பாலக்காடு ஜோசியர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 22,264 
 
 

“வங்கி மேலாளருக்கு வணக்கம்.
நான் நமது வங்கியின் பல நூறு வாடிக்கையாளர்களில் ஒருவன். உங்களுக்கு மிகவும் பழக்கமானவன். இந்தக் கடிதத்தில் நான் என்னை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. இப்பொழுது நமது வங்கியின் கிளை வங்கிக்குச் சொந்தமான புதிய கட்டிடத்தில் செயல்பட்டு வருவது நம் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்ச்சி!
ஆனால் எனக்கு மனதில் ஒரு எண்ணம். நான் கடவுளுக்கு பயந்தவன்! தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் பூஜை செய்பவன்! சுதர்சன ஜபம் தினமும் 108 க்கு குறையாமல் செய்து வருபவன். எனக்கு நமது வங்கி கிளையின் கட்டிடத்தில் துர்தேவதைகள் நடமாட்டம் இருப்பதாக ஒரு எண்ணம் என்னால் இதை நன்கு உணர முடியும்.

என் உடம்பில் அப்படி ஒரு உணர்ச்சி ஓட்டம் உண்டு. நான் உங்கள் கிளைக்கு வரும் போதெல்லாம் இதை என்னால் உணர முடிகிறது. இதற்கு நீங்கள் உடனடியாக பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் துர்தேவதைகள் விலகி உங்கள் வங்கி இன்னும் நன்றாக வளர்ச்சி அடையும். செய்வீர்களா?

உடனே சுதர்சன ஹோமம் செய்ய ஏற்பாடு செய்யவும். அத்துடன் ஒரு புரோகிதர் ஏற்பாடு செய்து தினமும் காலையிலும் மாலையிலும் 108 முறை சுதர்சன ஜபம் ஒரு மாதம் பத்து நாட்கள் செய்து வர வேண்டும். அப்படி செய்தால் அதன் பலனை நீங்கள் உடனே தெரிந்துகொள்ள முடியும். செய்யாமல் இருப்பதும் தங்கள் சித்தம். உங்கள் வங்கிக்கு நல்ல சுபிட்சம் ஏற்பட நானும் சுதர்சன ஜபம் செய்து வருகிறேன். வணக்கம்”

கடிதத்தைப் படித்து முடித்த மேலாளர் மோகன் கடித உரையை திருப்பிப் பார்த்தார். பெயரோ விலாசமோ இல்லை. கடிதம் உள்ளூரிலிருந்து போஸ்ட் செய்யப்பட்டு இருந்தது. கடிதத்தை மடித்து மேஜை அறையில் வைத்துவிட்டு சிறிது நேரம் யோசித்தார்.

கடிதத்தை யார் எழுதியது? ஏன் பெயர் போடவில்லை? இதில் உண்மை ஏதாவது இருக்குமா? கிளையில் எனக்கு தெரிந்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது. எந்த அசம்பாவிதமும் இங்கு நடக்கவில்லை. பின் எதற்காக இப்படி ஒரு கடிதம்? ஒருவேளை புரோகிதர்கள் பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா? மோகனுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. மணி அடித்து பியூனை அழைத்தார்.

பியூன் சேகர் உள்ளே வந்தான்.

“சேகர்.. கிரிதரனை வரச்சொல்”

உதவி மேலாளர் கிரிதரன். கிரிதரன் இடம் யோசனை கேட்கலாம் என்று மோகன் முடிவு செய்தார்.

கிரிதரன் உள்ளே வந்ததும்,

“கிரி நம்ம புது கட்டிடம் எப்படி இருக்கு?”

“என்ன மோகன் திடீரென்று கட்டிடத்தைப் பற்றி கேள்வி?”

“விஷயம் இருக்கு”

“புதுக்கட்டிடம் நல்லா இருக்கு. முழுவதும் ஏசி வசதியுடன் ஜாலியா இருக்கு. நம்ம ஸ்டாப் . வங்கியின் கஸ்டமர்ஸ் எல்லோருக்கும் சந்தோஷம். புது கட்டிடம் வந்ததும் நமது பிஸினஸும் நல்லா இருக்கு”

“இல்லை கிரி. நமது புது கட்டிடத்தில் ஏதோ ஒரு குறை இருக்கு. ஆனால் அது என்னன்னு தெளிவா எனக்கு தெரியல”

“எனக்கு அப்படி எதுவும் தெரியலையே”

“நல்லா யோசனை பண்ணு”

“இதுல யோசிக்க என்ன இருக்கு? நீ சொல்றது போல ஏதாவது நடந்திருந்தா சந்தேகம் வரும். அப்படி எதுவும் இல்லையே”

“அதுவும் சரிதான். சரி கட்டிடம் திறக்கறதுக்கு முன்னாடி நாம் பூஜை, ஹோமம் எல்லாம் செய்தோமே. அது என்ன ஹோமம் உனக்கு தெரியுமா?

“நல்லா தெரியுமே அது கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் எல்லாம் செய்தோமே”

“சரி சுதர்சனஹோமம் எதுக்கு செய்வாங்க?”

“புது கட்டிடத்தில் துர்தேவதை ஏதாவது இருந்தால் அதற்குத் தான்.”

“உனக்கு நன்றாகத் தெரியுமா? நாம சுதர்சன ஹோமம் செய்தோமா?”

“தெரியும். நிச்சயம் தெரியும்”

“சரி இந்த லெட்டரை படித்துப் பார்” என்று தனக்கு வந்த கடிதத்தை கிரியிடம் கொடுத்தார் மோகன்.

“மோகன், இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். நாம் தான் முன்பு இந்த ஹோமம் எல்லாம் செய்து விட்டோமே. எவனோ வேலை இல்லாமல் இப்படி எழுதி இருக்கான். அவனுக்கு அக்கறை இருந்தால் நம்மகிட்டே நேரில் வந்து சொல்லி இருக்கலாமே..” என்றார் கிரி

“அத்தோடு இல்லாமல் நமக்கு இதுவரை புது கட்டிடத்தில் எந்த பிரச்சனையும் இல்லையே” என்றும் கூறினார்

ஒரு மாதம் ஓடி விட்டது.

அப்படி ஒரு கடிதம் வந்ததை இருவரும் மறந்து விட்டனர்.

ஒருநாள் வங்கியில் வேலை பார்க்கும் சங்கர் மயங்கி விழுந்தார். அப்போது காலை 11 மணி. டாக்டரிடம் காட்டி அவருக்கு உடனே சரியாகி விட்டது. இரண்டு நாள் லீவு எடுத்துக் கொண்டபின் அவர் மீண்டும் வேலைக்கு வந்து விட்டார். வேலைக்கு சேர்ந்த அன்று அவருக்கு ஒரு கடிதம் வந்தது.

மீண்டும் ஏறக்குறைய அதேபோன்ற கடிதம். கடிதத்தின் முடிவில் “நான் முன்பே இதைப் பற்றி வங்கியின் மேனேஜருக்கு எழுதி இருந்தேன். அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஹோமமும் செய்யவில்லை. இப்பொழுது உங்களுக்கு மயக்கம் வந்ததற்கு காரணம் துர்தேவதைகளின் நடமாட்டம் தான். இதையும் நீங்கள் லட்சியம் செய்யவில்லை என்றால் அதன் பலன் சீக்கிரம் தெரியும்” என்று எழுதி இருந்தது.

சங்கர் அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு நேராக மேனேஜரிடம் சென்றார்.

“சார் இந்த கடிதம் எனக்கு வந்து இருக்கு இத படிச்சுப் பாருங்க”

மேனேஜர் படித்து முடித்தார்.

“ஏன் சார் உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் முன்பே வந்ததா?”

மேனேஜர் யோசித்தார்.

“ஆமாம் ஒரு மாதத்திற்கு முன்னால் வந்தது”

“ஏன் சார் நீங்க அத கவனிக்கல?”

“கட்டிடம் ஆரம்பிக்கும் போதே எல்லா ஹோமமும் செய்துவிட்டோமே.. எதற்கு திரும்ப செய்ய வேண்டும்? தேவை இல்லை என்று விட்டுட்டோம்”

“நீங்க அப்படி அலட்சியமா விட்டதாலேதான் எனக்கு இப்படி திடீரென்று மயக்கம் வந்து விழுந்து விட்டேன். எனக்கு ஏதாவது ஆகியிருந்தால்?”

“நீங்கள் டாக்டரிடம் காட்டியதில் அவர் உங்களுக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக இருந்ததால் மயக்கம் வந்ததாக சொன்னார் இல்லையா?”

“ஆமாம்”

“அப்படி இருக்கும்போது உங்கள் மயக்கத்திற்கும் துர்தேவதை அது இதுன்னு ஏன் வீணா கற்பனை செஞ்சுக்கறீங்க?”

“ரத்தக்கொதிப்பு தான் காரணம் என டாக்டர் சொன்னாலும் அது எப்படி சார் எனக்கு திடீர் என்று மயக்கம் வரும்? இதற்கு முன்பு எனக்கு ரத்தக்கொதிப்பே கிடையாது தெரியுமா? இதற்கு எல்லாம் காரணம் அந்த துர்தேவதை தான். உடனே அதை விரட்ட நீங்கள் ஹோமம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள். இல்லாவிட்டால் யூனியன் மூலம் சொல்ல வேண்டி இருக்கும்”

“அதெல்லாம் தேவையில்லை. நான் மீண்டும் விஷயம் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா அவங்க கிட்ட கேட்டுகிட்டு ஹோமம் செய்யணும்னு சொன்னா ஏற்பாடு செய்கிறேன். நீங்க கவலைப் படாம இருங்க. எதுக்கும் திரும்ப பிபி செக் பண்ணிக்குங்க”

சங்கர் போய்விட்டார்.

சங்கர் சொன்னதை பற்றி யோசித்தார் மோகன்.

கிரிதரனிடம் யோசனை கேட்கலாம். அவன் தான் இதற்கெல்லாம் சரி. கிரிதரனை அழைத்தார் மோகன்.

“என்னப்பா கிரி..சங்கர் சமாச்சாரம் தெரியுமா?”

“அவனுக்கு ஆபீஸில் வேலை அதிகம் இல்லை. சாப்பிட்டுவிட்டு ஆபிஸ்ல சும்மாவே உட்கார்ந்திருந்தா பிபி ஏறாமல் என்ன ஆகும்? அதுதான் தலை சுற்றல் மயக்கம். எனக்கு என்னவோ இந்த மாதிரி கடிதம் நம் வாடிக்கையாளர்கள் யாரும் எழுதியமாதிரி தெரியவில்லை. எல்லாம் நம் ஆட்கள் வேலையாகத்தான் இருக்கும்!”

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு. அதுதான் என்னன்னு புரியலை. ஹோமம் செய்யணும்னு எழுதினான் . திரும்பவும் அதைத்தான் எழுதி இருக்கிறான். இந்த சங்கர் மயக்கம் ஒரு காரணமாக போய்விட்டது. அவ்வளவுதான்”

“இதையெல்லாம் பெரிசா எடுத்துக்க வேண்டாம் பேசாம நம்ம வேலையைப் பார்க்கலாம்”

“ஆனா இந்த சங்கர் யூனியன் மூலம் சொன்னால் என்ன செய்வது?”

“அப்படி வந்தால் பார்த்துக்கலாம்”

அத்துடன் அவர்கள் அதை மறந்தனர்.

ஒரு வாரம் சென்றது. இடையில் சங்கரும் அதை மறந்து விட்டான்.

ஒரு நாள் சங்கர் மீண்டும் மயக்கம் வந்து விழுந்தான். இந்த முறை யூனியன் தலைவர் சிவாவுடன் வந்து மேனேஜரிடம் பேசினான் சங்கர்.

“இன்னும் ஒரு வாரத்தில் நீங்க அந்த பரிகார ஹோமம் செய்யாவிட்டால் நாங்களே அதுக்கு ஏற்பாடு செய்வோம். செலவு முழுவதும் நீங்கதான் கொடுக்கணும்” என்றான் சிவா.

“சரி பார்க்கலாம் நான் டிவிஷனல் மேனேஜரிடம் கேட்டு சொல்றேன். எதற்கும் சங்கரை நல்ல டாக்டரிடம் காட்டுவது நல்லது”

இரண்டு நாட்கள் சென்றன. மேலாளர் மோகனுக்கு மீண்டும் ஒரு கடிதம் வந்தது. அதைப் பார்த்ததும் மோகன் முகத்தில் ஒரே மகிழ்ச்சி.

கிரிதரனையும் , சங்கரனையும் அழைத்தார்.

“இந்த கடிதம் இன்னைக்கு காலையில் தபாலில் வந்தது இதைப்படி கிரி. சங்கரன் கேட்கட்டும்”.

கடிதத்தைப் படித்தார் கிரி:

“அன்புடைய மேலாளருக்கு பணிவான வணக்கம். நான் இரண்டு முறை கடிதம் எழுதியும் தங்கள் சுதர்சன ஹோமம் செய்யவில்லை. சங்கருக்கு இரண்டு முறை மயக்கம் வந்துவிட்டது. நான் எனக்கு தெரிந்த பாலக்காடு ஜோஸ்யரிடம் விளக்கம் கேட்டேன். அவர் மை போட்டு பார்த்தார். அதன்படி உங்கள் வங்கி கட்டிடத்தில் இருக்கும் துர்தேவதை இப்பொழுது உங்களுடன் வேலை பார்க்கும் சங்கர் என்பவரின் உடலில் புகுந்து விட்டதாம். அதனால் அவருக்கு அப்படி அடிக்கடி மயக்கம் வருகிறதாம். எனவே எல்லாருடைய நலனுக்கும் சங்கரை உடனே உங்கள் கிளையில் இருந்து வேறு ஊருக்கு மாற்றிவிடுவது நல்லது. இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் . உடனே சுதர்சன ஹோமம் செய்வது நல்லது. சங்கரை உடனே வேறு ஊருக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யவும்.”

கடிதத்தைப் படித்து முடித்தார் கிரி.

“சங்கர் இப்போ என்ன செய்யலாம்? ஹோமத்துக்கு ஏற்பாடு அல்லது உங்களுக்கு வேற ஊருக்கு மாற்றுதல்?”

மோகனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சங்கர் உடனே வெளியே சென்றுவிட்டார். அதற்கு பின் அது பற்றி யாரும் வங்கிக்கு கடிதம் எழுதவில்லை. சங்கரும் அதைப்பற்றி பேசுவதில்லை.

– இந்த சிறுகதை தினமலர் வாரமலரில் 20.02.2000 வெளிவந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *