பஞ்சாயத்து..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 7,381 
 
 

செல்வம். வயது 25. கட்டிளம் காளை. ஊருக்கு ஒதுக்குப் புறம் வயல்வெளிகளைப் பார்த்தவாறே…..வரும்போதுதான் அவள் எதிர்பட்டாள்.

மங்காத்தா ! – பிரச்சனைக்குரிய விதவை.

அவள் சோகம் ஒரு வினாடி உலுக்க… சமாளித்துக் கொண்டு அவளைக் கடக்க முற்படுகையில் …..

“செல்வம்….! “சன்னமான குரலில் அழைத்தாள்.

‘நாளைக்கு கிராமத்துக் கூட்டம். இன்றைக்கு .. இந்த நேரத்தில் ஏன் தன்னை அழைக்கிறாள்..? !’- குழப்பத்துடன் நின்றான்.

“உ… உன் கட்ட கொஞ்சம் பேசனும்…”

‘இதென்ன வம்பு..? நாளைக்கு கூட்டம். இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தால் விசயம் விபரீதமாகிப் போய்விடும். கைகால் முளைத்து விடும் ! – பயத்துடன் அவளைப் பார்த்தான்.

“இந்த ஊர்ல படிச்சவங்க நீங்க. விபரம் தெரிஞ்சவங்க. தயவு செய்து நான் சொல்றதைக் கொஞ்சம் நின்னு கேட்கனும்…”சொல்லும்போதே அவளுக்குக் குரல் நடுங்கியது.

‘நாளைய பஞ்சாயத்தில் யார்..? எவன்..? என்பதைத் தன்னிடம் சொல்லப் போகின்றாளா..? ! தன்னிடம் கூறி என்ன ஆகப் போகிறதுக்க..? – நிமிர்ந்து பார்த்தான் செல்வம்.

மங்காத்தா கண்கள் கெஞ்சியது. கண்ணீர் விட்டது.

பார்க்க இவனுக்கு மனசு இளகியது. அப்படியே நின்றான்.

அவள்தான் தலையைக் குனிந்து கொண்டு தொடர்ந்தாள்.

“நாளைய பஞ்சாயத்தில் இதுக்குக் காரணமான ஆளை நான் சொல்லனும். சொல்லேன்னா…. சொல்லச் சொல்லி அடிச்சி தோலை உரிப்பாங்க. அதுக்குப் பயந்துக்கிட்டுச் சொல்லித்தானாகணும்.ஆனா… அதை யாரும் நம்ப மாட்டாங்க. ஊர்ல பெரிய புள்ளின்னு சொன்னா யாராவது நம்புவார்களா..? “விசும்பி கண்களைத் துடைத்துக் கொண்டு பார்த்தாள்.

“ஊர்ல பெரிய புள்ளியா.. யாரு..?”

மங்காத்தா பெயரைச் சொன்னாள்.

செல்வத்துக்கு அதிர்ச்சி. அவனால் நம்ப முடியவில்லை.

“செல்வம் ! அவர் என்னை மறுமணம் செய்துப்பார் என்கிற நப்பாசையில் இதுக்கு நான் சம்மதிக்கலை. மனைவி இறந்து பத்து வருசமாச்சு என்கிற ஏக்கத்துல என்னை அடிக்கடி சந்ததிச்சார். தான் ஒரு பெரிய மனுசன் என்கிறதையும் மறந்து கெஞ்சினார். நானும் அவர் மேல் பரிதாபப்பட்டு… மண்ணு திண்ணுட்டுப் போறதை மனுஷன் திண்ணுட்டுப் போகட்டுமே ! என்கிற எண்ணத்துல சம்மதிச்சுட்டேன். அது இப்படித் தங்கி உறவை வெளிச்சம் போட்டுடுச்சி. நாங்களும் இதைக் கலைக்க எவ்வளவோ முயற்சி செய்தோம். முடியல. விதின்னு விட்டாச்சு. நாளைக்கு அவர்தான்னு நான் சபையிலே சொன்னா பாவம் ..! ஊர்ல தலைநிமிர்ந்து நடக்க வெட்கப் பட்டு தற்கொலை செய்து முயற்சிக்கலாம். இல்லே… பஞ்சாயத்துத் தீர்ப்பு கட்டி வச்சாலும் அவர் நிம்மதியா வாழ்வார்ன்னு எனக்குத் தோணல. இதெல்லாம் ….யாரும் காரணமில்லேன்னு சொன்னா.. யார் நம்புவா..? நடத்தைக் கெட்டவள்ன்னு ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பாங்க. இல்லே… அவமானம்ன்னு துரத்தி விடுவாங்க. அதுக்கும் நான் கவலைப்படல. நான்தான் அனாதையா அலையறேன்னா.. சுமந்த பாவத்துக்காக பிறக்குற குழந்தையும் ஏன் அனாதையாத் திரியணும்ன்னுதான் கவலையா இருக்கு. ஏழை… இதை வளர்த்து ஆளாக்கவும் முடியாது. அவரைக் காப்பாத்த நானும் இந்தக் குழந்தையும் சீரழியணுமா..”அழுதாள்.

செல்வத்திற்கு மனம் கனத்தது.

‘நாளைக்கு இவள் உண்மையைச் சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை. மாறாய்..’ஒரு பெரிய மனுசனை இழுத்து சந்தியில வைக்கிறியாடி…?’என்று ஊரே சித்ரவத்தைச் செய்யும்.’- நினைக்க இவனுக்கு அவள் மேல் பரிதாபம் வந்தது.

‘என்ன செய்யலாம்..? இந்த அபலையை எப்படிக் காப்பாற்றலாம்…?’உள்ளுக்குள் யோசனை வர…சின்ன மின்னல்.

“சரி. கவலைப்படாமப் போ. நாளைக்குப் பார்த்துக்கலாம். கடவுள் காப்பாத்த வழி இருக்கு. . அந்த ஆள் நல்லவங்களைக் கைவிட மாட்டார். ! “அவனுக்குக் கடவுள் மேல் நம்பிக்கைக் கிடையாது. சொன்னான்.

மங்காத்தா அரை மனதாக அகன்றாள்.

மறுநாள்.

கிராமமே கட்டுப்பாடாய் ஊர் கோடியில் இருக்கும் அந்த பெரிய ஆலமரத்துத் திடலில் கூடி அமர்ந்திருந்தது.

தலைமை பஞ்சாயத்து ஞானப்பன் நடுவராக வழக்கம் போல் பஞ்சாயத்தார் கூட்டத்தில் அமர்ந்திருக்க..

ஊர் தலையாரி… குற்றவாளியைத் தண்டிக்க கையில் புளிய மிளாறோடு அவர்கள் எதிரில் நின்றான்.

அவனெதிரில்…. பரிதாபமாக வயிற்றில் ஐந்து மாத சுமையுடன் மங்காத்தா !

“சொல்லு மங்காத்தா ! யார்..? “- பஞ்சாயத்து ஆரம்பமானது. உபதலைவர் கேட்டார்.

கடவுள் வரவில்லையே…! எப்படி வருவார்..! ? மனசுக்குள் வேதனை.

அவள் மெளனமாக அழுதாள்.

“உண்மையைச் சொல்லாம அழுது யாரையும் காப்பாத்த முயற்சி செய்ய வேணாம். உண்மை உன் வாயிலேர்ந்து வர்ற வரைக்கும் அடி கிடைக்கும். இது நம்ம பஞ்சாயத்து முறை !. தெரியுமா…?”

வாய் திறக்காமல் அழுதாள்.

“தலையாரி ! உங்க வேலையை ஆரம்பிக்கலாம்…”சொல்ல…

மொத்த கூட்டமும் மங்காத்தாளை பயத்துடன் பார்த்தது.

“தலையாரி ! உண்மையை நான் சொல்றேன் ! “செல்வம் கூட்டத்தை விட்டு எழுந்தான்.

மங்காத்தா அவனைப் பயத்துடன் பார்த்தாள்.

”அவள் நிலைமைக்குக் காரணம் நான்தான்! “அவள் அருகில் வந்தான். அவள் கையை இறுக்கிப் பிடித்தான்.

பஞ்சாயத்து உட்பட மொத்த கூட்டமும் அதிர்ந்து வாயைப் பிளந்து உறைந்தது.

மயான அமைதி.

ஞானப்பன் எழுந்தார். கைகட்டி…

“இதுக்கு காரணம் நான்தான். என் மகன் செல்வமில்லே.மங்காத்தாவை என் மனசார ஏத்துக்கிறேன். மான அவமானமில்லாம உங்க முன்னாடி இவளைக் கைப்பிடிக்கத்தான் இந்த கூட்டத்தைக் கூட்டினேன். குற்றவாளி நான். நிரபராதி என் மகன். என் மனைவி மங்காத்தா.!”சொன்னார்.

கூட்டத்திலுள்ள அனைவரின் முகங்களிலும் மலர்ச்சி, திருப்தி .!

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *