உக்ரைன் தேசத்தின் மீது ராணுவத்தை ஏவிவிட்டு ஆக்கிரமிக்கும் ரஷ்யாவின் அடாவடித்தனம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. போரின் உக்கிரத்தால் அப்பாவிப் பொது மக்கள் பலியாவதும் அதிகரிக்கின்றது.
மண்டபத்திற்கு வெளியே யாரோ யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தது தெளிவாகக் காதில் விழுந்தது.
இடம் மனிட்டோபா மாகாணத்தின் பிரதான பட்டினம் வின்னிபெக்.
முன் வரிசை – பிரமுகர்களுக்காகவும் பிரதானிகளுக்காகவும் ஒதுக்கப் பட்டிருந்தது. அதனை கமராக்காரரோ வீடியோகாரரோ ஆக்கிரமிக்காதது ஆச்சரியமளித்தது.
மேடையில் குத்துவிளக்கு காணப்படவில்லை.
அதனால், ஒருவர் ஏற்றுவதுதான் விளக்குக்கும் கௌரவம் – ஏற்றுபவருக்கும் கௌரவம் என்ற நியதி மீறப்படும் கிலேசம் தோன்றவுமில்லை.
எண்ணெய் விளக்கின் மகிமை அறியாது பட்டரி விளக்கை ஏற்றும் மடமைக்கும் இடமிருக்கவில்லை.
கூட்டம் ஆரம்பமாகியது. அமைப்பாளர் வந்தவர்களை வரவேற்றார். நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி கோடிட்டார். பிரதம விருந்தினரைப் பற்றி நாலு வார்த்தை சொன்னார். தலைமை தாங்குபவரை அழைத்தார்.
அட! எங்களது கூட்டம் எனின் எத்தனை விசித்திரங்கள் நிறைந்தது.
இறந்தவர்களை எழுப்ப வேண்டிய அக வணக்கம், இருந்தவர்களை எழுப்பும்.
எழுந்தவர்களின் கவனமும் அவரவர் மணிக்கூடுகளில் நிலைக்கும்.
நின்ற நிலையிலேயே மொழிப் பற்றையும் நாட்டுப்பற்றையும் வலிந்து திணிக்கும் அந்த மேடை, சில வேளைகளில் மொழியை மொலியாக்கி உயிரை மாய்க்கும்.
காலத்தின் தேவையாக கருதப்பட்டு இடையில் புகுந்து கொண்ட இச் சம்பிரதாயத்தை கைவிடுதல் நல்லது என்ற எண்ணம் எல்லோரிட மிருந்தும், அதனை கண்டிக்கப் பலர் உளர். தண்டிக்கவும் சிலர் உளர். ஆனால் துண்டிக்க யார் உளர்?
எல்லோர் இதயத்திலும் இறைவன் எழுக என்றார் தலைமைதாங்குபவர்.
இங்குள்ள கனடியர்கள் உக்ரைன் பற்றியும், இங்குள்ள உக்ரேனியர்கள் கனடா பற்றியும், உரையாற்றும் வகையில் நிகழ்ச்சி நிரல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றவாறே உக்ரேனியர் ஒருவரை முதலாவதாக அழைத்தார்.
மனிட்டோபா என்றால் கனடாவின் இருதயம் என்பார்கள். வாழ்வின் ஆதார சக்தி என்று பொருள். வேளான் பிரதேசம். ஒரு லட்சம் ஏரிகள். பெரும்பாலும் சமதரை.
மனிட்டோபாவின் ஒரு தொங்கலிலிருந்து மறு தொங்கல் வரை ரயிலில் பயணித்தவர்களுக்கு இயற்கையின் ரம்மியம் கண்ணுக்குள் நிற்கும்! வழி நெடுக இரு மருங்கும் 150 கி.மீ தூரத்திற்கு சூரிய காந்திப்பூக்கள் ஒரு ஸீசனில் காட்சி தரும். இன்னொரு ஸீசனில் கோதுமை அறுவடைக்காக காத்திருக்கும். பிறிதொன்றில் சோளம் பாளை தள்ளியிருக்கும். நத்தார் மரங்களாகி மெருகூட்ட பைன் மரங்கள் நிரந்தரமாகத் தவமிருக்கும். இடைக்கிடை காணாமல் போன மரங்கள் தீக்குச்சிகளாக நினைவில் மாறியிருக்கும்.
மனிட்டோபாவின் வட எல்லையில் உள்ளது ஹாஸ்டன் குடா. அதன் நுனியில் உள்ளது சேர்ச்சில் நகரம். அங்கிருந்து துருவக் கரடிகளை, திமிங்கலங்களை, மற்றும் வானில் வர்ணம் தீட்டும் வட துருவ ஒளியை பார்க்கவென்றே அக்டோபர், நவம்பர் மாதங்களில் சனம் கூடுதலாக கூடும். – அது பாரம்பரியம்.
துருவக் கரடிகளால் மணித்தியாலத்திக்கு 10 கி.மீ வேகத்தில் நீரில் நீந்தவும், 40.கி.மீ வேகத்தில் தரையில் ஒடவும் முடியும். 16 கி.மீ தொலைவில் உள்ள தமது உணவை மோப்ப சக்தியினால் கண்டறியும் ஆற்றல் கொண்ட துருவக்கரடிகள், கறுப்பாக இருக்கும் தமது மூக்கை அடையாளம் கண்டு, தமது இரை தப்பிவிடாதிருக்க உணவை வேட்டையாடும் வேளைகளில் தமது மூக்கை உள்ளங்கையால் மறைத்துக் கொள்ளும் வழக்கம் உடையவை. துருவக் கரடிகளின் தலை நகரம் மனிட்டோபா.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பெருவாரியான பாம்புகளை பார்ப்பதற்காகவே மக்கள் படை படையாக வரும் நர்ஸிஸ் பாம்பு குகைகள் மேற்கு மனிட்டோபா மாகாணத்தில் உள்ள ஆம்ஸ்ரோங் மாநகரில் உண்டு. ஆகக் குறைந்தது ஒரு லட்சத்து ஐம்தாயிரம், என்பது பாம்புகளின் எண்ணிக்கை மட்டுமல்ல ஏப்ரல், மே மாதங்களில் அங்கு சந்தோஷ மிகுதியில் நெளியும் பார்வையாளரது ஒட்டுமொத்த எண்ணிக்கையும் அஃதே!
மனிட்டோபாவில் ஏராளமான அருங்காட்சியகங்கள், கலையரங்கங்கள், தேசீய பூங்காக்கள், மாகாண பூங்காக்கள், கண் கவரும் மண் திட்டுகள் உண்டு.
பனிச்சறுக்கல், நாய்கள் கட்டி இழுக்கும் பனி வண்டி சவாரி, காற்றில் மிதத்தல் போன்றன பிரசித்தம்.
வின்னிபெக்கிலும், ஓட்டவாவிலும் உள்ள அரச கனடிய நாணயசாலை களில் கனடிய நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன.
வின்னிபெக்கில் உள்ள நாணயசாலை மிகவும் பெரியதும், அதிக தொழில் நுட்ப வசதி உடையதும் ஆகும்.
கனடாவின் பாவனைக்குரிய அனைத்து நாணயங்களும் இங்குதான் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாற்பதுக்கும் மேற்பட்ட இயந்திரங்கள் மூலம் தினமும் இருபது மில்லியன் நாணயங்கள் உருவாக்கும் வசதி உள்ளது.
கடந்த 25 வருடங்களில் சுமார் 70 நாடுகளின் நாணயங்கள் இங்கு உருவாகியுள்ளன.
காவல் துறை, மருத்துவ ஊர்தி, தீயணைப்பு படை போன்றவற்றை அவசரத்துக்கு அழைக்கும் மரபை ஆரம்பித்து வைத்த பாரம்பரியம் வின்னிபெக்கிற்கு உண்டு.
கடந்த 85 வருடங்களாக தொடர்ந்து இங்குள்ள கலையரங்கில் நடைபெறும் ‘பலே நடனம்’ உலக சாதனையும் புகழும் பெற்றது.
எழுந்து நின்று கரவொலி செய்த அரங்கின் ஆர்ப்பரிப்பு அடங்கவே சில நிமிடங்கள் தேவையாயிற்று.
நன்றி கூறி அவர் விடை பெற, அடுத்ததாக கனடியர் ஒருவரை உக்ரைன் பற்றி உரையாற்றுமாறு அழைத்தார் தலைமைதாங்குபவர்.
உக்ரைனை பூர்வீகமாக உள்ள 1.4 மில்லியன் மக்கள் கனடாவில் வாழ்கின்றார்கள்.
பொருளாதாரப் பாதிப்பு, அரசியல் நெருக்கடி, மதவெறி மூர்க்கம், முதலாம் இரண்டாம் உலக மகா யுத்தங்கள், உள்ளிட்ட அனைத்து போர்களும் ஏற்படுத்திய பேரிழப்பு, போன்றன பலவந்தமாகவோ அல்லது நிர்ப்பந்தமாகவோ கனடாவை அவர்களது புகலிடமாக்கியது.
மனிட்டோபாவில் அதிக அளவிலும் சஸ்காட்சுவன், அல்பேட்டா, பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்டாரியோ மாகாணங்களில் கணிசமான அளவிலும் உக்ரைன் மக்கள் உளர்.
ஐரோப்பிய நாடுகள் பல ஒன்றுசேர்ந்து தமக்கான பாதுகாப்பை வலுப்படுத்தவும் பிறிதொரு போர் ஏற்படாது தடுக்கவும் உருவாக்கியதே நேட்டோ ராணுவ கட்டமைப்பு.
ஆனால் நேட்டோ அமெரிக்காவுடன் இணைந்து பல நாடுகளில் போர் புரிவது எவருமே தட்டிக் கேட்க முனையாத கதை.
2021 ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தனது எல்லையில் குவிக்கப்படும் நேட்டோ படைகள் எந்த நேரத்திலும் தம்மைத் தாக்கலாம் என ரஷ்யாவும், ஐரோப்பாவின் எல்லையில் உள்ள ரஷ்ய நிலப்பரப்பு முழுவதும் பெருமளவில் நிலைகொண்டுள்ள ரஷ்ய படைகள் தம்மை சிதைக்கலாம் என ஐரோப்பாவும் மாறிமாறி குற்றம் சுமத்தின.
வட அத்லாந்திக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு உடன்பட்டது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு பாதகமாகும் என்ற பயத்தின் அடிப்படையிலேயே ரஷ்யா 2022.02.24 ல் படையெடுத்து பாரிய சேதத்தை உக்ரைனில் விளைவித்தது.
ரஷ்யா முதலில் முற்றுகையிட்டது கருங்கடல் பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை.
ரஷ்யாவிலிருந்து பிரிந்த உக்ரைன் தனி நாடாகி 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் உக்ரைன் நாடு ரஷ்யாவின் ஒரு பகுதி என்ற எண்ணம் ரஷ்யர்களைவிட்டு முற்றாக அகலாததுதான் பிரச்சனை.
உக்ரைன் சுயாதீனமுள்ள நாடு. தனது எதிர்காலத்தை தானே தீர்மானிக்கும் உரிமை உள்ள நாடு. நேட்டோவில் இணையும் உரிமையை ரஷ்யா தடுக்க முடியாது.
சபையின் கை தட்டுதல் ஓய முன் தண்ணீர் பருகி புத்துணர்வு ஊட்டிக் கொண்டார் பேச்சாளர்.
“மேடையில் பேசிக்கொண்டிருப்பவர் சபையோரைப் பார்த்து, எங்கே ஒரு தரம் கரகோஷம் செய்யுங்கள் என்பார் எனின், அங்கே அவர் தோற்றுப் போனார் என்று அர்த்தம். கருத்தால் கவரப்பட்டிருப்பின் சனம்
இயல்பாகவே கை தட்டும். ஆரவாரிக்கும்.” என்றார் சபையிலிருந்த ஒருவர் பக்கமிருந்தவரிடம்.
“எழுந்து நின்று கை தட்டுங்கள் என்பார்கள் சிலர். இன்னும் சிலர் இறுதி மரியாதை மண்டபங்களிலும் எழுந்து நிற்க சொல்வார்கள். கேவலம். பேசுபவரின் நாட்டாண்மைக்காக சபையோரின் சுய மரியாதையை சீண்டிப்பார்ப்பது தொடருமெனின் பலர் எழுந்து வெளியே சென்று விடும் காலமும் விரைந்து வரும்.” என்றார் பதிலுக்கு அங்கிருந்தவர்.
தொடர்ந்து தனது உரையை ஆரம்பித்த பேச்சாளர் இன்று வரை நீடிக்கும் இந்த யுத்தம் இன்றே முடிவுற வேண்டும் என்பதே எல்லோரினதும் விருப்பம்.
2022 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் யூலை மாதத்திற்கும் இடையே கிடைத்த 782 272 விண்ணப்பங்களுள் அகதிகளாக அல்ல தற்காலிக குடியேற்றவாசிகளாக 164 626 பேரை ஏற்றுக் கொண்டது கனடா என்பது உங்களுக்குத் தெரியும்.
இவர்களுள் பெருந் தொகையினர் மனிட்டோபாவில் குடியமர்த்தப் பெற்றனர் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்றார்.
பின்னர் நன்கு மூச்சை உள்வாங்கிக் கொண்டவாறே கொத்துக் கொத்தாக மக்களை கொன்றொழிக்கும் கொத்துக் குண்டுகளை கொடூர வார்த்தைகளில் கொட்டித் தீர்க்க ஆரம்பித்தார்.
அவரது உரையை இடைமறித்த தலைமை தாங்குபவர் “மண்டபத்தில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த அநாமதேய தகவலால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உடனடியாக அனைவரையும் வெளியேறுமாறு காவற்துறை கோருகின்றது. அதற்காக அவசரகால கதவுகள் அனைத்தும் அவசரமாகத் திறக்கப்பட்டுள்ளன” என்று கூறி முடிப்பதற்குள்ளாகவே பவுத்திரமாக வெளியேறவதற்கு முண்டியடிக்க ஆரம்பித்திருந்தார்கள் பார்வையாளர்கள்.
சுப்பர்ஸானிக் வேகத்தில், அதாவது ஒலியின் வேகத்தில் மக்கள் வெளியேறினர். ஹைபர்ஸானிக் வேகத்தில், அதாவது ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் வெடிகுண்டு அகற்றும் படையினர் நுழைந்தனர்
என்று உடனடியாகவே செய்தி வெளியிடும் சமூக வலைத்தளங்களின் புதிய பாரம்பரியம் நினைப்பில் வந்து அந்தப் பதகளிப்பிலும் சிக்கனமாக சிரிக்க வைத்தது.
– இக்கதை அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சில் (13.11.2024) வெளியாகியது.