கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 14,836 
 
 

எங்கள் முஹலவுக்குள் புதிய பள்ளிவாசல் எழும்பிக்கொண்டிருந்தது. முஹல்லா வாசிகள் இது குறித்து ரொம்ப சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். ஆனாலும் கட்டுமானப்பணி செலவுக்கு ஒவ்வொரு குடும்பமும் இவ்வளவு கொடுத்தாகணும் என்று கறாராக பண வசூல் செய்த போது முணுமுணுப்பு எழுந்தது . ” இருக்குற பள்ளில தொழுவுரதுக்கே ஆளக்காணோம் .இதுல இன்னொரு பள்ளியாக்கும் ….”

” முக்கு திரும்புனா…. நம்ம பள்ளியிருக்கு . பத்தாததற்கு மெயின் ரோட்ல தவுஹீத் பள்ளியிருக்கு. அப்பறம் இன்னொரு பள்ளிக்கு அப்படியென்ன அவசியம் …?”

” கியாமத் நாளின் அடையாளதுல ஒண்னு நிறைய பள்ளிவாசல்கள் உருவாகும் ……..ஆனா தொழுவரதுக்கு ஆளு இருக்கமாட்டாங்க. இது நபிகள் நாயகத்தோட ஹதீசாக்கும்…..நாமலே அத நெஜமாக்கிட்டு வரோம் .”

எனக்கும் இப்படியான எண்ணமிருக்கு. இருந்தாலும் , நாம் குடியிருக்கிற பக்கமே ஒரு பள்ளியிருந்தா ஐவேளையும் நேரந் தவறாம தொழலாமே …..

பள்ளிவாசல் கட்ட மஜீத் பாய் தான் இடம் வாங்கிக்கொடுத்தார். இல்ல இல்ல இது அவரோட இடமாக்கும் என்றெல்லாம் முஹலாவுக்குள் பேச்சுருக்கு. பள்ளி கட்டவும் அவருதான் முழுக்கவும் செலவு செய்யுறார். பாத்தாகுறைக்குதான் முஹல்லா வசூல். இப்ப த்டீர்னு இந்த புதுப்பள்ளி கட்டுறதுக்கு தவ்ஹீத் பள்ளி இமாமோட எதோ கருத்து வேறுபாடுதான் காரணம்னு சொல்லிக்குறாங்க. ஆக நம்ம முஹல்லப்பள்ளியும் இன்னொரு தவ்ஹீத் பள்ளிதான் …இப்படி பல பேசுக்கள் கிளம்பி உலாவிகிட்டு இருக்கு.

ஒரு வழியாக புதுப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டு வெள்ளிகிழமை அஷர் தொழுகை நேரத்துல பள்ளிவாசல் திறப்பு விழா செய்யப்பட்டது. பக்கத்துக்கு முஹல்லாவிலிருந்தெல்லாம் கூட்டம் திரண்டு வந்தது புதுப்பள்ளியில் அஷர் தொழுவதுக்கு. மஜீத் பாய் தலைமை உரையாற்றினார். முன்னதாக வரவேற்றுப் பேசியவர், ‘நமது ஜமாஅத்தின் தலைவர் மஜீத் பாய் அவர்கள் தலைமையரையாற்றுவார்…….’ என்ற போது எனக்கு குழப்பம் ஏற்பட்டது. இவர் எப்போது இந்த புது ஜமாஅத்தின் தலைவராக்கப்பட்டார் என்பதே அந்த குழப்பம். அதைவிட வரவேற்புரையாற்றியவர் புது ஜமாஅத்தின் செகரட்டரி என்றார்கள். முஹல்லவாசிகளான எங்களுக்கெல்லாம் தெரியாமல் எப்போது எப்படி புது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் ….என்று எனக்கு ஏற்பட்ட சந்தேகமும் ,குழப்பமும் மற்றவர்களுக்கும் எழ ஒருவருக்கொருவர் காதைக் கடித்துக்கொள்வதைப் பார்தேன். மஜீத் பாய் பேச எழுந்த போது , ‘ஜமாஅத்தின் தலைவராகி முஹல்லாவை ஆட்டிப்படைக்கவே இந்த புதுப்பள்ளியைக் கட்டினாரோ இவர் …என்றும் மெல்ல ஒரு பேச்சும் எழுந்து அடங்கியது. ” ஜமாஅத் என்றால் ஐக்கியம்..ஐக்கியம் என்றால் ஒன்று பட்டு செயல் படுவது. ஆக அய்கியமில்லாமல் ஜமாஅத் இல்லை.ஜமாதில்லாமல் அய்கியமுமில்லை…..” என்று நேர்த்தியான பேச்சாளரைப் போல தோரணையுடன் பேச்சை ஆரம்பித்த மஜீத் பாய் பின்பு மெல்ல சுருதி குறைத்து , ” ஆனால், நம்முடைய இந்த ஜமாஅத் எந்த ஒரு கூட்டமைப்பிலையும் இல்லை ….” என்ற போது ,சின்ன சலசலப்பு எழுந்தது . ‘என்ன சொல்கிறார் இவர்.’ எனக்குள்ளும் குழப்பம் . ” அதாவது சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பிலோ ஐக்கிய ஜமாஅத்திலோ நம்ம ஜமாஅத் சேரவில்லை.இனியும் சேராது . இது தனித்தியங்கும் ஜமாஅத் …” என்று கூறி விட்டு கூட்டத்தை சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு தொடர்ந்தார் .” இது எப்படி சாத்தியம்…..? அய்கியமில்லாமல் ஜமாஅத் இல்லைன்னு சொல்லிவிட்டு , யாருடனும் ,எந்த ஒரு ஜமாஅத்தின் கூட்டமைப்பிலும் சேராமல் ஒரு ஜமாஅத் இயங்க முடியுமா…? முடியாது . என்றாலும் நம்ம ஜமாஅத் அப்படித்தான் இயங்கப்போகிறது. இதுக்கு எந்த காரணமும் இல்லை. இந்த ஜமாஅத் அப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது.” என்று ஆணித்தரமாக பேசி விட்டு அமர்ந்தார். எதற்காக இப்படியொரு முடிவு ..? எல்லோருக்கொள்ளும் இந்த கேள்வி எழுந்தது ..?

இவர்களாக ஒரு முடிவை எடுத்து விட்டு, இந்த ஜமாஅத் தனித்து இயங்கும்னா இதற்கு என்ன அர்த்தம். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது ..? எப்படி ஒரு ஜமாஅத் யாருடனும் ஒட்டாமல் தனித்து இயங்க முடியும்…? இப்படியாக ஆளாளுக்கு பேசிக்கொண்டார்களே தவிர, நிர்வாகத்தை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கவில்லை. இதைத்தானே மஜீத் பாய் எதிர் பார்த்தார். ஆக சாதித்து விட்டார் மனுஷன்! இருக்கிற குழப்பங்கள் போதாதுன்னு….இதென்ன புது குழப்பம்….! எல்லாம் பணம் செய்யும் வேலை. பணமிருக்கிறவன் எதையும் செய்யலாம். எவனும் எதிர்த்து கேள்வி கேட்கமாட்டான்.. இங்கு இது எழுதப்படாத சட்டம். ஆக மொத்தத்தில் இது குழப்பவாதிகளின் இன்னொரு கூடாரம்னு முதல் நாளிலேயே தெரிந்து போனது.

மறு நாள் சிறு வயதுக்காரர் ஒருவர் பள்ளிக்கு புது இமாமாக நியமிக்கப்பட்டார். இமாம் வந்த முதல் நாளே தொழுகைக்கு பிறகு கூட்டு ‘துஆ’ (பிரார்த்தனை) செய்யப்படவில்லை. அது மட்டுமல்ல தொழுகையை முடித்த கையோடு , பின் சுன்னத் தொழுகையை கூட நிறைவேற்றாமல் இமாம் உடனே எழுந்து வெளியே போய் நின்று கொண்டு செல்போனை நோண்டிக்கொண்டிருப்பார். ஆக இது எந்த ஜமாஅத் என்பது எல்லோருக்கும் புரிந்து போனது. இமாமை எதிர்த்து யார் கேள்வி கேட்பது ..? முஸ்தபா ராவுத்தர் போன்ற சில சுன்னத் ஜமாஅத் காரர்கள் புலம்பிக்கொண்டே சென்றார்கள் .

-’பயணமாக மூன்று பேர் செல்வதாக இருந்தால் கூட , அதில் ஒருவரை உங்கள் இமாமாக (தலைவர்) ஏற்றுக்கொள்ளுங்கள்…..” என்று

ஒற்றுமைக்கும், ஐய்க்கியதுக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கும் – தொடர்ந்து இதை எப்போதும் வலியுறுத்திக்கொண்டே இருக்கும் மார்க்கத்தில்தான் அதை செய்யக்கூடாது ,இதை செய்யக்கூடாதுன்னு இந்த புதுப்புது இயக்கங்களால் இப்படியான குழப்பங்களும் ,அக்கப்போர்களும் நாளும் தொடர்கின்றன……இறைவனை வணங்குவதில் கூட ,அது கூடும்… ….இது கூடாது என்று ஆயிரத்தெட்டு கருத்து வேறுபாடுகள் கொண்ட கூட்டம் கடிவாளம் இல்லாத குதிரைகளாட்டம் பெருகிக்கொண்டே இருக்கு…..

மாலை வேளைகளில் அஷர் தொழுகைக்கு பிறகு குரான் கற்றுக்கொடுக்க மதரசா வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இருந்தும் ,ஒரு பிடிப்பும் ஒட்டுதலும் இல்லாமல்தான் மொகல்லா வாசிகள் புது ஜமாத்துடன் அன்னியப்பட்டு விலகியே இருந்தார்கள். நிர்வாகிகள் மட்டும் பள்ளிவாசல் முன்பு கூடி நின்று கொண்டு வம்பளந்து கொண்டிருப்பார்கள் எப்போதும்.வயசானவங்களுக்கு இவர்களின் நடவடிக்கை பிடிக்காமல் பழையபடி சுன்னத் ஜமாஅத் பள்ளிக்கே போக ஆரம்பித்து விட்டார்கள்.

அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பிறகு ‘பயான்’ (உபதேசம்) சொல்வதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார் இமாம். பதினைந்து நிமிடங்களுக்கு பயான் நீளும் தினமும். சொல்வதையே திரும்பத் திரும்ப சொல்லி இந்த பதினைந்து நிமிடங்களையும் ஒரு வழியாக ஒப்பேத்தி விடுவார் இமாம். கதுக்குட்டித்தனமான பயானாக இருக்கும். கவனமில்லாமல் ஒருவித வெறுப்பாகத்தான் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருப்போம். ஒரு சிலர் உடனே எழுந்து தப்பித்துப்போய் விடுவார்கள்- எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் கவலைப்படாமல். இப்படியே சில நாட்கள் சென்றன…..

***

ஒரு நாள், செல்போன்களை ஆஃப் செய்யாமல் தொழுபவர்களைப் பற்றியும், மோசமான சினிமா பாடல்களை ரிங் டோனாக வைத்து எல்லோரது கவனத்தையும் சிதறடித்து , தொழுகையை பயனில்லாமல் செய்வது பற்றியும் உரையாற்றியது மட்டுமல்ல , தொழுகையை முடித்த கையோடு செல்போனை உயிர்ப்பித்தபடி பரபரப்பாக எழுந்து போகிறவர்களைப் பற்றியும் குறிப்பிட்டு ஒரு பத்து நிமிஷம் இறையச்சத்துடன் இறைவனை வணங்க முடியாதவர்களா மாறிவிட்டோமா..நாம் ….? என்று பேசியதும் மிகச்சிறப்பாக இருந்தது. ஆகா….. இமாம் தேரிவிட்டரே..!

எப்படியோ குழப்பவாதிகளால் நல்லது நடந்தால் சரி…… என்பதாக இருந்தது எல்லோரது எண்ணங்களும். இமாமும் இனி தன்னை திருத்திக் கொள்ளுவர் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

முன் சுன்னத் ,பின் சுன்னத் என்கிற உபரித் தொழுகைகள் பற்றியும் இதனால் கிடைக்கும் நன்மைகளையும் பட்டியல் இட்டு இந்த உபரியான தொழுகைகளையும் உதாசீனம் செய்யாமல் கட்டாயம் எல்லோரும் தொழ வேண்டும் என்றும் வலியுறுத்தினர் அடுத்த ஒரு பயானில். இறைவனின் நற்கூலியை அதிகம் பெற வேண்டி நாமும் இனி இந்த முன்,பின் சுன்னத் தொழுகைகளை விடாமல் தொழ வேண்டுமென தீர்மானித்துக்கொண்டேன்.

அன்றைய இரவு இஷா தொழுகையை நடத்தி முடித்த கையோடு செல்போனை உயிர்ப்பித்த படிக்கு வேகமாக எழுந்து வெளியே போய்க்கொண்டிருந்தார் இமாம். இமாம் வெளியேறிச் செல்வதை நாங்கள் ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தோம்- துஆ செய்தவாறு……

****

பயான் – உபதேசம்

Print Friendly, PDF & Email

2 thoughts on “பயான்….

  1. நல்ல அருமையான கதை இதை போன்று இஸ்லாமியர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதைகள் நிறைய வரவேண்டும்.. நன்றிகள்

  2. இஸ்லாமியரகளின் பழக்கங்கள், சொற்கள் ஆகியவற்றை அழகாகப் பயன்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *