கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 29, 2013
பார்வையிட்டோர்: 16,445 
 
 

முதுகில் சாணைச் சக்கரம் சுமந்து போய்க் கொண்டிருந்தான் முருகேசன். வெயில் வாட்டி எடுத்தது. வியர்வை ஆறாகப் பெருக பாரம் பெரும் சுமையாக முதுகில் அழுத்தியது. சிறுகதை

“ஆச்சு! இன்னும் கொஞ்சம் தூரம் தான். அடுத்த ஊரு வந்துரும்.” என்று நொந்த மனசையும் வலித்த காலையும் ஏமாற்றி மேலும் நடந்து கொண்டிருந்தான் அவன். பாவம் அவனும் என்ன தான் செய்வான்? பஸ்ஸில் போகலாம் தான். ஆனால் அந்தக் காசைத்தானே காலையில் பிள்ளைகள் பசியாற பன் வாங்கக் கொடுத்து விட்டான். முன்னெல்லாம் இப்படி இருந்ததில்லை. எப்படியாவது இரண்டு வேளைச் சோற்றுக்குப் பஞ்சமில்லாமல் சக்கரம் சுற்றும்.

பத்து அருவா

“ஹூம்! இப்ப எல்லாம் எவர் சில்வராப் போச்சி! யாரு சாணை பிடிக்கா? வாங்கு உபயோகி தூக்கிப் போடுன்னு இல்ல ஆகிப் போச்சி காலம்? ” அவன் மனதில் சிறுவயதில் தந்தையோடு போகும் போது சாணைப் பிடித்த நினைவுகள் பூத்தன.

“அந்த பளய இரும்புல சாணைக்கல் பட்டு தீப்பொறி செதறுரது மத்தாப்பு பொறிப் பொறியா போறா மாதிரி இருக்கும். அதைப் பாக்கன்னே சின்னப் பிள்ளைங்க கூட்டம் கூடும். அப்பல்லாம் எவ்வளவு பெருமையா இருந்தது? அந்தக் காலம் போச்சி! இப்ப எதுவுமே அதிசயம் இல்ல! தீவாளிக்கு வெடி போடுறது கூடக் கொறஞ்சு போச்சி! எல்லாம் டிவி முன்னால தான் ….எளவெடுக்க! அந்த டிவியில என்ன தான் இருக்கோ?”

ஆழ்வார்குறிச்சி போகும் மினி பஸ் ஒன்று இவனைக் கடக்கும் போது தயங்கியது. தலையைத் தொங்கப் போட்டபடி நடந்தான். ஹாரனை காதருகில் அடித்து விட்டு அது கடந்தது.

“என்ன பொளப்புப்பா இது? சுடலையாண்டி நீ தான் பாக்குறியே? பஸ்ஸூல போகக் கூட காசு நிக்க மாட்டேங்கு. ” கழிவிரக்கத்தில் கண்களில் முட்டிய நீரைத் துடைத்துக் கொண்டான். கொஞ்ச தூரத்தில் ஒரு வேப்ப மரம் தன் குளுமையான கிளைகளைப் பரப்பி இவனை வாவா எனக் கூப்பிட்டது. அதனடியில் போய் நிற்க சற்று ஆசுவாசமானது. சுமையை இறக்கி வைத்து விட்டு அப்படியே உட்கார்ந்தான். கானல் அலை போல எண்ணங்கள் அலை மோதின.

“பாவம் சரசு! எனக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்தைக் கண்டா? அவளும் எத்தனை நாளுதான் பொறுமையா இருப்பா? ஏதோ அவ நாலு வீட்டுல வேலை பாக்குறதால பிள்ளைங்க பள்ளிக்கூடம் போறாக! இல்லைன்னா எங்கப்பாரு என்னைக் கெடுத்தா மாரி நானும் என் மகனை இந்தத் தொளிலுக்கே கொண்டு வந்து விட்டுருப்பேன். ”

புது சாணைக்கல்லில் சூரியன் ஒளி பட்டு அது தக தகவென மின்னியது. அதை வாங்கி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. பழைய சக்கரம் சரியாக சாணை பிடிக்கவில்லை அதை மாற்றி கிட்டத்தட்ட 25 வருடமிருக்கும். அதனால் தான் யாரும் தன்னிடம் சாணை பிடிக்க வரவில்லை என்று எண்ணினான் முருகேசன். அதற்கும் சரசு தான் வழி சொன்னாள். இல்லை இல்லை செய்தாள்.

“இதப்பாருய்யா! என் களுத்துல கெடக்கற தாலிய வித்துத் தாரேன். நீரு புது கல்லு வாங்கிக் கிடும். ஆனா அதுக்கப்புறமும் பஞ்சப்பாட்டு பாடப் பிடாது” என்று கண்டிஷனாக சொல்லித்தான் கொடுத்தாள். என்னவோ தன்னுடைய வாழ்க்கையே ஒரு நாளில் மாறி விடும் என்ற அதீத நம்பிக்கையோடு அவனும் பணத்தை வாங்கி புது சாணைக்கல் போட்டான். ஆனாலும் என்ன பிரயோசனம்?”

அவனைப் போலவே ஒரு கிழவி தலையில் ஒரு பானையோடு எதிர் திசையில் இருந்து ஆடி ஆடி வந்து கொண்டிருந்தாள். பளு தாங்காமல் அந்த வேப்பமரத்தடியில் வந்து அடைக்கலம் புகுந்தாள். அவள் வயோதிகக் கண்களுக்கு ஏற்கனவே ஒரு ஆத்மா அதில் இருந்தது அப்போது தான் தெரிந்தது. அவளின் முகம் பிரகாசமானது.

“தம்பி! மோர் குடிக்கியா ? ஒரு தம்ளார் மூணு ரூவான்னு விக்கேன். ஒனக்கு ரெண்டு ரூவாதான் குடிக்கியா? இஞ்சி , பச்சை மொளகா பெருங்காயம் தாளிச்ச மோரு. பானையில இருக்கு . ஜில்லுன்னு இருக்கும் . குடியேன்”

நாக்கில் நீர் ஊறியது முருகேசனுக்கு. கூடவே அவன் தரித்திர நிலை நினைவு வந்தது.

“ஆச்சி! பஸ்ஸூல போகக் காசு இல்லாம இந்த வேகாத வெய்யில்ல சுமையைச் சொமந்து நடக்கேன். என்னைப் போயி மோரு குடிங்கியே? எனக்கு வேண்டாம் தாயி உன் மோரு.” என்றபடி அனக்கி உட்கார்ந்தான்.

“ஆமா! இவ்வோ எல்லாம் மோரா குடிப்பாக? பொழுது சாய டாஸ்மாக் கடையில போயி அன்னிக்கு சம்பாதிச்சதை வேட்டு விடுவாக. நான் ஒரு மடச்சி! இவுகளைப் போயி கேட்டேனே?” என்று முணுமுணுத்துக் கொண்டு சும்மாட்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள் அந்தக் கிழவி.

“ஏ ! ஆச்சி! உனக்கு என்னைப் பாத்தா எப்படி இருக்கு? இன்னி வரைக்கும் அந்தக் கருமத்தையெல்லாம் நான் தொட்டதே இல்ல! இங்க பிள்ளைங்க வயிறார பசியாற சம்பாதிக்க முடியல்ல. இதுல குடி ஒண்ணு தான் கொறச்சல். ” என்று அலுத்துக் கொண்டான்.

“அப்பம் நீ குடிக்க மாட்டியா? என் மவராசா! நீ எனக்குக் காசு தர வேண்டாம்யா. நான் ஒனக்கு மூணு தம்ளார் மோர் தாரேன் என் களையெடுக்கற அருவாளை சாணை புடிச்சித் தரியா?” என்றாள்.

உற்சாகமாக ஒப்புக் கொண்டு வேலையில் இறங்கினான் முருகேசன். சொன்னபடி மோரைக் கொடுத்து விட்டு ஆச்சி இடத்தைக் காலி செய்தாள். கொதித்துக் கொண்டிருந்த வயிறு குளிர்ந்தது. மனம் அந்த ஆச்சியை வாழ்த்த அவனும் எழுந்தான்.

இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் தான். அடுத்த ஊரை அடைந்து விடலாம். வயிறு நிறைந்து இருந்ததாலோ என்னவோ மனம் அவன் தொழிலைப் பற்றிப் பெருமையாக நினைத்தது.

“இது ஒண்ணும் சாதாரணத் தொளில் இல்ல! ரொம்பக் கவனமா இருக்கணும். காலு , கையி மனசு எல்லாம் ஒண்ணா வேலை செய்யணும். காலு சுத்தற ஸ்பீடு கைக்கும் , கையி போற போக்கு மனசுக்கும் தெரிஞ்சா தான் ஒழுங்கா சாணை பிடிக்க முடியும். இல்லேன்னா அம்புட்டுத்தான். கை வெரல் துண்டாப் போயிரும். ஏன் என் சேக்காளி மாடசாமிக்கு கையில ரெண்டு வெரலே போச்சி! அவனாவது பரவாயில்ல பொளச்சிக்கிட்டான் ஆனா எசக்கி? பாவம் ரத்தப் பெருக்குல செத்தே போயிட்டான். . என்ன செஞ்சி என்ன? எல்லாம் வாய்க்கும் வவுத்துக்குமே சரியா இருக்கு”

மேலும் ஊரை நெருங்கினான்

“எப்படியாவது இன்னிக்கு ஒரு எரநூறு ரூவா சம்பாரிச்சிடணும். அதுல நூறு ரூவா அவளுக்குத் தாலி வாங்க சேத்து வைக்கணும். தினச் சீட்டுப் பிடிக்கிற சம்முவம் அண்ணாச்சி கிட்ட சீட்டு சேரலாம். ஆனா இப்பம்லாம் சீட்டும் பாத்துச் சேர வேண்டியிருக்கு. சரசு இப்படித்தான் என்னவோ சீட்டு சேந்து ஏமாந்துட்டா. எம்புட்டு ஏமாந்தடின்னா சொல்ல மாட்டம்ங்கா!”

அவன் சிந்தனையைக் கலைத்தபடி போனது ஒரு சுமோ. மெதுவாகச் சென்றதால் உள்ளிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது அவனால். இரு சிறு குழந்தைகள் பின் சீட்டில் அவர்களது அப்பா வண்டியை ஓட்ட அம்மா பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.

“எம்மவா இந்தப் பிள்ளய விட அளகு! ஆனா போட நல்ல துணியில்ல. இந்த பிளசர் எல்லாம் என்ன விலை இருக்கும்? ” என்று நினைத்தவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அடுத்த வேளைக் கஞ்சிக்கு வளியில்ல! ஆனா நெனப்பு மட்டும் எக்கச்சக்கம். ” வாய் விட்டே சிரித்து விட்டான்.

ஊர் நெருங்க நெருங்க இவனின் எதிர்பார்ப்பு அதிகமானது.

இரண்டு பேர் ஏதோ பேசியபடி வந்து கொண்டிருந்தனர்.

“அண்ணாச்சி! இன்னும் ஊரு எம்புட்டு தொலவு இருக்கும்? ” என்று கேட்டான்.

“சாணை பிடிக்கப் போறியோ? நல்ல வேளை பாத்து வந்த போ! இங்க ஊரே ரெண்டு பட்டுக் கெடக்கு! உனக்கு என்ன சோலி இருக்கப் போவுது? என்றான் சிவப்புத் துண்டை தலைப்பாகையாகக் கட்டியவன்.

“என்ன அண்ணாச்சி சொல்லுதீய? ஊரே ஏன் ரெண்டு பட்டுக் கெடக்கு?”

“இந்தப்பயக்களுக்கு சாதி வெறி முத்திப் போச்சி ! அவனும் என்ன செய்வான்? தின்ன சோறு செமிக்கணும் இல்ல? அதான் இப்படி அருவாளைத் தூக்கிட்டு அலையுதாக. நீ ஊருக்குள்ள போகாத. எப்பம் போலீசு வருமுன்னு தெரியாது. கொஞ்சம் தாண்டினதும் இன்னொரு ஊர் வருது அங்க போ!” என்று சொல்லி விட்டு நடந்து விட்டார்கள்.

திகைத்து நின்று விட்டான் முருகேசன்.

“கொடும! கொடுமன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடும தங்கு தங்குன்னு ஆடுச்சாம்! அது மாதிரி இருக்கு என் கத! என்ன தான் ஆகும்? பாத்திரலாம்!” என்று நடயை எட்டிப் போட்டான்.

ஊர் வெறிச்சென்று கிடந்தது. தெருக்களில் ஆள் அரவமில்லை. சிறு சிறு பெட்டிக் கடைகள் கூட மூடப் பட்டிருந்தன. மனதுள் எழுந்த நடுக்கத்தை மறைத்துக் கொண்டு குரல் கொடுத்தான்.

“எம்மா! சாணை பிடிக்கறது! அருவாமன !கத்தி ! அருவா! சாணைப் பிடிக்கறது”

மேலும் நடந்து ஒரு தெருவை அடைந்தான். அங்கு ஒரு பெரிய வீட்டின் முன் கும்பலாக உட்கார்ந்திருந்தவர்களைப் பார்க்க அவனுக்கு வயிற்றில் கட்டி கட்டியாக பயம் தங்கியது. அவர்களைக் கடக்கலாமா? இல்லை திரும்பி விடலாமா? என்று யோசிக்கும் போதே ஒருவன் பார்த்து விட்டான்.

“ஐயா! சாணை பிடிக்கறவன் வந்திருக்கான்யா”

உள்ளேயிருந்து என்ன பதில் வந்ததென்று தெரியவில்லை . இவனை கிட்டே வரும்படி சைகை செய்தார்கள். அருகில் போனான்.

“யோவ் சாணை! பத்து அருவா சாணை பிடிக்கணும். என்ன சொல்ற?”

உள்ளம் துள்ளியது. பத்து அருவாவா? ஒரு அருவாளுக்கு 30 ரூவான்னு வெச்சாலும் 300 ரூவா ஆச்சே? ஆகா! வீட்டுல பிள்ளைங்களுக்கு ஒரு வாரம் வெஞ்சனத்தோட சாப்பாடு குடுக்க முடியுமே? சுடலையாண்டி நன்றியப்பா உனக்கு” என்று சக்கரத்தைத் தொட்டுக் கும்பிட்டவன் “அண்ணாச்சி ஒரு அருவாளுக்கு 30 ரூவா ஆகும்ங்க” என்றான்.

உள்ளே சென்று சற்று நேரத்தில் திரும்பி வந்தான் இவனைக் கூப்பிட்டவன்.

“ஒரு அருவாளுக்கு அம்பது ரூவா வாங்கிக்க. ஆனா தொளில் சுத்தமா இருக்கணும். சும்மா வெச்சாலே தல துண்டாப் போயி விளணும். என்ன சொல்ற?”

பக்கென்றது முருகேசனுக்கு. ஒன்றும் பேசத் தோன்றாமல் வேலையில் முனைந்தான்.

அவர்கள் பேச ஆரம்பித்தனர். அவர்கள் பேசப் பேச மூச்சு முட்டியது அவனுக்கு.

“அடப் பாதகத்தி மகனுங்களா? இன்னொருத்தனை வெட்டாவா என்னைய அருவாளைத் தீட்டச் சொன்னீக? அடி ஆத்தி ! இவனுகளுக்கு இருக்கற வெறியில எத்தனை பொணம் விளுகும்னு தெரியலையே? எத்தனை தாய்க்கு மகன் இல்லாம ஆகப் போகுதோ? எத்தனை பொம்பளைங்க பொட்டு அளியப் போகுதோ? விடக் கூடாது. இதை விடக் கூடாது! எப்படியாவது தடுக்கணும்” யோசித்தான். அவன் கை அவனையறியாமல் தீட்டியபடி இருந்தது.

“ஆங்க்! இப்படித்தான் செய்யணும். சாணைக் கல்லை உடைச்சிடுவோம். அப்புறமா அதை ஒண்ணு சேக்கவே முடியாது. ஆனா அது இவுகளுக்குத் தெரியாது. அதை ஒட்ட வெக்கிறா மாதிரி நேரம் கடத்துவோம். ரோட்ல பாத்த அண்ணாச்சிங்க சொன்னபடி போலீசு எப்ப வேணா வரலாம். அது வரைக்கி ஒப்பேத்துவோம். போலீசு வந்துட்டாகன்னா ஒண்ணும் பயமில்ல. ”

பசி மிகுந்த அவன் குழந்தைகளின் முகம் கண்முன் வந்து போனது. தாலியில்லாமல் மஞ்சளை முடிந்து கொண்ட மனைவி சரசு வந்து போனாள்.

“என்னை மன்னிச்சிடுங்களா! பல உசுருங்களைக் காப்பாத்த எனக்கு இதை விட்டா வேற வளி தெரியல்ல! சுடலையாண்டி என்னைக் காப்பாத்துப்பா!”

கடவுளை வணங்கியபடி கும்பலாக நின்றிருந்தவர்கள் கவனிக்காத நேரத்தில் புத்தம் புதிய சாணைக்கல்லை ஒரே வெட்டு வெட்டினான் முருகேசன் என்ற அந்த மனிதன். அது அவன் மனதைப் போலவே தூண்டாகி ஓடியது.

நெடுஞ்சாலையில் தூரத்தில் சைரன் ஊதியபடி போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்தது.

– ஜூலை 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *