பட்ட காலில் படாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 3,095 
 

இன்று நான் மிக சோகமாக இருந்தேன். இது புதியதல்ல. இன்று மட்டுமா? என்றுமே தான். நான் சோகமே உருவானவன். கன்னத்தில் கை வத்து விட்டத்தை பார்ப்பது எனக்கு ஆகி வந்த கலை.

எனக்கு ஏன் இந்த சோதனை மேல் சோதனை? அடுக்கடுக்காக பிரச்னைகள்?. ஒன்றிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்தால், இன்னொன்று வாசலில் காத்துக் கொண்டிருக்கிறது. விடமாட்டேன் உன்னை என்கிறது.

எனக்கு போதாத காலம். கிரகம் சரியில்லை. மனைவிக்கு தீராத உடல் நல பிரச்னைகள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு. சொந்த உறவுகளுடன் மனஸ்தாபம். பேச்சு வார்த்தை இல்லை. எனக்கோ உடல், மனம் ஊளையிடுகிறது. நோய் நொடி என்னை பாடாய் படுத்துகிறது என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. மனம் நொந்து கொண்டு இருந்தேன். என்னால் முடிந்தது அது மட்டும்தான்.

இறைவா என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்? நான் செய்த பாவம் என்ன ? இறைவனிடம் தினமும் மன்றாடி கொண்டு தான் இருக்கிறேன். அவன் தான் ஒன்றும் செய்ய வில்லை. என் மேல் கருணை காட்ட வில்லை. ஆயிரம் கை அவனுக்கு. ஆனால் ஒரு கையும் எனக்கு உதவி செய்ய வரவில்லை . இராயிரம் கண் அவனுக்கு. ஆனால் ஒரு கண்ணும் என்னை கருணையுடன் பார்க்க வில்லை. என் துரதிர்ஷ்டம்.

“ஏகாமசித்திம் பரிஹரதோ த்வீதியாபத்யதே” – இது ஒரு நியாயம்.

ஒரு தோல்வி இன்னும் பல தோல்விகளைத் தொடர்ச்சியாக கொண்டு வருவதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது. அது எனக்கு கச்சிதமாக பொருந்துகிறதோ?.

பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்பது பழமொழி.

ஒரு தோல்வியை சரி செய்யப் போய் அடுத்த விஷயத்தை கவனிக்காமல் விட, அதுவும் பிரச்சினையாகி தோல்வியைத் தருகிறது.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும் வேதனையான அனுபவம் தான் இது. அதைச் சுட்டிக் காட்டுகிறது இந்த நியாயம் . எனக்கென்றே ஏற்பட்ட வசனமோ இது ! விரக்தியாக சிரித்து கொண்டேன் .

அப்போது ஒரு உபாசகரின் உரை ஒன்று எப். எம்மில் . அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான்.

அருகிலுள்ள தீவில் அவன் கரையேறுகிறான். “இறைவா…இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் இல்லா இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை பார்க்க வேண்டாமா?” என்று பிரார்த்திக்கிறான்.

ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று நாள்தோறும் எதிர்பார்த்த எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். எதுவும் உதவி கிடைத்த பாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன.

தன்னை காத்துக்கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.

இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன.. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக் கொண்டான்.

ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில், அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது.. பட்ட காலிலே படும் என்பது போல; எது நடக்ககூடாதோ அது நடந்து விட்டது.

இவன் தங்குவதுகென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன.

அதை பார்த்த இவன் அலறித் துடித்தான். எல்லாம் போய்விட்டது. இவனிடமிருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது.

“இறைவா! என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக்கொண்டாயே! இது தான் உன் நீதியோ?” என்று கதறி அழுகிறான்.

மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது. “அப்பாடா! நல்ல வேளை! ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான். கப்பல்காரர்கள் இவனை, படகில் வந்து அழைத்து சென்றார்கள்.

தான் இங்கே தீவில் மாட்டிக் கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, “தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம்…யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல்கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம்” என்கிறார்கள் அவர்கள்.

அப்போது குடிசை எரிந்த காரணம் இவனுக்கு புரிந்தது.இறைவனுக்கு நன்றி சொன்னான்.அந்த வழியில் கப்பல்கள் வருவதே, மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகியிருக்கும் என்று அவனுக்கு புரிந்தது.

அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான். வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக எடைபோட்டு விடுகிறோம். நம்மை காக்கவே அவர் ஒவ்வொரு கணமும்காத்திருக்கிறார்.அவர் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்திலிருந்து காக்கவே என்று நாம் புரிந்துகொண்டால், எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.

சோதனை என்றால்…இறைவனின் அருட்பார்வை உங்கள் மீது விழுந்துவிட்டது விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புங்கள் (வேதாத்ரி மகரிஷி)

இதை கேட்டதும் மனம் சாந்தி அடைந்தது. தைரியம் வந்தது. எந்த பிரச்சனையும் எதிர் கொள்ளும் துணிச்சல் வந்தது. இனி சோர்ந்து போக மாட்டேன். கூடவே இறைவனை சரணாகதி என பற்றினேன். அவன் இருக்கையில் எனக்கென்ன குறை ? நான் எதையும் சந்திக்க தயார்.

எந்த துன்பம் வந்தாலும், நம்பிக்கை இழந்து விடாமல், செய்ய வேண்டியதை கவனித்துச் செய்தால், ஏற்கனவே கெட்ட குடி மேலும் ஏன் கெடப்போகிறது?

பிரச்னை இல்லாத வாழ்க்கை உண்டாஎன்ன? பார்ப்போமா ஒரு கை. கன்னத்தில் ஊன்றிய கையை எடுத்து விட்டேன் எழுந்து கொண்டேன், பிரச்னைகளை சந்திக்க, போராட. இறைவன் இருக்கிறான் என்னுடன். எனக்கென்ன பயம்?.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *