பாரிஸுக்கு திரும்பப்போ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 9,667 
 

சார்ல் டிகால் ஏர்போர்ட்டுக்கு முல்லைநாதன் வந்து சேர்ந்த போது காலை ஏழு மணி.

வாடகை கார் எடுத்தால் எண்பது யூரோ பழுத்து விடும் என்று நம்மூர் நாராயணன் பயங்காட்டி இருந்தான். நாலு மணிக்கே எழுந்து, இருபது கிலோ லக்கேஜுடன் அடாத குளிரில் நேஷொன் மெட்ரோவுக்கு நடையாய் நடந்து, பூமியை கடைந்து பாதாளத்தில் இரண்டாவது லெவெலில் செதுக்கியிருந்த ரயில்வே பிளாட்பாரத்துக்குள் நுழைந்தபோது நாதனுக்கு அந்த குளிரிலும் கொஞ்சம் வேர்த்தது.

எந்த திசை ரயிலை பிடிக்கவேண்டும் என்று யாரிடமாவது கேட்கலாமென்று சுற்றுமுற்றும் பார்த்தான். டீனேஜ் வெள்ளைக்காரி ஒரு கருப்பனுடன் அன்னியோன்னியமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். அவர்களுக்கு இடையில் கரடியாய் நுழைய நாதனுக்கு மனம் வரவில்லை. ஒரு கருப்பு இளைஞன் தலையையும் காலையும் எதிரெதிர் திசையில் விடைத்துக்கொண்டு காதுக்குள்ளிருந்து வரும் பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்தான். ” சார்ல் டிகால் ” என்று எலெக்டிரானிக் போர்ட் ஒன்று திசை காட்டியது. சத்தமே இல்லாமல் பாம்பு மாதிரி வந்து நின்ற ரயிலில் கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு ஏறியதும் புஸ்ஸென்று கதவு சாத்திக்கொண்டது. அதிகாலை என்பதாலோ என்னவோ உட்கார தாரளமாய் இடம் இருந்தது. தலைக்கு மேலே பார்த்தான். வரைபடம் போட்டிருந்தார்கள். அவன் ஏறிய நேஷொன் என்ற பெயருக்கு மேல் பச்சை விளக்கு எரிந்தது. ஆறு ஸ்டேஷன் கடந்தால் ஏர்போர்ட்.அப்புறம் பங்களூரு. அப்புறம் சென்னை, கே கே நகர், பாவனாவை உட்காரவைத்து ஜெர்மனியில் வாங்கிய விளயாட்டு சாமான்களை தரையில் பரத்திப்போட்டபோது… பிளாட்பாரத்தில் பார்த்த அந்த வெள்ளைக்காரியும் கருப்பனும் எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

அவள் அழகாயிருந்தாள். நாதனுக்கு பொதுவாக வெள்ளைக்காரிகளிடம் ஈர்ப்பு இல்லை. கருப்பாக இருந்தால் இவர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்ப்பது வழக்கம். பத்துக்கு ஒன்றுதான் தேறியது. அந்த வெள்ளை நிறத்துக்கு காரணமே பிக்மென்டஷன் தட்டுப்பாடு என்று படித்திருந்தான்.இவள் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருப்பாளென்று தோன்றியது. ஏட்ரியன் என்று அவனை அழைத்தாள். அந்த அழைப்பில் காதல் இருந்தது. அதற்குள் அந்த இருவருக்குமிடையே நெருக்கம் அதிகமானதை கவனித்தான். பாரிஸில் இதெல்லம் சகஜம் என்று கேள்விப்பட்டிருக்கிறான். தங்களைச்சுற்றி மனிதர்கள் இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. முதலில் சிவாஜியும் வாணிஸ்ரீயும் போல மூக்கால் முகத்தை உரசிக்கொண்டிருந்தார்கள். நாலு ஸ்டேஷன் கடந்து ரயில் படு வேகமாக போய்க்கொண்டிருந்தது. இப்போது ‏‏இவர்களின் வேகமும் அதிகமாகியிருந்தது.

நீண்ட நேரமாக முத்தத்தில் மூழ்கிப்போயிருந்தார்கள். நிலைமை தீவிரமடைந்ததால், நாதன் லக்கேஜோடு இடம் மாறினான். ஏதோ ஒரு காரணத்தால் ஸ்விட்ச் ஆப் செய்ததைப்போல் முடித்துக்கொண்டார்கள். ஒன்றுமே நடக்காதது போல் சிரித்துப்பேசினார்கள். அந்த அழகி தன் கைப்பையைத் திறந்து வட்டக்கண்ணாடியில் முகம் பார்த்தாள். லிப்ஸ்டிக் தேய்த்து ரோலர் பெர்ப்யூமை சட்டையில் தடவிக்கொண்டாள். ஏர்போர்ட் வந்ததும் ” தேங்க் யூ” என்று அந்த ஏட்ரியன் நாதனை பார்த்து கட்டை விரலை உயர்த்தியபடியே இறங்கினான். ஏனென்று புரியாமல் நாதனும் இறங்கினான்.

மெனக்கிடாமல் எஸ்கலேட்டர் பிடித்து மேலே வந்தால் ஏர்போர்ட் வரவேற்றது. பல வழிகாட்டிகளை கடந்து ஏர் ப்ரான்ஸ் கவுன்டரை நெருங்கினான். நாதனுக்கு முன்னே இரண்டு இந்தியர்கள் கவுன்டாரில் இருந்த ப்ரென்ச்சுப் பெண்மணியிடம் பொரிய விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அவள் சிரிப்பு மாறாமல்
“ஸாரி. ஐ கான்ட் ஹெல்ப் யூ” என்றாள். ஓரத்தில் இருந்த கவுன்டரை காண்பித்து ஏதோ சொன்னாள். அவர்களிருவரும் நொந்த நிலையில் அவள் காட்டிய திசையில் சென்றார்கள்.

“இஸ் பேங்கலோர் ப்ளைட் ஆன் டைம்?” நாதன் கேட்டான்.

” ஏஸ் பத் யூ கான்த் ப்ளை துதே ” என்று அவள் சொன்னபோது கலங்கிப்போனான்.

” பட் வை? ”

இன்டெர்னேஷனல் ப்ளைட் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்னரே ¡£ கன்பர்ம் செய்ய வேண்டுமென்பதும், இதை காரணம் காட்டி வீ ஐ பீ க்களுக்கு சீட் கொடுத்து நாதன் போன்ற அப்பிராணிகளுக்கு தண்ணி காட்டுவது வழக்கம் என்பதும் பாதிக்கப்பட்ட ஹெக்டேவும் பசப்பாவும் விளக்கியதும்தான் புரிந்தது. அந்த பெண்மணி கை காட்டிய மற்றொரு கவுன்டாரில் மறு நாள் ப்ளைட்டில் போகலாமென்று ஆறுதல் கூறினார்கள். போன் கார்டு, புட் கூப்பன் கொடுத்து தங்குவதற்கு ஹோட்டல் ஏற்பாடு செய்து தந்தார்கள். ஐநூறு யூரோவும் கொடுத்தர்கள். வெள்ளைக்காரர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் போர்டிங் பாஸ் வாங்கிக்கொண்டு வெண்ணை மாதிரி செக்யூரிடி செக்குக்கு உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.

“ரேஸிஸம்” என்றான் ஹெக்டே.”

நாதன் அந்த பெண்ணிடம் மன்றாடி பார்த்து அவளிடம் எந்த பாச்சாவும் பலிக்காது என்று தொரிந்துகொண்டான். ஒரு நாள் முழுவதும் என்ன செய்வது என்று கேட்டதற்கு,

” எஞ்சாய் பாரிஸ்” என்றாள் அதே சிரிப்புடன்.

நாதன் தனியாக ஊர் சுற்றிப்பார்க்கிற ரகமில்லை. வேலை முடிந்து ப்ராங்க்பர்ட்டிலிருந்து நேராக சென்னை வந்திருக்கலாம். ஏர் ப்ரான்ஸில் புக் செய்ததால் இப்படியாகிவிட்டது.

ஓட்டல் சென்று லக்கேஜை போட்டான். ஷாப்பிங் போகலாம். பாவனாவுக்கு ஏதாவது கிட்ஸ் பெர்ப்யூம் வாங்கலாம். டான் ப்ரவுனின் “டா வின்சி கோட்”நாவலின் கதைக்களமான லூவ்ரு மியூசியம் போய் மோனாலிசா ஓவியத்தை பார்த்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. ரிசெப்ஷனில் விசாரித்தான். நாலு யூரோவுக்கு ஒரு நாள் முழுவதும் போட் பஸ்ஸில் பாரிஸ் பார்க்கலாம் என்றாள் ஒருத்தி. ஐபில் டவர் பார்க்காமல் திரும்பாதே என்றாள்.

பாரிஸ் லட்சணமாக இருந்தது. பழமையும் புதுமையும் சேர்ந்த ரம்மியமான கலவை. பாரிஸை மிக நேர்த்தியாக செதுக்கியிருந்தார்கள். சீதோஷ்ண நிலை அழகை கூட்டிக்காட்டியது. இரண்டாம் உலகப்போரின் போது பாரிஸ் மேல் குண்டு விழக்கூடாது என்று ஹிட்லர் உத்தரவு போட்டிருந்ததின் நியாயம் புரிந்தது.

போட் பஸ்ஸ¤க்கு டிக்கட் வாங்கினான். நாலு யூரோவில் பாரிஸை சுற்றிப்பார்த்து விடலாம். ஒவ்வொரு இடமாக இறங்கிப் பார்த்துவிட்டு வந்து அடுத்த போட்டில்
ஏறிக்கொள்ளலாம்.

பச்சை பசேலென்று இருந்தது சீன் நதி. போட்டில் கூட்டம் அதிகமில்லை. நதியின் இரண்டு பக்கமும் பிரம்மாண்டமான கிரேக்க கட்டிடக்கலையின் வெளிப்பாடுகள். க்யூரேட்டர்ஸ் என்கிறவர்கள் பழைய கட்டிடங்களை சில வஸ்துக்களாலும் ரசாயனத்தாலும் பாதுகாத்துக்கொண்டிருப்பது லூவ்ரு மியூசியம் சென்ற போது தொரிய வந்தது. பழமையான ப்ரிட்ஜுகள், ஆன்டிக் விளக்குகள், மியூசியங்கள், மாளிகைகள், இரண்டாம் உலகப்போர் நினைவுச்சின்னங்கள், தலை நிமிரச்செய்யும் நாற்றடாம் சர்ச் …

காலா£ லபாயட் என்ற அந்த ஷாப்பிங் மால் அரண்மனையைப் போல இருந்தது. இரண்டு பில்டிங்கை இணைத்து பாலம் போட்டிருந்தார்கள். ஐஸ்வர்யா ராய் (பாரிஸிலுமா?) ஆளுயர கட் அவுட்டில் வைர நகைக்கு அழகு சேர்த்துக்கொண்டிருந்தாள். ரிக் ராக் கிட்ஸ் பெர்ப்யூம் முப்பது யூரோவுக்கு வாங்கினான். இந்த முறை யூரோ ரூபாய் கணக்கு பார்க்கவில்லை.

லூவ்ரு மியூசியத்தை கைடு இல்லாமல் சுற்றிப் பார்த்து இருபது யூரோ மிச்சப்படுத்தினான். எகிப்து நாட்டின் சிலைகள், ஓவியங்கள், சவப்பெட்டிகள், மம்மி,
கண்ணாடியிலான பிரமிட் இத்தனையும் பார்க்க ஒரு நாள் போதாது. ஒரிஜினல் மோனாலிசாவின் எட்டிப்பார்த்து மறையும் மந்திரப்புன்னகையை பார்த்தான். புன்னகையை ஆராய்ந்து சிலர் நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.போதும் என்று வெளியே வந்து சில்லென்ற காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொண்டு நடந்தான். ஸ்வீட் பாப் கார்ன் கொரித்தான். ஓரு போட்டோ எடுக்கும்படி கேட்ட ப்ரென்ச்சுக்காரரனிடம் ஐபில் டவர் போக வழி கேட்டான். மெட்ரோ ரயிலில் பாலஸ் டீ ஷைலாட்டில் இறங்கி‏ வெளியே வந்தால் ட்ரொகடரோ. அங்கிருந்து ஐபில் டவாரின் வியூ நன்றாக இருக்கும் என்று பேப்பர் எடுத்து வழியை வரைந்து கொடுத்தான் அவன். இந்த காரியம் பண்ணியிருக்க வேண்டாமென்று அப்புறம் தான் நாதனுக்கு தொரிந்தது.

மறுபடியும் பாதாளம், மெட்ரோ.ஒரு வித்தியாசம். பீக் அவர் என்பதால் மும்பை ரயிலைப்போல் கூட்டம் ஜமாய்த்தது. கூட்டத்தை பார்க்க தெம்பாக இருந்தது. ஆள் நடமாட்டமே இல்லாத மயானம் போலிருந்த ஜெர்மனியில் இரண்டு வாரம் தள்ளியதில், மதுரை பஸ் ஸ்டாண்டு கூட்டத்தில் திமிறிக்கொண்டு நடக்க வேண்டும் என்று ஆசை வந்தது. கைப்பிடியை பிடிக்கும்போது அது நடந்தது. நாதனை இடித்துக்கொண்டு கதவு மூடுவதற்குள் வெளியே பாய்ந்தான் ஒரு பொடியன். விழாமல் சுதாரித்துக்கொண்டு நின்றபோதுதான் நாதன் அதை உணர்ந்தான். இடுப்பில் கட்டியிருந்த பவுச் காணாமல் போயிருந்தது. பகீரென்றது. பாஸ்போர்ட், விசா, ஏர் டிக்கட், முன்னூறு யூரோ

இத்தனையும் அபேஸ் பண்ணியிருந்தான் அந்த பொடியன். ஒருத்தரும் நடந்ததை கவனித்ததாகத் தொரியவில்லை. வண்டி கிளம்பிவிட்டது. யூரோ போனது பொரிசில்லை. ஒரிஜினல் பாஸ்போர்ட்டுக்கும் வீசாவுக்கும் எங்கே போவது? ஏர்போர்ட்டுக்குள் ஏத்த மாட்டான். ஜெராக்ஸ் காபி பெட்டியில் இருந்தது. யாரிடம் கேட்பது?

ப்ரான்ஸை வெறுத்தான். எல்லாம் புறத்தழகு. முச்சந்தியிலே முத்தம் கொடுக்கும் வெவஸ்தையில்லாதவர்கள்.வழிப்பறித்திருடர்கள்….

அங்கேயும் இங்கேயும் விசாரித்து இந்தியன் எம்பஸிக்கு வந்து சேர்ந்தான். உள்ளே செல்ல அவசியம் ஏற்படவில்லை.

“ ஹை ” காலையில் ரயிலில் பார்த்த ஏட்ரியன்.

” நீ இங்கே தான் வந்திருப்பாய் என்று தொரியும் ” என்றான் ஏட்ரியன்.

நாதன் அவனை புதிராகப் பார்த்தான்.

” எங்களுக்கு உன் பாஸ்போர்ட் தேவையில்லை. உனக்கு அழகான குழந்தை இருக்கிறாள். அவளுக்கு என் அன்பளிப்பு.கேட்ச் இட். “என்று பின்னோக்கி நடந்தபடியே பவுச்சை நாதன் மீது விட்டெறிந்தான்.ஓடிப்போனான்.

நாதனுக்கு ஏட்ரியனின் நெட்வர்க் பற்றி புரிய கொஞ்ச நேரம் பிடித்தது. பவுச்சை திறந்தான். பாவனா சிரித்துக்கொண்டிருந்தாள்.பாஸ்போர்ட்டில் நாதன் முறைத்துக்கொண்டிருந்தான். முன்னூறு யூரோவைத்தவிர எல்லாம் பத்திரமாய் இருந்தது. ஐபில் டவர் பார்க்க வேண்டியதுதான் பாக்கி என்று நினைத்தான்.

முன்னூறு மீட்டர் ஐபில் டவரை அண்ணாந்து பார்த்தான். பத்தாயிரம் டன் எடை கொண்ட அந்த இரும்பு ராட்சதனுக்கு இருபத்தைந்து லட்சம் ரிவெட் அடித்திருந்தார்கள். இரவில் ஐபில் டவாரின் மங்கலான வெளிச்சம் காதலர்களுக்கு போர்வை போர்த்திவிட்டிருந்தது. ப்ரென்ச்சுப் புரட்சியின் நூறாவது ஆண்டு நினைவுச்சின்னம் காதலர்களின் கோவிலாக மாறி ரொம்ப காலமாகியிருந்தது.

மேல் தளத்துக்கு டிக்கட் எடுத்துக்கொண்டு ஐபில் டவாரின் காலடியில் லிப்டுக்கு வாரிசையில் காத்திருந்தான். எந்த பக்கம் திரும்பினாலும் காதலர்கள், முத்தங்கள், தடவல்கள்…

ஒரு குஜராத்தி ஹனிமூன் ஜோடி சேட்டை பண்ணாமல் சமர்த்தாக நின்று கொண்டிருந்தார்கள். எட்டு மணிக்கு திடீரென்று வைரம் போல வெளிச்சம் ஐபில் டவர் முழுவதும் சீரியல் லைட்டாக ஓட்டம் பிடிக்க,மொத்த கூட்டமும் ஆரவாரம் செய்தது. டவாரின் உச்சியிலிருந்து வேடிக்கை பார்க்க ஆவலாயிருந்தான். ராதாவையும் பாவனாவையும் ஒரு தரவை இங்கு அழைத்து வர விரும்பினான். முதல் தளத்தில் கடைகள். ரெண்டாவது தளத்தில் சாமானியர்கள் காபி சாப்பிட முடியாத ஜூல்ஸ் வெர்னே ரெஸ்டரன்ட்டில் கூட்டம் அப்பியது. மேல் தளத்தில் பார், டவரைக் கட்டிய ஐபிலின் ஆபீஸ். மெழுகு பொம்மைகளாக ஐபிலும் தாமஸ் எடிசனும் பேசிக்கொண்டிருந்தது நிஜம் போலிருந்தது.

டவாரின் மேல் தளத்தில் குளிரில் வெள்ளைக்காரர்களும் நடுங்கிக்கொண்டிருந்ததை பார்க்க சற்று ஆறுதலாக இருந்தது. காற்றும் சேர்ந்து வீசியதால் வெடவெடத்தது. லெதர் ஜாக்கட் போதவில்லை. உள்ளங்கை விரைத்தது. இப்போது அந்த குஜராத்தி ஜோடி வெட்கத்தை இழந்து இருந்தார்கள்.

கீழே பாரிஸ் நகரம் ஜொலித்தது. பாரிஸ் மக்கள் நன்மக்களாய் பட்டார்கள். ஏட்ரியன் இந்த ஜொலிப்பில் எங்காவது ஒளிந்திருப்பான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *