கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 9,705 
 
 

பருத்த தலை. குரங்கையொத்த முகவடிவு. நீள விரல்கள். உடலெங்கும் முடி. குரூரப் பார்வை. அருங்காட்சியகங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம் அந்தக் குரங்கு மனிதர்களின் வடிவத்தை, அவை அசையாமல் நின்றுகொண்டிருப்பதை. மனித பரிணாமப் படிக்கட்டில் கடைசியிலிருந்து இரண்டாம் ஆள். அவனும் அவனது சுற்றமும் வாழ்ந்து வந்தக் காலம் அது.

மலையடிவாரமொன்றில் சிறு குகைகளுக்குள்ளே கிட்டத்தட்ட நூறுபேர் கொண்ட குழு ஒன்று வாழ்ந்து வந்தது. மலையடிவாரத்தில் மழை இருந்தது. மழையினால் காடு செழித்தது காட்டில் விலங்குகள் செழித்தன. விலங்குகள் சிறந்த உணவுகள். மிக இலகுவான, அரிய கோட்பாடுகளற்ற, உள்ளுணர்வுகளால் உருவாக்கப்பட்ட கற்காலப் பொருளாதாரம்.

விலங்கோடு விலங்காகவே வாழ்ந்து வந்தான் மனிதன். பருவம் வந்தபின் ஆடை அணிவதும், பலத்த உடல்மொழியூடே சிறு சப்தங்கள் எழுப்பிப் பேசிக்கொள்வதையும், சில கற்கால ஆயுதப் பயன்பாட்டையும் தவிர்த்தால் அவர்கள் மிருகங்கள்தான். ஆண்கள் வேட்டைக்குப் போவதும் பெண்கள் வாழ்விடத்தை பராமரிப்பதுமாய் தினசரி வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது.

அன்று காக்லாவின் குழு வேட்டைக்குச் சென்றது. காக்லாவின் குழு ஒரு சிறப்பு வேட்டைக் குழு. சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட தேர்ந்த வேட்டைக்காரர்களின் குழு. காக்லா எனும் தலைவனின் கீழ் அவ்வேட்டைக் குழு செயல்படும். வறட்சிக் காலங்களில், குகைகளுக்கருகில் உணவு கிடைக்காத பட்சத்தில் ஒருநாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்துவிட்டு காக்லாவின் குழு தூரப் பகுதிகளுக்கு வேட்டைக்குச் செல்லும். பெண்கள் குரலெடுத்து ஒப்பாரி வைத்து அவர்களை வழி அனுப்பி வைப்பர். ஏனெனில் காக்லாவின் குழுவில் எல்லோரும் திரும்பி வருவதில்லை.

மலையிலிருந்து நடந்து சமவெளியொன்றை அடைந்தனர். மஞ்சளாய் வாடி நின்ற புதர்களினிடையே சில மான்கள் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டான் காக்லா. காட்டுப் பறவையொன்றின் ஒலி சமிக்சைக்காக எழுப்பப்பட்டது. காக்லாவின் குழுவிலிருந்த ஏழு பேரும் தொடர்ச்சியாக பறவையின் குரலெழுப்ப வேட்டை ஆரம்பமானது. மான்களைச் சுற்றி வட்ட வடிவில் எழுவரும் புதர்களுக்குள் மறைந்தபடி, ஈட்டிகளை மறைத்தபடி நெருங்க ஆரம்பித்தனர். நான்கடிக்கு ஒருதரம் பறவையின் குரல் எழுப்பப்பட்டது. சற்றே வேகம் குறைந்த நடனம்போல மான்களை நெருங்கினர் காக்லாவும் வேட்டைக்காரர்களும்.

காக்லா தன்மீது நிழல்விழுவதைக் கவனித்து மேல் நோக்கினான். பெண் சிங்கம் ஒன்று உச்சிச் சூரியனை மறைத்தபடி அவன் மீது பாய்ந்துகொண்டிருந்தது. அந்தரத்தில் நின்ற சிங்கத்தின் கண்களும் காக்லாவின் கண்களும் ஒன்றையொன்று சந்தித்தன. நொடிப்பொழுதில் சுதாகரித்து உருண்டெழுந்து ஓடினான் காக்லா. காக்லாவின் குழு கலைந்து ஓடியது. சமவெளியில் வேட்டையாடும்போது முன்னால் தன் உணவும் பின்னால் தன்னை உண்பதுவும் இருக்குமென்பது காக்லாவுக்குத் தெரிந்ததே. அவன் விரைவில் மரங்கள் நிற்கும் பகுதிய அடைந்தாக வேண்டும். இம்முறையும் அவன் குழுவிலிருந்து ஒருவனை சிங்கங்கள் வேட்டையாடும்.

காக்லா மரங்களை அடையும் முன்பே சிங்கம் அவனை துரத்தாமல் திரும்பியிருந்தது. காக்லா திரும்பினான். மற்ற ஆறுபேரில் .. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து. தூரத்தில் நான்கு சிங்கங்களின் நடுவே ஆறாமவனின் கால்கள் புற்களின் நடுவே ஆகாயத்தில் நின்றுகொண்டிருந்தன. சிங்கமொன்று அவனின் கழுத்தை அழுந்தக் கடித்து காலால் அவன் நெஞ்சில் கால்வைத்து உடலை அமிழ்த்தி பிடித்திருந்தது. கலைந்துபோன மான்கள் தள்ளிச் சென்று மீண்டும் மேய ஆரம்பித்தன.

சிங்கங்கள் இனி தாக்காது. அவற்றிற்கு பலி தந்தாயிற்று. காக்லா மீதமுள்ளோரைக் கூட்டி மீண்டும் மான்களை வட்டமிட்டான்.

காக்லாக் குழு மலைக்குத் திரும்ப மூன்று நாட்களானது. குழுவில் இரண்டுபேர் குறைந்திருந்தனர். காக்லா சோர்வடைந்திருந்தான். வறட்சிக் காலம் நீண்டிருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. மழைநாட்கள் வரும்வரை தன் குழுவில் எல்லோரும் உயிரோடிப்பார்களா எனும் சந்தேகம் எழுந்தது.

இரு வாரங்கள் கழிந்து மீண்டும் காக்லா குழு வேட்டையாடச் செல்லவேண்டியிருந்தது. இம்முறை காக்லா தன்னோடு இரு வயதானவர்களையும் கூட்டிச்சென்றான்.

– ஜூன் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *