கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 30, 2014
பார்வையிட்டோர்: 11,019 
 
 

பிரதான போஸ்ட் ஒஃபீஸ் ஜங்ஷனிலிருந்து இடப்பக்கம் திரும்பி இரு நூறு மீட்டர் தூரம் நேராக… அதோ அந்த மூலையில் ‘உசாவி வீதிய” என்று நகராட்சி மன்றத்தின் பழைய போர்டைப்பார்த்து… வந்தீர்களானால்… வலப்பக்கத்தில் போன நூற்றாண்டு காலக்கட்டமாய் சிதைந்தும் உருக்குலையாமல் எப்போதோ நினைவுக்கு அப்பாற்பட்ட காலத்தில் அடிக்கப்பட்ட மஞ்சல் நிற (அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது) பெயின்டோடு தெரிகின்ற அந்தப் புராதண காலத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் மும்மொழிகளிலும் கருப்பு வெள்ளையில் ஒரு போர்டு வரும்…அதனை நன்றாக உற்று அவதானித்தால்… அதில் ‘திருமலை நீதிமன்றத் தொகுதி” எனத் தமிழில் போடப்பட்டிருக்கும் அதற்குப் பக்கத்தில்..

இப்போதுதான் நீங்கள் வாசிக்கின்ற இந்தக் கதைக்கான களத்துக்குள் வரப்போகின்றீர்கள். கம்பீரமாய் முறைத்துக் கொண்டிருக்கும் அந்த மனுநீதிச் சோழக் கட்டடத்தினுள்ளே நுழைந்தவுடன் கிரவுன்ட் ஃப்ளோரில் இடப்பக்கத்தில் பிரதான நீதவான் நீதிமன்றமும் வலப்பக்கத்தில் மேலதிக நீதவான் நீதிமன்றமும் நீதி தேவதையிடம் நீதிக்கதைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. (நீதி தேவதைக்குப் பதிலாக ஏன் நீதி தேவன் எனப் போடலாகாது என்ற சந்தேகம் இன்றுவரை எனக்குள் இருக்கின்றது. யாராவது இதற்குப்பதிலளித்தால் ரொம்பத் தேவல).

திங்கட் கிழமையாதலால் சனி ஞாயிறு உட்பட கைது செய்யப்பட்ட குடு, கஞ்சா, ஹெரோயின், அடிபுடி, களவு, குடித்துவிட்டு பகிரங்க இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்ளல், காசுக்கு சூது விளையாடல் மற்றும் கொலை கொள்ளை என நானாவித குற்றங்களுக்காகவும் வேண்டுமென்றோ இல்லை உண்மையாகவோ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட பலர் ஷெல்லுக்குள் நிறைந்திருந்தார்கள்.

கருத்த கோட்டுகளோடு சட்டத்தரணிகள்.

‘சேர் எப்படியாவது மகன வெளியில எடுக்கனும் இன்னிக்கு… ரெண்டு மாசமா உள்ளுக்க இருக்கான் சேர். நீங்கதான் எப்படி முயற்சி செஞ்சாவது அவன வெளீல எடுத்துத்தரணும்… ஒங்களத்தான் மல போல நம்பியிருக்கேன்…” எனக் கண்கள் கசங்கியபடி அந்த ஆடை கசங்கிய பெரிசிடம்.

‘இஞ்ச பாருங்க… இதத்தான் கடந்த இரண்டு மாசமா சொல்லிட்டு இருக்கீங்க… ஒரே கதைய திரும்பத்திரும்ப சொல்லி டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க… ஒங்க புள்ள செஞ்சது என்ன களவா… இல்ல கொள்ளையா.. பதினாலு வயசுப் புள்ளய காதல்ங்குற பேர்ல கட்டில் வரைக்கும் கொண்டு போயிருக்கான்… கிளியர் கட் எவிடன்ஸ்… மெடிக்கல் ரிப்போர்ட் வேற ஹைமன் இன்டக்ட்… செக்சுவல் பெனிட்ரேசன்னு வந்திருச்சு… எப்சலூட்லி ஸ்டச்சுட்டரி ரேப்… புதுசா வந்த நீதவான் வேறு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு…….. பார்;ப்பேர்……..இன்னிக்கு ஓரல் சப்மிஸன் செய்யுறதா இருக்கன்… இன்னிக்கு எப்படியும் பிணை எத்துரலாம்…”

“சேர் உள்ளுக்க இருந்திட்டு ரொம்ப அழுவுரான்….வெளீல சுருக்கா எடுக்காட்டா அவன் செத்துருவேன்னு வேற பயமுறுத்துறான்….

ரொம்ப பயமாயிருக்கு சேர் அவனப் பாக்குறதுக்கு… ஏதாவது செஞ்சுடப் போறான்னு நெஞ்சு படக் படக்குன்னு அடிச்சிக்கிட்டே இருக்கு… எப்படியாவது அவன வெளீல எடுத்துத் தந்துருங்க சேர்….”

“ஒங்களு மாதிரி ஆக்களுக்கு எத்தின தடவ சொன்னாலும் புரியாது… நான்தான் சொன்னேனே இன்னிக்கு எப்படியாச்சிலும் அவன பிணைல எடுத்திரலாம்னு… குத்தம் செய்யுறப்போ தெரிஞ்சிருக்கனும்.. வெள்ளம் தலைக்கு மேலே போனப்புறம் அழுதா சரியாயிடுமா….எனக்கு மத்த கேசுங்களும் இருக்கு… டோச்சர் பன்னாம ஓப்பன் கோர்ட்டுல போயி உக்காருங்க…” பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார் அந்த சீனியர் லோயர்.

தினம் தினம் கோர்ட்டுக்குள்ளே குறையாத சனம்… இன்றும் அலை மோதியது. ஒவ்வொருத்தர் முகத்திலும் கவலையின் படிவுகள்… யாருக்கு என்ன கேசோ… ஒரு பிள்ளையோ… ஒரு தகப்பனோ… அல்லது புருஷனோ இல்லை சகோதரனோ விளக்க மறியலில் இருக்கலாம்… அல்லது தீர்ப்புக்காக அவரவர்களது வழக்குகள் இன்று நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம்.

மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டின் கொரிடோரில் சப்தமில்லாமல் சனக்கூட்டம். கோர்ட்டாச்சே.. எப்படி சப்தம் வரும்.

இன்னும் பதினைந்து நிமிடங்கள்தான் இருந்தன கோர்ட் ஆரம்பிப்பதற்கு. ஒவ்வொரு லோயரும் அவரவர் கட்சிக்காரர்களோடு ரொம்ப பிஸியாகவும் அவரவர் கட்சிக்காரர்களிடம் வாங்கிய பீசுக்காக என்ன செய்து இந்த வழக்கை உடைக்கலாம், எப்படி அவனுக்கு பினை எடுக்கலாம் என்றும் தலையை பிய்த்தபடி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

சட்டத்தரணிகளின் கன்ஸல்டேசன் அறையில் ‘ஓக்கே… ஓக்கே… எப்படியும் இன்னிக்கு ரவிய பிணைல எடுத்திரலாம். ரெண்டு பேரு ரெடியா இருங்க அவனுக்கு சுவர்ட்டி சைன் பண்ணனும். எதுக்கும் கொஞ்சம் காசையும் ரெடி பண்ணி வச்சிடுங்க. சம் டைம் கேஷ் பெயிலுக்கும் வாய்ப்பிருக்கு”

என்றவாறு தனது கோட்டை அவசரமாக மாட்டிக் கொண்ட லோயர் ஹஸீ, மேசை மீதிருந்த அத்தனை பைல்களையும் அலேக்காகத் தூக்கிக் கொண்டு கிரிமினல் பரொஷிஜர் கோட், எவிடன்ஸ் ஓர்டினன்ஸ், ஒஃபென்ஸிவ் வெப்பன்ஸ் ஓர்டினன்ஸ் மற்றும் பீனல் கோட் அத்தணையையும் அள்ளிக் கொண்டார்.

‘பண்டார நான் ஹைகோர்ட்டுக்கு பதினொரு மணிக்கு வந்துருவேன். உங்கட ட்ரையல் இன்னிக்கு எப்படியும் எடுபடும். என்ட ஜுனியர் உங்க கேசுக்கு அப்பியர் பணணுவார். நான் வரும் வரைக்கும் கேச கீப் டவுன் பண்ணச் சொல்லிருக்கேன்… எனக்கு அப்பீல் கோட்டுல ஒரு ரிட்கேஸ் இருக்கு. அத முடிச்சிட்டு அப்படியே வந்துர்ரேன்… ச்சே… என்ன தான் பொழப்போ” அலுத்துக் கொண்டே ஹஸீ தனது கட்சிக்காரர்களை அவரவர் கோர்ட்டுக்கு அனுப்பிவிட்டு கோர்ட் கொரிடோரில் இறங்கி நடந்தார்.

மனுஷனுக்கு வியர்த்து ஒழுகியது. பிஸி… பிஸி… பயங்கர பிஸி… அப்பீல் கோர்ட்டில் அவரது ரிட் ஒஃப் மென்டமூஸ் மற்றும் சேர்ஷியோராரி இன்று ஆர்கியுமென்ட்க்கு வருகின்றது. நேற்றிரவே அதற்காக ரொம்ப மெனக்கெட்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுத்தொன்பதாம் ஆண்டின் இலங்கை சட்ட அறிக்கையின் முதலாம் வொலியுமில் அகில் இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் ஊழியர் ஒன்றியம் எதிர் நொஸ்லே லங்கா லிமிட்டெட் எனும் வழக்கின் மேன்முறையீட்டு நீதிமன்றமானது ‘வட் ஈஸ் அல்ட்ரா வைரஸ்’….

மனுஷனுக்கு மூளை ரொம்பவும் விறைத்திருந்தது. ரொம்பவும் டென்ஷன் ஏறியிருந்ததனை நெற்றிச் சுருக்கங்கள் காட்டின. ரொம்பவும் விலைகூடிய லோயர் என்று கோர்ட் வட்டாரத்தில் அவருக்கு ஒரு ட்ரேட் மார்க் ஒன்றுண்டு. நிறைய வழக்குகள் அவருக்கு.

ஹஸீ அப்பீல் கோர்ட் செல்வதற்காக மாடிப்படிகளில் கால்வைக்கும் சமயம் ‘சேர்… சேர்…. சேர்…” என தன் பின்னால் மூச்சிறைக்கும் சப்தம் கேட்டுத் திரும்பினார்.

பின்னே வயதின் முதிர்ச்சியோடு ஒரு தளர்ந்த தேகம்…வியர்வையில் ரொம்பத்தான் குளித்திருந்தார்… மேன் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. தலையின் கேசம் கலைந்திருந்தது… எண்ணெய் போடாத பரட்டைத்தலை… ஷேவ் செய்யப்படாத முகத்தில் நரை மீசை மற்றும் நரை தாடி… வயசு அண்ணளவாக ஒரு அறுபது இருக்குமா? மொத்த சோகத்தையும் ஒட்டு மொத்த குத்தகை எடுத்ததால் இருளகலாக் கண்கள்.

ஒரு நிகழ்காலத் துயரத்தின் படிமம்

‘சேர் ஒங்களத்தான் சந்திக்க வந்தேன்… எம் மகன பொலிஸ் அநியாயமா அரெஸ்ட் பண்ணிட்டாங்க…விசாரிச்சுப் பாத்ததுல எல்லாரும் ஒங்க பேரத்தான் சொன்னாங்க…எப்படியாவது வழக்க ஜெயிச்சிடுவீங்கன்னு சொன்னாங்க. அதான் உங்களப் பார்க்கனும்னு வந்தேன். காத்தால ஏழு மணிக்கெல்லாம் வெளிக்கிட்டு வந்துட்டேன சேர்;. வர்ர வழில பஸ் ஒடஞ்சிடுச்சி…. அதான் லேட்டு…தாமதத்துக்கு மன்னிச்சிக்கனும்”

மூச்சிறைத்தது அவருக்கு…மூர்ச்சித்தது அவருக்கு.

பரிதாபப்பட வைக்கும் முகமும் வார்த்தைகளும்; ஹஸிக்கு ஏற்கனவே இன்றைய வழக்குகளைப் பற்றிய டென்ஷன்… பீபீ எகிறியது. அப்பீல் கோர்ட்… ஹை கோர்ட்… டிஸ்ட்ரிக்ட் கோர்ட்… அப்புறம் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்… அத்தனை நீதிமன்றங்களிலும் இன்று அவருக்கு வழக்குகளுண்டு. எப்படியோ சமாளிக்கப் போகிறேன்…சும்மா கோலிங் வழக்குகள் என்றாலும் பரவாயில்லை…பெரும் பாலும் ட்ரையல்ஸ்….ஓவர்; டோஸ்… அதுக்குள்ள இந்த மனுஷன்.

‘நேரமாயிட்டு… நான் மேலே போகனும்… சுருக்கா சொல்லுங்க… கோர்ட் தொடங்குற நேரம் வந்துக்கிட்டு நம்மள அறுக்குதுங்க… நமக்குன்னு வந்து வாய்க்குது…” முணுமுணுத்தார். எரிச்சல் எரிச்சலாக வந்தது. ஓங்கி ஒண்ணு விடலாமா எனக்கூட அவருக்குத் தோன்றியது. வயசுல மூத்தவராச்சே… அடக்கிக் கொண்டான்.

எனினும் அவருடைய கோர்ட் வாழ்க்கையில் இது ஒன்றும் புதிதல்ல. இத்தணை வருட அனுபவத்தில் இப்படி எத்தனை பேரை அவர் சந்திருத்திருப்பார்….சிலர் இருக்கின்றனர்…எப்படித்தான் சொன்னாலும் விளங்காது…மொட்டை ப்ளேடுகள். இந்தத் தொழிலில் பொறுத்தார் பூமியாழ்வார்.

அடிக்கடி கையில் கட்டியிருந்த மணிக்ககூட்டைப் பார்த்துக் கொண்டான்.

‘என்ட மகன முந்தா நாள் களவுக் கேஸ் ஒன்னுல ஹெட் குவாட்டர்ஸ் பொலிஸ் அரெஸ்ட் பண்ணி அவன ஷெல்லுல வச்சு ரொம்ப அடிச்சி ஆக்கின பண்ணியிருக்காங்க. இன்னிக்குத்தான் கோர்;ட்டுக்கு கொண்டு வந்திருக்காங்க. அதோ அந்த ஷெல்லுல இருக்கான்” என வந்த அந்த வயோதிகர் தனது மகனைக் காட்டினார்.

‘செய்யாத குத்தத்துக்காக அநியாயமா அவனப்புடிச்சி ரெண்டு நாளா வச்சி உண்மையச் சொல்லுறா… களவெடுத்த நகைய எங்கேடா ஒளிச்சு வச்சிருக்கேன்னு கேட்டு அடிச்சு பூட்ஸ் காலால ஒதச்சிருக்காங்க… ஒடம்பு பூராகவும் ரத்தக்களரியா இருக்கு… அவன் களவெடுக்குற ஆள் இல்ல சேர்… அவன் ஒரு வெகுளி…கொஞ்சம் புத்தி சரியில்லாத பையன்….ஒத்த புள்ள சேர்… மனசு கெடந்து தவிக்குது. அவனப்பாக்கவே அழுகையழுகையா வருது” தேம்பியழுதார் அவர்.

ஹஸியின் எரிச்சல் அடங்கி அவர் மீதான பச்சாதபம் மனசுக்குள் படர ஆரம்பித்திருந்தது. அந்த வயசாளியின் கண்ணீரில் உண்மையிருந்தது. இத்தனை வருடகாலத்தில் ஹஸியின் கோர்ட் வாழ்க்கை எது உண்மை எது போலி எது அசல் எது நகல் எனப் பகுத்தறியும் பக்குவத்தினை கற்றுக் கொடுத்திருந்தது. இன்றைய திகதி வரை எத்தனை கிரிமினல்களோடு அவர் டீல் பண்ணியிருப்பார். கோல்ட் ப்ளட்டட்; மேர்டரர்!;, ரேபிஸ்ட், ரொபராஸ், சேடிஸ் என எத்தனை வகையறாக்கள்.

‘ஓக்கே ஓக்கே… இப்ப என்ன பண்ணும் நான் ரொம்ப பிஸி இப்போ… குயிக்கா சொல்லி முடிங்க” சற்றும் குறையாத அவசரம்.

இந்த நேரத்தில் ஹஸீ இப்படி அவருக்கு நேரம் கொடுத்து பேசியதே பெரிசு. இல்லையென்றால் கோர்ட்டுக்குள் வந்துவிட்டால் அவர் மீது அவசர அவசரமாக டென்ஷனும் வியர்வையும் தொற்றிக் கொள்ளும். பிரபலமாக உள்ள எல்லா வக்கீல்களுக்குமுள்ள பொதுப் பிரச்சினையிது. காணிக்கேஸ், கொலைக்கேஸ், விவாகரத்து கேஸ், ஹெரோயின் கேஸ், பினை விண்ணப்பங்கள் என எத்தனை வகையறாக்கள். எல்லா கோர்ட்டுகளுக்கும் ஏறியிறங்கி… ஆர்கியுமென்ட் செய்து… வழக்கு விளக்கம் நடாத்தி….அதிலும் மேல் நீதிமன்றங்கள் என்றால் அங்கு பெஞ்சில் குந்திக் கொண்டிருக்கும் ஜட்ஜுகளை சமாளிப்பது. அது கண்கண்ட சாட்சியங்கள் உள்ள வழக்கை திறமையாக வாதாடி வெல்வதனை விடவும் அதி கஷ்டம்… சில நீதிபதிகள்…அது தவமாய் தவமிருந்து.

‘சேர் ஒங்களத்தான் நம்பி வந்திருக்கேன். கை விட்டுராதீங்க. எப்படியாவது மகன வெளியில எடுத்து தந்துடுங்க… அவன் ரொம்பப் பயந்து போயிருக்கான். ஆசுப்பத்திரிக்கு கொண்டு போகனும்… அவன்ட உம்மா பொலிசு அவன புடிச்சிட்டுப் போனப்புறம் சோறு தண்ணி இல்லாம படுத்த படுக்கையா இருக்கா… மகன்ட பேர் அரூஸ்ங்க…” இன்னும் அழுது கொண்டிருந்தார்.

ஏனோ ஹஸிக்கு அவரது மகனது வழக்கினை நிராகரிக்கும் மனசு வரவில்லை. மாஜிஸ்ட்ரேட் கோர்ட் தொடங்கியதும் முதலில் ரிமான்டில் உள்ளவர்களது வழக்குகளைத்தான் கூப்பிடுவார்கள். துலக் முதலியாரிடம் சொல்லி இவரது மகனது வழக்கினை முதலில் கூப்பிடச் செய்து விடலாம். ஆனால் அப்பீல் கோர்ட் வேறு…

‘சேர் அல்லாவுக்காக என்ட மகன வெளீல எடுத்துத் தாங்க…”

‘நீங்க வேற ஒரு லோயரப் புடிச்சிப் பேசுங்களேன். எனக்கு மேலே அப்பீல் கோர்ட்டுல வழக்கு இருக்கு”

‘சேர்… சேர்… என்ன கைவிட்ராதீங்க… எல்லாரும் ஒங்க பேரத்தான் சொல்றாங்க… ஒங்களால மட்டும்தான் மகன வெளீல எடுக்க முடியும்… இல்லாட்டி ரிமான் பண்ணிடுவாங்களாம். பயமாயிருக்கு சேர்… இல்லன்னு மட்டும் சொல்லிராதீங்க சேர்… ஒங்க கால வேணாப் புடிக்குறன்…”

கஷ்டமென்று வருகின்றபோது மனிதன் தனது கௌரவம், தற்பெருமை, சுய மரியாதை என்பவற்றிலிருந்து எப்படி தூரச் சென்றுவிடுகின்றான். அதுதான் ஹியூமன் சைக்கோலஜி.

‘ஓக்கே… ஓக்கே… ஒங்க மகன்ட கேச பாக்குறன்” அந்த அவசர நிலையிலும் ஹஸி அவரது மகனது வழக்கினை ஒத்துக் கொண்டது அவருக்கே ஆச்சர்யமாயிருந்தது. சாதாரணமாக அவர் கோர்ட்டில் வந்து அவசரமாக வழக்குகளின் நிகழ்வுகளைக் கேட்டு தயாராகும் ரகமல்ல. மாற்றமாக அவரது சேம்பருக்குச் சென்று வழக்குத் திகதிக்கு ஒரு நாளைக்கு முன் அவரைச் சந்தித்துப் பேசி அவருக்குரிய ஃபீஸையும் அங்கேயே கட்டிவிட வேண்டும். அதுதான் அவரது வழக்கம். கோர்ட்டில் வந்து வழக்குகளை அவரிடம் பேசுவது ஹஸிக்கு ரொம்ப அலர்ஜி என்று அவரது அணைத்துக் கிளையன்ட்ஸ்களுக்கும் ரொம்ப நன்றாகத் தெரியும்.

தவிரவும் வழக்குக்கு முன்னமேயே அவரது ஃபீஸை செலுத்திவிட வேண்டும்… ஃபீஸில் ரொம்பக் கரார் பேர்வழி… ஆனால் வழக்குப் பேசுவதில் மனுஷன் இன்டெலிஜன்ட்… எக்கோர்டிங் டு செக்ஷன் டுவென்டி செவன் ஒஃப் எவிடன்ஸ் ஓர்டினன்ஸ்” என ஆரம்பித்தால் அரை மணித்தியாலத்துக்காகவாவது அவரது ஆங்கிலம் ஓங்கி ஒலிக்கும்;.

செம இன்டரெஸ்டிங்

தனக்குன்னு சில ப்ரின்ஸிபள்களை வைத்திருக்கிறார் அவர். தொழிலின் தாரக மந்திரம் ‘வீ ஹேவ் டு மெயின்டைன் தி ப்ரொஃபஷனல் டிக்னிடி பிகோஸ் இட் ஈஸ் எ நோபல் ப்ரொஃபஷன்” நிறைய கேசுகளை ஜெயித்திருக்கிறார். ரொம்ப பிரபல்யம்.

வெரி எக்ஸ்பென்ஸிவ்

‘பெரியவரே… எங்க காட்டுங்க ஒங்க மகன”

பெரியவர் காட்டிய திசையில் கோர்ட்டின் ஷெல்லுக்குள் மாரிகால மழையில் நனைந்த கோழிக் குஞ்சாய் வெடவெடத்தவாறு அந்தச் சின்னப் பையன்.

‘சேர்… ஒங்க பீஸ்…” பெரியவர் தலை சொறிந்தார்… அவரது பார்வை கீழே தாழ்ந்திருந்தது.

சாதாரணமாக பிணை எடுக்கும் வழக்குகளில் ஹஸியின் ஃபீஸ் கனதியாக இருக்கும்… ஆரம்பத்திலேயே சொல்லி விடுவார்.
ஆனாலும் இப்போது ஒன்றும் சொல்லவில்லை. பெரியவரின் முகம் பரிதாபத்தை அவருள் பதியம் போட்டிருக்க வேண்டும்…

‘சேர் என்னைய மன்னிக்கனும்… நான் இப்ப வரக்க காசு கொண்டு வரல… நீங்க மகன வெளீல எடுத்துவிட்டுங்க… நான் இப்ப டவுனுக்குப் போறன்… சரியா ரெண்டு மணிக்கு ஒங்க ஃபீஸோட வாரன்… அல்லா மீது சத்தியமா ஒங்க ஃபீஸ ரெண்டு மணிக்கு கொண்டு வநதுத தந்துடுவேன்… என்ன தப்பா நெனச்சசுக்காதீங்க… எப்படியாவது எம் புள்ளைய காப்பாத்திடுங்க”

ஹஸிக்கு எரிச்சலாக வந்தாலும் அந்த பெரியவரது கண்ணீரும் கெஞ்சலும் ஒரு மூலையில் மௌனமாக நெருடியது.
ஃபீஸில்லாத கேஸோ..?

‘ஓக்கே… லெட் மீ ஸீ “ எனச் சொல்லியவாறு அப்பீல் கோர்ட்டுக்கு போக இருந்தவர் திரும்பி பிரதான மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குள் நுழைந்தார். பெரும்பாலனவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

‘நாளுக்கு நாள் வழக்கு கூடிட்டுத்தான் இருக்கு’

எப்படியோ அந்தப் பெரியவரது மகனுக்கு பிணை எடுத்துவிட்டார். வழக்குத்தொடுணர் சார்பாக வந்த பொலிஸ் சார்ஜன் அந்தப் பையனை இன்னும் விசாரணை முடிவுறாததன் காரணமாகவும், காணாமல் போனதாக குறிப்பிடப்படும் நகைகளை இன்னும் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாலும் குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஏழாம் ஆண்டின் முப்பதாம் இலக்க பினைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தான்.

பொலிஸ் சார்ஜன் பிணை வழங்குவதற்கு எதிராக மாஜிஸ்ட்ரெட் முன்னால் செய்த ஆட்சேபனை ஹஸியின் குழைந்த ஆனால் இறுக்கமான ஆர்கியுமெனடில் புஷவாணமாகி விட்டது. அவருக்குத் தெரியும் எந்த ஜட்ஜிடம் எப்பது அணுக வேண்டுமென்று.

ஜட்ஜஸ் மேக் த லோ… ஒரு நீதிபதியின் முன்னால் வழக்கு பேச வருகின்ற போது முதலில் சட்டத்தை விடவும் படிக்க வேண்டியது குறித்த நீதிபதியை அப்படி அவரை நன்கு தெரிந்து கொண்டதன் பின் அவரது குணநலன்களுக்கேற்ப வழக்கினைப் பேசினால் அந்த வழக்கு எடுபடும் என்ற ஹஸியின் சீனியரது வார்த்தைகள் இன்னும் செவிகளில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

‘ஜட்ஜஸ் ஓல்ஸோ ஆர் ஹியூமன் பீயிங’”

ஹஸிக்குத் தெரியும் குறிப்பாக சந்தேக நபர்கள் சார்பான பிணை விண்ணப்பத்தின்போது பெரும்பாலும் எடுபடுவது கருணையும் பரிதாபமுமே…ஸிம்பதியை கிரியேட் பண்ண வேண்டும்.. முழுக்க முழுக்க நீதிபதிகளின் தற்றுணிபிலேயே அது தங்கியிருக்கிறது. ஸிம்பதி கிரியேஷன்… அந்த அஸ்திரம் அந்த பெரியவரது மகன் விடயத்திலும் வேர்க்ட் அவுட்.

குறித்த சந்தேக நபரை மூபா ஐயாயிரம் காசுப் பிணையில் விடுவிப்பதோடு பிணைக்காரர் இருவர் நிறக் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் காலை ஒன்பது மணி தொடக்கம் பகல் பண்ணிரெண்டு மணி வரையான காலப்பகுதியில் திருமலை பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பிரிவில் சந்தேக நபர் தவறாது ஒப்பமிட வேண்டும். என துலக் முதலியார் சொல்லி முடிக்கின்றபோது அப்பீல் கோர்ட்டுக்குப் பறந்தார் ஹஸீ.

பகல் இரண்டு முப்பதிருக்கும்… வெயிலின் விபரீதம் வெளியே விண்ணைத்தாண்டி வருவாயா… அல்ட்ரா வயலட் கதிர்களின் ஆக்கிரமிப்பு ரெம்பத்தான் சண்டித்தணம் பண்ணிக் கொண்டிருந்தது.

பகலுணவை முடித்துக் கொண்டு லோயர் ஹஸீ ‘ரம்யாவுடன் தொடர்பு வச்சிருக்கிறத நீங்க நேர்ல கண்டீங்களா. இல்ல எவராவது அத உங்களுக்குச் சொன்னாங்களா’ என்ற கேள்வியை முதலில் அந்த விவாகரத்து வழக்கில் வழக்காளியிடம் கேட்க வேண்டும் என அடுத்தடுத்த கேள்விகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கையில்…

‘சேர்…”

குரல் வந்த திக்கில் வழக்கின் ஞாபகங்களிலிருந்து மீண்டெழுந்த லோயர் ஹஸீயின் பின்னால்..

‘சேர் காலையில் மகன்ட கேஸ் சம்பந்தமாக வந்து பேசினேனே… ஞாபகமிருக்கா… மகனுக்கு பொண எடுத்துத் தந்து என்ட வயத்துல பால் வாத்தீங்க சேர்… ரொம்ப நன்றி… என்ட மௌத்துக்கு மட்டும் இந்த ஒதவிய மறக்க மாட்டேன்… உண்மையாகவே காலைல எங்கிட்ட ஒத்த சல்லி கைல இருக்கல்ல சேர்… இப்ப கொண்டாந்திருக்கேன்…ததான் கைல காசு கெடச்ச உடன நேரா இஹ்கேயே ஓடியாந்துட்டேன்.”

சுமார் நாலு மணிநேர இடைவெளியில் சுத்தமாக அந்த வயோதிபரையும், அவரது மகனது வழக்கையும் மறந்து போயிருந்தார் ஹஸீ. அவரைப் பொறுத்தளவில் சுண்டைக்காய் கேசிது. இதவிட ரொம்பக் கஷ்டமான வழக்குகள் இருந்ததால் அவை பற்றிய தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்ததில் அவரது மெமரி கார்டில் அந்த வயோதிபரும் அவரது மகனும் முழுசாக டிலீடட பண்ணப்பட்டிருந்தனர்.

‘யெஸ்… காலைல அவசரமாக வந்து பேசினீங்க… உங்க மகன்கூட ரிமான்ட்ல களவுக்கேசில இருந்தானே…”

ஞாபகத்தட்டு சுழல்ந்ததில் காலைச் சம்பவம் மன ஸ்கிரீனில் மீண்டும் டிஸ்பிலே.

‘எவ்வளவுன்னு கூட ஒங்கக்கிட்ட கேட்கயில்ல..நீங்களும் இன்னும் சொல்லவுமில்ல…கெடச்ச காசு அம்புட்டையும் கொண்டாந்திருக்கேன்…ஆமா சேர்… அந்த கேசுதான்… இந்தாங்க ஒங்கட ஃபீஸ்” என்ற வயோதிபர் ஹஸியின் பதிலைக்கூட எதிர்பாராமல் அவரது கையில் அத்தனை நோட்டுகளையும் திணித்தார்.

பாமர மகன்…சுத்த பாமரத்தனம்….இயல்பான வெகுளித்தனம்.

ஆச்சர்யமாக இருந்தது ஹஸிக்கு. அவரது இத்தனை வருடகால சட்டத்தரணித் தொழிலல்p; எத்தனையோ பேருக்கு வழக்கு பேசியிருக்கின்றார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவரிடம் பேசிய ஃபீஸை முழுசாகத் தராமல் அல்லது அறவே தராமல் பலர் ஆரம்ப காலங்களில் ஏமாற்றியிருக்கின்றனர். அப்பேர்பட்ட அனுபவம் ரொம்பவே உண்டு இவருக்கு. ஆனால் இப்படி தேடிவந்து அவரது ஃபீஸை கொடுத்தது ரொம்ப அரிது. அதிலும் இப்படி… நாணயஸ்தன்

‘சேர்… ஒங்க ஃபீஸ் என்னான்று தெரியாது. நீங்களும் சொல்ல இல்ல. என்னால முடிஞ்சத கொண்டு வந்திருக்கேன். அல்லாஹ்வுக்காக ஏசிடாதீங்க… என்னால இதத்தவிர பொரட்ட முடியல சேர்…”

பரிதாபம் சுரந்தது.

‘ரொம்ப ஃபீஸ் எடுப்பீங்கன்னு நான் வெசாரிச்சபோது நெறயப்பேரு சொன்னாங்க. எனக்கு பெரிசா ஒங்களுக்கு ஃபீஸ் தரக்கூயளவு ஒண்ணமில்ல சேர்…” அவரது குரலில் லோயர் தான் கொடுத்த ஃபீஸ் நாணயத் தாள்களை முகத்தில் வீசி விடுவாரோ என்ற அச்சம் அவரது பலவீனப்பட்ட குரலில் வெடவெடத்ததை உணர்ந்தார் ஹஸீ.

‘அடுத்த தவனைக்கு எப்படியும் ஒங்க ஃபீஸ தந்துர்ரேன் சேர்” நாக்கு உலர்ந்திருந்தது.

தன்கையில் திணிக்கப்பட்ட நாணயத்தாள்களை அப்போதுதான் அவதானித்தார் ஹஸீ. ஏகப்பட்ட பத்து ரூபாய் இருபது ரூபாய் நோட்டுகள் மற்றும் ஓரிரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள்… பெரும்பாலானவை பழைய நோட்டுகள்…

‘எழுநூருவா இருக்கு சேர்”

சாதாரணமாக ஒரு சந்தேக நபருக்கு நீதவான் நீதிமன்றத்தில் பிணை எடுத்துக் கொடுக்க ஹஸீ ஆகக் குறைந்தது பத்தாயிரம் ரூபா சார்ஜ் பண்ணுவது வழக்கம். வழக்குள்ளவர்கள் அதனைக் கொடுத்து விடுவார்கள். கெட்டிக்கார லோயர் என்ற லேபல் எப்பவோ அவர் மீது ஒட்டியாச்சே… சிம்ப்ளி ட்ரேட் மார்க்… குட் வில் என்றும் சொல்லலாம்.

அவரது கையிலிருந்த அத்தனை நோட்டுகளிலும் மிகக் கடுமையான எண்ணெய் படிந்திருந்தது. பழைய நோட்டுகளானாலும் எண்ணெயின் பிசுபிசுப்பில் பளபளத்தது.

‘பெரியவரே இங்க வாங்க”

பவ்வியமாக கைகளிரண்டையும் நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக் கொண்டிருந்தவர் ஹஸியின் அருகில் வந்தார்;. கண்களில் பயத்தின் நிழல்… அச்சத்தின் பிரம்மாண்டம். பலவீனர்கள்… அன்டர் பிரிவிலேஜ்ட் என்பார்களே… அவர்களுக்கே உரித்தேயான கழிவிரக்கம்.

‘ஆமா பெரியவரே… காலைல காசில்லைன்னு சொன்னீங்க… இப்ப என்னடான்னா பத்து ரூபாவும் இருபது ரூபாவுமா அதுவும் எண்ணைல போட்டெடுத்த நோட்டுகளா தந்திருக்கீங்க… எங்கேருந்து கொண்டு வாரீங்க இத” சந்தேகத்தில்தான் கேட்டார்.

‘அது வந்து… அது வந்து”
பெரியவர் ரொம்பவும் தடுமாறினார்.

‘ஏன் என்னாச்சு மறைக்காம உண்மையச் சொல்லுங்க… நோ ப்ராப்ளம் எட் ஓல்…”

“இல்ல சேர்… அது… வந்து… என்னான்னா…” வார்த்தைகள் குறைய ஆரம்பித்தன அவருக்கு.

‘ஜஸ்ட் நான் சும்மாதான் கேக்குறன். வேறொன்னுமில்ல… பயப்படாமச் சொல்லுங்க” இப்போது அந்தப் பெரியவரது கண்களிலிருந்து கண்ணீர்..

‘இல்ல சேர் டவுன்ல பஸ் ஸ்டான்ட் பக்கத்துல பொழப்புக்கு வழில்லாம வடை, பெட்டிஸ் சுட்டு விக்குறன். கடந்த ஆறு மாசமா இதத்தான் தொழிலா செஞ்சிட்டு வாரன். போழப்புக்கு வேற வழியில்ல….மூணு வயித்த கழுவனுமே சேர்….இன்னிக்கு கொஞ்சம் யாவாரம் ஆச்சு. இப்பதான் யாவாரம் முடிஞ்சது. முடிஞ்ச கையோடு நேரா ஒங்கக்கிட்டதான் காச எடுத்துட்டு ஓடி வாரேன்…எழு நூறுபாதான் இன்னிக்கு ஆச்சு… கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து மிச்சக் காச அடுத்த தவனைக்கு ஒங்களுக்கு கட்டிடுறேன் சேர்” மூச்சிறைத்தது அவருக்கு.

ஒரு நொடி நிலை குலைவில் கூரான ஊசியின் முனை ஹஸியின் இதயத்தின் மூலையில் எங்கோ ஓர் இடத்தில் ரத்தம் குத்தி எடுத்தது.
அவருக்கும் மனசு வலித்தது மனுஷனாச்சே லோயரானாலும்.

‘பெரியவரே… இந்தாங்க இதப் பிடிங்க… இந்த எழுநூறு ரூபாவையும் நீங்களே வச்சுக்குங்க…”

‘சேர்… மிச்சத்த அடுத்த தவனைக்கு தந்துர்ரேன்”

‘நோ… நோ… நான் அதுக்காக சொல்ல வரல… இந்தக்காச நீங்களே வச்சுக்குங்க… எனக்கு என்ட ஃபீஸ் தேவையில்லை… இப்ப மட்டுமில்ல… ஒங்க மகன்ட வழக்க ஒவ்வொரு தவணைக்கும் நானே பேசுறேன். நோ ப்ராப்ளம்… நீங்க ஃபீஸே தர வேண்டியதில்லை எனக்கு டிஸ்ட்ரிக் கொர்ட்ல வழக்கிருக்கு…”

என்றவர் அந்த எழுநூறு ரூபாவையும் அந்தப் பெரியவரின் கையில் திணித்துவிட்டு நடந்தார்;

ஹஸியின் மனசு மழையில் நனைந்திருந்தது.

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *