பட்ட மரமும் பகற் குருடனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 12,693 
 

வேரோடு சரிந்து விழுந்து கிடக்கும், இருள் வியாபகமான யாழ்ப்பாண மண்ணின் முகமறியாத இன்னுமொரு புது உலகம் போல அது இருந்தது. கல்யாணக் காட்சி நாடகம் என்ற பெயரில் களை கட்டி அரங்கேறும் அது ,அந்த வீட்டின் மேல் போக்கான பொய்யில் உயிர் பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் பற்றிய, ஒரு வரட்டுச் சங்கதியையே பிரதிபலிப்பது போல, அந்த அறிவு பூர்வமான சுயவிழிப்பில் பாஸ்கரன் வெகுவாக மனம் நொந்து போயிருந்தான். அவன் இப்படியான உயிர் விடுபட்டுப் போன காட்சி நிழலைக் காண்பது இது தான் முதல் தடவையல்ல..

இப்படி வாழ்க்கை அரங்கத்தில் அரங்கேறும் எத்தனை போலியான நாடகங்களை அவன் மனம் சலித்து எதிர் கொள்ள நேர்ந்திருக்கிறது உறவு என்ற மிகவும் நெருக்கமான முள் இழுவையினுள் அகப்பட்டு அவன் இதற்கெல்லாம் முகம் கொடுத்தேயாக வேண்டிய கஷ்ட நிலைமையில் அவன் தான் என் செய்வான்

அதுவும் இவ்விழாவின் காரணகர்த்தாவான முரளியோ அவனுக்கு மிகவும் பிரியமான உயிர் நண்பன் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்த இனிய நட்பு அவர்களுடையது. இருவரும் நட்புறவில் ஒன்றாகிப் போயிருந்தாலும் , மனதில் செதுக்கப்பட்ட எண்ண வார்ப்புகள் வேறாய் இருவரும் வெவ்வேறு துருவங்களில் நிற்பது போலப் படும்.. அந்தத் துருவப் பாதையில் அறிவு தீர்க்கமான ஒரு மேலான ஆன்மீகவாதி போன்றே ஒளிப் பார்வை கொண்டு துலங்கும் பாஸ்கரன் சலன வாழ்க்கையெனும் குறுகிய வட்டத்தை விட்டு விலகி நிற்கின்ற கண்ணியமான ஒரு மகாபுருஷன். சிறந்த இலட்சியவாதி . நேர்மையாக சத்தியம் தவறாத உள்ளப் பாங்கோடு வாழ்க்கையைத் தரிசிக்கத் தெரிந்தவன்.

முரளி அவனுக்கு மறு துருவம் போன்றே, சலன வாழ்க்கை மயமான நிழல் உலகிலேயே அவனது நித்திய சஞ்சார இருப்புகளெல்லாம் உயிர் மங்கிக் கிடப்பதாகப் படும். இந்தப் படுதலின் சுவாசத்தை உள்வாங்கியவாறே பாஸ்கரன் அங்கு வரும் போது கல்யாணப் பந்தல் மிகவும் கோலாகலமாக் களை கட்டியிருந்தது அவனுக்குத் தெரியும்.. மணமகன் இல்லாத அந்தக் கல்யாணவீடு, வெறும் காட்சி நிழல் தான்.. வெளிநாடு என்று ஒன்று வந்த பின், இப்படி இன்னும் எத்தனையோ காட்சி நிழல்கள்.

உண்மையில் இது ஒரு கல்யாண வீடேயல்ல. அப்படியென்றால் எதற்கு இந்த அபத்தமான காட்சி நிழல்? எல்லாம் முரளியின் ஒரேயொரு அருமைத் தங்கையைத் திருப்திப்படுத்தத் தான்.. அவளை மட்டுமல்ல, அவளின் வருங்கால மாமன் மாமிக்கும் இது ஒரு கண் துடைப்புச் சடங்கு.

வாசலில் வரும் விருந்தினர்களைப் பூரண கும்ப மரியாதையோடு வரவேற்று உபசரிக்க ஒளி மயமான அலங்கார தேவதைகளாய் இரு இளம் பெண் குமரிகள். அவர்களை நிமிர்ந்து பார்க்க அவனுக்கு மனம் கூசியது எல்லாம் வெளிநாட்டுப் பணம் செய்கிற வேலை. ஒரு நடிகை மாதிரி அவர்களின் ஒப்பனை அலங்கார வேடம், அவனுக்குச் சிலுவைப் பாரமாய் நெஞ்சில் கனத்தது.. சுவாலை விட்டு எரிகின்ற பாவப்பட்ட தாய் மண் ஒரு புறம். அதுவும் தமிழ் தாய். அவள் இப்படித் தீப்பற்றியெரியும் போது எங்களுக்கு எதற்கு இந்தக் களியாட்ட விழாவும் வேடங்களும்.? அவனுக்கு அவர்கள் முகத்தில் விழிப்பதே பாவமெண்று பட்டது. அவர்கள் நீட்டிய சந்தனம் தொடவும் மனம் வராமல் கரை ஒதுங்கிய போது முரளி தூரத்தில் அவனைக் கண்டு மகிழ்ச்சி நிலை கொள்லாமல் தலை தெறிக்க ஓடி வந்தான்.

“வா பாஸ்கரா” அவசரப்படாமல் சாவகாசமாக இரு. மதியம் பதினொரு மணிக்கு நாங்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வெளிக்கிடப் போறம்.. அங்கை தான் விருந்தெல்லாம் ஆறுதலாய் நீ சாப்பிட்டு விட்டுப் போகலாம் தானே”

இதைக் கிரகித்து உள்வாங்கியவாறே, ஒன்றும் பேசத் தோன்றாமல் பாஸ்கரன் மெளனமாக இருந்தான்… அவன் எதிரில் முரளி சவூதி போய் வந்த பணக்காரக் களை சொட்டக் கம்பீரமாக ஒளி கொண்டு நின்றிருந்தான்… நிஜத்தில் கண் விழித்து வாழ்க்கை பற்றிய உயிரோட்டமான சங்கைதிகளையே பெரிசுபடுத்தி வாழ்கின்ற பாஸ்கரனைப் பொறுத்தவரை, முரளியின் அப்பட்டமான உயிர் முகமாகத் திரும்ப மறுக்கிற வேடம் புனைந்த பணக்காரக் களையும், மிதமிஞ்சி வீசும் செண்ட் வாசனையும். , பொய்யின் கறையில் திரிந்து போன வெறும் வரட்டுச் சங்கதிகளாகவே மனதில் உறைத்தன.. அதை வெளிக்காட்டாமல் போலியாகச் சிரித்தபடியே, ஆச்சரியம் மேலிட அவன் கேட்டான்.

“என்ன முரளி அங்கை வேறு போக வேணுமே? மாப்பிள்ளை வீடு அச்சுவேலியிலை என்றல்லோ சொன்னனி. ..அவ்வளவு தூரம் போக வேணுமே?”

“அது கனகாலத்துக்கு முந்தி.. இப்ப அவையளும் ஏழாலையிலை தான் இடம் பெயர்ந்து இருக்கினம்.. . மாப்பிள்ளை லண்டனுக்குப் போய்க் கொஞ்சக் காலம் தான்.. இன்னும் விசா கிடைக்காததால், லதா ஏஜென்ஸி வழியாகத் தான் அங்கை போய்க் கல்யாணம் நடக்கப் போகுது. .அதை எங்களாலை பார்க்க முடியாமல் போனாலும் இதையாவது கண் குளிரப் பார்க்க வேண்டாமோ?” சொல்லு பாஸ்கரா”

“இதிலை நான் சொல்ல என்ன இருக்கு உன்ரை இஷ்டம்“ என்றான் பாஸ்கரன் மறு பேச்சில்லாமல். எனினும் அவனுக்கு இதைப் பற்றி உள்ளூர நிறையவே ஆழமான மனவருத்தம் இருந்தது. .அது குறித்துத் தான் ஏதாவது சொல்லப் போனால் விபரீதமாகி விடும் என்று பட்டது. முரளி தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ளவும் கூடும்.. அதை விட நட்பு முக்கியம்… நடப்பது நடக்கட்டும் என்று மெளனமாக இருந்தான்… இதில் இன்னொரு வேடிக்கை.. அவனது மனைவி சரளா குழந்தைகள் சகிதம் அவனுக்கு முன்பாகவே ஆரவாரமாகப் புறப்பட்டு வந்திருந்தாள்… அவளாலேயே அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை . அவன் மனநிலை முரளிக்கு எப்படிப் பிடிபடும்?

சரளா வெகு அலங்காரமாக வந்திருந்தாள்.. வீடியோவுக்கு வேறு காட்சி கொடுக்க வேண்டுமே.. அந்த வீடியோப் படப்பிடிப்பு நாடகம் தொடங்கி நீண்ட நேரமாகிறது . லதா சாட்சாத் ஒரு மணமகள் போலவே,, அறையை விட்டு வெளிப்பட்டு வரும் போது தொடங்கிய நாடகம் இன்னும் முடியவில்லை. மணமேடையில் ஐயர் இல்லாத குறையே தெரியாமல் அப்படியொரு சடங்கு.. .லதாவைச் சுற்றி இன்னும் பல தேவதைகள்.. மானுடம் தோற்றுப் போன மாதிரிக் காட்சி நிழலாய்க் கண்ணைக் கட்டி இழுத்தது ஒரு தேவலோகம்.. மணமகனில்லாத குறையே தெரியாமல் என்னவொரு கூத்து இதெல்லாம் பார்க்கச் சகிக்காமல் பாஸ்கரன் நிர்ச்சிந்தையாகக் கண் மூடி அமர்ந்திருக்கும் போது சரளாவின் குரல் கேட்டது.

“எழும்புங்கோ வீடியோவுக்கு நிற்க வரட்டாம்”

“நான் வரேலை நீ போய்த் தனிய நிக்கிறது தானே”

“இது வடிவாயிருக்குமே?”

“எது வடிவென்று சொன்னால் உனக்குப் புரியப் போறதில்லை எனக்குத் தெரியும் தர்க்கத்தாலை எதுவும் ஆகப் போறதில்லை உங்கடை உலகம் வேறு நீயும் முரளியும் ஒன்று தான் எனக்கென்ன வந்தது. இனி நடக்கிறதை யோசிப்பம் நீ போ நான் வாறன்”

அதன் பிறகு நடந்ததெல்லாம் ஒரு கனவு மாயமாகப் பட்டது. .கியூ வரிசையில் வீடியோ நாடகத்திற்காக நீண்ட நேரம் கால் கடுக்கக் காத்திருக்க நேர்ந்ததை அவன் மிகவும் சலிப்போடு நினைவு கூர்ந்தான்… தாய் மண்ணோடு சேர்ந்த வாழ்வும் மனிதர்களும், யதார்த்த உலகின் சத்தியத் தன்மை இழந்து இப்படித் துருவ நிலையில் கறைப்பட்டுப் போனதற்கு, எது காரணமென்று அவனுள் ஒரே குழப்பமாக இருந்தது. ,அது தீராத நிலையிலேயே உயிர் பிடுங்கிற பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. வருகிற அவசரத்தில் காலையிலும் ஒன்றும் சாப்பிடாமலே வந்து விட்டான்.. இன்றைக்கு லீவு போட்டுக் கொண்டு வேலைக்கும் அவன் போகவில்லை.. பாங்க்கிலே அவனுக்கு ஒரு கெளரவமான வேலை. மனேஜருக்கு அடுத்த நிலை உத்தியோகம் பார்க்கிற அவனுக்கு வேலை ஒரு கர்மயோகம் மாதிரி.. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே லீவு போடுவான். . யுத்தம் காரணமாக பாங்க்கும் சரியாக இயங்குவதில்லை அதுவும் ஒரு பெரிய மனக்குறை அவனுக்கு எனினும் பிறந்த மண்னில் வாழ்வதையே பெருமையென்று நம்புகின்ற உயரிய மனப் பாங்கு அவனுடையது.
மீண்டும் முரளியின் அழைப்புக் குரல் கேட்டு அவனுக்கு விழிப்புத் தட்டிற்று.

“எழும்பு பாஸ்கரா கெதியிலை வெளிக்கிடப் போறம். லதாவுக்குப் பின்னாலை நீ ஊர்வலம் வர வேணும்”

அவன் கேட்டான் “கனதூரமே போக வேணும்?’

“இல்லை கூப்பிடு தூரத்திலைதான் அவையளின்ரை வீடு இருக்கு?

“அது தான் எங்கையென்று கேக்கிறன்”

விழிசிட்டி தெரியாதே உனக்கு?அங்கைதான் நாங்கள் ஊர்வலம் போறம் கெதியிலை வாசலுக்கு வா”

லதாவை முன் நிறுத்தி நீண்ட தூரத்துக்கு அவர்கள் ஊர்வலம் போகிறபோது , அதில் மனம் விட்டுக் கலந்து கொள்ள முடியாமல் போன பின்னடைவுடன் பாஸ்கரனுக்கு நடை இடறிற்று.. சகஜமாக அதில் கலந்து கொள்ள அவனால் முடியவில்லை. செப்பனிடப்படாத அந்தக் குச்சொழுங்கையில் அவனுக்கு முன் செல்கிற மனிதர்களைப் பொறுத்தவரை விருந்துண்ணுகிற அவசர நடை அவர்களுக்கு.. . அவர்களுக்கு நடுவே மணமகளாய் அலங்கார வேடம் தாங்கி வானில் இறக்கை கட்டிப் பறக்கிற பிரமையில் லதா உற்சாக கதியில் போய்க் கொண்டிருப்பது போலப்பட்டது. அவளுக்கென்ன லண்டனுக்குப் போய் விட்டால், சொர்க்கமே அவள் காலடியில் தான்… அந்த நினைப்புத் தந்த பெருமிதக் களை மாறாமல் அவள் நடை துள்ளிப் போக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாகச் சங்கக் கடை மூலைத் திருப்பத்தில், மனதைச் சிலுவை அறைந்து கொல்லும் மிகவும் சோகமயமான வரட்சி பற்றியெரியும் உயிர் திரிந்து போன ஒரு நிழல் காட்சியை, ,அவர்கள் சந்திக்க நேர்ந்தது.. அது நிழல் என்று பட்டாலும் உச்சகதியில் இயங்காத போரின் விளைவுகளைச் சந்தித்து ஸ்தம்பிதம் அடைந்து நிற்கும் நடைமுறை வாழ்வனுபவங்களைப் பொறுத்தவரை அதுவே நிஜமென்று பட்டது. அந்த நிஜத்தின் உருத் தோன்றுதல்களான அவர்கள் வேறு யாருமில்லை. நித்திய தெருக் கதாநாயகர்களாகிவிட்ட விறகுக்கார இளைஞர்கள் தாம்… சண்டை தொடங்கு முன் அவர்கள் நிலைமை வேறு. அவர்களில் அனேகமானோர் வீடு கட்டும் மேசன்மாராய்ப் பணிபுரிந்தவர்கள். .வேறு சிலர் தச்சு வேலை செய்தவர்கள். சீமெந்து வருவது அடியோடு நின்று போனதால், இவர்கள் வேறு வழியின்றியே இப்படிக் காடுமேடெல்லாம் அலைந்து விறகு வெட்டிக் கொண்டு வந்து தெருத் தெருவாய் கூவி விற்று விட்டுப் போகிறார்கள். . அவர்களின் சைக்கிளின் பின்கரியரில் மலை போலக் குவிந்து கிடக்கும் அந்த விறகுக் கட்டுகள் இருநூறு ரூபாய்க்கு மேல் போகாது. அதைக் கூடப் பேரம் பேசி வாங்க முன்நிற்பவர்கள் குறித்துப் பாஸ்கரனுக்குப் பெரும் மனக் கவலை தான்.. அப்படிப்பட்டவர்கள் கணக்குப் பாராமல் தண்ணீர் போலப் பணத்தை வாரியிறைப்பதெல்லாம் பட்டுக்கும் பொன்னுக்கும் தான்.. வயிறு காய்கிற இந்த ஏழைகள் விடயத்தில் அவர்களுக்கு ஏன் இந்த முரண்பாடான புத்தி மயக்கம் என்று அவனுக்குப் பிடிபட மறுத்தது.

லதாவுக்காக மங்களகரமாக நடைபெறுகிற இந்த ஊர்வலத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சகுனப் பிழையாக, கொடூர பசியில் வயிறு காய்ந்து முகம் வாடிக் களையிழந்து நிற்கிற, அந்த விறகுக்காரன்களை அமங்கலமாக எதிர்கொள்ள நேர்ந்த பெரும் கோபம் மனதில் அனல் மூண்டு பற்றியெரியவே,, முரளி தன்னை மறந்து தலை தெறிக்க அவர்களை நோக்கி ஓடிப் போவது ஒரு குரூரக் காட்சி வெறுமையாய் பாஸ்கரனை வந்து தாக்கிற்று.. அதைப் பூரண அறிவுப் பிரக்ஞையோடு எதிர் கொள்ள முடியாமல் நிலை குலைந்து ஸ்தம்பித்துப் போன அவன், , முரளியைச் சாந்தப்படுத்தி தடுத்து நிறுத்துவதற்காக அவனருகே ஓடி வந்தான்.

“நில் முரளி நான் சொல்லுறதைக் கேள். அவர்கள் வந்தால் உனக்கென்ன.. பாதை எல்லோருக்கும் சொந்தம். அவர்கள் வந்த வழி போகட்டும்.. நீ ஏன் தடுக்கப் போறாய்?”

“வாயை மூடு பாஸ்கரா!. நீ இதிலை தலையிடாதை.. இது மங்களகரமான ஒரு ஊர்வலமல்லே. . லதா நல்லாய் இருக்க வேணும்… இப்படிச் சகுனப் பிழை நேர்ந்தால் அவள் வாழ்ந்த மாதிரித்தான். அந்த விறகுக்காரன்களைப் பார்த்து அவன் மேற்கொண்டு ஆவேசமாகக் குரலில் அனல் தெறிக்கச் சொன்னான்.

“நாங்கள் ஒரு கல்யாண ஊர்வலம் போறம் .. இப்படி விறகுக்கட்டோடை எங்களுக்கு முன்னாலை வாறது நல்ல சகுனமாய்ப் படேலை.. தயவு செய்து பின்னாலை திரும்பிப் போங்கோ”

அவனின் மனிதநேயமில்லாத கட்டளைக்குப் பணிந்து வந்த வழியே அவர்கள் இடத்தைக் காலி செய்து கொண்டு திரும்பிப் போனபின், உற்சாகமாகக் களைகட்டி நகரத் தொடங்கும் தரம் கெட்ட அப் பொய்யான மனித வெள்ளத்தின் நடுவே அங்கு ஓர் உயிர் விழிப்பு நிலை கொண்ட தனிமனிதனாய்ப் பாவம் பாஸ்கரன் தெருவின் நடு மையத்தில் நிலைகுலைந்து தன்னை மறந்து வெகு நேரமாய் நின்று கொண்டிருந்தான் அவன் அப்படி விறைத்துப் போய் நிற்பதைப் பார்த்து விட்டு, முரளி அவசரமாகப் பின்னோக்கி ஓடி வந்தான்.

“என்ன பாஸ்கரா களைச்சுப் போனியே ? பசிக்களை போல இருக்கு. இனியென்ன இதோ வீடு வந்தாச்சு. சாப்பிட எல்லாம் பறந்திடும்”

“பசி எனக்கல்ல. பசித்தவர்களைக் கண்டு பசியையே அடியோடு மறந்து போனவன் நான். எனக்கா கதை சொல்கிறாய்.? என்னவொரு மிருக புத்தி உனக்கு இப்ப நீ திருப்பி அனுப்பி விட்டிருக்கிறியே ..அந்த விறகுக்காரன்களின் எங்கும் வியாபித்திருக்கிற பசி நெருப்புக்கு முன்னால், எல்லாம் பற்றியெரிகிறதாய் நான் மனம் வருந்தி அழுது கொண்டிருக்கிறன். ஆனால் நீயோ என்ன காரியம் செய்து விட்டாய். இது உனக்குப் பெரிய பாவமாகப்படவில்லையா?

“இந்தப் பாவ புண்ணியக் கதையெல்லாம் இஞ்சை எதுக்கு? என்னட்டைக் காசு இருக்கு அனுபவிக்கிறன். உந்தப் பரதேசிகளுக்காக நான் ஏன் இதையெல்லாம் விட வேணும்? உனக்கு விசர் . நீ வாறியோ இல்லையோ நாங்கள் போறம்”

“ஓம் முரளி! எனக்கு விசர் தான். கண்முன்னாலை உலகமல்ல, எங்கடை மண்ணே பற்றியெரியுது.. இதைக் கண்டும் காணாமல், கண்ணை மூடிக் கொண்டு இப்ப நீ அனுபவிக்கிறியே,, அது மாதிரி வாழ்க்கையைக் கொண்டாடுகிறவன் தான் புத்தி வெளிச்சமுள்ள அதி புத்திசாலி.. வாழ்க்கயை மேல் போக்காய் ரசிக்கத் தெரிந்த மாமனிதன்.. உன்னைப் போல ஆட்களைத் தான் உலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது.

நீ சொன்ன மாதிரி நானொரு விசரன் தான். வாழத் தெரியாத முட்டாள்தான். நான் சொல்லுறதை நீயென்ன., ஆர் தான் கேட்கப் போகினம்.. போ! நன்றாகப் போ.. போய் வாழ்க்கையைக் கொண்டாடு. எனக்கென்ன வந்தது.? என்ரை வழி சுத்தமாய் இருந்தால் அதுவே எனக்குப் பெரிய கொடை மாதிரி”
சத்தியாவேசம் வந்த மாதிரி மூச்சிரைக்க அவன் தொண்டைத் தண்ணீர் வற்றிப் பேசி முடித்து விட்டுக் கண் கலங்கி நிமிர்ந்து பார்த்த போது , முரளியைக் காணவில்லை.

அவனும் அவன் வழி புத்தி பேதலித்துப் போகின்ற, அற்ப மனித வெள்ளமும் அவ்விடத்தை விட்டுக் கழன்று போய் வெகு நேரமாகி விட்டிருந்தது. மனிதர்களே இல்லாமல் போன காடு வெறித்த அந்த மண்ணும்,, அதன் தீராத கண்னீர் நதியும் அவன் கண்களுக்கு மட்டும் தான்..

அதன் பிறகு அங்கு அவன் நிற்கவில்லை சொல்லிக் கொள்ளாமலே இப்படியொரு தருணத்தில் வீடு நோக்கிச் செல்லும் பயணம் அவனுடையது மட்டும் தான். உண்மை நிலை தவறாத உயிர் வெளிச்சமான வெற்றியின் பொருட்டு ,இதை , மேளம் தட்டிக் கொண்டாட எந்தவொரு தனி மனிதனுமே முன் வராமல் போனாலும் அவனுக்கு அதைப் பற்றிக் கவலையில்லை . அவன் வழி அவனுக்கு.. அது போதும் என்றிருந்தது.

– மல்லிகை (ஜனவரி 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *