பரீட்சை தாண்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 9, 2024
பார்வையிட்டோர்: 140 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பரீட்சைச் சமயம். ஊரில் பையன்கள் குடுமியை உத்திரத்தில் கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு மும்முர மாகப் படித்து வருகிறார்கள். என்னைப்போலொத்தவர் கள் சாய்மான நாற்காலியின் மீது சாய்ந்துகொண்டு சிரமமின்றிப் படிப்பதாகச் சங்கற்பம் செய்துகொண் டிருக்கிறோம். நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கிறதென்பது மறுக்க முடியாத உண்மை. (இங்கே தெய்வமென்பது நித்திராதேவி). எங்கள் கையிலிருந்து தரையில் புஸ்தகம் தொப்பென்று விழும் ஓசையைக் கேட்டு, ஒரு தரம் எழுந்து, கண்களை ஜலத்தால் துடைத்துக்கொண்டு மறுபடி உட்காருவோம். எங்கள் பிரயத்தனம் திரும்பத் தூக்கத்தில் முடியும். அதன் பேரில் கொஞ்சம் கெட்டியான தேத்தண்ணீர் தயார் செய்து சாப்பிட்டுவிட்டுப் படிப்பதாக அடுத்த யோசனை. என்னைப்பற்றிய வரையில் இந்த யுக்தி கொஞ்சம் பலிக்கும். அதாவது தூக்கம் வர அரைமணியாவது செல்லும். ஆனால் என்னுடைய நண்பர்கள் பலருக்கு மட்டும் தேத்தண்ணீர் தூக்கத்தை வரவழைக்கும் கம்பியில்லாத் தந்தி என்ற அபிப்பிராயம். 

இந்தப் புதுத் தெய்வத்தின் உதவிகொண்டு தூக் கத்தை எவ்வளவு தூரம் விரட்டி அடிக்க முடியுமோ அவ்வளவு அடித்தும், என் பாடங்கள் பூராவும் படித் தானபாடில்லை. ஷேக்ஸ்பியர் அவ்வளவும் பாக்கி. ‘மன இயலில்’ முக்கால் பங்கு பாக்கி. பாக்கிப் பாடங் களில் கொஞ்சம் கொஞ்சம் சந்தேகம். என் பிதிரார்ஜித சொத்திலும் கால் பங்குதான் பாக்கி. பாக்கிப் பாடங் களைப் படித்துப் பரீட்சையில் தேறாவிட்டால் பாக்கிக் கால் பங்குப் பிதிரார்ஜித சொத்தும் போய்விடுமே என்ற பயம். பரீட்சை நெருங்க நெருங்க நான் படிக்காத குன்று போலிருந்த பாகங்கள் மலைபோல் ஆகிவிட்டன. நான் செய்யக்கூடியதென்ன? தேயிலையைக் கொஞ்சம் அதிக மாகப் போடலாம். டிகாக்ஷனைச் சர்க்கரை போடாமல் சுயமாகச் சாப்பிடலாம். பானத்தின் அளவையும் இரு மடங்காக்கலாம். என்ன செய்தாலும் இரண்டு வருஷப் பாடங்களை ஒன்றரை மாதத்தில் படிப்பதென்றால் நாய் வாலை நேர் செய்யும் முயற்சிதானே! 

இப்படியிருக்கும் பொழுது வெகு கவலையுடன் காவிரியில் ஒரு நாள் மாலை உட்கார்ந்திருந்தேன். படிப்பு ஓடினால்தானே? என்னண்டை யாரோ ஒருவர் வந்து யாதொன்றும் பேசாமல் நின்றார். அவருடைய முகம் எனக்குத் தெரிந்ததுபோல் இருந்தது. ஆனால் குறிப்பிட்டு உணரக்கூடவில்லை. அப்படியே பேச்சின்றி ஒரு நிமிஷம் சென்றது. பிறகு வந்தவர் ஒரு தரம் சிரித்தார். எக்காரணத்தாலோ அவர் சிரிப்பு என்னைப் புரளிபண்ணுவதுபோல் இருந்தது. மறுபடியும் சிரித்துக் கொண்டு என்னைக் கேட்டார். 

“என்ன ஸார், என்னைத் தெரியவில்லையா?” 

“எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறது. ஞாபகப் படவில்லை” என்றேன். 

“போகட்டும்; உமது நண்பர் ஸ்ரீதரன் பட்டணத்தில் வாசித்தது ஞாபகம் இருக்கிறதா?” 

“ஆமாம்.” 

“அவர் வசித்து வந்த வீட்டின் சொந்தக்காரர் ஒருவர் உண்டல்லவா!” 

“ஓகோ! தெரிகிறது, தெரிகிறது. வாருங்கள் ; உட்காருங்கள்; எப்போது வந்தீர்கள்? சௌக்கியந் தானே?.. வாஸ்தவமாகத் தங்களை ஸ்ரீதான் அறையில் ஒரு தடவைதானே பார்த்தது? அதுதான் நிகா புரிய வில்லை. இந்த ஊரில் ஏதாவது விசேஷ அலுவலா?” 

“விசேஷமான தல்ல. சாதாரணந்தான்.” 

“நல்லது. ஸ்ரீதரன் பட்டணத்தில்தானே இருக் கிறான்? எனக்குக் கடிதமே போடவில்லை.” 

“ஆமாம். அங்கேதான் இருக்கிறான்.” 

“ஏதாவது வேலையில் அமர்ந்திருக்கிறானா?” 

“உமக்குத் தெரியாதா அந்த விஷயம்?… போன வருஷம் பரீட்சையில் அவன் தேறிய பாடே பெரும் பாடாகிவிட்டது.” 

“ஏனோ?” 

“அவன் சமாசாரந்தான் பொதுவாக உமக்குத் தெரியுமே. போன வருஷம் நடந்ததைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறேன். பி. ஏ. ஸீனியர் வகுப்புக்கு வந்தது முதல் படிப்பைத் தவிர இதர விஷயங்களிலெல்லாம் தலையிட்டுக்கொண்டான். சில பொதுச்சங்கங்களுக்குக் காரியதரிசியானான். அத்துடன் ஊக்கமும் உற்சாகமும் அன்பும் உள்ளவனாதலால் சமூக ஸேவையில் ஈடுபட்டுப் படிப்பை அநேகமாக மறந்துவிட்டான். எப்போதாவது படித்தால் பொது அறிவை வளர்க்கும் நூல்களையும் காவியங்களையும் படிப்பானே ஒழிய, பாடபுஸ்தகங்களைத் தொடுவதில்லை. கலாசாலைகளில் உபாத்தியாயர்களால் எவ்வளவு தூரம் படிப்புச் சொல்லிக்கொடுக்கப்படுகிற தென்று – அப்படிச் சொல்லக் கூடாதோ என்னவோ! எவ்வளவு தூரம் பையன்களால் கிரகிக்கப்படுகிறதென்று தான் உனக்குத் தெரியுமே! 

“இப்படியே நாட்கள் கழிந்தன. எப்போதாவது பரீக்ஷை ஞாபகம் வந்தால், ‘என்ன பிரமாதம்! ஜனவரி மாதம் முதல் கடுமையாக உழைத்தால் பரீக்ஷைப் பழத் தைத் தட்டிவிடலாம்’ என்று தைரியம் கொள்வான். 

“ஜனவரி மாதம் வந்தது. ஸ்ரீதரன் படிப்பு மெதுவாக ஆரம்பித்தது- ஸ்டேஷனை விட்டுக் கிளம்பும் ஷட்டில்ரெயிலைப் போல. பிப்ரவரி மாதம் பதினைந்தாம் தேதிக்கு ஷேக்ஸ்பியர் பாக்கி. சரித்திரம், பொருளா தாரம் முதலிய முக்கால் பங்கு பாக்கி. எனவே பிப்ரவரி மாதம் முதல் தேதி லிப்டன்ஸ் டீ டப்பா – யானைத்தலை அவ்வளவு பெரிது ஒன்று – வீடு வந்து சேர்ந்தது.” 

“என்னைப்போலவேதான் இருக்கு” என்றேன். நான். 

“ஆமாம். உம்முடைய சிநேகி தன்தானே?” என்று அவர் மேலே சொன்னார். 

லிப்டன்ஸ் டீயின் உதவிகொண்டு, படிப்பு ரெயில் மார்ச்சு மாதம் ஒண்ணாந் தேதிவரையில் ஓடிற்று. அப்புறம் ஸ்ரீதரனால் படிக்கக்கூட முடியவில்லைபோல் இருாக் கிறது. படிக்காத பாடங்களை எண்ணும்போதே, தன் குடும்பப் பொருளாதாரமென்னும் விதைக்கோட்டையில் தானே எலியாய் அமைந்த துக்கம் நெஞ்சைப் பிளக்கும். மனம் காவிரியின் புது ஜலம்போல் குழம்பிக் கிடக்கும். ஒரு நாள் ஒரு யோசனை தோன்றிற்றாம். “என்ன முட்டாள் தனம் ! ஒரே நொடியில் துன்பக்கடலினின்று கரையேற மார்க்கம் இருக்கும்போது வீணில் வாதைப் படுவானேன்? விடுதலைச் சஞ்சீவி இல்லையா?” என்று எண்ணிக்கொண்டே உலகத்தாருக்கு ஒரு நிருபம் எழுதிவைக்கப் பேனாவும் தாளும் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான்.” 

“ஆனால் அப்போதே இந்த முட்டாள் செய்கையைத் தடுக்க ஏற்பாடு செய்துவிட்டீர்கள் போலும்” என்று குறுக்கிட்டேன் நான். 

“இல்லை. இவ்வளவும் அப்பால் ஸ்ரீதரன் சொல்லத் தான் தெரிந்தது.” 

“சரிதான், மேலே சொல்லும்.” 

“அந்தக் கடுதாசியில் எழுதியிருந்ததை ஸ்ரீதரன் திருப்பிப் படித்தபொழுது ஆச்சரியமாக இருந்ததாம்.” 

“ஏன்?” 

“ஏனா? அதில் உலகத்தாருக்கு நிருபம் எழுதப்பட வில்லை. அதற்குப் பதிலாக ஒரு பாட்டு வந்திருந்ததாம்! அதைப் படித்ததும் தற்கொலை ஞாபகம் மாயமாக மறைந்துவிட்டதாம். 

“அதற்குப் பிறகு வெகு தைரியத்துடன் பிடிவாத மாகப் பாடம் படித்தான். தேத்தண்ணீர்த் தெய்வம் அப்போதெல்லாம் பெரிய கூஜாவிலிருந்தது எனக்குத் தெரியும். 

“கடைசியாகப் பரீட்சைத் தினத்தன்று பார்த்தபோது ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றும் பொருளாதாரத்தில் பாதி யும் பாக்கி. என்ன செய்யலாம்? அன்று காலை 10-30-க்கு வீட்டைவிட்டுக் கிளம்பினான் ஸ்ரீதரன். அவன் சகுணம் பார்ப்பதில்லை. இருந்தாலும் கிளம்பினபோது எதிரில் நிறைகுடம் வாணியச்சி வந்தது கொஞ்சம் மனத்தில் உறுத்தத்தான் உறுத்தியது. 

“பரீட்சை ஹாலில் அமர்ந்தபோது மணி 11. ஷேக்ஸ்பியர் பேபர் கொடுக்கப்பட்டது. ஸ்ரீதரன் படித்துப் பார்த்தான். முதல் கேள்வி ஒன்றுதான் அவ னுக்குத் தெரிந்ததாக இருந்தது. பாக்கிக் கேள்விகள் அவ்வளவும் இங்கிலீஷ்ப் பாஷையில் இருந்ததாகவே நம்ப முடியவில்லை. இரண்டாவது தடவை பேப்பரைப் படித் தான். ஏதோ விசித்திரமான உணர்ச்சி அவனுக்கு உண் டாயிற்று. அவன் உட்கார்ந்திருந்த ஸ்டூல் கட்டைக்கு இரண்டு இறகு முளைத்துப் பறந்து போய்விட்டதுபோல் தோன்றிற்று. இது என்ன கஷ்டம் என்று நினைத்துக் கொண்டே ஷேக்ஸ்பியரின் ஹாஸ்ய சிருஷ்டியாகிய பால்ஸ் டாவைப்பற்றிய ஒரு கேள்விக்கு விடை எழுதினான். எழுத எழுத அவன் தலை கழுத்தைவிட்டுக் கிளம்பி விட்டது. விடை எழுதி முடிந்தபோது தலை கழுத்துக்கு இரண்டடி தள்ளி அலாதியாக நின்றது. ரொம்ப ஆச்சரி யம்! அதற்குமேல் அவனால் ஓர் எழுத்துக்கூட எழுத முடியவில்லை. தவிர ஒன்றும் புரியவும் இல்லை. பரீட்சை ஹாலைவிட்டு வெளியே வந்தான். 

“ஸ்ரீதரன் வெளியே போனதை ஓர் உபாத்தியாயர் பார்த்துக்கொண் டிருந்தார். இங்கிலீஷ் உபாத்தியாயரைக் கூப்பிட்டு, “ஓய்! உங்கள் பிரதம சிஷ்யர் பிருஹஸ்பதி யாகிவிட்டார். அதோ பாரும்; பந்தடி மேடையைச் சுற்றிப் போவதை” என்று சொன்னார். 

“ஸ்ரீதரனுக்கு இங்கிலீஷ் வாத்தியார் தன்னைப் பார்த்தது தெரியாது. அவன்பாட்டுக்குப் பந்தடி மேடையைச் சுற்றிப் போய்க் குளத்தங்கரையருகில் புல் தரையின் மீது படுத்துக்கொண்டான். குளத்தில் வாத்துக் குட்டிகள் கரணம் போட்டுக்கொண் டிருந்தன. தென்ன மட்டையிலிருந்து மணிப்புறா ஒன்று உருகி உருகிக் கூவிக் கொண்டிருந்தது. குளத்தின்மீது ஒளியும் நிழலும் ஓடி யாடின. தென்றல் வீசிற்று. அவன் தூங்கிவிட்டான். 

“விழித்து எழுந்தபோது ஸ்ரீதரன் தலை பழையபடி கழுத்துக்கே திரும்பி வந்துவிட்டது. ஆனால் ஒருவித ‘கேரி’ மட்டும் மிஞ்சி இருந்தது. காபி கிளப்பில் காபி மட்டும் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வருகையில், ஒரு பெரிய பிரச்னை கிளம்பிற்று. பாக்கிப் பரீக்ஷையைக் கொடுப்பதா அல்லது அப்படியே விட்டுவிடுவதா? ஸ்ரீதர னுக்கு முடிவு தோன்றவில்லை. அவனை அறியாமலே அவன் கால்கள் பரீட்சை ஹால் பக்கம் அவனை இழுத்து வந்துவிட்டன. 

“வெளியே வராண்டாவில் இங்கிலீஷ் வாத்தியார் முன்னடியான் மாதிரி நின்றுகொண் டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஸ்ரீதரனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. 

“ஏனப்பா காலையில் சீக்கிரமாக எழுந்திருந்து போய் விட்டாய்?” என்று கேட்டார் வாத்தியார். 

“ஒரே மயக்கம். ஒன்றும் புரியவில்லை” என்றான் ஸ்ரீதரன். 

“போனது போகட்டும். அதைரியப்படாதே. பாக்கிப் பேப்பர்களை எழுது, காலைப் பேப்பர் மார்க்கையும் சேர்த்து வாங்கிவிடலாம். எழுது போ” என்று முதுகில் ஸொட்டுக்கொடுத்து அனுப்பினார் வாத்தியார். 

“உபாத்தியாயர் சொல்படி மத்தியான்னப் பேப்பரை எழுதிவிட்டுச் சாயங்காலமாக வீட்டுக்கு வந்தான். 

“பரீக்ஷைப் பேப்பர் எப்படி எழுதியிருக்கிறாய்?” என்று கேட்டேன். அப்போதுதான் அவனுடைய படிப்பு முறையை விஸ்தாரமாக என்னிடம் சொன்னான். படிப் பில் அவ்வளவு ஊழலாயிருப்பானென்று நான் எதிர் பார்க்கவே இல்லை. பரீட்சையில் காலைப் பேப்பருக்கு விடை எழுதிய மாதிரியைக் கேட்டபோது எனக்கு வருத்தமாகப் போய்விட்டது. 

“தேத்தண்ணீர்த் தெய்வத்தைக் கொண்டாடிய பலன் தெரிந்ததா?” என்றேன். 

“ஆனால் அதனுடைய கோளாறு தானா நான் ‘சின்ன மஸ்தா” அவஸ்தை அடைந்தது?” என்று வியப்புற்றான் ஸ்ரீதரன். 

“சந்தேகமென்ன?” என்று மேலே சொன்னேன். 

*பராசக்தியின் பத்துவித உருவங்களில் தலையற்ற முண்ட மாக இருப்பது சின்னமஸ்தா. 

“நான் ஒரு தூள் தருகிறேன். அதைக் கஷாயம் போட்டுப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால், காபி, இதுகளின் சுறுசுறுப்பும் உத்சாகமும் உண்டாகும். இர வில் எவ்வளவு நேரமானாலும் விழித்துக்கொண்டு படிக்க லாம். ஆனால் டீ, காபி இதுகளிலுள்ள விஷ அம்சம் இதில் கொஞ்சங்கூட இல்லை. உனக்கு ஏற்பட்டிருக்கும் மயக்கத்தையும் கண்டிக்கும்” என்று சொல்லி அந்தத் தூள் செய்து கொடுத்தேன். 

“அன்று முதற்கொண்டு அந்தத் தூளையே போட் டுச் சாப்பிட்டு வந்தான்; எல்லாவிதக் கோளாறும் மறைந்துவிட்டது. அப்பால் ஒன்றரை மாதம் கழித்துப் பரீட்சையின் முடிவுகள் வெளியிடப்பட்ட காலையில் என்னை ஸ்ரீதரன் பார்த்துச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித் தான். ‘என்னடா?’ என்று பிரமித்தேன். “உங்கள் பரீட்சை தாண்டித் தூள் இல்லாவிட்டால் என்ன ஆகி யிருக்குமோ பரீட்சை?” என்று தழுதழுத்த குரலில் சொன்னான்….

“அது முதல் அந்தத் தூளையே ஏராளமாகத் தயாரித்து வியாபாரமாகவே வைத்துவிட்டேன். இந்த ஊரில் ஒரு கிளைக்கடை வைக்கலாமா என்று பார்க்கத் தான் வந்தேன்.” 

“இப்போது ஸ்ரீதரன் எங்கே இருக்கிறான்?” என்றேன். 

“ஓ, சொல்ல மறந்தேவிட்டேன். ஸ்ரீதரன் என் னுடைய பட்டணத்துக் கடை மானேஜர். 

“சரிதான்…இப்போது பரீட்சைக்கு முந்தி டீ போட் டுக் குடித்துவிட்டுப் படிக்கக் கூடாதென்கிறீர்களா?” என் றேன் திகிலடைந்து. 

“என் பரீட்சை தாண்டித் தூளைத் தவிர எது போட் டுச் சாப்பிட்டுவிட்டுப் படித்தாலும் ஸ்ரீதரன் கதிதான். பத்து நாளைக்கு வரக்கூடிய ஸாம்பிள் டப்பா எட்டு அணாத்தான்” என்று ஒரு பச்சைத்தாள் சுற்றிய டப் பாவை நீட்டினார்.

– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *