பரமபத பாம்புகள்!

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 8,679 
 

சுற்றுலாப் போகும் குழந்கையின் மனநிலையோடு காலைப் பொழுதில் கண் விழித்தவனுக்கு, பெரும் சவாலைச் சந்திக்கப் போகும் ஒரு காலைப்பொழுது அது என்பதற்கான அறிகுறியேதும் தென்படவில்லை!

அடிமாடுகள் அழைத்துச் செல்லப்படுவதுபோல வண்டியில் திணிக்கப்பட்ட கூலித் தொழிலாளர் குழுவில் செந்திலும் இருந்தான். பள்ளி இறுதியாண்டு முடித்த கையோடு, விரட்டிக் கொண்டிருந்த வறுமைக்கு எதிராய் அன்றாடங்காய்ச்சியாய் அவன் உழைக்க வேண்டியிருந்தது கம்பி வேலைக்குச் சென்று நெம்பியெடுக்கப்பட்டதில், “தம்பி கொஞ்சம் தேறிட்டான்!’ என மேஸ்திரி சொல்லக் கேட்டிருக்கிறான்.

சாலையில் குலுங்கிக் குதித்துச் சென்ற வண்டி நின்றது. அவ்வளவாக ஆளரவமற்ற ஒரு பேருந்து நிறுத்தம். இறக்கிவிடப்பட்ட இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாருமில்லை. இறங்கிய இடம் சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ளவே, அழைத்துப் போன மேஸ்திரி சற்றுத் தடுமாறி போனார்.

“மேஸ்திரி சரியாதான் போறோமா?’ நாகராஜ் கேட்டான்.

“அந்த சூபரேசர் ஏதோ குறுக்குப்பாதைன்னு இப்படித்தான் அழைச்சுட்டு வந்தான்!’

பாதை வளைவு வெளிவுகளாகவே போனது. தண்டவாளங்களைக் கடக்கும் மலைப் பாம்பென அந்தப் பாதை ஒரு ரயிலடியை அடைந்தது.

“வந்துட்டோம்ய்யா!’ மேஸ்திரி முகத்தில் அப்போதுதான் கவலை ரேகை மறைந்தது. இதற்கு மேல் தடுமாற்றமிருக்காது என்பதை முகத்தில் காட்டினார். நடையில் வேகம் கூட்டினார். தண்டவாளத்தைக் கடக்கும்போது சற்று தூரத்தில் தெரிந்த மஞ்சள் பலகையின் கருப்பெழுத்தில் எழுதியிருந்ததைப் படித்துவிட்டு செந்தில் கேட்டான்.

“அடியக்கமங்கலம்னு போட்டிருக்கே. அந்த ஊரைத் தாண்டிட்டோமா… போகப் போறோமா?’

“இது வேறப் பாதையிலே போகுது. ஊரு தெக்காலே இருக்கு. ஊரைச் சுத்திக்கிட்டு வந்து டிராக்டர் கம்பிய ஏறக்கிட்டுப் போயிருக்கு’ என்றார் மேஸ்திரி.

வழியெங்கும் கருவேல மரங்களால் சூழப்பட்டிருந்த அப்பகுதியில் நெளிந்த அப்பாதை, ஒடுங்கிப்போய் ஒற்றையடிப் பாதையாகியது. சிற்சில அடையாளங்களைக் கண்டு நடந்த மேஸ்திரி, தூரத்தில் தெரிந்த ஒரு கீற்றுக் கொட்டகையைப் பார்த்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

“நல்லவேளையா போச்சு! எங்க நானே பாதையை விட்டுட்டோமோன்னு கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்!’ என்றார்.

அரைகுறையாக வேயப்பட்டிருந்த கொட்டகையின் அருகே நின்றிருந்தார் சூப்ரவைசர். அந்த இடத்தில் வரப்போகும் மருந்து கம்பெனிக்கான கட்டட அடித்தள வரை படத்தோடு அவர் விளக்கியதெற்கெல்லாம் “சரிங்க சார்!’ என தலையாட்டினார் மேஸ்திரி.

சூரியன் சுள்ளெனத் தொடங்கியபோது கம்பியைத் தொட்டவர்கள், வியர்வையில் குளித்து வேலையை முடித்தபோது அந்தக் கருவேலக் காட்டைக் காய்ச்சியெடுத்த கதிரவன் காணாமல் போயிருந்தான்.

கை கால் கழுவிக்கொண்டு ஓய்வாக வந்தமர்ந்தவர்களுக்குத் தென்னங்குடியார் “வறகாபி’ வழங்கியபோது சொன்னார்.

“கடைக்குப் போகணும்னா காலம்பற போனா மத்தியானந்தான் வரணும்போல இருக்கு. அம்மாந்தூரம் இருக்குய்யா!’

“ஆமாய்யா, ஒங்கப்பாருதான் காலையிலேயே அங்கே கடை தொறக்கிறாரா? ஊராய்யா இது? சுத்தக் காடு!’ அந்தோணி சொன்னான்.

“ஆமாண்ணே! காலையிலே இரந்து பாம்பைப் பார்த்தீங்களா? அங்கங்கே இழையுது!’ என்ற நாகராஜுக்குக் குறுக்குசால் ஓட்டினார் பெரியண்ணன்.

“அதெல்லாம் இருக்கட்டும்ய்யா! முக்கியமான பிரச்னையைக் கண்டுகிட்டீங்களா யாராச்சும்? நாம குடிக்கிறது இங்கே சுக்கான் தண்ணி! எனக்கு ஒண்ணுக்கே வர மாட்டேங்குதுய்யா! கடுக்குதுய்யா!’

அன்றிரவு தென்னங்குடியார் சமையலைப் பாராட்டியும் விமர்சித்தும் உண்டு முடித்து ஆளுக்கொரு கீற்றை உருவிக் கொண்டு படுக்கப் போனவர்களில் சிலர் சட்டென உறங்கிப் போக, விழித்திருந்தவர்கள் அடுத்த சில மணி நேரத்தில் அந்த இடத்தில் விபரீதம் உணர்ந்தனர். நரிகள் ஊளையிடும் சத்தம் சன்னமாகக் காதில் விழுந்தது. நாகராஜ் பயத்தில் எழுந்து உட்கார்ந்தான்.

“எலேய், சத்தமில்லாம வந்து நம்ம கொரவளயப் புடிச்சிடப் போகுதுய்யா!’ என கலவரப்படுத்தினான்.

“ஏன்…ணே…, இங்கே வருமா?’ ஆர்வமாய் எழுந்து அமர்ந்த செந்தில் கேட்டான். அவன் அதுவரை நரியைப் பார்த்தவனில்லை!

“அதுங்க தந்திரம் கத்ததுங்க. கொஞ்சம் அசந்தா போதும். நம்ம கதையையே முடிச்சுடும்!’ நாகராஜ் சொல்லும்போதே நரியின் சத்தம் வெகு சமீபமாய் கேட்டதில், அடிப்போனான் செந்தில்.

“அடங்கொப்புரானே, வந்துடுச்சு டோய்!’ என்று வேகமாய் எழுந்த நாகராஜ், வெட்டிப் போட்ட கம்பிகளில் ஒரு நீளமானதை உருவிக்கொண்டு நரியை விரட்டியடித்தான்.

“திரும்பவும் வரும்!’ என்றபடி திரும்பி வந்தவனின் தூக்கத்தை நரி தூக்கிக்கொண்டு ஓடிப்போயிருந்தது.

மீண்டும் அவர்கள் படுத்தபோது நாகராஜின் தெருவைச் சேர்ந்தவர்களான மண்ணாங்கட்டி, தென்னங்குடியார் இருவரது பெயர்களுக்குமான விளக்கம் கேட்டான் செந்தில். தென்னங்குடி என்ற கிராமத்திலிருந்து வந்த மனிதர் என்பதனால் அவரது ஊர்ப்பெயராலேயே அவர் அழைக்கப்படுவதையும், பிள்ளை இல்லாமல் வருந்திய மண்ணாங்கட்டியின் அம்மா, “கல்லோ மண்ணோவாவது என் வயத்துல குடு ஆத்தா!ன்னு வேண்டிக்கிட்டதுக்கு அப்புறமா அவன் பொறந்தானாம். அதனால் தெருசனம் “அடியா, உனக்குப் பொறந்தது மகன் இல்லேடி! மண்ணாங்கட்டி!’னு கூடி சிரிச்சுதுங்க. அதனால அவனுக்கு வேடிக்கையா அந்தப் பேரே ஒட்டிக்கிச்சு!’ என்ற நாகராஜ், அவர்கள் இருவருக்குமான உண்மையான பெயர் என்னவென்பதே தமக்கு தெரியாது என்றும் தான் அறிந்தவற்றை விளக்கினான். நரி திரும்பவும் வரக்கூடும் என்ற பயத்தில் நள்ளிரவு தாண்டியும் பேசிக்கொண்டே இருந்தவர்கள், விடிந்த போது கண்ணயர்ந்திருந்தனர்.

வறகாபியோடு வந்து எழுப்பிய தென்னங்குடி வாயடித்தார்.

“எலேய், வேலை செய்ய வந்த எடத்திலே சூரியன் வந்து சுட்டாத்தான் எழுந்திருப்பேன்னு தூங்கறது நியாயமே இல்லே! எழுந்திரிங்கடா!’

“பயலுவ, கும்பகர்ணம் பரம்பரையிலே வந்தவனுங்க போலிருக்கு!’ என்றார் பெரியண்ணன். இரவு நரியையே விரட்டுமறவுக்குக் குறட்டை விட்டவர், நடந்த விவரம் ஏதும் தெரியாதவராயிருந்தார். ஆனால், முதல் நாள் பொழுதைவிட, விடிந்தபின் தனது உபாதையைக் கூடவே உணர்ந்தார். உபாதையில் மற்றுமொரு ஆளாக இணைந்து கொண்டார் அந்தோணி. காலைக்கடன் முடித்து கருவேலக் காட்டிலிருந்து வந்தவரின் முகத்தில் அப்படியொரு வலி!

“என்னய்யா இது? இப்படிக் கடுக்குது! ஐயோ, தாங்க முடியலய்யா!’ ஆனால், அவ்விருவரின் குரலுக்கும் அப்போது அவ்வளவாக முக்கியத்துவம் இருக்கவில்லை.

வெயில் விரட்டத் தொடங்கிய வேளையில், தங்கள் வேலையில் வேகமெடுக்கத் தொடங்கினர். வியர்த்து வழிந்ததில் பாதி, உடம்பிலுள்ள நீரை வெயில் உறிஞ்சியது பாதி என அவர்கள் போராடியதில், வேறு வழியில்லாமல் சுக்கான் தண்ணீர் பானை அடிக்கடி காலியாகி நிரம்பியது.

மூன்று நாட்கள் ஓடிப் போனதில், நிலைமை மேலும் மோசமாகிப் போனது. மேஸ்திரி உட்பட மேலும் இருவர் நீர்க்கடுப்பில் சிக்கினர். இனி இங்கே தாக்குப்பிடிக்க முடியாது என்பது புரிபட்டது.

பிற்பகல் மூன்று மணிக்கு வந்து எட்டிப் பார்த்த சூப்ரவைசரிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தார் மேஸ்திரி. “இதைச் செய்யாவிட்டால் இனி கம்பெனிக்கு நிரந்தரமாக வேறு ஆட்கள்தான்!’ என காண்ட்ராக்டர் சொன்னதாக சொல்லிவிட்டு ஓடிப்போனான் சூப்ரவைசர்.

அந்தக் காண்ட்ராக்டர் தயவில்தான் அவர்களுக்கு வயிற்றுப்பாடு ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆபத்தான நிலையில் விட்டுவிட்டு, வேலை முடித்துதான் திரும்பி வர வேண்டுமென போட்டிருந்த “முதலாளித்துவ’ கட்டளை செந்திலை முறுக்கேற்றிருந்தது.
அன்றிரவு அவர்களுக்குத் தூக்கம் பிடிக்காமல் உழன்று கொண்டிருந்தார்கள், ஆளாளுக்கு அவரவர் வேதனையைச் சொல்லியபடி.

“வந்த சோலிய முடிச்சுட்டு போறதுக்குள்ளே நம்ம சோலியே முடிஞ்சிடும் போலிருக்கு!’ புலம்பினார் பெரியண்ணன்.

“அடிமை வேலைக்கா வந்திருக்கோம்?’ என பொருமினான் செந்தில்.

“அதுகூட பரவாயில்லே! அடிமாடா போயிட்டோம்டா!’ மேஸ்திரியை எதிர்த்துப் பேச முடியாமல் குனிந்தபடி முணுமுணுத்தான் மண்ணாங்கட்டி. பாடப் புத்தகம் தவிர்த்து தான் படித்த மார்க்ஸ், லெனின் பற்றியெல்லாம் செந்தில் சொன்னது செவிகளுக்குள் போனதாகவே அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. புரண்டு புரண்டு படுத்தபடியிருந்தார் மேஸ்திரி.

விடிந்தது!

தென்னங்குடி தந்த வறகாபியை உறிஞ்சிக்கொண்டே செந்திலை எழுப்பினான் நாகராஜ். விரித்துப்போட்ட தென்னங்கீற்றிலிருந்து எழுந்து அமர்ந்தான் செந்தில். அவன் படுத்திருந்த ஓலையைப் பார்த்து நீட்டிய தென்னங்குடி அலறினார்.

“பாம்புடோய்!’

சரேலென எழுந்தான் செந்தில். அது ஓலையிலேயே அசைவற்றுக் கிடந்தது. இரவு படுக்கும்போது நல்ல பாம்பொண்ணு அந்தக் கீற்றுக்கடியில் புகுந்து நசுங்கியிருந்தது.
“என்னடா உன் முதுகிலே பச்சை?’ என்று தென்னங்குடி அது பாம்பின் நஞ்சு என்பதை உறுதி செய்தார். அது காய்ந்து பச்சை சிலை பூசியதுபோல இருந்தது.

“தூக்கத்திலேயே நல்ல பாம்ப கொண்ணவன் நீயாதான்டா இருப்பே!’ என்ற பெருமையடித்தார் பெரியண்ணன்.
மேஸ்திரி ஒரு முடிவோடு வந்தார். அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் அந்தக் காட்டிலிருந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோமென அடியக்கமங்கலம் வந்து சேர்ந்து, ஊருக்குப் பயணப்பட்டனர்.
“மேஸ்திரி, காண்ட்ராக்டர் காசு கொடுப்பார்?’ என்றான் நாகராஜ்.
“செஞ்ச வேலைக்குக் கூலி கெடைக்குதோ இல்லியோ, ஆள் முழுசா அங்கேர்ந்து வந்தோமே, அதைச் சொல்லு’ என்றார் தென்னங்குடி.

பாம்புக்குத் தப்பியதைவிட முதலாளித்துவ பிடியிலிருந்து அவர்கள் தப்பியதைத் தான் நினைத்து வியந்தான் செந்தில். உழைப்பவனையே குறி வைத்து இறக்கிவிடும் பரமபத பாம்புகள் இருக்கும்வரை ஏணியை எட்டிப் பிடிக்க முடியாமல்தான் இருக்குமோ? என்று சிந்தனையோடு இருந்தான்.
அடிமாடுகள் போல வண்டியில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்ட நிலைக்கு மாற்றாக, இப்போது பேருந்தில் சக மனித ரோடு மனிதராய் பரமபத சொர்க்கமாய் பயணிப்பதே அந்தச் சூழலில் அவனுக்கு சுதந்திரமாய் தோன்றியது.

– கொற்றவன் (மார்ச் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *