கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2024
பார்வையிட்டோர்: 187 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரொம்ப அழகாயிருந்தாள் அந்தப் பெண். இளமையாயும்!

அந்த ரெண்டு சிறப்பம்சங்களையும் ஏழ்மை என்கிற திரை மறைக்க முயன்று, தோற்றுக் கொண்டிருந்தது.

என்னுடைய ரெண்டு உத்தம புத்திரன்களும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“ஒக்காரும்மா” என்றேன்.

“பராவாயில்லை சார், நிக்கிறேன்” என்றாள், பணிவாய். “சார், ஒங்களுக்குக் கார் டிரைவர் வேணும்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்.”

“ஆமா. வேல யாருக்கும்மா? ஒங்கப்பாவுக்கா, அண்ணனுக்கா? அவங்களே நேர்ல வரலாமே?”

“எனக்கு அப்பாவுங் கெடையாது. அண்ணனுங் கெடையாது சார். வேல எனக்குத்தான்.”

என் கண்கள் ஆச்சர்யத்தால் அகல விரிந்தன.

அவளுடைய அழகைப் பகிரங்கமாய்ப் பருகிக் கொண்டிருந்த இந்த ரெண்டு பசங்களின் கண்களும் இன்னும் அகலமாய் விரிந்தன.

தகப்பனுடைய நிழலில், மேலே வெயில் படாமல் வளர்ந்த பயல்கள். பொழுது போக்குக்குக் காலேஜ் போய் வந்து கொண்டிருப்பவர்கள்.

“கார் டிரைவர் வேலைக்கி ஒரு பொண்ணா!” என்று நான் ஆச்சர்யப்பட்டதற்கு அந்தப் பெண் ஒரு பதில் வைத்திருந்தாள்.

“ஏன் சார், பெண்கள் ஆட்டோ ஓட்டறாங்க, பஸ் ஓட்டறாங்க, ப்ளேன் கூட ஓட்டறாங்க. டிரைவராக் கார் மட்டும் ஓட்டக் கூடாதா?”

“ஓட்டலாம், ஓட்டலாம்” என்று நம்ம பசங்களை ஓரக் கண்ணால் பார்த்தேன்.

“ஆனா, நம்ம வீட்ல வயசுப் பசங்க இருக்கானுங்களேம்மா. பொல்லாத பசங்க!”

“அதெல்லாம் நா சமாளிச்சுக்குவேன் சார். கடவுள் என்னக் காப்பாத்துவார்.”

“காப்பாத்துவார்தான். ஆனா.. கடவுளை நம்பு, ஒட்டகத்தைக் கட்டிப் போடுன்னு நபிகள் நாயகம் சொல்லியிருக்கார் தெரியுமோ?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். எனக்கு வேல குடுங்க சார். கஷ்டப்பட்டு ரெண்டாயிரம் ரூபா செலவழிச்சி டிரைவிங் படிச்சிருக்கேன் சார்.”

நான் என்னுடைய கைப்பையைத் திறந்து ஐயாயிரம் ரூபாய்க் கட்டு ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினேன்.

“அதே மாதிரி, இன்னுங் கொஞ்சம் கஷ்டப்பட்டு கராத்தே கத்துக்கிட்டு வாம்மா. நீ எப்ப வந்தாலும் இந்த வேல ஒனக்காகக் காத்திருக்கும்.”

– பொம்பளை டிரைவர், ஆனந்த விகடன், 12.12.2004.

– ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் (பகுதி-1). முதற் பதிப்பு: டிசம்பர் 2012, நிலாச்சாரல் லிமிடெட், சென்னை.

திருநெல்வேலிக்காரரான ஏ.ஏ.ஹெச்.கே.கோரி இப்போது வசிப்பது சென்னையில். ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும், இலக்கியப் பத்திரிகைகளிலுமாக இதுவரை 200 ப்ளஸ் சிறுகதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள். மெய்ன் காட் கேட் என்கிற சிறுகதைத் தொகுதியும், காதில் மெல்ல காதல் சொல்ல என்கிற நாவலும் 2009ல் வெளியாயின. மாம்பழ சாலை என்கிற ஆறாவது சிறுகதைத் தொகுதியும், சிரிக்கும் நாளே திருநாள் என்கிற நாவலும் 2011ல் வெளியாகவிருக்கின்றன. 2009ம் வருஷம் கல்கி மற்றும் கலைமகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *