பாரத நாடு பழம்பெரும் நாடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 4,947 
 
 

கிருஷ்ணன் அன்று மிகவும் உற்சாகத்தில் இருந்தார். அரசாங்க நிறுவனத்தைச் சார்ந்த எஃகு உற்பத்திச் சாலையின் விற்பனைப் பகுதித் தலைவராக இருந்த அவருக்கு அரைமணி முன்புதான் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்தது. ஓர் அயல்நாடு தங்கள் ரயில்வே நிறுவனத்துக்காக எஃகு வேண்டி சர்வதேச டெண்டர் கோரியிருந்தது. பாரத அரசாங்கமும் அதற்கு மனு அனுப்பியபோது, கிருஷ்ணனின் யோசனையின் பேரில் கிலோ பதினாறு ரூபாய் என்ற விலையைக் குறிப்பிட்டிருந்தது. மேற்கு ஜெர்மனி பதினெட்டு ரூபாய், ஜப்பான் பதினேழு ரூபாய் …. இவ்வாறு உலகத்தில் பல நாடுகள் பாரத தேசத்தைக் காட்டிலும் அதிகவிலை கேட்டிருந்த படியால், டெண்டர் இந்தியாவுக்குக் கிடைத்தது. இந்தச் செய்திதான் கிருஷ்ணனை அன்று அளவு கடந்த உவகையில் ஆழ்த்தியிருந்தது.

கிருஷ்ணன் சந்தோஷமாக இருக்கிறாரென்றால் அது அந்த அலுவலகத்துக்கு ஒரு செய்தி! இடையறா உழைப்பு, நேர்மை ஆகியவற்றை அவர் ஒரு சமய வழிபாட்டுடன் பின் பற்றியது தான் அவர் அலுவலகத்திலிருந்த மற்றவர்களுக்கு எரிச்சலைத் தந்தது.

இந்தியாவுக்கு டெண்டர் கிடைத்திருக்கிறது என்பது ஓர் இரகசியமான செய்தி. இது வெளியே தெரிந்து விட்டால் இந்த ‘ஆர்டரை’ச்செயலாக்குவதில் பல சிரமங்கள் ஏற்படக்கூடும். ஆகவே தம்முடைய சந்தோஷத்துக்கான காரணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் கிருஷ்ணன் ஓரளவு நிலைகொள்ளாமல் தவித்தார். -அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரியிடம் அவர் இதைப் பற்றி விவாதிக்கும்போது சொன்னார்; “இவ்வளவு பெரிய ஆர்டர் நமக்கு முதல் முதலாகக் கிடைத்திருக்கிறது. அரசாங்க நிறுவனங்களைக் குறை கூறுபவர்கள் பொறாமை கொள்ளும்படியான முறையில் நாம் இதை நிறைவேற்ற வேண்டும் …… பூர்வாங்க வேலைகள் முடிந்த பிறகு, நம் அலுவலகத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு இது தெரிந்தால் நல்லது என்று நினைக்கிறேன்.”

“நீங்கள் சொல்வது சரிதான். இது பற்றி மிகுந்த உயர்ந்த மட்டத்திலிருப்பவர்களுக்குத் தான் தெரியும். சொல்லப்போனால், இச்செய்தி அம்பலமாகி விட்டது என்றாலே அது சட்ட விரோதம். நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்றார் தலைமை அதிகாரி.

கிருஷ்ணன் தம் அறைக்குத் திரும்பிய போது அவருடைய அந்தரங்கச் செயலாளர்’ இன்டர்காம்’ மூலம் அவருக்குத் தெரிவித்தார் …. “உங்களை ஒருவர் பார்க்க விரும்புகிறார் …”

“யார் அவர்?”

“மிஸ்டர் அத்வானி. ஒரு முக்கிய விஷயம் பற்றி உங்களுடன் பேச வேண்டுமாம்”.

“வரச்சொல்லுங்கள்.”

அத்வானிக்கு முப்பத்தைந்து வயதிருக்கும். நெடிய உருவம். சுலபமான புன்னகை.

“உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் அத்வானி.

“தப்பாக ஒன்றுமில்லையே?”

“சர்வதேச டெண்டர் போட்டியில் நீங்கள் வெற்றி அடைந்திருக்கிறீர்கள் என்பது உங்களைப் பார்த்த பிறகு அது ஆச்சரியப்படத்தக்க விஷயமல்ல என்று எனக்குப் புரிகிறது” என்றான் அத்வானி.

கிருஷ்ணனுக்கு மாரடைப்பு வரும் போலிருந்தது. இவனுக்கு எப்படி தெரியும், இவ்வளவு ரகசியமான விஷயம்?

“டெண்டர் போட்டியில் வெற்றியா? என்ன சொல்கிறீர்கள்?” என்று கிருஷ்ணன் மிக இயல்பாக இருக்க முயன்று ஒரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு, பாக்கெட்டை அத்வானியிடம் நீட்டினார்.

அத்வானி அவரிடமிருந்து சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டு அந்த அயல் நாட்டின் பேரைச் சொன்னான்.

கிருஷ்ணன் சிறிது நேரம் பேசாமலிருந்தார்.

இவன் யார்? எதற்காக வந்திருக்கிறான்? – இரகசியம் அம்பல்மாகி விட்டது என்று தம்மை ‘பிளாக் மெயில்’ செய்யவா? இத்தனை கண்டிப்பாகத் தாம் இருந்து என்ன பயன்? செய்திகள் எப்படிப் பரவுகின்றன? தம் செக்ஷனில் யாரும் சொல்லியிருக்க முடியாது. அவர்களுக்கே தெரியாது…

“உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று ஆரம்பத்தில் சொன்னேனே, மிஸ்டர் கிருஷ்ணன், அது மிகவும் வாஸ்தவமான விஷயம் …… நீங்கள் மிகவும் நேர்மையானவர். நியாயத்தின் கோட்டைதாண்டாதவர் … எக்ஸெட்ரா … எக்ஸெட்ரா …. ஓ. கே. எனக்கு இப்பொழுது தெரியும், நம் நாட்டுக்கு டெண்டர் கிடைத்திருக்கிறது என்று. இந்தத் தகவல் எனக்கு உங்கள் மூலம் தான் கிடைத்தது என்று நான் அரசாங்கத்திடம் சுலபமாகச் சொல்லலாம். ஆனால் நான் அப்படிச் சொல்லாமல் இருப்பதற்கு விலை இருக்கிறது … இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

கிருஷ்ணனுக்கு அசாத்தியக் கோபம் ஏற்பட்டது. தாம் நினைத்தது சரிதான். பிளாக் மெயிலர்! இவ்வளவு கவனத்துடன் இருந்தும் எப்படி இத்தவறு நிகழ்ந்தது? இச்செய்தியை அவன் பயன்படுத்திக் கொண்டானானால் தமக்கு எவ்வளவு அவமானம்! இவன் சொல்வது பொய் என்று எப்படி நிரூபிப்பது?- யார் மூலம் இவனுக்கு இச்செய்தி எட்டியிருக்கும்? இதைப்பற்றி தமக்கும் தலைமை அதிகாரிக்கும் தான் தெரியும். ஒருவேளை… யாரைப் பற்றி இக்காலத்தில் என்ன சொல்ல முடியும்? … தாம் பலி ஆகிவிட்டால்…?

சீ … தம்மைப் பொறுத்தவரையிலும் எந்தத் தவறும் செய்யவில்லை. எதற்குக் கோழைத் தனமாக இவன் மிரட்டலுக்கு அடிபணிவதைப் பற்றி யோசிக்க வேண்டும்? இவனால் என்ன செய்ய முடியும்? செய்தியை அம்பலப் படுத்துவான். சர்க்கார் விசாரணை நடத்தப் போகிறார்கள். யார் மீது குற்றம் என்று அப்பொழுது தெரிந்து விடுகிறது! … தமக்கு மனச்சாட்சிச் தொந்தரவு ஏதுமில்லை . அப்படியிருக்கும்போது மற்றவற்றைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

“என்ன யோசிக்கிறீர்கள் மிஸ்டர் கிருஷ்ணன்?” என்றான் அத்வானி புன்சிரிப்புடன்.

“உங்களை இப்போது போலீஸில் ஒப்படைத்தால் அது சமூக நலனா அல்லது அரசாங்கச் சேவையா என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“சமூக நலனாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அரசாங்க சேவையாக இருக்க முடியாது” என்றான் அத்வானி. சாம்பலை ஆஷ்-ட்ரேயில் தட்டிக் கொண்டே மிகுந்த கேலியுடன் அவன் அதைச் சொன்னான்.

“ஏன்?”

“போலீஸில் என்னை ஒப்படைத்தால் வெளிவரக்கூடிய பல உண்மைகளை உங்களுடைய மேலதிகாரிகள் ரஸிக்க மாட்டார்கள். பாவம், கடைசியில் பழி உங்கள் மீதுதான் விழும் … உங்களுக்கு எத்தனை குழந்தைகள், மிஸ்டர் கிருஷ்ணன்?”

தாம் நினைத்தது சரியாகப் போய்விட்டது. பெரும் புள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவன் அவர்களிடம் போகாமல் தம்மை நாடிவருவதற்குக் காரணம் என்ன? இவன் பிளாக் மெயிலராக இருந்தால் அவர்களிடம் இன்னும் பெரிய தொகையை எதிர்பாக்கலாமே!

“இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டும், மிஸ்டர் அத்வானி?” என்றார் கிருஷ்ணன்.

“குட்… இது புத்திசாலித்தனம். கேளுங்கள் சொல்லுகிறேன் ….”

“எனக்கு வேலை இருக்கிறது … சொல்வதைச் சீக்கிரம் சொல்லுங்கள்” என்றார் கிருஷ்ணன் பொறுமையை இழந்தவராய்.

“ஓ. கே … விஷயத்துக்கு வருகிறேன். உங்களுடைய பதினாறு ரூபாய் விலையைத்தானே அந்த அந்நிய அரசாங்கம் மிகக் குறைவான டெண்டர் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறது?”

“நாங்கள் கொடுத்துள்ள டெண்டரின் பிரதி உங்களிடம் இருப்பதுபோல் பேசுகிறீர்களே!”‘

அத்வானி மறுபடியும் சிரித்தான். “அதைப்பற்றி கவலைப் படாதீர்கள். எனக்கு எல்லாம் தெரியும். நான் யார்’ எந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன் என்று இன்னும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை, இல்லையா?” அவன் கைப்பையைத் திறந்து ஒரு கார்டை அவரிடம் நீட்டினான்.

பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த தனியார்த் துறையைச் சார்ந்த ஓர் ஏஜன்ஸி நிறுவனம். கிருஷ்ணனுக்கு தூக்கி வாரிப்போட்டது. இவர்களுக்கு இந்த ஒப்பந்தத்தைப் பற்றி ஏன் இவ்வளவு அக்கறை?

“நான் ஒரு தனி ஆள் இல்லை என்று இப்பொழுது உங்களுக்கு விளங்கியிருக்குமென்று நம்புகிறேன். நம் அரசாங்கத்துக்கு டெண்டர் கிடைத்திருக்கிறது என்ற செய்தியை அறிய நாங்கள் எத்தனை செலவழித்திருக்கிறோம் என்பது அந்தக் கடவுளுக்கும் ஸ்விஸ் பாங்குகளுக்கும்தான் தெரியும் .. எங்களுக்கு இதைப்பற்றி ஏன் இவ்வளவு கவலை? இது ஒரு மிகவும் சுவாரசியமான கேள்வி.”

அத்வானி சிகரெட் புகையை மறுபடியும் நெஞ்சுக்குள் இறக்கிக் கொண்டே, அதை மௌனமாக ரசித்தவாறு இருந்தான். கிருஷ்ணன் என்ன செய்வதென்று புரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

“‘ஆமாம் …. வெளிப்படையாகச் சொல்லுகிறேன். உங்களிட மிருந்து இந்த எஃகைப் பதினாறு ரூபாய்க்கு வாங்கி நாங்கள் அதைப் பதினைந்து ரூபாய்க்கு அந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம் … நீங்கள் டெண்டரில் கோரியிருப்பதும் அதே விலைதான். உங்களுக்கு நஷ்டமில்லை. எங்களுக்கு ஏற்படக்கூடிய இந்த ஒரு ரூபாய் நஷ்டத்தைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்த யோசனையை ஆதரித்து நீங்கள் ஒரு குறிப்பு அனுப்பினால் போதும்…”

‘உங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா? எங்களிடமிருந்து வாங்கி நீங்கள் அனுப்புவானேன். அதுவும் ஒரு ரூபாய் நஷ்டத்துக்கு? இதனால் ஏற்படக்கூடிய மொத்த நஷ்டம் லட்சக்கணக்கில் இருக்குமே! நீங்கள் சொல்வது ஒன்றும் புரியவில்லை” என்றார் கிருஷ்ணன்.

“தனியார் துறை நஷ்டம் அடைந்தால் அது சோஷலிஸத்துக்கு வெற்றிதானே? நீங்கள் ஏன் அதைப்பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? நான் வேண்டுவதெல்லாம் நீங்கள் நான் சொன்னபடி ஒரு குறிப்பு அனுப்ப வேண்டும். அவ்வளவு தான்” என்றான் அத்வானி சிரித்துக் கொண்டே.

“வேண்டுமென்றே நஷ்டத்தை வரவேற்கக்கூடிய அளவுக்கு நீங்கள் முட்டாள் இல்லை என்று எனக்குத் தெரியும்… சந்தேகத்துக்கு இடமான எந்தவித நடவடிக்கையையும் நான் மேற்கொள்ள மாட்டேன். இந்த டெண்டரை மிகச்சிரமப்பட்டு நாங்கள் பெற்று உங்கள் மூலம் ஏற்றுமதி செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்கள் போகலாம்.”

அத்வானி புன்னகை செய்தான். சிறிது நேரம் பேசாமலிருந் தான். பிறகு இலேசாகக் கனைத்துக் கொண்டு சொன்னான்: “மிஸ்டர் கிருஷ்ணன்! உங்கள் நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் இதே நேர்மை உணர்வுக்காக பின்னால் நீங்கள் வருந்தக்கூடாதே என்பதுதான் என் அக்கறை. எங்கள் நிறுவனம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது உங்களுக்குத் தெரியாத விஷயமல்ல. உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று நான் அப்பொழுது கேட்ட போது நீங்கள் பதில் சொல்லவில்லை. பாங்கி விளம்பரங்கள் பார்த்திருக் கிறீர்களா, மிஸ்டர் கிருஷ்ணன்? ‘உங்கள் குழந்தைகளின் எதிர் காலத்தைப்பற்றி நீங்கள் எண்ணுவது உண்டா? ‘ நானும் அந்தப் பாங்கி விளம்பரத்தைப் போல் உங்களைக் கேட்க விரும்புகிறேன். நான் சொல்கிறபடி குறிப்பு அனுப்புங்கள். உங்களை என்னால் ஒரு பொறுப்புள்ள தந்தையாக மதிக்க முடியும் … நேர்மை, நாணயம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தீர்களானால் உங்கள் குழந்தைகள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். உங்கள் உதவி இல்லாமலேயே இந்தக் காரியத்தை எங்களால் சாதித்துக் கொள்ள முடியுமென்பதையும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். என் அளவில் நான் உங்களிடம் வந்தது போல என் நிறுவனத்தைச் சார்ந்த என்னை விடப் பெரியவர்கள் உங்களைவிடப் பெரியவர்களை அணுகு வார்கள். சுதந்திரம் பெற்ற ஆறுமாதங்களுக்குள்ளேயே செத்துவிட்ட சத்தியத்தைப் பற்றிக்கொண்டு நீங்கள் இன்னமும் ஏன் அழ வேண்டும், மிஸ்டர் கிருஷ்ணன்?”

அவன் பேசப் பேச கிருஷ்ணனுக்கு உடம்பெல்லாம் பற்றி எரிவது போலிருந்தது. ‘நீ இவ்வாறு செய்யப்போகிறாயா இல்லைய?’ என்று அவன் மிரட்டியிருந்தால்கூட அவருக்கு இவ்வளவு எரிச்சல் ஏற்பட்டிருக்காது. ஆனால் கசப்பான உண்மை களைச் சொல்லித் தம்மீது அநுதாபம் கொண்ட முறையில் அநியாயத்துக்கு உடன்படச்சொல்லுகிறான். 1948ல் நம் கண்ணீரோடு கலந்து மறைந்து போன வாய்மை தத்துவத்தையும் நினைவு படுத்துகிறான். ‘உன் குரலுக்கு யாரும் செவி சாய்க்கா விட்டாலும் நீ தனியே நட, தனியே நட’ – தாகூர் காந்திஜியைப் பற்றிப் பாடியது அவர் நினைவுக்கு வந்தது.

“என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் அத்வானி.

“நீங்கள் சொல்கிறபடி நான் குறிப்பு அனுப்பத் தயாராக இல்லை. நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்” என்றார் கிருஷ்ணன்.

அத்வானி எழுந்தான். அவன் புன்னகை செய்து கொண்டே சொன்னான்: “உங்களை நான் வற்புறுத்த விரும்பவில்லை. ஒன்றை யொன்று அடித்துத் தின்னும் கொடிய மிருகங்கள் வாழும் காட்டில் இருந்து வரும் நீங்கள் எத்தனை நாட்கள் சைவ உணவுக்காரராக இருக்கப் போகிறீர்களோ, எனக்குத் தெரியாது. உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். நான் வருகிறேன்.”

அவன் போனதும் கிருஷ்ணன் மறுபடியும் தலைமை அதிகாரியின் அறைக்குச் சென்றார். அப்பொழுது அவர் தம்முடைய செயலரிடம் கடிதங்கள் ‘டிக்டேட்” செய்து கொண்டிருந்தார்.

“என்ன மிஸ்டர் கிருஷ்ணன், உடல்நலம் சரியில்லையா, ஏன் இப்படி இருக்கிறீர்கள்?”

“ஒரு முக்கியமான விஷயம் …” என்று சொல்லிக் கொண்டே அவர் செயலரைப் பார்த்தார். இதைப் புரிந்து கொண்ட தலைமை அதிகாரி செயலரை அப்புறம் வரும்படி பணித்து விட்டு கிருஷ்ணனை ஆவலுடன் நோக்கினார்.

“நமக்கு டெண்டர் கிடைத்திருக்கும் செய்தி இவர்களுக்குத் தெரியும்” என்று அவர் தம்மிடமிருந்த ‘கார்டை’ எடுத்துக் கொடுத்தார்.

“மை காட்! இவர்களுக்கு எப்படித் தெரியும்?”

கிருஷ்ணன் அத்வானி தம்மை வந்து பார்த்துப் பேசிய விஷயம் பற்றி அவரிடம் விளக்கமாகச் சொன்னார்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது.

“நாம் மினிஸ்டிரியிடம் தொடர்பு கொண்டு இதைப் பற்றித் தெரிவித்து விடுவது நல்லது என்று நினைக்கிறேன். இவர்களுக்கு இச் செய்தி எப்படிக் கிடைத்தது என்பது பற்றி ஒரு விசாரணை நடந்தால் எல்லாம் தெளிவாகுமென்று எனக்குப் படுகிறது ……” என்கிறார் கிருஷ்ணன்.

“இதில் மேலிடம் சம்பந்தப்பட்டிருந்தால் நம்மை பலி ஆடாக ஆக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்றார் தலைமை அதிகாரி.

கிருஷ்ணனுக்குப் புரிந்து விட்டது. அவர் ஒன்றும் பேசாமல் எழுந்து வெளியே சென்றார். ‘உன் குரலுக்கு யாரும் செவி சாய்க்காவிட்டாலும் நீதனியே நட, தனியே நட ….’

நடக்கத்தான் வேண்டும்… தாம் இந்த ஸ்தாபனத்தில் இருக்கும் வரையில் இதை எதிர்த்துப் போராடத் தயங்கக்கூடாது … இந்த ஸ்தாபனத்தின் தலைவனாம்! அயோக்கியன் … மேலிடம் சம்பந்தப்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் பின்வாங்குகிறான்.

அன்றிரவு முழுவதும் அவருக்குத் தூக்கமே வரவில்லை . அடுத்த நாள் அவர் அலுவலகம் சென்றதும், அவரை தலைமை அதிகாரி கூப்பிட்டு அனுப்பினார். அவருக்கும் இரவு முழுவதும் தூக்கமில்லையோ என்று கிருஷ்ணனுக்குத் தோன்றியது. கண்கள் சிவப்பாக இருந்தன.

“நேற்று டெல்லியிலிருந்து டெலிஃபோன் வந்தது” என்று சொல்லி விட்டு அவர் நிறுத்தினார். கிருஷ்ணன் பேசாமல் இருந்தார்.

“இவ்வளவு பெரிய ஆர்டரைச் செயலாக்குவதற்கான திறமை நமக்கு இருக்கிறதா என்று டெல்லியில் சந்தேகப்படுகிறார்கள்…”

“அப்படியானால் எதற்காக நாம் ‘டெண்டர்’ அனுப்பியிருக்க வேண்டும்? வாயை மூடிக் கொண்டிருந்திருக்கலாமே?” என்று சீறினார் கிருஷ்ணன்.

“நம்மால் ‘சப்ளை’ செய்ய முடியுமா என்பது பற்றி அவர்கள் சந்தேகப்படவில்லை. ஏற்றுமதி செய்வதற்கான அமைப்பு நம்மிடம் கிடையாது என்றுதான் சொல்லுகிறார்கள்”

“எஸ்.டி.ஸி. எதற்காக இருக்கிறது?”

“தயவுசெய்து சங்கடமான கேள்விகளைக் கேட்காதீர்கள் … நேற்று அத்வானி உங்களிடம் கூறியதாகச் சொன்னீர்களே, அவர்களுடைய நிறுவனம் சக்தி வாய்ந்ததென்று … அது உண்மை தான். அது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது நமக்கு இருபத்தி நாலு மணி நேரத்தில் தெரிந்து விட்டது. நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருந்த போதிலும் நமக்கு டெண்டர் கிடைத்திருக்கும் விஷயத்தை அவர்கள் அந்த அயல்நாட்டிலிருக்கும் நம்முடைய தூதுவராலயம் மூலமாக தெரிந்து கொண்டு விட்டார்கள். அதோடு மட்டுமல்ல, நம்முடைய நிறுவனத்தின் ஏஜண்டுகள் தாங்கள்தாம் என்று சொல்லிக் கொண்டு பதினைந்து ரூபாய்க்கு ஏற்றுமதி செய்வதாக டெல்லியில் உள்ள அந்நாட்டுத் தூதுவரோடு பேரம் பேசியிருக்கிறார்கள். இதற்கிடையே தாங்கள் இப்படிச் சொல்லப் போவதாகவும், மினிஸ்டிரியிலிருந்து இதற்கு ஆட்சேபணை இருக்கக்கூடாதென்று மேலிடத்தையும் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு எப்படியும் நஷ்டமில்லை. நாம் ஏன் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ளக் கூடாது என்று டெல்லியில் கேட்கிறார்கள்… இந்த நிலையில், உங்களாலும் என்னாலும் என்ன செய்ய முடியும், சொல்லுங்கள்…”

“ஒரு ரூபாய் வித்தியாசத்தினால் அவர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுமே, அதை எப்படி ஈடு செய்யப்போகிறார்கள்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை குழப்பமாக இருக்கிறது” என்றார் கிருஷ்ணன்.

“அதைப் பற்றியும் விசாரித்தேன். இதனால் அவர்களுக்கு லட்சக்கணக்கில் லாபந்தான் ஏற்படப் போகிறது.”

“லாபமா? … எப்படி?”

“அந்த நாட்டுப் பணத்தை உடனடியாக முழுத்தொகையாகக் கொடுத்து விடப் போவதில்லை . ஐ.ஓ.யு. பத்திரங்கள் தாம் தரப் போகிறார்கள். எண்ணெய்க் கிணறுகள் மிகுந்த அந்நாட்டின் இந்தப் பத்திரங்களுக்கு வேறு பல நாடுகளில் நல்ல கிராக்கி. ஒரு பதினாறு ரூபாய் பத்திரத்தை சுலபமாக இருபது ரூபாய்க்கு விற்கலாம் … இந்த ஏஜன்ஸி நிறுவனம் அதைத்தான் செய்யப் போகிறது … ஒரு பத்திரத்துக்கு ஒரு ரூபாய் மேலிடத்துக்குப் போனாலும் … இப்பொழுது புரிகிறதா, மிஸ்டர் கிருஷ்ணன்? …”

“நாம் இதற்கு உடன்படக் கூடாது …”

“திரும்பத் திரும்ப நீங்கள் சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே… நம்மால் இதை எப்படித் தடுக்க முடியும்?”

“விற்பனைப் பகுதித் தலைவன் என்ற முறையில் இந்த ஏஜன்ஸி நிறுவனத்துக்கு விற்பதை நான் ஆட்சேபிக்கிறேன் …. வேண்டு மென்றால் நான் டெல்லி சென்று, மினிஸ்டிரி அநுமதியுடன், அந்த நாட்டுத் தூதுவரைச் சந்தித்து ….”

தலைமை அதிகாரி பெரிதாகச் சிரித்தார் ….

“எதற்காகச் சிரிக்கிறீர்கள்?”

“மினிஸ்டிரி உங்களை அனுமதிக்குமென்று எதிர்பார்க் கிறீர்களா? …”

“மினிஸ்டிரி என்னை அனுமதிக்கவில்லை என்பதும் ‘ரெகார்டு’ ஆகுமல்லவா? பப்ளிக் அகௌண்ட்ஸ் கமிட்டியில் இப்பிரச்னை வரும்போது ….” என்று கிருஷ்ணன் தொடர்வதற்குள், தலைமையதிகாரி அவரை இடைமறித்தார் …

“பப்ளிக் அகௌண்ட்ஸ் கமிட்டியைக் கண்டு பயப்பட்ட தெல்லாம் அக்காலத்தில் மிஸ்டர் கிருஷ்ணன் …… இது ‘மினிஸ்டிரி’யிலிருந்து ஃபைல்களே காணாமல் போகும் காலம் … பேசாமல் நான் சொல்வதைக் கேளுங்கள். இந்த ஆர்டரு’க்கு நம்மால் ‘சப்ளை’ செய்ய முடியும் என்றும், ஆனால் ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் நம்மிடம் இல்லை என்ற காரணத்தினால் ஓர் ஏஜென்ஸி நிறுவனம் மூலம் அனுப்பலாம் என்றும் குறிப்பு எழுதிக் கொண்டு வாருங்கள் … நானும் கையெழுத்திடுகிறேன்.”

கிருஷ்ணனுக்கு உடம்பு கொதித்தது …. அவர் எழுந்த வேகம் அவர் எவ்வளவு கோபம் கொண்டிருந்தார் என்பதைத் தெளிவாகக் காட்டியது.

“நான் இதை கடைசி வரை எதிர்க்கத் தயாராக இருக்கிறேன் … என்னால் நீங்கள் சொல்வதுபோல் குறிப்பு அனுப்ப இயலாது …. மன்னிக்கவும் ……”

அவர் தம் அறைக்குச் சென்று உட்கார்ந்தார். அத்வானியின் குரல் ஒலித்தது:

“குட்மார்னிங் மிஸ்டர் கிருஷ்ணன்!”

அத்வானி சிரிக்கும்போது அவன் கண்களும் சிரித்தன. கன்னங்கள் குழிவடைந்தன. இவன் வெற்றிக்கு இவை காரணமாக இருக்கலாம்.

“நீங்கள் எங்கள் தலைமை அதிகாரியைப் பார்த்துப் பேசுவது நல்லது என்று நினைக்கிறேன்.”

“பேசிவிட்டேன்.”

“எப்பொழுது?”

“நேற்றிரவு, அவர் வீட்டில் … அவர் இதை உங்களிடம் சொல்லியிருக்க மாட்டார் என்று எனக்குத் தெரியும்.”

“என்னுடன் நீங்கள் பேசுவதனால் எந்தவிதப் பிரயோஜனமும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் கிருஷ்ணன்.

“எங்களுக்கு பிரயோஜனம் ஏற்படுவதை உங்களால் தடுக்க முடியாது … ஆனால் உங்கள் பிரயோஜனம் கருதித்தான் நான் வந்தேன். ஏனென்றால் உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களை என் வழிக்குக் கொண்டு வருவதை என் திறமைக்கு ஒரு சவாலாக நான் கருதுகிறேன்.”

“நீங்கள் வீணாக உங்கள் நேரத்தையும் என் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நான் நீங்கள் விரும்புவது போல் குறிப்பு அனுப்பப் போவதில்லை …. இது உறுதி.”

“இவ்வளவு பிடிவாதமாக இருப்பதனால் உங்களுக்கு என்ன பலன் ஏற்படப்போகிறது? யாரும் உங்கள் நேர்மையை பாராட்டப் போவதில்லை .”

“மற்றவர்களுடைய பாராட்டைப்பற்றி நான் கவலைப் படவில்லை. என் அளவில் நான் தவறு செய்யவில்லை என்பதனால் எனக்கு ஏற்படும் ஆத்மத் திருப்தியை உங்களாலோ அல்லது உங்கள் நிறுவனத்தாலோ அல்லது நீங்கள் செய்கிற அக்கிரமத்துக்கு விலை பேசும் என் அருமை சகாக்களாலோ தடுக்க முடியாது அல்லவா? 1947ல் நாம் அடைந்தது சுதந்திரமல்ல. சுதந்திரம் என்ற மாய மானை நோக்கி மக்கள் ஓடி ஏமாந்த நாள். அன்றைக்கு காந்திஜிக்கு ஏற்பட்ட ஏக்கம் இப்பொழுது எனக்குப் புரி’கிறது.”

அத்வானி சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்தான். “என் அசட்டுப் பிடிவாதத்தை நான் விடமாட்டேன்’ என்று நீங்கள் சொன்னீர்களானால் உங்கள் நிலைக்கு நான் வருந்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? … தாங்க்யூ, மிஸ்டர் கிருஷ்ணன்.”

“மிஸ்டர் அத்வானி! நான் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்” என்றார் கிருஷ்ணன்.

“இந்த ஐ.ஓ.யூ. பத்திரங்களை வேறு பல நாடுகளில் இருபது ரூபாய்க்கு விற்கப் போகிறீர்கள் அல்லவா …” என்று அவர் சொல்வதற்குள் அவன் குறுக்கிட்டான். “சில ஃபிரிபோர்ட்டுகளில் இந்தப் பத்திரங்களின் விலை இருபத்தைந்து ரூபாய் …”

“இந்தப் பணம் இந்தியாவுக்குள் வராமலே இருக்கக் கூடும் அப்படித்தானே?”

“எப்படி வரும்? நாங்கள் டாலராகப் பெற்று வெளிநாட்டு பாங்குகளில் டெபாஸிட் செய்வோம். நீங்கள் மனசு வைத்தால் உங்களுக்கும் ஒரு புதிய கணக்கு ஆரம்பித்து வைப்போம். உங்களுடைய மேலிடத்தில் பலர் எங்களுடைய பழங்கணக்கு வாடிக்கைக்காரர்கள்.”

“இப்படி ஒளிவு மறைவின்றி, ஓர் அடிப்படை ‘சினிஸிஸத்’ தோடு பேசுகிறீர்களே, இந்த நாடு என்றுமே உருப்படாமல் போக வேண்டுமென்பதுதான் உங்கள் விருப்பமா?” என்று கேட்டார் கிருஷ்ணன்.

அத்வானி ஒரு சுருட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். அவன் ஏதோ சொல்லுவதற்கு முன்னால் இது ஆயத்தம் என்று கிருஷ்ணனுக்குப் பட்டது. அத்வானி பேசத் தொடங்கியபோது, அவன் குரலில் வழக்கமான அந்தக் கிண்டல் தொனி இல்லை.

“எனக்கு இப்பொழுது வயது முப்பத்தெட்டு. பதினைந்து வருஷங்களுக்கு முன்னால் நானும் உங்களைப் போல் இலட்சியவாதியாகத்தான் இருந்தேன். தியாக சீலராக நான் பாவனை செய்து கொண்டிருந்த ஓர் அரசியல் தலைவருக்கு அந்தரங்கச் செயலாளனாகப் பணியாற்றினேன். அவர் அமைச்சரானார். நான் தொடர்ந்து அவரிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். உயர் மட்டத்து ஊழல்கள் எல்லாம் அப்பொழுதுதான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கின. கொள்கை, கோஷங்கள் யாவும், சமூகச் சலுகைகளை அனுபவிக்கும் இவர்களுடைய அசிங்க முகங்களை நாம் பார்க்கக் கூடாது என்பதற்காக அவர்கள் போட்டுக் கொண்டிருக்கிற முகத்திரைகள். இவர்களுடன் போராட வேண்டுமென்றால், சரித்திரம் நம்மை அதற்காக ஏற்கனவே தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதற்கான அடையாளங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். என்னிடம் இல்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஆகவேதான் நான் அந்த அமைச்சரிடமிருந்து விலகி இந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். முன்பே நான் அறிந்திருந்த தலைவர்களுடைய பலவீனங்கள் எனக்குத் துணை நின்றன. ஓர் அடிப்படை ‘சினிஸிஸம்’ என்கிறீர்களே, வாஸ்தவம் தான். ஒரு மாஜி இலட்சியவாதியை இனங்காட்டும் சுவடு அது … இலட்சியம் ரொட்டி சுட்டுத்தராது மிஸ்டர் கிருஷ்ணன். இதை நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?”

“நீங்கள் இளமைப் பருவத்திலேயே தீமையுடன் சமரசம் செய்து கொண்டு விட்டீர்கள். நான் நடுத்தர வயதிலும் இவ்வாறு செய்து கொள்ள விரும்பவில்லை. சரித்திரம் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறது என்று நான் சொல்லவில்லை. என் உடல், மன அமைப்பே என்னுடைய இந்த இயலாமைக்குக் காரணமாயிருக்கலாம். ஆனால் இதற்காக நான் வருந்தவில்லை. தாங்க்யூ, மிஸ்டர் அத்வானி!”

கிருஷ்ணன் எழுந்திருந்து கைகளை நீட்டினார்.

பின் குறிப்பு:

கிருஷ்ணனுக்கு அவ்வரசாங்க நிறுவனத்தில் வேலை போய்விட்டது. நடுத்தர வயதில் வேலையைப் போக்கிக் கொண்ட அவருக்கு இன்னொரு வேலை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமாக இல்லை. மூன்று வருஷங்கள் அவர் வேலை இல்லாமல் இருந்தார்.

கடைசியில் அத்வானியின் சிபார்சில் வேலை கிடைத்தது.

இப்பொழுது அவர், அத்வானி வேலை பார்த்து வரும் ஏஜென்ஸி நிறுவனத்தில் ஏற்றுமதிப் பகுதித் தலைவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *