கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 21, 2012
பார்வையிட்டோர்: 9,352 
 
 

‘அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்குச் செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்’

ரொம்ப சிம்பிளான பிச்சைக்காரன் கல்லுளிமங்கன். இந்தப் பெயரை யார், ஏன் வைத்தார்கள் என்று தெரியாது. ஆனால், வீட்டு வாசலுக்கு வந்தால், ”அம்மா, கல்லுளிமங்கன் வந்திருக்கான்” என்போம். உப்புச் சத்தியாகிரகப் பாத யாத்திரை போன காந்தியடிகள் மாதிரி மினி பஞ்சகச்சம் கட்டி, கையில் ஒரு கம்புடன் இருப்பான். மேல்சட்டை, துண்டு எதுவும் இருக்காது. கையில் நசுங்கிய அலுமினியத் தட்டு. உடம்பு கறுப்பாக, ஆனால் பளபளப்பாக இருக்கும். கையிலும் கால்களிலும் வெயிலின் சூட்டினால் செதில் செதிலாக இருக்கும். தலை உச்சியில் இட்லி சைஸூக்கு வழுக்கை. ஆறு வெள்ளை முடி இருந்தால் நிச்சயம் நாலு கறுப்பு முடி விகிதம் வேலி போட்ட மாதிரி இருக்கும். எப்போது பார்த்தாலும் இரண்டு மாதம் முன்புதான் மொட்டை அடித்த மாதிரி தோற்றம்.

பழைய சாதம், மோர், நேற்றைய ரசம் என்று எது கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிற ரகமில்லை. நாலணா கொடுக்க வேண்டும். எப்போதாவது தண்ணீர் கேட்டுச் சாப்பிடுவான். ”போயிட்டு நாளைக்கு வா” என்று ராமர் சொன்ன டயலாக்கைச் சொன்னால், ராவணன் மாதிரி போகாமல், அங்கேயே கல்லுளிமங்கனாக நிற்பான். கதவைச் சாத்திவிட்டு இரண்டு மணி நேரம் கழித்துத் திறந்தாலும், அதே இடத்தில் இருப்பான்.

என் தாத்தாவுக்கு இவன் மேல் எப்போதும் ஒரு பரிவு உண்டு. ”சுபாஷ் சந்திரபோஸின் ராணுவத்தில் இருந்தவன்; திரும்பி வந்த பிறகு மனைவி, மக்களைக் காணாமல் இந்த மாதிரி ஆகிவிட்டான்” என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவன் அருகே செல்வதற்கே பயமாக இருக்கும். பத்தடி தொலைவில் நின்றுகொண்டு அபவுட் டர்ன், குவிக் மார்ச் சொன்னால், உடனே செய்து காண்பிப்பான். ஐந்து பைசா, பத்து பைசா போட்டால், நகர மாட்டான். நாலணா போட்டால்தான் இடத்தைக் காலி செய்வான். சில சமயம் நாங்கள் அவனைக் கேலி செய்தால், குச்சியால் அடிக்க வருவான்.

எவ்வளவு நாலணா போட்டிருக்கிறோம் என்று நினைவு இல்லை ஆனால், வாரத்துக்கு இரண்டு மூன்று முறை வந்துவிடுவான். ஒன்பதாவது அல்லது பத்தாவது படிக்கும்போது, ”எங்கே இப்பல்லாம் கல்லுளிமங்கனைக் காணலை?” என்று பேசிவிட்டு, அதற்குப் பிறகு அவனை மறந்துவிட்டோம். அவனை எப்போது கடைசியாகப் பார்த்தேன் என்று இன்றும் கூட எனக்கு நினைவில்லை.

சில்லறை பாக்கியாக 10 பைசா, 5 பைசா எல்லாம் கொடுக்கப்பட்ட காலகட்டம் அது. சின்ன சதுரமான ஒரு பைசா, சின்ன வளைவு கொண்ட இரண்டு பைசாகூடப் பார்த்திருக் கிறேன். எங்கள் பள்ளிக்கு வெளியே 10 பைசாவுக்கு 10 புளிப்பு மிட்டாய் கிடைக்கும். ரூபாயின் மதிப்பு பற்றி எல்லாம் தெரியாத காலம் அது. அந்தக் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஜீவன் பெயர் ‘டென் பைஸ்’.

நான் பார்த்தபோது ‘டென் பைஸ்’ஸூக்குத் தலை பாதி வழுக்கை. பின் தலையில் கொஞ்சம் தலைமயிர் இருக்கும். ‘டென் பைஸ்’ என்றால் திரும்பிப் பார்ப்பான். நிஜப் பெயர் நிவாசனோ என்னவோ! தற்போது சீரியல்களில் மனைவியிடம் பயந்த மாதிரி நடிக்கும் குணச்சித்திர நடிகர் போலவே இருப்பான். எப்போதும் நாலு முழ வேட்டியைக் கொஞ்சம் தூக்கிக் கட்டியிருப்பான். ஒரு நுனியை எப்போதும் பல்லில் கடித்துக்கொண்டு இருப்பான்.

வீட்டு வாசலில் வந்து ”டென் பைஸ்… டென் பைஸ்” என்று குரல் கொடுப்பான். ஜோல்னா பை. அதில் கொஞ்சம் விபூதியும் நிறைய 10 பைசாக்களும்தான் அவன் சொத்து. அவன் பையில் இருக்கும் பத்து பைசாக்களுக்கு எவ்வளவு புளிப்பு மிட்டாய் வாங்கலாம் என்று எண்ணி வியந்ததுண்டு. நாலணா போட்டால் போக மாட்டான். இரண்டு ஐந்து பைசா போட்டால்கூட போக மாட்டான். முழுசாக 10 பைசா போட்டால்தான் போவான். கையில் எப்போதும் 10 பைசாக்களை ஒரே மாதிரி அடுக்கிவைத்து எண்ணிக்கொண்டு இருப்பான். வந்தால் யார் சில்லறை தேடுவது என்று ஹாலில் இவனுக்காகவே ஒரு பையில் 10 பைசா நாணயங்கள் கொஞ்சம் வைத்திருப்போம்.

”ஏன் பாட்டி இவனுக்கு இப்படி ஆயிடுத்து?”

”தெரியலைடா! இவன் பொண்டாட்டி சரி கிடையாது.” ‘சரி கிடையாது’ என்பதன் அர்த்தம் விளங்காத வயசு எனக்கு.

எப்பவாவது, ”மாமி, கொஞ்சம் மோர் இருந்தா உப்புப் போட்டுத் தாங்கோ” என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, ”டென் பைஸ்… டென் பைஸ்” என்று திரும்பவும் வேட்டி நுனியைக் கடித்துக்கொண்டு போவான். நான் சலூனில் இருந்தபோது என் பக்கத்தில் தலைமயிர் வெட்டிக்கொண்டு இருந்ததையும், பார்பருக்கு பணத்தை 10 பைசாக்களாக எண்ணிக் கொடுத்ததையும் பார்த்திருக்கிறேன். மத்தியானம் கோர்ட் பிள்ளையார் கோயில் பக்கத்தில் உள்ள காந்தி பூங்கா பெஞ்சில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருப்பான்.

”மாமி, விஷயம் தெரியுமா? நம்ம ‘டென் பைஸ்’ பின்னாடி ரோட்டில் விழுந்துகிடக்கிறான். முனிசிபாலிட்டில சொல்லியிருக்காளாம்.”

சைக்கிள் எடுத்துக்கொண்டு நான் போனபோது கூட்டம் கலைந்து போய்க்கொண்டு இருந்தது. கலைந்த இடத்தில் தண்ணீரா ரத்தமா என்று தெரியாமல் மண் ஈரமாகி இருந்தது. ‘டென் பைஸ்’ அங்கே இல்லை. நிறைய 10 பைசாக்கள் இறைந்து கிடந்தன; அதை யாரும் பொறுக்காமல் போனார்கள்.

”மாமி, இந்த மூட்டையைப் பத்திரமா பார்த்துக்கோங்கோ! சமயபுரம் போயிட்டு சாயங்காலம் வந்து எடுத்துக்கறேன்” என்று எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும் ‘மூட்டை முடிச்சு’ சொல்லுவாள்.

அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு வயசு என்று தெரியாது. ஒல்லி. நேர் வகிடு. அழுக்கா, செம்பட்டையா என்று கண்டுபிடிக்க முடியாத நிறத்தில் தலைமயிர். இரட்டைச் சடை. இரண்டிலும் வெவ்வேறு கலரில் ரிப்பன்கள். புடவையை உள்பாவாடை தெரியக் கட்டியிருப்பாள். தலைப்பைச் சரியாகப் போட்டுக்கொள்ள மாட்டாள். மார்பே இல்லாமல் தட்டையாக இருக்கும்.

கையில் பெரிய மூட்டை எப்போதும் இருக்கும். அது நிறைய பழைய துணிமணிகள்தான். நாளுக்கு நாள் அந்த மூட்டை பெரிதாகிக்கொண்டே போனது.

”மாமி, ஏதாவது பழைய துணி இருந்தா தாங்க ளேன், உங்களுக்குப் புண்ணியமா போகும்.”

”உனக்கு எதுக்குடி துணி, அதுதான் மூட்டை நிறைய வெச்சிருக்கியே?”

”அப்படிச் சொல்லக் கூடாது, என் குழந்தைக்கு வேணும், தீபாவளி வருதுல்ல.”

தீபாவளிக்கு அடுத்த நாள்கூட இதையேதான் சொல்வாள். இவள் குழந்தையை நான் பார்த்ததே இல்லை.

மத்தியான வேளையில் பாட்டி, வாசலில் உட்கார்ந்து இவளுடன் பேசிக்கொண்டு இருப்பாள். சில நாள் காலை வேளையில் வீட்டுக்கு வந்து, ”மாமி, இந்தத் துணியை எல்லாம் பத்திரமாப் பார்த்துக்கோங்கோ, நான் சமயபுரம் போயிட்டு வரேன்” என்பாள்.

ஒரு நாள், இப்படிப் போயிருக்கும் சமயம் நானும் என் பக்கத்து வீட்டு நண்பனும் குச்சியைவிட்டு அந்த மூட்டையைத் திறந்து பார்த்தோம். திரௌபதிக்கு கிருஷ்ணர் கொடுத்த மாதிரி துணி துணியாக வந்தது. கூடவே, பால் எதுவும் இல்லாத ஒரு ஃபீடிங் பாட்டி லும் வந்தது.

திரும்பி வந்த அவள் கோபப்பட்டுத் திட்டிவிட்டு திரும்ப மூட்டையைக் கட்டிக்கொண்டு போனாள். அதற்கு பிறகு எங்கள் வீட்டு வாசலில் அந்த மூட்டையை வைப்பதில்லை.

இவளும் எப்போது காணாமல் போனாள் என்று எனக்கு நினைவில்லை. ஒரு வேளை, பாட்டி போன பின்பு இவளுக்குப் பேச யாரும் கிடைக்காமல் வேறு பாட்டியைத் தேடிக்கொண்டு போய்விட்டாளா என்றும் நினைப்பதுண்டு.

எங்கள் சொந்த ஊர் கொடியாலம். என் அப்பா இனிஷியலில் இருக்கும் ‘K’ இதுதான். திருச்சி ஜில்லா வில் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டாம். ஜீயபுரம், முக்கொம்பு வழி என்று போட்ட பஸ்ஸில் ஏறினால் கொண்டுபோய் விடுவார்கள். இந்த ஊரில் இருக்கும் பெருமாள் பெயர் கோபாலகிருஷ்ணன்.

அப்பாவின் பெரியப்பா பையனுக்கும் இதே பெயர்தான். இவருக்குக் கூடப் பிறந்தவர்கள் இரண்டு பேரோ… மூன்று பேரோ! உறையூர், ருக்குமணி தியேட் டர் பக்கம் போனால் புழுதி படிந்த பூட்டிய வீடு ஒன்றைப் பார்க்கலாம். அது இவர்களுடையதுதான்.

எப்போது வீட்டுக்கு வந்தாலும், கை இடுக்கில் அன்றைய ஹிண்டு பேப்பர் இருக்கும். அருமையாக ஆங்கிலம் பேசுவார். அந்தக் காலத்து SSLC.

”முத்தா, இந்தாங்கோ ரங்கம் பிரசாதம். மன்னி, இந்தாங்கோ, நீங்களும் எடுத்துக்கோங்கோ” என்று தாயார் சந்நிதி மஞ்சள் காப்பைக் கொடுப்பார். முத்தா என் அப்பா; மன்னி என் அம்மா.

தன்னைவிட வயது குறைவாக இருந்தாலும், என் அம்மாவை ‘மன்னி’ என்றுதான் கூப்பிடுவார். கல்யாணம் ஆகாதவர். வீட்டுக்கு வந்தவுடன் அன்றைய ஹிண்டுவில் வந்திருப்பதை ஒப்பிப்பார். ‘வாரணம் ஆயிரம்’ அப்பா சூர்யா மாதிரி கறுப்பு ஃப்ரேம் போட்ட கண்ணாடி போட்டிருப்பார். கிட்டே போனால் மூக்குப் பொடி நெடி அடிக்கும். தும்மினால் மூக்கு முடி எட்டிப் பார்க்கும்.

”மன்னி, இன்னிக்கு டிபன் தோசையா?”

”இட்லி.”

”உங்க இட்லி நல்லா இருக்கும். கொஞ்சம் மிள காய்ப் பொடியுடன் தாங்கோ” என்று சங்கோஜப் படாமல் சாப்பிடுவார். சாப்பிடும்போது, ”என் அண்ணா வீட்டுக்குள்ள விடமாட்டேங்கறா. என்னைப் பைத்தியம்னு விரட்டிவிடறா” என்று கண்களில் ஜலம் வரப் பேசுவார். மிளகாய்ப் பொடி காரமா அல்லது அழுகிறாரா என்று தெரியாது.

”அழாதீங்கோ! இன்னொரு அண்ணா இருக்கார் இல்லையா, அவர்கிட்ட போக வேண்டியதுதானே?”

”அங்கே போனா அந்த அண்ணா பொண்டாட்டி திட்றா. முத்தா வந்ததும் பார்த்துட்டுக் கிளம்ப றேன்.”

அப்பா வீட்டுக்கு வந்தவுடன், ”என்னடா எப்படி இருக்கே?” என்பார்.

”நல்லா இருக்கேன் முத்தா. அண்ணாதான்…”

”அதான் தெரிந்த கதையாச்சே!”

”பத்திரத்துல கையெழுத்துப் போடச் சொல்றா. நான் முடியாதுன்னுட்டேன். மன்னி இட்லி குடுத்தா. ரொம்ப நன்னா இருந்தது. மன்னி, உங்க சாத்துமது நல்லா இருக்கும். இங்கயே சாப்பிட்டுட்டுப் போறேனே” என்று தொடர்வார்.

”முத்தா! எனக்கு ஒரு 50 ருப்பீஸ் வேணும். அடுத்த மாசம் தந்துடறேன்.”

”ஏன்டா, போன மாசம் கொடுத்த 25 ரூபா?” என்றால், மழுப்பலாகச் சிரித்துவிட்டு, போகும்போது பணமும் பஸ்ஸூக்குத் தனியாக இரண்டு ரூபாயும் மறக்காமல் வாங்கிக்கொண்டு போவார்.

நான் படிப்பை முடித்துவிட்டு சென்னை சென்ற பிறகு, அவரைப் பற்றி மறந்தே போய்விட்டேன். சில சமயம் அவரைப் பற்றி பேச்சு வந்தால், ”இப்ப எங்கேனு தெரியலை. உறையூர் வீடுகூடப் பூட்டிதான் இருக்கு” என்றே பதில். அவரிடம் கையெழுத்து கேட்ட அண்ணாக்கள் எல்லாம் ஏதோ வியாதி வந்து, தற்போது உயிருடன் இல்லை. அவர்கள் பையன்களோ, பெண் களோ இப்படி ஒரு சித்தப்பா இருப்பதே தெரியாமல் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.

போன வருஷம், கும்பகோணம் பஸ்ஸில் நானும் என் அம்மாவும் போனபோது, பஸ் கிளம்பியவுடன், ”மன்னி, ஏதாவது தாங்க மன்னி” என்று குரல் கேட்டு, ஜன்னல் வழியாக வெளியே பார்த்தோம்.

பஸ் கிளம்பிப் போய்க்கொண்டு இருந்தது. ஜன்னல் பக்கமாக ஓடி வந்துகொண்டு இருந்தார். என்ன செய்வது என்று தெரியாமல், அம்மா பர்ஸில் கையை விட்டு ரூபாய் நோட்டு எடுத்து, ஜன்னல் வழியாகப் போட, அவர் இரண்டு கையிலும் அந்தப் பத்து ரூபாயைப் பிடித்துக்கொண்டார்!

– 29-04-09

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *