கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 13, 2024
பார்வையிட்டோர்: 176 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆயிரம் தடவை அந்தப் பாலத்தின் வழியாகப் போயிருக்கிறேன். அந்த இடத்தை மிதித்த போதெல்லாம் கடவுளே என்று கூப்பிடாமல் போனதில்லை; பாலத்தடியில் போய்க் கொண்டிருந்த கால்வாய் அப்படிச் செய்யத் தூண்டும். கால்வாயா அது? எந்த யுகத்திலே கழிவடைப் பொருள்களை எல்லாம் சுமந்து கொண்டு ஓட ஆரம்பித்து, காலந்தோறும் பெய்த மழைத் தண்ணீருடனும், தினசரி வந்து சேரும் பேரில்லாப் பொருள்களுடனும் கலந்து ஒண்ணடி மண்ணடியாகி, அருகில் இருந்த கடல் எதிர்த் தடிப்பதால் போய்க் கலக்க முடியாமல், வெயிலில் புளித்து நுரைத்துக் கறுத்து நிலைத்து விட்ட நரக வாசனை ஓடு கால்! 

வேப்பிலை எனக்குக் கசப்பு. ஒட்டகத்திற்கு அப்படி இல்லையே. வியாபாரிக்கு இந்தக் கால்வாய் பொக்கிஷம். நான் கடவுளே என்று குரல் கொடுத்து என்ன புண்ணியம்? வத்தையில் உப்பேற்றி வரப் பயன்படுகிறது. விறகேற்றி வரப் பயன்படுகிறது. கீற்று மூங்கில் ஏற்றி வரப் பயன்படு கிறது. ஆனாலும் தள்ளுகோலைச் சகதியில் ஊன்றி, தேங்கிய கறுப்பில் புதுக் குழம்பைக் கிளறி அநாயாசமாக வாசனையை உண்டாக்கும் படகோட்டியை மன்னிக்க முடிவ தில்லையே! கடவுளே, படகோட்டிக்கு மூக்குக் கிடையாதா? இல்லை, அவன் ஒட்டகையா? நரகவாசனை அவனுக்கு ஜவ்வாதா? இல்லாவிட்டால் வயிறு கிள்ளுவதால் மூக்கு விழுந்து விட்டதா? 

வத்தையிலிருந்து உப்பு மூட்டை இறக்கும் அழகு ஒன்றே போதும். உடலெல்லாம் முண்டும் முடிச்சுமாய்த் தசைநார் புரளும் செவத்தியான் வத்தையிலிருந்து மூட்டையைக் கரையில் அடுக்குகிறான் அற்புதமான இடம். சுருளி யாண்டி வைத்திருக்கும் வெள்ளைப்பன்றிக் கொட்டகை அங்கே தான் இருக்கிறது. கொட்டகை மூன்றுக்கு மூன்றரை அடி. புரளும் அலை போன்ற முலைகளுடைய பெரிய வெள்ளைப் பன்றிகள் இரண்டு. போத்துகள் இரண்டு. குட்டிகள் இருபத்தொன்று. (நான் எண்ணவில்லை). இந்த ஓட்டத்தில் தான் பன்றிகள் மண்ணைத் தோண்டி எதையோ மண்ணில் போடுகின்றன. எப்பொழுதோ ஒரு வேளை சுருளி யாண்டி அவற்றிற்குக் கூழ் வைக்கிறான். மற்றபடி பன்றி களுக்குத் தினம் தோன்டி எடுத்துத் தின்ன அங்கு என்ன அமுதசுரபி இருக்கிறதோ தெரியவில்லை. பன்றி மண் புழுவைத் தின்னுமா? சைவப் பிராணியாச்சே! 

வெள்ளைப் பன்றிகள் மேயும் கட்டாந்தரையில் உப்பு மூட்டைகளைச் கத்தமாகப் பன்றி எருவின் மீது அடுக்கியாகி விட்டது. கரை ஏற்றுவது மறுநாள் அதிகாலையில். ஏறு வதற்கோ படிகள் இல்லை. (செலவுப் புள்ளித் திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.) நடைக்கு ஒரு மூட்டையை தூக்கிக் கொண்டு செவத்தியான் சரிவு ஏறி, ரோடு ஓரம் கொணர்ந்து அடுக்கி வைக்கிறான். பன்றிகளின் ராஜ்யத்தை விட இது எவ்வளவோ உயர்ந்தது. பக்கத்திலுள்ள சேரிப் பிள்ளைகள் ஒதுங்குவதற்கு உகந்த இடம். தாய்மார்களுக்கு மானியம் விட்ட இடம். ஏனென்றால் பக்கத்தில் குழாய் இருக்கிறது. ரஸ்தாவில் பஸ்கள் அதிகாலையில் போனால் என்ன? கோவணமும் பாவாடையும் கட்டாத குழந்தை களுக்கு ரஸ்தாவைக் கண்டு பயமா? போதாக்குறைக்கு “இருந்தூட்டு வாடாலே” என்று அம்மா அதட்டி உறுதி வேறு அளித்து விட்டுப் போன இடம் அல்லவா? 

இந்தச் சுத்தமான ஆசாரமான இடத்திற்குக் கீழே யிருந்து ஒவ்வொரு மூட்டையாக வந்து சேர்ந்து விடும், கைவண்டிக் கூத்தப்பன் தயார். ஆனால் காலை இருட்டுக் கலைந்த பிறகு அந்த இடத்தைக் கண் கொண்டு பார்க்க முடிகிறதா கடவுளே! உப்பு இறைந்து கிடைப்பதும், தெருத் தோட்டி வராமல் இருப்பதும்- 

இந்த இடத்துக்கு வந்த ஒரு விநாடிக்குள் அமெரிக்கா விலுள்ள டேய்டன் பீச் தெரிகிறது. “முன்னே பின்னே செத்திருந்தால் தான் சுடுகாடு தெரியுமா?” நீலப்பறவை மணிக்கு இருநூற்று அறுபத்தைந்து மைல் வேகத்திலோ என்னமோ கிளம்பி, புறப்பட்ட இடத்திற்கும் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கும் இடையே பிடிசாம்பலாகி விட்ட மேஜர் ஸீகிரேவின் அவலக் சடலத்தைப் பரிசோதிக்கும் கோஷ்டி தெரிகிறது. ‘நீலப்பறவை’யின் சக்கரத்தின் சுவடுகளைச் சோதனை செய்கிறார்கள். தொடர்ந்து தெரிகிற சுவடு பல இடங்களில் தொடர்பறுந்து தெரிகிறது. ஆழ்ந்து நிபுணர்கள் சிந்திக்கிறார்கள். இவ்வளவு வேகம் மோட்டார் போயிருப்பதால் சக்கரங்கள் சில இடங்களில் ரஸ்தாவில் பதியாமல் பறந்தே போயிருக்க வேண்டும் என்று முடிவு கட்டுகிறார்கள். அவர்கள் கட்டிய முடிவு சரியோ தப்போ! அந்த மாதிரி யாதும் சுவடு படாமல் இந்தப் பகுதிக்கு வந்தவுடன் பலத்தைத் தாண்டிப் பறக்கும் சக்தி இருக்கக் கூடாதா கடவுளே என்ற ஏக்கந்தான் பிறக்கிறது. 

இந்த நினைவு ஓட்டம் எதற்காகிறது-மனப்புண்ணை உண்டாக்குவதைத் தவிர? இருப்பதைச் சமாளிக்க முடிந் தால் அன்றி இன்பம் ஏது? அதனால் தான் கவிகள் எல்லோருமே-குறிப்பாகப் புதுக் கவிகள் என்கிறார்களே அவர்கள் எல்லோருமே அழுகுணிச் சித்தர்கள், வேதனைச் சித்திரக்காரர்கள், பாழ் மண்டபத்துப் பாடகர்களாக இருக் கிறார்களோ என்னவோ! ஆணி இல்லாத சுவரில் எதைக் கட்ட முடியும்? குறிப்பு இல்லாவிட்டால் நினைவு கீழே துணி போல விழவேண்டியது தானே? அப்படி என்றால் நரகத் துடன் மல்லுக்கு நின்றுதான் ஆக வேண்டும்…… 

நல்ல வேளை; நரகத்திற்குப் பக்கத்தில் தான் சொர்க்கம் இருப்பதாகக் கூறுகிறார்களே; அது உண்மையாகவும் இருக்கலாம். எல்லைக் கோட்டுத் தகராறு கூட இருக்கக்கூடும். பாலத்தைத் தாண்டி இந்தப் பக்கம் இரண்டடி வருவதற்கு முன்னால் சொர்க்கம் தெரிகிறது. விழுந்து கிடக்கும் தட்டைக் கத்திபோல் கடலின் பரப்பு தெரிகிறது. தொடுவானில் படகின் வெள்ளைப் பாய்மர வரிசை தெரிகிறது, மேய்கிற கொக்குகள் போல. இடையில் கட்டு மரங்கள் கருங் குதிரைகள் போல் எழும்பி விழுகின்றன. 

பாநத்தடியில் வெறும் காலாக நடந்து வேதனைக்கு ஆதரவளித்த சுரணையற்ற கால்களை இப்பொழுது காணோம். கால்கள் மட்டும் அல்ல. வேதனைப்பட்ட மனத்தையே காணோம். மேயும் கொக்கு, எழும்பும் பரி வளைந்தெழும் தொடுவானம் நோக்கிப் பறவை ஒன்று விட்டேற்றியாகச் சென்று கொண்டிருக்கிறது…… 

அப்பொழுது தான் சொர்க்கமும் ஒரு வேளை அவ்வளவு சொர்க்கமாக இருக்காதோ என்ற பயம் தோன்றுகிறது. கடற்கரைப் பக்கத்திலிருந்து ஒருவனை நான்கு பேர்களாகத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். முகங்களில் கவலை தெரிகிறது. நம்பிக்கை போகவில்லை. 

தொடுவானை நோக்கிப் பறந்து கொண்டிருந்த பறவை திடீரென்று ஏதோ அம்படிபட்டதுபோல் சுருண்டு விழுகிறது…

அதற்குப் பிறகு இப்பொழுதெல்லாம் போகிறேனே, கூவமும் அலைகடலும் தவிர வேறெதுவும் தெரியவில்லை. 

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *