நியு பவுண்ட் லாந்து மற்றும் லாப்ரடோர்..
கனடாவின் ஆகக் கிழக்கில் உள்ள மாகாணம் மட்டுமல்ல மிக வடக்கே உள்ள மாகாணங்களில் ஒன்றும் கூட.
முழுக்க முழுக்க கடலால் சூழப்பட்ட தீவுப்பகுதி நியு பவுண்ட் லாந்து. பெரும் பகுதி நிலப்பரப்புடன் இணைந்தது லாப்ரடோர்.
1.ஜோண் பஸ்தியாம்பிள்ளை 2 அஸிஸ் ஷா 3 வேஜில் மெலின்டஸ் 4.ஹரி ஸ்டீவ் 5.அமில்கர் ஹாஸா 6.லூயி டிமோவ் 7.மைக் மக்கராத் 8. பிலிப் கபிரியல்பிள்ளை 9.வல்லபாய் பட்டேல் ஆகிய ஒன்பது முதியவர்களையும் அனேகமாக ஒவ்வொரு மாலை வேளைகளிலும் நியு பவுண்ட்லாந்து மாகாணத்தின் பிரதான நகரமாகிய செயின்ட் ஜோண்ஸில் எங்கு காணலாம் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அவர்கள் அங்கே பெலத்துக் கதைப்பதால் என்ன கதைக்கின்றார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
மனித சஞ்சாரம் மிகுதியாய் இருக்கும் அவலோன் தீபகற்பத்தின் தென் முனையில் உள்ள செயின்ட் ஷாட்ஸ் கடைத் தொகுதிகள்தான் அவர்களுக்கு இமைப் பொழுதும் நீங்காத சாயங்கால சந்தோஷம்.
மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை அந்தப்பகுதிதான் அவர்களுக்கு உலகில் மிக மிக விருப்பமான பகுதி.
அவர்களில் எவருமே ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டிருக்க வில்லை எனினும் தினம்தோறும் கதைப்பதற்கு புதிது புதிதாய் ஏதாவது இருக்கும் வெள்ளை மனம் கொண்ட பிள்ளைகள்.
பேதமும் போதமும் மங்கினாலும் சாவிலிருந்து தப்பலாம் என முன்னரே முடிவெடுத்திருப்பார்களோ என எண்ண வைக்கும் தொய்யாத தோழர்கள்.
அவர்களது சாயங்கால சந்தோஷம் வெறுமனே சாயும்கால சந்தோஷம் அல்ல. வீட்டுக்குள்ளிருக்கின்ற கூட்டுக்குள் குறுகிக் கொள்ளாத குதுகலம் நிறைந்தது.!
ஊர், உறவு, உலகம், ஊடகம், அரசியல், நாட்டு நடப்பு என பலதும் பத்தும்தான் கதை பெருட்கள்.
1949 ல் கனடாவுடன் இணையும் வரை கனடா, அவுஸ்திரேலியா, நியுஸிலாந்து போன்று அதிகாரம் மிக்க தன்னிச்சையாக இயங்கும் ஒரு தனி நாடாகவே நியு பவுண்ட்லாந்தும் இருந்தது தெரியுமா? என்றார் ஜோண் பஸ்தியாம்பிள்ளை.
மாணவ பராயத்தில் முத்திரை சேகரிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அதில் நியு பவுண்ட் லாந்து நாட்டின் தனி முத்திரையும் இருந்தது எனக்கு நல்ல ஞாபகம் என்று சொல்லிச் சிரித்தார் லூயி டிமோவ்.
புதிய பூமி என்ற அர்த்தம் உள்ளது. கடற் பறவைகளின் தலை நகர் என்ற பெருமையும் கொண்டது. துருவ மான்கள் நிறைந்தது. வைக்கிங் கடற் கொள்ளையரால் வின்லாந்து என்றும் அழைக்கப்பட்டது என மேலதிக தகவல்களை மேலதிகமாகச் சேர்த்த பின்பும் முறுவலை அவர் விடவில்லை.
அடர்த்தியாக நிறம் மாறும் மரங்கள் இலையுதிர் காலத்தின் உன்னத அழகு. அசையாத பாறைகள் ஐஸ் வடிவில் நகர்வது சிலிர்க்கும் அழகு. கடல் மட்டத்திற்கு கீழாக பறவைகள் சுழியோடுவதும் மேலாக மீன்கள் துள்ளி விளையாடுவதும் நீங்காமல் இடம் பிடிக்கும் நீர் நிலை அழகு என்றார் வாலிப சிந்தனை குன்றாத ஹரி ஸ்டீவ்.
வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் பாரிய ஐஸ் பாறைகளும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் பாரிய திமிங்கலங்களும் அளப்பரிய பபின் பறவைகளும் பரவசம். அவற்றை ஒருங்கே கோடை காலத்தில் பார்க்க விரும்புபவர்களை சொக்க வைக்கும் ஒரு சொர்க்கம் நியு பவுண்ட் லாந்து என்ற மைக் மக்கராத் கண்களால் மனசு தடவினார்.
பெரும்பாலும் கடல் மேல் பரப்பில் மிதப்பதும், அறுபது மீட்டர் ஆழத்திற்கு சென்று மீன்களை பிடிக்கக் கூடியதுமான கடல் கிளிகள் அல்லது கடல் கோமாளிகள் என்று அழைக்கப்படும் மிக அழகான பபின் பறவைகள் மே முதல் செப்டம்பர் வரை போனவிஸ்டா குடாவில் உள்ள குருவிகள் தீவில் ஏராளமாக காணலாம். இப்பறவைகளால் முன் நோக்கி பறக்க மட்டுமல்ல பின் நோக்கி பறக்கவும் இயலும். வாத்தும், பென்குயினும் கலந்தது போல் தோற்றமளிக்கும் புறா அளவில் உள்ள இப்பறவைகள் கிளி போன்ற அலகினால் அறுபது, எழுபது மீன்களை ஒரே தடவையில் கவ்வும் அபாரசக்தி உடையவை என்ற அஸிஸ் ஷாவிடம் பிரசங்க பாணி தொனித்தது.
உலகில் மிகவும் பெரிய உயிரினமான முப்பது மீட்டர் நீளமுள்ள நீலத்திமிங்கலமும் இங்கு உண்டு. வட துருவ பகுதியில் வாழும் ஐந்து மீட்டர் நீளமுள்ள வெள்ளைத் திமிங்கலமும் இங்கு உண்டு. எழுபத்தைந்து வகையான திமிங்கலங்கள் உண்டு என்று சொல்வார்கள்.உண்மையோ பொய்யோ தெரியாது. திமிங்கலம், மீனல்ல கடலில் வாழும் பாலூட்டி விலங்கு என்பது தெரியும்தானே என்றார் வேஜில் மெலின்டஸ் தனது பங்குக்கு.
இலங்கையில் மாத்தறை மாவட்டத்திலுள்ள மிரிஸ்ஸா கடற்பரப்பிலும் திமிங்கலங்களை பார்க்கலாம் என்ற பிலிப் கபிரியல்பிள்ளை இலங்கைத் தமிழருக்கும் நியு பவுண்ட் லாந்துக்கும் இரு வகையான பரிச்சயம் உண்டு. முதலாவது 1912 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டைட்டானிக் செகுசு கப்பலில் 1500 உல்லாச பயணிகள் பரிதவித்து மூழ்கியதை வாசித்தறிந்த அறிமுகம். இரண்டாவது 1986 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே சமுத்திரத்தில் ஓட்டைப்படகில் தத்தளித்த 155 தமிழரை காப்பாற்றிக் கரைசேர்த்த நெருக்கம் என்றார் தனது முற்றிய முகத்தோடு!
அதை காதில் வாங்கிக் கொள்ளாதவராக வல்லபாய் பட்டேல் “என்னவோ தெரியவில்லை.ஒரே மனச் சோர்வாகக் கிடக்கு. இங்கு சென்.ஜோண்ஸில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு ஒரு தரம் போக வேண்டும் ” என்றவாறே கைகளை தலைக்கு மேலால் உயர்த்தி நெட்டி முறித்தபடி “பாம்பு , ரக்கூன், அணில் போன்ற பிராணிகள் நியு பவுண்ட் லாந்தில் இல்லை. சிறு பாறைத் துண்டுகள், கூழாங்கற்கள், சிற்பிகள், சோகிகள் போன்றவற்றை தேசிய பூங்காக்களிலிருந்தோ, கடற்கரைகளிலிருந்தோ சேகரித்து நியூ பவுண்ட் லாந்திற்கு வெளியே கொண்டு செல்வது சட்ட விரோதமாகும் என்ற விசித்திரமும் இங்கு உண்டு என முடித்தார்.
ஐரோப்பியர் கொஞ்சம் இளக்காரமாக போலாந்தினரை கருதுவதால் எவரையாவது மட்டம் தட்ட வேண்டுமெனில் ‘போலிஷ்’ என்பார்கள். இங்கிலாந்தினர் அயர்லாந்தவரை கருத்தில் கொண்டு ‘ஐரிஷ்’ என்பார்கள். அவ்வாறே கனடியரும் நியு பவுண்ட் லாந்தினரை நினைவில் கொண்டு கொச்சைப் படுத்த விரும்பும் எவரையும் ‘நியுஃபி’ என்பார்கள் என்று சகிக்கமுடியாத மனதோடு சலித்துக்கொண்டார் அமில்கர் ஹாஸா.
ரொரன்ரோ வாசிகளுக்கு தரை வழியான கிழக்கு கரை சுற்றுலா எவ்வளவு பரவசமோ அவ்வளவு பரவசம் கடல் வழியான படகு சுற்றுலா நியு பவுண்ட்லாந்து பயணிகளுக்கு.
குரோஸ் மோர்னே தேசிய பூங்கா, பிரிகஸ் பழக்கொண்டாட்டம், கோட்ராய் பள்ளத்தாக்கு, டன்ஜியன் கடல் பள்ளத்தாக்கு, சிக்னல் ஹில், கேப் ஸபியர் கலங்கரை விளக்கு, எலிஸ்டன் தீவு, விட்லெஸ் குடா, ரினிட்டி குடா, புரூக் ஏரி, மைன் சுரங்கம் என படகுகள் தரிக்கும் பகுதி எங்கும் கண்களுக்கு ‘செம’ விருந்து.
அத்திலாந்திக் சமுத்திர கரையில் ஏராளமாக சுற்றித்திரியும் வன விலங்குகள், எழில் கொஞ்சும் இயற்கை ஆறுகள், அருவிகள், பாறைகள், பள்ளத்தாக்குகள், சரித்திரச்சான்றாக நிமிர்ந்து நிற்கும் கோட்டைகள், அருங்காட்சியகங்கள், காலத்துக்கும் ஒளியூட்டும் கலங்கரைவிளக்குகள், தங்கம், வெள்ளி, செப்பு, பெறுமதியான ரத்தினக்கற்கள் என்பவற்றை வாரிக்குமிக்கும் சுரங்கங்கள் என எத்தனையோ பரவசங்கள் இருக்கட்டுமே.
தமிழினம் அவற்றால் கவரப்போவதில்லை.
1986 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓட்டைப்படகில் தத்தளித்த 155 தமிழர் நினைவாக ஒரு சிலையும் அவர்களை கரை சேர்ந்த மீன்பிடி கப்பலின் தலைவர் கஸ் டால்டன் நினைவாக ஒரு சிலையும் வைத்துத்தான் பார்க்கட்டுமே!
அதன்பின் வருடாவருடம் வருவதற்கு தமிழ்ச்சனம் நேர்த்திக்கடன் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
– இக்கதை அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சில் (04.11.2024) வெளியாகியது.