(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
லக்ஷ்மணன் காலையில் எழுந்தவுடன் ஆறிக்கொண்டிருந்த காபியை அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு வாசல் அறைக்குப் போனான். ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் நடக்கும் சண்டை என்ன ஆயிற்று என்று அதிக ஆவலுடன் அவன் தகப்பனார் பத்திரிகையைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன், “முதல் ஷீட்டை மத்திரம் கொடப்பா!” என்று கேட்டு வாங்கிக் கொண்டு விளம்பரப் பத்திகளை, அவன் தகப்பனார் யுத்தச் செய்திகளை ஆழ்ந்து படித்தது போலப் படிக்க ஆரம்பித்தான்.
லக்ஷ்மணன் எம்.ஏ., படித்துவிட்டுச் சும்மா வீட்டில் உட்கார்ந்திருக்கும் வாலிபன்தான்; எனினும் அவனை வேலையில்லா பட்டதாரி என்று யாராவது சொல்லிவிட்டால் அவனுக்குக் கோபம் வந்துவிடும். “கூலிக்கு உழைத்தாதான் வேலையா?” என்று கேட்பான் அவன். ஆனா ஊராருக்கு இந்த விசேஷ தாரதம்யங்க ளெல்லாம் தெரிவதில்லை. அவன் வெறும் வேலையில்லாப் பட்டதாரி என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தார்கள் வாரத்துக்கு ஒரு தடவை எவனாவது லக்ஷ்மணனைப் பார்த்து, “என்னப்பா பண்ணிக் கொண்டு இருக்காய் லக்ஷ்மணா?” என்று கேட்டுவிடுவான். லக்ஷ்மணனின் கோபமும், வார்த்தைகளும் புயல் போல, நீர்வீழ்ச்சி போல , அவன்மேல் விழ ஆரம்பித்து விடும். “வேலை என்றால் என்ன? உலகுக்கே அடிப்படையான, ஆதாரமான கொள்கைகள் என்ன என்ன? அந்தக் கொள்கைகளைத் தக்க வார்த்தைகளில் எல்லோருக்கும் விளங்கும்படிச் சொல்வது எப்படி எப்படி?” என்றெல்லாம் பேச ஆரம்பித்துப் பேசி, தன்னை விசாரித்தவனைத் திக்குமுக்காட வைத்துவிடுவான். “இது ஏதடா சனியன்! உடும்பு கையை விட்டால் போதும்” என்று விசாரித்தவன் ஓடிப்போவான்.
இந்த யுக்திகளும் குயுக்திகளும் அவனுக்கு வெகு நாளாகப் பழக்கமானவையே. அவன் கெட்டிக்காரனென்று கலாசாலையில் அவனுடைய சகோதர மாணவர்கள் அவனை மதித்ததற்கு முக்கிய காரணம் இந்தப் பேச்சுச் சாமர்த்தியந்தான். ஆரம்பத்தில் தான் கெட்டிக்காரன் என்று அவனுக்கு இந்த நம்பிக்கை விஷம் போல நாளுக்கு நாள் ஏறி அவன் கலாசாலையை விட்டு வெளியேறும் போது உச்சஸ்தாயியை அடைந்திருந்தது. தன்னைப் போன்ற மேதைக்குத் தகுந்த வேலை இங்கு இன்னும் ஏற்படவில்லை என்ற ஞாபகத்தில் பலர் எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லியும் அவன் எவ்வேலைக்கும் போக மறுத்துவிட்டான். மரியாதையாகக் காலங் கழிக்கப் போதிய சொத்து இருந்தது. தகப்பனாருக்கு இன்னும் சர்க்கார் பென்ஷன் வந்து கொண்டிருந்தது. ஒரே பிள்ளை. குடும்பத்திலும் வேறு பிடுங்கள் கிடையாது சௌக்கியமாக வாழ முடியும். ஆனால் ஊரார் லக்ஷ்மணன் வேலைக்குப் போக மறுத்தான் என்று சொன்னால் நம்புவார்களா என்ன? அவர்களுக்கு அதைப்பற்றி விதவிதமான அபிப்பிராயங்கள் இருந்தன. தங்களுக்குள்ளே அதைப்பற்றி எப்படி எப்படிப் பேசிக் கொள்ளலாமோ அப்படியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
லக்ஷமணனுக்குப் பத்திரிகையில் மற்றப் பக்கங்களைப் பார்க்க வேணுமென்ற ஆவல் கிடையாது. இன்னும் பத்து வருஷங்களில் உலகில் வியவகாரங்கள் எப்படி எப்படி எங்கெல்லாம் நடக்குமென்று அவனுக்கு முன்கூட்டியே தெரியும். சில சமயம் அவன் எண்ணியது போல, சொல்லியது போல, நடக்காமல் இருந்துவிடும். ஆனால் அது ஏமாற்றமான வெறும் தோற்றமே தவிர, நாளடைவில் எல்லாம் தான் சொல்லியது போலவே நடக்கும் என்று அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. விளம்பரங்கள் வந்த பத்தியைக்கூட அவன் பார்த்ததற்கு ஒரு விசேஷமான காரணம் உண்டு. அந்தப் பத்திகளில் தான் சுவாரசியமான விஷயங்கள் வெளிவருகின்றன என்று அவன் சொல்லுவான். விளம்பரம் போடுபவர்களின் பேராசையையும் புரட்டு ஏமாற்றுக்களையும் பற்றி அவன் சதா தன் சகாக்களுடன் பேசிக் கொண்டிருப்பான். அந்தப் பேச்சுக்கு ஆதாரமாகச் சொல்ல ஏதாவது கிடைக்காதா என்றுதான் இன்றும் அவன் பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் கண்ணில் “தேவை”, “தேவை” என்று கொட்டை எழுத்துக்களில் வந்திருந்த ஒரு விளம்பரந்தான் முதல் முதலில் பட்டது. நிறையப் பணம் செலவழித்து எவனோ விளம்பரம் செய்திருந்தான். பணக்காரர்களைப் பற்றி லக்ஷமணனுக்கு என்றுமே நல்ல அபிப்பிராயம் இல்லை. வீட்டில் அப்பா உத்தியோகம் பண்ணின நாட்களிலிருந்து கார் இருந்து வந்திருக்கிறது. பாங்கிலும் அப்பா நிறையப் பணம் சேர்த்து வைத்திருந்தார். தாம் இறந்துவிட்டால் கூடப் பையனுக்குப் பணம் வரும்படியாக இருபது முப்பதினாயிரத்துக்கு இன்ஷியூர் வேறு பண்ணியிருந்தார்.
ஆனால் பையனுக்குப் பணக்காரர்களிடம் நம்பிக்கையோ மரியாதையோ இல்லை . அவன் சம தர்மவாதி. ஆயினும் நாடெங்கும் தோன்றிக் கொண்டிருக்கும் ஸோஷியலிஸ்டுக் கிளப்புகளில் பிரசங்கம் செய்ய யாராவது அவனை அழைத்தால் அவன் அப்பாவுடைய காரில் தான் போய் இறங்கிப் பிரசங்கத்தில் பணக்காரர்களையும், முதலாளிகளையும், பாங்கில் பணத்தை மூட்டை கட்டி வைத்திருப்பவர்களையும், சர்க்கார் முறைகளில் அநேகமாக எல்லாவற்றையும் கண்டித்துச் சரமாரியாகப் பொழிந்து விடுவான். அவர்களில் யாராவது அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு அங்கிருந்திருந்தால் நிச்சயமாக அவன் பேச்சு வேகம் தாங்காமல் அங்கேயே தற்கொலை செய்துகொண்டு விடுவார்கள். பிரசங்கத்தை முடித்துவிட்டு வெளியே வந்து தன் கார் டிரைவர் எங்கேயாவது மறைவாகப் பீடி குடிக்கப் போயிருந்தானானால் அவனிடம் மட்டும் லக்ஷ்மணனுக்குக் கோபம் பிரளயமாக வந்துவிடும்!
அந்த விளம்பரமும் அதில் இருந்த விஷயமும் லக்ஷ்மணன் மனத்தைக் கவர்ந்தன. அவன் வாசித்துப் பார்த்தான். அதில் ”உலகத்தைச் சீர்திருத்தி உண்மையிலேயே புதுச் சிருஷ்டி ஆக்கக்கூடிய ஆற்றலும் அறிவும் படைத்த வாலிபர் தபால் பெட்டி நெ.1001க்கு விண்ணப்பம் செய்துகொள்ளலாம்; அவரவர் சொந்த மதிப்புக்கு ஏற்றபடி சம்பளம் கிடைக்கும்” என்று கண்டிருந்தது. அதன் கீழ்ச் சிருஷ்டிகர்த்தா என்று இட்டிருந்த கையெழுத்து யாரோ மூளையும் பணமும் படைத்த தீவிரவாதியினுடையதாகத்தான் இருக்கவேணுமென்று லக்ஷமணனுக்குத் தோன்றிற்று. அவன் வாலிபன். உலகைச் சீர்திருத்தி அமைக்கும் தொழிலிலே எவ்வளவோ நாளாக உழன்று தேர்ச்சி பெற்றவன். சந்தர்ப்பங்களும், மற்ற அவசியமான சுற்றுப்புறத் தேவைகளும் அவனுக்கு ஒத்து வந்தால் அவன் உலகையே மாற்றி அமைத்துவிடக் கூடிய ஆற்றல் படைத்தவன்தான். அவனுக்கு இல்லாத அறிவு இனி யாருக்கும் இருக்கப் போவதில்லை.
அவன் திடுமென்று எழுந்து அப்பாவிடம் போனான். அவன் தகப்பனார் இன்னமும் அன்னிய நாட்டுத் தந்திகளில் தான் மூழ்கி இருந்தார்.
“அப்பா! ஒண்ணே காலணாக் கொடு; இந்த விளம்பரத்துக்கு ‘அப்ளிகேஷன்’ போடப்போகிறேன்” என்றான் லக்ஷ்மணன்.
2
1941 ஜூன் 23-ந் தேதி அன்று டிப் டாப்பாக டிரஸ் பண்ணிக் கொண்டு பிராட்வே முனையில் பத்து மணி சுமாருக்கு வெயிலையும் லக்ஷ்யம் செய்யாமல் டிராம் வண்டியிலிருந்து இறங்கி நடந்து கொண்டிருந்த வாலிபன் லக்ஷ்மணன்தான் என்று சொன்னால் அவன் ஊர்க்காரர்கள் கூடச் சிறிது நேரம் அதை நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் ஊராருக்கு என்ன தெரியும்? ஏழை நாட்டுப்புறத்தான்கள்! அவர்கள் அந்த மாதிரி உடை அணிய வெள்ளைக்காரன் ஒருவனுக்குத்தான் உரிமை உண்டென்று எண்ணிக் கொண்டிருப் பவர்கள். பல நாளாகச் சீவப்படாத, அடங்கி அறியாத அவன் தலை மயிரைத் தவிரப் பாக்கி எல்லாம் தோற்றத்தில் மாறிவிட்டன. அவன் பிராட்வேயில் 18240 இலக்கமிட்ட கட்டிடத்தின் முதல் மாடியைத் தேடிக் கொண்டிருந்தான். ஏனென்றால் அங்கேதான் சில நாளுக்கு முன் பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்த சிருஷ்டி கர்த்தா, லக்ஷ்மணனின் விண்ணப்பம் கிடைத்தவுடன், தம்மை இருபத்து மூணாந்தேதி வந்து பார்க்கும்படியாக ‘இண்டர்வியூ கார்டு’ அனுப்பியிருந்தார். தன் சட்டைப் பையிலிருந்து அந்தக் கார்டைச் சந்தேகத்துக்கு ஒருதரம் எடுத்துப் பார்த்துக் கொண்டான் லக்ஷ்மணன்.
ஆமாம் 18240 ஆவது நம்பர்தான் போட்டிருந்தது. கார்டிலும் சிருஷ்டிகர்த்தா என்றே கையெழுத்து இட்டிருந்தது. அந்தக் கையெழுத்து முதலில் அவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தைத் தந்தது. பத்திரிகைகளுக்காக எவனோ சிருஷ்டிகர்த்தா என்று புனைபெயர் வைத்துக்கொண்டு விளம்பரம் பண்ணியிருக்கிறான் என்று எண்ணியிருந்தான். இப்பொழுது அவனிடம் வந்திருந்த பதிலிலும் சிருஷ்டிகர்த்தா என்ற கையெழுத்தைக் கண்டவுடன் எல்லாம் ஏதாவது கோமாளிக்கூத்தாய் இருக்கப் போகிறதே என்று பயம் தோன்றிற்று. கலாசாலையில் இருக்கும் போதே தன்னை யாராவது கேலி செய்துவிட்டால், லக்ஷ்மணனுக்குக் கோபம் வந்துவிடும்; பல்லைத் தட்டிக் கையில் கொடுத்துவிடுவான். வயசு ஆக ஆக அவனுக்கு இந்தக் கேலிப் பயம் அதிகரித்துக் கொண்டேதான் வந்திருந்தது. அதுவும் இன்று அவன் அணிந்திருந்த ஆடையில் அவன் கேலியை, தமாஷை, வழக்கத்துக்கும் அதிகமாகவே உணர்ந்து கோபமும் கஷ்டமும் படுவான்.
ஆனால் அதெல்லாம் கேலி அல்ல. அவன் சிறிது தூரம் நடந்து நின்ற இடத்துக்கு எதிரே சிருஷ்டி கர்த்தா என்று ஒரு பலகையில் எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தது; சிவப்பு வர்ணத்தின் மேல் வெள்ளை எழுத்துக்களால் எழுதியிருந்தது. ஆமாம்; அதுதான் 18240 எண்ணுள்ள கட்டிடம். அதன் மேல் மாடி தான் சிருஷ்டி கர்த்தாவின் ஆபீஸ். ஆனால் அக்கட்டிடத்து மாடிப் படியிலெல்லாம் திமுதிமென்று ஒரே கூட்டமாக இருந்தது . லக்ஷ்மணனுக்கு முதலில் விஷயம் விளங்கவில்லை. அந்தக் கூட்டத்தை அணுகி நெருங்கிக் கலந்து பார்த்தபோதுதான் விஷயம் தெரிந்தது. அவர்கள் எல்லோரும் சிருஷ்டிகர்த்தாவினால் அனுப்பப்பட்ட ‘இண்டர்வியூ கார்டு’களுடன் அவரைக் காண அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தனர். மாடிப்படியிலோ, வெளி வராந்தாவிலோ கால் வைத்து நிற்க இடமில்லை. தேர்க் கும்பல் போல அந்தக் குறுகிய இடத்தில் அந்தக் கும்பல் ஒரே இடத்தில் நிலையாக நிற்காமல் அலைந்து கொண்டிருந்தது.
“ச்சே! சட்! நியூசென்ஸ்!” என்றான் லக்ஷ்மணன். அங்கிருந்த கூட்டம் இரண்டாயிரத்துக்கு மேல் இருக்கும். ‘இவ்வளவு பேர்வழிகளா இந்த விளம்பரத்துக்கு அப்ளிகேஷன் போட்டார்கள்!” என்று எண்ணினான் லக்ஷ்மணன். ‘இந்தியாவிலேயே சிந்திக்க அறிந்த பேர்வழிகள் இவ்வளவு இருக்கமாட்டார்களே! இருந்தால் நம் சமூகமும் வாழ்க்கையும் அரசியலும் பொருளாதாரமும் எப்படி இவ்வளவு சீர்கேடான நிலைமைக்கு வந்திருக்கமுடியும்? எவ்வளவோ தூரத்து ஊர்களிலிருந்தெல்லாம் ரயில் சார்ஜும் பணமும் செலவழித்துக் கொண்டு இவர்கள் வந்திருக்கிறார்களே! அசடுகள்! இவர்களுக்கு எப்படி இந்த வேலை கிடைக்க முடியும்? சிருஷ்டிகர்த்தா அவன் விளம்பரத்தில் கண்டிருந்தபடி உண்மையிலேயே கெட்டிக்காரனானால் இவர்களில் யாரையும் வேலைக்கு வைத்துக் கொள்ளமாட்டான்…’ என்று எண்ணினான்.
திடீரென்று அந்தக் கும்பலில் சப்தம் அடங்கிவிட்டது. யாரோ உருவம் தெரியாமல் ஒருவன் சாத்தியிருந்த அறைக்குள்ளிருந்து ஒரு ‘லௌட் ஸ்பீக்கர்’ வழியாகச் சொன்னது லக்ஷமணனுடைய காதிலும் விழுந்தது.
“நாங்கள் பத்திரிகைகளில் இந்த விளம்பரத்தைப் போட்டபோது இவ்வளவு விண்ணப்பங்களை எதிர்பார்க்கவில்லை. பலருக்கு நாங்கள் வரச்சொல்லி இண்டர்வியூ கார்டு’ அனுப்பியது வாஸ்வந்தான். அச்சடித்திருந்த மூவாயிரம் ‘இண்டர்வியூ கார்டு’களும் செலவழிந்து விடவே நாங்கள் அதற்குமேலும் ‘இண்டர்வியூ கார்டுகள்’ அனுப்புவதை நிறுத்திக் கொண்டு விட்டோம். மொத்தம் தமிழ்நாட்டிலிருந்து இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்டிருப்பவர்கள் 19785 பேர்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து நேரில் அவர்களுடைய யோக்கியதாம்சங்களைத் தெரிந்து கொள்வதென்பது முடியாத காரிய மென்பது பற்றி நாங்களும் வருந்துகிறோம். கூடியவரையில் நாங்கள் பக்ஷபாதமின்றி இந்த 19785 பேரினுடைய யோக்கியதைகளையும் கவனித்துவிட்டு அவர்களில் எங்களுக்கு உபயோகப்படக் கூடியவர்கள் என்று தோன்றியவர்கள் ஒன்பது பெயர்களைத் தேர்ந் தெடுத்திருக்கிறோம். அவர்கள் மட்டும் நாளைக் காலை இந்தச் சமயத்தில் இந்த ஆபீஸுக்கு வந்தார்களானால், எங்கள் தலைவரைக் கண்டு பேசிக் கொள்ளலாம். தற்சமயம் எங்கள் ஆபீஸில் இந்த வேலை பார்க்க ஒரு நபருக்குமேல் தேவையில்லை. மற்றவர்களுக்கு வேறு வேலை தர முடியுமா என்று யோசிப்போம். நாளைக்குப் பேட்டிக்கு அழைக்கப்பட்டிருக்கும் ஒன்பது பேர்களின் பெயரையும் நான் இந்த அறிக்கை முடிந்தபின் கடைசியில் வாசிப்பேன். அவர்கள் தயவு செய்து நாளைக்கு இந்த நேரத்தில் இங்கு வருக. ‘இண்டர்வியூ கார்டு’கள் அனுப்பப்படாமல், இந்த ஒன்பது பேர்வழிகளில் வந்தவர்கள் இருவருக்கும் நாங்கள் நாளை வரச்சொல்லி எழுதியனுப்பி விட்டோம். இன்னொரு விஷயம் காரணமில்லாமல் ஆடை தைப்பதற்கும் ரயில் டிக்கட்டுமாகச் செலவழித்து இங்கு வந்து ஏமாந்து திரும்பும் உங்களில் பெரும்பாலோருக்கும் எங்கள் அனுதாபம் மட்டும் அல்ல; என்ன செலவு ஆயிற்றென்று ஊர் திரும்பித் தக்க ருசுவுடன் எங்களுக்கு எழுதி அனுப்பினால் கூடியவரையில் நியாயமான முறையில் ஏற்றுக்கொள்ளப்படும் தொகைக்குச் செக்கு அனுப்பி வைக்க முயலுவோம்.
“இப்பொழுது, நாளைக்குப் பேட்டிக்கு என்று தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பவர்களின் பெயர்களை வாசிக்கிறேன்.”
அந்தக் கும்பல் அவ்வளவு நிசப்தமாக இருந்தது லக்ஷ்மணனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொருவனும் தன் பெயர் வாசிக்கப்படுமா என்று ஆவலுடனும், அவநம்பிக்கை யுடனும், பயத்துடனும் காதைத் தீட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தான். லக்ஷ்மணனுக்குத் தன்னைப்பற்றி எவ்விதமான சந்தேகமும் இல்லை. சிருஷ்டி கர்த்தா லக்ஷ மணனைத் தேர்ந்தெடுக்கா விட்டால் அது அவனுடைய துரதிருஷ்டம். லக்ஷ்மணனைப் போன்றவன் உதவி கிடைக்கப் பாக்கியம் படைத்திருக்க வேண்டாமா?
இந்த நிசப்தத்தில் ‘லௌட் ஸ்பீக்கர்’ மூலம் ஒன்பது பெயர்கள் வாசிக்கப்பட்டன.
1. கவிஞன் கந்தசாமி.
2. தோழர் மீரான் சாயபு, பத்திரிகை ஆசிரியர்.
3. வீரக்குடும்பன், எம்.ஏ., எம்.லிட்.,பொருளாதார ஆராய்ச்சி மாணவன்.
4. தோழர் லக்ஷ்மணன், எம்.ஏ., லக்ஷயவாதி
5. பேராசிரியர் சி. ராமமூர்த்தி , எம். ஏ. பி. எச்.டி.,
6. வைதிகப் பிச்சுவையர், எம்.ஏ., எம்.எல்.
7. ராமுப்பிள்ளை , பி.எ., பி.எல்., அரசியல்வாதி.
8. பா. சீநிவாசாச்சாரி, எம்.ஏ., எல்.டி.தலைமை உபாத்தியாயர்.
9. மிஸ் மீனாக்ஷி , சினிமா நடிகை.
இந்த ஒன்பது பெயர்களையும் லௌட் ஸ்பீக்கர் ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக ஸ்பஷ்டமாகச் சொல்லிற்று. 18240 எண்ணுள்ள கட்டிடத்துக்கு முன் நின்றிருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தது. கூட்டத்தில் ஓரத்தில் இருந்த லக்ஷ்மணன் மனத்தில் ஆச்சரியத்துடன் தன்வழியே திரும்பினான். தன் பெயர் அந்த ஒன்பதில் இருந்ததைப் பற்றி அவனுக்கு ஒன்றும் ஆச்சரியம்
இல்லை. ஆனால், பேராசிரியரையும், தலைமை உபாத்தியாயரை யும், ஆராய்ச்சி மாணவனையும், சினிமா நடிகையையும் தன்னுடன் ஒப்பிட்டு எப்படித்தான் அந்தச் சிருஷ்டி கர்த்தா தேர்ந்தெடுத்தானோ! சூசகங்கள் சரியாயில்லை. அந்தச் சிருஷ்டி கர்த்தா அப்படி யொன்றும் அறிவு படைத்தவனாகத் தோற்றவில்லை. ஊருக்குப் போனால் தன் நண்பர்களுடன் நாதமலைத் தோப்பில் ஆனந்தமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கலாம். வீணாக இன்னும் ஒருநாள் பட்டணத்தில் அல்லாடுவானேன்? நாளைக்கு அந்தச் சிருஷ்டி கர்த்தாவைப் பேட்டி கண்டு என்ன பயன் இருக்கப் போகிறது, என்று தகித்த வெயிலையும், தேடிக்கொண்டு மோத ஓடிவரும் மோட்டார்களையும் லக்ஷயம் பண்ணாமல் பிராட்வேயைக் கடந்து ஒரு ஹோட்டலில் நுழைந்து எதிரே ஒரு கப் காப்பியை வைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான் லக்ஷ்மணன். சூடான காப்பி வயிற்றுக்குள் போனவுடன் அபாரமானதோர் தீர்மானம் தோன்றிற்று. நாளைக்கும் இருந்து சிருஷ்டி கர்த்தாவைப் பார்த்து விடுவது என்று முடிவு செய்தான். பட்டணத்திலும் அவன் சந்திக்க வேண்டிய சோஷியலிஸ்டுத் தோழர்கள் பலர் இருந்தனர். அவன் அவசரமாகக் காபி சாப்பிட்டு விட்டு ஹோட்டலை விட்டு வெளியேறும்போது சிருஷ்டி கர்த்தாவின் ஆபீஸ் வாசலில் சற்றுமுன் மொய்த்திருந்த கும்பல் அப்படியே ஹோட்டலுக்குள் வந்து கொண்டிருந்ததைக் கண்டான்.
“அசட்டு மனிதர்கள்! இந்த வெயிலில் காபி எதற்கு?” என்று முணுமுணுத்துக் கொண்டே ஹோட்டலை விட்டு வெளியேறினான்.
3
மறுநாள் 18240 பிராட்வே மாடிப்படி ஏறிச் சிருஷ்டி கர்த்தாவின் ஆபீஸ் முன்னறைப் பெஞ்சில் வெளிக்கதவையும் ஆபீஸ் உள்ளறைக் கதவையும் பார்த்துக் கொண்டு முதல் முதலாகப் போய் உட்கார்ந்தவன் லக்ஷ்மணன்தான். அந்த உத்தியோகம் தனக்குக் கிடைக்க வேணுமே என்று அவனுக்கு அவ்வளவாக அக்கறை இல்லை . ஆனால், அந்த விஷயமே ஏதோ விசித்திரமாக இருந்தது. ஆதியிலிருந்து அந்தம் வரையில் இருந்து அதை ஒரு வழியாகப் பார்த்து விடுவது என்று ஸ்நானம் செய்து சாப்பிட்டுவிட்டு ஒன்பது மணிக்கே கிளம்பி வந்துவிட்டான். அவன் அந்த ஆபீஸ் முன்னறையை அடையும்போது மணி ஒன்பதரைகூடச் சரியாக ஆகவில்லை . ஆபீஸ் சேவகன் கூட வரவில்லை போலிருந்தது. ஆனால் ஆபீஸ் கதவுகள் எல்லாம் திறந்திருந்தன. லக்ஷ்மணன் ஆபீஸ் தலைவனின் அறைக்குள் என்ன இருக்கிறது பார்க்கலாமென்று அந்த அறைக் கதவைத் திறக்க முயன்றான். முடியவில்லை. உட்புறம் பூட்டப்பட்டிருந்தது போலும். ஆனால் உள்ளே எதுவும் சத்தமே இல்லை. ஆபீஸர் பின்புற வழியாக வந்து கதவைத் திறப்பார் என்று எண்ணிக்கொண்டு அவன் மறுபடியும் பெஞ்சில் போய் உட்கார்ந்தான்.
மணி ஒன்பதரை அடித்தது. ஆபீஸ் அறையில் ஏதோ சப்தம் கேட்டது . லக்ஷ்மணன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். உள்ளே அப்பொழுதுதான் அறையைக் கூட்டிச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள் போலும். அவன் உட்கார்ந்திருந்த அறையும் குப்பையுங் கூளமுமாக அசுத்தமாய்த்தான் இருந்தது. அந்த அறையை யாராவது கூட்ட வந்தார்களானால் பேச்சுக் கொடுத்துச் சாமர்த்தியமாக ஏதாவது விஷயத்தைக் கிரகித்துக் கொள்ளலாம் என்று எண்ணினான் லக்ஷ்மணன். சற்று நேரத்துக்கெல்லாம் அவனிருந்த அறையிலும் விளக்குமாறு சப்தங்கேட்டது; தூசியெல்லாம் ஒருபுறமாகச் சேர்ந்து திரண்டு அப்புறப்படுத்தப் படுவது தெரிந்தது. ஆனால் என்ன விந்தை! யாரும் காணப்படவில்லை. பிரமை பிடித்தவன் போல யோசனையில் ஆழ்ந்து சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான் லக்ஷ்மணன். அதற்குள் அறை சுத்தமாகிவிட்டது. அறையில் மாட்டியிருந்த காலண்டரில் இருபத்து மூன்று என்று காட்டிய காகிதம் கண்ணில் படாததோர் கையினால் கிழித்து அகற்றப்பட்டது!
குளத்தில் முழுகிவிட்டுக் கேசத்தில் தங்கியிருக்கும் ஜலத்தை உதறி ஒதுக்குபவன் போல ஒருதரம் தன் தலையை வேகமாக ஆட்டினான் லக்ஷ்மணன். எவ்வளவு வித்தை கற்ற பேர்வழியானலும் அந்தச் சிருஷ்டி கர்த்தாவினிடம் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டு விடும் உத்தேசம் லக்ஷ்மணனுக்கு இல்லை. வித்தைகளைக் கண்டு ஏமாறும் தலைமுறையில் பிறந்தவனல்ல அவன். அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும், முக்கியமாக ரஷ்யாவிலும் என்ன என்னவோ விசித்திரமான காரியங்கள் செய்கிறார்களாமே! இது என்ன பிரமாதம்?
வெளிக் கதவுக்கு அப்பால் மாடிப் படியில் காலடிச் சத்தம் கேட்டது. கதவுப்பக்கம் திரும்பினான். உள்ளே வந்தது யாராயிருக்கும்? அவர் தோற்றமே பதிலளித்தது. காதில் வைரக் கடுக்கன்கள்; தலையில் அழுக்கேறிய ஜரிகைத் தலைப்பாகை; நெற்றியில் கீற்றுச் சந்தனம்; உடலின் மென்மையை மறைத்த கறுப்புக் கோட்டு; பஞ்சகச்சம். காலில் ஸ்டாகிங்ஸ், பூட்ஸ்-அவர் வைதிகப் பிச்சுவையர் எம்.ஏ., எம்.எல்., ஆகத்தான் இருக்க வேணும். அவர் வாசற்படியில் ஒரு விநாடி நின்று அறையை மேலும் கீழும் பார்த்தார்; லக்ஷ்மணன் மேலும் அவரது பார்வை ஒரு க்ஷண நேரம் விழுந்தது. “நாழிகையாகவில்லை ” என்று சொல்லிக்கொண்டு அவர் லக்ஷ்மணனுக்கு எதிரே இருந்த ஒரு பெஞ்சின் மேல் உட்கார்ந்து, ”அப்பாடா!” என்று சுவரில் சாய்ந்து கொண்டார். சிறிது நேரங்கழித்துத் தலைப்பாகையைக் கழற்றிப் பக்கத்தில் வைத்துவிட்டுத் தலையை ஒருதரம் தடவி விட்டுக் கொண்டார். சந்தேகமென்ன? உச்சிக் குடுமிதான்! வயசு அவருக்கு முப்பதுகூட இராது. எனினும் முன்தலையெல்லாம் வழுக்கை. அவருக்குப் போட்டியாக உத்தியோகத்துக்குத் தானும் விண்ணப்பம் போட நேர்ந்ததே, அந்த விதியை எண்ணிச் சிரிப்பதா அழுவதா என்று லக்ஷமணனுக்குத் தெரியவில்லை .
மணி பத்தடித்துவிட்டது. இனிமேல் மற்றவர்களும் வர ஆரம்பித்து விடுவார்கள் என்று அவன் நினைக்கும்போதே வெளியே டாக் டாக் என்ற பூட்ஸ் சத்தம் காதில் விழுந்தது. உள்ளே வந்தவர் யாரென்று பிச்சு ஐயருக்குக்கூடச் சந்தேகம் தோன்றாது என்று எண்ணினான் லக்ஷ்மணன் – மிஸ் மீனாக்ஷிதான். தான் யுவதி என்பதில் யாருக்காவது சந்தேகம் வந்துவிடுமோ என்றுதானோ என்னவோ, அவள் குலுக்கும் மினுக்கும், நடையும் உடையும், பேச்சும் அலங்காரமும் எல்லாம் குழந்தைப் பருவத்தனவாக இருந்தன. நாதமலை வாசிதான் என்றாலும் எம்.ஏ. படித்துப் பட்டம் பெற்றவன், அச்சமயம் ஆங்கில பாணியில் ஆடை தரித்திருந்தவன் என்பதற்காகப் பெண்களுக்கு மரியாதை தரவேணும் என்ற கொள்கைப்படி மிஸ் மீனாக்ஷி உள்ளே வந்தவுடன் லக்ஷ்மணன் எழுந்து, “இந்த ஆசனம் சற்றுச் சௌகர்யமாய் இருக்கிறது. மற்றதெல்லாம் தூசியாக இருக்கிறதே!” என்று சொல்லித் தன் ஆசனத்தை அவளுக்கு ஒழித்துக் கொடுத்தான். அதற்கு அவள் “தாங்க் யூ” என்று சொன்னது பச்சைக் குழந்தை பேசக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தவுடன், “அப்பா சொல்லு, அம்மா சொல்லு, குட்மார்னிங் சொல்லு” என்று தொந்தரவு செய்யப்பட்ட குழந்தை வேண்டாவெறுப்பாகச் சொல்லும் வார்த்தை போல இருந்தது. ஆனால் மழலையாதலால் இன்பகரமானதாக அமைவதுபோல் அமைந்திருந்தது.
மற்றவர்களும் வர ஆரம்பித்து விட்டார்கள். நாலைந்து இடங்களில் ஒட்டுப்போட்டுத் தைத்த கதர் ஜிப்பாவும் காலில் தோய்ந்த செருப்பும் இடையில் பழுப்பேறிய கதர் தோத்தியும் அணிந்து செருப்புக் கீச்சு கீச்சு என்ன, நடந்து கொண்டு வந்தார் அரசியல்வாதி மேல்சபை அங்கத்தினர், ராமுப்பிள்ளை . எம்.ஏ., எம்.எல்., எம்.எல்.ஏ. ஆராய்ச்சி மாணவன் வீரக்குடும்பன் அங்கும் கையில் பெரும் புஸ்தகம் தாங்கிக் கதர்வேஷ்டியும், ஸில்க் சட்டையும், ட்வீட் கோட்டும் அணிந்து வந்தான்; அவன் மூக்குக் கண்ணாடியும், கூனிய முதுகும், எதையோ தேடுவதுபோன்ற ஒரு சாய்வும் பார்வையும் அவன் என்றும் மாணவனாகவே இருக்கப் பிறந்தவன் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி அறிவுறுத்தியது. கவிஞன் கந்தசாமியும் வந்தான்; அவன் கண்கள் கவியின் கண்கள்; அவன் உடம்பில் இருந்த ரத்தமெல்லாம் கண்களில் தான் போய்ச் சேர்ந்திருந்தது; தலைமயிர் முன்னால் வந்து விழுந்து நெற்றியை மறைத்தது; அவன் கைகள் சதா அவன் தலைமயிரைப் பிய்த்துப் பிடுங்கிக் கோதி விட்டுக் கொண்டிருந்தன; அவன் வாய் சதா எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது; அவன் கால்கள் நாடி சேர்ந்தாற்போல் நடப்பதற்கென்று படைக்கப்படாதவை; ஆனால் அவனும் எப்படியோ அந்த மாடிப்படி ஏறி அங்கு வந்து சேர்ந்துவிட்டான்.
வெளுத்த தாடியும், கறுப்புக் குல்லாயும், மை தோய்ந்த கையும், சதா கடன்காரர்களையே எதிர்பார்க்கும் மிரண்ட பார்வையும் பத்திரிகை ஆசிரியர் தோழர் மீரான் சாயபுவின் வருகையுடன் வந்தன. எட்டாவதாக வந்தவர் பேராசிரியர் சி. ராமமூர்த்தி; அவர் முகத்திலே எவ்விதமான பாவமும் இல்லை ; யாருடன் பேசுகிறோம் என்று அறிந்து அவன் கொள்கைகள் என்ன, அதற்கேற்றபடி என்ன சொல்லலாம் என்று அறிந்த பின்தான் அவருடைய முகத்துக்குப் பாவமும், உள்ளத்துக்கு உணர்ச்சியும் பிறக்கும்; அவர் எட்டு வருஷங்கள் இங்கிலாந்திலேயே கழித்தவர்; ஆங்கில நாகரிகத்தின் வர்ணமின்மை அவருடைய முகத்திலும், ஆடையிலும் நன்கு தெரிந்தது.
கடைசியாக வந்தவர் பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயர். நெற்றியில் நாமமும், எப்பொழுதும் போலக் கடைசி நிமிஷத்திலே வந்து சேருவதனால் ஏற்பட்ட இரைப்பும், காலுக்கு மாட்டியிருந்த சைகிள் கிளிப்புந்தான் அவருடைய சின்னங்கள். வழக்க விசேஷத்தினால் அவர் உள்ளே வந்தவுடன் பள்ளிப் பையன்களை போல எல்லோரும் எழுந்திருப்பார்கள் என்று எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை.அறையில் சுற்று முற்றும் பார்த்துவிட்டுக் காலியாயிருந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டார். ஆனால் அப்பொழுது அவர் தலையில் தலைப்பாகையோ எதிரே மேஜையோ சாக்கட்டியோ இல்லை.
ஒன்பது பேரும் வந்துவிட்டார்கள். மணியும் பத்தரை அடித்து விட்டது. ஆபீஸுக்கு ஏன் இன்னும் யாரும் வரவில்லை என்று ஆச்சரியப்பட்டான் லக்ஷ்மணன். அதே விநாடி உள்ளறையில் கணகணவென்று மேஜை மணிச் சத்தம் கேட்டது. ஆபீஸ் உள்ளறைக் கதவு கோவிற் கதவு திறப்பது போல மெதுவாகத் திறக்கப்பட்டது. அறையில் வெண்மையான அன்னம் போன்ற தோர் ஆசனத்தின் மேல் அமர்ந்திருந்தார் நாலு தலைகளுடன், சிருஷ்டி கர்த்தா பிரம்ம தேவர். இந்துவாகப் பிறந்த எவனுக்கும் – தமிழனுக்கு மத்தியில் பிறந்ததனால் பத்திரிகை ஆசிரியர் மீரான் சாயபுவுக்குக்கூட – அவர் யார் என்று தெரிந்து போயிருக்கும். உள் அறைக் கதவு பெரிசாக அகலமாக இருந்ததால் கதவு திறந்தவுடன் முன்னறையில் இருந்த ஒன்பது பேரினுடைய கண்ணிலும் பிரம்ம தேவர் பட்டார். மிஸ் மீனாக்ஷி அந்தக் காட்சியைக் கண்டவுடன், “ஓ! மை!” என்றாள். வைதிகப் பிச்சுவையர் ஆசனத்திலிருந்து எழுந்து கீழே சாஷ்டாங்கமாக விழுந்து சமஸ்காரம் செய்து எழுந்து காதைப் பொத்திக் கொண்டு ‘அபிவாதயே ‘ சொன்னார். இங்கிலாந்தில் ஏழு வருஷம் தங்கிய பேராசிரியருக்கும் பொருளாதார ஆராய்ச்சியில் தான் கண்டறியாத பொருளொன்றைக் கண்டு விட்ட மாணவனுக்கும், லக்ஷ்மணன் உட்பட ஏனையோருக்கும் பிரமையே தோன்றிற்று. திடுக்கிட்டு அசைவற்று உட்கார்ந்திருந்து விட்டனர். மீரான் சாயபு , “அல்லாஹு அக்பர்!” என்று உரக்கச் சொன்ன பிறகுதான் அவர்களுக்குச் சுய பிரக்ஞையும் ஞாபகமும் வந்தன.
இதுவரையில் தனக்குத்தான் உத்தியோகம் என்று எண்ணிக் கொண்டிருந்த லக்ஷ்மணன், “போச்சு! அந்த வைதிகப் பிச்சுவைத் தாண்டி நமக்கா வரப்போகிறது!” என்று எண்ணினான். அங்கிருந்த ஒவ்வொருவருடைய மனத்திலும் அச்சமயம் அதுபோன்ற ஓர் எண்ணந்தான் தலை தூக்கி நின்றிருக்கவேணும்; ஏனென்றால் அவர்கள் முகத்தில் தோன்றியது ஏமாற்றமே தவிரப் பிரம்மதேவரையே இக்கண் கொண்டு பார்க்கும் பாக்கியம் பெற்றோமே என்ற ஆனந்தமல்ல.
அவர்கள் யாரும் பேசுமுன் பிரம்ம தேவரே பேச ஆரம்பித்தார்.
“சிருஷ்டித் தொழிலில் எனக்கு உதவி செய்ய ஆற்றலும் அறிவும் படைத்த ஓர் ஆள் தேவை என்று விளம்பரம் செய்தபோதும், பின்னர் இந்த விலாஸத்துக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்த போதும், நேற்று ஆபீஸ் வாசலில் அந்தக் கும்பல் கூடிய போதுங்கூட, நான் விஷயம் இவ்வளவு பிரமாதமானது என்று எதிர்பார்க்கவில்லை. நான் செய்துவிட்ட தவறு எனக்கே நேற்று மாலைதான் தெரிந்தது. இரவு முழுவதும் யோசனை செய்து நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். நடந்துவிட்ட காரியத்துக்கு நான் உங்கள் மன்னிப்பைக் கேட்டுக் கொள்ளுகிறேன். ஆனால் சற்றுப் பொறுமை இழக்காமல் நீங்கள் அமர்ந்து நான் சொல்லுவதைக் கேட்க வேணும்.
“இதோ, தோழர் லக்ஷ்மணனை உதாரணமாக எடுத்துக் கொள்ளுவோம். நானும் என்னைப் போன்றவர்களும் அனாவசிய மென்றே அவர் எண்ணுகிறார். தேவர்களை ஆதியில் மனிதன் தன் சகோதர சகோதரிகளை ஏமாற்றுவதற்காகச் சிருஷ்டித்தான் என்று யாரோ எழுதிவைத்ததைப் படித்திருக்கிறார் அவர். நீங்கள் இதை மறுக்க வேண்டாம். எனக்குத் தெரியும் உங்கள் மனத்தில் இருப்பதெல்லாம். அதையும் சிருஷ்டித்தவன் நான் தானே? அவர் ஒரு சோஷியலிஸ்டு; தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையென்றால் உலகையே அழித்துவிடத்தான் வேணுமென்று கட்சி பேசுபவர். அப்படி அழித்துவிடுவது சுலபம் என்றே வைத்துக் கொண்டு பேசுவோம். அழித்ததன் இடத்தில் எதை ஆக்கிப்போட்டு நிரப்புவது? எனக்குத் தெரியாது என்பவர் அவர். ‘இயற்கைக்குக் காலி இடங்கள் பிடிக்காதே; தானே நிரம்பிவிடும்’ என்பார் அவர்.
“தோழர் லக்ஷ்மணனை நான் ஓர் உதாரணமாகச் சொன்னேனே தவிர, அவர் உங்களில் மற்றவர்களுக்கெல்லாம் தாழ்ந்தவர் அல்லது உயர்ந்தவர் என்ற அபிப்பிராயத்துடன் சொல்லவில்லை. இதோ வைதிகப் பிச்சு ஐயர்கூட எண்ணுகிறார்; ‘இந்தப் பிரம்ம தேவருக்குப் பிரம்ம லோகத்தை விட்டு வந்து பூலோகத்தில் என்ன வேலை? அவரவர்க்குள்ள இடத்தில் தானே அவரவர் இருக்க வேணும்? தினசரி வாழ்க்கையில் தெய்வத்துக்கும் தெய்வ வழிபாட்டுக்கும் அளவுக்கு மீறிய இடம் கொடுத்ததனால் தானே இப்போது ஹிந்து சமூகம் இப்படிச் சீர்கெட்டு நிற்கிறது?’ என்று. இதோ நம் ஹெட்மாஸ்டர், என் கையில் பிரம்பைக் கொடு; நான் உலகையும், உன்னையும் சேர்த்து ஆட்டிவைத்து விடுகிறேன்’ என்கிறார். இந்தக் கொள்கையையும் நான் எவ்வளவோ தரம் பரீக்ஷை செய்து பார்த்துவிட்டேன். ஹனிபால் என்ன, சீசர் என்ன, தைமூர்லேன் என்ன, நெப்போலியன் என்ன, ஹிட்லர் என்ன, ஒவ்வொருவர் கையிலும் பிரம்பையும் பீரங்கியையும் கொடுத்துப் பார்த்து விட்டேன். ஆனால் அவர்களுடைய கடைசிக் காலங்களில் நானே சாட்டையை எடுத்துக் கொண்டு அவர்களை ஆட்டிவைக்க வேண்டிய அவசியம் நேர்ந்துவிட்டது.
“உங்களுக்கெல்லாம் இருப்பதைவிட எனக்குச் சிருஷ்டித் தொழிலில் அனுபவமும் திறமையும் இருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை . நான் முதல் மனுஷனைச் சிருஷ்டித்து, உலகில் போய் வாழ்ந்து விட்டு வா என்று அனுப்பிய போது, அவன் சிலகாலம் வாழ்ந்துவிட்டு, ‘நீங்கள் சிருஷ்டித்திருக்கும் இந்த உலகிலே குறைகள் கணக்கில் அடங்காமல் இருக்கின்றன. உலகைச் சீர்திருத்தினால் தேவலை’ என்று சொல்லிக் கொண்டு என்னிடம் வந்தான். சீர்திருத்தக்காரரில் முதல் நம்பர் அவன்தான். அதற்கப்புறம் மனிதராகப் பிறந்தவர்கள் எல்லாருமே வேறு ஒன்றும் தக்க தொழிலாக அகப்படாவிட்டால் உலகைச் சீர்திருத்துவதில் ஈடுபடுகிறார்கள். எனக்குப் போதுமென்று நான் நாலே முகங்கள் படைத்துக் கொண்டேன். ஆனால் உண்மைக்குள்ள முகங்கள் சதகோடி. எத்தனை மனிதர்கள் எத்தனை விதமாகப் பார்த்தாலும் அத்தனை விதமாக உண்மை காட்சி அளிக்கும். இதோ சினிமா நக்ஷத்திரம் மீனாக்ஷி – மன்னிக்க வேணும் – மிஸ் மீனாக்ஷி , ஏன் இந்த மனிதர்கள் சகிக்க முடியாத அனாவசியமான உண்மைகளைச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் என்று எண்ணுகிறான். அதற்கு நேர்மாறாக மிஸ்டர் குடும்பன் தம் பொருளாதார ஆராய்ச்சி உண்மைகளை யாரும் கவனிப்பதில்லையே என்று வருத்தப் படுகிறார்.
“நான் யுகம் யுகமாகச் சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டவன். இருந்தாலும் எனக்கு உதவி செய்ய ஒரு வாலிபனை நியமித்துக் கொள்ளலாமே என்று முதல் முதலாக நான் எண்ணியது இந்த யுகத்தில் தான். உண்மையில் சிருஷ்டித் தொழிலில் உதவி செய்ய எனக்கு ஆள் தேவையில்லை. எத்தனையோ உலகங்களைச் சிருஷ்டி செய்ய எனக்குச் சக்தி இருக்கிறது. ஆனால் எனக்குப் புத்தி சொல்லி, உலகை இன்ன இன்ன விதத்தில் சீர்திருத்திச் சிருஷ்டிக்க வேணுமென்று சொல்ல முன்வருபவர்களைக் கவனித்துக் கொள்ளத்தான், ஆள் போடவேண்டும். சிருஷ்டித் தொழிலில் எனக்கு உதவி தேவையில்லை என்று நான் நேற்று மாலை ஆழ்ந்து யோசனை செய்து முடிவுக்கு வந்தேன்.
“நான் சொல்லுகிற விஷயம் உங்களுக்கெல்லாம் விளங்குகிறது என்று நம்புகிறேன். என்னுடைய பேச்சு அவ்வளவாக ரஸமாகவோ, தெளிவாகவோ அமையவில்லையென்பது எனக்கும் தெரியும். பிரம்ம லோகத்தில் ‘வேதவில்லா விலிருந்து கிளம்பும் போது வீட்டில் எனக்கும் என் வாணிக்கும் சற்று மனஸ்தாபம் வந்து விட்டது. அவள் என்னுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டாள். அதனால் தான் என்னுடைய இன்றையப் பேச்சு மற்ற நாளையப் பேச்சுக்களைப் போலச் சுவாரசியமாக அமையவில்லை.
“இதுதான் விஷயம்; சிருஷ்டித் தொழிலில் எனக்கு உதவி செய்ய நான் உங்களில் யாரையாவது நியமித்துவிட்டேனானால் கொஞ்ச நாளில் எனக்கே வேலையில்லாமற் போய்விடுமோ என்று நேற்று எனக்குப் பயம் தோன்றிற்று. என் பயம் நியாயமானதுதான் என்று நான் அறிந்து கொண்டு விட்டேன். உலகைச் சீர்திருத்துவதிலே உள்ள ஆர்வத்தில், தீவிர வேகத்தில், நீங்கள் என்னையும் நான் சிருஷ்டித்திருக்கும் இந்த உலகையும் அழித்துவிடத் தயாராக இருப்பீர்கள். என்னையே மாய்த்துக் கொள்ள நான் உங்களில் யாரையாவது நியமிப்பானேன்? அப்படி நான் மாய்ந்து விட்டாலும் என்ன பிரயோஜனம்? பிரம்ம தேவன் படைத்த குறைகள் உள்ள உலகு இருந்தால்தானே சீர்திருத்தக்காரர்களுக்கு வேலையுண்டு?
“நானே நேற்று யோசித்தேன். உலகில், அதுவும் இந்த யுகத்தில், இவ்வளவு சீர்திருத்தக்காரர்களைப் படைத்துவிட்டேனே, இந்த உலகம் தாங்குமா என்று எண்ணினேன். பிறகுதான், தாங்கும், புரட்சிக்காரர்களும் இந்தக் குட்டி சிருஷ்டி கர்த்தாக்களும் காரியத்தில் இறங்காதவரையில் தாங்கும் என்று எண்ணினேன். அவர்கள் பேச்சு எழுத்து இவைகளுடன் நிற்கும் வரையில் உலகத்துக்கே க்ஷேமம் என்று தோன்றிற்று. யுகம் யுகமாக லக்ஷக் கணக்கான சீர்திருத்தக்காரர்களுக்கும் மிஞ்சித் தப்பி வந்திருக்கும் என் உலகு இவர்களையும் மீறித் தப்பிச் சரியானபடி நடக்கும் என்றே தோன்றிற்று.
“இப்பொழுது உங்களில் ஒருவரை நான் என்னிடம் வேலைக்கு வைத்துக் கொள்ள விரும்புகிறேன். வேலை என்னவென்றால் தோன்றும் சீர்திருத்தக்காரர்களின் முறையீடுகளை யெல்லாம் கேட்டு ஆச்சரியமோ அவதியோ படாமல் அவருடைய சீர்த்திருத்தங்களினால் உலகம் என்றும் சீர்திருந்திவிடாதென்றும், பிரம்ம சிருஷ்டி எப்போதும் உள்ளபடியே , ஏழைக்கும் பணக்காரனுக்கும், அறிவாளிக்கும் அறிவற்றவருக்கும், சீர்திருத்தக் காரருக்கும் விதியென்பவருக்கும், அவரவர்களுக்குரிய தக்க இடங்கொடுத்து நடந்து வருமென்றும், சொல்ல வந்ததையெல்லாம் சொல்லிவிட்டுப் போ ஐயா என்றும், போக மறுப்பவர்களைக் கழுத்தை நெட்டி வெளியே தள்ளுவதுந்தான் என் உதவியாளரின் வேலையாக இருக்க வேணும்..”
பிரம்மதேவன் இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதெல்லாம் லக்ஷ்மணன் காதில் விழவில்லை. அவன் ”சட் இதென்ன உத்தியோகம்? இதைவிடத் தாலூக்கா ஆபீஸில் குமாஸ்தா வேலை பண்ணலாமே! அங்கு நடக்கும் வேலையும் கிட்டத்தட்ட இதேதான். பிரம்மதேவனோ, மோரையோ!” என்று சொல்லிக் கொண்டே எழுந்து திடுதிப்பென்று அந்த அறையை விட்டு வெளியே கிளம்பி வேகமாக மாடிப்படி இறங்கிப் பிராட்வேயில் காலை வைத்தானோ இல்லையோ, வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் லாரி அவன்மேல் மோதிற்று…
“ஐயோ!” என்று அலறி, விழித்துக் கொண்டான் லக்ஷ்மணன்.
அவனுடைய ஆப்த நண்பன் நாகராஜன், “என்னடா கையில் பேப்பரை வைத்துக் கொண்டு தூங்கி விழுந்து கொண்டிருக்கிறாயே!” என்று சொல்லி முதுகில் ஓங்கி ஒரு தட்டுத் தட்டினான்.
பிரம்மதேவன் சிருஷ்டித் தொழிலில் தன் உதவியை நாடினான் என்று லக்ஷமணன் நாகராஜனிடம் சொல்லவில்லை. அப்படி நாடியது கனவில் தான் என்றாலும், தன்னை நாடவில்லையே பிரம்மதேவன் என்று நாகராஜன் பொறாமைப்படுவான் என்பது லக்ஷ்மணனுக்குத் தெரியும்.
ஆனால் என்ன கனவு!
– 1944, க.நா.சு . சிறுகதைகள்