பாடும் விழிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 7, 2023
பார்வையிட்டோர்: 2,300 
 
 

கோவையிலிருந்து சேலம் நோக்கி,ஒரு பேருந்து பயணம்…

இருவர் அமரும் இருக்கையில் என்னோடு அமர்ந்திருந்த அந்த மனிதருக்கு சுமாராக நாற்பது வயது இருக்கலாம்.எதையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து உணரும் அவரது நடவடிக்கை,அவர் கண் பார்வையில்லாதவராக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது. கறுப்பு நிறத்தில் கண்ணாடி வேறு அணிந்து இருந்தார்.

ஆனால் அவரது உடை மற்றும் தோற்றம் நேர்த்தியாக இருந்தது. பொதுவாகக் கண் பார்வையில்லாதவராக இருந்தால்…

அவராகவே தன்னை தயார்ப் படுத்திக்கொள்வதில் சற்று சிரமாக இருக்கும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது.

அவரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

“சார், நீங்க எது வரைக்கும் போறீங்க, சேலமா? இல்ல… அதுக்கும் முன்னாடியா?” என்று கேட்டேன்.

அவர் திடுக்கிட்டவர் போல என்னைத் திரும்பிப் பார்த்தார்.

“என்னையா கேட்கறீங்க?!” என்றார்.

“ஆமாங்க, சும்மாதான்.. கேட்டேன்” என்றேன்.

“ம்.. சேலம் தான். நீங்க …” அவர் இன்னமும் பதட்டமாகவே பேசுவதாக எனக்கு தெரிந்தது.

“நானும் சேலம் தான் போறேன். உங்களுக்கு சேலத்துல ஏதாவது வேலையா.அங்க பஸ் ஸ்டாண்ட்க்கு யாராவது அழைச்சிட்டு போக வருவாங்களா” என்றேன்

நான் பொதுவாக அதிகம் பேசுகிற வகை இல்லை, ஆனால் அவருக்கு ஏதாவது உதவி தேவைப்படுமோ ? என்று கேட்கத்தோணியது.

“சார், நான் சேலத்துக்கு… “ஆடிச”னுக்கு… அதாவது இசைநிகழ்ச்சி தேர்வுக்கு , ஒத்திகை பார்க்கும் நிகழ்ச்சிக்கு போறேன். இப்போது அவர் குரலில் பதட்டம் குறைந்து மகிழ்ச்சி தெரிந்தது.

“பொதிகை தொலைக்காட்சி நடத்தும் “சிங்கர் ஸ்பெஷல்” நிகழ்ச்சிக்கு குரல் தேர்வு, இன்னைக்கு சாயந்திரம் 6 மணிக்கு இருக்கு.” என்றார்.

அவர் சத்தமாக பேசியததால்… பேருந்தில் பயணம் செய்கிற அனைவருமே ஒருசேர திரும்பிப் பார்த்தார்கள்.

பெரும்பான்மையான முகங்களில் என்னைப் போலவே ஒரு அதிர்ச்சி கலந்த வியப்பு. சிலர் நமுட்டுச் சிரிப்புடன் திரும்பிக் கொண்டார்கள்.

அவரே தொடர்ந்து…

“நான் கோயமுத்தூர் ரயில்வே ஸ்டேஷன் முன்னால்தான் பழைய சினிமா பாட்டெல்லாம் பாடிகிட்டே.. பண உதவி கேட்டுகிட்டு இருப்பேன். இரண்டு தடவை மெலடி ஆர்கெஸ்ட்ராவுல வாய்ப்பு கொடுத்தாங்க, மேடையில் கூட பாடி இருக்கேன்.”

“ஓ.. அப்படியா ! ” என் குரலில் தெரிந்த ஆர்வம்…அவரை மேலும் பேச வைத்தது.

“போன மாசம் கோயமுத்தூர்ல நடந்த “ஆடிச”ன பத்தி தகவல் கிடைக்கல. அதுல என்னை மாதிரி ஒருத்தர தேர்வு செய்திருக்கிறதா சொன்னாங்க. மெலடி ஆர்கெஸ்ட்ரா மேனேஜர் தான் இந்த சேலம் “ஆடிச”ன பத்தி சொன்னார். அவரேதான் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பினார் ”. என்றார்.

பின் முகம் மலர மகிழ்ச்சியோடு… நான் இருக்கும் திசை பார்த்து,

“நல்லா பாடுவேன் சார். எனக்கும் டிவி ஷோ’ல பாட வாய்ப்பு கிடைக்கும்னு நினக்கிறேன்.”

பட படன்னு அவர் அதே உச்ச சுருதியில் இயல்பாக சத்தமாகப் பேசினார், ஒரு பொதுப் பேருந்தில் பயணிக்கிறோம் என்ற உணர்வு அவருக்குத் தோணவில்லை.

மற்ற மனிதர்களின் முக சுளிப்பு, வியப்பு, சலிப்பு… இதெல்லாம் அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

நான் தான் அவரை பேச வைத்திருக்கிறேன் என்று, என்னையும் சிலர் ஒரு வித எரிச்சலோடு பார்ப்பதையும் உணர்ந்தேன்.

அதனால், நான் சன்னமான குரலில்,

“உண்மையாகவே ரொம்பப் பெரிய விஷயம். சந்தோசம்! சார் கொஞ்சம் மெதுவாகவே பேசுங்க. சத்தமா பேசுனா மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்குமுன்னு நினைக்கிறேன்” என்றேன்.

அவர் முகத்தில் புன்சிரிப்பு தோன்றியது.

அவரும் மெதுவாகவே பேசத் தொடங்கினார்.

“அது வந்து சார், ரயில்வே ஸ்டேஷன் முன்னாடி, ரோட்டிலே… வண்டி வாகனம் போற சத்தமெல்லாம் தாண்டி.. என்னுடைய குரலும் கேட்டாத்தானே, மக்கள் என்னை கவனிப்பாங்க.! நாலு காசும் கிடைக்கும். அதனால இப்படி சத்தமாவே பேசிப் பழக்கமாயிடுச்சு.”

சிரித்தபடியே பேசினார்.

‘என்ன ஒரு வெளிப்படையான, வெகுளித்தனமான பேச்சு.! சிரிப்பு.!’ அவரைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.

‘குறைபாடு எதுவும் இல்லாத மனிதர்களே, எவ்வளவு வசதி இருந்தாலும்,.. ஏதாவது ஒரு சின்ன வசதி குறைவுன்னா, அந்தக் காரணத்தையே சொல்லித் தள்ளிப்போடுகிற போது…

இவர் எப்படி, ஒரு போட்டித் தேர்வுக்கு இத்தனை தன்னம்பிக்கையோடு புறப்பட்டுப் போகிறார்.’

எனக்கு பிரமிப்பாக இருந்தது

‘ஏன் நானும் அப்படித்தானே?!’ எனக்கு மனசுக்குள் ஒரு மாதிரி பிசைந்தது.

‘நானே என்னோட ஒவ்வொரு நேர்முகத் தேர்வு, தொழில் சம்பத்தப்பட்ட மீட்டிங்களுக்கு எவ்வளவு பயப்பட்டிருக்கிறேன்.

என்னோட படிப்பு, திறமை இதையெல்லாம் தாண்டி ஏதாவது அதிசயம் நடந்து வேலை கிடைக்காதா, இந்த பிசினஸ் மீட்டிங்ல வெற்றி கிடைக்கணுமேன்னு பதட்டப்பட்டிருக்கிறேன்.’

‘குறைபாடு என்பது உடலுக்குத் தானே தவிர மனசுக்கு இல்லை என்றே தோன்றியது.’

‘எந்த பிரச்சனையையும் பார்க்கும் பார்வையில்தான் குறை தெரிகிறது. இந்தச் சந்திப்பு எனக்குள் சில மாற்றங்களை உண்டாக்கும்’ என்று நினைத்தேன்.

“முயற்சி செய்தால் மட்டுமே முன்னேற்றம் வரும். நம்மால் முடியாதுன்னு முடங்கி கிடந்தால் வாய்ப்புகள் காத்திருக்காது” என்று என்னிடம் நானே சொல்லிக்கொண்டேன்.

சேலம் வந்ததும், அவரிடம் கிட்ட ஆடிசன் நடக்குற இடத்தின் அட்ரஸ் கேட்டு, ஒரு ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தேன்.

மனசார அவருக்கு வெற்றிக் கிடைக்க வாழ்த்து சொன்னேன்.

“நல்லா பாடுவேன் சார். எனக்கும் டிவி ஷோ’ல பாட சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறேன்” என்று அவர் சொன்னது காதுக்குள் ரிங்காரமிட்டது.

பார்க்கும் விழிகள் இல்லையென்றாலும் பாடும் விழிகளை அன்று தான் பார்த்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *