கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 3,159 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இப்பதானே வாறாய் மோனை?”

பஸ்சிலிருந்து இறங்கிய வேலுப்பிள்ளையை வாஞ்சையுடன் கேட்கின்றார் அம்மான் கந்தையா.

“ஓம் அம்மான்”

புதிய றோட்டை ஆவலுடன் பார்த்தபடியே கூறுகின்றான் வேலுப்பிள்ளை.

“எப்பிடிச் சுகம்?”

“ஏதோ, கந்தசாமியாற்றை தயவாலை சுவமாயிருக்கிறன்.”

“சாடையாக் கறுத்துப் போனாய் போலை கிடக்கு”.

“மாறை வெய்யிலெண்டால் கேக்க வேணுமே?”

“அட அநியாயமே!”

அம்மானுடைய குரலில் அனுதாபம்.

“அது மாத்திரமே? கருங்கல்லு உடைக்கிற வேலை…”

“இதெல்லாம் அந்தப் படுபாவி கந்தசாமியாலை வந்த வினை”

“அம்மான், நாங்கள் எப்பிடிக் கஷ்டப்பட்டாலும் பரவா யில்லை. இந்த றோட்டு வந்ததே போதும்.”

வேலுப்பிள்ளையின் வார்த்தைகளில் மன நிறைவு.

“உங்கடை சுவம் எப்பிடி அம்மான்? தேத்தண்ணிக் கடை யாவாரம் எப்பிடிப் போகுது?”

“இந்தப் புது றோட்டு வந்ததாலை எங்களுக்கு நல்ல வாய்ப்பு.”

“ஏன்?”

“மேற்கு ஊருகளிலையிருந்து சாமான்கள் எடுக்கிறதுக்கு எங்கடை இந்த யூனியனுக்குத்தான் எல்லாரும் வாறவை. யூனியனும் நல்லாய் பெருத்திட்டுது. எனக்கும் நல்ல யாவாரம். ”

யூனியன் கட்டடத்தைப் பார்க்கின்றான் வேலுப்பிள்ளை.

பழைய சின்னக் கட்டடமிருந்த இடத்தில் நாலுமாடிக் கட்டி டம் கெம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கின்றது.

கட்டிடத்தைப் பார்த்தபடியே அவன் நிற்கின்றான்.

“சரி நீ களைச்சுப்போய் வாறாய் மோனை போய் தண்ணி வென்னியைக் குடி. பிறகு சந்திப்பம்.”

“நான் வாறன் அம்மான்” கூறிக்கொண்டு, பிரதான வீதியி லிருந்து கிளை விட்டுச் செல்லும் புதிய றோட்டில் காலடியெடுத்து வைக்கின்றான் வேலுப்பிள்ளை.

அந்த றோட்டில் கால் வைத்ததும் அவனுடைய உடலில் புல்லரிப்பு.

கண்களில் தேஜஸ்மயமான ஒளி.

அந்தப் புதிய றோட்டை ஆசை தீரப் பார்த்தபடியே நிற்கின்றான்.

“ஏன் மோனை மலைச்சுப்போய் நிக்கிறாய்? ஏதாவது வேணுமோ? அல்லது உனக்கு என்ன செய்யுது?”

அம்மான் பதைபதைத்துக் கேட்டுக் கொண்டு வேலுப் பிள்ளையை நோக்கி விரைகின்றார்.

“எனக்கு ஒண்டுமில்லையம்மான், நான் போட்டு வாறன்.”

“முந்தி என்ன மாதிரி வாட்ட சாட்டமாயிருந்த பொடியள். இப்ப எவ்வளவு மெலிஞ்சு போச்சு?”

வேகமாக நடந்து கொண்டிருக்கும் வேலுப்பிள்ளையின் காதில் அம்மான் கந்தையாவின் ஆதரவான வார்த்தைகள் விழு கின்றன.

கையில் ஒரு பெரிய பார்சல் கர்மவீரனைப்போலத் தலையை நிமிர்த்தியபடியே நடந்து கொண்டிருக்கின்றான்.

றோட்டில் இரு மருங்கிலும் பச்சைப் பசேலென்று வளர்ந் தோங்கிய வாழை மரங்கள். வேலுப்பிள்ளையைத் தலைசாய்ந்து வரவேற்பது போல நிற்கின்றன அவை.

கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகப் பார்த்தனுபவித்திராத அந்தக் காட்சியை அனுபவித்துக் கொண்டே நடக்கின்றான்.

“தம்பி வேலுப்பிள்ளை இப்பதானே வாறாய் மோனை?”

வாழைத்தோட்டத்துக்குள்ளிருந்து றோட்டில் வந்தேறிய பூதத்தம்பி குசலம் விசாரிக்கின்றார்.

“இப்பதான் வாறன் அண்ணை.”

“உதென்ன கையிலை?”

“அது புத்தங்கள்”

“என்ன, உவ்வளவு புத்தகங்களே என்னத்துக்கு?”

“ஓமண்ணை . அது நான் படிக்கிறதுக்கு.”

“இது நல்ல வேலைதான். சரி, நீ களைச்சுப்போய் வாறாய். அதைத்தாவன். நான் கொண்டந்து தாறன்.”

“வேண்டாமண்ணை. ‘ஒரு அந்தர் வெண்காயத்தைச் சுமந்த எனக்கு இது பெரிய பாரமே?”

“அவங்கள் அந்த கந்சாமியனாக்களின்ரை அட்டகாசம் பொறுக்கேலாமல் கிடக்கு. எல்லாத்துக்கும் நான் பிறகு உன்ரை வீட்டை வாறன்.”

“இண்டைக்கு இரவைக்கு வா அண்ணை. மறந்து போகாதை”

“நான் கட்டாயம் வருவன். நீ கெதியாய் வீட்டை போ மோனை.”

கந்தசாமி, இன்னும் உங்கடை ஆட்டம் அடங்கேல்லையே? உது எவ்வளவு நாளைக்கு போகுதெண்டு பாப்பம்.”

பூதத் தம்பியை விட்டகன்ற வேலுப்பிள்ளை மனதுக்குள் கூறியபடியே நடக்கின்றான்.

கந்தசாமி கோவில் வடக்கு வீதிக்கு வந்துவிட்டான் அவன்.

வேலுப்பிள்ளையைக் காண்கின்றார் கோவில் மனேச்சர் கந்தசாமி.

உடனே அவருக்குத் திகைப்பு! பயத்தில் கைகால்கள் நடுங்குகின்றன. தனது சால்வையால் தலையை மூடுகின்றார்.

கந்தசாமியைக் கண்டதும் வேலுப்பிள்ளையின் ரத்தம் கொதிக்கின்றது.

கோயில் பூங்கொல்லைக்குள் ஓடிப்போய் பதுங்குகின்றார் கந்தசாமி.

வேலுப்பிள்ளை தன்னை மறக்கின்றான்.

‘டே கந்தசாமி, உன்னை இப்பவே துலைச்சுக்கட்டிப் போட்டு நானும்….’

கையை உயர்த்துகின்றான். கையில் புத்தகப் பார்சல். அவனுடைய உணர்வில் தடை.

‘வேலுப்பிள்ளை. நீ யாருடன் போராடுகின்றாய் என்ற தெளிவு முதலில் உனக்கு இருக்க வேண்டும். அடுத்தது எப்படிப் போராடப் போகின்றாய் என்ற திட்டமும் உன்னிடம் இருக்க வேண்டும். அப்படியென்றால் தான் நீ போராட்டத்தில் வெற்றி பெறுவாய்’

மாறை ஜெயிலில் இருக்கும் பொழுது, அவனுடைய சிங்கள நண்பன் பண்டாரா கூறியது வேலுப்பிள்ளையின் ஞாபகத்துக்கு வருகின்றது.

‘தனி மனிதனை ஒழிக்கிறதாலை எங்கடை பிரச்சினையள் தீரப்போறதில்லை. எங்களைச் சுரண்டுகின்ற வர்க்கத்தை அழித்து நிர்மூலமாக்கிவிட்டு அதிகாரத்தை உழைக்கும் வர்க்கம் கைப்பற் றினால் தான் எங்கடை பிரச்சினையள் தீரும்.’

வேலுப்பிள்ளை ஜெயிலுக்குச் சென்று சிறிது காலத்தின் பின் அவனுடன் அறிமுகமான பண்டாரா கருங்கல்லு உடைத்துக் கொண்டிருக்கும் பொழுது கூறியது அவனுடைய மனதில் பளிச் சிடுகின்றது.

தனது வீட்டுக்குச் செல்கின்றான் வேலுப்பிள்ளை

அவன் இன்று வருவான் என்று அவனுடைய வீட்டாருக்கு எப்படித் தெரியும்?

வீடு பூட்டிக்கிடக்கின்றது.

‘அவர்கள் தோட்டத்துக்குத்தான் போயிருக்க வேணும்.’

புத்தகப் பார்சலை அடுத்த வீட்டில் வைக்கின்றான்.

தோட்டத்தை நோக்கி அவனுடைய கால்கள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

வழியில் சங்கக்கடை. அது இன்னும் திறக்கப்படவில்லை. சங்கக்கடைக்குப் பக்கத்தில் ஒரு புதிய வாசிகசாலை. வேலுப்பிள்ளைக்கு ஆச்சிரியம். மகிழ்ச்சிப் பூரிப்பு. வாசிகசாலைக்குள் அவன் செல்கின்றான்.

கன்றான.

நான்கைந்து இளைஞர்கள் பத்திரிகை படித்துக் கொண்டிருக் கிறார்கள்.

‘இப்ப எங்கடை ஆட்களுக்கு பத்திரிகை படிக்கக் கூட நேரமிருக்கு.’

புத்தகங்கள் நிறைந்த இரண்டு அலுமாரிகள் வேலுப்பிள்ளை யின் கண்களில் படுகின்றன.

அவனுக்கு ஆனந்தம்.

“எடே! எங்கடை வேலுப்பிள்ளை அண்ணை வந்திட் டாரடா!”

திடீரென ஒருவன் கத்துகின்றான்.

வேலுப்பிள்ளையை எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர்.

எல்லோருக்கும் உணர்ச்சிப் பரவச நிலை.

அவர்களுடைய சேமநலன்களை அவன் அக்கறையுடன் விசாரித்தறிகின்றான்.

“அண்ணா. மறியல் வீட்டுச் சீவியம் எப்படி? நீ என்ன மாதிரி காலம் தள்ளினாய் எண்டதை எங்களுக்குச் சொல்லண்ணை.”

அவர்கள் ஆவலுடன் அவனைக் கேட்கின்றனர்.

தான் கற்றவற்றையும், தனது அனுபவங்களையும் அவன் அவர்களுக்குத் தொகுத்துக் கூறுகின்றான்.

அவனுடைய வார்த்தைகளில் எளிமை, தெளிவு, ஒரு வித வேகமும் உறுதியும்.

அவன் கூறிக்கொண்டிருப்பனவற்றை அவர்கள் உன்னிப் பாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுடைய உடல்களில் புதிய ரத்தத்தின் வீறான பாய்ச்சல்.

உள்ளத்தில் செயல்படத் தூண்டும் வேட்கை.

வேள்வித் தீயில் தம்மை அர்ப்பணிப்பதற்குத் தங்களுக்குள் திடசங்கற்பம் செய்கின்றார்கள் அவர்கள்.

“இனி நீங்கள் படியுங்கோ . பிறகு சந்திப்பம்.” பேசி முடிந்ததும் அவன் போவதற்கு எழுகின்றான். “ஏனன்ணை அவசரப்படுகிறாய். இன்னும் சொல்லன்.”

அவனைவிட அவர்களுக்கு மனமில்லை.

‘நான் இப்ப தோட்டத்துக்குப் போகவேணும், இரவைக்குச் சந்திப்பம்.’

“அப்ப நாங்களும் உன்னோடை வாறம்.”

“வேண்டாம் மோனையள். நீங்கள் இப்ப படியுங்கோ.”

உற்சாகத்துடன் அவன் தோட்டத்தை நோக்கிச் செல்கின் றான்.

புதிய றோட்டு பனங்கூடலைப் பிளந்து கொண்டு செல்கின்றது.

ரோட்டின் இரு பக்கங்களிலும் இடைக்கிடை புதிய வீடுகள்.

நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் இந்தப் பக்கத்தில் ஒரு வீட்டைக் கூடக் காணமுடியாது.

இரவு வேளைகளில் இந்தப் பகுதிக்கு வருவதற்கு அநேக ருக்குப் பயம்.

பனம் கூடலைத் தாண்டி, செம்பாட்டு வெளியினூடாகச் செல்கின்றது ரோட்டு.

இந்த வெளி முன்பு தரிசு நிலமாகக் கிடந்தது.

இப்பொழுது இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பல கிணறு கள் தோண்டப்பட்டிருக்கின்றன.

புது மண்ணில் பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன.

நிர்ச்சிந்தையாகச் சென்று கொண்டிருக்கும் வேலுப்பிள் ளையின் மனம் பழைய சம்பவங்களை இரைமீட்டுக் கொண்டிருக்கின்றது.

ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு அவர்களுடைய தோட்ட நிலங்களுக்குச் செல்வதற்கு நல்ல பாதையில்லை.

கல்லும் முள்ளும் நிறைந்த ஒரு வண்டில் பாதை அவர்களின் தோட்டங்களின் விழிம்பில் வந்து நின்று விட்டது.

குழைக் கட்டுகளையும் எருக்கடகங்களையும் தங்களுடைய தலைகளில் சுமந்து செல்லும் பொழுது அவர்கள் பட்ட கஷ்டங் களைக் சொல்ல முடியாது.

அவர்களுடைய தோட்ட நிலங்களுக்கு மத்தியில் ஒரு ஒற்றை யடிப் பாதைதான் சென்றது.

அந்த நாளையில் இரண்டு மூன்று பேர்களிடம் தான் தண்ணீர் இறைக்கின்ற யந்திரங்கள் இருந்தன.

ஒற்றையடிப் பாதையால் அந்த யந்திரங்களை அல்லது ஆடு மாடுகளைக் கொண்டு செல்லும் பொழுது எத்தனை சண்டைகள் நடந்தன? எத்தனை பேர்களுடைய மண்டைகள் பிளந்தன?

ஒரு நாள் அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பாதையைத் திறப்பதற்கு ஆலோசித்தார்கள்.

தங்களுடைய நிலங்களில் சிறிது பகுதியை பாதை எடுப் பதற்கு விட்டுக் கொடுப்பதற்கு எல்லோரும் சம்மதித்தனர்.

அவர்களுடைய தோட்டங்களின் மேற்குப் பக்கத்தில் ஒரு பிரதான வீதி. ஊரின் கிழக்குப் பக்கத்திலும் பிரதான வீதி. இரண் டையும் இணைக்க அந்தப் பாதையை எடுப்பதற்குத் தங்களின் நிலங்களில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்தார்கள் ஒவ்வொருவரும்.

கயிற்றைக் கட்டி வேலிகளை வெட்டிப் பாதையைத் திறப் பதில் வேலுப்பிள்ளையும் அவனது சகாக்களும் முன் நின்றுழைத்தார்கள்.

கந்தசாமி கோயிலடிக்குக் கிட்ட பாதை வந்தது.

கோவிலுக்கு வடக்குப் பக்கமாக இருந்த வேலியை வெட்டு வதற்கு வேலுப்பிள்ளையாட்கள் கயிற்றைக் கட்டினார்கள்.

“வேலி வெட்டக்கூடாது.”

கோவில் மனேச்சர் கந்தசாமி திடீரென வந்து அவர்களை மறித்தார்.

ஏன் அவர்கள் கேட்டார்கள்.

“கோயிலுக்குப் பக்கத்தாலை ரோட்டுப் போட நான் விடன்.”

“என்னத்துக்கு?” வேலுப்பிள்ளை வியப்புடன் கேட்டான்.

“கோயிலுக்குப் பக்கத்தாலை றோட்டுப் போனால், நாலுபதி னெட்டுச் சாதியளும் அதாலை செத்த பிணங்களைக் கொண்டு போவங்கள். அப்ப கோயில் என்னவாகும்?”

“நல்லூர் கந்தசாமி கோயிலிக்கு இரண்டு பக்கத்தாலையும் றோட்டுகள் போகேல்லையோ?”

அமைதியாகக் கேட்டான் வேலுப்பிள்ளை.

“அது பட்டணம். இஞ்சை அப்பிடிச் செய்யேலாது. நான் விடன்.”

“மறிக்கிறதுக்கு நீ ஆர்?” சண்முகத்தின் குரலில் கடுமை.

“நான் ஆரெண்டோடா கேக்கிறாய்? உனக்கிப்ப சொல்ல வேணுமோடா?”

வெறி பிடித்தவராகக் கத்தினார் கந்தசாமி.

“கந்தசாமி அண்ணை . இது பொது விசயம். ஊர் ஆக்கள் எல்லாரும் ஒத்து நிக்கினை. இது ஊர் நன்மைக்குத்தானே. நீ இதிலை தலையிடாதையண்ணை.” வேலுப்பிள்ளை பணிவுடன் கூறினான்.

“உன்ரை புத்திமதி எனக்குத் தேவையில்லையடா. நீ போய் உன்ரை வேலையைப் பாரடா. நான் சொன்னால் சொல்லுத்தான்”

“கந்தசாமி ஓடுற ஆற்றை உன்னாலை தடுத்து நிறுத்தே லாது. நீ குறுக்கை நிண்டியெண்டால் அது உன்னையும் அடிச்சுக் கொண்டுதான் போகும்.”

“டே வேலுப்பிள்ளை வீண் கதை பேசாதை . போடா இந்த இடத்தாலை.” தனது தொந்தி வயிற்றைத் தூக்கிக் கொண்டு துள்ளிக் குதித்தார் கந்தசாமி.

“நீ ஏன் மறிக்கிறாய் எண்டு எனக்குத் தெரியும்.”

“உனக்கென்னடா தெரியும்?”

“இந்த றோட்டு வந்தால் இந்த ஊர் முன்னேறிவிடும். தோட்டம் செய்யிற நாங்கள் முன்னுக்கு வந்திடுவம். அப்பிடி நாங்கள் முன்னேறீட்டால் நாளைக்கு நீங்கள் எங்கடை தோளிலை ஏறிச் சவாரி செய்யேலாது எண்ட பயம் தான் உனக்கு.”

“டே வேலா. வாயைப் பொத்திக்கொண்டு போடா, இல்லாட்டி…”

கையை ஓங்கியபடியே முன்னுக்கு வந்தார் கந்தசாமி.

“ஓய், என்ன காணும் வெருட்டிறீர்?”

“டே, மண்கொத்திப்பயலே ஓய் எண்டு என்னைக் கூப்பிட உனக்கு அவ்வளவு துணிவு வந்திட்டுதோடா?”

“டே கந்தசாமி. மல்லுக்கட்ட இப்ப எங்களுக்கு நேர மில்லை. உன்னை பிறகு பாத்துத்தாறமடா?”

“என்னடா சொன்னாய்?”

கையை உயர்த்திக் கொண்டு மீண்டும் ஓடிவந்தார்.

“ஏலுமெண்டால் மறியடா, பாப்பம்! சண்முகம் கத்தியைத் தா, வேலியை வெட்டிறன்.”

வேலுப்பிள்ளை வேலியை வெட்டினான். கந்தசாமி ஓடி வந்து கத்தியைப் பிடித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் இழுபட்டனர். கந்தசாமியின் கையில் ரத்தம்.

“ஐயோ! என்னைக் கொல்லுறான்”

ஓலமிட்டுக் கொண்டு ஓடினார் கந்தசாமி.

கந்தசாமியைக் கொலை செய்ய முயன்றான் என்று வேலுப் பிள்ளையின் மேல் குற்றம் சுமத்தப்பட்டது.

வேலுப்பிள்ளைக்கு ஐந்த வரியம் கடூழியச் சிறை.

சிறைக்குப் போனது ஒரு வகையில் நல்லதென்று வேலுப் பிள்ளை எண்ணினான்.

அங்குதான் அவன் அந்த பண்டாராவைச் சந்தித்தான்.

எதிர்கால நல்வாழ்வில் பண்டாராவுக்கு எவ்வளவு நம் பிக்கை , உறுதி.

அவனும் ஓர் ஏழை விவசாயியின் மகன்.

நிலமற்ற விவசாயிகளின் உரிமைகளுக்காக ஒரு பெரிய நிலச் சொந்தக்காரனுடன் மோதியதால் அவன் சிறைக்கு வந்தான்.

பெரிய நிலச் சொந்தக்காரர்களைப் பற்றிப் பேசும் பொழுது அவனுடைய கண்கள் தீப்பிழம்பாகும்.

அவனுடைய திண்மையும் உறுதியும் வாய்ந்த உடலில் ஆவேசத் துடிப்பு.

பண்டாராவைச் சுற்றி எப்பொழுதும் ஒரே கூட்டம்.

கமகேயும் ரணதுங்காவும் அவனுடன் விவாதிக்கத் தொடங்கி விட்டால் அதற்கு ஒரு முடிவேயில்லை. இறுதியில் ஒரே முடிவுக் குத்தான் அவர்கள் வருவார்கள்.

எட்டாம் வகுப்புப் படித்த வேலுப்பிள்ளைக்குச் சிங்களம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கிய பண்டாரா அவனுக்கு உலகத்தைப் பற்றிய அந்தத் தத்துவத்தையே படிப்பித்தான்.

“வேலுப்பிள்ளை, நாங்கள் இந்த நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், உழைப்பாளியள் எண்ட ரீதியிலை நாங்கள் எல்லாரும் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை அடக்கி ஆளுகின்ற சுரண்டல் வர்க்கத்தை நிர்மூலமாக்குவதற்கு நீ உனது பங்கைச் செலுத்துவாய் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு. அதற்கான நாடு பரந்த போராட்டம் நடக்கும் பொழுது ஒரு நாள் நாம் நிச்சயம் சந்திப்போம். நீ போய் வா.”

வேலுப்பிள்ளை சிறைச்சாலையை விட்டுப் புறப்படும் பொழுது அவனுக்கு நம்பிக்கையுறுதியூட்டி பண்டாராவும் அவனது சகாக்களும் வழியனுப்பி வைத்தார்கள்.

வேலுப்பிள்ளை இப்பொழுது புதிய பாதையில் சென்று கொண்டிருக்கின்றான்.

தோட்டக்கரைக்குத் தான் வந்துவிட்டதை உணருகின்றான் வேலுப்பிள்ளை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோட்டக் கிணறுகளில் தண்ணீர் இறைக்கும் யந்திரங்கள் ஓசையெழுப்பிக் கொண்டிருக் கின்றன.

சில தோட்டங்களில் உழுது கொண்டிருக்கும் உழவு யந்தி ரங்களின் பேரிரைச்சல்.

குழைக்கட்டுகளையும் எருப்பசளையையும் ஏற்றி வந்த லொறிகளிலிருந்து அவற்றைப் பறிக்கின்றார்கள் சில தோட் டக்காரர்கள்.

வேலுப்பிள்ளை ‘பெரிய கிணத்தடித்’ தோட்டத்துக்குச் செல்கின்றான்.

அவனைக் கண்டதும் அயல் தோட்டங்களிலுள்ளவர்கள் வந்து குவிகின்றனர்.

எல்லோரும் அவனைச் சூழ்கின்றனர். அவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் திணறுகின்றார்கள். “தம்பி வேலுப்பிள்ளை. எப்ப வந்தனி மோனை?’ சிறிது நேரத்தால், நாகலிங்கம் கனிவுடன் கேட்கின்றார். “காலமைதான் வந்தனான் அண்ணை.”

“புள்ளை நல்லாய் மெலிஞ்சு போனான். நிறம் கூட மாறீட்டுது.”

சரவணை அப்பாவின் குரலில் வேதனை.

“இதெல்லாம் அந்த நாசமாய் போன கந்தசாமியனாக்க ளாலை வந்தது. அவங்கள் பரிசாம்பலாய் போக….”

செல்லம்மா அக்கா வயிற்றெரிச்சலுடன் திட்டுகின்றா.

“மறியல் வீட்டிலை சாப்பாடு எப்பிடி மோனை? அவங்கள் உன்னை அடிச்சு உதைச்சுக் கரைச்சல் பண்ணிணவங்களே?”

“அங்கை என்னை ஏன் ஆரும் அடிக்கப்போகினை? சாப் பாட்டையும் ஒரு மாதிரிச் சமாளிச்சன். அதுகிடக்கட்டும். உங்கடை பாடு எப்பிடி?”

“இப்ப நீ பாக்கிறாய் தானே? எங்கடை பாடு பிழையில்லை. ஆனால் அந்தப் பாடேலை போவாங்களாலை தான் எங்களுக்கு நெடுகக் கரைச்சல்.”

“ஆர்? ஆரவங்கள்?”

“வேற ஆர்? அந்த கந்சாமியனாக்கள் தான்.”

“அவங்கள் என்ன செய்யிறாங்கள்?”

“நீ மறியலுக்குப் போன அடுத்த ஆடிமாதம், கந்தசாமி தன்ரை தோட்ட நிலங்களின்ரை குத்தகையைக் கூட்டிப் போட்டான்.”

“அதோடை நிண்டானே? கோயில் தோட்டக்காணிய ளின்ரை குத்தகையையும் கூட்டிப்போட்டங்கள். அவங்கள்.”

“நீங்கள் சும்மா இருந்தனீங்களே?”

“எங்களாலை என்ன செய்யேலும் மோனை. அவன் தானே கோயில் மனேச்சர். அதோடை அவனிட்டைக் கன தோட் டக் காணியள், பணம், ஆளணி எல்லாம் கிடக்கு.”

“இது நடக்குமெண்டு எனக்கு அப்பவே தெரியும்”

“தாங்கள் அந்த கோயில் காணியளைச் செய்யப்போற மெண்டு போன வரியம் மறிச்சுப்போட்டார்கள். இப்பவும் அந்த தோட்ட நிலங்கள் சும்மா கிடக்கு.”

“தோட்டம் செய்ய நிலமில்லையெண்டு எத்தினையோ பேர் அலைஞ்சு திரியினை. ஆனால். இவங்கள்…..”

“அதுக்கென்ன மேனை செய்யிறது?”

“கந்தையா அண்ணை. முந்தி அந்தத் தோட்ட நிலங்களிலை பயிர் செய்த நீங்கள் எல்லாரும் இப்ப திரும்பவும் அதே நிலங் களிலை பயிர் செய்ய வேண்டும்.” வேலுப்பிள்ளை நிதானமாகக் கூறினான்.

“அவங்கள் விடுவாங்களே?”

“வலோற்காரமாய்ச் செய்யிறது தான்.”

“அவங்கள் சும்மாயிருப்பங்களே?” சரவணையப்பா பயம் தொனிக்கக் கேட்டார்.

“அவங்கள் வரேக்கை பாப்பம். நீங்கள் பயப்பட வேண் டாம். கெதியிலை வேலையைத் துவங்கவேணும்.”

“எங்கடை வயித்திலை அடிக்கிறதுக்கு அவங்கள் புது வழியளையும் பாவிக்கிறாங்கள்?”

“அதென்னப்பா புது வழி?”

“போனபோகம் நாங்கள் வெண்காயம் கிளப்பினம். அப்ப கோயில் தேர் செய்யிறதுக்கெண்டு ஒவ்வொருதரிட்டையும் ஒவ்வொரு அந்தர் வெண்காயத்தை எடுத்தாங்கள்”

வேலுப்பிள்ளையின் நெற்றியில் சுருக்கங்கள்.

“அது மாத்திமே? கோயில் மதில் போடுறதுக்கெண்டு ஒவ்வொருதற்றை வாழைத் தோட்டங்களுக்கையும் ஒவ்வொரு தலைவாழைக் குலையளை வெட்டினாங்கள்.”

“நாங்கள் உருளைக் கிழங்கு வித்தபொழுது தலைக்கு இருபத்தைஞ்சு ரூபா வீதம் அவங்களுக்குத் தாரைவாத்தம்.”

“இதுகளுக்கெல்லாம் அவங்கள் கணக்குக்காட்டினாங்களே? அதுவுமில்லை.”

“ஏன் நீங்கள் கேட்கேல்லை?” ஆத்திரத்துடன் கேட்டான் வேலுப்பிள்ளை.

“நாங்கள் எத்தினை தரம் கேட்டம். அவங்கள் காட்டினால் தானே?”

“இப்ப நாங்கள் செத்தல் மிளகாய் விற்கப்போறம். அவங்கள் கோயில் மணிக்கூட்டுக் கோபுரம் கட்டிறதுக்குக் காசு சேர்க்கப் போறாங்களாம்.”

“இனி ஒருதரும் ஒரு சதம் கூடக் குடுக்கக்கூடாது.” வேலுப்பிள்ளையின் குரலில் கடுமை.

“அவங்கள் எங்களைச் சும்மா விடுவாங்களே? எங்கடை தோட்டங்களை இரவிரவாய் அழிச்சுப்போடுங்கள்”

“குத்தகைக் காணியளுக்கை இருக்கிற எங்களைக் குடி யெழுப்பிப் போடுவாங்கள்.” சிலர் பீதியுடன் கூறினர்.

“இனி நாங்கள் ஒண்டுக்கும் பயப்பிடக்கூடாது. எங்கடை புது றோட்டைப் போடவிடாமல் கந்தசாமியனாக்கள் முட்டுக் கட்டையாய் நிண்டாங்கள். நாங்கள் அவங்களுக்குப் பயந்து சும்மா இருந்திருந்த மெண்டால் இந்த றோட்டு வந்திருக்குமே?”

வேலுப்பிள்ளையின் வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கை யூட்டின.

“இனி அவங்கள் எங்களோடை கரைச்சலுக்கு வந்தால் அவங்களை நான் துலைச்சுக் கட்டிப் போடுவன்.”

காத்திகேசு ஆவேசம் மேலிடக் கத்தினான்.

“நான் தூக்குக் கயித்துக்கு போனாலும் பறுவாயில்லை. அவங்கடை குடலை எடுத்து மாலையாய் போடுறனோ இல்லைலயோ எண்டு பாருங்கோ.”

கத்தியைச் சுழற்றிக்கொண்டு கதிரவேலு இரைந்தான்.

“கதிரவேலு, கந்தசாமியாக்களை மாத்திரம் கொலை செய் தாப்போலை எங்கடை பிரச்சினை எல்லாம் தீந்துபோமே?”

எல்லோரும் வியப்புடன் வேலுப்பிள்ளையைப் பார்த்தனர். “தீராமல்?” கதிரவேலுவின் குரலில் வஞ்சினம்.

“அவங்களைப் போலை எத்தினையோ கந்தசாமியாக்கள் இந்த நாட்டிலை இருக்கிறாங்கள். அவங்கள் எல்லாரும் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவங்கள். உன்னாலை தனிய அவங்கள் எல்லாரையும் கொலை செய்ய முடியுமோ?”

கதிரவேலு பிரமித்துப்போய் நிற்கின்றான்.

“அந்த வர்க்கம் தான் இந்த நாட்டிலை எங்களைப் போலை உழைக்கிற எல்லாரையும் சுரண்டி, சூறையாடிச் சுகசீவியம் நடத்திக் கொண்டிருக்கு.”

“அப்ப நாங்கள் என்ன செய்யிறது?” அவர்கள் சோர்வுடன் கேட்கின்றனர்.

“அந்த வர்க்கத்தை அழிச்சொழிச்சால் தான் உழைக்கிற எங்களுக்கு விமோசனம்.”

“அதை எப்பிடிச் செய்யிறது?”

“அதுக்கெண்டு ஒரு பாதையிருக்கு. அது நீண்டபாதை. அந்தப் பாதையிலை நாங்கள் போகவேணும்.”

“அதென்ன பாதை?”

“அது தான் போராட்டப் பாதை. உழைக்கிற வர்க்கத்துக்கும் அந்த உழைப்பைச் சுரண்டிற வர்க்கத்துக்குமிடையிலை நடக்கிற போராட்டம்.”

“நாங்கள் தனிய அதை என்னண்டு செய்யிறது?”

“இந்த நாட்டிலை உழைக்கிற நாங்கள் எல்லாரும் ஒண்டு சேர்ந்து, எங்கடை தலைவிதியை எங்கடை கையிலை எடுத்துக் கொண்டு உறுதியாய் அந்தப் போராட்டப் பாதையிலை போனால் …”

“நாங்கள் தயார்” அவர்கள் அந்தரங்க சுத்தியுடன் கூறுகின் றனர்.

‘நீங்கள் நினைக்கிற மாதிரி அது அவ்வளவு சுகமான பாதையல்ல.”

“இப்பிடிக் கேவலமாய்ச் சீவிக்கிறதைவிட அப்பிடி ஒரு நல்ல வேலையைச் செய்யேக்கை செத்தாலும் பறுவாயில்லை.”

கதிரவேலு உறுதியாகக் கூறுகின்றான்.

“அந்தப் பாதைக்கு முதல்படியாய், தோட்டம் செய்யிற நாங்கள் எல்லாரும் ஒண்டு சேர்ந்து ஒரு விவசாய சங்கத்தைத் துவங்கவேணும்.”

“நாங்கள் எல்லாரும் தயார்.” அவர்கள் கூறுகின்றார்கள். “அதுக்குப்பிறகு?” கார்த்திகேசுவின் கேள்வியில் அவசரம்.

“ஒரு வரியத்துக்கு முந்தி அந்த கோயில் காணியளிலை பயிர் செய்ய வேண்டாமெண்டு கந்தசாமியாக்கள் மறிச்சுப் போட்டாங்கள் தானே?”

“ஓம். மறிச்சாங்கள்.” “அந்தக் காணியள் ஒரு வரியமாய் சும்மாகிடக்கு.”

வேலுப்பிள்ளை அவர்களைப் பார்க்கின்றான். அவர்கள் மத்தியில் ஒருவிதத் துடிப்பு.

“அந்தக் காணியளைச் செய்த ஆக்களுக்குப் பயிர் செய்ய நிலமில்லை. ஒரு வரியமாய் அவை கூலிப்பிழைப்புக்குப் போகிணை. அதுவும் கிடைக்கிறது அருமை.”

“நாங்கள் படுகிற கஷ்டத்தை ஆருக்கு சொல்லுறது?” சிலர் மனம் வெதும்பிக் கூறுகின்றார்கள்.

“அந்த சும்மா கிடக்கிற நிலங்களிலை முந்தி பயிர் செய் தாக்கள் வலோற்காரமாய் இப்ப பயிர் செய்யத் துவங்க வேணும்.”

“கெதியாய் அந்தவேலையைத் துவங்குவம்.” உத்வேக உணர்வுடன் கூறுகின்றான் காத்திகேசு.

“நாங்கள் எல்லாரும் ஒண்டு சேர்ந்து அவைக்கு உதவியாய் நிக்க வேணும்.”

“நாங்கள் பத்து முறையும் தயார்.”

காத்திகேசுவின் உறுதி நிறைந்த குரல் கெம்பீரமாக ஒலிக் கின்றது.

“எங்கை கந்தசாமியாக்கள் வந்து எங்களை மறிச்சுப் பாக் கட்டும் பாப்பம்?”

முருகேசு கத்தியை உயர்த்தி வீசிக்கொண்டு கத்துகின்றான். அங்கு கூடிநின்றவர்களை நோக்குகின்றான் வேலுப்பிள்ளை. அவர்களுடைய விழிகளில் புத்தொளி!

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *