பாங்கொலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 561 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘டம, டம்’ என்ற பள்ளிவாசல் நகராவின் டங்காரம் காற்றிலே மிதந்து சென்றது. வானமுகட்டை அண்ணாந்து நோக் கும் மணராக்களின் உச்சிக் குடைவுகளினின்றும் புறாக்கள் கிளம்பிச் சிறகடித்துப் பறந்தன. சிறிது நேரத்தில் “மஃரிப் ” தொழுகைக்கு அழைக்கும் மோனாதிரின் பாங்கொலி கேட்டது.

‘அல்லாஹு அக்பர்…. லாஇலாஹ இல்லல்லாஹ்’ 

மோதினார் முஸ்தபாவின் வெண்கலக் குரலில் கணீரெனக் கேட்டது பாங்கு நாதம். 

வடிவம்மாளுக்குக் கைநிறைய வேலை. பொழுது சாய்வதைக் கூட உணராமல், மும்முரமாக அவள் வேலையில் ஊன்றியிருந் தாள். பாங்கின் நாதம் கேட்டதும், அப்படியே இருந்த இடத் தில் சாமான்களைப் போட்டு, எழுந்துநின்றாள். கடிகாரத்தின் இரு முட்களைப் போல, அவள் வாழ்வில், பாங்கொலிக்கும், அவள் பச்சிளங் குழந்தைக்கும் தொடர்பு உண்டு. தன்னாடைகளை மாற் றிக் கொண்டு, தொட்டிலில் கிடக்கும் தன் உயிர்ப்பிஞ்சை தூக்கி முத்தமீந்தாள். வீட்டைவிட்டு வெளியேற எண்ணியதும், அவள் மனசு ‘திக்’கென்று ஒரு முறை அடித்தது. ஆனால் கைக் குழந்தைக்கோ காய்ச்சல் தகித்துக் கொண்டிருந்தது. நேற்று முன் தினம் நிகழ்ந்த சம்பவம் அவள் மனத்திலே சுழித்து நின்றது ஒரு வினாடி. சிறிது நேரம் சிந்தித்து நின்ற அவள் ஏதோ தெம்பு கொண்டவள் போல் வீட்டை விட்டு வெளியேறினாள். வடிவம்மாள் செல்வத்தைக் கண்டதும், அடுத்தவீட்டு, எதிர்வீட்டு மாதர்களும் அவள் நிழலையொட்டிப் பின்பற்றினர். வடிவம் மாளுக்கும், மற்ற பெண்களுக்கும் நெஞ்சிலே ஒரு சலனம். அதற்கு வித்தாயிருந்தது ஊரிலே சுழன்ற சலசலப்பு. 

தொழுகை முடிந்ததும், ‘பாத்திஹா’ ஓதுவது, வடிவம் மாள் காதுகளில் ரீங்காரித்து. இன்னும் சில நிமிடங்களில் மோதி னார் வருவாரென எதிர்பார்த்து நின்றனர் அந்தப் பெண்கள், ஊரில் புரையோடிய பிளவால் அவர் மனசு மாறிடுமோ என மற்றப் பெண்கள் எண்ணினும், அந்த எண்ணத்தின் கீற்றுக்கூட வடிவம்மாள் சிந்தனையில் எழவில்லை. அவரின் பொன்னான குணத்தைப் பற்றியும், கனிவான மொழியைப் பற்றியும் அவளுக்கு ‘ரொம்ப காலமாகத் தெரியும். அதாவது அவள் தாயானது முதல், இதுவரை மூன்றாவது குழந்தையை ஏந்தி நிற்கும் வரை. அவள் மோதினாரை ‘அப்பா’ என்று தான் அழைப்பாள். அவரும் தன் மகளைப்போல வாஞ்சையோடு அம்மா, வடிவு’ என்றே சொல்லுவார். தனது ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்படின், முதன் முதலில் தன் அப்பா’விடம் – மோதினாரிடமே, ஓதி ஊதக் குழந் தையை எடுத்து வருவாள்; அல்லது அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வாள். மோதினாரின் வருகை அவள் நினைவுத் தொடரை நிறுத்திவிட்டது. வடிவம்மாள் அருகில் வந்து, அக்குழந்தையின் புன்னகையை வர வழைத்து, அதற்கு ஓதிப் பார்த்தார். அதைப்போல் மற்றவர்கள் குழந்தைகளையும் ஓதிப் பார்த்தார். வடிவம்மாள் குழந்தைக்குக் கொஞ்சம் அதிக மாகவே ஓதியதாக மற்றப் பெண்கள் உள்ளூர எண்ணினார்கள். 

நல்லூரிலே நேற்று முன்தினம் வரை எல்லோரும் நல்லவர் களாகவே இருந்தார்கள்; நல்லவர்களாகவே வெளிப் பார் வைக்குப் பட்டார்கள். மனிதர் உள்ளக் காட்டில் மேயும் எண்ணங்களை அறியும் பூதக் கண்ணாடி ஒன்று கண்டு பிடிக்கப் பட்டால், ஒரு வேளை உலகில் பூசலுக்கே இடமில்லாது போக லாம். நேற்றுவரை, இன்றுவரை, ஏன் நாளையுங்கூட, அண்ணன் தம்பிகளாக, மாமன், மருமகன்களாக முறை கொண்டாடிப் பழகியவர்கள், பழகப்போகிறவர்கள் மத்தியில் பகை புகைந்து, காட்டுத் தீயாக வளர்ந்தது என்றால், மனித வாக்கும் போக்கும் வேறுபட்டு இருப்பதே காரணம். 

நல்லூரை இரண்டாகப் பிரித்துச் சென்றது, பொருளை யினின்றும் கிளைவிட்ட ஒரு கால்வாய். அதன் ஒரு கரையில் நிற்கும் கோயிலும், மறு கரையில் நிற்கும் பள்ளிவாசலும் காலத்தையே அளக்க உதவும் சின்னங்களாக இருக்கின்றன. முறையே இரு கரைகளிலும் இந்துக்களும் முஸ்லிம்களும் வாழ் கின்றனர். இரண்டு கரைகளையும் இணைக்கும் பாலம் ஒன்றினைப் போலவே, இரு சாராரும் நேசமுடன் இருந்தார்கள். எப்போதே அவர்கள் மூதாதையரோடு புதையுண்டுபோன போன ஒரு பிரச்சனை, மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டது. அப்பொழுது மோதினாருக்கு நரை காணாதவயசு. இன்று அவருக்கு அறுபது வயசு கண்டு விட்டது. ஆனால் அச்சம்பவம், நேற்று நடந்தைப் போலப் பட்டது. 

இந்துக்கள் கோயிலில் பெரும் விழாக் கொண்டாடினார்கள். அன்று வெள்ளிக் கிழமை. கால்வாயைக் கடந்து செல்லுகையில், கோயில் ஊர்வலம் பள்ளிவாசல் அருகில் வரலாம் என்று யாரும் எதிர் நோக்கவில்லை. ஜும் ஆ தொழுகை துவங்கும் வேளை. எனவே சிறிது தூரத்திற்குக் கொட்டடிப்பதை நிறுத்திக் கொண்டு செல்ல வேண்டினர் முஸ்லிம்கள். இந்துக்களுக்கு அந்தக் கோரிக்கை புதிராகப் பட்டது; காரணம் அவர்கள் தெரிந்தவரை, இது போன்ற ஒரு பிரச்சினை எழுந்ததாக இல்லை. முஸலிம்களுக்கும் இந்த மாதிரி இக்கட்டான சந்தர்ப்பம் இது வரை ஏற்பட்டதாக நினைவில்லை. எனவே இந்த அண்ணன், தம்பிமார்கள்’ ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்கத் தயங்கி னார்கள், வார்த்தைகள் தடித்தன; வாய்ச் சண்டை, கைச் சண்டையாகி, பின்னர் கலவரமாக வளர்ந்தது, ரத்தம் சிந்தி விட்டனர் இரு சாராரும். இருவகையினரும் நீதியைத்தேடி, கோர்ட்டுக்குச் சென்றனர். இரு கட்சிகளுக்கும் கில்லாடி’ வக்கீல்கள் தான். இந்த சிக்கலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைத்தார் வெள்ளைக்கார ஜட்ஜ். 

பள்ளிவாசலுக்கு மேற்புறம் நூறு கஜ தூரத்தில் ஒரு எல்லைக் கல் நாட்டப்பட்டது. அதற்கு மேற்புறமாக எந்நேரத்திலும், கொட்டடித்துச் செல்லலாம். இந்த முடிவை இரு கட்சியினரும் ஏற்றுக்கொண்டனர். மேளச் சத்தம் நூறு கஜ தூரத்திற்கு அப்பால் தானே கேட்கும்! எனவே அதிகத் தொல்லை இராது எனக் கருதியே நீதிபதி அவ்விதம் தீர்ப்புச் செய்தார் 

அன்றிலிருந்து அந்த எல்லைக்கல்லுக்கு முக்கியத்துவம் ஏற் பட்டது. இந்து முஸ்லீம்களுக்குள் நேசத்தையும் அன்புறவை யும் வளர்த்தது. புகைந்த பூசலையும், பகைமையையும் வேர 

றுத்த பெருமை அந்த எல்லைக்கல்லுக்குத் தான்! இப்படியே காலம் ஓடியது. அன்று முதல் இன்றுவரை முஸ்தபாவே மோதினா ராகப் பணியாற்றி வருகிறார். 

இப்பொழுது மோதினாருக்கு நரையும் திரையும் கண்டா லும், அறுபதாவது வயதைத் தாண்டினாலும் பள்ளிவாசல் காரியங்களை சிரமப்பட்டாவது, தம் மகன் காஸிமின் உதவி கொண்டாவது, மிகத் தெம்புடனே ஆற்றி வந்தார். உள்ளத் தில் வலிமை குன்றாதவர். யாருக்கும் எதற்கும் அஞ்சாதவர். பட்டவர்த்தனமாக மனதில் பட்டதைக் கூறுவார். பள்ளிவாசல் சம்பந்தமான எந்தப் பிரச்சனையையும் ஜமா அத்’தாரிடம் துணிந்து பேசுவார். இதற்கெல்லாம் அவருக்கிருந்த ஈமானே காரணம்! 

ஊரிலே மிகவும் செல்வாக்கும், செருக்கும் படைத்தவர் அப்துல்காதர். பஞ்சாயத்துபோர்டு உதவித்தலைவர் ஊர் பிரமுகர்களில் முக்கியமான புள்ளி. அவர் உதட்டசைவுக்கு ஊரில் பலர் காத்துக்கிடப்பார்கள். அவர் நேரடியாகச் சம்பந்தப்பட்டப் பிரச்சனையை, அவரைப் பாதிக்கும் ஒரு விஷயத்தை, அன்று ஜும்ஆ‘வில் மோதினார் வெளியிட்டார் எனில், அவரது துணிவைப் பாராட்டத்தான் வேண்டும். மோதினார் கிளப்பிய பிரச்சனையைக் கேட்டு ‘ஜமா அத்தார்’ முகங்களில் ஆச்சர்யம் காணப்பட்டது. ‘என்ன துணிச்சலப்பா இந்த கிழத்துக்கு?’ என உள்ளூறப் பேசினார்கள். அதுவும் அப்துல் காதருக்குப் போட்டியாக…! என கொஞ்சம் நெஞ்சு திக் ‘கியவாறே முணுமுணுத்தனர். மோதினார் தூண்டிவிட்ட விஷயத்தைக் கேட்டதும், அப்துல்காதரே அதிர்ந்து விட்டார்! 

எல்லைக் கல்லுக்கு அப்பால், அப்துல் காதருக்குச் சொந்த மான வருமானம் ஈயாத வெட்டவெளித் தரிசு கிடந்தது. ஒரு செப்புக்காசும், செலவின்றி, துளி உழைப்பின்றி அதிலிருந்து மாதம் இருநூறு ரூபாய் சுளையாகக் கிடைப்பதென்றால், யார் தான் வேண்டாம் என்பார்கள்? அந்த வெளியில் சினிமாக் கொட்டகை போட்டுக்கொள்ள அனுமதித்தார் அப்துல் காதர். பஞ்சாயத்துப் போர்டில் தனக்குள்ள செல்வாக்கினால், விரைவில் லைசென்ஸும் வாங்கிக் கொடுத்தார். மேள தாளத்தோடு, சினிமாக் கம்பெனி துவங்குகிறது! எல்லைக் கல்லுக்கு அப்பாலே சினிமாக் கொட்டகைக்காரர்கள் ‘பாண்டு முழங்கினார்கள். அவர்கள் போடுகிற ரிக்கார்டு சங்கீதம், ‘மஃரிப் தொழுகை யின் போது ‘கணீரென’க் கேட்டது. இதனையே ஒரு பிரச்சினை யாக கொண்டுவந்தார் மோதினார். ஜமாஅத்தார் கூடிப் பேசலானார்கள். 

“அப்துல் காதர் மனசு வச்சா இந்தச் சங்கடமே தீர்ந்து விடும்” என மோதினார் அவரைப் பார்த்தே கூறினார். 

தம் வருமானத்தில் கை வைக்கிறார்களே என்று அவருக்கு ஆத்திரம். ஒருவனும் தனக்குப் போட்டியாக முளைக்க மாட் டான். இந்த மோதினார் – இந்தக் கிழம் தனக்குப் போட்டி யாக…… என ஓடியது அப்துல்காதர் சிந்தனை. 

“எல்லைக் கல்லுக்கும் தள்ளித்தானே கொட்டகை இருக்கிறது?’ அப்துல் காதர் பிரச்சினையை சமாளிக்க முயன்றார். 

‘ஆனால் கொட்டகைச் சத்தம், தொழுகைக்கு இடைஞ் சலாக இருக்கிறது” என்றது ஒரு துடியான வாலிபம். 

‘சினிமாக்கொட்டகைக்கு லைஸென்ஸு இருக்கும் போது நாம் என்ன செய்ய முடியும்?’ அப்துல் காதரின் நிழலில் ஒதுங்கிய ஒரு நபரின் கேள்வி இது. கலைக்டருக்கு எழுதணும்’ என்றார் மோதினார் சிறிதும் தயங்காமல். சில வாலிபர்கள் வரவேற்றனர். அப்பொழுதுதான் அப்துல் காதருக்கு ஆத்திரம் பீறிட்டது. சீற்றமும், வெறியும் கலந்த குரலில் ‘உங்களால் ஆனதைப் பாருங்கள்’ என உரத்துக் கூறி விட்டு வெளியேறினார். 

வாலிபர்கள் தங்களுக்கு ஆதரவாகப் பேனாவையும் தாளை யும் நாடினார்கள். அப்துல் காதருக்கு ஆள் பலம், செல்வாக்கு பலம். அதிகாரிகள் விசாரணை ஆரம்பிக்கவே, ‘ஜமாஅத்’ இரண்டு பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் கோயிலில் உற்சவம் ஏற்பட்டது. ஐம்பது அறுபதாண்டுகளுக்குப் பின்னர் அது ஒரு பெரிய, முக்கியமான உற்சவமாம். அண்டைக் கிராமங் களிலிருந்து அநேகர் வந்தார்கள். எல்லைக் கல்லின் பெருமைக் கும், ஊர் அமைதிக்கும் சோதனை ஏற்பட்டது. 

கோயிலினின்றும் மிகப் பிரமாண்டமான ஊர்வலம் கிளம்பி நகர்ந்து வந்தது. வழக்கத்திற்கு மாறாக, உற்சவ உற்சாகத் தீவிரத்தில் ஊர்வலத்தின் வழி தப்பியது. எல்லைக் கல்லுக்கு இப்பால் ஊர்வலம் போகையில் ‘மஃரிப்’ வேளை. பிறகு கேட்கவா வேண்டும்? சரித்திரம் ஒரு கிளிப்பிள்ளை மாதிரி ! சொன்னதையே திரும்பக் கூறும்! மற்றொரு இந்து முஸ்லிம் கலவரம், அந்த நல்லூர் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. அதன் விளைவாகக் குறைந்தது இருபத்தைந்து பேர், இரு சாராரி லும் ஆஸ்பத்திரியில் இடம் பெற்றனர். போலீஸ் கண்காணிப் பில் ஊர் உறங்கிற்று. காலிகளுக்கும் கேடிகளுக்கும் கொண் டாட்டம்; ஒன்றுமறியாத அப்பாவி மக்களுக்குத் திண்டாட்டம்! 

ரங்கன் ரவுடிகளில் முதல் நம்பர் ! அவன் அட்டகாசம் இன்னும் ஒழுங்காக ஆரம்பமாகவில்லை! அவன் இன்னும் யாரிடமிருந்தும், அத்தகைய காரியத்திற்கு ‘அட்வான்ஸ்’ பெறவில்லை. எனவே அவன் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந் தான். 

அன்றிரவு வடிவம்மாளின் குழந்தைக்கு நல்ல காய்ச்சல். அவளுக்கு ஒரே பீதியும், பயமுமாயிருந்தது. மோதினாரை அழைத்து வந்து ஓதிப் பார்க்கவேண்டுமென்று எண்ணினாள். ஆனால் வெளியே கண்ணைப் பொட்டையாக்கும் கும்மிருட்டு, காலமோ கெட்டுக்கிடக்கிறது ! இந்த அகால வேளையில் ‘அப்பா’ வருவார்களா? என்ற ஐயம் அவள் மனத்தில் தெளிந்தது. இருந்தாலும், தூங்கும் மூத்த குழந்தைகளுக்கும், காயலில் கிடக்கும் கைக் குழந்தைக்கும் காவலாகக் கணவனை வைத்து விட்டு, மனத்தில் ஒரு நம்பிக்கையுடனும், உறுதியுடனும் வெளி யேறினாள். ‘அப்பா’ இரவில் எங்கிருப்பார் என்ற விவரம், அவளது முதல் குழந்தை பிறந்தது முதல் நன்றாகத் தெரியுமே? அவள் கால்கள் நடுக்கமுடன் பள்ளிவாசலை நோக்கி நடந்தன. மோதினார் தஸ்பீஹ் மணிகளை உருட்டிக்கொண்டு ஓதிய வாறிருந்தார் அங்கே. ‘அப்பா…’ குரலைக் கேட்டெழுந்த மோதினார், மின்சார ஒளியில் வடிவம்மாளைக் கண்டதும் திகைத் தார். 

‘யார் வடிவா?’ என வியப்புடன் வினவினார். 

‘ஆமாம்… அப்பா ‘ 

‘என்ன விசேஷம்மா?’ என்று கூறிக்கொண்டே படிகளில் இறங்கினார். 

குழந்தைக்கு ரொம்பக் காய்ச்சல் அடிக்குது, அப்பா! நீங்க க ஒரு தடவை வீட்டுக்கு வந்து ஓதிட்டு வந்தாப் போதும்’ என்றாள் வடிவம்மாள், 

‘ரங்கனைத் தானே வரச் சொல்லணும். நீயாம்மா வந்தே ஒத்தையிலே’ என்றார் மோதினார்; 

‘அவங்களை அனுப்பிச்சா நீங்க ஒருவேளை வருவீங்களோன்னு சந்தேகம். அதனால்தான் நானே வந்தேன்?’ அவள் சந்தேகத்தை அவர் புரிந்துகொண்டார். ரங்கன் தான் ரவுடியாயிற்றே! அவன் நிழல் பட்டால்கூடப் போதுமே, தீவினைக்கு! 

மோதினார் சிறிது சிந்தனை செய்தார். கொஞ்சம் தயக்கம் ஏற்பட்டது; ஒருமுறை வடிவம்மாளின் துயர் தோய்ந்த முகத் தைப் பார்த்தார். உள்ளத்தில் தயக்கம் வற்றிவிட்டது. வடிவம் மாளைப் பின்தொடர்ந்து, அந்த நடு நசியில், அவள் மனை ஏகினார். ரங்கன் மிகவும் பக்தியாகக் கைகட்டிக் கொண்டு நின்றான். நீண்ட நேரம் கைக் குழந்தைக்கு ஓதிப் பார்த்துவிட்டு, மற்றிரு குழந்தைகளுக்கும் ஓதிப்பார்த்தார். 

“அல்லாஹ் அருளால் குணமாகி விடும்; நீ ஒண்ணுக்கும் கவலைப்படாதேம்மா ” மோதினாரின் இச்சொற்கள் தான் வடிவம்மாளுக்கு எவ்வளவு நம்பிக்கையையூட்டின? 

அவர் வெளியேறவும், ‘துணைக்கு நான்’ வரட்டுமா? என்றான் ரங்கன். 

“வயசு தள்ளிப்போன எனக்கென்னப்பா பயம்? வடிவுக்குத் துணையாயிரு !” என்று சொல்லிவிட்டுப் போனார் பெரியவர்: 

மறுநாள் குழந்தைக்கு நல்ல குணம் கண்டிருந்தது. காய்ச்சலும் விட்டிருந்தது. வடிவம்மாளுக்கு ஒரு திருப்தி. அவளுக்கு நன்றி கலந்த உணர்ச்சி உள்ளத்தில் மிகைந்து நின்றது. மோதி னாருக்கு எவ்விதம் கைம்மாறு செய்யமுடியும்; அவளோ ஏழை ! ஆனால் ‘அப்பா’வுக்குத்தான் அவள் மீது எவ்வளவு பாசம்! அவள் மனம் இவற்றை எண்ணிப் பூரித்தது. ‘ஆண்டவனுக்கு அடுத்தாற்போல்’ எனவும் ஒரு கணம் எண்ணியது. 

அன்று காலையில் ஊர்ப் பிரமுகர் ஒருவர் அழைப்பதாக ரங்கனைத் அவன் கூட்டாளிகளில் ஒருவன் அழைத்துச் சென்றான்; மாலை நேரத்தில் நாலைந்து பேர் ரங்கன் வீட்டில் கூடினார்கள். வடிவம்மாள் அடுப்பங்கரையில் வேலை பார்த்துக் கொண்டிருந் தாள். ரங்கனின் கோஷ்டி வெளிக் கதவைத் தாளிட்டுக் கொண்டு, ஏதோ இரகசியமாகப் பேசலானார்கள். வடிவம்மாள் அடுப்பங்கரை வேலையினின்றும் மீண்டு, அவர்கள் பேசுவதை ஒதுங்கி நின்று உன்னிப்பாகக் கேட்டாள். அவர்கள் பேச்சில் ‘பள்ளி வாசல், இரவு பன்னிரண்டு மணி’ என்ற சொற்கள் அதிகமாக அடிபட்டன. ஏதோ ஆபத்துக்கு வித்திடும் பேச் செனப்பட்டது, வடிவம்மாளுக்கு. அவளுக்கு உள்ளூர கலக்கம். ரங்கனை தடுத்து நிறுத்த அவளால் முடியாது. பள்ளிவாசல் என்றபோது ‘அப்பா’வின் நினைவே எழுந்தது. என்ன செய்வ தென்றும் அவளுக்கு விளங்கவில்லை. அவர்கள் பேச்சிலிருந்து அன்றிரவு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று மட்டுமே தெளிவாகத் தெரிந்தது: ரங்கன் ஆறு மணிக்கே வீட்டைவிட்டுக் கிளம்பி விட்டான். வடிவம்மாளின் மனக் கலக்கம் அதிகரித்தது. அவள் நிம்மதி இழந்தாள். இரவு பத்தரை மணி வரை ரங்கன் வராதது அவள் எண்ணத்தை நிச்சயப்படுத்தியது. அப்பா’வின் நினைவுதான் அவள் உள்ளத் தைக் குலைத்தது. மூன்று குழந்தைகளும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தன. ஒரு விதமான துணிவு அவள் உள்ளத்தில் உருவாயிற்று. ஆண்டவன் பாதுகாப்பில் குழந்தைகளை விட்டு விடத் தீர்மானித்தாள். கதவை இழுத்துச் சாத்திவிட்டு வெளி யேறினாள். 

நல்ல இருட்டு ! பேச்சு மூச்சற்ற அமைதி! ஆள் அரவம் இல்லாத மோனம் ! கால்வாயைக் கடந்ததும், அவள் மனம் பட பட வென அடித்துக் கொண்டது; உள்ளம் அலையாடிக் கொண்டு தவித்தது. இன்னும் ஒரு பர்லாங்கு தொலைவில் பள்ளிவாசல் இருக்கிறது. வடிவம்மாள் வேகமாக விரைந்து கொண்டிருந்தாள். சினிமாக் கொட்டகைச் சத்தம் தூரத்தில் கேட்டது. இரண்டாவது ஆட்டம் முடிந்த பிறகுதான் ரங்கன் கோஷ்டி காரியத்திலிறங்கும். இதை வடிவம்மாள் ஒட்டுக் கேட் டிருந்தாள். எனவே அதற்குமுன் ‘அப்பா விடம் விஷயத்தை எத்திவிட வேண்டும் என எண்ணினாள். அவள் போகும் வேகத் தில், சேலைத் தலைப்பு காலில் பின்னியது. பின்னிய கால்கள், கற்பாறையொன்றில் மோதியதும் அவள் தலை குப்புற வீழ்ந்தாள். 

‘அம்மா!…’ 

அலறல் இருட்டூடே கேட்டது. அந்தக் குரல் வந்த பக்கம் பாட்டரியின் ஒளிப்பாணம் தூரத்திலிருந்து வந்து விழுந்தது. சிறிது நேரத்தில் அந்த பாட்டாரியின் ஒளிப் பிழம்பு அந்த இடத்தை நெருங்கியது. பாட்டரியைப் பிடித்திருக்கும் கை நடுங்குவதை, ஒளிப்பாணத்தின் சிதறல் காட்டிற்று. ‘ஆ… வடிவு.. 

ரங்கன் அவள் நெற்றியிலிருந்து விழும் இரத்தத்தைக் கண்டதும் திகைத்துவிட்டான். அவள் மயங்கிக் கிடந்தாள். அப்படியே அவளைத் தூக்கி எடுத்து, தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு விரைந்தான். 

இரவோடு இரவாகக் ‘கம்பவுண்டரை அழைத்துவந்து காட்டி அவள் நெற்றிக் காயத்துக்கு மருந்து கட்டச் செய்து. பயத்தோடும், கண்ணீர்த் திவலையோடும் அவள் அருகிலேயே இரவு முழுவதும் விழித்திருந்தான் ரங்கன். கிழக்கு வெளுக்கும் நேரமாகிவிட்டதைக்கூட அவன் உணரவில்லை. படுக்கையில் வடிவம்மாள் புரள்வதைக் கண்டதும் அவனுக்குத் தெம்பும், நம்பிக்கையும் ஏற்பட்டன. 

‘அப்பாவுக்கு ஒண்ணுமில்லையே?’ என்றாள் வடிவம்மாள் பதட்டமாக; படுக்கையினின்றும் எழுந்து அமர்ந்தாள். 

‘ஒன்றுமில்லை வடிவு. நீ நிம்மதியாகத் தூங்கு’ ரங்கன் பேச்சில் அவளுக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. பிறகு அவன் முழு விவரங்களையும் கூறி முடித்தான். 

அத்தருணம் காலை மோனத்தைக் கலைக்கும் முதற் குரல் ஒலித்தது. வடிவம்மாளின் காதுகள் அக்குரலை உன்னிப்பாகக் கேட்டன. 

‘அல்லாஹு அக்பர் ; அல்லாஹு அக்பர்… லாஇலாஹ இல்லல்லாஹ்’ என முடிந்தது அந்த இனிய கீதம். இப்பொழுது ரங்கன் பேச்சில் முழு நம்பிக்கை கொண்டாள் வடிவம்மாள். அவள் விருப்பத்திற்கும், வேண்டுகோளுக்கு மிணங்க, அப்பாவை அழைத்து வந்தான் ரங்கன். அவரைக் கண்டதும், அவளுக்கு மலர்ச்சி ஏற்பட்டது. மலர்ந்த அவள் முகத்தைக் கண்டதும் ரங்கன் மனம் தேறியது. அப்பாவிடம் ரங்கனை வைத்துக் கொண்டே முழு விவரமும் கூறினாள் வடிவம்மாள். அவள் நெற்றிக் காயத்தைக் கண்டதும் அவருக்கும் வேதனை ஏற்பட்டது. ரங்கனுக்கோ அவளைப் புரிய முடியவில்லை. அவன் முகம் குன்றி னாலும், வடிவம்மாள் தேறிவிடுவாள் என்ற எண்ணம் இன்ப மூட்டியது. 

அப்பாவுக்கு ஒன்றுமில்லை என்றதுமே, தன் நெற்றிக் காயம் ஆறிவிட்டதாக உணர்ந்தாள் வடிவம்மாள். அவளுக்கிருந்த பக்தியும் பாசமும் தளிர்த்துச் செழித்தன. 

அந்த எல்லைக் கல்லுக்கும் அப்பால்… மோதினார் முஸ்தபா வையும் வடிவம்மாளையும் பிணைக்கும் அன்புப் பாலத்தை நல்லூர் வரலாறு சொல்லப் போகிறதா என்ன? நல்லூரார் தான் உணரப் போகிறார்களா? 

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *