இடுப்பு பிடித்துக்கொண்டது என்று மனைவியிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ராஜேஷ் குமார், வாயுப்பிடிப்பா, இல்லை மூச்சுப்பிடிப்பா என்று தெரியாமல் மனைவி இடுப்பில் அயொடெக்ஸ் போட்டு தடவி விட்டுக்கொண்டிருந்தாள். இவருக்கு வலி பொறுக்க முடியாமல் ஐயோ அம்மா, என்று அலறிக்கொண்டிருந்தார்.
வயசாயிடுச்சு, போதும் வீட்டுல அடங்குங்கன்னா கேட்டாத்தானே, வயசுக்கு வந்த இரண்டு பையனையும் புள்ளையும் பெத்து, அதுகளும் ஒண்ணு ரெண்டு பெத்தாச்சு. இனி என்ன? பணத்துக்கு ஆலாய் பறக்கணும்னு நமக்கு என்ன தலை எழுத்தா? இல்லை புதுசு புதுசா புள்ளைக கூட கூத்தடிக்கணும்னு நினைப்பா? கடு கடுவென சீறியபடி மீண்டும் இடுப்பில் போட்டு அழுத்தி தேய்த்தாள்.
சத்தம் போட்டு பேசாதடி, இவரின் குரல் மனைவியிடம் இறைஞ்சுவது போல் கேட்டது. ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருக்கேன்,படியேறி பழனி முருகனை தரிசிக்கணும்னு. அடியேய், தயவு செய்து அப்படி வேண்டிறாத, இப்ப எல்லாம் மேடேறுனா முட்டி எல்லாம் வலிக்குது.
ம்..ம்.. உறுத்து பார்த்த மனைவி இப்ப மட்டும் வயசாகுதுன்னு தெரியுதா? பதில் சொல்ல முடியாமல் அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். கொஞ்சம் அமைதியாத்தான் பேசேன், வெளியே யாராவது கேட்டுகிட்டா அப்புறம் அவ்வளவுதான் அசட்டு புன்னகையுடன் மனைவியை சமாதானப்படுத்தினார்.
ஐயா, ரெடியாயிட்டாருங்களா? வந்திருந்தவரிடம், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, உள்ளே இருக்காரு, சொல்லிய வேலைக்காரி உள்ளே வந்து அவர்கள் அறைக்கதவை தட்டினாள்.
அதற்குள் அவர் இடுப்பை அயொடெக்ஸ் போட்டு நீவி முடித்திருந்தாள் மனைவி. இவர் உடையை மாற்றியபடி அறைக்கதவை திறந்தார்.
வேலைக்காரி வெளியே உங்களுக்காக வெயிட் பண்ணறாங்க..பவ்யமாய் சொல்லி நகர்ந்து நின்றாள்.
ம்ம்….சொல்லிவிட்டு வேகமாக நடந்து வெளியே வந்தவர் காரில் ஏறி உட்காரவும், காத்திருந்தவர் முன் கதவை திறந்து உட்கார கார் சர்ரென சீறி பாய்ந்தது.
“சார் நீங்க அப்படியே ஸ்டையிலா நடந்து வர்றீங்க, அப்ப ஹீரோயின் ஜிகினா டிரஸ்ஸுல படியில இருந்து இறங்கி உங்க கிட்ட வந்து உங்க கையை பிடிச்சிக்கறாங்க, நீங்க அவங்க கையை அப்படியே பிடிச்சு திரும்பறப்ப உங்களை அடிக்க அடியாளுங்க சுத்திக்கறாங்க. நீங்க ஸ்டைலா கதாநாயகியை இடுப்போட அணைச்சு பிடிச்சுகிட்டு காலை மட்டும் திருப்பி வில்லன்மேல ஒரு உதை கொடுக்கறீங்க… சொல்லிக்கொண்டிருந்தார் டைரக்டர்.
நான் கதாநாயகி இடுப்பை பிடிச்சு நிக்கறதோட எடுங்க, திரும்பி உதைக்கறதை டூப் போட்டுடுங்க. ஜாக்கிரதையுடன் சொன்னார் முன்னனி கதாநாயகன் ராஜேஷ்குமார். இடுப்பு பிடிப்பை வெளியில் சொல்ல முடியாமல்…..
அந்த சண்டையை திரையில் இரசித்து பார்த்து கைதட்டினான் ரசிகன்.