பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 6, 2024
பார்வையிட்டோர்: 788 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பட்டினத்தாருக்கும் திருஞானசம்மந்தருக்கும் கூட வேறுபாடு தெரியும் எனத் தோன்றவில்லை. ஒருவேளை அப்பராக வந்த சினிமா நடிகரின் முகம் ஞாபகம் இருக்கலாம். என்றாலும் அவர்களுக்கோர் ஆசை, இறந்துபோன தகப்பனார் சிவலோக பிராப்தி அடைய அவர் சடலத்தின் முன்னமர்ந்து தேவாரம் ஒத வேண்டும் என்று. நினைத்ததில் தப்பில்லை. ஆனால் தேவாரம் பாடுபவர் கிடைப்பது சிரமமாக இருந்தது.

தெற்கே தலைவைத்து வடக்கே கால் நீட்டி சடலம் கிடத்தப்பட்டி ருந்தது. பெருவாழ்வு வாழ்ந்திருப்பார்போலும். பெருவாழ்வென்பது ரூபாய்க்கு ஓரணா வட்டி. காடுகரை தோட்டம் துரவு, மாடுகன்று, வீடுமனை, பேரன்பேத்திகள் சேர்த்துப் பெருக்கித் தள்ளுவது. முற்றிலும் சிவச்சவமாகக் கிடந்தார் செட்டியார். நெற்றியில், மார்பில், தோள்களில், முன்கைகளில் குழைத்துப் பூசிய திருநீறு கறுத்த உடம்பில் புதிதாய் வெள்ளை அடித்தது போலப் பிரகாசித்தது. காதில் கிடந்த வெள்ளைக்கல் கடுக்கன்களும் மாரில் கிடந்த முல்லைப்பூ ஆரமும் சரிகைத் தலைப் பாகையும் சேர்த்துக் கட்டப்படிருந்த கால் பெருவிரல்களும் நெற்றிச் சந்தனத்தில் ஒட்டிய வெள்ளி ரூபாயும்தான் பிணம் என்று சாற்றின.

பதினைந்தடிக்குமேல் உயரத்தில் பழங்கால விதானம். பனங்கைகள் கரிய பாளங்களாய் மினுங்கின. நிறையச் சன்னல்கள் வைத்து, ஆத்தங்குடி கற்கள் பாவிய, காற்றோட்டமும் வெளிச்சமும் கணக்குக் காட்டிய, நீள ஆழமுள்ள முன்னறை. செட்டியார் கிடந்த இடத்தை ஒழித்து பெண்கள் உட்கார பவானி ஜமுக்காளம் விரிக்கப் பட்டிருந்தது. அகலமான சன்னல்கள் வைத்த நோக்கத்தை முறியடிக்க, காற்றும் ஒளியும் புகாமல் நீண்டகாலமாய் அடைத்து வைத்திருந்தனர் போலும்.

ஆட்கள் சுற்றிவர இடம் விட்டு, கால்மாட்டில், சுவரோரம் உட்காரச் சொன்னார்கள். எந்தக் காலத்திலோ பெரியவர் பயன்படுத்திய கணக்குப்பிள்ளை மேசையும் உட்கார மணையும் போட்டு முன்னால் மைக் கொண்டுவந்து நிறுத்தி அதன் மண்டையை வாகாய்ச் சாய்த்து வைத்தனர். செத்த பிணத்துக்கு மைக் வைத்தால்தான் கேட்குமோ என்னவோ? ஒருவேளை பக்கத்துத் தெருவரை பழைய வைப்பாட் டியைப் பார்த்துவர ஆவி போயிருந்தாலோ?

கிழவர் தலைமாட்டில் எரிந்த குத்துவிளக்குக்குத் தொந்தரவாக இருக்கும் என்றெண்ணி அந்த இடத்தில் தொங்கிய ஃபேனை நிறுத்தி வைத்திருந்தனர். இவ்வளவு நறுமணம் உள்ள ஊதுபத்தி எங்கு வாங்கு கிறார்கள் என்று தெரியவில்லை. அம்மையப்பன் பரமசிவத்துக்கே குதிரை லத்தியில் மட்டமான சென்ட் ஊற்றிப் பிசைந்து வாசனைச் சாந்தாக்கிக் குச்சியில் உருட்டிக் காயவைத்த ஊதுபத்திகள்தான். அந்த நாற்றத்தில் எப்படி இடது பாதம் தூக்கி ஆடுவார்? வலது பாதம் வைத்து ஓடத்தான் செய்வார்.

ஆழ்ந்து அகன்று கிடந்த அந்த ஹாலில் குழுமிக் கிடந்த மக்களின் வியர்வை நாற்றம், வாய் நாற்றம்,கும்பி நாற்றம் கிழவர் சடலத்தைத் தொந்தரவு செய்யக்கூடாதென்றும் விலைகூடிய ஊதுபத்திப் புகையைச் சுருள விட்டிருக்கலாம்.

மணையில் அமர்ந்த பின்பு கண்ணாடியை எடுத்து மாட்டி, கைப் பையில் இருந்த திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் இருபத்தி இரண்டாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி எழுபத்தொன்றாம் ஆண்டில் வெளியிடப்பட்ட, பைன்ட்செய்த, மஞ்சள் அட்டை திருவாசகத்தை எடுத்துப் பிரித்தார். அவனருளாலே அவனடி போற்றி என மனதில் நினைத்தவர் கண்களில் தேவாரமும் திருவாசக முமாகப் பொங்கியது.

அவரைப்போலவே புழங்கிப்புழங்கி ஊதிப் பெருத்திருந்தது புத்தகம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய பெயர் விசித்திர மாய்த் தோன்றியது. பெயரழிந்து போய்விடும், வாழ்வழிந்து போனவர்க்கு எல்லாம்.

மனதுக்கு சிரமமாக இருந்தது, ஓதுவாருக்கு. குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் தன்னைச் சினத்துடன் நெரிக்கின்றனவா அல்லது இளக்காரத்தில் எச்சில் உமிழ்கின்றனவா எனத் தெரியவில்லை.

என்னத்துக்கு மசத்தனமான இந்த இளக்காரம்? பொற்சபையிலும் சிற்சபையிலும் உட்கார்ந்து ஓதும்போது மாத்திரம் என்ன வாழ்ந்து விட்டது? எவன் இரண்டு நிமிடம் நின்று கேட்டுப் போகிறான்? பித்தா என்றால் என்ன? பிறைசூடி என்றால் என்ன? ஆலாலகண்டனுக்கே நஞ்சாகிப் போன மனிதர்கள்!

என்றாலும் மனம் பதைத்துக் கிடந்தது. அம்மை அப்பனைப்பாடும் வாயால் பழனியாண்டிச் சுப்பனைப் பாடுவேனோ என்று தியாகராஜ பாகவதர் காதில் முழங்கிக்கொண்டிருந்தார்.

புத்தகத்தை விரித்து எங்கிருந்து தொடங்கலாம் என்று யோசித்தார். புத்தகம் கூட ஒரு அத்துக்குத்தான். ஏழு வயதிலிருந்து திருமுறைகள் முழங்கிய நாவு. பற்கள்ஆடிக்கொண்டிருக்கின்றன. முன் கிடக்கும் சவம் போல கிடக்கும் நாள் வரையில் உண்ணும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் அவன்தான். ‘அப்பனே எனக்கமுதனே ஆனந்தனே அகநெக அள்ளூறு தேன் ஒப்பனே….

சாகக்கிடக்கிறவன் நற்கதியடைய திருவாசகம் வாசிப்பது மரபு தான். ஆனால் செத்த பிணத்துக்கு வாசித்து என்செய? சுற்றி நடமாடும் பிணங்களுக்குத் தேவாரம் என்றால் தெரியுமா, திருவாசம் என்றால் தெரியுமா? எல்லாம் ஒரேவிதமான ஓசை ‘இழும்’ எனும் ஒலியுடன் அருவி வீழ்வது போல.

கண்களில் மறுபடியும் நீர் பெருகியது. ‘சீதப் புனல் ஆடிச் சிற்றம் பலம் பாடி வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமாபாடிச் சோதித் திறம் பாடி சூழ் கொன்றைத் தார் பாடி’ என்று பாடிய நாவால் செத்த பிணத்தின் முன்னமர்ந்து பாடவைத்து விட்டாயே சுடலையாடிய பாவி!

நாலாம் நூற்றண்டில் கட்டப்பட்டு, பதினாறாம் நூற்றாண்டில் புனருத்தாரணம் செய்யப்பட்ட பட்டீஸ்வரர் கோயில் பிரகாரத்தின் வெளிச்சுற்றுக்கள் தாண்டி, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட மடம்தான் வீடு. ஐந்து பக்கங்களிலும் கல்வரிகள். முன் பக்கம் திறப்பு. நடுவில் கற்றூண்கள். திறப்பை பலகை வைத்துத் தடுத்து வாசல் போட்ட வீடு. வெளியையே வீடாகப் பாவித்தவனைப் பாடுப வனுக்கு ஒளி எதற்கு? காற்று வரச் சன்னல் எதற்கு?

வாடகை இல்லா மடமும் தினமும் மூன்று கட்டிப் பட்டைச் சோறும் எழுநூறு ரூபாய்ச் சம்பளமும். எத்தனை பிள்ளை பெற்று வளர்த்து ஆளாக்கமுடியும்?

அவன் அருளாலே அவனிடம் தினமும் செருப்படி வாங்கும் வாழ்க்கை… இதில் சுத்த சிவத்தின் முன் பாடினால் என்ன, செத்த சவத்தின் முன் பாடினால் என்ன?

“நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க”

யாரோ பக்கத்தில் பித்தளைத் தம்ளரில் பருகச் சூடான பானம் கொண்டு வைத்தனர். மொத்தமாய்க் கலக்கிய காப்பியோ, தேநீரோ? எப் போதும் துட்டி வீட்டுக்கோ தீட்டுக்கோ போனால் எதுவும் குடிப்ப தில்லை, உண்பதில்லை. சிவனடியான் சுத்தபத்தமாய்ச் செய்யாததை உண்பவனல்லன். என்றாலும் தொண்டை வறண்டு கொண்டிருந்தது. கொதிக்க இரண்டு மிடறு இதமாக இருக்கும். முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு?

உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்சற்றும் வாட்டமில்லாத தொண்டர் கள் சூழவந்து மாலை போட்டு வணங்கி நின்றார். வணங்கும் குறுகலில் படை ஒடுங்கி இருந்தது.

“ஆடுகின்றிலை கூத்துடையான் கழற்கு அன்பிலை
என்புருகிப் பாடுகின்றலை….”

என்று எடுத்தவரைத் திரும்பிப் பார்த்தார். அடையாளம் தெரிய நியாய மில்லை. கோயிலுக்கு வந்தாலும் பெருந்தனங்களைப் பார்ப்பாருக்கு தேவாரம் ஓதுபவர் எங்கு கண்ணில் படப் போகிறார்? ஆனால் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுவார் முன்னாலிருந்த மைக் கண்ணில் பட்டது. சின்ன சமிக்ஞையில் அடுத்த கணம் அது அவர் கையில் இருந்தது.

“பேரன்பார்ந்த உறவுப் பெருமக்களே, நண்பர்களே, கட்சித் தொண்டர்களே, இன்றைய தினம் நமது அன்புக்கும் மரியாதைக்கும் வணக்கத்துக்கும் உரிய, நம்மீதும் நமது இயக்கத்தின் மீதும் தீராத காதல் கொண்ட ஐயா…”

இத்தனை பேர்கள் கூடிவந்து தொழுது வணங்கி மாலையிட்டு மரியாதை செய்வார்கள் எனில் சற்று நேரம் பிணமாகப் படுத்திருக்கக் கூட அவருக்கு உள்ளூற நாவூறும் போல. சோகம் பொங்கித் ததும்ப கிழவர் பிணத்தை ஒரு பார்வை பார்த்து வணங்கிவிட்டுப் போனார்.

கிடைத்த அவகாசத்தில் சிறுநீர் கழிக்க எழுந்து போனார் ஓதுவார். எப்போது சவம் எடுப்பார்கள் என்று தெரியவில்லை. நேற்றிரவு அடங்கி னார் என்று சொன்னார்கள். ஆடியவர்களும் ஆடாதவர்களும் அடங்கியே ஆகவேண்டும்.

காலையில் சிவாலய வாசலில் காரை நிறுத்தி வெகுநேரம் அலைந் திருப்பார்கள் போலும்.

ஓதுவார்கள் சிவவெருமானுக்குப் பாடுகிறவர்கள்; செத்த பிணத்துக்குப் பாடுகிறவர்கள் அல்ல.

சாகக்கிடக்கிறவர் முன்னால் சிலசமயம் செத்துப்போன பின்பும், சைவரானால் திருவாசகமும் வைணவரானால் நாலாயிரமும் பாடுவது மரபுதான். வடக்குப் பகுதிகளில் திருவருட்பாவோ பட்டினத்துப் பிள்ளையின் பாடல்களோ பாடுவார்கள்.

காலையில் ரேஷன்கடை ரவையில் கிளறிய உப்புமாவின் முன்னமர்ந்து கும்பியில் பசியும் விரல்களில் கொதிப்புமாகத் தட்டத்தைக் கிளறிச் சூடாற்றிக் கொண்டிருந்தபோது வாசலில் விளி கேட்டது. ‘நம்ம பெரிய நாயக்கரு பேரன் கூப்பிடறாருங்க.”

“ஐயா, அவசரப்படாமல் சாப்பிட்டுட்டு வாங்க” என்ற குரல் தெருவாசலில் கேட்டது.

கொதிக்க கொதிக்க அள்ளிப் போட வேண்டியிருந்தது. உப்புமாவில் கிடந்ததுகூட பெரிய நாயக்கர் தோட்டத்துத் தேங்காய்தான்! கோயில் யானைக்கும் கட்டுக்கட்டாய் கோந்தாழை அனுப்பச் சலிக் காதவர். என்ன அவசரம் கருதி அழைக்கிறாரோ?

துண்டினால் கையையும் வாயையும் துடைத்துவிட்டு வந்தபோது, வாசலில் பெரிய நாயக்கர் பேரன் நின்றிருந்தார். சற்றுத்தள்ளி சிகரெட் பிடித்தபடி வாட்டசாட்டமாய் ஒருவர்.

“ஐயாட்ட ஒரு காரியம் ஆகணும்… தட்டப்பிடாது….”

“என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்க.. என் அப்பன் கைலாய நாதனுக்குப் பொறகு நான் வணங்குவது பெரிய நாயக்கரைத் தான். வெள்ளன கூட தோட்டத்துக் கிணத்துலே குளிச்சுப் போட்டு வந்தவன்கிட்டே ரெண்டு வாழப்பூ ஒடிச்சுத் தந்தாருங்க… என்ன செய்யணும், சொல்லுங்க தம்பி….”

“அதோ நிக்கிறாருல்ல..அவர் வந்து கடைவீதி பொன்னுசாமிச் செட்டியாரு பையனுங்க..அவங்க பெரியப்பா இறந்திட்டாரு.. தேவாரம் படிக்கணுமாம்…”

பதற்றத்துடன் ஒதுவார் சொன்னார்.

“ஐயா தப்பா எடுத்துக்கிடப்பிடாதுங்க…. நாங்க தலைமுறை தலைமுறையா சிவன்கோயில் ஒதுவாருங்க.. புசித்தாலும் சிவன் நாமம். பசித்தாலும் சிவன் நாமம்… இந்தக் காரியத்துக்கெல்லாம் நாங்க போறதில்லே…போகக்கூடாது. அதுக்கு வேற ஆட்கள் இருக்கிறாங்க.. ஆனா இந்தப் பக்கம் எனக்குத் தெரிஞ்சவரைக்கும் அப்படி யாரும் கிடையாது.நீங்க வேணுமானா நமச்சிவாய ஒதுவாரைக் கேட்டுப் பாருங்க தம்பி. அவருக்குத் தெரிஞ்சிருக்கலாம்.’

“இதெல்லாம் ஒரு புண்ணியமுங்க…. நீங்க தட்டப்பிடாது… வேற யாரு அறியப்போறாங்க? நல்ல மனுசங்க… தாராளமாச் செய்வாங்க…”

பகல் முறிந்து மாலை சரிந்துகொண்டிருந்தது. அப்பனுக்குக் கூட கொலைப் பட்டினியோடு ஓதியதில்லை.

எப்போது புத்தகத்தை மூடினோம், மைக்கைக் கழற்றினார்கள் என்பதெல்லாம் நினைவில் பதியவில்லை. தெருவெங்கும் பூமாலை களைப் பிய்த்து வீசிக்கொண்டு போனார்கள். ரோஜா, சம்பங்கி, அரளி, தாமரை மலர்க்கொத்துக்களை மிதித்துக்கொண்டு மனிதர்கள் நடந்து போனார்கள்.

வெட்டியானுக்குக் கணக்குத் தீர்ப்பதைப்போலத்தானே திருவாசகம் படித்தவனுக்கும் கணக்குத் தீர்ப்பார்கள். கல்யாண வீடா, குதூகலத்துடன் கூலி வழங்க? கல்யாணச்சாவே ஆனாலும் யாரிடம் போய்க் கேட்பதென்றும் தெரியவில்லை. மரண சோகம் கப்பிக்கிடந்தது காற்றில். சிறிதுநேரம் நின்று பார்த்தார். தேர்ப்பாடை வெகுதூரத்தில் போய்க் கொண்டிருந்தது. கொட்டகை நிறைந்த சினிமாவிட்டுப் போவது போல் ஆண்கள் வெள்ளையும் கதருமாய்…

குளித்து விட்டல்லாமல் வீட்டுக்குப் போகமுடியாது. வரும்போது காரில் அமர்த்திக் கூட்டி வந்தார்கள். சுருக்குப் பையில் பஸ்சுக்கு சில்லறை இருந்தது. வழியில் ஏதும் குளத்தில் இறங்கி முங்கிக் குளிக்க வேண்டும் ஆடை நனைத்து. புத்தகத்தை, சுருக்குப்பையை, விபூதிக் கிண்ணத்தை, தாள் துண்டுகளை நனைக்க முடியாது.

நொய்யலில் தண்ணீரென்பது சாக்கடைக் குட்டைகள். தென் மேற்குப் பருவக்காற்றோ, வடகிழக்குப் பருவக்காற்றின் பின்வாங்கலோ நேரும்போது அடைமழை பெய்தால் மட்டுமே நொய்யலில் எட்டுப் பத்து நாட்கள் தண்ணீர் பாயும். பட்டீசுவரன் கோயில் தெப்பக்குளத்தில் குடித்துவிட்டு எறிந்த இளநீர்க் கதம்பைகள் இறைந்து கிடக்கின்றன. மூவந்திக் கருக்கலில் நனைத்துக் குளித்து, ஈரம் சொட்ட, கையில் திருவாசகப் புத்தகத்துடன் நடந்து போனால் சந்தேகப்படுவார்கள் யாரும் பார்த்தால். குறுக்கு வழியில்தான் போக வேண்டும். நல்லவேளை வீடாகிய மடம் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது.

மாற்று வேட்டியை உடுத்தி சாப்பிட அமர்ந்தவருக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை. அவருக்குப் பிடித்த முள்ளங்கிக் குழம்பும் காட்டுக்கீரை கடைசலும்தான். ஆனால் நாள் பூரா முன்னால் கிடந்த பிணம், அழு குரல்கள்,ஆதாளிகள்…

கோயிலுக்குப் போகப் பிடிக்கவில்லை. அன்றைய முறை நமச் சிவாய ஒதுவார்தான் என்றாலும் தில்லை அம்பலவன் பொன்னம் கழலைச் சிலகணங்கள் தியானித்து நிற்கலாம். முன் மண்டபத்திலாவது சற்றுநேரம் அமர்ந்து வரலாம். மனம் மாற்றுருக் கொள்ளும்.

கிடந்தால் உறக்கம் கொள்ளவில்லை. முதன்முறையாக விபச்சாரம் செய்துவிட்டு வந்த பெண்ணின் மனம் போலக் கிடந்து தவித்தது ஆவி. உடலெங்கும் வேற்று ஆடவனின் வியர்வை நாற்றம் படிந்த அருவருப்பு. உறக்கமும் விழிப்புமற்ற நிலையில சொற்பதங் கடந்த தொல்லோன் கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன் காட்சிப்பட்டுக் கணக்குக் கேட்பதுபோல்…

அதிகாலையில் எழுந்து குளித்து மேனியெங்கும் திருநீறணிந்து, அப்பன் சந்நிதியில் மேனி மண்புரள விழுந்து வணங்கி, கண்ணீராகிக் கசிந்து, மண்டபத் தூணோரம் நேரம் போனதறியாமல் உட்கார்ந்து, உட்செவி உணரப் பாடல் வரிகளாய் உள்ளிறங்கிக் குளிர்ந்தாலும் கங்கு கனன்று கொண்டிருந்தது எரிந்தடங்கிய சிதைபோல்.

பிரசாதம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது பெரிய நாயக்கர் பேரன் நின்று கொண்டிருந்தார். ஒதுக்குப்புறமாய்க் கூட்டிப்போய் தந்த உறையை வீட்டில் போய் விரித்துப் பார்த்தபோது ஆயிரம் ரூபாய் இருந்தது.

ஒதுவாருக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளில் சேர்த்துப் பார்த்ததில்லை. சிவபெருமானைச் செத்த பிணத்துக்கு விற்ற காசென்ற போதம் ஆன்மாவில் சுடலைப்பொடியின் வெக்கையாய்க் காந்தியது.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றும் உள்மனம் கேட்டது.

மாதம் இரண்டு பணக்காரக் கிழவர்கள் திருவாசகம் கேட்டுப் பாடை ஏறினால் தலைமுறைகளாய் அரித்துத் தின்னும் தரித்திரம் தீரும் என்றும் தோன்றியது.

– காலச்சுவடு, மார்ச் – ஏப்ரல் – 2001

நன்றி: https://nanjilnadan.com/2011/06/22/பிணத்தின்முன்அமர்ந்து/

நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *