ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் புதியதாய் வந்த தலைமை ஆசிரியர் பெருமாள் ஐயா அவர்களின் அனுபவம்….
இன்று முதல்நாள் கணக்கு வகுப்பு எடுப்பதாக கூறி எல்லோரையும் அவரது மேஜையை சுற்றி நிக்கவைத்தார்.
குட்டையானவர்கள் முன் வரிசையிலும் அதன் பின் நடுத்தர உயரமானவர்கள் இறுதியில் உயரமானவர்கள் என மேஜையே சுற்றி ஈக்களைப்போல் மொய்த்தோம்.
அனைவரும் அவர்களுடைய புத்தகத்தை எடுத்து கைகளில் வைத்தோம்… சிலரால் புத்தக கணத்தை தாங்கி பிடிக்க முடியாமல் கைநழுவி தவறவிட்டனர். சிலரோ முன்னாடி நிற்கும் நண்பர்கள் முதுகின் மீது புத்தகத்தை வைத்துக்கொண்டனர். முன் வரிசையில் இருந்த சிலரோ மேஜை மீது வைத்து ஒய்யாரமாய் நின்றனர். சிலர் கைகளில் புத்தகத்தை இறுக்கி பிடித்து நின்றனர்.
நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பினர் தனியாகவும் மற்ற மூன்று வகுப்பினர் உதவி ஆசிரியர் மேற்பார்வையிலும் இருப்பார்கள். இந்த இரண்டு பிரிவினருக்கு இடையில் மரத்தட்டி மறைத்துக்கொண்டிருக்கும். யாரும் இடமாறுதல் இருக்க கூடாது. உணவு இடைவேளை அல்லது சிறுநீர் இடைவேளையில் மட்டும் போக அனுமதி.
வகுப்பை எடுக்க ஆரம்பித்தார் வாத்தியார். வாய்க்கணக்கில் படு சுட்டி போல காத்துலே கணக்கு சொல்லிக்குடுத்தார். பின்னாடி நிற்கும் மாறன் குசுகுசுன்னு பேச ஆரம்பித்தான்…
ஜாலியா இருக்குடா இந்த வகுப்பு..
முன்னாடி நிக்கிக்குற வைரம் மண்டைய பாருடா வீட்டுல இருக்குற எண்ணெய் எல்லாம் இவன்தலைல…
அவன் போட்ருக்குற கால்சட்டைல எத்தனை ஓட்டை இருக்குனு சொல்லு பாப்போம் என்று நக்கலடித்தான் குமரன்.
டேய் பொறுடா மாப்புள… ம்ம்ம்… மொத்தம் நாலு ஓட்டடா… சொல்லிக்கொண்டே வைரம் கால்சட்டையின் ஓட்டையில் பேப்பர் துண்டுகளை போட்டனர் இருவரும்.
போட்ட உணர்வு இல்லாமல் கணக்கு பாடத்தில் ஆழ்ந்து போனான் வைரம். மாறனும் குமரனும் சிரிப்பை அடக்க முடியாமல் கைகளை வைத்து அணைபோட்டனர்.
சரி சரி ரொம்ப சிரிச்சு காட்டிக்குடுத்துடாதடா மாப்புள அடுத்த ஆள பாப்போம் எப்படியும் வகுப்ப கவனிக்க போறதில்ல என்றான் மாறன்.
சைடுல நிக்குற சுபாவ பாரு நேத்து போட்ட வெள்ளை சட்டையை இணைக்கும் போட்டுட்டு வந்துருக்கா…
எப்புடிடா கண்டுபுடிச்ச?
நேத்து எழுதும் போது பேனா சரியா எழுதலனு உதரும்போது அவ சட்டைல பேனா மை தெரியாம பட்டுருச்சு மாப்புள..
ஆமாடா இருக்கு….
அவ அம்மா சுத்த சோம்பேறிடா ரெண்டு நாளைக்கு ஒரு துணிமணின்னு அவங்க வீட்டுல மாத்துவாங்க அதான் சொன்னேன்..
அடப்பாவிகளா இப்படியுமா இருப்பாங்க மனுசங்க…
சரி விடுடா சத்தமா பேசாத பக்கத்துல இருக்கறவன் வாத்தியார்கிட்ட போட்டு குடுத்துடுவான்.
அப்பொறம் கொஞ்சம் கால் வலிச்சா அப்டியே இவனுக மேல மெத்த மாதிரி சாஞ்சுக்கலாம் .
மாரியம்மா ஜடையை பாருடா ஒரு சைடு ரிப்பன் இருக்கு இன்னோரு சைடு சரடை வச்சு கட்டிருக்கா…
நேத்து ரெண்டு ஜடைலயும் ரிப்பன் இருந்துச்சே நான் பாத்தேன் மாப்புனு உறுதியா சொன்னான் குமரன்.
உனக்கு எப்படி தெரியும் என்கூடவேதான் இருக்க எனக்கு தெரியலையே?
நேத்து எங்க வீட்டு வாழியாதான் பள்ளிக்கூடத்துக்கு போனடா மாப்பு ….
ஓ அப்படி….
நேத்து சாயுங்காலம் விளையாடும் போது சின்ன குடுமி சண்டைல மாரியம்மா ரிப்பனை பிச்சுட்டாளுக அத வாத்தியார்கிட்ட சொல்லி அழுததை பாத்தேன் என்றான் மாறன்…
ம்ம்ம்….
படிப்பாளி சக்தி பயல பாரு திறந்த வாய மூடாம வகுப்பை எப்படி கவனிக்குறான்.
டேய் அவன மட்டும் சீண்டாதடா மாப்பு பின்விளைவுகள் அதிபயங்கரமா இருக்கும்டா…
அவளோ பெரிய அப்பாடக்கரா அவன்…
ஆமாடா வாத்தியார்கிட்ட வாங்குன அடியோடு தடம் இன்னும் மறையளனு தொடையில் இருந்த காயத்தை காட்டினான் குமரன்.
எப்போ எப்படி நடந்துச்சுடா மாப்புள…
போன வாரம் நீ ஊருக்கு போயிட்ட தனியா சக்திகிட்ட சிக்கிட்டேன். தெரியாம அவன கலாச்சிட்டேன்னு எவளோ சொல்லியும் கேக்காம வாத்தியார்கிட்ட போட்டு குடுத்து அடிவாங்க வச்சுட்டான் மாப்பு அவனுக்கு பயந்து யாருகிட்டயும் சொல்லலடா சலிப்போடு கூறினான்…
சரி மாப்பு என்னைக்காவது சிக்குவான் அப்போ பாத்துக்கலாம் மாப்புள…
ம்ம்ம்ம்ம்…
சுமார் மூஞ்சி சுப்பையா குளிப்பான மாட்டானா? எப்போவுமே அவன் மேல வியர்வை நாத்தம் தாங்க முடியலடா.
சரியான டென்ஷன் பேர்வழிடா எப்பவுமே வியர்வையோட குடும்பம் நடத்துறவண்டா…
ம்ம்ம்ம்…
அடுத்து நம்ம வகுப்புலே அடக்கமான பொண்ணுன்னா அது நிலா தாண்டா.. கோபமோ? சந்தோசமோ? எதுவா இருந்தாலும் முகத்துல எந்தவித சலனம் இல்லாத புள்ள.
வளர்ப்பு அப்படிடா… அவங்க அம்மா அப்பா ரொம்ப நல்ல மனுசங்க இந்த ஊருல தப்பி பொறந்துட்டாங்கடா… அவங்க சண்டை போட்டு பாத்தது இல்லடா மாப்பு…
ஓ அதான் இவளும் நல்ல குணத்தோட இருக்கா மாப்புள…
எல்லாத்தையும் கேக்க முடியலைனாலும் அரைகொறைய கேட்டதவச்சு வாத்தியார் அன்று ஒரு முடிவு எடுத்தார். இனிமேல் எல்லாரையும் உக்கரவச்சு வகுப்பு எடுக்கணும். என்னாலே புள்ளைங்க புறம் பேசகூடாதுனும்…
அத மத்தவங்க கேட்டு அதனால வரக்கூடிய மனஉளைச்சலைப் பற்றியும் வகுப்பு எடுத்தார் வாத்தியார். மாறனின் துணிச்சலான பேச்சுக்கு அடிமையானதையும் புறம் கூறாமல் நல்லதை மட்டும் பேசி பழகு என்ற எண்ணத்தை விதைத்ததனின் பயனால் இன்று மேடைப் பேச்சாலராய் வலம் வரும் மாறன்..