கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 21,385 
 

அந்த பஜாஜ் ஸ்கூட்டர் ஒரு நாளும் அந்த பிரமாண்ட ஸ்கூல் கேட் முன்னால் நின்றதில்லை. மாணவர்களின் குதூகலம், ஆசிரியப் பணிவு, பெற்றோர்களின் அலைச்சல், விசாரிப்புகள் என எல்லாவற்றையும் மீறி அதன் புறப்பாடும், வருகையும், சமீபித்தலும் கனகராஜின் காதுகளுக்கு மட்டுமே கேட்கும். அவன் காதுகள் புற உலகச் சத்தத்தைத் தவிர்த்து பஜாஜ் ஸ்கூட்டரின் சத்தத்திற்கு மட்டுமே காத்திருக்கும். அவர் கையிலிருந்து அணைக்காத எஞ்ஜின் சத்தத்துடன் ஒரு குழந்தையைக் கைமாற்றுவது மாதிரி ஸ்கூட்டரைக் கனகராஜின் கைகளுக்கு மாற்றி விடுவார்.

பிடி2

ஸ்கூட்டரின் வருகையும், ‘கிறீச்’சத்தத்தோடு கேட் திறத்தலும் ஒருசேர நிகழும். அது ஒரு போதும் தவறினதில்லை. பாரபட்சமான கேட் அது. ஒரு நாளும் தாமதிக்காத கிளமண்ட் சாரைக் கூட மூடிய அதன் எதிர்ப்பக்கத்தில் நிற்க வைத்து இறுமாந்திருக்கிறது.

மெர்சி டீச்சரின் சில குதூகலமான நாட்களில், சற்று மிகையாகி புடவைக்கான மேட்சிங் வளையல்களில் ஆரம்பித்து எப்போதும் விரிக்கப்படாத வண்ண குடை தேர்வு விரை நீண்ட நாட்களில், அது அநியாயத்திற்கு அவர்களை வெளியில் நிறுத்தி உச்சந்தலையிலிருந்து, கால்களின் நகங்கள்வரை ஒருமுறை நிதானமாய் மேய்ந்தபிறகும் திறக்காமல், ஒரு ஆள் மட்டுமே நுழையும் அதன் சின்ன கேட்டைத் திறந்து மெர்சி டீச்சரை அனுமதிக்கும். சரியான உயரமும், அதற்கான தாட்டிகமும், மிகையில்லாத நிறமும், சுருள் சுருளாய் தன் முன் நெற்றியில் விழும் முடிக்கற்றையைச் சற்றே அலட்சியமாய் தள்ளிக்கொண்டே அந்தச் சின்ன கேட்டின் இரும்பு தன்னைத் தொட்டுவிடாமல் மிக ஜாக்கிரதையாய் தன் உடம்பை சுருக்கிக் கொண்டு உள்நுழைகையில் பார்வை மட்டும் அப்பள்ளி மைதானத்தை எட்டும். தன் அழகு எப்போதும் அந்த ஸ்கூல் கேட்டினால் அவமதிக்கப்படுவதை அவள் உள்ளூர வெறுத்தாள். அந்நிமிடங்களில் ஸ்கூல் வழியே கடக்கும் சைக்கிள் ஓட்டிகள், டூ வீலர் பயணிகளின் வேகம் குறைவதும், எப்போதாவது கடக்கும் சில நான்கு சக்கர வாகனங்கள் நிற்பதும், மட்டுமல்ல அந்த கேட்டிற்கு அப்புறமிருந்து தவமிருந்து முளைக்கும் கண்களின் கவனிப்புகளில் அவள் நடந்துவரும் நீண்ட நடை, ஒரு அகங்காரக் கவிதை.

பிடி1

அளவெடுத்துச் செதுக்கப்பட்டு, கருங்கற்கலால் கட்டப்பட்ட இரு மாடிகளும் பர்மா தேக்கு மரப்படிகளால் இணைக்கப்பட்டு, மரச்சட்டங்களாலான இரண்டாம் மாடியின் மேற்கூரை கறுப்பேறிய சீமை ஓடுகளாலானவை. கருந்தரை வழுக்கும். கீழே தலைமையாசிரியர் அறை, கூப்பிடு தூரத்தில் அதன் எதிரே அலுவலக அறை, தலைமையின் பார்வை எப்போதும் விழுந்து கிடக்கும் எதிருக்கு பக்கத்து அறை ஸ்டாஃப் ரூம். மரப் படிக்கட்டுகளில் ஏறும் மாணவ பாரங்களின் சப்தத்தை அதிகரித்து காட்டவும், பிரேயருக்குப் பின் எனில் கால்களின் சத்தத்தை உறிஞ்சியெடுக்கவும் காத்திருந்த அந்த மரப் படிக்கட்டுகள் ஆசிரியர்களின் ஷீ போட்ட தாமத நடைகளை எப்போதும் ஹெட்மாஸ்டரின் காதுகளுக்கு ரகசியமாய் கடத்தவும் கற்றிருந்தது. ஜன்னல் கம்பிகளில் புதைந்திருந்து பார்க்கும் மாணவர்களின் முன் எத்தனை சத்தங்கள், அவமானங்கள், அவமதிப்புகள், மீறிய கண்ணீர் துளிகள் எல்லாவற்றையும் கடந்து மீண்டும் படியேறும்போது ஆசிரியர்களின் ஷீ சத்தத்தையும் உறிஞ்சிக் கொள்ளும் மாயப் படிக்கட்டுகள் அவை.

அது ஒரு அரசு மான்யம் பெற்ற கிருஸ்துவ மேல்நிலைப்பள்ளி. ஐந்தாயிரம் மாணவர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்களுமாய் நிறைந்து நின்ற அவர்களுக்கு, சகல அதிகாரங்களும் வாய்க்கப்பெற்ற ஒரு மேய்ப்பனிருந்தான். சற்றே உயரத்தைத் தூக்கிக் காட்டிய ப்ரவுன் கலர் ஷீவையும், நல்ல அடர்த்தியான வண்ணங்களில் வேண்டுமென்றே கழட்டிவிடப்பட்ட சட்டையின் மேல்பட்டனும், அதனுள் ஒளிரும் ஐந்தாறு பவுன் எடையுள்ள கோதுமை செயினும், எப்போதும் எதற்காகவும் கசிந்து விடாத புன்னகையின் ஊடே இயேசுவோ அல்லது அவரின் பெயரினால் திருச்சபையோ கொடுத்த ஒரு முழு நீளப் பிரம்புமாய் அவர் அப்பள்ளியின் மைதானத்தைச் சுற்றிவருகையில் மொத்தப் பள்ளியும் அதன் ஜீவராசிகளும் மூச்சடக்கிக் கொள்ளும். மெளனத்தின் வெற்றுத் தடத்தில் அவரின் நடையின் அதிர்வு மட்டும் அதிகாரத்தை உமிழும். இடையிடையே பிடிபடும் மாணவர்கள்மீது பிரம்பு சரமாரியாகப் பிரயோகிக்கப்படும். ஜன்னல்வழியே படியும் மாணவப் பார்வைகளுக்கும், குனிந்து கவனிக்கும் ஆசிரியர்களின் பார்வைகளுக்கும், மைதானத்தின் வெற்று மண்ணில் முட்டிபோட்டு நிற்கும் மாணவர்களின் பின்பாதி மட்டுமே தெரியும். அதிலெல்லாம் எப்போதும் ஆண் பெண் பேதமில்லை. முக்கோணவடிவில் மடித்து விடப்பட்டிருக்கும் பச்சை தாவணி, தன் முகங்களுக்கு ஈடாய் மண்ணில் படிய முழங்காலிட்டு நிற்கும் மாணவிகளின் முகங்கள் அன்று மாலைவரை மீளாது.
நல்லப் படிப்பு, ஒழுக்கம் இதெல்லாம் கடுமையான அடக்கு முறையிலிருந்து கிடைக்கும் அறுவடை. ‘பையன் கண்ணை மட்டும் விட்டுட்டு தோலை உரிங்க’ என்று கசாப்பு கடைகளின் முன் ஆட்டுக்குட்டிகளின் எஜமானர்கள் இறைந்து நின்றதற்குச் சற்று பிந்தின நாட்கள் அவை. திருச்சபை அவருக்கான எல்லா அதிகாரங்களையும் வழங்கியிருந்தது. அதன் எல்லைகளை மட்டும் அவரே வரையறுத்துக் கொண்டார். அதைக் குறைக்கவோ, குறைந்தபட்சம் பேசவோ கூட முடியாத உயரத்திற்கு அவர் போய்க் கொண்டேயிருந்த நாட்கள் அவை. நல்லொழுக்கத்திற்கும், நல்படிப்புக்குமென ஒரு மனிதன் எத்தனை தூரம் தன்னை அர்ப்பணிக்கிறாரென ஊர் பெருமிதப்பட்டது. அந்த பெருமிதத்தின் முன் மற்றவர்களின் அபிப்ராயங்கள், புலம்பல்கள், அவஸ்தைகள் எல்லாமும் தூசியிலும் அற்பமானவை.

அவர் பங்களாவை ஒட்டியே அவர் ஆளுமைக்குட்பட்ட இருநூறு மாணவர்களை உள்ளடக்கி ஒரு ஹாஸ்டல் இருந்தது. பள்ளி நேரம் முடிந்தும், பிரம்பு தன் கைகளிலேயே இருக்க, அவரே ஏற்படுத்திக்கொண்ட நீட்டல் அது. ஸ்கூல் முடிந்து அப்பிரம்புடனேயே மெளனப்படுத்தப்பட்ட மைதானத்தை அவர் நடந்து கடக்கையில் கரையின் இப்பக்கம் உற்சாகப்பீறிடலும், கரையின் அப்பக்கம் மயான அமைதியும் ஒரு சேர நிகழும்.

சகவகுப்பு மாணவர்களிடம் நோட்புக் வாங்க எப்போதாவது பாலு அண்ணாவோடு அந்த ஹாஸ்டலுக்குப் போவதுண்டு. அப்போதெல்லாம் சைக்கிளை கேட்டிலேயே நிறுத்தி வைத்துவிட்டு, மடித்து கட்டிய வேட்டியைக் கீழே தளர்த்தி விட்டுவிட்டு அண்ணன் பயபக்தியாய் மைதானத்தை என் துணையோடு கடக்கும்.
யாருமற்ற அந்த மைதானத்தில் ஒரு பெரிய ஈசிச்சேரில் வெற்றுடம்பில் லுங்கி மட்டும் கட்டி, எதிரில் போடப்பட்டிருக்கும் மரஸ்டூலில் கால்களைத் தூக்கிப் போட்டு லேசாக குறட்டை விட்டுக்கொண்டிருக்கும் ஹெட்மாஸ்டரை என்னைப்போல ஏழு மணிக்குமேல் போனால் பார்த்திருக்கமுடியும். தூங்கின பின்பும் கால் அழுத்திவிடும் ஸ்கூல் ப்யூன்களின் பவ்யம் என்னை எப்போதும் சந்தோஷப்படுத்தும். எங்களிடம் ஸ்கூலில் எரிந்து விழும் அவர்கள், அக்கால்களின் முன் மண்டியிட்டு உட்கார்ந்திருப்பது ஏதோ மனதுக்கு இதமாயிருந்தது.

காலை வருகை ஸ்கூட்டரில்தான். தன் பிரம்பும், பெரியடீச்சர் தரும் காபிப்ளாஸ்க்கும், அவர் புறப்படுதலுக்கு முன்பே கனகராஜால் கொண்டு வரப்படும். அப்பிரம்பு அவர் கையில் சேர்பித்தலுக்குப் பின்பே அறைக்குள் நுழைவார்.

பிரேயருக்கு முன் எதற்காகவோ, யாரிடமாவது எழும் அவரின் முதல் கர்ஜனை அம்முழுநாளுக்கும் போதுமானது. அதை அவர் அறியாதது மாதிரி தனக்குள் அலட்சியமாய் வைத்திருந்தார். பலநேரம் கனகராஜிடம், சிலநேரம் ஆண் ஆசிரியர்களிடம் எப்போதாவது பெண் ஆசிரியைகள் என்ற பட்டியலில் எப்போதும் மெர்சிடீச்சருக்கு மட்டும் இடமிருந்ததில்லை. அவள் அழகும், கம்பீரமும், அவர் அதிகாரத்தை எப்போதும் அசைத்துக்கொண்டேயிருந்தது. அதற்காகவே அவர் அடிக்கடி தன் சிம்மசனத்தை விட்டு எழவேண்டியிருந்தது.
ஏழாம் வகுப்பு ‘ஏ’ நிறுத்திக் கொண்ட அழகிகள் போக, மிச்சமிருந்த மாணவிகளுடன், ‘பி’ பிரிவில் வகுப்பை நிறைத்துக்கொண்ட ஆண் மாணவர்களுக்கு மத்தியில் நாலாவது பெஞ்சில் இடது ஓரமாய் உட்கார்ந்திருந்தேன்.

அமைதி… அமைதி… அப்பள்ளி எப்போதும் மெளனத்தில் உறைந்திருந்தது. ஆசிரியர்களின் பேச்சே பழகிப்பழகி ரகசியம்போல மாறிவிட்டிருக்கும். எப்போதும் ஹெட்மாஸ்டரின் வருகைக்காக வாசல்படியிலேயே ஒரு கண்ணை நிரந்தரமாய் வைத்துவிட்டு ஒரு கண்ணால் எங்களுக்குப் பாடம் எடுப்பார்கள்.

எந்நேரமும் தான் அவமானப் படுத்தப்படலாம் எனும் ஜாக்கிரதை, நீர் சொட்டச் சொட்ட நாக்கை துருத்திக்கொண்டு படுத்திருக்கும் ஒரு நாயின் மூச்சிரைப்பைப்போல அவர்களுக்குள் எப்போதும் படுத்திருந்தது.

பள்ளிக்கு வெளியிலேயும் நாங்கள் பெரும்பாலும் மெளனமாகவே பேசப் பழகியிருந்தோம். விடுமுறை தினங்களின் குதூகலங்கள்கூட யாருடைய கவனிப்போ எப்போதும் எங்கள்மேல் குவிக்கப்பட்டதுபோல் குறைந்திருந்தது.

ஏழாம் வகுப்பில் எப்போதும் போல ஜெயந்தி முதல் ரேங்கும், நான் இரண்டு, மூன்று எப்போதாவது தவறினால் நான்கு என்ற தகுதியையும் தக்க வைத்துக்கொண்டோம். கணக்கு நான் எட்டிப்பிடிக்க முடியாத தூரத்திற்குப் போய்க்கொண்டிருந்த நாட்கள்அவை. ஜெயந்தி அதன் மீதே அமர்ந்திருந்தாள்.
ரத்னம் சார்தான் எங்களுக்கு வகுப்பாசிரியர். நீண்ட கிருதா வளர்த்து, முடியை சுருள்சுருளாய் வாரி, தன் வயதை மறைக்கும் பிரயத்தனத்தில் சதா வெற்றியடைந்து கொண்டிருந்த முதல் இளைஞர் அவர். அவ்வருடத்தின் ஜீலை மாதக் கடைசியில் ஒரு ஓய்வான மாலை நேர வகுப்பில் எங்கள் ஒவ்வொருவரையும் எழுப்பி பெயர், அப்பா பெயர், அவர் தொழில், தெரு, எதில் பயணிக்கிறோம்? சைக்கிளா?, நடையா?, கார்க்கானா தெருவில் அவர் வசிக்கும் தெருவிலிருந்து அம்மாணவன் அல்லது மாணவியின் வசிப்பிடம் எத்தனை தூரம், அழைத்துப் போக யார் வருவார்கள் என்ற விசாரிப்புகளுக்கு நல்ல விளைச்சலிருந்தது.

அவர் பை தூண்டில் மீன்களால் நிறைந்துகொண்டேயிருந்தது. பிடிபட்டும், பையில் போட்டும் மீண்டும் மீண்டும் நான் மட்டும் நழுவி நழுவி தண்ணீருக்குள் விழுந்துகொண்டேயிருந்தேன். அவ்வித்தையை அப்பா எனக்குக் கற்பித்திருந்தார். என் தப்பித்தல் மற்றவர்களை உஷார்படுத்துமென சார் உள்ளூர பயந்தார். என் மீதான வன்மம் ஒரு சிறு உருண்டை மாதிரி உருண்டு அவர் மனதின் ஓரத்தில் போய் பதுங்கிக்கொண்ட முதல் நாள் அதுதான்.
அதன் பிறகு வகுப்பறை என்னை நெட்டித் தள்ளிக் கொண்டேயிருந்தது. தொடர் அவமானங்களால் நான் காயப்பட்டேன். என் சதையைக் காக்கைகள் கொத்தித் தின்று கொண்டேயிருந்தன. சகல மேன்மையும், கம்பீரமும், கெளரவமும் வாய்க்கப் பெற்ற என் அப்பாவின் பொருட்டு வலி பொறுக்க கற்றுக் கொண்டேன். சப்பராங்கால் போட்டு உட்கார்ந்து இரவு நேரங்களில் சொல்லிக் கொடுக்கும் அப்பாவின் வாஞ்சைமிகு தோழமையின் முன் என் அற்ப வலியை எடுத்து வைக்க விரும்பினதில்லை எப்போதும். அப்பாவின் நேர்மையும், வாழ்வை அவர் எதிர்கொண்ட திறனும் என்னுள் ஒட்டியிருந்தது. குதூகலமற்ற, புன்னகை தீய்க்கப்பட்ட என் முகத்தை எனக்கு மட்டுமே தெரிகிற மாதிரி நான் மறைத்துக் கொண்டேன். சர்வ வல்லமை பொருந்திய அப்பாவாலேயே அதைக் கண்டடைய முடியவில்லை.

அது ஒரு மே மாதம் என்பதும் சுட்டெரிக்கும் வெயிலினூடே திடீரெனத் திரண்ட கருமேகங்களும், அடித்த பேய்க்காற்றும், ஊற்றிய மழையும், முறிந்த பெருவேப்பமரமும், நசுங்கிய சேகர் அண்ணனின் சைக்கிளும் எல்லாமும் ஞாபகமிருக்கிறது. களேபரங்கள் முடிந்த அந்த மாலை நாங்கள் ஆறேழு பேர் சாரோனிலிருந்து சைக்கிளுக்கு இருவராகப் பிரிந்து ஸ்கூலுக்கு ரிசல்ட் பார்க்கப் போனோம். நெற்றியிலும் மார்பிலும் சிலுவைக்குறிகளைக் காற்றிலிருந்து எடுத்தெடுத்து அணிந்துகொண்டோம். நான் அன்று ராஜாவின் சைக்கிளுக்குப் பின் அமர்ந்திருந்தேன். என் கண்கள் மூடியிருந்தன. என்னுள் மட்டும் கவிந்த இருட்டு பயமுறுத்தியது.

நான் ஜெபித்துக் கொண்டேபோனேன். உள்ளிருந்து சில வார்த்தைகள் என் அஜாக்ரதையால் கசிந்து ராஜாவை திரும்ப வைத்தது. ஸ்கூலில் நிறைய கும்பலிருந்தது. அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளோடு குவிந்திருந்தார்கள். ஒவ்வொரு வகுப்பறையும் ரிசல்ட் கூடங்களாக தற்காலிகமாக மாறியிருந்தன. ஒவ்வொருவரும் நீண்டு நின்ற ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு பார்வையை மட்டும் உள்ளனுப்ப வேண்டும்.

சாய்த்து வைக்கப் பட்டிருந்த நோட்டீஸ் போர்டில்,VII ‘ஏ’ , VII— ‘பி’ என்று ஆரம்பித்து VII ‘எச்’ வரை தேர்வான பெயர்கள் டைப்செய்யப்பட்டிருந்தன. சிவப்பு மையினால் பிரிவுகள் அடிக்கோடிடப்பட்டிருந்தன.

நான் ஆர்வத்தின் நுனியிலிருந்தேன். மற்ற முகங்களில் தீர்க்கமிருந்தது. மற்றவர்களைத் தள்ளிவிட்டுவிட்டு நான் VII ‘பி’ யின் தேர்வுப் பட்டியலைப் பார்த்தேன். ‘பி’ யில் ஆரம்பிக்கும் என் பெயர் முதல் ஆறேழு பெயர்களில் இல்லை. நான் திடுக்கிட்டேன். கை நடுங்க ஆரம்பித்ததையும், நெற்றி வியர்வையில் துளிர்ப்பதையும் உணர முடிந்தது. தேர்வான கடைசி பெயர்வரை நான்காவது முறையாகப் படித்தேன். இல்லை. என் பெயரில்லை.எப்போதும் மூன்று அல்லது நான்கு ரேங்குக்குள் வரும் நானில்லை அதில்.
ரேங்க் பட்டியலில் இடமுடியாத பல பெயர்களும் அதிலிருந்தன. எனக்கு மயக்கம் வரும் போலிருந்தது. அருகிலேயே தவறினவர்களின் பெயர்கள் வரிசைப் படுத்தப்பட்டிருந்தன. நிராசையோடு அதைப் பார்தேன். அதில் என் பெயர் இருந்துவிடக் கூடாதென உள்ளூரப் பிரார்த்தித்தேன். சப்பராங்கால் போட்டு கிராமர் சொல்லிக் கொடுத்த அப்பாவின் குரல் கேட்டது. அவர் முன் எப்படிப் போய் நிற்பது? அவரின் ஒரு பார்வையின் ஊடுருவலில் நான் துளைக்கப்படுவதை உணர்ந்தேன். நம்பிக்கையுடனும், நம்பிக்கையற்றும் பட்டியலைப் பார்த்தேன். தவறினவர்கள் பட்டியலில் முதலில் என் பெயரிருந்தது. என் பெயர் மட்டும் அழுத்தி டைப் செய்யப்பட்டது போலிருந்தது. வன்மத்தின் விஷத்துளி என் பெயர்மீது படிந்திருந்தது.

துளிக்கும் கண்ணீரைத் துடைக்கவும் மனமின்றி யாரையும் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். ஸ்கூல் கேட்டில் நின்று திரும்பினேன். ராஜா சைக்கிளில் உட்கார்ந்து தரையில் காலூன்றி என் வருகைக்காகக் காத்திருந்தான். நான் அவமானமுற்றிருந்தேன். ராஜாவின் முகத்தில் வெற்றியின் தீட்டல் இருந்தது. என் முகம் கருவடைந்து போயிருந்தது. ஒரு நீண்ட நடையின் முடிவு என் வீட்டில் ஈசிசேரில் வெற்றுடம்போடு படுத்து எதையோ படித்துக் கொண்டிருந்த அப்பா முன் நின்றது.

அப்பா என்னை ஏறெடுத்தார். அந்தப் பார்வையை தாங்கமுடியாமல் அவர் மேல் சரிந்தேன். அவர் தன் தடித்த விரல்களால் என் முதுகில் ஸ்பரிசித்து என்னைத் தேற்றினார். யாரும் ஒரு வார்த்தை பேசாமல் என் தோல்வியை, அல்லது பழிவாங்கலை அவருக்கு சரீரம் வழி கடத்தியும், பெற்றும் உணர்ந்த கணமது. வஞ்சிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கான கண்ணீர் அவன் இடக்கண்ணிலிருந்து ஒரு சொட்டு சொட்டியது. என் அழுகை கேவலாய் மாறியபோது அவர் மிகுந்த வாஞ்சையோடு,

“பவாய்யா, அழாத, அப்பா இருக்கேன்டா” என்ற ஒற்றை வரியில் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளியிட்டார்.

அதன்பிறகும் நான்தான் அழுதுகொண்டிருந்தேன். அன்றிரவையும், அடுத்த நாள் காலையையும் சகஜமாக்க நானும் அப்பாவும் மாறி மாறி முயற்சித்தோம். தோல்வி சுற்றிச் சுற்றி வந்து ஒரு பாம்பு மாதிரி எங்கள் கால்களைச் சுற்றியது.

வழக்கம்போல ஷேவ் செய்து, கை வைத்த வெள்ளை பனியன் போட்டு, யாருக்கும் வாய்க்காத அழகோடு வேட்டிகட்டி, ஒரு முழுக்கை வெள்ளைச்சட்டையைக் கஞ்சி மொடமொடப்போடு போட்டுக்கொண்டு எடுத்துவைக்கப்பட்டிருந்த காலை டிபனைப் பார்வையால் நிராகரித்து, என்னை சைக்கிள் கேரியரில் உட்காரவைத்து அந்த ஸ்கூல் மைதானத்தை அடையும்போது மணி பத்தாகியிருந்தது. நேராக ஹெட்மாஸ்டர் வீட்டு முன் நின்று கால் ஊன்றி, அங்கிருந்த வாட்ச்மேனிடம் ஹெட்மாஸ்டர் இருக்காரா? என உரத்த குரலில் விசாரித்தார்.

“ஸ்கூலுக்கு போயிட்டாரு. அங்க போயி பாருங்க” அவன் தலை கவிழ்ந்து செடிகளுக்கு நீர் பாய்ச்சினான்.

அப்பாவும் நானும் ஹெட்மாஸ்டர் அறை முன் நின்றிருந்தோம்.ஆறேழு பேர் எங்களுக்கு முன்பே அங்கிருந்தார்கள். புதிய சேர்க்கை, டி.சி. வாங்குதல் போன்றவை அவர்களிடமிருந்ததை உணரமுடிந்தது.

‘தனக்கோட்டி வாத்தியார்’ என கனகராஜ் வழக்கமான தன் பெருங்குரலில் கூப்பிட்டான்.

ஒரு சுழல் நாற்காலியில் அவரிருந்தார். ஒரு குள்ளமான,தடித்த,சகல அதிகாரங்களும் வாய்த்த அவர் தலைக்கு மேல் அவர் பெயருக்குப் பக்கத்தில், ஹெட்மாஸ்டர் & கரஸ்பாண்டென்ட் என்று எழுதப்பட்ட பித்தளை போர்டு இருந்தது. அதிகார நெடி அந்த கருங்கல் சுவர்களிலிருந்து கசிந்து கொண்டிருந்தது. ஹெட்மாஸ்டர் தன் கைகளால் எதிரிலிப்பட்டிருந்த ஒரு மர நாற்காலியை அப்பாவுக்குக் காட்டினார்.

நீடித்த அமைதியைத் தொடரவிடாமல் அப்பா தன் உரத்த குரலில் ஒரு சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விவரித்தார். எதையும் கேட்டு பழகியிராத அவர் இடைமறித்து,

“அவன் பெயிலாயிட்டான் அதானே” என்ற அலட்சியத்தை மறித்து, “பெயிலாக்கப்பட்டான்” என அப்பா திருத்தினார்.

“அதை எப்படி உறுதியாச் சொல்றீங்க?”

“நானும் வாத்தியார்தான் சார்.”

”எலிமெண்டரி ஸ்கூல் வேற, ஹயர் செகண்டரி ஸ்கூல் வேற” அலட்சியத்தில் வார்த்தைகள் வெளிவந்தன.

“தெரியும். என்பையனப்பத்தி என்னைவிட வேறுயாருக்குத் தெரிஞ்சிடப்போவுது”

“அப்ப வீட்லேயே வச்சி நீங்களே சொல்லி கொடுக்க வேண்டியதுதானே”

“காலாண்டுலேயும், அரையாண்டுலேயும் மூணாவது ரேங்க் வாங்கற பையன் முழு ஆண்டில எப்படி சார் பெயிலாக முடியும்? அவன் ஆன்சர் ஷீட்டைப் பாக்கலாமா?”

“அதை உங்ககிட்ட காட்டணும்னு ரூல் இல்லை.” எள்ளலும், அலட்சியமும், உதாசீனமுமாய் அவரிடமிருந்து வார்த்தைகள் வந்தன.

”கேவலம், மாசம் அம்பது ரூபா பிச்சை காசுக்காக ஒரு படிக்கிற பையன இப்படிப் பண்ணிட்டீங்களேடா” என்று அப்பா முடிக்கும் முன், தான் ஒருமையில் அழைக்கப்படுவதைப் பொறுக்க முடியாத ஆத்திரத்தில்

‘கெட் அவுட் ஃப்ரம் திஸ் கேம்பஸ்’ என அந்த அறையே அதிர்வது மாதிரி கத்தினார். வெளியிலிருந்தவர்கள் கதவைத் தள்ளி உள்ளே பார்த்தார்கள். கனகராஜ் உள்நுழைந்து எங்களை சமீபித்து அவருக்கு அரண் மாதிரி நின்று கொண்டான்.

எதற்கோ ஆவேசம் வந்தவர்போல் அப்பா தன் இரு கைகளாலும் தன் சட்டையைப் பிய்த்தார். இரண்டு பட்டன்கள் தெறித்து ஹெட்மாஸ்டரின் மேசை மீது விழுந்தது.

“பாருய்யா,பாரு” என்று தன் தோள்பட்டையைக் காண்பித்தார்.குண்டு பாய்ந்து தைக்கப்பட்ட பெரும் தழும்பு தெரிந்தது.

“வெள்ளைக்காரனை அனுப்ப வாங்குன குண்டடி.

எல்லாம் மாறிடுச்சின்னு நெனச்சோமே, உன்னை மாதிரி ஆளுங்க இப்படி சின்னஞ்சிறு பசங்களை பழி வாங்கவா இத்தனை ரணப்பட்டோம்… ”

அப்பாவின் வார்த்தைகளின் கணம் தாங்காமலோ, அது தேவையற்றது என்றோ, அவர் தன் சுழல் நாற்காலியிலிருந்து எழுந்து வெளியேறத் தயாரானார்.

அதிலும் அப்பாவே முந்திக்கொண்டார். என் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு, பட்டன்கள் அறுந்து கிழிந்த சட்டையோடு சைக்கிளை எடுத்தார்.

நான் முன் ஹேண்ட்பாரில் ஏறப்போனேன்.

“பின்னால கேரியர்ல உட்கார்ந்துக்கோய்யா”

நான் அமைதியாய் ஏறி உட்கார்ந்துகொண்டேன்.

“அப்பாவை கெட்டிமாப் புடிச்சுக்கோ”

கெட்டியாக பிடித்துக் கொண்டேன்.

இன்னும் பிடி தளரவேயில்லை.

– நன்றி (http://bavachelladurai.blogspot.in/2013/04/blog-post_8.html)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *