மஞ்சள் துணிப்பையுடன் கர்ணம் அலுவலகத்தில் நுழைந்த சந்திரசேகரன் காதர் வேட்டி, காதர் சட்டையிலிருந்தார்.
“வாங்க ஐயா !”- வரவேற்றார் கர்ணம் ஏகாம்பரம்.
“உட்காருங்க…”எதிர் இருக்கையைக் காட்டினார்.
சந்திரசேகரன் தான் கொண்டு வந்த மஞ்சள் பையை மேசை மீது வைத்தார்.
“என்ன விஷயம்…?”
“என் பட்டாவுல சிக்கலிருக்கு…”
“என்ன சிக்கல்…? ”
“என் பக்கத்துல உள்ள புறம்போக்கு நில எண்ணும் என் பட்டாவுல சேர்ந்திருக்கு..”
“அப்படியா…?”கர்ணத்திற்கு அதிர்ச்சி !
“ஆமாம் சார். அது ஒரு காலத்துல அரசாங்கக் குளம். நாளடைவில் தூர்ந்து போய் நிலமாகிடுச்சி. அதுக்குப் பக்கத்துல என் நிலம் இருக்கிறனால இதுவும் எப்படியோ தற்போது என் பட்டாவுல சேர்ந்து போச்சு.” விலாவாரியாகச் சொல்லி அதன் நகல் – செராக்ஸ் காப்பியை எடுத்துக் கொடுத்தார்.
பார்த்த ஏகாம்பரம் அரண்டார்.
உண்மையில் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த நிலஅளவையில் கோளாறு. ஊரில் நிலஅளவை நடக்கும்போது இவர் எல்லைக்குட்பட்ட இடமென்பதால் இவரும் உடனிருக்கத்தான் செய்தார். இடையில் கொஞ்சம் அவசர வேலை. சென்றுவிட்டார். நிலஅளவையர் கொஞ்சம் கவனம் பிசகி… இவர் நிலத்துடன் சேர்த்து அளந்து…
அரசாங்கத்துச் சொத்தை தவறுதலாக தனியாருக்குச் சேர்த்தது சட்டப்படி குற்றம். மேலிடத்திற்குத் தெரிந்தால்…சட்டப்படி நிலஅளவையர், இவர்மீதும் நடவடிக்கை எடுத்து வேலை போய்விடும் அபாயம்.
அளவையர் அரிகிஷ்ணன் இவரின் சொந்தத் தம்பி. இருவருக்கும் வேலை காலி ! என்ன செய்ய…?
இருவர் வேலையையும் காப்பாற்றிக்கொள்ள .. அந்த நிலம் இவருக்கே சொந்தம் என்று சொல்லி அனுப்பிவிட்டால்..? – ஏகாம்பரத்திற்குப் புத்தி வேலை செய்தது.
ஏகாம்பரம் சந்திரசேகரனைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து…
”இது தவறு இல்லீங்க. அரசாங்கம் உங்களுக்குக் கொடுத்தது..”சொன்னார்.
சந்திரசேகரன் அவரைப் புரியாமல் பார்த்தார்.
“நீங்க நாட்டுக்காக உழைச்ச சுதந்திர போராட்ட வீரர்… தியாகி. நானென்ன கூலிக்கா மாரடிச்சேன்..? என் உள்ளுணர்வுல… அடிமை வேணாம். சுதந்திரம் வேணும்னு ஒரு வெறி. கட்சிகளோடு சேர்ந்து மக்களுக்காகப் பாடுபட்டேன். அதுக்கு எதற்கு கூலி. தியாகி பட்டம், பணம்..? தேவை இல்லேன்னு மறுத்ததால அரசாங்கமே உங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்த நிலம்… சன்மானம்.!!”நம்பும்படியாகச் சொன்னார்.
கர்ணம் சொன்னதை பொறுமையாகக் கேட்ட சந்திரசேகரன்…
“சன்மானம் என்கிறது எந்த உருவத்துல வந்தாலும் அதுல எனக்கு ஏற்பு இல்லீங்க. அதனால தயவு செய்து வேணாம் !”சொன்னார்.
மனிதன் பிடிவாதம் . தன் முயற்சியில் தோல்வி ! – குப்பென்று இவருக்குள் கோபம் கொப்பளித்தது.
ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு…
“சரி. இப்போ இதுக்கு என்ன செய்யனும்…?”பொறுமையாகக் கேட்டார்.
“என் நிலம் எனக்குப் போதும். இனாம் வேணாம். அரசாங்க நிலம் அரசாங்கத்துக்கேப் போகனும்..”சொன்னார்.
ஆள் விடமாட்டார். நேராமையானவர். ஏன்…. அரசாங்க சொத்தெல்லாம் அடைத்து வைத்துக் , இது என் நிலம் என்று ஆக்கிரமிப்பு செய்யும் இந்தக் காலத்தில் இவர் பிழைக்கத் தெரியாதவர். நெடுஞ்சாலைத்துறை சாலையோரம் இருக்கும் இந்த நிலத்தை இன்றைக்கு விற்றாலும்…கொழுத்த காசு லட்சக் கணக்கில் தேறும். இது புரியாமல் மனுசன் வேண்டாம்என்கிறாரே..! -இவருக்குள் வெறுப்பு மண்டியது.
இந்த பட்டாவை சரி செய்வதென்பது சுலபமான காரியம் இல்லை.
தாசில்தார்வரை கையெழுத்திட்டு முடித்தது. இதை முதலில் அவருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் மனது வைத்தால்…”சரி. பிரித்து சரி செய்து கொடு!” சொல்லலாம். அது இல்லாமல் சரியாகச் செய்வதென்றால்… அவர் கர்ணத்தின் மீதும், நிலஅளவையர் மீதும் துறை நடவடிக்கை எடுத்து….தலை கிறுகிறுத்தது ஏகாம்பரத்திற்கு.
இது சுமுகமாக முடிக்க வழி….?
மேலதிகாரியான தாசில்தார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்பதை தவிர வழி இல்லை ! – புரிந்தது.
“சரி சார். நீங்க வீட்டுக்குப் போங்க. இன்னும் பத்து நாட்களுக்குள் உங்க நிலத்துக்கான பட்டா சரியான சரியான சர்வே எண்ணுடன் உங்க கைக்குக் கிடைக்கும் ஏற்பாடு பண்றேன்”சொன்னார்.
சந்திரசேகரன் ரொம்ப விபரமானவர்.
“என்னுடைய ஒப்புதல் இல்லாம நீங்க எப்படி சரி செய்ய முடியும்..? அதனால…
‘ஐயா ! இது என் நிலமில்லை. அரசாங்க நிலம். தவறுதலா என் பட்டாவில் சேர்ந்துள்ளது. இதை நீக்கித் திருத்தித் தரும்படித் தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ! ‘ – ன்னு தாசில்தாருக்கு விண்ணப்பம் எழுதி அதை முறையா உங்க மூலம் அனுப்ப வந்திருக்கேன். இந்தாங்க அந்த விண்ணப்பம் !” என்று தன் மஞ்சள் பையிலிருந்து அதை எடுத்து நீட்டினார்.
வைச்சாண்டா வேலைக்கு உளை !! – என்று இடி இறங்க … வாங்கிப் பார்த்த ஏகாம்பரம்….
‘அந்த விண்ணப்பத்துடன் பட்டாவின் நகல். – செராக்ஸ் காப்பி இணைப்பு ! ‘ – தப்பிக்க முடியாது !! வெலவெலத்தார்.
அவரின் வெலவெலப்பைக் கவனிக்காத சந்திரசேகரன்….
“இதை முறையா நீங்க அவருக்கு அனுப்பி நடவடிக்கை எடுங்க. சரியான பட்டா பத்து நாடுகளுக்குள் என் கைக்கு வரலைன்னா…இது ரெண்டின் நகல் காப்பி ஒன்னு எடுத்து கையில வைச்சிருக்கேன். இன்ன தேதியில… இப்படி கொடுத்திருக்கேன். இன்னும் பதில் இல்லன்னு அடுத்து எழுதறேன்”சொல்லி எடுத்துக் காட்டினார்.
வேலைக்கு வேட்டு!! தப்பிக்கவே முடியாது ! உறைந்த ஏகாம்பரம்…
“சரி ஐயா !”
தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு சொல்லி அவரை அனுப்பினார்.
அலுவலகத்தில் ஆளைப் பிடித்தால் சரி படாது ! என்று தோன்ற…இரவு 8.00. மணிக்கு வீட்டில் தாசில்தார் தனசேகரன் முன் நிலஅளவையர் தம்பியுடன் நின்றார்.
சந்திரசேகரன் கொடுத்த விண்ணப்பத்தை அவரிடம் கொடுத்து..எல்லாவற்றையும் சொல்லி…
“எங்களைக் காப்பாத்தணும்…”சொன்னார்.
ஒரு சில வினாடிகள் அந்த தாட்களை உற்றுப் பார்த்த தனசேகரன்….
“உங்க ரெண்டு பேர் தவறுக்குத் தண்டனையா…. அந்த நிலத்தை என் பட்டாவுல சேர்த்து, விண்ணப்பத்தாரருக்கு சரியான பட்டா கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க..” என்று சொன்னார்!!