பரோபகாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 4,165 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குடியிருக்க எங்கேயாவது வீடு கிடைக்குமா என்று அலைந்து அலைந்து என் கால்களெல்லாம் ஓய்ந்துவிட் டன. இவ்வளவு பெரிய சிங்கப்பூர்ப் பட்டணத்தில் எனக்கு மட்டும் வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை என்பது எனக்கு அதிசயமாகத்தான் இருந்தது!

வீடுகேட்ட இடங்களிலெல்லாம் “சிவப்பு நோட்டு மூன்று இருந்தால் இடம் இருக்கிறது; அதற்குக் குறைந் தால் இடமில்லை!” என்று அடுக்குமொழி பேசினார்கள். நானும் என் வழக்கமான “சிவப்பு நோட்டுக்கு எங்கே செல்வேன்?’ என்று ராகமாலிகை விருத்தமாகப் பாடி அழுவேன்.

ஒரு பாய், ஒரு தலையணையோடு வருகிறவர்களெல் லாம் எப்படியோ சந்து பொந்துகளிலெல்லாம் ஐக்கியமாகி விடுகிறார்கள். போகும்போது மல் வேட்டி, வைரக் கடுக்கன் ஜொலிக்க இரண்டு மூன்று பெட்டி நிறைய திணித்துக்கொண்டும் போய்விடுகிறார்கள்.

ஆனால், எனக்கு மட்டும் வீடு கிடைப்பதில்லை. “தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித் திடுவோம்” என்னும் அடியை மாற்றி, ‘தனியொரு வனுக்கு வீடிலை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றுகூட அவ்வேளையில் பாடத் தோன்றும்.

ஜகத்தையே அழித்து விட்டால் பிறகு வீடே இருக்காது என்பது அப்போது எட்டவில்லை.

இப்படி நான் அலைந்து கொண்டிருந்த வேளையில் தான் எனக்கும் ஒரு வீட்டில் ஒன்றிக்கொள்ள இடம் கிடைத்தது. அந்த வீட்டை ஒரு சிறிய ‘கம்போங்’ என்றே கூறிவிடலாம்! பத்துப் பதினைந்து கிழங்கள்; இருபது முப்பது ஒன்றிக்கட்டைகள்; நான்கைந்து திருநீலகண்டர் குடும்பங்கள் – இவற்றோடு நானும் ஒருவன். எனக்கு இடம் தந்தவர் சீர் திருத்தவாதி.

அந்த வீட்டிலேயே என் கவனத்தைக் கவர்ந்தவர்கள் செல்வராஜன் குடும்பத்தார். ராஜன் என் நண்பர். அவர், தம் தமையன் குடும்பத்துடன் ஐக்கியமாகிக் கிடந்தார். நடப்பதுகூடப் பாவம் என்று நினைக்கும் மனிதர் செல்வ ராஜனின் தமையன். அவர் மனைவி மிகவும் அமைதியான வர். வயது முப்பதை எட்டிப் பிடித்தாலும் பார்வைக்கு இருபத்தைந்து வயது இளங்குமரிபோல் தோற்றம் அளித்தார்.

பெண்கள் விஷயம் என்றாலே நான் சற்று உஷாராக இருப்பவன். சுருக்கமாகச் சொன்னால் சற்றுக் கிலிதான்! இப்படிப் பெண் கிலி கொண்ட நான், இந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் சிரத்தையெடுத்துக்கொள் ளும் அளவிற்கு வந்தது தான் அதிசயம். ஆனால், அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அன்று எல்லாரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். நான் மட்டும் அறையிலிருந்தேன். ஏனென்றால், நான் அப்பொழுதெல்லாம் ‘அன்எம்ப்ளாய் மென்ட்’ லிஸ்டில் அங்கம் பெற்றிருந்தவன்.

நான் என் அறையில் முடங்கிக்கொண்டு காண்டே கரின் கள்ளக்காதலி’யைக் காதலித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று அந்த அம்மையாரின் அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. நான் ஒரு துவாரத்தின் வழி யாக உற்றுப் பார்த்தேன். அந்த வீட்டிலேயே குடியிருந்து கொண்டு முனிசிபாலிடியில் வேலை பார்க்கும் ஒருவர்தான் அந்த அம்மையார் அறைக்கதவைத் தட்டிக் கொண்டு நின்றிருந்தார்,

கதவு திறந்தது; பின்னர் மூடிக்கொண்டது. பின்னர் வசந்த ருதுவும், மனமோகனமும், வாராயோ வெண்ணி லாவும் அந்த அறையில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

“அட உலகமே! நான் ஒருவன் இந்த அறையில் முடங்கிக்கிடக்கிறேன் என்றுகூட அந்த இடைவெட்டுக் காதலர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே!” என்று மனத்திற்குள்ளேயே வருந்தினேன்.

பிறகு இதைப்போன்ற ‘அம்பிகாபதி-அமராவதி’ காதல் நாடகங்கள் அந்த அறையில் அடிக்கடி நிகழ்வ துண்டு. அப்பொழுதெல்லாம் நான் திருக்குறளில், ‘பிறனில் விழையாமை’ அதிகாரத்தைப் படித்துக் கொண்டிருப் பேன். அதைத் தவிர வேறு என்னால் என்ன செய்ய இயலும்? தன் மனைவியின் ‘பரோபகாரத்தனம்’ அந்த அப்பாவிக் கணவருக்குத்தெரிந்தாலும் அவராலும் ஒன்றும் செய்ய முடியாது அவரை நினைத்து அனுதாபப்பட இவ் வுலகில் யாரேனும் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நானும் அவர் தம்பியும் தான்.

காலம் கனவேகமாக ஓடிக்கொண்டே இருந்தது. அந்த அறைக்குள் பல புதிய இடைவெட்டுகள் போய் வந்துகொண்டிருந்தன.

இவ்வளவும் காலை ஒன்பது மணிக்கே ஆரம்பமாகி விடும். இந்த ஆரம்ப விழாக்களையும் நிறைவு விழாக் களையும் கண்டு ரசிக்க நான் என்னென்ன பாவங்கள் செய்தேனோ என்றெல்லாம் எண்ணிப் பொருமுவேன்.

அன்றும் காலை ஒன்பது மணி இருக்கும். நானும் வழக்கமாகக் காண்டேகரின் ‘எரிநட்சத்திரத்தில் மூழ்கிக் கிடந்தேன் . சடாரென்று எதிர் அறைக் கதவு தட்டப்படும் சத்தம் என் செவிகளில் கானம் இசைத்துக் கொண்டிருந் தது! நான் காண்டேகருக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, ‘சொச்ச விதி’ யாரை விட்டதென்றெண்ணி துவாரத்தின் வழியாக உற்றுப் பார்த்தேன். அந்த அம்மையாரைப் பிடித்துத் தள்ளிக்கொண்டு பலவந்தமாக உள்ளே நுழைந் தது ஒரு கிழம். கிழங்கள் கூடப் பொதுவுடைமை கொண் டாடுகின்றனவே என்று நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன். அந்த அறையில் மிகவும் காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருந்தது:

“அட சரிதான் புள்ளே! எல்லாருக்கும் மனைவியா இருக்கிறே… எனக்கு மட்டும் இருக்கப்படாதோ? சும்மா வா! கொஞ்ச நேரம் ஜாலியா இருக்கலாம்..” அந்தக் கிழம் காந்தருவம் பேசியது!

நான் உன்னைப்போல கிழங்களை விரும்புறவ இல்லே! எனக்குப் பிடிச்சவங்களைத்தான் நான் விரும்பு வேன். எனக்கு வேண்டியது கிழமும் பணமும் இல்லே! இளமை!”

பரோபகாரிக்கும் ஒரு கொள்கை உண்டு என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

“என்ன புள்ளே வியாக்கியானம் பேசுறே? கெட்டது கெட்டே… கெட்டுப் போனதுக்கு இலக்கணம் வேறேயா பேசணும்? காமத்துக்கு இளமை – முதுமை-தகுதி இதெல் லாம் தெரியாது!… சும்மா வா!…”

“முடியாது! உன்னைப்போல உள்ளவங்ககிட்டே என்னை ஒப்படைக்கமாட்டேன். போயிடு!…”

அந்தப் பரோபகாரி பரிதாபக் குரலில் கத்தியது. “நீ இணங்கலேன்னா, உனக்கு யார் யாருக்கிட்டே தொடர்பு இருக்குங்கிறதை செல்வராஜன்கிட்டே சொல்லிடுவேன். என்ன சொல்றே?” கிழம் இடம் பார்த்து அடித்தது.

பிறகு அந்த அறையில் மௌனம் நிலவியது. என் அறையில் ஒரு கிழப்பல்லி ஒரு கரப்பான் பூச்சியை விழுங்கிக்கொண்டிருந்தது! கிழப்பல்லிக்கும் பசி இருக்கத்தானே செய்யும்…

ஆறு மாதங்கள் எப்படியோ ஓடி மறைந்தன. நண்பர் செல்வராஜன், திருமணம் செய்து கொள்வதற்காக தமிழகம் சென்று விட்டார். எனக்கும் அவருக்கும் கடிதப் போக்குவரவு மட்டும் நடந்து கொண்டிருந்தது.

காலம் எவ்வளவு வேகமாகச் சுழன்றோடிக்கொண் டிருந்ததோ அவ்வுளவு வேகமாக எதிர் அறையில் காதல் நாடகங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருந்தன.

திடீரென ஒரு நாள் பகுத்தறிவுப் பாசறையின் ஓர் அங்கத்தினரான சீர் திருத்தவாதி, அந்தப் பரோபகாரி அறையின் முன் நின்று கொண்டிருந்தார். ‘கடமை-கண்ணியம் – கட்டுப்பாடு!-இவற்றிலே ஊறித் திளைத்தவர்கூட இந்த அறைக்கு வந்துவிட்டாரே!’ என்று நான் ஆச்சரியப் படவில்லை. ஏனென்றால் பெரும்பாலும் இன்றைய சீர் திருத்தவாதிகளின் சொல்லும் செயலும் வெவ்வேறாகத் தானே இருக்கின்றன! ‘சொல் வேறு; செயல் வேறு. சொல்லும் செயலும் ஒன்றாக இருந்துவிட்டால் அவன் வாழப் பிறந்தவன் இல்லை; சாகப் பிறந்தவன்’ என்று யாரோ கூறியது என் ஞாபகத்திற்கு வந்தது.

சீர்திருத்தவாதி அடுக்குமொழி வசனம் பேசிக்கொண்டிருந்தார் :

“அரசியல் அறிவு பெறாதவனுக்கும், இலக்கியத்தின் இன்சுவை புரியாதவனுக்கும், அழகை அள்ளிப் பருகத் தெரியாத அடிமுட்டாளுக்கும் உன்னை அர்ப்பணிக்கும் போது, இத்தனையும் அமையப்பெற்ற எனக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கு? ஆண்களை மகிழ்விக்கத்தானே பெண்கள் பிறந்திருக்கிறார்கள்….தயங்காமல் வா!”

சீர் திருத்தவாதி பிளேட்டோவின் தத்துவம் பேசினார் “என்னால்…முடியாது!….” பரோபகாரி தன் ஈனக்குரலில் கத்தியது.

அந்த பரோபகாரியின் மேல் எனக்குச் சற்று இறக்கம் பிறந்தது. இலேசாகத்தும்மினேன். உடனே சீர்திருத்தவாதி காணாமல் போய்விட்டார்! இப்படிப் பல தடவைகளில் அந்தப் பரோபகாரியை நான் காப்பாற்றியிருக்கிறேன்.

அடுத்த நாள் …. காலை பத்து மணி இருக்கும். அந்த அம்மையார் மார்க்கெட்டுக்குப்போய்விட்டார். எதிர் அறையில் ஏதோ சிரிப்பொலிகள் இலேசாகக் குலுங்கிக் கொண்டிருந்தன. அந்தப் ப்ரோபகாரி மார்க்கெட்டுக்குப் போய் திரும்பி வந்து விட்டதோ என்று ஒருகணம் நினைத்தேன். ஆனால் அதன் குரல் போலில்லை. என் அறைக்கதவைத் திறந்து எட்டிப் பார்த்தேன்.

எதிர் அறைக் கதவு சரியாகத் தாழிடப்படவில்லை . கதவருகே மெதுவாகச் சென்று பார்த்தேன். அந்தப் பரோபகாரியின் பதினான்கு வயது மகள் தான் எவனோ ஒருவனுடன் சரசமாடிக்கொண்டிருந்தாள்.

அட சமூகமே! நீ இப்படியா கெட்டுச் சீரழிய வேண் டும்? நான் அந்தப் பிஞ்சில் பழுத்ததை எண்ணி மனம் புழுங்கினேன். தாய் பரோபகாரி; சேய் பிஞ்சிலேயே பழுத்துவிட்டாள்!

நான் இவற்றையெல்லாம் செல்வராஜனுக்கு எழுத வில்லை. தன் தமையன் குடும்பம் இவ்வளவு மோசமான நிலைக்குப் போய்விட்டது என்பதை அறிந்தால் எவ்வளவு வேதனைப்படுவார் என்பது எனக்குத் தெரியும். மானத்திற்கு அஞ்சித் தற்கொலைகூடச் செய்து கொள்வார். அவ்வளவு மானி.

தாய்தான் நாற்றச் சேற்றில் புதையுண்டு போனாள்; சேயையாவது இளமையிலே திருத்திவிடலாம் என்று எண்ணி அறிவுரை கூற முயன்றேன். ஆனால் அந்தப் பிஞ்சில் பழுத்தது, “எங்கள் குடும்பத்தில் தலையிட நீ யார்?” என்று என்னையே எதிர்க் கேள்வி கேட்டது.

தாயின் நடத்தை மகளையும் சீரழித்து விட்டதே!” என்று என் மனம் புழுங்கிக்கொண்டிருந்தது. ‘ஒருவன் ஒருத்தியுடனும், ஒருத்தி ஒருவனுடனும் திருப்தியடையக் கூடாதா?’ என்று எண்ணிக்கொண்டே பாபுராவ் பட்டே லின் ஃபிலிம் இந்தியாவின் கேள்வி-பதில் பக்கத்தைப் புரட்டினேன். ஒரு கேள்விக்குப் பதிலாக, ‘மனிதர்கள் விசுவாசமற்றவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மனிதர்கள் விசுவாசமற்றவர்கள் என்பது மட்டுமில்லை; அவர்கள் எதிலும் – எப்பொழுதும் திருப்தி அடைவதுமில்லை :

பக்கத்தில் காண்டேகரின் இரு துருவமும் கார்க்கியின் தாயும் கிடந்தன. அடடா! கார்க்கியின் அந்தத் தாய் எவ்வளவு உயர்ந்தவள்? கணவன் அடி உதையைத் தவிர, வெளியுலகமே தெரியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அந்தத் தாய், நாட்டு விடு தலைக்கு உயிரையே கொடுக்கும் மகத்தான தியாகியாகி விடுகிறாளே! அவளல்லவா தாய்!…

காண்டேகரின் இருதுருவத்தை எடுத்துப் பக்கங்களை இலேசாகப் புரட்டினேன். நித்திரை என்னை எங்கோ ஓர் உலகத்திற்கு அழைத்துச் சென்று விட்டது.

மறுநாள் காலை எத்தனை மணிவரை தூங்கினேன் என்று எனக்கே தெரியாது! யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்தேன். பரோபகாரிதான்! நான் பதறிப் போனேன்.

“என்ன…இப்படி…?”

சுவர்க்கத்தின் கதவைத்தட்ட சைத்தானுக்கும் உரிமை யுண்டு என்பதைப் போல பரோபகாரி வந்து என் கதவையும் தட்டிவிட்டதே…

“இல்லே…எனக்கும் வீட்டுலே வேலை ஒண்ணுமில்லே. நீங்களும் தனியா இருக்கிற மாதிரி தெரிஞ்சது…அதனாலே தான் பார்த்துப் போகலாமுன்னு வந்தேன்…” என்றது பரோபகாரி.

எனக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு காலமும் இல்லாமல் இன்றைக்குத் தனிமையில் பேசவேண்டும் என்றால்?… ஒருவேளை இன்று இடைவெட்டு இரைகள் எதுவும் வந்து சிக்கவில்லையோ?…

“நான் எப்போதும் தனிமையை விரும்புறவன். நீங்க போகலாம். எனக்கு நிறைய படிக்க வேண்டிய வேலையிருக்கு!” என்றேன் சற்று வெறுப்புடன்.

“என்னதான் அப்படிப் படிக்கிறீங்க? வருஷம் முந் நூத்தி அறுபத்தி அஞ்சி நாளுந்தான் படிக்கிறீங்க. இன்னைக்காவது கொஞ்சம் நிம்மதியா இருக்கக்கூடாதா? இப்படி உட்காருங்க!…” என்று கூறிக்கொண்டே என் கட்டிலில் அமர்ந்தது பரோபகாரி.

பரோபகாரியின் போக்கு எனக்கு அருவருப்பாக இருந்தது.

“எனக்கு இதெல்லாம் பிடிக்காது. தயவுசெய்து வெளியே போங்க!” என்று கடுமையாகவே கூறினேன். ஆனால், ஆள் நகருவதாகத் தெரியவில்லை .

இடையில் சிறிது நேரம் அமைதி நிலவியது.

“அடுத்த மாசம் என் கணவர் தம்பி இந்தியாவிலேயிருந்து திரும்பி வரப்போறார் என்…என் அறையிலே நடந்ததையெல்லாம் நீங்க…கவனிச்சிருக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும்…அதையெல்லாம் நீங்க அவருக்கிட்டே சொல்லக்கூடாது…”

எனக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தாலும் ஆத்திரம் அதையும் மீறிக்கொண்டு வந்தது ஒருவன் வாயை மூடலாம் ஊர் வாயையே மூடிவிட முடியுமா? ஒரு குற்றத்தை மறைக்கப் பல குற்றங்கள், தன் உளுத்துப்போன கயமைத் தனத்தை மறைக்க என்னையே உடந்தையாக்கப் பார்க் கிறாள் என்று எனக்குப் புரிந்துவிட்டது. உடனே கார்க்கி, காண்டேகர் எல்லாரையும் தூக்கிக்கொண்டு வேறு வீடு பார்த்துப் போய்விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

“நீங்க… உங்க நாடகங்களைத் தொடர்ந்து நடத்துங்க. அதைப்பற்றி எனக்குக் கவலையில்லே! ஆனால், அதுலே என்னையும் உடந்தையாக்கப் பார்க்காதீங்க! தயவு செய்து இந்த அறையைவிட்டு வெளியே போங்க!” என்று கத்தினேன்.

அந்த அம்மையார் ஒன்றும் பேசாமல் போய்விட்டார். அந்தப் பரோபகாரி போன திக்கையே நான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கற்பு என்பது இலக்கியத்தில் மட்டுந்தான் இருக்கிறதா?

– திரையொளி 1956 நவம்பர், புதுமைதாசன் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்டு 1993, ஒக்கிட் பதிப்பகம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *