பழையதும் புதியதும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி மறுமலர்ச்சி
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 3,880 
 
 

(1946-48ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏய்! ஏய்!” என்று இரண்டு அதட்டல் போட்டு மாடுகளைத் தட்டிவிட்டான் கார்த்திகேசு. ஒரு நிலையில் நின்று அலுத்துப்போன மாடுகள் உற்சாகத்தோடு முதலில் கொஞ்சத் தூரம் ஓடின. இந்தச் சமயம் கார்த்திகேசு என்பக்கம் திரும்பி, பெருமை பொங்க ஒரு கம்பீரப்பார்வை பார்த்தான். அதற்கு ஒன்றும் சொல்லாம லிருந்தால் நல்லாயிருக்காதல்லவா?

“அவசரமில்லை, அண்ணே! ரயிலுக்கு நேரமிருக்கு ; மாடுகள் மெள்ளப் போகட்டும். ஏது, சோடி வாய்த்துவிட்டது போலிருக்கே உனக்கு!” என்று சும்மா சொன்னேன். கால்மைல் தாண்டியதும் நடக்கும் சங்கதி எனக்குத் தெரியாதா? ஆனால், மனுஷன் பாவம், நான் கூறியதை மெய்யென்றே நம்பிவிட்டான். முகஸ்துதியிலே பழைய காலத்து வெள்ளை மனம் தன்னை மறந்து போய்விடுகிறது.

ஆசனப் பலகையில் நேராக இருந்த மனுஷன் திரும்பி ஒரு கோணமாக இருந்து கொண்டு “ஹும்! இதெல்லாம் என்ன மாடுகள் தம்பி முன்னே முன்னே எப்படி எப்படி மாடுகள் என்னிடம் நின்றன தெரியுமே? உனக்குத் தெரியாது. உனது பெரியப்பாவுக்குத் தெரியும். வேறொன்றுமில்லை. எதற்கும் கைராசி வேண்டும். எல்லாம் மாடுகளைப் பழக்குகிறவிதத்திலிருக்கு. எப்பேர்ப்பட்ட சண்டி மாடுகளும் கார்த்திகேசனின் கைக்கு வந்துவிட்டால் சவாரி சுட்டியன்களாகிவிடும்” என்று முன்னெல்லாம் பேசிக் கொள்வார்கள். இப்படி ஆரம்பித்துப் பேசிக்கொண்டு போனவன் இடையில் ஒருதரம் நிறுத்தி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுவிட்டு மறுபடியும் சொன்னான்.

“…ம்… அந்த நடப்பு எல்லாம் முன்னொரு காலத்திலே. அந்தக் காலம்தான் மலையேறி விட்டதே. இப்ப தம்பிமார்களுக்கு எடுத்ததற்கெல்லாம் வீட்டு வாசலிலேயே கார். அதிலே அவசர அவசரமாகப் பறந்தடித்துக் கொண்டு ஓடித் திரிந்தால் நாகரிகமாம்.”

கார்த்திகேசன் மாடுகள் காற்கட்டை தூரம் நடந்து வந்துவிட்டன என்று இப்பொழுது தெரிந்தது. காரியத்தில் கட்டையான மனிதன் வாய்ப் பேய்ச்சிலே அட்டகாசம் பாடுவதுபோல.

கடகடவென்ற முழக்கத்தோடு குலுக்கி அடித்துக் கொண்டு வண்டி ஊர்ந்தது. கொழும்பு ரயிலுக்கு அதிகம் நேரமிருந்தபடியால் மாடுகளை அவற்றின் போக்கில் போகவிட்டு, நான் கார்த்திகேசுவின் வாயை மெள்ளக் கிளற ஆரம்பித்தேன். ஆனால்…அடடா என்ன செய்துவிட்டேன்! இந்த விளையாட்டுக் குணத்தினால் கடைசியில் மனுஷனுடைய நொந்துபோன இதயத்தையே அல்லவா கிளறிவிட்டேன்!.

கார்த்திகேசு தொடர்ந்து பேசிக் கொண்டே போனான். “உலகம் கீழ்மேலாகப் புரண்டு கொண்டு வருகிறது தம்பி. அதில் எல்லாம் எனக்குக் கவலையில்லை . மரம் வளருகிறதுக்குக் காவோலைகள் விழுந்து புதிதாக வரும் குருத்தோலைகளுக்கு இடம் விட்டுக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் ஒன்று, காவோலைகள் விழுந்த பிற்பாடும் அவை இருந்த அடையாளமாக மரத்தில் வரைகள் இருக்கோ இல்லையோ அது போல காலம் எப்படி எப்படி மாறிவிட்ட போதிலும் மனிதன் வாழ்ந்த வாழ்க்கைத் தளும்புகள் இலேசில் அவன் மனத்தைவிட்டு மறைந்து போகிறதில்லை. உன்னுடைய வீட்டுக்காரர்கள் என்னை மறந்துவிட்ட போதிலும் எப்படிப் புறக்கணித்து விட்ட சமயத்திலும் அவர்களுக்கு வண்டில் விட்ட அந்தப் பதினைந்து வருஷ காலத்தைச் சாகும் வரை என்னால் மறக்கவே முடியாது. தாய்பிள்ளையைப் போல உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே இருந்து வந்த எனக்கு என்ன வினை வந்தது கடைசியில்! உனக்குப் பெயர் வைத்தது யார் என்று தெரியுமோ? உனது பெரியம்மாவை கேட்டுப்பார், யார் என்று சொல்லுவா. இருபது வருஷங்களுக்கு முன்பு உங்கள் வீட்டில் எந்த நேரமும் ‘காத்தி அண்ணை காத்தி அண்ணை ‘ என்ற சத்தமாகவேதானிருக்கும். உங்கள் வீட்டில் என்ன நடந்தாலும் அது காத்தி அண்ணையை அறியாமல் நடக்காது. இந்த வண்டிக்காரனுக்கு உனது பெரியம்மா கையிலே பிசைந்து தந்த சோற்று உருண்டை இதோ வயிற்றில் ஒரு பக்கத்தில் இன்றைக்கும் இருக்கிறது. தம்பீ !..”.

இவ்விதம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டு போன கார்த்திகேசு எதிரே ஒரு கார் வருவதைக் கண்டதும் சட்டென்று வண்டியை ஓரமாக ஒதுக்கினான். கார் சமீபமாக வந்து வண்டியை விலத்திக் கொண்டு போயிற்று. அப்பொழுது தான் கார் இன்னாருடையது என்று அவனுக்குத் தெரிந்தது போலிருக்கிறது. கார் வண்டியைத் தாண்டும்போது அதன் டிரைவரை எரித்துவிடுவான் போல முழித்துப் பார்த்தான். கார் அப்பால் போய் மறைந்த பிற்பாடு நெடும் மூச்சு ஒன்று எழுந்தது அவனது நெஞ்சைப் பிளந்து கொண்டு.

இவ்வளவுக்கும் நான் அவனையே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததை அவன் கவனித்தானோ என்னவோ, ‘சட்’ டென்று என்பக்கம் திரும்பி, “இப்போ போச்சுதே பசாசு ஒன்று, இதுதான் என்வாழ்விலே மண்ணை அள்ளிப்போட்டது. ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியைக் கலைக்கப் பார்த்ததாம். முந்தி வந்த செவியைப் பிந்தி வந்த கொம்பு மறைக்கப் பார்த்ததாம். நேற்று வந்த மலையாளத்தானும் அவனுடைய காரும் இந்த ஏழை வண்டிக்காரனை ஒழித்துவிடப் பார்த்தார்கள். ஆனால்…” என்றான்.

கார்த்திகேசு இப்படித் தொட்டுத் தொட்டுப் பேசியது விஷயத்தை முழுக்க அறியும்படி என்னைத் தூண்டிற்று.

“என்ன நடந்தது அண்ணே? தயவு செய்து எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லு” என்று கேட்டேன்.

வெறும் வாயை மெல்லுகிறவனுக்கு அவல் வேறு கிடைத்து விட்டால் பேசவேண்டுமா? கார்த்திகேசு சற்று விபரமாகக் கதையைச் சொன்னான். “நடந்தது என்ன தம்பி, எல்லாம் கால வித்தியாசம், அவ்வளவுதான். கார் வந்தது, வண்டி போயிற்று. புதியதைக் கண்டதும் பழையதைக் கைவிட்டார்கள். புதுப்பெண்டாட்டியைக் கண்டதும் வயசான தாய்க் கிழவியைச் சாகக் கொன்று விடுகிறதா? ஊர் ஊராகக் கார்கள் வந்து நின்ற அந்த நாட்களில் என்னைப் போலக் கூலி வண்டி வைத்துப் பிழைத்தவர்கள் எத்தனைபேர் பெரும் கஷ்டத்துக்கு உள்ளானார்கள், தெரியுமோ? தளுக்கி மினுக்கித் திரியும் இந்த மோட்டார் கார்களைக் காணும்போது எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. அரிச்சந்திர மகாராசாவின் பூச்சக்கரக் குடையை அபகரித்து வரும்படி விசுவாமித்திர முனிவர் அனுப்பினாரே நாட்டியப் பெண்கள் – அவர்களுடைய ஞாபகம் வருகிறது தம்பி , இந்த அந்நியப் பசாசுகளைப் பார்க்கும் போதெல்லாம்! ஆனால் எங்களுடைய மாட்டு வண்டிலோ அந்நிய முதலுமல்ல; அந்நியர் செய்ததுமல்ல. அதற்குக் கொடுக்கும் பணத்தில் ஒரு செம்புச் சதமும் வெளியே போவதுமில்லை. இதையெல்லாம் யார் சிந்தித்துப் பார்க்கிறார்கள்? மனிதனுக்குச் சிந்தனை இருந்தால் உலகத்தில் தாசிகள் ஏன் இருக்கிறார்கள் தம்பி? ஏதோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் ! இந்த மனப்பான்மை – ஊரெங்கும் பரவிக் கொண்டு வந்த இந்த அந்நிய மோகம் – உனது பெரியப்பாவையும் போய்ப் பிடித்து விட்டது.

அந்தச் சமயம் இந்தியாவிலிருந்து ஒரு பெரிய தவில் வித்துவானைக் கூப்பிட்டிருந்தார் அவர். ஒருநாள் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார் ‘கார்த்திகேசு இப்போ எனக்கு வந்திருக்கும் தவில்காரர் மாட்டுவண்டியில் ஏறிப் பழக்கமில்லையாம், என்ன செய்வது? இந்த வருஷம் போகட்டும், அடுத்த வருஷம் பார்த்துக் கொள்ளலாம்’.

எனக்கு என்ன மாதிரி இருந்திருக்கும் என்று நினைக்கிறாய் தம்பி? உனது பெரியப்பா வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் நான் அவரது உள்ளப் போக்கைத் தெரிந்து கொண்டு விட்டேன். இருந்தும், இதை ஓரளவுக்கு எதிர் பார்த்திருந்தவன் தான் நான். எப்படியான போதிலும் பதினைந்து வருஷத்துத் தொடர்பு அல்லவா?இங்கிருந்து காரைதீவுக்கோ, மட்டுவிலுக்கோ இன்னுமதற்கப்பாலுமோ பெரியப்பா சேஷம் போகும் வனாந்திரங்களுக்குச் சாமம் சாமமாக, இரவு இரவாக, இருட்டோ நிலவோ வெயிலோ மழையோ பனியோ , காற்றோ ஒன்றையுமே சட்டை பண்ணாமல் வண்டி ஓட்டியவனல்லவா; உற்சவங்களிலே நடைபெறும் மேளக் கச்சேரிகளில் உனது பெரியப்பா மேளத்துக்குக் கிடைக்கும் புகழிலும் கீர்த்தியிலும், நன்மையிலும் தீமையிலும் நானும் அவர்களில் ஒருவனாக நின்று பங்கு பெற்றவன் அல்லவா?

எனது வண்டி எற்றிச் சென்ற வடிவேலு நாயனக்காரரை எங்கேயோ இருந்து வந்த மலையாளத்தானும் அவனது காரும் ஏற்றிச் செல்கிறது என்பதை எண்ணவே எனக்கு வயிறு எரிந்தது. அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும் உண்டாயின. வயிற்றெரிச்சலிலும் ஆத்திரத்திலும் நான் செய்த விசர் வேலைகளை இப்பொழுது நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஆனால் அப்பொழுது அவை எனது உள்ளக் குமுறலை ஓரளவு ஆற்றி வைத்தன.

ஒரு நாள் காரோடு என் வண்டியைச் சவாரி விட்டுப் பார்த்தேன். மாடுகள் மேல் தொட்டு அறியாத நான் அன்றைக்கு அவற்றிற்கு அடித்த அடிகளை நினைத்தால் இன்னமும் தேகம் நடுங்குகிறது தம்பி !.

இன்னொரு நாள் வேறொரு காரியம் செய்தேன். தெருவில் என் வீட்டுக்குப் பக்கத்தே ஓரிடத்தில் ஒரு நாள் ஒளித்திருந்து அந்தக் கார் போகும் சமயத்தில் இரண்டு கல்லை அதன் மீது விட்டெறிந்தேன். யாருடைய நல்ல காலமோ இரண்டு எறியும் கார்மீது படவில்லை . ஓடுகிற கார்மீது கல்லெறிவதற்கும் அனுபவம் வேண்டும் என்று அப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.

கடைசியில் இந்த அற்பகாரியங்களினால் ஒருபலனும் ஏற்படவில்லை. ஊர் முழுவதையும் மலையாளத்தான் தனது வசமாக்கிக் கொண்டான். அவனுக்கிருந்த ஓய்வு ஒழிச்சல் இல்லாத “சவாரி”யைப் பார்த்து மேலும் கார்கள் ஊரிலே வந்து குவிந்தன.

நிலைமையைப் பார்த்துவிட்டு நான் மண்வெட்டியைக் கையில் தூக்கினேன்…

எது எப்படியான போதிலும் நீதிக்கு ஒரு இடம் உலகில் என்றைக்கும் இருக்கவே இருக்கிறது தம்பி!

பதினைந்து பதினாறு வருஷங்களுக்குப் பிறகு இப்போ சண்டை தொடங்கி பெட்ரோல் இறக்குமதி குறைந்து அது கட்டுப்பாடு ஆய்ச்சோ இல்லையோ வண்டிக்காரர்களும், மறுமலர்ச்சி அடைந்தார்கள். அவர்களுக்கு நல்ல காலம் பிறந்தது. வயலுக்கு எரு இழுத்த மாடுகளும் வண்டிகளும் சலங்கைச் சத்தத்தோடே பெரிய றோட்டில் ஓட ஆரம்பித்தன. வடிவேலு நாயனக்காரரே வலியக் கூப்பிட்டு என்னிடம் கேட்டிருக்கும்போது நான் ஏன் சும்மா இருக்கப்போகிறேன்? இருபது வருஷங்களுக்கு முன்னே வண்டி ஓட்டிய அந்த இனிய நாட்கள் திரும்பவும் ஒரு முறை என் சீவியத்தில் மீண்டும் கிட்டுமா என்று ஏங்கியிருந்த எனக்கு இது எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் என்பது நான் சொல்லிக் கொள்ளக் கூடியதல்ல. ‘கார்த்திகேசு, இந்த வருஷம் எனது மேளத்துக்கு நீதான் வண்டிக்காரன்’ என்று வடிவேலு நாயனக்காரர் சொல்லிய வார்த்தைகள் எனக்குத் தேன்போல் இனித்தன. பால் போன்ற வெண்ணிலவில் வெள்ளை வெளேரென்றிருக்கும் தெருவழியே எனது வண்டி மறுபடியும் மேளம் ஏற்றிச் செல்வதை எண்ண எனக்கு ஆனந்தம் பொங்கியது. ஆனபோதிலும்…” என்று கார்த்திகேசு சட்டென்று பேச்சை மழுப்பினான்.

“அது என்ன காத்தி அண்ணே?” என்று கேட்டேன்.

“ஒன்றுமில்லை, ஒரு சின்னச் சந்தேகம். தம்பி இந்தச் சண்டை இருக்குதோ இல்லையோ, இது முடிந்த பிற்பாடு “பெட்ரோல் கிட்ரோல்” எல்லாம் வந்து கார்கள் பழையபடி ஓட வண்டிக்காரர்கள் பாடு பழையபடி கறுப்பன் கதைதானாம். மெய்தானோ?”

இதைக் கேட்கும் போது அவனுடைய குரல் சோர்வடைந்து காணப்பட்டது.

“பயப்படாதே அண்ணே! அணுக்குண்டு கண்டுபிடித்திருக்கிறார்களாம்” என்றேன் நான். வேறு எதைச் சொல்ல?

– மறுமலர்ச்சி பங்குனி 1946.

– மறுமலர்ச்சிக்கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1997, ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகள் இருபத்தியைந்து 1946 – 1948, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான் சு. குணராசா, வெளியீடு: கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அனமச்சு, திருகோணமலை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *