“”கொரங்குல இருந்து மனுசன் உருவானதாச் சொல்றாங்க. நீ ஏன்டா ஆஞ்சி… இன்னும் கொரங்காவே இருக்கற?” என்று கேட்டான் கதிரேசன்.
சங்கிலியால் கட்டப்பட்டு, அவனுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்த அவனது குரங்கு, தன் உட்குழிந்த கோலிக் குண்டு கண்களால், அவனையே ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. வாய் பேச முடியாவிட்டாலும், அதற்கு, அவன் பேசுவது புரியும். மனிதர்கள் அளவுக்கு மொழியைப் புரிந்து கொள்கிற அறிவு இல்லாவிட்டாலும், அவன் சொல்வதன் அர்த்தத்தையும், அவனது உணர்ச்சிகளையும் கண்டு கொள்கிற உள்ளுணர்வு அதற்கு இருந்தது. எஜமானனின் கட்டளைகளுக்குக் கீழ்படியும்படி பழக்கப்படுத்தப்பட்ட வளர்ப்பு மிருகங்களுக்கே உரித்தான உணர்திறன் அது.
மிகுந்த உடற்சோர்வும், மனச்சோர்வும் கொண்டிருந்தான் கதிரேசன். உடற்சோர்வுக்குக் காரணம், நீண்ட நடைப் பயணம்; மனச்சோர்வுக்குக் காரணம், தொழில் நலிவு.
அவனைப் போன்ற உடல் மற்றும் மனச் சோர்வில் தான் குரங்கும் இருந்தது. இருவரின் முகத்திலும் தென்பட்ட பட்டினிக் களையை, பரஸ்பரம் இருவரும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர்.
“”உன்னை மாதிரி கொரங்குக பல கோடி வருசமா மனுசங்களா மாறாம அப்படியே இருக்குதுக. ஆனா, மனுசங்க பாரு… பத்துப் பாஞ்சு வருசத்துல எப்புடி மாறிட்டாங்க. மனுசங்க மட்டுமா? காலமுந்தான் ரொம்ப மாறிப்போச்சு!” என்று விரத்தியோடு பெருமூச்சு விட்டான்.
முன்பெல்லாம் குரங்காட்டிகள், பாம்பாட்டிகள், கழைக் கூத்தாடிகள், செப்பிடி வித்தைக்காரர்கள் ஆகியோர், ஒரு ஊருக்குள் வந்தாலே, வேடிக்கை பார்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கூட்டமாகக் கூடுவர். கிராமம், நகரம் என்ற பேதமில்லாமல், அனைத்து மக்களுக்குமே இதுபோன்ற வித்தைகளில் ஆர்வமிருந்தது. குறிப்பாக, கேளிக்கைகளுக்கு வேறு வாய்ப்பில்லாத கிராமங்களில், இதுபோல எப்போதாவது வருகிற வித்தைகளே ஆறுதல். அதனால், ஊரே கூடி ரசிக்கும், நிகழ்ச்சியின் முடிவில் சில்லரைக் காசுகளும், பணமுமாக நல்லதொரு தொகையும் வசூலாகும்.
பட்டி தொட்டி முதல் ஆன்டெனா,”டிவி’ வந்ததிலிருந்தே இம்மாதிரி தொழில்கள் நலிவடையத் துவங்கி விட்டன. கேபிள், டி.ட்டி.எச்., என்று வந்து, தனியார் சேனல்கள் பரவிய பிறகு, மக்கள் தியேட்டருக்குக் கூடப் போகாமல், “டிவி’யே கதியென்று கிடக்கின்றனர். அப்படியிருக்கையில், இதுபோன்ற பாமரக் கேளிக்கைகளுக்கா ஆர்வமிருக்கும்? வெளியே சென்று வரும் சந்தர்ப்பங்களில், பஸ்சுக்கோ, வேறு எதற்கோ காத்திருக்கும் பொழுதுகளில், அருகாமையில் வித்தை நடந்தால், சிற்சிலர் சற்று நேரம் கூடி நின்று வேடிக்கை பார்ப்பர். அவர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய சொற்ப சில்லரைகளே இவர்களின் வருமானம்.
பெரும்பாலும் அது ஒருவேளை உணவுக்கே போதாததாகத் தான் இருக்கும். பெரிய ஊராக இருந்தால், ஆட்கள் அதிகம் கூடுகிற நாலைந்து இடங்களில் நிகழ்ச்சி நடத்துவான் கதிரேசன். அவனுக்கும், குரங்குக்கும் இருவேளை அரை வயிறு உண்பதற்கு வரும்படியாகும். சிறிய ஊராக இருந்தால், ஒரே இடத்தோடு முடித்து, அடுத்த ஊருக்கு செல்ல வேண்டியிருக்கும். எப்படியாயினும், ஒரு ஊரில் ஒரு நாளைக்கு மேல் நிகழ்ச்சி நடத்துவதற்கில்லை. ஒரே வேடிக்கையைத் திரும்பத் திரும்பக் காண்பதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள் அல்லவா! அதனால், அடுத்தடுத்த ஊர்களுக்கு சென்று கொண்டேயிருக்கும் நாடோடி வாழ்க்கைதான் அவனுடையது.
அவ்வாறே இந்த ஊருக்கும் மதியப் பொழுதில் வந்து சேர்ந்திருந்தான். அந்த மட்ட மத்தியான வெயிலில், வித்தை காட்டினால் யார் நின்று பார்ப்பர்? அதனால், வெயில் தாழும் வரை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
மரத்தடியில் அமர்ந்து குரங்கிடம் பாடு பழமைகளைப் பேசிக் கொண்டிருந்ததில் வெயிலும் தாழ்ந்து விட்டது.
“”ம்… நம்ம பாட்டச் சொல்லீட்டிருந்தா பொளுதுளுந்து பொளுது விடிஞ்சாலும் தீராது. கேக்கறதுக்குத்தான் ஆளில்லீன்னு நானும் உங்கிட்டச் சொல்லீட்டிருக்கறன்… நீயும் கேட்டுட்டிருக்கற. வெடியாலிருந்தே ரெண்டு பேரும் பட்டினி. ராத்திருக்காவது வயித்துக்கு வகைச்சல் கெடைக்குமான்னு பாக்கலாம், வா!” என்று, டோலாக்கை ஒரு தோளிலும், தன் உடைமைகள் அடங்கிய பொக்கணத்தை மறு தோளிலுமாக ஏற்றி, குரங்கைக் கூட்டிக் கொண்டு, ஊர் மையத்தை நோக்கி நடந்தான்.
பஸ் நிறுத்தமும், கடை கண்ணிகளும் கொண்ட அந்த இடத்திலும் கூட மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படாதபடி, பயணியர் நிழற் குடைக்குப் பக்கவாட்டில் உள்ள காலியிடத்தைத் தனக்குக் களமாக்கிக் கொண்டான். சங்கிலியை அவிழ்த்துவிட்டு, குரங்குக்கு ஆடை, அலங்காரங்களைச் செய்விக்கும் போதே, அக்கம் பக்கங்களிலிருந்து குழந்தைகளும், சிறுவர், சிறுமிகளும் ஆவலோடு வந்து வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டனர்.
பிறகு பெரியவர்கள் சிலரும், “”கொரங்காட்டத்தப் பாத்தே நெம்ப வருசமாச்சு! இன்னீமிருக்கறாங்களா இவுங்கல்லாம்?” என்றபடி வந்து நின்றனர். முன்னறிவிப்பாக டோலாக்கை முழக்கியதும், தொலைவில் உள்ளவர்களும் கூட, சப்தம் கேட்டு, என்ன ஏது என்று பார்ப்பதற்காக வந்து கூடலாயினர். வழிப்போக்கர்களும், பஸ்சிலிருந்து இறங்கி வந்தவர்களும் சேர, குழந்தைகள், சிறார்களோடு பெரியவர்களும் கலந்து சிறியதொரு மனித வளையம் உருவாயிற்று.
கதிரேசன், பசி வயிற்றிலிருந்து குரலெடுத்து நிகழ்ச்சியைத் துவக்கினான். “”கூடியிருக்கற பெரியவங்களுக்கெல்லாம் ஜோரா ஒரு சலாம் போட்ரா ஆஞ்சி!”
குரங்கு வளை கால்களில் நின்று, நாற்புறமும் திரும்பி கூட்டத்தாருக்கு சல்யூட் வைத்தது. பெரியவர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தனர். முன் வரிசையிலிருந்த குழந்தைகள் உற்சாகமாக பதில் சல்யூட் செய்தன.
“”அதென்னப்பா… கொரங்குக்கு ஆஞ்சீன்னு பேரு வெச்சிருக்கற? கொரங்காட்டீக எல்லாரும் ராமான்னுதான பேரு வெப்பாங்க?” என்று கேட்டார் நடுத்தர வயதினர் ஒருவர்.
“”ராமரு பேர கொரங்குக்கு வெக்கறது தப்புங்க. அனுமாரு தானுங்களே கொரங்கு! அதனால தானுங்க ஆஞ்சனேயன்னு அவுரு பேர வெச்சு, ஆஞ்சின்னு செல்லமாக் கூப்பிடறனுங்க…” என்றான் கதிரேசன்.
“”அதுவும் கரைக்கிட்டு தானப்பா! ராமரு மனுச அவதாரமெடுத்த கடவுளு. அவுரு பேர கொரங்குக்கு வெக்கறது தப்புத்தேன்! அதுமில்லாம… ஆட்ரா ராமா, குட்டியாக்கரணம் போட்ரா ராமான்னெல்லாம் சொல்றது சாமி குத்தமப்பா!” என்று வேதாந்தித்தது நரைக் கிழம் ஒன்று.
“”பின்னியும் ஒண்ணுங்க! லங்கை தாண்டுனது, சீதை கிட்ட தூது போனதெல்லாம் ஆஞ்சனேயருதானுங்களே… அதைய ராமருன்னு பேரு வெச்ச கொரங்கு பண்ணுனா, சீதைக்கு ராமன் சித்தப்பன்ங்கற கோப்புலயல்லங்க இருக்கும்!” கட்டம் போட்ட சட்டைக்காரர் லாஜிக் பாய்ன்ட்டுக்கு அடிக்கோடு போட்டார்.
கதிரேசன் மீண்டும் டோலாக்கை முழக்கியதில், சலசலப்புகள் ஓய்ந்தன.
அவன் மறுபடியும் குரலெடுத்தான். “”அய்யாமாரே, அம்மாமாரே, அண்ணன்மாரே, அக்காமாரே… ஆஞ்சியோட ஆட்டம், வேடிக்கை, வெளையாட்டு, வித்தை, வீர சாகசம் எல்லாம் இப்ப நடக்கப் போகுது. எல்லாரும் கடைசி வரைக்கும் இருந்து, பாத்து ரசிச்சு, உங்களால முடிஞ்ச ஒர்ருவா, ரெண்ட்ருவா… தாராள மனசுள்ளவங்க அஞ்சு, பத்துன்னு தர்மம் பண்ணுனா… எங்களுக்கு கால் வயிறு, அரை வயிறு நெறையும் சாமீ!”
கூட்டம் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
“”நிகழ்ச்சியோட மொதல் கட்டமா ஆஞ்சி குட்டியாக் காரணம் போடப் போறான். எல்லாரும் ஜோரா கை தட்டுங்க!”
குழந்தைகளும், சிறார்களும் ஆவலோடு கைகளைத் தட்ட, குரங்கு குட்டிக்கரணம் அடிக்கலாயிற்று. பெரியவர்கள் இதென்ன வித்தை என்பதாக கைகளைக் கட்டிக் கொண்டிருந்தனர். குட்டிக்கரணத்தின் குஷி, குழந்தைகளுக்கல்லவா தெரியும்!
“”அப்படித்தான்டா ஆஞ்சி! நல்லாப் போட்ரா… இன்னும் போட்ரா…” என்று அவர்கள் ஊக்குவிக்க, குரங்கும் குட்டிக் கரணமடித்தபடியே மனித வளையத்தை ஒட்டி உள்வட்டமாக ஒரு சுற்று வந்தது. அவர்கள் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.
அடுத்ததாக குரங்கின் ஆட்டம். கதிரேசன் டோலாக்கைத் தட்ட, தாளத்திற்கேற்ப குரங்கு ஆடியது. குழந்தைகள் குதியாட்டம் போட்டு கை தட்டின; பெரியவர்களும் மெச்சிக் கொண்டனர்.
பிறகு தண்ணீர் சுமக்கும் படலம். குரங்கிடம் ஒடுங்கிய ஈயப் பாத்திரத்தைக் கொடுத்து, “”அம்மா வீட்டுக்குத் தண்ணி எட்ரா ஆஞ்சி!” என கட்டளையிட்டான் கதிரேசன். குரங்கு பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு, அசையாமல் உட்கார்ந்து கொண்டது. அடுத்தடுத்து அண்ணன் வீடு, அக்கா வீடு, தம்பி வீடு, தங்கை வீடு, சித்தப்பா – பெரியப்பா வீடுகளுக்கு எடுக்கச் சொன்னபோதும், முகத்தைத் திருப்பிக் கொண்டது.
“”என்னது… எந்த வீட்டுக்கும் எடுக்க மாட்டீங்கறானே… செரி, இந்த வீட்டுக்காவது எடுக்கறானான்னு பாப்பம்!” என்று தனக்குள் பேசுபவன் போல் சொல்லிவிட்டு, “”மாமியா வீட்டுக்குத் தண்ணி எட்றா ஆஞ்சி!” என்றதுமே குரங்கு பாத்திரத்தைத் தலையில் தூக்கி வைத்து குடுகுடுவென ஓடியது; பெரியவர்கள் நகைத்தனர். சிறுவர், சிறுமிகளும் புரிந்துகொண்டு, கையால் வாயைப் பொத்தியபடி, தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, “க்ளுக்’கிட்டுச் சிரித்தனர். குழந்தைகள் மட்டும் புரியாமல் விழித்தன.
“”வேடிக்கை, வெளையாட்டெல்லாம் முடிஞ்சு, ஆஞ்சியோட வீர சாகசம் தொடங்கப் போகுது…” என்றவன், டோலாக்கை அடித்துவிட்டு கீழே வைத்தான். இரும்பு வளையமொன்றை எடுத்து சற்றே உயர்த்திப் பிடிக்க, குரங்கு அதனூடே பாய்ந்தது. அப்படியும் இப்படியுமாக சில தடவை பாய்ந்து முடித்த பிறகு, கதிரேசன் அந்த வளையத்தைப் பழந்துணியில் சுற்றி, மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்து, இடுக்கியின் துணையோடு பிடித்துக் கொண்டான். நெருப்பு வளையத்துக்குள்ளும் குரங்கு பாய்ந்தது. கூட்டம் மொத்தமும் வியப்போடு கைதட்டிப் பாராட்டியது.
மேலும், சில வித்தைகளுக்குப் பிறகு, நிகழ்ச்சியின் <உச்சகட்டமான லங்கா தகனம்.
அசோகவனத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டிருக்கும் சீதையிடம், ராமனின் சார்பில் தூது போகும் ஆஞ்சனேயராக, கடல் தாண்டி இலங்கையில் குதித்தது ஆஞ்சி. வனமெங்கும் சீதையைத் தேடி அலைந்து, மரத்தடியில், அரக்கிகள் காவலிடையே அவளைக் கண்டு, ரகசியமாக சந்தித்து, ராமன் கொடுத்த கணை யாழியைக் காட்டி, அவளைக் கண்டதற்கு அடை யாளமாக அவள் தந்த கணை யாழியைப் பெற்றுக் கொண்டது. பின் ராவணனின் அரசவைக்கு பேச்சுவார்த்தை நடத்தப் போனபோது, ஆஞ்சனேயரின் மகிமையை அறியாத ராவணன், கேவலம் ஒரு குரங்குதானே என்று சேவகர்களை ஏவி, அதன் வாலில் துணி சுற்றித் தீக் கொளுத்தச் செய்தான். எரியும் வாலுடன் ஆஞ்சனேயர் விஸ்வரூபமெடுத்து இலங்கை முழுதும் தாவி எரித்தான். பின் வனத்துக்குள் புகுந்து, வனத்தையும் அழித்துச் சாம்பலாக்கினான்.
முடிவில் கடலுக்கு வந்து, வால் தீயை அணைத்துவிட்டு, இன்னொரு தாண்டலில் இந்தியாவுக்குள் குதித்தது ஆஞ்சி.
வேதாந்தக் கிழம், “”ராம, ராம” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டது.
“”இலங்கைல இப்பவும் ராவண ஆட்சிதான் நடந்துட்டிருக்குது. இங்க ராமனையும் காணம், ஆஞ்சனேயனையும் காணம்!” என்றார் கட்டம் போட்ட சட்டைக்காரர்.
வித்தை, கிளை தாவி அரசியலுக்குப் போய்விடக் கூடாதே என்பதோடு, ஆட்களும் கலைந்து விடக்கூடாது என்று கதிரேசன் அவசர அவசரமாக அலுமினிய வட்டலை எடுத்துக் கொண்டான். மனித வளையத்திடம் அதை ஏந்தியபடியே சுற்றுக்குள் வலம் வந்தான். ஐம்பது பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என ஆங்காங்கே நாணயங்கள் விழுந்தன.
பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்து, “அடடா… சிலுவானம் இல்லையே…’ என்று வேதாந்தமும், அரசியலும் உதடு பிதுக்கின.
மனித வளையம் கலைந்து சென்றதும், கதிரேசன் சில்லரைகளை எண்ணிப் பார்த்தான். பதின்மூன்று ரூபாய் ஐம்பது காசு சேர்ந்திருந்தது. ஒரு டீ நான்கு, ஐந்து ரூபாய்க்கு விற்கிற இந்நாளில், இதை வைத்து எப்படி பசியாற முடியும், அவனும், குரங்கும்?
தன் உடைமைகளை பொக்கணத்துக்குள் போட்டு, குரங்கை சங்கிலியில் பிணைத்துக் கொண்டு, எதிர்த்தாற்போலிருக்கும் மளிகைக் கடைக்குச் சென்றான். குரங்கும், அவனும் ஒரே சமயத்தில் வாழைப் பழத்தார்களை ஆராய்ந்தனர்.
“”கொரங்குக்கு ரெண்டு பளம் குடுங் சாமீ…!” என்று கடைக்காரரிடம் கையேந்தினான்.
“”கொரங்குக்குன்னாலுஞ் சேரி… மனுசனுக்கானாலுஞ் சேரி; ரஸ்தாளி நால் ருவா, பூவன் ரெண்டார் ருவா,” என்றார் கடைக்காரர்.
குரங்குக்கு தானம் பெற நினைத்திருந்த அவனது முகத்தில் ஏமாற்றத்தை விட அதிர்ச்சியே மேலோங்கியிருந்தது. இருப்பினும் சமாளித்துக் கொண்டு, “”அடீல பாருங்சாமி… அளுகுன பளம் இருக்குது. அதைன்னாலும் குடுங் சாமி!” என்று யாசித்தான்.
வேண்டா வெறுப்புடன் கடைக்குள்ளிருந்து வந்தவர் தோல் கரிந்து அழுகிய பழங்கள் நாலைந்தைப் பிய்த்துக் கொடுத்தார். குரங்கு தோலை உரித்து, அழுகலைப் பிய்த்தெடுத்து வீசிவிட்டு, மீதத்தைத் தின்றது. உட்கிழிந்த அதன் கண்களில் பசிப் பார்வையை அறிந்தவன், “”இதுலயே ரெண்டு நல்ல பளம் குடுங் சாமி! காசு வேண்ணாலும் குடுத்தர்றன்!” என்றான்.
“”வேண்ணாலுமல்ல. கண்டிப்பா வேணும்!” என்றபடி நல்ல பழங்களைப் பிய்த்துக் கொடுத்தவர், ஐந்து ரூபாய் சில்லரையை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.
கதிரேசன் இரண்டு பழங்களையும் குரங்கிடம் கொடுத்தான். கைக்கொன்றாக அதை வாங்கிக் கொண்ட குரங்கு, அண்ணாந்து அவனது முகத்தை ஏறிட்டுவிட்டு, ஒன்றை அவனிடமே திருப்பி நீட்டியது.
– சேரன் செங்குட்டுவன் – வட்டார மொழிக்கதை (நவம்பர் 2010)