கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)
கதைப்பதிவு: February 19, 2014
பார்வையிட்டோர்: 10,909 
 
 

அடுத்த வீட்டிலோ, எதிர் வீட்டிலோ சத்தம் போடுவது போல இருந்தது:

“எழுந்திரிய்யா, நல்லாப்படுத்துத் தூங்கறே! தூக்கு சொல்றேன், இந்த மூட்டை, முடிச்சு, பானை, சட்டி எல்லாத்தையும். கிளம்புங்க… ம்! வரவரச் சத்திரமாப் போயிடுச்சு, இந்தத் திண்ணை… எழுந்திருக்க மாட்டிஙக்?… இன்னிக்கிப் புரட்டாசி சனிக்கிழமை.”

இரைச்சல் அதிர அதிரக் கேட்டது. நன்னையனுக்குத் தன்னைப் பார்த்துத்தான் இவ்வளவு சத்தமும் என்று நிச்சயம் வந்தது. கண்ணைப் பிட்டுக்கொண்டான். ஒட்டுத் திண்ணையில் ஓர் அடுக்கை வைத்துச் சாணத் தண்ணீர் கரைத்துக் கொண்டிருந்தாள், வீட்டுக்கார அம்மாள். உடனே வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து, பெரிய பானையையும் தூங்கிக் கொண்டிருந்த பெரிய குழந்தையையும் தோளில் சார்த்தித் திண்ணையை விட்டுக் கீழே இறங்கினான் அவன். அதற்குள் அவன் பெண்டாட்டி, கைக்குழந்தை, இரண்டாவது மூட்டை இரண்டையும் எடுத்துக்கொண்டு நடந்தாள். இரைச்சலில் விழித்துக்கொண்ட நடுக் குழந்தை அவர்களுடைய அவசரத்தைக் கண்டு பரபரவென்று எழுந்து, அவர்களைத் தொடர்ந்தது. நன்னையன் அடுத்த வீட்டுத் திண்ணையில் கைச்சுமைகளை இறக்கி, வேட்டியை இறுக்கக் கட்டிக்கொண்டு, மீண்டும் நடந்து, எதிர்த்த சாரியில் ஆறேழு வீடு தள்ளியிருந்த பிள்ளையார் கோயில் திண்ணைக்குப் போய்ச் சேர்ந்தான்.

முதுகில் வெயில் விழத் தூங்குகிறவனை எழுப்புவது போல் அவள் எழுப்பினாளே தவிர, அப்படி ஒன்றும் கண் விழிக்க நேரமாகிவிடவில்லை. இருள் சற்றே பிரிந்திருந்தது. சல் சல்லென்று ஒவ்வொரு வாசலிலும் கேட்ட, சாணி தெளிக்கிற ஓசை கொஞ்சம் கொஞ்சமாக இருளை விரட்டிக் கொண்டிருந்தது.

கோயில் திண்ணை மீது போட்டதும் குழந்தைகள் மீண்டும் சுருண்டு துயிலில் ஆழ்ந்துவிட்டன. நன்னையனுக்குக் கண்ணெல்லாம் பொங்கிற்று. அவனுடைய பெண்டாட்டிக்கும் கண் திறக்க முடியாமல் பொங்கிற்று. இரவு இருவரும் சாப்பிடவில்லை. இராக்காலப் பிச்சையாகக் கிடைத்த பழைய சோறு குழந்தைகளுக்கே சரியாகக் காணவில்லை. நாலு நாளாக ஒரு வேளைச் சாப்பாடுதான்; அதுவும் அரை வயிற்றுக்கு. ஆறாப் பசி, அடி வயிற்றில் அனலாகக் குமைந்தது. இப்படியே இன்னும் ஒரு வேளை இருந்தால் குமட்டல் கிளம்பிவிடும். தலை கனத்தது. வறட்சியினால் முணு முணு என்று வலித்தது. கண்ணைக் கசக்கித் தேய்த்துத் தெருவைப் பார்த்ததும், அந்த அம்மாள் கிழமை சொல்லிக் கூச்சல் போட்டது நினைவுக்கு வந்தது.

புரட்டாசி சனிக்கிழமைதான். உலகத்துப் பிச்சைக்காரரெல்லாம் ஊரிலே கூடி விட்டார்கள். ஒரு பெரிய ஆண்டிக் கூட்டம் போய்க் கொண்டிருந்தது. எத்தனை ஆண்டிகள்! நாற்பது ஐம்பது இருக்கும்! பொழுது புலருவதற்கு முன்னால் எத்தனை ஆண்டிகள்! இவர்கள் எப்போது கண் விழித்தார்கள்? இரவு எங்கே படுத்திருந்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? பல் தேய்க்கவில்லையா? எல்லாம் ஒரே வார்ப்பு! வெளுத்துப் போன காவித்துணி. கழுத்தில் கொட்டை, கையில் ஓடு. பாதி பேர் மொட்டை, பாதி பரட்டை, படுகிழங்கள், கண் குருடு, கால் விந்தல்! – முன்னை வினைப் பயன்கள் ஊர்வலம் போவது போல் இருந்தது நன்னையனுக்கு.

திண்ணையில் உட்கார்ந்தவாறே அவன் கேட்டான்:

“சாமி, எங்கே போறீங்க?”

“சிவகுரு செட்டியார் வீட்டிலே கொடுக்கறாங்க.”

“என்ன கொடுக்கறாங்க?”

“வர்ற பரதேசிங்களுக்கெல்லாம் ஒரு சல்லி, ஒரு பிடி அரிசி. போறோம்.”

“சல்லியா?”

”ஆமாம்.”

“சல்லிக்காசு யாருக்குய்யா ஆம்பிடுது இப்ப! பெரிய தர்மந்தான் போ!”

“கட்டின வீட்டுக்கு யார்தான் பளுது சொல்ல முடியாது?” என்று கூட்டத்தோடு நடக்கப் பெருநடை போட்டான் பரதேசி.

நன்னையன் கூட்டிப் பார்த்தான். அவன், பெண்டாட்டி, மூன்று குழந்தைகள் – ஐந்துபிடி அரிசியும் ஐந்து சல்லியும் தேறும்; கைக்குழந்தையையும் ஆளாக மதித்தால்.

“அஞ்சு பிடி அரிசி, ஒரு வயித்துச் சுவரிலே ஒட்டிக்கக் காணுமா?” என்று கேட்டுக் கொண்டான்.

“எல்லோரும் போறாங்களே. நீங்களும் போய்ப் பாருங்களேன்” என்று யோசனை சொன்னாள் மனைவி.

“போய்ப் பாருங்களேனா? நீ வரலியா?”

”என்னாலே நடக்கறதுக்கு இல்லே. மூட்டை முடிச்செல்லாம் தூக்க முடியாது. இந்த மூணும் சுருண்டு சுருண்டு தூங்குது. வயித்துலே காத்துதான் இருக்கு. அதுக எப்படி நடக்கும்?”

அவன் மட்டும் எழுந்து உட்கார்ந்தான். அதற்குள் சிவகுரு செட்டியார் வீட்டு வாசலில் ஆண்டிகள் ‘க்யூ’ வரிசையில் உட்கார்ந்து விட்டார்கள். உட்கார்ந்த ஒழுங்கைப் பார்த்தால் தொன்று தொட்ட வழக்கமாகத் தோன்றிற்று. புரட்டாசியில் மட்டும் இல்லை. எல்லாச் சனிக்கிழமைகளிலும் சிவகுரு இந்தத் தர்மத்தைச் செய்கிறாராம். நாற்பது ஐம்பது பேருக்குப் பிறகு, கடைசி ஆளாக உட்கார வேண்டும் என்று நினைத்தபோது, நன்னையனின் காலும் உள்ளமும் ஏழெட்டு மைல் நடந்து வந்தது போல களைத்துவிட்டன.

இவர்களோடா உட்கார வேண்டும்? என்ன இருந்தாலும் அவன் பஞ்சத்து ஆண்டிதான். சுபிட்சம் என்ற வாடையை நுகராத இந்தப் பரம்பரை ஆண்டிகளோடா உட்கார வேண்டும்! உட்கார்ந்தாலும் மோசமில்லை. முகம் தெரியாத ஊர்தானே? ஆனால் செட்டியார் இன்னும் வாசலுக்கு வரவில்லை. ஒரு மணி நேரம் செல்லுமாம். பூஜையில் உட்கார்ந்திருக்கிறாராம். வெயில் கூடக் கிளம்பவில்லை. வேறு எங்கே போவது? நன்னையன் உட்கார்ந்தான். தான் வேறு என்ற தன்மையுடன், உள்ளங் குன்ற, உடல் குன்ற, ஓர் அடி தள்ளினாற் போல் உட்கார்ந்து கொண்டான். பரதேசிகளில் பலர் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். அவனுக்குப் பக்கத்தில் இருந்த பரதேசிக்குக் கிராப்புத் தலை. சீவாத பரட்டைக் கிராப்பு; சீசாவுக்குள் விட்டுக் கழுவுகிற பிரஷ் மாதிரி. கழுத்தில் கொட்டை; தடிப்பயலாக வளர்ந்திருந்தான்.

“சாமிக்கு என்ன ஊரு?” என்று அவன் கேட்டான். நன்னையனுக்கு அவனோடு பேசுவதற்கே கௌரவக் குறைச்சலாக இருந்தது. பதில் சொல்லவில்லை.

“உங்களைத்தாங்க. எந்த ஊரு உங்களுக்கு?”

“ஏன்!”

“கேட்கக்கூடாதுங்களா?”

“சேலம்.”

“சேலமா? ஏ அப்பா? ரொம்பத் தொலைவான ஊராச்சே.”

“ஆமாம்.”

”எங்கே இம்மாந் தூரம்?”

வரிசையில் உட்கார்ந்த பிறகு, பதில் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?

”ஆமாம், என்ன செய்யுறது? பிளைப்புப் போயிடுச்சு, பிச்சைக்குக் கிளம்பியாச்சு.”

“அப்படீன்னா வேறெ பொளப்பு உண்டுன்னு சொல்லுங்க!”

“இருந்தது. இப்ப இல்லே…”

“என்ன! வெள்ளாமையா?”

“நெசவு.”

“நெசவா? வேட்டி புடவையெல்லாம் நெய்வமுனு சொல்லுங்க.”

“துண்டு துப்பட்டிக்கூட நெய்வோம். நூல் இல்லே. எத்தினி நாளைக்கு இருக்கிறதை வித்துத் திங்க முடியும்! மூக்குலே, கையிலெ இருக்கிற வரைக்கும் நகைதான். வித்துக் காசாக்கிட்டா, ரெண்டு நாள் சோறுதானே! தீந்துது. இப்படிப் பண்ணிக்கிட்டே வந்தா, அப்புறம் விக்கிறதுக்கு என்ன இருக்கும்?”

“ஏன் நூல் கிடைக்கலே?”

“என்னமோ கிடைக்கலே.”

“வேற பிளைப்புக் கிடைக்கலியோ?”

“வேறெ ஏதாவது தெரிஞ்சால்ல செய்யலாம்? வேட்டி புடவை நெய்யத் தெரியும். பொழுதெல்லாம் தறியிலெ உக்காந்து, ரத்தம் செத்த கூட்டம் நாங்க. கோடாலி, மண்வெட்டி தூக்க முடியுமா? ஓடியாடி வேலைசெய்ய முடியுமா?”

“பாவம்!”

அதற்குள் அவனை அடுத்து உட்கார்ந்திருந்த ஓர் ஒற்றைக் கண்ணன் சொன்னான்: “பிச்சை எடுக்க மட்டும் தெம்பு வேண்டியதில்லைன்னு இதுக்கு வந்தீங்களோ? இதுவும் லேசுப்பட்டதில்லே. எங்களைப் பாரு, இன்னிக்கு ஒரு ஊரு, சாயங்காலம் ஒரு ஊரு, ராத்திரி வேறெ ஊரு, நாளைக்குக் காலமே எத்தனையோ தூரம் போயிருப்போம். இதுக்கும் ஓடியாடிப் பாடு பட்டாத்தான் உண்டு.”

பரம்பரைப் பிச்சைக்காரனின் தொழில் அபிமானத்துடன் பேசின அவனுடைய குரலில் கற்றுக்குட்டியைக் கண்டு அசட்டையும் ஆதரவும் தொனித்தன.

“இன்னிக்குத் தஞ்சாவூருன்னா, நாளைக்குக் கும்மாணம், நாளை ராத்திரி திருடறமருதூரு, நாளைத் தெறிச்சு மாயாவரம், அப்புறம் சீயாளி, கனகசபை, இப்படி நாளுக்கு ஒரு சீமையாப் பறக்கிறோம் நாங்க. நீங்க என்னமோ உடம்பு முடியலேன்னு பிச்சை எடுக்க வந்தேங்கிறீங்களே; என்னத்தைச் சொல்றது?”

“இப்படியே நடந்து நடந்து உயிரை விடவா நாம் பிறந்திருக்கோம்?”

“நடந்தாத்தான் சோறு உண்டு. ஒரே ஊரிலே சுத்திச் சுத்தி வந்தா, சனங்களுக்குக் கச்சுப் போயிடும்…. சும்மாக் குந்தியிருக்கிறது சோம்பேறிப் பிச்சைக்காரங்களுக்குத்தான். சாமிங்க, சிவனடியாருங்க இவங்களுக்கெல்லாம் யாத்திரை தான் கொள்கை.”

’நீ பிச்சை எடுக்க லாயக்கில்லை’ என்று சொல்லாமல் சொல்வது போல் இருந்தது. நன்னையனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “எப்பொழுதுமே பிச்சையா எடுக்கப் போகிறோம்? ஏதோ சோதனைக் காலம்! ஹும். வெட்டிப் பயல்கள்” என்று மனத்திற்குள் சபித்துக் கொண்டே எழுந்தான்.

“என்ன அண்ணே, எளுந்திக்கிட்டீங்க?”

”இருங்க. பல் தேய்ச்சிட்டு வந்திடறேன்” என்று எழுந்தான் அவன். தெருக்கோடி திரும்பி, ஆற்றங்கரை நடப்பில், குறுக்கே ஓடிய வாய்க்காலில் இறங்கினான். மதகின்மீது ஒரு செங்கல் துண்டை உரைத்துப் பல்லை விளக்கி, முகத்தைக் கழுவிக் கொண்டான். ஒரு கை தண்ணீர் மொண்டு விழுங்கினான். அது நெஞ்சையும் மார்பையும் அடைத்து, உயிரைப் பிடிப்பதுபோல் வலியைக் கொடுத்தது. நல்ல பசியில் வெறும் வயிற்றில் ட் தண்ணீர் ஊற்றிய அதிர்ச்சி அது. மெதுவாக அதை உள்ளே இறக்கி, வாய்க்கால் கரையிலேயே ஒரு நிமிஷம் உட்கார்ந்தான். மீண்டும் எழுந்து, வயிறு கொண்ட மட்டும் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தெருவை நோக்கித் திரும்பினான்.

சனிக்கிழமை; போட்டி ஏராளம். அதையும் மிஞ்சினால்தான் வயிற்றில் ஏதாவது போட முடியும். போட்டியை மிஞ்ச ஒரு வழிதான் உண்டு. உண்மையைக் கலப்படமில்லாமல் சொல்ல வேண்டும். பிச்சை நமக்குத் தொழில் அல்ல என்று படப்படச் சொல்ல வேண்டும். அப்படித்தான் கருணையை எழுப்பலாம்.

வெயில் வந்துவிட்டது. சிவகுரு செட்டியார் இன்னும் பூஜையில்தான் இருக்கிறார். பத்துப் பதினைந்து வீட்டைக் கடந்து சென்றான் அவன். அங்கும் ஒரு போட்டி காத்திருந்தது. ஒரு குரங்காட்டி, குச்சியை இரண்டு முழ உயரத்தில் பிடித்து, லங்கையைத் தாண்டச் சொல்லிக் கொண்டிருந்தான். லங்கையையா சமுத்திரத்தையா என்று யோசிக்காமல் குரங்கு தாண்டித் தாண்டிக் குதித்தது. வேடிக்கை பார்க்கச் சிறுவர்களின் கூட்டம். ஒரே சிரிப்பு, கூச்சல்! மிகப் பெரிய போட்டி இது! நன்னையன் இன்னும் இரண்டு வீடு தள்ளிப் போய் நின்றான்.

வீடு பெரிய வீடு. வாசலில் கொட்டகை. அங்கே சாய்வு நாற்காலியை மேற்கே பார்க்கப் போட்டுச் சாய்ந்திருந்தார் ஒரு பெரியவர்.

“அம்மா!” என்று நன்னையன் கூப்பிட்டான்.

“ஏனையா அம்மாவைக் கூப்பிடறேஎ? ஐயா ஒண்ணும் கொடுக்க மாட்டாருன்னா? கண்ணைப் பிட்டுக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே; விடியட்டுமென்னு காத்திருந்தியா முகதரிசனம் கொடுக்க! ஐயா எளுந்தவுடனே நல்ல பண்டமாப் பாத்துக் கண் விளிக்கட்டுமேன்னு வந்தியாக்கும்? எனக்கு ஒண்ணும் புரியலியே. சும்மா நின்னுக்கிட்டே இருந்தா? பதில் சொல்லுய்யா.. விடியக் காலமே எளுந்திருக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே?…. என்ன எண்ணம்னு கேக்கறேன். பேசாம படுக்கையிலேருந்து எளுந்து மூஞ்சியைக் களுவிக்கிட்டு வந்து சாஞ்சிருக்கேன். மூஞ்சியைக் காட்டுறியே. நீ என்ன குத்து விளக்கா? கண்ணாடியா? கட்டின பொஞ்சாதியா? சொல்லு-”

மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருந்தார் அவர். பதில் சொல்லு சொல்லு என்று சொன்னாரே தவிர, அது வருவதற்கு இடங் கொடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு பாக்கு வெட்டு நேரம் கூட சும்மா இருந்தால் அவன் ஆரம்பிக்கலாம்; அவர் நிற்கவில்லை.

“ஏனையா, கோளி கத்தறத்துக்குள்ளாற இந்தத் தாடி, மீசை, களிசல், கையிலை ஒரு இளிக்கிற சொம்பு – இப்படி வந்து நிக்கிறியே…. உடனே போட்டுடுவாங்கன்னு நினைக்கிறியா? இல்லை சொல்லேன்? பேசாமடந்தையா நிக்கிறியே.”

நன்னையனுக்கு, “நீங்க பேசாம இருந்தா போதும். நான் போயிடறேன். சும்மா அலட்டிக்காதீங்க” என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்போல் இருந்தது. ஆனால் அதற்கும் அவர் விடவில்லை. திருப்பித் திருப்பி அவன் கண்ணாடியாக, குத்துவிளக்காக, கட்டின பெண்டாட்டியாக இல்லாததை, நாலைந்து தடவை இடித்துக் காட்டிவிட்டு, “உனக்குத்தான் வேலை. எங்க வீட்டுலெ ஒருத்தருக்கும் வேலையே கிடையாது. பத்துப் பசை தேய்க்கிறது, முகங்களுவறது, எல்லாத்தையும் அப்படி அப்படியே போட்டுட்டு, உன்னை வந்து உபசாரம் செய்யணும்; இல்லியா?-”

அப்பாடா!… கொஞ்சம் ஓய்ந்துவிட்டார்.

“இல்லீங்க” என்று சொல்ல வாயெடுத்தான் நன்னையன். ஆனால் மறுபடியும் அவர் பிடித்துக்கொண்டு விடப் போகிறாரே என்று பயந்து நேராக விஷயத்துக்கு வந்துவிட்டான்.

“நம்பளுக்குத் தொழில் நெசவுங்க. நமக்குச் சேலம். தறியிலே நெசுக்கிட்டு மானமாப் பொளச்சிட்டிருந்தோம். ஏளெட்டு மாசமா நூலே கிடைக்கலே. வேலை இல்லேன்னிட்டாங்க. இருந்ததை வித்துச் சாப்பிட்டோம். இங்க ஏதாவது வேலை கிடைக்குமான்னு வந்தோம். இங்கேயும் அப்படித்தான் இருக்கு. மூணு நாள் கோயில்லே தேசாந்திரிக் கட்டளைக்குச் சீட்டுக் கொடுத்தாங்க. மூணு நாளைக்கு மேலே கிடையாதாம். அப்பாலெ நிறுத்திட்டாங்க. நாலு நாளாக் கால்வயித்துக்குக் கூடக் கிடைக்கலே. மூணு பச்சைக் குளந்தை பட்டினி கிடக்குது. நேத்திலேருந்து நானும் வீட்டிலேயும் பட்டினிங்க” என்று மூச்சு விடாமல் சொல்லி தீர்த்தான்.

“இப்ப என்னை என்ன பண்ணச் சொல்லுறே? தறியும் நூலும் வாங்கித் தரச் சொல்றியா?”

“நாம்ப அப்படிக் கேக்கலாம்களா? குளந்தைகளைப் பார்க்க வளங்கிலீங்க-எதோ கொஞ்சம் வயித்துக்கு?”

“இந்த பாரு, எனக்கு இப்ப ஒரு சந்தேகம் வந்திடுச்சு. இந்தச் சேலம் டவுனு இப்ப இருக்கா, இல்லை ஈ காக்காய் இல்லாமெ ஒரே பொட்டைக்காடாப் போயிடிச்சான்னு தெரியலே. நானும் ஆறு மாசமாப் பாக்கறேன். லக்ஷம் பேரு உன் மாதிரி வந்திட்டாங்க. நூல் இல்லே. வேலையில்லேன்னு வயித்தை எக்கிக்கிட்டு வந்தி நிக்கிறாங்க. என்ன சொல்றே?”

“அப்பறம் என்னத்தைச் சொல்றதுங்க?”

“என்னத்தைச் சொல்றதுங்களா? நான் சொல்றேன் கேளு. பிச்சைக்கும் முதல் போட்டுத்தான் ஆகணும். அதோ பாரு அநுமார் நிக்கிறாரு. அவருதான் அவனுக்கு முதல்.”

திரும்பிப் பார்த்தான் நன்னையன். குரங்காட்டி அவர் பேசுவதைக் கேட்ட வண்ணம் நின்றுகொண்டிருந்தான்.

பெரியவர் சொன்னார்:

“அந்த அநுமார் அவனுக்கு முதல், இன்னும் கொஞ்ச நாளியிலே பாரு: அந்த அலுமினிய ஜோட்டி நிறைய அரிசி ரொப்பிக்கிட்டுப் போயிடுவான். அவன் பொளைக்கிறவனா, நீயா? இந்த உலகத்திலே எந்தத் தொழிலுக்கும் முதல் வேணும்டாப்பா, முதல் வேணும்; பாம்பாட்டியும் குரங்காட்டியும். ஜாலராப் போட்டுக்கிட்டுப் பாடணும்; இல்லாட்டிக் கொத்தமல்லி கறிவேப்பிலை விக்கணும். இல்லாட்டி, மூட்டைதான் தூக்கலாம். அதுக்கும் உங்கிட்ட முதல் இல்லே. எலுமிச்சம்பழத்தை நறுக்கிப் பத்துநாள் புரட்டாசி வெயில்லே காயப்போட்டது போல நிக்கிறே.”

ஒரு கணம் மௌனம்.

’குரங்காட்டியைவிட மட்டமாகப் போய்விட்டோம்!’ அவனுக்குத் தொண்டையை அடைத்தது. சேலம், தறி, அவன் குடியிருந்த வீடு, பசுமாடு, முற்றத்தில் சாயம் நனைத்துத் தொங்கின நூல் பத்தை- எல்லாம் அவன் கண் முன் ஒருமுறை வந்து போயின. ‘எங்கோ பிறந்து, எங்கோ தொலைவில் வாழ்ந்து, யாரோ முகம் தெரியாதவரிடம் பாட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோமே! எதனால்? எதற்காக?’ அவன் கண் நிரம்பிற்று. உதட்டைக் கடித்தால் கண்ணீர் தெறித்துவிடுமென்று மூச்சைப் பிடித்து நிறுத்தி, வாயைத் திறந்து கண்ணீரைக் கன்னத்தில் சொட்ட விடாமல், தேக்கினான்.

“என்ன சொல்றே?” என்று வழக்கமான கேள்வியைக் கேட்டார் அவர்.

இதற்கு என்ன பதில் சொல்வது? கண்டம் நடுங்கிற்று. அவன் பேசாமல் நின்றான்.

“சும்மா நின்னுக்கிட்டே இரு” என்று எழுந்து உள்ளே போய்விட்டார் அவர்.

குரங்காட்டி கேட்டான்: “நெசவு வேலையா உங்களுக்கு?”

நன்னையன் தலையை ஆட்டினான்.

“காலங் கெட்டுப் போச்சுய்யா. இந்த மாதிரி அவதியையும் பஞ்சத்தையும் ஒருநாளும் பாத்ததில்லே. பாயிலெ கிடந்தவங்க எல்லாரையும் தரையிலெ உருட்டிடிச்சே இந்தப் பாவி மவன் பஞ்சம். தருமம் கெட்ட உலகம்!” என்று, நொடித்தவன் நிலைமையை மனத்தில் வாங்கி, இரக்கம் சொல்லி, அவனையே பார்த்துக்கொண்டு நின்றான் குரங்காட்டி. ‘நாங்கதான் இப்படியே பிறந்திருக்கோம். நீயும் இப்படி ஆகணுமா, கண்ணராவி!” என்று அவன் மனம் கண்ணின் வழியாகச் சொல்லிற்று. அந்தப் பார்வையைப் பார்த்ததும் ஆடிக்கொண்டிருந்த நன்னையன் பொல பொலவென்று கண்ணீர் உகுத்தான்.

சற்றுக் கழித்துப் பத்துப் புது இட்லி, இரண்டு வயிற்றுக்குப் பழைய சோறு – எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு வந்து போட்டாள் பெரியவர் மனிஅவி. குரங்காட்டிக்கும் குரங்குக்கும் இரண்டு இட்லி கிடைத்தன.

“இந்த பாரு! நித்யம் கிடைக்கும் இந்த மாதிரின்னு நெனைச்சுக்காதே, நாளைக்கு வந்தியோ கெட்ட கோபம் வந்திடும்! போ, பொளைக்கிற வளியைப் பாரு” என்று வாசல் நிலைப்படியிலிருந்தே சொல்லிவிட்டு அவனுடைய கும்பிடைக்கூட பார்க்காமல் பெரியவர் உள்ளே போய் விட்டார்.

நன்னையன் கோயில் திண்ணையை நோக்கி நடந்தான்.

”இந்தா, இதை வாங்கிக்க.”

அவன் பெண்டாட்டிக்கு அதைப் பார்த்ததும் சோற்றுக் களஞ்சியத்தில் குதித்துவிட்டாற்போல் இருந்தது.

“ஏது இத்தினி? கிளப்புலே வாங்கினீங்களா?”

”கிளப்புலெ வாங்கும்படியாத்தானே இருக்குறோம் இப்ப! பிச்சைதான்! வாங்கி வை.”

பெரிய குழந்தை பலகாரத்தை வளைத்துக் கொண்டது. நடுக் குழந்தை, “அப்பா. குரங்குப்பா!” என்று கத்திற்று. குரங்காட்டி, திண்ணை ஓரமாக நின்று கொண்டிருந்தான்.

“என்னாப்பா?”

“ஐயா, நீங்க பொளைக்கத் தெரியாதாங்க. அவங்க கொஞ்சம் சோறும் பலகாரமும் கொடுத்தாப் போதுமாய்யா? அப்படியே இன்னும் நாலு வீட்டிலெ அரிசியும் வாங்கியாரக் கூடாது? ராத்திரிப் போதுக்கு. மறுபடியும் ஒரு நடை அலையணுமால்லியா?”

“நீ சொல்லு. உனக்கென்ன? நேத்து மத்தியானமே புடிச்சு எல்லா வயிறும் காயுது. இப்ப இதைத் தின்கிறது. அப்புறம் பாத்துக்கறோம்.”

குரங்காட்டி சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டுப் பிறகு சொன்னான்:

”இந்த ஊரிலே யாரையாவது தெரியுமா உங்களுக்கு?”

“ஊரே புதிசு. ஏன்?”

“இல்லே, கேட்டேன். ஒரு சேதி சொல்லணும்.”

“என்ன சேதி!”

“சொன்னாக் கோவிச்சுக்க மாட்டீங்களே?”

“சேதியைச் சொல்லேன். கோவிச்சுக்கறது என்ன?”

”சரி, சோறு தின்னுட்டு வாங்க. இங்க ஒருத்தரு இருக்காரு. உங்களைப்போல ஆளுங்களுக்கெல்லாம் நிறையக் கொடுப்பாரு. அவருகிட்ட அளச்சிக்கிட்டுப் போறேன்.”

“யாரு சொல்லேன்! வியாபாரியா?”

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நீங்க சாப்பிடுங்க.”

சாப்பாடு முடிந்ததும், திண்ணையிலிருந்து இறங்கிக் குரங்காட்டியோடு நடந்தான் நன்னையன். கடைத்தெருச் சதுக்கத்தைக் கடந்து, ரெயிலடி ரஸ்தாவில் நடந்தார்கள். கால் நாழிகை தூரம் போனதும் ஊர் முடிந்துவிட்டது. அப்பால் ஒரு குளம். அதர்கும் அப்பால் சாலையோரமாகத் தோட்டிகளின் சேரி. முப்பது குடிசைகள் இருக்கும். எங்கும் திறந்த வெளி. பச்சை வயல்கள். ரெயிலடிச் சாலையின் இரு மருங்கிலும் தென்ன மரங்கள். இந்தப் பச்சையைப் பார்க்கிறபோதெல்லாம் நன்னையன் காணாததைக் கண்டதுபோல் மயங்கி நின்றான்.

சேரிக்கு முன்னால் நின்று, “இங்கதான் இருக்காரு நான் சொன்ன ஆளு.”… “காளி, ஏ காளி!” என்று உரக்கக் குரல் கொடுத்தான் குரங்காட்டி.

“ஏன்?” என்று குடிசைகளின் நடுவேயிருந்து பதில் குரல் வந்தது.

“வைத்தியலிங்கத்தை அளைச்சுக்கிட்டு வா இப்பிடி.”

நன்னையன் ஒன்ரும் புரியாமல் விழித்தான்.

கையில் ஈயக் காப்பும் ஈய மோதிரமும் ஈயக் காதணியும் ஈய மூக்குத்தியுமாக ஒரு பெண்பிள்ளை வந்தாள். கூட, குட்டிப் பருவத்தைக் கடந்து வளர்ந்த குரங்கு ஒன்று ஓடிவந்தது.

“இந்த பாருங்க, இவன்தான் வைத்தியலிங்கம்.. ஏய் வைத்தியலிங்கம், வா இப்படி” என்று அழைத்தான் குரங்குக்காரன்.

குரங்கு துள்ளிக் குதித்தது. அவனுடைய அரைத் துணியைப் பிடித்து, அண்ணாந்து பார்க்கக் குலவிற்று. அவன் கையிலிருந்த குரங்கின்மேல் விழுந்து தள்ளிற்று.

“இந்த பாருங்க. அப்பவே கோவிச்சுக்க மாட்டேன்னு சொல்லியிருக்கீங்க. நெசந்தானா?”

“நான் சொன்ன ஆளு இந்த வைத்தியலிங்கந்தான்!”

“யாரு! என்னய்யா விளையாடறே?”

”பாத்தீங்களா? கோவிச்சுக்கிறீங்களே! இவனை நானும் எம் பொஞ்சாதியும் உசிராட்டம் வளர்த்து வரோம். இதை உங்களுக்குக் கொடுத்திடட்டுமா?”

“எனக்கு என்னாத்துக்கு?”

“ஆமாங்க! உங்களுக்குப் பிச்சை எடுக்கவே தெரியலியே! நெசவாளிங்களுக்கு எப்படிப் பிச்சை எடுக்கத் தெரியும்? அது பிறவியிலே வரணும். வமிச குணங்க. லேசிலே கத்துக்க முடியாது: தச்சு வேலை, கொல்லு வேலை மாதிரிதான். வன்னியர் ஐயா சொன்னாப்போல உங்களுக்கு மூட்டை தூக்கறாத்துக்குக்கூட முதல் இல்லே. நீங்க என்னா பண்ணப் போறீங்க? அதுவும் இந்த ஊரு. தரித்திரம் பிடிச்ச ஊரு. செட்டியாரு, சனிக்கிழமை காசும், அரிசியும் கொடுப்பாரு. மைத்த நாளிலே பிச்சைக்காரன் வாடையே அந்தப்பக்கம் வீச விடமாட்டாரு. வன்னியரும் தர்மசாலிதான். அதுக்காகத் தினந்தினம் அவங்க வீட்டு வாசல்லெ போயி நிக்கறதுக்கு ஆச்சா? அவங்க ரெண்டு பேருந்தான் கொடுக்கிறவங்க. மீதி அத்தனையும் பிடாரி. போறதுக்கு முன்னாடி மேலே உளுந்து புடுங்குவாங்க. தண்ணியை வாரி மேலே வீசுவாங்க. தர்மம் பெருத்த ஊரு! நீங்க ஏதாவது கொடுத்தா உங்களுக்கு ஏதாவது கிடைக்கும். அதுக்குத்தான் சொல்றேன்.

இந்த ஊர்லே ஒருத்தருக்கும் உங்களைத் தெரியாது. இந்த வைத்திலிங்கத்தை வச்சு ஆட்டுங்க. சோத்துக் கவலையே இராது. நெசவாளி நெசவாளின்னு சொன்னா நம்பறத்துக்கு இந்த ஊர்லெ ஆளு கிடையாது.”

நன்னையன் புன்சிரிப்பு சிரித்தான்.

“என்னையும் குரங்காட்டியா அடிச்சிடணும்னு பாக்கறே! ம்… சொல்லு சொல்லு. தலைக்கு மேலே போயிடுச்சு! அப்பாலே சாண் என்ன, முளம் என்ன!”

“தலைக்கு மேலே ஒண்ணும் போயிடலீங்க. பஞ்சம் பறந்து போச்சின்னா, நீங்க மறுபடியும் ஓட்டு வீட்டுக்குப் போயிடுவீங்க. இது எத்தினி நாளைக்கு? அதுவரைக்கும்தான் சொல்லுறேன். அப்படியும் குரங்காட்டின்னா மட்டம் இல்லே. ஐயா சொன்னாப்போல இது அப்படியே தங்கக்கட்டி, நல்ல முதலு, வேற யாரையாச்சும் கூப்பிட்டு இதைக் குடுத்திடுவேனா? உங்க குளந்தைகளையும் அம்மாவையும் பாத்தேன். எனக்குப் பொறுக்கலே.”

“காளி, இவங்க ய் ஆரு தெரியுமா? இவங்களுக்குச் சேலம். தறியிலே நெசு, மானமாப் பொளச்சிக்கிட்டிருந்தவங்க. நூல் கிடைக்கலியாம், கையிலே ஓட்டை எடுத்திட்டாங்க. இவங்க அம்மா லச்சுமி மாதிரி இருக்காங்க. அந்த மகா லச்சுமியும் வாடித் தேம்புது. பச்சைக் குளந்தை மூணு, துவண்டு துவண்டு விளுது, வைத்திலிங்கத்தை இவங்க வச்சுக்கட்டுமே. கண்ணராவியாக இருக்குது, பார்த்தா!”

“என்ன, வைத்திலிங்கத்தையா!”

“அட, என்னமோ? பதர்றியே? நம்மகிட்டத்தான் மூணு இருக்கே. ஒண்ணைக் கொடுக்கறது. இங்க வச்சு ஆட்றத்துக்கு ஆளைக் காணும். இவங்க மூஞ்சியைப் பாத்துப் பெரிய மனசு பண்ணு. உன் கலியெல்லாம் தீந்துரும். ஒரு ராசா பொறப்பான் உனக்கு.”

“அவங்க கேக்கக்கூட இல்லைபோல் இருக்கு. எடுத்துக்க, எடுத்துக்கன்னு அவங்க தலையிலெ கட்டுறியே?”

“எல்லாம் எடுத்துக்குவாங்க.”

“ஏஞ்சாமி எடுத்துக்கிறீங்களா?”

“எடுத்துக்கிறேன்னு சொல்லுங்களேன்” என்று குரங்காட்டி நச்சரித்தான்.

”சரிம்மா, எடுத்துகிறேன்.”

“பாத்தியா, உங்கிட்டையா சொல்லிட்டாரு, எடுத்துக்கிறேன்னு!”

அவள் பளபளவென்று வெண்முத்துச் சிரிப்புச் சிரித்தாள். அவனுடைய கருணை அவளையும் தொட்டுத்தான் விட்டது. அவள் சொன்னாள்: “பாத்தியா, என்னை இந்தக் குருமுட்டுலெ வச்சுச் சரின்னு தலையாட்டச் சொல்றே பாத்தியா.. இரு இரு.. சாமி! அவங்க சொல்றாங்க, கொடுக்கிறேன். எடுத்துக்கிட்டுப் போங்க. வைத்திலிங்கம் வயித்துக் கவலையே வைக்கமாட்டான்.”

கோயில் சிலைபோலக் கறுப்பாக, ஆரோக்கியமாக, பளபளவென்று வனப்பு வடிவாக நின்றாள் அவள்.

“அப்பாடா, காளியாத்தா மனசு இரங்கிட்டா! இனிமேக் கவலையில்லே!” என்று குரங்காட்டி சிரித்தான்.

சுற்றிலும் வயல். எட்டியவரையில் பரந்து நின்ற பச்சை வயலில் அலை ஓடிக்கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று. பஞ்சு பொதிந்த வானம். அவள், அவளுடைய போலிக் கோபம், சிரிப்பு எல்லாவற்றையும் பார்த்தான் நன்னையன். துணிவு பிறந்தது.

“இந்தக் குச்சியைக் கையிலே பிடியுங்க. பிடிச்சீங்களா? ‘லங்கையைத் தாண்டுடா’ன்னு சொல்லுங்க. சும்மாச் சொல்லுங்க.”

“லங்கையைத் தாண்டுடா!”

வைத்திலிங்கம் லங்கையை தாண்டிக் குதித்தது.

குச்சியை வாங்கி அதன் கையிலே கொடுத்து, “ஆடு மேய்டா வைத்திலிங்கம்னு சொல்லுங்க” என்று சொல்லி கொடுத்தான் குரங்காட்டி.

“ஆடு மேய்டா வைத்திலிங்கம்.”

குரங்கு குச்சியைப் பிடரியில் பிடித்துக்கொண்டு இப்படியும் அப்படியும் இரண்டு நடை போய் வந்து, அடுத்த கட்டளைக்குக் காத்து நின்றது.

பிறகு பள்ளிக்கூடம் போகும் கோலம், கைதி கை கட்டி நிற்கிற கோலம், பெண்டாட்டியோடு ரகசியம் பேசும் நிலை, கோபுரம் ஏறும் வித்தை – எல்லாவற்றையும் பாடம் சொல்லிக் கொடுத்தான் குரங்காட்டி.

நன்னையனையும் குரங்காக ஆட்டி வைத்துவிட்டான் அவன்!

அவள் சிரித்தாள்.

”நல்ல வேளை, பழகின குரங்கு, புதுக்குரங்கு இப்படிச் சுளுவா மசியாதுங்க” என்றாள் அவள், சிரித்ததற்குக் காரணம் சொல்வதற்காக. பிறகு, “சரி அளைச்சுக்கிட்டுப் போங்க” என்றாள்.

அதை உச்சிமோந்து காளி வழியனுப்பினாள். குரங்கு தான் போக மறுத்தது. சேரிக்குள்ளே ஓடிப்போய் ஒரு பிடி கடலை எடுத்துவந்து நன்னையனிடம் கொடுத்து, “இதைக் கையிலே வச்சுக்கிட்டு ஒண்ணொண்ணாப் போட்டுக்கிட்டே போங்க; ஓடியாரும்” என்று சொல்லிக் கொடுத்தாள் காளி.

“நீ வரலியா?” என்று கேட்டான் நன்னையன்.

“நான் பின்னாலெ வர்றேன், போங்க” என்று நின்றுவிட்டான் குரங்காட்டி.

“என்னாங்க இது, குரங்கைப் பிடிச்சுக்கிட்டு! ஏது”

“எல்லாம் பிளைக்கிறதுக்குத்தான். குரங்காட்டி கொடுத்தான்.”

“பஞ்சத்துக்கு மூணு குளந்தை பத்தாதுன்னு சொல்லியா?”

“அந்தக் குளதைங்கள்ளாம் திங்கத்தான் திங்கும். இது திங்கவும் திங்கும், சம்பாரிச்சும் போடும். தூக்கு மூட்டையை; எதிர்த்த வீட்டுத் திண்ணையில் கட்டிப் போடுவோம்.”

ஜாகை மாறிற்று. திண்ணையிலிருந்த ஜன்னல் கம்பியில் குரங்கைக் கட்டிப் போட்டான் அவன்.

கைக்குழந்தை சிரித்துக்கொண்டு கையைக் கொட்டிற்று. குரங்கைப் பிடித்துத் தலையில் அடித்தது.

“ரொம்ப நல்லக் குரங்கு. பழகின மாதிரியல்ல நடந்துக்குது!” என்றாள் அவள்.

இரண்டாவது குழந்தை வீல் என்று அழுதது. “ஏதுடா சனி!” என்று சொல்லப் போகிறாளே என்று பயந்து, நன்னையன் குரங்காட்டியின் வாதங்களைத் தான் சொல்லுகிற மாதிரி எடுத்து விளக்கினான்.

“நல்லதுதான். குழந்தைகளுக்கும் விளையாடுகிறதுக்கு ஆச்சு” என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, அவன் கவலையைத் தீர்த்தாள் அவள்.

முதல் குழந்தை பயந்துகொண்டு, தூரத்தில் நின்று கொண்டிருந்தது.

“இதைப் பாத்தியா, அநுமார்!” என்று ஆஞ்சநேயர் கதையெல்லாம் சொல்லி, அறிமுகப்படுத்தி பயத்தைப் போக்குவதில் ஈடுபட்டான் நன்னையன். தடவிக் கொடுக்கச் சொன்னான். தனக்கும் ஓர் ஒத்திகையாக இருக்கட்டும் என்று விளையாட்டுக் காட்டுகிற போக்கில், அதை லங்கையைத் தாண்டு, ஆடு மேய்க்கிற வித்தை முதலியவைகளைச் செய்து காட்டச் சொன்னான்.

கடைசியில் வைத்திலிங்கம் மூட்டையைப் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தது. அதற்கும் பசி வேளை.

“சும்மா எத்தினி நாளி விளையாடுவது? ராத்திரிக்கு என்ன செய்யறதாம்?”

பொழுது போனது தெரியத்தான் இல்லை. புதுக் குழந்தையோடு குழந்தைகள் விளையாடியதைப் பார்த்து, வெகுநேரம் மகிழ்ந்துவிட்டது குடும்பம்.

அலுமினியப் பேலாவை எடுத்துக்கொண்டு இறங்கினான் அவன்.

“ஏன், இதை அளச்சிக்கிட்டு போகலியா?”

”அதுக்குள்ளாறாவா?”

அவ்வளவு சீக்கிரமாகப் பரம்பரைப் பிச்சைக்காரனாகச் சரிந்துவிட அவன் உடன்படவில்லை. முழங்காலுக்குக் கீழே தொங்கத் தொங்கத் தட்டுச்சுற்றுக் கட்டி, உடம்பில் மல் பாடியும் போட்டுக்கொண்டு போனால் குரங்குங்கூட அவனை குரங்காட்டியாக மதிக்காது. சற்றுக் குழம்பி நின்று, கடைசியில் ஒன்றியாகவே போனான்.

உண்மைப் பல்லவியைப் பாடிக்கொண்டு, நாலைந்து தெருக்களில் வாசல் வாசலாக ஏறி இறங்கினான். ஊர் நடப்பே தெரியாத, தெரிந்துகொள்ளாத, கவலைப்படாத காதுகளெல்லாம் அவனுடைய நூல் பஞ்சக் கதையைக் கேட்டன.

நாலு தெருச் சுற்றிக் கால் ஓய்ந்தபோதுதான் குரங்காட்டி சொன்னது சரி என்று பட்டது அவனுக்கு. அந்தச் சின்னப் பேலாவில் பாதியை எட்டத் தவித்தது அரிசி. திரும்பி வந்து திண்ணையில் ஏறியபோது வெயில் நன்றாக ஏறிவிட்டது. காலணாவும் அரையணாவுமாக ஏழெட்டுக் காசு சேர்ந்திருந்தது. பட்டாணிக் கடலையும் வாழைப்பழமும் வாங்கி வந்தான்.

வெயில் கனல் வீசிற்று. புரட்டாசிக் காய்ச்சல் சுள்ளென்று காய்ந்தது. குழந்தைகள் கடலையையும் வாழைப்பழத்தையும் தின்று, தூங்கத் தொடங்கின. குரங்கும் அதையே தின்றது. வெயில் தாங்க முடியாமல், அதுவும் ஒருக்களித்துப் படுத்து அயர்ந்து உறங்கிவிட்டது. பெண்டாட்டியும் உறங்கினாள்.

தூங்கும் குரங்கைப் பார்த்து, நன்னையன் சிரித்துக் கொண்டான். அது மனிதன் மாதிரியே தூங்கிற்று. வெயில் பட்ட வெண் மேகத்தைப் பார்க்க முடியாமல் கண்ணை கையால் மறைத்துக்கொண்டு தூங்கிற்று. அதற்கு வயசு என்ன? ஆறு மாதம், ஒரு வருஷம் இருக்கலாம். அதற்குள் முப்பத்தைந்தும் முப்பதும் ஆன மனிதப் புருஷனின் பெண்டாட்டியையும் மூன்று குழந்தைகளையும் பாதுகாக்கச் சக்தியைப் பெற்றுவிட்டது. இந்தப் பொறுப்பு, தன் தலையில் விழுந்திருப்பது தெரியுமா அதற்கு? எங்கோ பிறந்து வளர்ந்தவனின் குடும்பத்தை நூற்றைம்பது மைலுக்கு அப்பாலுள்ள ஒரு தோட்டிச் சேரிக் குர்னக்கு எப்படிக் காக்க நேர்ந்தது. நன்னையன் வியந்து கொண்டிருந்தான். வயிறு நிறைந்திருந்ததால், துன்பத்தை நினைத்து அழாமல், சிரித்துக் கொள்ள மலர்ச்சியும் தெம்பும் இருந்தன அவனுக்கு. யுத்தம் நடந்தபோது அவன் வாழ்ந்த வாழ்வு, இந்த குரங்குக்குத் தெரியுமா! தினம் மூன்று ரூபாய்க்கு குறையாமல் கூலி கிடைத்தது. அவளும் நூல் இழைத்து எட்டணா, பத்தணா சம்பாதித்துக் கொண்டிருந்தாள். காலையில் எழுந்ததும் கிருஷ்ணா லாட்ஜில் இரண்டு இட்லியும் ஒரு முறுகல் தோசையும் காபியும் சாப்பிட்டு விட்டு, அவளுக்கும் குழந்தைகளுக்கும் வாங்கி வருவான். தாம் தூம் என்று செலவு. சினிமா தவறுவதில்லை. தேவைக்குமேல் வேட்டி, சட்டை, புடவைகள். அந்த நாளில் மாதம் பத்து ரூபாய் எளிதில் மிச்சம் பிடித்திருக்க முடியும். பிடித்திருந்தால்…..

கடைசியில் அவனும் அயர்ந்துவிட்டான்…

இரண்டு மணி நேரம் கழித்துக் கண்விழித்தபோது – தானாகக் கண்விழிக்கவில்லை அவன். குழந்தைகள் அவனை அடித்துத் தட்டிக் கூப்பிட்டன.

“அப்பா, அப்பா. எளுந்திரிங்கப்பா, குரங்கு ஓடிப் போயிடுச்சு. அப்பா, குரங்கு பிடிங்கிட்டுப் போயிடுச்சு”

விறுக்கென்று எழுந்து உட்கார்ந்தான்.

“குரங்கு போயிடுச்சு, அதோ பாருங்க”” என்றாள் அவள்.

“எங்கே?”

குரங்கு எதிர்த்த வீட்டு ஓட்டுக் கூரையின் கூம்பில் உட்கார்ந்திருந்தது.

“பா, பா!” என்று கூப்பிட்டான் அவன்.

“எப்படி ஓடிச்சு?”

“இதுங்களுக்கு விளையாட்டுக் காட்டறதுக்காக அவுத்துப் பிடிச்சுக்கிட்டிருந்தேன். விசுக்குனு பிடுங்கிக்கிட்டுப் போயிடுச்சு.”

“நல்ல கெட்டிக்காரிதான், போ!”

அவள், அவன் இருவரும் அழைத்தார்கள். கடலையும் வாழைப்பழமும் அவர்களுடைய வயிற்றில்தான் இருந்தன. வெறுங்கைகளைப் பார்த்ததும் அது இறங்கி வரத் தயங்கிற்று.

அதற்குள் தெருவில் போன சிறுவர்களும் சிறுமிகளும் கூடிவிட்டார்கள். ‘ஹோ ஹோ!’ என்று இரைச்சல்.

”ஏய், சீரங்கி!”

“ட்ரூவ்!”

கல்லை விட்டு அடித்தான் ஒரு பயல். வைத்திலிங்கம் நறுக்கென்று ஒரு தாவு தாவிப் பக்கத்தில் இருந்த மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறிற்று. உச்சியில் கம்பிகளைப் பிடித்தது.

“போகாதே, போகாதே!” என்று யாரோ ஒருவர் கூச்சல் போட்டார். அவ்வளவுதான். உடம்பு ஒரு முறி முறிந்தது. கிரீச்சென்று கோரமான கூச்சல்! பேயடித்தாற்போலத் தடாரென்று அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தது குரங்கு. இரண்டு துடிதுடித்து, கண்ணை மூடி ஒடுங்கிவிட்டது.

அண்டை வீட்டுக்காரர்கள் கூடினார்கள். தெருவே கூடிற்று. அரைமணியில் ஊரே கூடிவிட்டது. மின்சாரம் தாக்கிய விலாப்பக்கம் அப்படியே கருகிப் போயிருந்தது. எதற்காக என்று தெரியாமல் நன்னையனும் பெண்டாட்டியும் அழுதார்கள். அதைப் பார்த்துக் குழந்தைகளும் அழத் தொடங்கின.

“ஏண்டா, உன் குரங்கா இது?” என்று கேட்டார் ஒரு வயசானவர்.

”ஆமாங்க.”

“எப்படிச் செத்துப்போச்சு?”

நன்னையன் கதையைச் சொன்னான்.

“ஏண்டா, அநுமார் அவதாரம்டா அது. சாக விட்டுட்டியே. இதை வச்சுக் காப்பாத்த முடியலியாடா. பாவிப்பயலே!” என்று அவன் முதுகில் இரண்டு குத்துவிட்டார் அவர். ஊருக்குப் பெரியவர்களில் ஒருவர் போல் இருக்கிறது. ஒருவரும் அவரைத் தடுக்கவில்லை. ஊரெல்லாம் இதை வந்து பார்த்தது.

காளியும் புருஷனும் ஓடிவந்தார்கள். காளி வைத்திலிங்கத்தைத் தொட்டுத் தொட்டு அழுதாள்.

“குரங்கின் கையிலே பூமாலை கொடுத்தாப்பலே பண்ணிட்டீங்களே சாமி!” என்று நன்னையனைப் பார்த்து வெதும்பினாள்.

பரபரப்பு அதிகமாகிவிட்டது. தெருவில் உள்ளவர்கள் மும்முரமாக அங்கும் இங்கும் ஓடினார்கள்.

ஒரு மணி நேரத்திற்குள் ஒரு சின்னச் சிங்காரச் சப்பரம் தயாராகிவிட்டது. சிறிய வாழைக்குலை, ஓலை நறுக்கு, இரண்டு மெழுகுவர்த்தி – சப்பரம் வெகு அழகாக இருந்தது. வைத்திலிங்கத்தைக் காலைத் தொங்கவிட்டு, கையை அஞ்சலி பந்தம் செய்து உட்காரவைத்து ஜோடித்தார்கள். உட்கார வைக்குமுன் குளிப்பாட்டியாகிவிட்டது. நெற்றியில் நாம, திருச்சூர்ன்ணம். மேலெல்லாம் குங்குமம். ஒரு ரோஜாப்பூ ஹாரம்.

பஜனை கோஷ்டி, ஜாலர் ஒலிக்க, ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ பாடிக் கொண்டு முன்னால் சென்றது. நல்ல கூட்டம். நன்னையன் கைதியைப் போல், பஜனை கோஷ்டியில் நடுவில் மாட்டிக் கொண்டுவிட்டான்.

ஒரு சந்துபொந்து விடாமல் ஊர் முழுதும் சுற்றி, ஆற்றங்கரைப் பாதையில் வாய்க்காலுக்குப் பக்கத்தில் நின்றது ஊர்வலம். பஜனை கோஷ்டியின் திவ்ய நாமம் ஆற்றங்கரை வெளியெல்லாம் எதிரொலித்தது. அரை மணி நேரம் ஆஞ்சனேயரின் நாமம் கடலலைபோல் முழங்கிற்று.

அழகாக இரண்டு முழம் உயரத்துக்குச் சிமிண்டு போட்டுச் சமாதி எழுப்பி விட்டார்கள். பின்னால் அரசங்கன்றும் நட்டு நீர் ஊற்றினார்கள்.

திவ்ய நாமம் முடிந்தது. எல்லோரும் விழுந்து வணங்கினார்கள்.

“என்னடா, சும்மா நிக்கிறியே, கொலைகாரப் பயலெ, விழுந்து கும்பிடுடா!” என்று ஊருக்குப் பெரியவர் ஓர் இரைச்சல் போட்டார். பரபரவென்று இடுப்பில் சோமனைக் கட்டி நெடுஞ்சாண்கிடையாக நாலுமுறை எழுந்து எழுந்து விழுந்தான் நன்னையன்.

– கலைமகள் (அக்டோபர் 1951), சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *