(1949 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ராமு, இன்றைக்குச் சினிமாவுக்குப் போய் வருவோமா? நல்ல படம் வந்திருக்கிறதாம். எங்கு பார்த்தாலும் அந்தப் படத்தைப் பற்றிய பேச்சாகத் தானிருக்கிறது” என்று என்னை வந்து அழைத்தான் நண்பன் பிச்சுமணி.
பகல் முழுதும் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்த எனக்கும் எங்கேயாவது வெளியே போனால் நல்லது என்று தோன்றிற்று, ஆகவே அவனுடன் சினிமா பார்ப்பதற்குப் புறப்பட்டேன். தியேட்டர் வாசலில் கூடியிருந்த கும்பலைக் கணக்கிட்டு முடியாது. அவ்வளவு கூட்டம். கடவுளை ஆதியந்தம் அற்றவர் என்று சொல்லிக் கேள்வி, அது உண்மையோ என்னவோ, எனக்குத் தெரியாது. ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த ‘கியூ’ வரிசைக்கு ஆதி எது, அந்தம் எது என்று எனக்குச் சரியாக விளங்கவேயில்லை. இந்தக் கலி காலத்தில் கண் கண்ட தெய்வம் – ஆதியந்தம் அற்ற தெய்வம் – இந்தக் ‘கியூ’ வரிசைதானே என்று எனக்குத் தோன்றிற்று. நாங்களும் அந்தக் ‘கியூ’வில் கால் கடுக்க நின்று டிக்கெட் வாங்கிக்கொண்டு சினிமா ஹாலுக்குள் நுழைந்தோம்.
எல்லாப் படத்தையும் போலவேதான் அந்தப் படமும் ஆரம்பமாகியது. எல்லா சினிமாக் கதைகளையும் போலவேதான் அந்தக் கதையும் ‘சப்’பென்றிருந்தது. ஆடம்பர விளம்பரத்துக் கேற்ற அழகு அந்தப் படத்துக்கில்லை. படம் சில அடிகள் ஓடுவதற் குள்ளேயே எனக்குப் படம் பார்த்தது போதும் போதும் என்றாகிவிட்டது. ஆகவே, நண்பன் பிச்சுமணியைக் கூப்பிட்டு, “நீ படம் பார்ப்பதாயிருந்தால் பார்த்து விட்டு வா. நான் வீட்டுக்குப் போகிறேன்” என்று சொல்லி விட்டு அவன் பதிலை எதிர்பாராமலே வெளியேறினேன்.
தியேட்டர் காம்பவுண்டைத் தாண்டும் பொழுது கையைத் தட்டி ‘ராமு, ராமு’ என்று யாரோ கூட்பிடவே திரும்பிப் பார்த்தேன். பழைய பள்ளித் தோழன் பஞ்சாமி வெற்றிலைப் பாக்குக் கடையில் உட்கார்ந்திருந்தான். அவனைப் பார்த்துக் கிட்டத்தட்ட நான்கு வருஷங்கள் ஆகிவிட்டன. அவன் என்னுடன் திருச்சி ஜோஸப் காலேஜில் இண்டர் மீடியட் படித்துக் கொண்டிருந்தான். அதற்கப்புறம் அவனைப் பற்றிய சமாசாரம் ஒன்றும் எனக்குத் தெரியாது.
“என்ன அப்பா, இங்கே உட்கார்த்திருக்கிறாய்? இந்த ஊரில் தானா இருக்கிறாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று அவனருகில் சென்று கேள்விகளுக்கு மேல் கேள்விகளை அடுக்கினேன்.
“வா, அப்பா! நான் கூப்பிடக் கூப்பிடக் காதில் வாங்கிக் கொள்ளாமலே போகிறாயே! உட்காரு; என்ன சேதி? நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” என்று அவன் என்னைத் திருப்பிக் கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கலானான். ஆனால் நல்ல வேளையாக அவன் அந்தக் கேள்விகளுக் கெல்லாம் பதில்சொல்லும் சிரமத்தை எனக்கு வைக்கவில்லை.
“பெஞ்சில் உட்காரு, அப்பா. வெற்றிலை போட்டுக் கொள்ளுகிறாயா? வெற்றிலை அப்புறம் போட்டுக் கொள்ளலாம். முதலில் இந்தப் பழல்களைச் சாப்பிடு” என்று சொல்லி இரண்டு மலை வாழைப்பழத்தைச் சீப்பிலிருந்து பறித்து என் முன்னே வைத்தான்.
“என்ன, இங்கே உட்கார்ந்திருக்கிறாய்? இது உன் கடையா, என்ன?” என்று நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“இல்லையப்பா! என் கடையில்லை. அடுத்த வீட்டுக்காரர்…கிரஷ் விம்டோ ஏதாவது சாப்பிடேன்” என்று சொல்லியவாறே ஒரு விம்டோ பாட்டிலை எடுத்தான் பஞ்சாமி.
“வேண்டாம் அப்பா!” என்றேன்.
“காச-கீச கொடுக்க வேண்டுமே என்று யோசிக்கிறாயா, என்ன? கவலைப்படாதே, நான் கொடுத்தக் கொள்கிறேன்” என்று சொல்லியவாறே அவன் பாட்டிலைத் திறந்து விட்டான்.
“கடைக்குச் சரியான ஆன்தான் அப்பா நீ! நன்றாக வியாபாரய செய்வாய் போலிருக்கிறதே!” என்று சொல்லிக்கொண்டே விம்டோவை வாங்கிக் குடிக்கலானேன்.
“கடையிலே போய் உட்கார்ந்து வியாபாரம் செய்ய வரவில்லை என்றால் உருப்பட்டாற் போலத்தான்! உனக்கு விக்கிரமாதித்ய மகா ராஜன் கதை தெரியுமோ இல்லையோ? அவனுடைய சிம்மாசனம் இருந்த இடத்திலே ஒரு ஆட்டிமடையன் போய் நின்றானாம். அவனுக்கு அழகழகாக நியாயம் வழங்கத் தெரிந்து விட்டதாம். அதுபோலதான் கடையிலே வர்து உட்காந்து விட்டால் வியாபாரம் செய்யத் தானாக வந்து விடும். இதென்ன பிரமாதமான செப்பிடு வித்தையா?” என்றான் பஞ்சாமி.
“சரி, அதிருக்கட்டும். இப்பொழுது நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இண்டர் மீடியட்டுக் கப்புறம் மேலே படித்தாயா, அல்லது விட்டு விட்டாயா?” என்று கேட்டேன் நான்.
“வீட்டு விடுவதா? பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் வாங்கி வைத்திருக்கிறேன், அப்பா! சம்மா இல்லை. இங்கே பிரஸிடென்ஸி காலேஜில்தான் சேர்ந்து படித்தேன்.”
“இப்பொழுது ஏதாவது வேலையில் கீலையில் இருக்கிறாயா, என்ன?”
“நான் அப்ளிகேஷன் போடாத இடமே இல்லை. என்னால் தபாலாபீஸுக்கு இது வரை கிட்டத்தட்ட ஐந்நூறு ரூபாய் வரை வரும்படி இருக்கும். ஆனால் வேலைதான் கிடைத்தபாடில்லை.”
“என்ன அப்பா, இது? நீ சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே! இரண்டு மாதத்துக்கு முன்னால் ‘இன்கம்டாக்ஸ் ஆபீ’ஸில் ஆள் எடுத்தார்களே! அதற்காவது ‘மனு’ப் பண்ணிப் பார்க்கக் கூடாதோ?”
“அந்தக் கதையை ஏன் கேட்கிறாய்? இந்தா, இந்த வெற்றிலையைப் போட்டுக்கொள். இது அசல் கும்பகோணம் வெற்றிலை! துளிர் வெற்றிலை! என்ன இருந்தாலும் கும்பகோணம் வெற்றிலைக்கு ஈடு கும்பகோணம் வெற்றிலைதான்! அதன் மதிப்பே தனிதான், என்ன, நான் சொல்லுவது! கும்பகோணம் சீவலே தரட்டுமா? அல்லது ஏதாவது வாசனைப் பாக்குத்தூள் தரட்டுமா?” என்று வெற்றிலைப் பாக்கைக் கொடுத்துப்பேச்சை மாற்றினான் பஞ்சாமி.
அவனைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்தில் இன்னும் அதிகரித்தது.
“வெற்றிலைக் கென்ன? போட்டுக் கொள்கிறேன். முதலில் உன் வேலை விஷயம் என்னவாயிற்று, சொல்லு!” என்று கேட்டேன் நான்.
“உன்னிடம் சொல்வதற்கென்ன? அந்த விளம்பாத்தை நீ பார்த்தா யல்லவா?”
“பார்த்தேன். பார்க்காமல் இருந்தால் உன்னிடம் அதைப் பற்றிப் பிரஸ்தாபித் திருப்பேனா?”
“எஸ்.எஸ்.எல்.ஸி. அல்லது மெட்ரிகுலேஷன் பாஸ் செய்திருந்தாலே போதுமானது என்று அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்…”
“தெரியும், சொல்லு”
“‘நாம்தான் பி. ஏ. ஆனர்ஸ் பட்டம் வாங்கி யிருக்கிறோமே? நமக்குக் கிடைக்காமல் போய்விடுமா?’ என்று எண்ணினேன். ஆகவே, அப்பாவிடம் அந்த விளம்பரத்தைக் காட்டி அபிப்பிராயம் கேட்டேன், அவரும் கட்டாயம் கிடைத்துவிடும் என்று நம்பி, என் கையில் ஐம்பது ரூபாய் பணத்தைக் கொடுத்து நல்ல ஸூட்டும் கோட்டும் தைத்துப் போட்டுக்கொண்டு ‘இண்டர்வியூ’வுக்குப் போய்வரும்படி சொன்னார்…”
“ஆனால் போகவில்லையாக்கும்!”
“போனேன், அப்பா! சொல்வதற்குள் இப்படி அவசரப்படுகிறாயே! பட்டதாரியான நமக்குக் கட்டாயம் வேலை கிடைத்து விடும் என்ற திட நம்பிகையின் அஸ்திவாரத்தின் பலத்தைக் கொண்டு நான் என்னவெல்லாமோ மனக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அந்த மனக்கோட்டைகள் எல்லாம் மாலை நாலு மணி ஆவதர்குள் தகர்ந்து மண்ணோடு மண்ணாகிவிட்டன.”
“விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லு, அப்பா! இந்த வீண் வர்ணனை யெல்லாம் அப்புறம் ஆகட்டும்!” என்றேன் நான்.
“நான் அவ்வளவு திட நம்பிக்கையுடன் இன்கம்டாக்ஸ் ஆபீஸுக்குப் போனேனா? அங்கே போய்ப் பார்ததால் சென்னை மாகாணமே திரண்டு வந்துவிட்டதோ என்று சொல்லும்படி கியூ வரிசை நின்று கொண்டிருந்தது. அவர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ளப் போவது மூப்பது பேரோ நாற்பது பேரோதான். அதற்காக நியூவில் காத்துக் கொண்டு நின்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா? மூவாயிரத்துக்குக் குறையில்லை. அதில் எத்தனை எஸ்.எஸ்.எல்.ஸி.க்கள் எத்தனை பட்டதாரிகள் என்று யார் கண்டார்கள்?
“கடும் வெய்யில். இமயமலையில் பனிப்பாறை நகருவதுபோலக் ‘கியூ’ மெதுவாக நகர்ந்தது, கடும் வெய்யிலில் நின்றதனால் ஏற்பட்ட தலைவலியோ தாளமுடியவில்லை. இருந்தாலும் வேலை கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கை எனக்குப் பலத்தை அளித்தது. கடைசியில் ஒருவாறாக அதிகாரிக்கு எதிரே போய் நின்றேன்.
“அதிகாரி ஒருதடவை என்னை இறங்கப் பார்த்துவிட்டு, ஊர், பெயர், படிப்பு முதலியவற்றை விசாரித்தார். நான் பாக்கட்டில் வைத்திருந்த சர்டிபிகேட்டை எடுத்து அவரிடம் கொடுத்தவண்ணம், ‘பி ஏ. ஆனர்ஸ் முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்கிறேன் ஸார்’ என்றேன்.
“அவ்வளவுதான். அதியாரி சர்டிபிகேட்டைப் பிரித்துக்கூட பார்க்கவில்லை. அதை என் கையில் ‘திருப்பிக் கொடுத்த வண்ணம், ‘எத்தனை பேருக்குத் தான் சொல்கிறது? எங்களுக்கு எஸ்.எஸ்.எல்.ஸி. படித்தவர்கள்தான் வேண்டும். பட்டதாரிகள் தேவையே இல்லை’ என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னார்.
“நான் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு வெளியே வந்தேன். என்னைப் போலவே எத்தனையோ வேலை தேடிவந்த பட்டதாரிகளெல்லாம் சோபை யிழந்து நின்றார்கள். நான் அந்தக் கண்ணறாவியைப் பார்த்துக் கொண்டு அதிக நேரம் நிற்கவில்லை.
“வீட்டுக்கு வந்து அப்பாவிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் வந்த ஆத்திரத்தில், ‘உன் உருப்படாத பட்டத்தைக் கொண்டு உடைப்பில் போடு’ என்றார்.
“உடனே மின் வேகத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றிற்று. ‘அப்பா, எனக்காக நீங்கள் எத்தனையோ ஆயிரம் ரூபாய் செலவழித்தீர்கள். எனக்காக இன்னும் இருநூறு ரூபாயைத் தண்டம் அழுது விடுங்கள். நான் எப்படியாவது பிழைக்க வழி தேடிக்கொள்கிறேன்’ என்றேன்.
“அவரும் இருநூறு ரூபாய் கொடுத்தார். அதைக்கொண்டு..” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் தியேட்டரில் இடைவேளை மணி அடித்துவிட்டது.
“அதைக்கொண்டு…..என்ன அப்பா?!” என்று கேட்டவாறே நான் எட்டணாவை எடுத்து நீட்டினேன். அவன் வாங்கிக்கொள்ள மறுத்தான்.
“சேச்சே! எனக்கு எதற்கப்பா இன்னொருத்தன் காசு? உன் கடையாக இருந்தாலும் போனால் போகிறது என்று போய்விடுவேன்” என்று சொல்லி எட்டணாவை அவன் கையில் திணித்தேன்.
“சரி, நீ இவ்வளவு நிர்ப்பந்தப்படுத்திக் கொடுக்கும்பொழுது நான் வாங்கிக் கொள்ளாமல் இருக்கக்கூடாது. இந்தா, பாக்கிச் சில்லறை, உன்னிடம் உண்மையை மறைப்பானேன்? அப்பா கொடுத்த அந்த இருநூறு ரூபாயைக் கொண்டு ஆரம்பித்த கடை தான் இது. ஏதோ வியாபாரம் நன்றாக நடந்துவருகிறது. கூட்டம் வரும் நேரமாகி விட்டது. கொஞ்சம் வியாபாரத்தைக் கவனிக்கட்டுமா?” என்றான் பஞ்சாமி.
நானும் “ஆகட்டும் அப்பா!” என்று சொல்லி அவனிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினேன்.
– 1949-02-06