மூர்த்தி அந்தக் கடைக்கு இரண்டு வாடிக்கையாளருடன் யோசித்த வண்ணம் புறப்பட்டான். அந்த யோசனை அவனுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. புறப்பட முன்பு, பின்பு என்று எப்போதும் அந்தக் கடைக்குப் போவதா விடுவதா என்கின்ற ஒரு யோசனை. அதனால் உண்டாகும் குழப்பம் நீண்ட காலமாக இருந்தது வருகிறது என்றாலும் இப்போது அது மலையாகப் பழு ஏற்றுகிறது. பருத்திக்காய் போல வெடிப்பதற்குத் தயாராகிவிட்டது என்றும் சொல்லலாம். மாறி மாறிச் சுயநலத்தால் பிரிந்து பிரிந்து தங்கள் ஆதாயத்தை உள்நோக்கமாக வைத்துக் கொண்டு உருவாகும் கடைகளை எண்ணி எண்ணிப் பார்க்க அந்தக் கடைகளுக்குச் செல்ல வேண்டுமா என்று அவனுக்கு எண்ணத் தோன்றியது. இந்தக் கடைகள் ஆரம்பத்தில் எப்படித் தோன்றின, பின்பு எப்படி அவை மாற்றம் அடைந்து கொண்டு வந்தன என்பது பற்றி ஒரு வரலாறு உண்டு. அதை மூர்த்தி ஒருமுறை நினைத்துப் பார்த்தான்.
ஆரம்பத்தில் இருந்தே ஒஸ்லோவில் ஈழத்தமிழர்களின் சஞ்சாரத் தலங்களாக குரன்லாண்ட், தொய்யன் என்கின்ற சில முக்கிய தளங்களும், அத்தோடு மேலதிக வதிவிடங்களாக ஸ்ரொவுணர், லின்டறுட், வெஸ்திலி போன்ற இடங்களும் பிரசித்தம் பெற்றவை என்பது நோர்வேயில் வாழும் அனேக மக்களுக்கு நன்கு தெரியும். அத்தோடு அவர்கள் தங்களுக்குள் பிரச்சனை வந்தால் அதைத் தீர்த்துக் கொள்ள வாள், கொட்டான்தடி, மற்றும் கோடாரி, கத்தி போன்ற இலகுவில் வீட்டில் கிடைக்கக் கூடிய ஆயுதங்களை மகிழ் ஊர்தியில் இரகசியமாகச் சுமந்து வந்து, வீரமாக ஒருவரோடு ஒருவர் போரிட்டு, விழுப்புண் ஏந்துவார்கள் என்பதும் பலருக்கும் தெரியும். கொடி பறந்த காலத்தில் துப்பாக்கிகளும் உலாவியதாகக் கதைகள் உண்டு. இப்போது அது பொதுவாகப் பாவனையில் இல்லை என்றாலும் அதுவும் இல்லை என்று நூறுவீதம் யாராலும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. இப்படியாக விழுப்புண் ஏந்தும் வீரப் பரம்பரையில் வந்த எங்கள் தமிழ் மக்கள் நோர்வேக்கு வந்த புதிதில் பொதுநலம் செய்ய வேண்டும் என்று தங்களுக்குப் பித்துப் பிடித்து இருப்பதாக அல்லும், பகலும் அலைந்து திரிந்து அவர் காலில் வீழ்ந்து, இவர் காலில் வீழ்ந்து, முதலில் ஒரு பலசரக்குக் கடையை வெற்றிகரமாகத் தமிழர்கள் அதிகம் புழக்கம் உள்ள இடத்தில் திறந்தார்கள். அப்போது அந்தக் கடை பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்கு மட்டுமே திறக்கப்பட்டது என்றும் தங்களுக்கு எந்த வியாபார நோக்கமோ, அதைவிட வேறு எந்த உள்நோக்கமோ இல்லை என்றும், இது முழுமையான சேவை மனப்பான்மையோடு ஒரு நற்பணியாகச் செய்யப்படும் என்றும் அந்தச் சேவை மனப்பான்மை பொங்கி வழிந்த வியாபாரிகள் கூறினார்கள். அதை ஒஸ்லோ வாழ் பல தமிழ் மக்கள் ஆரம்பத்தில் முழுமையாக நம்பினாலும் சிலருக்கு மாத்திரம் ஓநாய்கள் ஆட்டிற்குக் குழை பறித்துப் போடும் அற்புதம் எப்படி நிகழ்கிறது என்பது விளங்காது தங்கள் மண்டையைக் குடைந்தார்கள். அப்படிக் குடைந்த சிலருக்குச் சில விடை விளங்கினாலும் அதை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவர்கள் சேவை அப்போது உயர்ந்து நின்றது. ஒரு பலசரக்குக் கடை திறந்தால் அமைதியாக இருக்கும் வீரவினம் எங்கள் இனம் இல்லை. அதற்குப் பதில் கடை திறப்பதில் கொடிபிடிக்கும் சில தமிழர்கள் தங்களுக்கே உரிய காரணங்களைச் சொல்லிக் கொண்டு அடுத்த கடையை அமர்க்களமாக ஒஸ்லோவில் ஆரம்பித்தார்கள்.
இப்படி இருக்கும் போது பல வியாபாரிகளுக்குப் பல முறைகள் தாங்கள் மொத்தமாக ஆதாயத்தை அந்தக் கடையில் இருந்து பெற முடியவில்லையே என்று பெரும் கவலையாகவும், ஏக்கமாகவும் இருந்தது. அந்த ஏக்கத்தையும் பேராசையையும் மனதில் இருத்தி, வேறு சில பல காரணங்களைக் காட்டி வில்லங்கத்திற்குப் பிரச்சனையை உருவாக்கி கொடிபிடிக்காதவர்கள் அணியின் கடையை விட்டுப் பிரிந்து சென்று தாங்கள் புதுக்கடைகளை உருவாக்கினார்கள். வாடிக்கையாளர்களுக்கு ஒரே குழப்பம். அங்கே போவதா இங்கே போவதா என்கின்ற அலமலக்கம் அவர்களுக்கு. அதேவேளை கொடிபிடித்தவர்கள் அணியைச் சார்ந்தவர்கள் தங்கள் கடையின் கிளைகளை ஒஸ்லோவின் பல பகுதிகளிலும் நாட்டின் பல பகுதிகளிலும் உருவாக்கி மக்கள் பணம், அரசமானியம் என்று கறந்து எடுத்து சொந்த கட்டடங்களைப் பினாமிகளின் பெயரில் வாங்கிச் செழித்து வளர்ந்தார்கள். மீதிப் பணத்தை வீரம் தீரம் என்று கரியாக்கினர்.
இந்தக் கடைகளின் தொடக்கத்துக்கான முக்கிய ஆரம்பத் தத்துவம் ஒன்று கொடிபிடிக்காதவர்களின் கடை கொடி பிடிக்க மறுத்ததே என்று முதலில் கொடிபிடிக்கின்றவர்கள் கூறினார்கள். அது மிகவும் முக்கியம் என்பதாலேயே கொடிபிடிப்பவர்களின் கடை கொடியோடு தொடங்கப்பட்டது என்று பெருமையாகக் கூறினார்கள். கொடியை வைத்து எதிர் எதிராகத் தொடங்கப்பட்ட இந்தக் கடைகள் மானியம் வசூல் என்று ஏற்கனவே கூறியது போல கொடிகட்டிப் பறந்தன. அப்படிக் கொடிகட்டிப் பறந்ததால் பல தமிழர்களும் பலன் அடைந்தார்கள் என்பதும் உண்மையே. அவர்கள் அந்தப் பலனைப் பெறுவதற்கு தாங்கள் சொந்தப் பணத்தையும் செலுத்தினார்கள். ஆனால் அதைவிட அந்தக் கடைகள் நடக்கும் வியாபாரத்தைக்காட்டி அரசிடம் இருந்து மானியமாகப் பெருந்தொகை பணம் பெற்று வருவதைப் பற்றி மறந்தும் அவர்கள் வெளியே வாய்விடுவதில்லை. இப்படியாக அவர்கள் தொடங்கிய நோக்கம் நன்றாக நடந்தாலும் கொடிபிடித்தவர்கள் நடத்திய கடைக்காரர்களுக்கு கொடிபிடிக்காதவர்கள் நடத்தும் கடைக்கு மானியமும், வாடிக்கையாளர்களும் போவது வேப்பங்காயாகக் கசந்தது. அவர்கள் தங்கள் பாரம்பரியப் பாணியில் அவர்களது சிறந்த ஒற்றர்களை அனுப்பி கொடிபிடிக்காதவர்கள் நடத்திய கடையின் நிருவாகத்தைக் கைப்பற்றி, தாங்கள் மொத்தமாக வியாபாரத்தைப் பார்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதை அறிந்த கொடிபிடிக்காத கடைக்காரர்கள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாட்டை மறந்து தாங்கள் தொடர்ந்தும் வியாபாரம் செய்வதில் ஒற்றுமையாகக் கவனம் செலுத்தினார்கள். அந்தக் கடைகள் நடத்தும் அனைவருக்கும் தாங்கள் அதில் இருந்து லாபத்தைப் பெற்றுக் கொள்வது முக்கியம் என்பதைத் தங்களது பின்மூளையில் நன்கு செருகிவைத்து இருந்தார்கள். அதைச் சாதாரணமாக அவர்கள் வெளியே காட்டிக் கொள்வதில்லை. அவர்களைப் பார்ப்பவர்கள் மனதோ மெழுகாய் உருகிக் கடலாய் பெருகும். இப்படியும் சேவை செய்ய முடியுமா என்று மெச்சி மகிழும். ஒரு சிலர் மட்டும் ஆடுகள் பாவம் என்று எண்ணிக் கொள்வார்கள்.
இப்படி நிலமை இருந்தாலும் சிலர் மாத்திரம் மொத்தமாகக் கடையை ஆட்சி செய்யவோ அல்லது மொத்தமாக வருமானத்தை சுருட்டிக் கொண்டு போவதையோ அவர்களால் அனுமதிக்க முடியவில்லை. இது அவர்கள் மனதில் இருந்தாலும் இப்போது கொடிபிடிப்பவர்களிடம் இருந்து கடையைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற ஒரு காரணத்திற்காக மனதிற்குள் குமுறிய வண்ணம் இணைந்து ஒன்றாகச் செயற்பட்டு வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.
இப்படியாகக் கொடிபிடித்த, கொடிபிடிக்காத அணியினால் நடத்தப்பட்ட வியாபாரம் தொடர்ந்தும் விமர்சையாக நடந்து கொண்டு வந்தது. கால ஓட்டத்தில் மாற்றங்கள் மட்டுமே என்றும் மாறாது என்பதை உறுதிப்படுத்துவது போலத் திடீரென அவர்களது கொடியை ஒருநாள் அதற்கு எதிரான அரசு எரித்து ஒன்றும் இல்லாமல் தகனம் செய்துவிட்டது. அதை அடுத்து கொடிபிடித்தவர்களின் கடையிலும் குழப்பம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் கொடிபிடிக்காதவர்கள் கடையை கைப்பற்றும் எண்ணத்தைத் தற்காலிகமாக விட்டுவிட்டுக் தங்களது கடையை யாருக்குச் சொந்தமாக்குவது என்பதில் மும்மரமான வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்டார்கள். அதைத் தொடர்ந்து மக்கள் பணத்திலும், மானியத்திலும் கொழுத்த கடைகளை யார் தட்டிக்கொள்வது என்கின்ற இழுபறிகள் விமர்சையாக ஒஸ்லோவில் அரங்கேறியது.
அதனால் கொடிபிடிக்காதவர்கள் கடைப்பக்கம் கொடிபிடித்தவர்களால் இருந்து வந்த தொந்தரவுகள் குறைந்தன. அது கொடிபிடிக்காதவர்கள் இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகளை மேலோங்க வைத்தது. அதனால் கொடிபிடித்தவர்களின் கடையில் நடக்கும் யுத்தம் கொடிபிடிக்காதவர்கள் கடையிலும் தொடங்கியது. அவர்கள் கடை மேலும் ஒரு முறை பிரிந்தது. பிரிவது ஒன்றும் தமிழர்களுக்குப் புதுமை இல்லை. அது தாய்ப்பால் அருந்துவது போல முக்கியமானது என்பது மக்களுக்கு விளங்கும். வியாபாரிகள் பிரிந்து பிரிந்து கடைகளை உருவாக்குவார்கள் என்பதும் அவர்களுக்கு நன்கு விளங்கியது. ஆனால் இந்த வியாபாரிகளுக்கு விளங்காத ஒன்று இனி வாடிக்கையாளர்களை எங்கே தேடிப் பிடிக்கப் போகிறார்கள் என்று பழைய வரலாற்றை அலசிய மூர்த்தி எண்ணினான்.
மூர்த்தியின் கடந்த காலச் சஞ்சாரத்தை நிறுத்துவது போல, மூர்த்தியோடு தயாராக நின்ற வாடிக்கையாளர்கள் கடைக்குப் போவமா விடுவமா? என்று கேட்டார்கள்.
‘ம்… இவங்கடை வியாபாரம் விளங்கி இருந்தா வீணாக நேரத்தை அநியாயம் ஆக்கி இருக்கத் தேவையில்லை. நீங்கள் ஏன் உங்கடை சனி ஞாயிறு விடுமுறையை அநியாயம் செய்கிறியள்? அதை நீங்கள் வீட்டில குதுகலமாக கொண்டாடுங்க.’ என்று கூறிவிட்டு மீண்டும் வீட்டிற்குள் செல்லும் போது அவர்களின் குதுகலத்தையும், சந்தோசத்தையும் பார்த்து அவன் மலைத்துப் போனான். தான் அவர்கள் மனதறியாச் செக்கு மாடாய் இருந்துவிட்டதாக மனதில் புழுங்கினான். இருந்தும் இன்றே தான் சரியான முடிவு எடுத்திருப்பதான நிம்மதி அவன் மனதில் தோன்றியது.
– ஒக்ரோபர் 2018