முதல் பந்தியின் முதல் வரிசையில் நீண்ட நேரத்திற்கு முன்னரே அமர்ந்திருந்த அவனை யாரும் கண்டுகொள்ளாததை அவனும் கண்டுகொள்ளவில்லை. அந்த வாழை இலையின் வனப்பு அவன் வாய் திறந்தது.ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் இலையில் விழுவதை எந்த வரிசையுமின்றி, பாரபட்சமின்றி வயிற்றை நிரப்பி கொண்டிருந்தான். விருப்பமோ வெறுப்போ இன்றி அருகிருப்பதை ஆசையோடு ஏற்று உண்டுகொண்டிருந்தான். அருகில் அமர வைக்க பட்டவர்களும் அவனை தள்ளியே அருவருப்புடன் அமர்ந்தனர்
சொந்தக்காரன், சாதிக்காரன், ஊர்க்காரன் ஒவ்வொருத்தனும் ஏனையோரை ஏவிகொண்டிருந்தனர். “இலை போடல, சோறு போடல, தண்ணி வைக்கல, சாதம் வைக்கல, சுத்தம் பண்ணல, கறி வைக்கல, சரியா கவனிக்கல, யாருப்பா காண்ட்ராக்ட்” னு ஏகப்பட்ட கூக்குரல்கள், இறைச்சிக்காக இரைச்சல்கள் என பந்தி கலை கட்டியது. இந்த சத்தங்கள் அனைத்தும் அவனுக்கு மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக, சாப்பிட சாப்பிட காதில் ஆழம் பெற்றன. பின்னர்தான் அவனே உணர்ந்தான். பசியில் காது அடைத்திருந்ததை.
காலை உணவை வீட்டில் முடித்துவிட்டு, மதிய உணவில் பங்கு பெற்ற ஒவ்வொரு விருந்தாளியில் இருந்து அவன் வேறுபட்டிருந்தான். அதுவரை அமைதியாக கிடைப்பதை உண்டு கொண்டிருந்தவனுக்கு பசியாறிய பின் நடப்பதை கவனிக்க தொடங்கினான். அந்த பந்தியில் வெள்ளை வேட்டிகளின் அராஜகம் கறை பரப்பியது.
எவ்வித பொறுப்பையும் எடுத்துகொள்ளாமல் பல்வேறு வகையில் குறைமட்டும் கூறி கொண்டு சாப்பிட்டவர்களுக்கு பரிமாறி இரையானவர்கள் யாரென்று தேடினான் அவன், எவ்வித இரத்த சொந்தமுமின்றி, ரத்த பொரியலை பரிமாறிகொண்டிருந்தனர் அந்த மணமகனின் நண்பர்கள் மற்றும் பொதுநல விரும்பிகள் நாலைந்துபேர். ஆனால் நண்பர்களை தவிர, பந்தி ஆரம்பிக்கும்போது கூட்டமாக தெரிந்த அந்த நபர்களை நேரமாக நேரமாக காணவில்லை.
அனைத்தையும் உணர்ந்த பசியாறிய அவன் எச்சிலையை அவனே எடுத்து போட்டுவிட்டு தனது தோற்றத்தை சரிபார்த்துவிட்டு, யோசித்து, மணமகன் அறைக்கு சென்று திரும்பியவன், மணமக்களின் கேளிக்கை புகைப்பட தொனிகளை ரசித்தவாறே பந்தி கூடத்திற்கு சென்றவன், பம்பரமாய் பரிமாற தொடங்கினான், திடீர்ரென்று அனைவராலும் அறியப்பட்டவனாய் மாறினான்.
பந்தி பரபரத்தது அவன் மேற்பார்வையில், எவ்வித பாரபட்ச மின்றி பட்சனம் முதல் தட்சணம் வரை சீரானது. குறை கூறியவர்களை குறை வைத்துவிட்டு, அந்த நாலைந்து நபர்களை நன்கு உபசரித்தான். தன்னை அடையாள படுத்திகொள்ளாமல் அப்பளம் பாயசம் வரை பரிமாறி விட்டான். “யார் அவன்” என ஆரம்பித்து “யார் அவர்’” எனும் அளவுக்கு கூட்டமே முனுமுனுக்கும் போது பந்தியும் ஓய்ந்தது. அப்போதுதான் அவன் உடலும் மனமும் பசியாறியது.
மணமகனின் மாற்று வேட்டி சட்டையை காணாமல் தேடி கொண்டிருந்தபோது, மாப்பிள்ளை கோலத்தில், புன்முறுவலோடு மண்டபத்தை விட்டு வெளியேறினான் அந்த பரதேசி.
“புசிப்பதற்கான தகுதி,
பசித்திருப்பது மட்டுமே”
– தேவா