பாசாங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 11, 2024
பார்வையிட்டோர்: 103 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மழைக்கால இரவு. நானும் குழந்தைகளுமாக விளக் கண்டை உட்கார்ந்திருந்தோம். 

ஜன்னல் வழியாக, யாரோ, சொல்லியனுப்பியதுபோல் விசித்திரமான பிராணிகள், வந்து சேர்ந்தன. தத்துக்கிளி -மணல் வர்ணம் ஒன்று, இலை வர்ணம் ஒன்று, எப்பொழுதும் கை கூப்பி பிரார்த்தனை செய்வதுபோல் பாசாங்கு செய்யும் இடையன் பூச்சி ஒன்று. சில ஈக்கள்! ஈசல்கள்; சிறிய பூரான். இன்னும் எவ்வளவோ சில்லறைப் பூச்சிகள்! 

நல்ல வேளையாக விளக்கு அரிகேனாக இருந்தது. இல்லாவிட்டால் விளக்கில் விழுந்து அணைந்திருக்கும். அது முடியாது போனபடியால் எதோ திருவிழாக் கூட்டத்தைப் போல் முட்டி மோதிக்கொண்டு வளைய வருவதும் போவதுமா யிருந்தன. 

இப்படியிருக்கும்போது “உஸ்’ஸென்று சத்தமிட்டுக் கொண்டு ஜன்னல் வழியாக கருவண்டொன்று பறந்து வந்து விளக்கண்டை மல்லாந்து விழுந்து, திரும்புவதற்கு கால்களை உதைத்துக்கொண்டு முயற்சி செய்தது. எப்படியோ தத்தளித்து விட்டுத் திரும்பி நகர ஆரம்பித்தது. 

அதுவரையில் சும்மாயிருந்த குழந்தைகளிலொன்று கருவண்டு நகர்வதைப் பார்த்ததும் அதை மெதுவாக பிடிக்க முயன்றது. குழந்தையின் கைபட்டதோ இல்லையோ வண்டு நகரவில்லை. கால்களை இழுத்து மடக்கிக்கொண்டு உருண்டை யாகி விட்டது. வண்டு உருண்டது. செத்துப்போய் விட்டதுபோல் பாசாங்கு செய்தது. குழந்தைக்குத் தெரி யுமா? செத்துப்போய் விட்டதென்று பயந்து சும்மா இருந்து விட்டனர்… 

இந்தப் பாசாங்கைப்பற்றி என் சிந்தனை ஓடிற்று. பொது கலையாகவன்றோ இயற்கை இதை அமைத்திருக்கிற கோழைத்தனத்திற் கன்றோ இயற்கை சபாஷ் போடுகிற இப்படி இயற்கை செய்திருக்க சில அறிஞர்கள் பயத்தை பழிக்கிறார்கள். கோழைத்தனத்தை குற்றம் என்கிறார்க பயத்துக்கும் பாசாங்குக்கும் வாழ்வில் இடமுண்டா இல்லையே. 

இயற்கையைக் கவனித்தால் உண்டென்றுதான் தோன்றுகிறது. இல்லாவிட்டால் வண்டு பாசாங்கு செய் வானேன்? செத்துப்போய் விட்டதுபோல் பாசாங்கு செய்தால் யாரும் அதை சீண்டமாட்டார்கள் என்று வண்டுக்கு நன்றாகத் தெரியும். பயனளித்தால் ஏன் பாசாங்று செய்யக் கூடாது? 

இயற்கையில் பயத்திற்குப் பொருளுண்டு; அது ஒரு எச்சரிக்கை. எச்சரிக்கையை அறிந்து நடக்காவிட்டால் பின்பு தொல்லைதான். பாசாங்குக்குப் பயன் உண்டு. அது ஒரு விதமான தற்காப்பு. இந்தத் தற்காப்பு உணர்ச்சியை நமது ரத்தத்திலேயே இயற்கை கலந்திருப்பதனால்தான் நமது வெறும் தர்க்க அறிவுக்கு அவ்வுணர்ச்சி பனி கிறதில்லை 

இந்தப் பாசாங்கை இயற்கை மட்டும் அன்று; சில அத்வைதிகள் கூடப் போற்றுகிறார்கள். “நீயே கடவுள்” என்று உபதேசம் செய்யும்பொழுது சாதாரண மனிதன் மலைக்கிறான். ‘நானா கடவுள் என்று அவநம்பிக்கைப்படு கிறான். அப்பொழுது அத்வைதி “நீ எதுவாயிருந்தாலும் சரி; கடவுள் என்று பாசாங்கு செய்து பார்; பாவனை செய்து பார். கடவுளே ஆகிவிடுவாய்” என்று சொல்வான். இந்த உண்மையை வாழ்வில் கூடக் கண்டிருக்கிறோம். நாடகத்தில் ராஜபார்ட் வேஷம் போட்டவன் தினசரி வாழ்க்கையில் ட ஒருமாதிரியாக நடப்பதை நாம் பார்த்ததில்லையா? இந்த தத்துவத்தை உணர்த்த ஒரு கதைகூட உண்டு. ஒருவன் துறவி வேடமிட்டுத் திருடச் சென்றான் வீட்டுக்காரி துறவி என்று உபசரித்தாள். வீட்டுக்காரியின் மெய்யன்பைக் கண்ட திருடனுக்கே விழிப்பு உண்டாகி விட்டது. பொய்த் துறவுக்கே இவ்வளவு பெருமையானால் மெய்த் துறவுக்கு எவ்வளவோ என்ற எண்ணம் உண்டாயிற்று. அதே நிமிஷத்தில் திருடன் இறந்தான். துறவி பிறந்தான். 

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *