வந்துவிட்டால் தினமும் முப்பது கிலோமீட்டர் பஸ்ஸில் வேலைக்குச் சென்று வர வேண்டிய அலைச்சல் குறையும்;பேருந்துக்காண கட்டணச் செலவும் மிச்சமாகும் என அவனுடைய கற்பனை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருந்தது வீட்டை அடையும் வரை.
சில தினங்கள் கழித்து மாலைவேளையில் தொழிற்சாலை பணி முடிந்து வீட்டிற்குத் திருமப்பிய செல்லக்கண்ணு,பெரியவர் ஒருவர் திண்ணையில் அமர்ந்திருப்பதை பார்த்தான் தான் சுதந்திரப் போராட்டத் தியாகி வேலுத்தம்பியின் மகனென்றும்,கிராமப் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவனென்றும் அம்முதியவர் தன்னை அவனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
சில அமைப்புகள் தொழிற்சாலையை இந்த ஊரில் தொடங்க வலியுறுத்தி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும்,விழுதூரில் ஒவ்வொரு வீடாகச் சென்று அதைப் போன்ற இரசாயனத் தொழிற்சாலையால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அவரது பேச்சால் எரிச்சலடைந்த செல்லக்கண்ணு “ஏதோ இப்பதான் இந்த ஊருக்கு விடிவு காலம் பொறந்த மாதிரியிருக்கு அதையும் வேண்டாம்ன்னு சொல்ல கிளம்பிட்டீங்கன்னா,இன்னும் நூறு வருஷத்துக்கு நம்ம கிராமத்தைக் கண்டுக்கமாட்டாங்க;வளர்ச்சியடைற வாய்ப்பு வர்றப்ப பயன்படுத்திக் வேணாங்களா பெரியவரே” என்றான்.
“தம்பி நீங்க நினைக்கிற மாதிரி இது வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கிற தொழிற்சாலையோ,காகிதத் தொழிற்சாலையோ,பிளாஸ்டிக் தொழிற்சாலையோ,பின்னலாடை தொழிற்சாலையோ இல்ல, கெமிக்கல் தொழிற்சாலை.இருபத்து நாலுமணி நேரமும் இரசாயனம் காற்றில் கலக்காதவாறு கண்காணித்துக் கொண்டே இருக்கணும்;இவ்வளவு தான் காற்றில் அவ்வாறு கலக்கலாம் என்ற அளவு இருக்கு;இதை மீறிப்போனதால தான் வடமாநிலத்துல பல வருஷங்களுக்கு முன்னால விஷவாயு கசிவு ஏற்பட்டு நடந்த விபத்தால ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் இறந்திட்டாங்க.கதிர்வீச்சால இன்னும் கூட குழந்தைங்க ஊனமா பொறக்குது;இதையெல்லாம் நம்ம சீர் தூக்கி பார்க்கணும்னுதான் சொல்றேன்.குழி யானைக்கு வெட்டினது தான்னு விழுந்து பார்த்துதான் தெரிஞ்சிக்கணுமா தம்பி” என்றார் அப்பெரியவர்.
“எப்பவோ அப்படி நடந்ததுனால இப்பயும் அப்படி நடக்கணும்னு என்ன எழுதியா வச்சிருக்கு.விமானத்துல,ரயில்ல போகும் போது கூடத்தான் ஆக்ஸிடென்ட் ஆவுது;அதனால யாரும் அதுல ஏறாம இருக்காங்களா என்ன?தொழில் நுட்ப வளர்ச்சின்னு கேள்விப்பட்டிருக்கிங்களா பெரியவரே,அதனால விபத்து ஏற்படுவது எல்லாம் இப்ப ரொம்பக் குறைஞ்சிப் போச்சி;எஞ்சின் ஆயில் என்ன அளவுல இருக்கு,அதை எப்ப ஸ்ப்ரே பண்ணனும் எல்லாத்தையும் ஆட்டோமேட்டிக்கா கம்யூட்டரே கன்ட்ரோல் பண்ணுது.அங்கங்க அணுகுண்டெல்லாம் பட்டனை தட்டுனா போதுமாம்,போய் எந்த நகரத்துல தாக்கவும் ரெடியா இருக்காம்;இந்தப் பூமியை இரண்டு தடவை சாம்பலாக்க அதனால முடியுமாம்.அதையெல்லாம் உட்டுர்றீங்க;அது கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தாது.இப்படி எதையுமே இந்த ஊர்ல வரவிடாம செஞ்சிங்கன்னா நாங்க ஏழையா பொறந்து ஏழையாவே சாகறதா?எம் பொண்ணு,பையனெல்லாம் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிக்கிறதுக்கு ஒரு அப்பனா நான் ஆசைப்படறது தப்பா?”எனக் குமுறினான் செல்லக்கண்ணு.தர்க்கத்தை மேலும் வளர்க்க விரும்பாத அப்பெரியவர் வாடிய முகத்தோடு திரும்பிச் சென்றார்.
அவர்கள் இருவருடைய பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்த அவனுடைய மனைவி சாப்பாடு பரிமாறிக் கொண்டே இவ்விஷயம் பற்றி கேட்கவே,செல்லக்கண்ணு தன் மனைவியிடம் “அந்த ஃபேக்டரி நம்மூர்ல அமைஞ்சுதுண்ணா ரயில்வே,குட்டிவிமான நிலையம்,எந்த ஊருக்கும் செல்ல இங்கிருந்தே நேரா விரைவுப் பேருந்து, மெட்ரிகுலேஷன் ஸ்கூல்,இஞ்சினியரிங்,ஆர்ட்ஸ் காலேஜ் நான்கு வழிப்பாதை என அம்புட்டு வசதியும் ஊருக்கு கிடைக்கும்.இந்த கிராமத்துல வசிக்கிறவங்களுக்கு வேலைவாய்ப்புல முன்னுரிமை தரதால எனக்கும் நல்ல வேலை கிடைக்கும்,அடிப்படைச் சம்பளமே இப்ப நான் வாங்குல நாலுமாச ஊதியம்.அப்புறம் தினனும் முப்பது கிலோமீட்டர் போயிட்டுத் திரும்புற செலவு மிச்சமாகும்.நம்ம புள்ளைங்களோட ரொம்ப நேரம் இருக்க முடியும்.இதையெல்லாம் யோசிச்சித்தான் நாங்க போராடிகிட்டு இருக்கோம்” என்றான் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் பிரகாசமான முகத்துடன்.
அவர்கள் முன்வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு தொழிற்சாலை விழுதூரில் அமைந்தது.செல்லக்கண்ணுவிற்கு அங்கு வேலை கிடைத்து அவனது பொருளாதார நிலை சற்றே உயர்ந்தது.குழந்தைகள் இருவரையும் இங்கிலீஷ் மீடியத்தில் சேர்த்தான்;அவர்களை பள்ளியில் கொண்டுவிடுவதற்கு வசதியாக டூவீலர் வாங்கிக் கொண்டான்.வீட்டில் பொருள் வந்து சேரச் சேர மகிழ்ச்சியும் நிரம்பியது.அவனது உணர்ச்சி வேகம் சமனப்பட்டு நிம்மதியாய் இரண்டு வருடங்கள் ஓடியது.
அன்றைய தினம் இரண்டு குழந்தைகளும் மூச்சி விட சில சமயங்களில் திணறுவதைப் பார்த்து,முதலில் சாதாரண சளியால வர்ற மூக்கடைப்பா இருக்கும் என அலட்சியப்படுத்தியவன் இரு வாரங்களாகவே அக்கோளாறு தொடரவே, அவர்களை டாக்டரிடம் அழைத்துச் சென்றான்.அவர் பரிசோதித்துவிட்டு எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பார்த்தபடி “உங்க குழந்தைகளுக்கு நுரையீரல்ல இன்பெஃக்சன் வந்திருக்கு.இது போல பல குழந்தைகள் சமீபகாலமா இந்த கிராமத்திலிருந்து எங்க ஆஸ்பிடலுக்கு வராங்க.நீங்க கெமிக்கல் இண்டஸ்ட்டிரீஸ் அருகில் குடியிருக்கிறதுனால மாசடைந்த காற்றை எப்பவும் சுவாசிக்கிறீங்க; பெரியவங்களுக்கு அது அவ்வளவா உடனே பின் விளைவுகளை ஏற்படுத்தாது;இது போன்ற பத்து வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சீக்கிரமா அபெஃக்ட் பண்ணுது இவங்க பிழைக்கணும்னா எங்க ட்ரீட்மெண்ட் மட்டும் பத்தாது, இவங்களை நீங்க சுற்றுப்புறச் சூழ்நிலை மாசில்லாத இடத்துக்கு அழைச்சிட்டுப் போய் அங்கேயே தங்க வைச்சி படிக்க வைச்சீங்கன்னா உடனே மாற்றம் தெரியும்.இது உங்க குழந்தைகளோட உயி்ர் பத்தின விஷயம்;நீங்க இதுக்கு யோசிக்கக்கூடாது;உடனே வேற இடத்துக்கு உங்களை மாத்திக்கிறது உங்களோட குழந்தைகளோட எதிர்காலத்துக்கு ரொம்ப நல்லது” என்று பதிலளித்தார்.
மறுவாரமே வேறொரு கிராமத்தில் வாடகைக்கு வீட்டு பார்த்து, மினிலாரியில் வீட்டுச் சாமான்களையெல்லாம் ஏற்றி அனுப்பி வைத்தான் செல்லக்கண்ணு அவர்களனைவரையும் பேருந்து சுமந்து கொண்டு இயற்கை இலவசமாய் உயிர்களுக்கு கொடுக்கும் காற்று கூட நச்சு வாயுக்கள் கலந்து விஷமாக மாறிவரும் அவர்களுடைய கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
– 19 ஆகஸ்ட், 2012