கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 5,817 
 
 

எதிர் வீட்டு எதிரி, எமன் வடிவில் தன் கல்லூரி வகுப்பறைக்கு வாத்தியாராக இப்படி எதிரில் நிற்பாரென்று வருண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

‘நிச்சயம் இந்த ஆள் எதிரி, எமன்தான்.!! சந்தேகமே இல்லை. அதிலும் முக்கியப்பாடத்திற்கு ஆசிரியர். தியரில் நன்றாக எழுதி தப்பித்தாலும் செய்முறை வகுப்பில் கண்டிப்பாக இவர் தன்னைப் பெயிலாக்குவதற்கு கை நீளும், ஆக்கியேத் தீருவார்.!’ நினைக்கும் போதே இவனுக்கு நெஞ்சு நடுங்கியது.

கொஞ்;ச நஞ்சமா சண்டை.?! படிப்பறிவில்லாத அம்மா, இவர் மனைவியின் தலைமயிரை எகிறிப் பிடித்து உருண்டு புரண்டு சண்டை. அம்மா கல்யாணி ரொம்ப அடாவடி. தாங்கள் கூலி வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலையில் எதிர் வீட்டில் கணவன், மனைவி, மகன்கள் மருமகள்கள் எல்லாரும் அரசாங்க வேலையில் இருந்து மாதத்தில் லட்சக் கணக்கில் வருமானம் பார்க்கிறார்கள் என்கிற பொச்சரிப்பு, பொறாமையால் எதிர்வீட்டோடு ஏட்டிக்குப் போட்டி. உப்புப் பெறாத காரியம் காலை மாலை வாசல் பெருக்கலில் குப்பையை என்கிட்ட தள்ளாதே உன் கிட்ட தள்ளாதே என்பதில் துவக்கம்.

அம்மாவைத் தடுக்க முடியாத அப்பா ஜால்ரா. அதிகம் சத்தம் போடும் ”அம்மா! சும்மா இரு.! ” என்று பிள்ளைகள் அதட்டினால்…..

”இது பெரியவங்க விவகாரம் உனக்கு ஒன்னும் தெரியாது. தலையிடாதீங்க!” என்று அண்ணன், தம்பிகளுக்குத் தடாலடி அடித்து….எகிறும் அடங்காப்பிடாரித்தனம்.!

எதிர் வீட்டு மக்கள் பத்து வார்த்தைகளுக்கு ஓரிரு வார்த்தைகள் பதில் கொடுத்துவிட்டு தங்கள் வேலையைப் பார்த்தாலும் அம்மா சும்மா இருக்காமல் தொண தொணவென சத்தம் போட்டு வலிய சண்டைக்கு இழுப்பாள்.!

அம்மாவிற்கு வாய் அதிகம். தன் மனைவியை அடக்கிச் செல்லும் இவரை வாடா போடா வென்று மரியாதைக் குறைவாய் ஏகவசனத்தில் பேசி இருக்கிறாள்.! எல்லாவற்றிற்கும் சேர்த்து இவர் தன் எதிர்காலத்தைப் பாழடித்துவிடுவார்.! என்று மனதில் ஒட….வருண் தலையைக் குனிந்து கொண்டு அம்பலவாணன் நடத்தும் பாடத்தை ஏனோ தானோ வென்று குறிப்பெடுத்தான்.

அவர், இவன் கிலியை இன்னும் அதிகப்படுத்துவதுபோல்…..வகுப்பு முடிந்ததும்…

”வருண் ! அஞ்சு நிமிசத்துல என்னை வந்து ஓய்வறையில் பார்!” சொல்லிச் சென்றார்.

இவனுக்கு நிஜமாலுமே ரொம்ப கலக்கியது. வகுப்பறையை விட்டு எழுந்து இவன் நரியடி புலியடியாய் ஆசிரியர்கள் ஓய்வறைக்குள் நுழைந்தான்.

அங்கு அவரைத் தவிர வேறு யாருமில்லை. எல்லா இருக்கைகளும் காலியாக இருந்தது.

”வா உட்கார்.! ” அம்பலவாணன் இயல்பாய் எதிர் நாற்காலியைக் காட்டினார்.

”இ…இருக்கட்டும் சார்.”

”எதுக்காகக் கூப்பிட்டேன் தெரியுமா ? ”

”தெ…தெரியாது…”

”சொல்றேன். மொதல்ல நீ என்னைப் பார்த்துப் பயப்படக்கூடாது. வீட்டு விசயம் வேற. இங்கே கல்லூரி விசயம் வேற. இங்கே நீ மாணவன் நான் ஆசிரியன். அதனால் நீ வீட்டை மறந்து உனக்கு உண்டான பாட சந்தோககங்கள் எல்லாத்தையும் என்கிட்ட கேட்கனும். ” நிறுத்தினார்.

”சார்…அம்மா…” இழுத்தான்.

”அவுங்க எங்ககிட்ட வீண் சண்டைக்கு வர்ற விசயம் உன்;னைவிட எங்க எல்லாருக்கும் நல்லாத் தெரியும். தெரிஞ்சும் பத்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை கேட்க வேண்டிய நிலை. இல்லேன்னா இன்னும் எகிறும். சமூகத்துல கண்முன் நிறைய நல்லது கெட்டது இருக்கு வருண். எல்லாம் சமாளிச்சுதான் வாழனும். வாழ்வோம். அதனால் நீ என்னை எதிரியாய் நினைக்காம படிப்பு சம்பந்தமான எல்லாவிசயங்களையும் என்கிட்ட தாராமாய்க் கேட்டு படிச்சு முன்னேறு. அதைச் சொல்லத்தான் அழைத்தேன். போ.” விடைகொடுத்தார்.

வெளியே வந்த வருணுக்கு மலைபோல் இருந்தது பனி போல் கரைந்ததாயப் பட அதே சமயம் ‘ என்ன இருந்தாலும் படித்தவர்கள் பண்புள்ளவர்கள்தான் ! ‘ நினைவு அனிச்சையாய் அவனையும் அறியாமல் வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *