கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 17, 2024
பார்வையிட்டோர்: 2,300 
 
 

இப்பவோ பொறகோ என நிறைமாத வயிற்றுடன் இருக்கும் பரட்டச்சியைப் பார்க்கப் பார்க்க காந்திமதியம்மாளுக்கு அடிநெஞ்சு குமுறிக்கொண்டு வந்தது.

“எந்த சண்டாளனுகளுக்கு இப்புடியொரு பாங்கொடுமை பண்றதுக்கு மனசு வந்துச்சோ தெரியிலயே…! நல்ல தாய்க்குப் பொறந்தவனா இருக்க மாட்டானுக; ஒரு அப்பனுக்குப் பொறந்தவனுகளா இருக்க மாட்டானுக. இல்லாட்டிப் போனா புத்திக்குச் செரியில்லாத புள்ளைய, அதுவும் வாயில்லாத சீவன இப்புடி வகுத்தத் தள்ள வெச்சிருப்பானுகளா? அவனுகளுக்கெல்லாம் நல்ல சாவே வராது. கை கால் வௌங்காமக் கெடையாக் கெடந்து, கெடைப் புண்ணு வந்து, ‘புளுத்த்த்தே’ சாவானுக. பன்னிக் காச்சல்ல போறவனுக. அப்புடி அவனுகளுக்கு அரிப்பெடுத்தா அதுக்குன்னு ஆளுகளா இல்ல? காசுக்கு வக்கீல்லீன்னா அவனுக ஆத்தா, அக்கா – தங்கச்சிக்கிட்டப் போறது!” என்று ஆங்காரமாக சாபமிட்டு ஏசியபடியே ஆப்பம் வார்த்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்துக்கொண்டிருந்தாள்.

ஆப்பக்காரம்மா கடை எனப்படும் காந்திமதியம்மாளின் சிற்றுண்டி வியாபாரத்துக்கு கடை என்று எதுவும் கிடையாது. நடைபாதையோரக் கடை விரிப்பு. ஒத்தாசைக்கு மருமகள்; தட்டுக் கழுவுவதற்கும் எடுபிடி வேலைகளுக்கும் ஒரு சிறுவன். காலையிலும் இரவிலும் சிற்றுண்டி, மத்தியானம் பொட்டலச் சாப்பாடு. வாடிக்கையாளர்கள் கையேந்தி பவன்களில் போல நின்றுகொண்டோ, குத்த வைத்து அமர்ந்தோதான் சாப்பிட வேண்டும். நகர சுத்திகரிப்பாளர்கள், சாலைப் பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், கலாசுக்காரர்கள், கைவண்டி இழுப்பவர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்கள் நிறைந்த அந்தச் சேரியில் ஆப்பக்காரம்மா கடை பிரசித்தம். அதைவிடப் பிரசித்தம் அவளின் உலைவாய். அதில் தலை கொடுத்து முகம் பாழாகத் தயாரில்லாத வாடிக்கையாளர்கள் அவளது பேச்சுக்குக் காது கொடுத்தபடி மௌனமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

பரட்டச்சியை மாதிரி இளவயதுத் தெருப் பைத்தியங்கள் எந்த ஊரிலாக இருந்தாலும் கொஞ்ச நாளிலேயே வயிற்றில் வாங்கிக்கொள்வது வழக்கம்தான் என்பதால் ஆண்களுக்கு அதில் ஆச்சரியமொன்றும் இல்லை. அது பலாத்காரமாகவும் இருக்கலாம்; ஏதாவது நல்ல உணவுகளை சாப்பிடக் கொடுத்து, காரியத்தை நிறைவேற்றிக் கொண்டதாகவும் இருக்கலாம். இவளிடம் அப்படிச் செய்தது யார் என்பதில்தான் அவர்களுக்கு ஆர்வம். அது தெரியாதபோது அவளைப் பற்றி அவர்களுக்கு என்ன?

எல்லாத் தெருப் பைத்தியங்களையும் போலத்தான் பரட்டச்சியும். எங்கிருந்து வந்தாள், எப்படிப் பைத்தியமாக ஆனாள் என்று யாருக்கும் தெரியாது. வயசு இருபது, இருபத்திரெண்டு இருக்கும். எண்ணெய் தண்ணி கண்டு பல காலம் ஆன பரட்டைத்தலை; திப்பி திப்பியாக அழுக்குப் படிந்த உடல். நெருங்கினாலே மொக்கை வீச்சம் மூக்கைத் துளைக்கும். படு

கந்தலான அழுக்கு ஆடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக உடுத்தியிருப்பாள். காலி பௌடர் டப்பா, உடைந்த கண்ணாடித் துண்டு, பல் சிதைந்த சீப்பு, தகரக் குவளை மற்றும் பழந்துணிகள் ஆகிய அவளின் உடமைகள் அடங்கிய பொக்கணம் ஒன்று எந்நேரமும் இடுப்பில் இருக்கும். இது தவிர மடி கட்டிக்கொண்டு தெருவில் கிடக்கிற வேண்டாப் பொருட்கள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை நோக்கமின்றி சேகரித்துக்கொண்டிருப்பாள். சேரித் தெருக்களிலும், அண்டையிலுள்ள புறநகர்த் தெருக்களிலும் சுற்றி, குப்பைத் தொட்டிகளில் தெரு நாய்களுடன் எச்சில் உணவைத் தின்பாள். பயணியர் நிழற்குடை, பாழடைந்த கட்டிடங்கள், சாத்திய கடைகளின் இருள் ஓரங்கள் என எங்காவது படுக்கை.

சேரிச் சிறுவர்களுக்கு அவளைக் கண்டால் கொண்டாட்டமாகிவிடும். அவள் முன்பு நின்று ஊமைகளைக் கேலி செய்யும் விதத்தில் தமது மூக்கைச் சொரிவார்கள். அவள் வெகுண்டு ஊமை ஒலிகளை எழுப்பிக் கையோங்கியபடி அவர்களை விரட்டுவாள். அது அவர்களுக்குப் பிடித்தமான விளையாட்டு. அவளது பார்வையில் படாமல் பின்னால் வந்து, கயிறில் கோர்த்த டப்பாக்களைக் கட்டிவிடுவது அவர்களின் சாகசம். அவள் நடக்கும்போது டப்பாக்கள் இழுபட்டு தகரச் சத்தம் எழுப்புகையில் ஹோவென்று கூச்சலிட்டுக் குதியாட்டம் போடுவார்கள். அழுதபடியே ஊமை ஒலிகளால் திட்டி விரட்டுவாள். சிதறித் தெறித்தோடி கொணஷ்டை காட்டி இன்னும் கடுப்பேற்றுவார்கள்.

காந்திமதியம்மாள் கண்டால், “கட்டித்தீனிகளா! எதுக்குடா அவள இமுசு பண்றீங்க? அவ உங்களய ஏதாவது ஒவுத்திரியம் பண்ணுனாளா? உங்க நொட்டுக் கையுங் கால வெச்சுட்டு கம்முணிருந்திருங்க, ஆம்ம்ம்மா…! இல்லீன்னா கையக் கால முறிச்சு அடுப்புல வெச்சு ஆப்பஞ் சுட்டுருவேன்” என்று மிரட்டுவாள். கையில் அகப்படும் பையன்களைக் காதைத் திருகவும் செய்வாள்.

இவர்களின் கடையில் ப்ளாஸ்ட்டிக் ட்ரம்மில் போடுகிற எச்சில் இலைகளை, குறுக்குத் தெரு முனையில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுவார்கள். பரட்டச்சி அங்கே வந்து தெரு நாய்களுடன் ஒன்றாக எச்சில் மீதங்களை வழித்துத் தின்பதைப் பார்க்கும்போது இவளுக்குப் பரிதாபமாக இருக்கும். அதிலும் இங்கே தெரு நாய்கள் அதிகம். நகராட்சிப் பணியாளர்களிடம் சொல்லி நாய் பிடி வண்டியில் பிடித்துப் போக வைத்தாலும் எப்படியோ நாய்கள் பெருகிவிடுகின்றன. தங்களுக்குள்ளேயே போட்டி போட்டு உட்பூசலில் கடித்துக் குதறிக்கொள்கிற அவை, பரட்டச்சி வந்துவிட்டால் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக்கொண்டு அவள் மீது ஆக்ரோஷமாகப் பாய்ந்து பிடுங்கவும் செய்யும். நாய்களிடம் கடிபட்டே அவளது சேலை, பாவாடை அடிப்பாகங்கள் நார் நாராகக் கிழிந்து தொங்கும்.

அதைப் பார்த்து இரக்கப்பட்டுத்தான் தனது பழைய ஆடைகளையும் அவளுக்குக் கொடுத்தாள். கடையில் மீந்து போகிற உணவை அவளுக்குக் கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டாள்.

எப்போதுமே மடி கட்டிக்கொண்டிருப்பதால் ஆரம்பத்தில் அவளது வயிறு வீக்கம் தெரியவில்லை. குனிய முடியாததாலோ, கூடாது என்றோ குப்பை கூளம் பொறுக்குவதைக் கைவிட்டு அவளே மடியை அவிழ்த்துவிட்டபோதுதான் தெரிந்தது. மருமகளுடன் சேர்ந்து விசாரிக்கையில் அழுகை உடைத்த குரலில் ஊமை ஒலியெழுப்பல்களாலும் சைகைகளாலும் பாவனைகளாலும் அவள் அதை விவரித்தாள்.

சேரியின் புறப்பகுதியில் காட்டுப் பள்ளிக்கூடம் எனப்படுகிற கைவிடப்பட்ட துவக்கப் பள்ளிக் கட்டிடத்தில் அவள் படுத்திருக்கும்போது சில ஆண்கள் அவளை ஆக்ரமித்தனர். மொத்தம் ஐந்து பேர். அவளது வாயைப் பொத்தி, கத்தியைக் காட்டி மிரட்டி, போராடும் அவளை அறைந்தும் அடித்தும் பணிய வைத்தார்கள். இருளில் யார் யாரென்று தெரியவில்லை. அவர்கள் குடித்திருந்தனர். மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டனர். கடைசியில் அவளுக்கு புரோட்டாப் பொட்டலம் கொடுக்கப்பட்டது. வற்புறுத்தி சாப்பிட வைத்த பிறகு மூன்று பேர் தள்ளாடியபடியே போய்விட்டார்கள். இரண்டு பேர் மறுபடியும் அவளை இணங்க வைத்தார்கள். வலிக்கிறது என்று அவள் அழுது, அரற்றி, கையெடுத்துக் கும்பிட்டும், காலைப் பிடித்தும் கூட விடவில்லை. குண்டான ஒருவன், தாங்கவியலாத பாரமாக இருந்தான். அவளுக்கு மூச்சு முட்டி செத்துவிடுவோம் போலிருந்தது. ஒல்லியான, தாடி வைத்த ஒருவன், உள்ளங்கையில் கசக்கி பீடி சிகரெட்டுக்குள் அடைத்து புகையிழுப்பார்களே,… அதை இழுத்தான். அவன் ரொம்ப நேரம் எடுத்துக் கொண்டான்.

“தீக்குச்சி பருத்தும்போது மூஞ்சி தெரிஞ்சிருக்குமல்லடீ? ஆளப் பாத்தா அடையாளம் காட்டுவயா?” மருமகள் கேட்டாள்.

அப்போது குண்டன் இயங்கிக் கொண்டிருந்த தருணம். தாடிக்காரன் திரும்பி உட்கார்ந்திருந்ததால் முகம் தெரியவில்லை.

“கொடும்பாவிக! ஒரு ஊமைக் கிறுக்கிய அஞ்சாறு பேரு சேந்து அக்குருமம் பண்ணியிருக்கறானுகளே,… அவனுகல்லாம் மனுசனுகளா? மசை நாய்க்குப் பொறந்தவனுக! அவனுகளையெல்லாம் ஆடு – மாடுகள ஒடைத் தட்டறாப்புடி ஒடைத் தட்டியுடோணும். இல்லாட்டி அப்புடியே கொத்தோட அறுத்து புளுத்த நாய்க்குப் போடோணும்” என்றாள் காந்திமதியம்மாள்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு பரட்டச்சி காட்டுப் பள்ளிக் கூடத்துக்குப் படுக்கப் போவதில்லை. தெரு விளக்கு வெளிச்சமிருக்கிற பயணியர் நிழற்குடையிலோ, ஏதேனும் கடைத் திட்டுகளிலோதான் படுத்துக்கொள்கிறாள். இருந்தாலும் அன்றைய பலாத்காரத்தின் விளைவு அவளுக்குள் தங்கி வளர்ந்துவிட்டது. இப்போது நிறை மாதம். எந்த நேரத்திலும் வலி கண்டுவிடலாம் போலிருக்கிறது.

“அவனுக ஆத்தரம் அஞ்சு நிமுசம். அதோட வெனைய அவல்ல ஒம்பது மாசம் செமந்து சீரளிஞ்சுட்டிருக்கறா. அந்தத் தெல்லவாரிக எவனுகளோ என்னுமோ. தெருச் சுத்திப் பைத்தியம்னு கூடப் பாக்காம தெனவெடுத்துப் பூந்தவனுக கண்டவளுககிட்டயும் காசக் குடுத்துட்டுப் போறவனுகளாத்தான் இருப்பானுக. எய்ட்சு, கிய்ட்சுன்னு சீக்கிருந்தா அது அவளுக்குமல்ல பாதிச்சிருக்கும்? வகுத்துலிருக்கற கொளந்தைக்குமல்ல வந்திருக்கும்?” என்று

ஆவலாதிப்பட்டுக்கொண்டிருக்கையில், “இட்லி மாவு முடிஞ்சிருச்சுங்கத்தே…” என்று வசந்தா தெரிவித்தாள்.

“ஆப்ப மாவும் முடியறக்காச்சு. ரெண்டு மூணு கரண்டிதான் வரும். தோசை, இடியாப்பமும் தீர்றக்காயிருச்சே…! இருக்கறவீகளுக்கு மட்லும் வேணுங்கறதக் குடுத்துட்டு, இன்னி வாறவீகளுக்கு இல்லீன்னு சொல்லீரு. ஆறுன பலகாரத்துல அவளுக்கஞ்சாறு எடுத்து வெச்சிரு. பாவம்,… நெறைசூலி. வெடியால புடிச்சே வரவும்மில்ல” என்றுவிட்டு, சாப்பிட்டு முடித்தவர்களிடம் கணக்குப் போட்டு பணத்தை வாங்கிக்கொண்டாள்.

கடை கட்டும் ஏற்பாடாயிற்று. எடுபிடிச் சிறுவன் ப்ளாஸ்டிக் ட்ரம்மை எடுத்துக்கொண்டு குப்பைத் தொட்டிக்குப் போகும்போதே தூரத்தில் காத்துக்கொண்டிருந்த தெரு நாய்கள் வாலாட்டியபடி பின்தொடரலாயின. சாத்தப்பட்ட பழைய இரும்புக் குடோன் ஷட்டரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்துகொண்டிருந்த பரட்டச்சியின் பார்வையும் பசியுடன் பின்தொடர்ந்தது.

“அடியே,… பரட்டச்சீ! அங்கென்னத்தடீ பாத்துட்டிருக்கற? இங்க வா!” குரல் கொடுத்ததும், இடுப்பில் ஒரு பக்கம் கைத்தாங்கலோடு, மறுபக்கம் பொக்கணத்தைத் தூக்கிக்கொண்டு வந்தாள். “ஆ… மா! உஞ் சொத்த எவனாவது திருடீட்டுப் போயறப் போறானுக! எதுக்குடீ எங்க போனாலும் அதையும் தூக்கீட்டே திரியற? செரி, செரி… வா! இந்தா,… சாப்புடு. வயித்துப் புள்ளத்தாச்சி,… இனிமே நாய்க கூட சண்டைக் கட்டி கடி தின்னுட்டு குப்பைத் தொட்டீல எச்செல திங்க வேண்டாம்…. நானே உனக்கு மிச்ச மீதி இருக்கறதப் போடறன்னு சொன்னாக் கேக்கறயா? ஒரு நேரம் இருக்கற,… ஒரு நேரம் எங்கியாவது எச்சி பொறுக்கப் போயர்ற. நல்லது நாய்க்குச் சேராதுங்கறது செரியாத்தாம் போச்சு. சொல்லி என்ன பிரயோசனம்? உனக்கே புத்திக் கோளாறு. சட்னி சாம்பார் இத்தினீ ஊத்துட்டாடீ? இந்தா…! மொள்ளச் சாப்புடு. விக்கிக்கப் போகுது. வெடியாலிருந்தே காங்குலியே உன்னைய!? மத்தியானமும் சாப்புடுலியோ என்னுமோ. முடியிலீன்னு எங்கியாவது படுத்துட்டிருந்தியா…?”

ஆமோதிப்பாகத் தலையாட்டினாள்.

“அடப் பாவமே…! ஏன்டீ …. வலி கிலி கண்டுச்சா?”

“ஏங்,… ஏங்ஏங்…” என்று அவள் சுட்டிக் காட்டிச் சொன்னதிலிருந்து, இடுப்பு வலி வந்து போயிருப்பது தெரிந்தது. பொய் வலியாக இருக்கும். நிஜ வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆஸ்பத்திரியா, அடுத்தவர் உதவியா; என்ன உண்டு அவளுக்கு? விபரம் தெரிந்தவளாக இருந்தாலும் தேவலாம். இவள்…?

அணைக்கப்பட்ட ஸ்டவ்கள், காலிப் பாத்திரங்கள், இவர்கள் அமரும் முக்காலிகள் ஆகியவற்றை ஒன்றிரண்டாகக் கொண்டு சென்று சந்துக்குள் இருக்கிற இவர்களின் வீட்டில் வைத்துவிட்டு வந்த வசந்தாளிடம் சொன்னாள்.

“ஏதோ நம்மனால முடிஞ்ச ஒவகாரத்தச் செய்யறம். அதுக்கே உங்க மகன் எவ்வளவு சத்தம் போடறாரு! இதுக்கு மேல என்னங்கத்தே பண்ண முடியும்…? நாம போயி அவளுக்குப் பிரசவம் பாக்க முடியுமா?”

அந்தக் கேள்வி ஏமாற்றமான வருத்தத்தை அளித்தாலும், அதன் நியாயங்கள் மறுப்பதற்கில்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்தோம், இதற்கு மேல் அவளின் விதி, அல்லது ஆண்டவன் விட்ட வழி என்று எண்ணியபடி பெருமூச்சுவிட்டாள். “ஏய்,… அந்தத் தகர டப்பா ஒண்ணு வெச்சிருப்பயேடீ,… தண்ணி குடிக்கறக்கு. அதைய எடு, தண்ணி ஊத்தறன். சாப்புட்டுப் போட்டு அதக் குடி. அன்னைக்காட்ட சாக்கடைத் தண்ணிய மோந்து குடிச்சுட்டிருக்காத. கண்ட கருமாந்தரமெல்லாம் வர்றது. த்தூத் திருமதிர்ச்ச! சீக்கு வேற வந்துரும்” என எச்சரித்துத் தண்ணீரை ஊற்றிவிட்டு மருமகளோடு நடந்தாள். இலை ட்ரம்மைக் கழுவி வைத்துவிட்டு எடுபிடிச் சிறுவனும் ஏதோ ஏனங்களை எடுத்தபடி பின்னால் வந்துகொண்டிருந்தான்.

பரட்டச்சியின் வயிறு பெரிதாக வீங்கியிருப்பது, இடுப்பைப் பிடித்தபடி அவள் நடக்கிற தினுசு, கையை ஊன்றி உட்காருவது, எழுந்திரிப்பது ஆகிய அறிகுறிகளில் பெண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று அவளின் அனுபவத்துக்குத் தெரிந்தது. பரட்டச்சியை மாதிரி இள வயது தெருச் சுற்றிப் பைத்தியக்காரிகள் வயிற்றில் வாங்கிக்கொண்டு திரிவதைப் பல ஊர்களிலும் பார்த்திருக்கிறாள். ஆனால், பிற்பாடு அவள்களில் ஒருத்தியிடம் குழந்தையைக் கண்டதில்லை. ஏன்? ப்ரசவத்தில் இறந்து விடுகின்றனவா? அல்லது பைத்தியப் போக்கில் அவள்கள் எங்காவது எறிந்துவிடுகிறாள்களா? அதைத் தவிர வேறு சாத்தியங்களும் இல்லை என்றே காந்திமதியம்மாளின் யோசனைக்குப் பட்டது.

அன்றிரவு அவளுக்கு சரியான தூக்கமே இல்லை. புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள். வைகறைப் பொழுதில் வசந்தா எழுப்பிய பிறகே கண் எரிச்சலோடு எழுந்தாள்.

விழித்ததும் முதல் ஞாபகமே பரட்டச்சிதான். என்ன ஆயிற்றோ…?

அந்தக் கனவு…!

திடுக்கிட்டோ உறக்கம் கலைந்தோ விழிக்கையில் நன்கு ஞாபகமிருந்து, விடிந்த பின் மங்கலாகி மறந்துவிடுமே,… அது போல அல்ல இது. சினிமாப் படக் காட்சி போலத் தெளிவாக இன்னும் கண்ணுக்குள்ளேயே இருந்தது. என்னவொரு கோரம்! பரட்டச்சியின் வயிறு ப்ரம்மாண்டமாக வளர்ந்துகொண்டே போகிறது. அது வெடித்து, பனிக்குட நீர்க் கூழ் வழிய, ஒரு பெண் குழந்தை நடந்து வருகிறது. அதற்கும் சிக்குப் பிடித்த பரட்டைத் தலை. அம்மா,… அம்மா என்று அழைத்துக்கொண்டே தாயின் தலைமாட்டுப் பக்கம் செல்கிறது. பரட்டச்சி வாய் பேசி, “என்னை ஒண்ணும் பண்ணிறாத! என்னை விட்டுரு. எங்கிட்ட வராத! வந்தாக் கொன்னு போடுவேன்…” என்று கூச்சலிட்டு விரட்டுகிறாள். சட்டென்று ஏதோ ஒரு உயரமான பாறையிலிருந்து வெறியுடன் குழந்தையை வீசியெறிகிறாள். குழந்தையின் வீறிடல் இன்னமும் காதுகளில் எதிரொலிக்கிறது.

“என்னம்மா… பேயறஞ்ச மாதிரி இருக்கற?!” படுக்கையிலேயே சம்மணமிட்டு வரக் காப்பி குடித்துக்கொண்டிருந்த தம்பான் கேட்டான்.

“பரட்டச்சிக்கு பிரசவமாயிருச்சோ என்னமோ…”

“ஏம்மா,… உனக்கென்ன பைத்தியமா? எப்பப் பாத்தாலும் பரட்டச்சீ, பரட்டச்சீன்னுட்டு! என்னுமோ நீ பெத்த மகளாட்டம்…”

“இல்லடா தம்பா! அவளுக்கு என்னுமோ ஆயிருச்சு. இல்லாட்டி அந்தக் கொளந்தைக்கு… அவ அந்தக் கொளந்தைய… கெனாவுல…”

“அடச் சை!” காலி டம்ளரை ‘ணங்’கென வைத்துவிட்டு போர்வையை உதறி எழுந்து, லுங்கியை இறுக்கிக்கொண்டே கடுப்போடு போய்விட்டான். “உம் மாமியாளுக்குப் பைத்தியந்தான்டீ. பைத்தியமேதான்! அந்தப் பைத்தியத்துக்கு சோத்தப் போட்டு சீல துணி மணி குடுத்து, இதுக்கும் மூளை கலங்கிப் போச்சு. அம்பறாம்பாளையத்துக்குக் கூட்டீட்டுப் போக வேண்டீதுதான்” வசந்தாவிடம் இரைந்தபடி வெளியேறி டாய்லெட் கதவையும் படாரென இழுத்துச் சாத்திக்கொண்டான்.

பிறகு யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல் காந்திமதியம்மாள் சிற்றுண்டி ஆயத்தங்களில் வசந்தாவுடன் ஈடுபட்டாள்.

ஏழு மணி வாக்கில் கடை விரித்துக்கொண்டிருக்கிறபோது தெருவில் ஒரே பரபரப்பு. குப்பைத் தொட்டியில் ஒரு பெண் குழந்தை கிடக்கிறதாம். குப்பை கொட்டப் போன பெண்மணி ஒருத்தி சொல்ல, தெருவினர் எல்லோரும் ஆர்வமாக நடையோட்டத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

“வசந்தா,… கடைய கெவுனிச்சுக்க… நான் இதா இப்ப வந்தர்றேன்” என்று காந்திமதியம்மாளும் விரைந்தாள்.

நாக்கால் நக்கிச் சுத்தமாக்கப்பட்ட எச்சில் இலைகள் கொஞ்சம் வெளியே சிதறிக் கிடக்க, குப்பைத் தொட்டிக்குள் குப்பை கூளங்கள், எச்சில் இலைகளுக்கு மத்தியில் பழந்துணியால் சுற்றப்பட்டு ஒரு பச்சிளம் சிசு. ரத்த ஓட்டம் சரும நிறத்தை ஊடுருவித் தெரியும் விதமான கருஞ்சிவப்பில் பெண் குழந்தை. பசியால் அழுது, வழிகிற கண்ணீரை நக்கிச் சுவைத்துக்கொண்டிருந்தது.

“இந்தக் குப்பைத் தொட்டீலதான் எச்செலையத் தின்னுட்டிருப்பா. இப்ப கொளந்தய இங்கியே கொண்டு வந்து போட்டுட்டுப் போயிட்டா.”

“பைத்தியம்னாலும் கொளந்தயக் குப்பைத் தொட்டீலதான் போடோணும்னு அவளுக்குத் தெரிஞ்சிருக்குது பாருங்க. கிறுக்குவாக்குல வேறெங்காவது கொண்டு போயி வீசியெறியாம விட்டாளே…”

“பளைய இரும்புக் குடோன்லதான் படுத்துட்டிருந்தா. ராத்திரி சத்தமே கேக்குலயே…”

“அஞ்சாறு பேரு சேந்து ரேப் பண்ணுனபோதே சத்தமில்லாமப் படுத்துட்டிருந்தாளாமா. இதொரு காரியமா? முக்குனாப்புடி வெளிய தள்ளியிருப்பா.”

“ஆப்பக்காரம்மா…! புள்ளாத்தாச்சீன்னு பரிதாபப்பட்டு நீங்க பலகாரம், பொட்டலஞ் சோறுன்னு குடுத்து இப்ப என்னாச்சு? புள்ளையப் பெத்து, நீங்க எச்செல போடற குப்பைத் தொட்டீலயே போட்டுட்டுப் போயிட்டா.”

ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசிக்கொண்டிருக்க, காந்திமதியம்மாளுக்கு அந்த வித்தியாசம் தெரிந்தது. “இது ராத்திரி பொறந்தாப்புடி இல்லியே…! ரெண்டு மூணு நாளு ஆன மாதிரி இருக்குது” என்றாள்.

அதற்குள் இடது கக்கத்தில் பொக்கணத்தையும் இடுக்கிக் கொண்டு, வலது கையால் இடுப்பைத் தாங்கியவாறே, நிறை வயிற்றுடன் மெதுவாக ஊர்ந்தபடி தளர்ச்சியாக நடந்து வந்துகொண்டிருக்கிற பரட்டச்சியும் தென்பட்டுவிட்டாள்.

“அட, இது அப்புடீன்னா அவளுதில்லியா? இங்க வேற யாரும் இந்த மாற குப்பைத் தொட்டீல போடற கோப்புல இல்லியே…! அப்புடியே இருந்தாலும் அவிகவிக ஏரியாவுல ஆராச்சும் போடுவாங்களா? வெளிய எங்காச்சுமிருந்துதான் வந்து போட்டிருக்கோணும். பொட்டப் புள்ளைங்கறதுனால போட்டுட்டுப் போனாங்களோ; இல்ல,… கள்ள வளில் பொறந்ததோ” என்று உடனே பேச்சு மாறியது.

“கள்ளப் பொறப்பாத்தான் இருக்கும். மோளஞ் சேவிச்சுட்டு கண்டவன் கூடப் போறது. கடைசீல ஒரு உசுர, மனசாட்சி இல்லாம இப்புடி குப்பைத் தொட்டீல கொண்டு வந்து போடறது. போன மாசம் கூட டௌன்ல இப்புடித்தான்,… தெப்பக்கொளத்துக் குப்பை மேட்டுல ஒரு கொளந்தையப் போட்டு,… நாயிக பன்னிகல்லாம் கடிச்சுத் தின்னுட்டிருந்துச்சுன்னு பேப்பர்ல கூடப் போட்டிருந்தானே. அது ஆம்பளக் கொளந்த. நேர் வளீல பொறந்ததா இருந்தா அதைய அப்புடிப் போடுவாங்களா?”

“பொட்டக் கொளந்தையோ, கள்ளப் பொறப்போ,… அதுவும் ஒரு மனுச உசுருதானுங்களே…! பெத்த தாயின்னு பெருசாப் பேசறம். அந்தத் தாய்க்கு எப்புடித்தான் மனசு வருதோ, இப்புடிக் கொண்டு வந்து போடறக்கு. அவளுகளும் ஒரு தாயா? மனுஷிகதானா மொதல்ல? வேண்டாத கொளந்தைன்னா அனாதை இல்லத்துலயாவது விடக் கூடாதா?”

“எங்கயாவது பொளைச்சு வளரட்டும்னு நெனைச்சிருந்தா அத செஞ்சிருப்பாங்கல்ல? செத்துத் தொலையட்டும்னுதான் குப்பைத் தொட்டீல போட்டிருக்கறாங்க” என்றார் ஒருவர் தீர்க்கமாக.

“யாராவது பாத்து எடுத்து வளத்துனா வளத்துட்டும். இல்லாட்டி நாயிக கடிச்சுத் திங்கவோ, குப்பையோட குப்பையா கார்ப்பரேஷன் லாரி அள்ளீட்டுப் போகவோ செய்யுட்டும்னு கூட நெனச்சிருக்கலாம்.” ரெண்டு அர்த்தமாகச் சொன்னார் இன்னொருவர்.

குப்பைத் தொட்டியை நோக்கி வந்துகொண்டிருந்த பரட்டச்சி அங்கே ஆட்கள் கூடியிருப்பதால் தயங்கி நின்றாள். பிறகு அவர்களின் பேச்சைக் கேட்டு, அவளும் ஒரு ஓரமாக நின்று குப்பைத் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தாள். அவளது கண்கள் வியப்பில் விரிந்தன. அப்போது அருகிலிருந்தவர், “ஏய்,… ச்சீ!

அக்கட்ட தள்ளி நில்லு. கிட்ட வந்தாலே பொண நாத்தம் நாறுது. உன்னையும் வந்து பண்ணீட்டுப் போயிருக்கறானுகளே…! போ, போ… தொலையாத் தள்ளி நில்லு” என்கவும் தூரச் சென்று நின்றுகொண்டாள்.

காந்திமதியம்மாள், “ஏனுங்க,… கருணை இல்லத்துக்கு யாராச்சும் ஒரு ப்போன் பண்ணிச் சொல்லுங்களே! அவுங்களாச்சும் வந்து எடுத்துட்டுப் போகுட்டும்” என்று அங்கிருந்தவர்களைக் கேட்டுக் கொண்டாள்.

“ஆ… மா! வேற வேலையில்ல? ஏம்மா நீங்க வேற…! பத்து மாசம் செமந்து பெத்தவளுக்கே அந்த அக்கறை இல்லாதப்ப நம்முளுக்கென்ன?” என்றுவிட்டு, ஆண்கள் வேலைக்குச் செல்ல நேரமாகிவிட்டதென்று கிளம்பினர். பெண்களும் கணவருக்கு டிஃபன் எடுத்து வைக்கணும், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பணும் என்று வீடு திரும்பினர். குழந்தைகள், சிறார்கள், இளவட்டங்கள், பெரியவர்கள் அனைவரும் விலகிய பிறகு காந்திமதியம்மாள் சற்று நின்றாள். வீறிட்டு அழுதுகொண்டிருந்த குப்பைத் தொட்டிச் சிசுவை கவலையோடு பார்த்துவிட்டு நடந்தாள். கருணை இல்லத்துக்கு போன் செய்யச் சொல்லி தம்பானிடம் கேட்கலாமா, சொன்னால் அதற்கும் கோபிப்பானோ என்று யோசித்தபடி சென்றுகொண்டிருந்தவள் பரட்டச்சியின் ஞாபகம் வந்து திரும்பிப் பார்த்தாள்.

பொக்கணம் கீழே கிடக்க, குப்பைத் தொட்டிச் சிசுவை அள்ளியெடுத்திருந்த அவள், தன் பாலற்ற முலைக் காம்புகளை அதற்கு ஊட்டியபடி, “பே… பே… பே…” என்று ஊமை ஒலிகளால் கொஞ்சிக்கொண்டுமிருந்தாள்.

– தினமணிக் கதிர், 19.07.2009.

– தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *