நிதானமாகப்பரந்துகொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்கு மான இடை நிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள். காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது.
தூரத்தில், பின்னால் தாமரைக்குண்டு விலக்கில் மட்டும் சில்லறை யாய் சில விளக்குகள். முன்னால் தூரத்தில் மாங்குளத்தில் விளக்கேதும் வெளித் தெரியா வண்ணம் சுற்றிலும் அடைத்துக்கொண்டு வாழைத் தோட்டங்கள், தென்னந் தோப்புக்கள்.
நிலவொளியில் காங்கிரஸ்காரன் போட்ட தார் ரோடு மெல்ல மினுங்கியது. ஏராளமான நொடிகள். இரண்டு பக்க வயல்காரர்களும் ஏதோரோட்டில் காய்க்கும் நெல்தான் குடும்பத்தைக் காப்பாற்றப் போவ தான எண்ணத்தில் ரோட்டைக் குடைந்து குடைந்து வயலின் வரப்பை அதிகப்படுத்தப் பார்த்ததன் விளைவாக, ரோடு பல இடங்களில் சவண்டு கிடந்தது. சதா ஈர நய்ப்பு வேறு. குண்டுகுழிக்குக் கேட்கவா வேண்டும்?
இருபத்திரண்டாண்டு சூனா மானா ஆட்சியில் எப்போதாவது நொடிகளில் கீலும் சல்லியும் கலந்து ஒப்பேற்றுவதோடு சரி. புதிதாய்க் கீல் போடவில்லை. ஆனால் தாமரைக் குண்டு தொடங்கி மாங்குளம் வழியாகக் கற்றாழைக்குடி வரை மூன்று கிலோமீட்டர் தூரத்துக்குத் தார் போட்டதாக மூன்று முறை கோப்புகளில் பதிவாகியுள்ளதாகச் சொன்னார்கள். பிரதம மந்திரி வெளிநாட்டு ஜீப் ஓட்டிப் போகும் நெடுஞ் சாலைகளைத் தவிர, அநேகமாக எல்லா ரோடுகளும் இதே அந்தஸ்தில்தான் இருந்தன.
‘ரோடு பல்லாங்குழி மாரியில்லா இருக்கு!’ என்று முனகிக் கொண்டேனும் செல்லப்பண்ணன் விடாமல் பஸ் ஓட்டிக்கொண்டு வந்தான், செல்லப்பண்ணனுக்கு மாங்குளத்தில் பெண் எடுத்திருந்தது. அந்தக் கடமை காரணமாகத் தாமரைக் குண்டு கற்றாழைக்குடி ரோட்டில் பஸ் கொண்டு போக மாட்டேன் என்று சொல்லத் துணிவில்லை. அந்தத் துணிச்சலில் கற்றாழைக்குடி டிரைவர்கள் முத்தையண்ணனும் நயினாரும் பஸ் கொண்டு வந்தனர்.
ஒரே தடத்தில் ஓடும் ரயில் வண்டிகளின் காலம் சீரமைக்கப்பட்டு, ஒதுங்குமிடங்களாக ஸ்டேஷன்கள் இருந்ததைப் போல, இந்த பஸ் போக்குவரத்து நேரங்களும் சீரமைக்கப்பட்டிருந்தன. நேரம் பிசகிப் போனாலும் கூடச் செல்லப்பண்ணனின் பஸ் கடந்த பிற்பாடுதான் நயினார் தாமரைக் குண்டு விலக்கில் இருந்து பஸ்ஸை உருட்டுவான்.
அப்போது பஸ் வரும் நேரம் இல்லை. கடைசி பஸ் எட்டே காலுக்குத் திரும்பிப் போயாயிற்று. மேலும் ஈஸ்வரமூர்த்திப் பாட்டா பஸ்ஸை எதிர்பார்த்து என்றும் புறப்பாடு கொண்டவரல்ல. மாங்குளத் தில் இருந்து தாமரைக் குண்டுக்குத் தவறாமல் மாலையில் போய் முன் னிரவில் திரும்புவார். போகும்போதும் வரும்போதும் கால் நடைதான்.
சன்னக் கரை போட்ட ஒற்றை வேட்டியை மார்புக்குக்கீழ் வயிற் றுக்கு மேலான பள்ளத்தில் முடிந்திருப்பார். வேட்டியில் வலது கை வாக்கில் தோதுபோல நோட்டும் சில்லறையும் செருகியிருப்பார். மாலை யில் போகும் போது சுட்டி போட்ட முறுக்கு நூல் துவர்த்து தற்செயலாக விழுந்ததுபோல் தோளில் கிடக்கும். காலையில் குளித்ததும் தண்ணீரில் குழைத்துத் தேய்த்த திருநீற்றுச்சாம்பல் நெற்றி, மார்பு, தோள்பட்டைகள் என்று மங்கலாகக் கிடக்கும். இடது கை வாக்கில், வேட்டி முந்தியில் பீடிக்கட்டும் தீப்பெட்டியும் இருக்கும். குறுக வெட்டப்பட்ட தலை மயிர். வாரத்துக்கு ஒரு ஷேவ். எல்லாமயிர்களும் நரைத்துவிட்டன.
தாமரைக் குண்டில் இருந்து திரும்பி வரும்போது, தோளில் கிடந்த துவர்த்து மட்டும் தலைமீது மடித்துப் போட்டபடி கிடக்கும். தலைப் பாகை கட்டமாட்டார். துவர்த்து வெயிலுக்கோ, மழைக்கோ பனிக்கோ பாதுகாப்பும் அல்ல. துவர்த்து தலை மீது மடிந்து கிடக்கிறது என்றால் ஈஸ்வர மூர்த்திப் பாட்டா எம்பெருமான் துணையுடன் ஞானமார்க்கமாக வருகிறார் என்று அர்த்தம். சில சமயம் முதல் வாற்றுச் சாராயம். சில சமயம் செவத்தியான் விளைக் கள்ளு. சில சமயம் அம்மாசிப் பண்டார வகைக் கஞ்சா இலை. நல்ல அபின் இப்போது அடிக்கடி கிடைப்ப தில்லை .
எப்போதும் நிதானமான போதையில்தான் இருப்பார். போதை பாவித்தபின், விலக்குக் கடையில் இரவுச் சிற்றுண்டி. மேனன் சம்சாரம் தலைப்பிள்ளைச் சூலியாக இருந்தபோது போட்ட கடை. இப்போது மேனனின் மருமகள் சூலியாக இருக்கிறாள்.
எப்போதும் ஈஸ்வரமூர்த்திப் பாட்டாவந்து விட்டால்தும்பு வாழை விலையைக் கழுவித் துடைத்துக்கொண்டு வந்து போடுவார். முதலில் சூடாக இரண்டு தோசை ஒரு ரசவடை. பிறகு இரண்டு தோசை, ஒரு ரச வடை. தேங்காய்த் துவையல், ஒரு பேயன் பழம். இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து, வெளியே வந்து ஒரு பீடி பற்ற வைத்துக் கொண்டா ரானால், பாட்டா நடைக்குத் யாரையும் எதிர்பார்த்துக் காத்து நிற்கமாட்டார். துவர்த்து தலைமீது ஏறும். லயம் பிசகாத நடை, யாராவது துணைக்கு வந்து சேருவார்கள். இந்தத் திரும்புகால் நடை இரவு எட்டரை மணிக்கு மேல் ஒன்பது மணிக் குள் இருக்கும். சித்தன் போக்கு சிவம் போக்கு.
நிலா வெளிச்சம் இல்லாவிட்டால், நட்சத்திர வெளிச்சம். கருமேகம் வானில் கவ்விக் கிடந்தாலும் தன் வெளிச்சம் பூமியில் தவழ்ந்து கொண்டிருக்கும். பாட்டாவின் கால்களில் கூடக் கண்ணுண்டோ என்ற எண்ணம் ஏற்படுத்தும் விதத்தில் சீராக இருக்கும் அவர் நடை. கூட யாராவது வந்தால் வருபவர் குரல் உரத்து ஒலிக்குமே அல்லாமல், பாட்டா குரல் நிதானமாக இருக்கும். தனித்து வழி நடக்கையில் தாயுமானவ சுவாமியோ, பட்டினத்துப் பிள்ளையோ, குணங்குடியாரோ ஏகாந்தம் கிழித்து இசையாய்ப் பெருகும்.
***
முத்தாரம்மன் கோயிலில் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பூசை உண்டு. அன்று முறையாம் பிள்ளை செண்டை முழக்கியபோது எட்டு மணி தாண்டிவிட்டது. செண்டைச் சத்தம் கேட்டு ஆணும் பெண்ணும் பிள்ளைகளுமாய் திரண்ட நேரத்தில் மாணிக்கவாசகம் பிள்ளை தேவாரம் இரண்டை நீட்டி நீட்டிப் படித்தார். தீவார்ணை கழிந்து, களபம் வாங்கி நெற்றியில் அணிந்து, சுண்டல், வடை, புட்டமுது வாங்கியபின் கூட்டம் கலைந்தது. வழக்கமாகக் கோயில் படிப்பரைகளில் அமரும் கூட்டம் மட்டும்.
“என்னதான் வீட்ல வடை சுட்டாலும் இந்த ருசி வரமாட்டங்கு பாத்தியா?” என்று பரமசிவம் சொல்லிக்கொண்டிருந்தபோது, சைக்கி வில் வந்த மாணிக்கம் படிக்கட்டில் காலூன்றி நின்றான்.
“என்னா மாணிக்கம்! நேரமாயிப் போச்சா… வடை சுண்டல் போச்சுல்லா…”
“அட சும்ம கெடப்பா… எண்ணே !… நம்ம பாறையாத்து இறக்கத் திலே ஒரு கார் கெடக்கு பாத்துக்கோ… ஒரு ஆம்புளையும் பொம்பிளை யும் பாலத்துக் கலுங்கிலே உக்காந்திருக்கா…”
“எந்த ஊருக்காரம்லே?”
“தெரியில்லே… நான் கேக்கவும் இல்லே… பாத்தா நம்ம சைடு ஆளு மாதிரி தெரியில்லே …”
“எவளையாவது தள்ளீட்டு வந்திருப்பான்… கேக்க வேண்டியது தானலே… நாளைக்கு என்னவாம் ஆயிப் போச்சுண்ணா போலீசுக்காரன் மீசை மொளைச்ச அம்புட்டுப் பேரையும் கொண்டுட்டுப் போயிரு வான்… சிவசூரியன் தெவக்கத்து கொலக் கேசிலே நாம பட்டது போராதா?”
“இப்பம் என்ன செய்யது?” ”வாங்கலே… போயி என்னாண்ணு கேட்டுக்கிட்டு வரலாம்…”
தென்னந் தோப்பில், நள்ளிரவில், கள்ளத் தேங்காய் வெட்டும் கள்ளன்மாரைப் பிடிக்கப் போவதுபோல், அதிக அரவமற்று, நடையில் வேகம் காட்டி, பாறையாற்றுப் பாலக் கலுங்கை அடைந்தபோது –
மாணிக்கம் சொன்னது சரிதான்.
முன்பின் தெரியாத ஒரு ஆள், பாலக் கலுங்கின் மீது பெட்ஷீட் விரித்து ஒரு பெண்ணுடன் அமர்ந்திருந்தார். ஆளரவரம் கேட்டு அமர்ந் திருந்தவர் தலையைத் திருப்பினார். வந்தவர்கள் எல்லோரும் ஒரு மரியாதையான தூரத்தில் நின்றனர்.
வந்து நின்ற வேகத்தில் ராமசாமி சொன்னான்
“சார்… இப்பிடி இங்க இருக்கது சரியில்லே … எந்திரிச்சுப் போயிரணும்…”
“என்னப்பா, ஏதாவது பிரச்சினையா?”
“பிரச்சினை ஒண்ணும் இல்ல… பிரச்சினை வரக்கூடாதுண்ணு தான்…”
“என்ன பிரச்சினை வரும் எங்களால…”
“சாருக்கு சொன்னா மனசிலாகாது… போங்கோண்ணா போயிருங்கோ …”
“நீங்க பேசறது எனக்குப் புரியல… நிலவு நல்லாருக்கு… காத்து நல்லாருக்கு… சலசலன்னு தண்ணி ஓடுது… கொஞ்ச நேரம் உக்காந்திருந்திட்டுப் போயிரப் போறோம்…”
“இல்ல, நீங்க உடனே போணும்… என்னவாம் ஆச்சுண்ணா நாங்க தான் போலீசுக்குப் பதில் சொல்லணும்…”
“அப்பிடி என்னப்பா ஆகும்? இது என் வீட்டுக்காரி… இந்தியாவிலே எந்த ரோட்டிலேயும் நிக்கறதுக்கு என் காருக்கு பெர்மிட் இருக்கு…”
“தொந்தரவு வரக் கூடாதுண்ணுதான்…”
“ஒரு தொந்தரவும் வராது. நீங்க போயிப் படுத்துத் தூங்குங்க.”
“என்னடா ராமசாமி? நீயும் அவரோட நியாயம் பேசீட்டு நிக்கே… எந்திரிச்சுப் போறாரா இல்லையாண்ணு கேளு” – குமரேசன்.
“நான் எதுக்குப்பா போகணும்… உங்க ஊருக்குள்ளே வீட்டு வராந்தாவிலே வந்து இருக்கோமா? எங்களால ஏதும் உபத்திரவம் உண்டா? நாங்க ஏதாம் கெட்ட காரியம் செய்யறோமா?”
“எதுக்குங்க வம்பு… போயிரலாங்க.” – பெண்மணி.
“நீ சும்மாரு பத்மா… எதுக்குப் போகணும்? எதுக்குன்னு கேக்கறேன்…”
“மரியாதையாச் சொன்னா கேக்க மாட்டான்டா… நாலண்ணம் போட்டுத்தான் அனுப்பணும்..”
“கொதவளையிலே குத்தி கீழே தள்ளுலே…” ஒரே ஆரவாரமாக இருந்தது…
“இந்தாங்க தம்பி… இதைப் பாத்தீங்களா… கைத்துப்பாக்கி…. இதுக்கும் லைசென்ஸ் வச்சிருக்கிறேன்… உங்களைச் சுடறதுக்கு இதை நான் கொண்டு வரல்லே… ஆனால் நிர்ப்பந்தம் ஏற்பட்டாசுடறதுக்கும் யோசிக்க மாட்டேன்… அதற்கு அவசியம் ஏற்படுத்தாம வீட்டுக்குப் போங்க… அல்லது நாங்க எதுக்குப் போகணும்ங்கிறதுக்கு சரியான நியாயம் சொல்லுங்க… நீங்க நெனைக்கலாம் ஏதோ ஒரு பொண்ணை நான் தள்ளீட்டு வந்திக்கேன்ணு… இது என் வீட்டுக்காரிதான்ணு எப்படி நான் நிரூபிக்க முடியும்? தாலியைக் காட்னாக்கூட நீங்க நம்ப மாட்டீங்க… நான் இங்கேருந்து போனா நீங்க நினைக்கிறதுதான் சரிண்ணு ஆயிரும்… அதுனாலே ஆகறது ஆகட்டும்… நாங்க இங்கதான் இருப்போம். வேணும்ணா நாங்க போறதுவரை நீங்களும் இருந்து நீங்க நெனைக்கிறபடி தப்பு நடந்திராம பார்த்துக்குங்க…”
அன்று பாட்டாவுக்கு நல்ல சுதி.
இளங்காற்று மார்பின் முடிகளை மையலுடன் அசைத்தது. நிலவு சொரிந்து நெல்மணிகள் முதிர்ந்து கொண்டிருந்தன. வள்ளல் ராமலிங்கம் கரகரத்த குரலில் காற்றுடன் மிதக்க உள் நிறைவுடனான நடை.
தாமரைக்குண்டுக்கும் மாங்குளத்துக்கும் ஒரு மைல் தூரம்தான். தாமரைக்குண்டு எல்லையைத் தாண்டி மூன்று ஃபர்லாங் போனதும் குறுக்கிடும் பாறையாறு. பாறையாற்றின் குறுக்காக ஒரு லாரி அல்லது பஸ் கடக்கும் அகலத்தில் ஒரு பாலம். சர்.சி.பி.ராமசாமி ஐயர் திருவிதாங்கூர் சமஸ்தான திவானாக இருந்த காலத்தில் கட்டிய பாலம். பாலத்தின் இரு பக்கமும் ஓராள் படுக்கும் அகலத்தில் மூன்றடி உயரத்தில் சுவர்கள். பாலத்தின் இரண்டு நுழைவிலும் சுவர் சச்சதுக்கமாக நல்ல அகலத்தில் நான்கு பேர் உட்கார்ந்து பேசும் தோதில். ஆற்றின் இரு கரைகளிலும் கலிந்திருந்த புன்னை மரங்கள். பாலத்தின் குறுக்கீட்டில் மட்டும் தொடர் அறுபட்டிருந்தது.
நிலவொளியில் புன்னை மரங்கள் கூந்தல் உலர்த்தும் ஓசையைத் தாண்டி மொத்தமான மனிதக் குரல்கள் பாட்டாவின் பாட்டை ஊடறுத்து லயம் கலைத்தது.
பாலத்தில் இருந்து மாங்குளம் மேலும் இரண்டு ஃபர்லாங். ஊரில் இருந்து குரல்கள் காற்றில் இவ்வளவு கணீரென வரக் காரணம் இல்லை . பாலத்தின் மேட்டுப் பரப்பைக் கூர்ந்து பார்த்தார் ஈஸ்வர மூர்த்திப் பாட்டா, பத்திருபது பேர்கள் பொலியளக்கும் சூடடிக் களத்தில் நிற்பது போலத் தென்பட்டது. சற்று நடையை எட்டிப்போட்டார்.
பாலத்தை நெருங்க நெருங்கக் குரல்கள் துலங்க ஆரம்பித்தன. சண்டை போலல்லாமல் ஒரு வாக்குவாதத்தின் தோரணையில், ராமசாமியின் குரல் உயர்ந்து விட்டது. ‘சவம் படிச்சிருக்கானே தவிர வெவரம் போராது’ என்று பாட்டாவின் சிந்தனையில் ஒரு வரி ஓடியது. பாலத்தின் இறக்கத்தில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்றை நிலவு கழுவிக் கொண்டி ருந்தது. பாலக்கலுங்கை பாட்டா நெருங்கியதும் பார்வை துலங்கிக் காட்சி புலப்பட்டது. பாலத்தின் அகலத் திண்டில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். எழுந்து நின்றால் ஆறேகாலடிக்குக் குறையாது. நல்ல பரந்த உடற்கட்டு, அந்தப் பகுதிக்குச் சம்பந்தமில்லாத வெளுப்பு. பக்கத்தில் ஒருபெண்மணி முந்தானையால் போர்த்திக் கொண்டு. குனிந்திருந்த முகம் தெரியவில்லை .
ரோட்டில் நின்று கொண்டிருந்தவை எல்லாம் மாங்குளத்தில் பதிவான முகங்கள். ராமசாமி, கோலப்பன், குத்தாலம், குருசாமி, சுப்பையா, முருகேசன், சோணாசலம், சுந்தரம், மாணிக்கம், மனகாவலம், குமரேசன்…
பாட்டா சமீபித்ததும் குரல்கள் நின்றன. பாலக்கலுங்கை அடைந் ததும் தலையில் கிடந்ததுவர்த்தை எடுத்து வரிக் கல்லின் தூசியைத் தட்டி விட்டு ஏறி அமர்ந்தார். எல்லார் முகங்களையும் கூர்ந்து பார்த்தார். அமர்ந்திருந்தவரின் முகத்தில் நிதானமும் கௌரவமும் தெரிந்தது. பெண்மணி ஒரு சங்கடத்தில் வரிக் கல்லில் விரலால் கோலம் வரைந்து கொண்டு…
ஆறு மெல்லிய அசைவில் நகர்ந்து கொண்டிருந்தது. தூரத்து மணல் படுகைக்குக் காவலாக நின்ற நாணற்புதர்களில் பூக்கள் ஆற்றைப் புரிந்து கொண்டு அசைந்தன.
ஈஸ்வரமூர்த்திப் பாட்டாவுக்கு ஒருவாறு பிரச்சினை புரிந்தது. பொதுப்படையாகக் கேட்டார் – “என்னப்பா விஷயம்?”
ராமசாமி ஒரு முறையீடு போலச் சொன்னான்.
“என்னையா, எதுக்கு வம்பு? இவ்வளவு நேரம் பிள்ளையோ சொல்லுகாள்ளா… எந்திரிச்சுப் போயிருங்களேன்…”
“இது என்ன நியாயம், பெரியவரே…”
“உலகத்திலே எல்லா இடத்திலேயும் நியாயமான காரியங்கதான் நடக்கா ?”
“சரி… அப்ப நாங்க போயிரணும்… அப்படித் தானே… ம்… பத்மா எழுந்திரு…”
அவர்கள் எழுந்து பெட்ஷீட்டை மடிக்க ஆரம்பித்தனர். பாட்டா சற்று நேரம் தரையைப் பார்த்து உட்கார்ந்திருந்தார். நிமிர்ந்து பார்த்துச் சென்னார் –
“பரவாயில்ல… உக்காருங்கோ … ராமசாமி, நான் பாத்துக்கிடுகேன், எல்லாரும் போங்கோ… நேரமாச்சு… போயிப்படுங்கோ… நான் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு வாறேன்…”
புதியவர் பெட்ஷீட்டை மறுபடியும் விரித்தார். கூட்டம் மெதுவாகக் கலைந்து திரும்ப ஆரம்பித்தது. நிலவு மேலும் சொரிந்துகொண்டிருந்தது.
– ஏப்ரல் – 1992