பச்சைத்தேவதையின் கொலுசுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 9,141 
 
 

‘அண்ணே ஜெனிஃபர் உங்களைக்கண்டுதான் பம்முறாள், ஆனால் ஆள் சரியான வியாழி தெரியுமோ……….. தெரியாமல் வாயைக்கொடுத்திட்டால் ஊரே அதிர்றமாதிரிக் கெட்ட கெட்ட பாஷைகளாய் எடுத்துவிடுவாள்’ என்றனர் நண்பர்கள். வியாழியானவர் :> 70, 80களில் கீரிமலையில் தன் ரௌடி குமாரர்களுடன் சாராயவாணிபத்தில் கொழித்திருந்த ஒரு வல்லடிவாத்ஸாயனி என்றறிக.

“என்ன ஜெனிஃபர் ‘கெட்டபாஷை’ பேசுவாளா……………….”

“ ஓ………… அவளுக்கு உலகத்துப் பாஷைகள் அனைத்திலும் கெட்டவார்த்தைகள் அத்துப்படி, ‘கூறியதுகூறல்’ இன்றி வகைவகையா எடுத்து மல்டிபிள்பரல் லோஞ்சர்மாதிரி விசிறிக்குத்தினாளென்டா ஒரு கொம்பன் நின்டுபிடிக்கேலாது…….”

எங்கள் கிராமத்தில் மேய்ச்சல் தரவைக்கு மாடுகளைச் சாய்த்துப்போகிற பிள்ளைகள் சிலர் தங்கள் மொழியின் தாற்பரியம் புரியாமல் ஒருவரையொருவர் தூஷித்து அர்ச்சிப்பதைக் கேட்டிருக்கிறேன். யாழ்ப்பாண நாகரீகத்தில அதுவும் வேம்படி ஹை ஸ்கூலில் படித்த ஒரு நிறைகுமரி இந்த மெலனியத்தில ‘தூஷணை’ பேசுவாளென்பதை……….. என்னால் நம்பமுடியவில்லை.

ஊரில் பேருபகாரியாய் (மறைவில் வெகுளி) என்று இருந்ததால் பெர்லினில் எனது அடுக்ககம் ஒரு காலம் வந்திறங்கிய கணிசமான ஆட்களுக்கு ஒரு இலவச இடைத்தங்கல் முகாமாகப் பயன்பட்டது. நண்பர்களாக இருந்த முகவர்களாலும், கண்டவிடத்து முகமனோடு சென்ற முகவர்களாலும், அறிந்த தெரிந்த மற்றவர்கள் மூலமும் பெர்லினில்வந்து இறங்கிக்கொண்டிருந்த இளைஞர்களில் ஒரு பகுதியினர் என் அடுக்ககத்தை நிறைத்துக்கொண்டிருந்தனர்.

பெர்லினை அடைபவர்கள் ஒரு சட்டத்தரணியூடாக அகதி விண்ணப்பஞ்செய்துவிட்டால் அரசு மொத்த மனுதாரர்களில் 10 சதவீதமானவர்களை பெர்லினிலேயே தங்க அனுமதித்துவிட்டு மீதமானவர்களை ஜெர்மனியின் பிறமாநிலங்களுக்கு பகிர்மானஞ்செய்வார்கள். மே-பெர்லின் வந்த முழுப்பேரையும் கொள்ளமுடியாதபடி கிழக்கு ஜெர்மனியால் சூழப்பட்ட ஒரு தீவுபோல் இருப்பதுவும் இந்தப் பகிர்மானத்துக்கு ஒரு காரணமாகும். இப்படியான அகதிகள் பகிரப்படுவதை எம்மவர்கள் தம் பாஷையில் ‘ஸ்டேசன் அடிக்கிறது’ என்றனர். சிலரை ஒரே வாரத்தில் பிறமாநிலங்களுக்கு அனுப்பிவிடுவார்கள், சிலரை ஒரு மாதத்தில், வெகுசிலரை ஆறேழுமாதங்களாகியுங்கூட ஸ்டேசன் அடியாமல் இழுத்தடித்தார்கள்.

ஸ்டேசன் அடிக்கும் வரையில் அகதி விண்ணப்பதாரிகளை பெர்லினில் வதிய பென்ஸியோன்கள் எனப்படும் வாடிவீடுகளிலும், அல்லது இரண்டாம் மூன்றாந்தர ஹொட்டல்களில் படுக்கையும் வாரத்துக்கு 50 மார்க் பணமும் அல்லது கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடிய சான்றுச்சீட்டுகளும் (Voucher) தருவார்கள். என் அடுக்ககத்தில் சனம் நிறைந்துவிட்டால் எமக்கிருந்த 3 கட்டில்களுக்கிடையான இடைவெளிகளில் கம்பளங்களை விரித்துவிட்டு 7 அல்லது 8 பேர்வரையில் படுத்திருப்பார்கள். அடுக்ககத்தில் என்கூட நிரந்தரமாக வதிந்த மற்ற இரு சகோதரர்களுக்கும் இரவுப்பணியாதலால் அவர்கள் இரவில் ஒருமணி அல்லது இரண்டுமணிக்கு எழுந்து சென்றுவிடுவார்கள். அதுவரையில் அவர்களது கட்டில்களில் படுப்பதற்காக மற்ற மறவர்கள் வாசிக்கும் விளக்கு வெளிச்சத்தில் ரம்மி ஆடிக்கொண்டிருப்பார்கள். அல்லது வீடியோவில் பத்தாவது தடவையாக ‘நாயகனையும்’ ‘மும்பாயையும்’ ‘சின்னத்தம்பியையும்’ சத்தத்தைத் தணித்துவைத்துப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

அநேகமாக அகதி மனுச்செய்திருந்த நம்விருந்தினர்களுக்கு ஒவ்வொருவாரமும் விஸா புதுப்பிக்கவேண்டியிருக்கும், நல்வாய்ப்பாக சிலருக்கு 2 அல்லது 4 வாரங்களுக்கான விஸாக்கள் கிடைத்துவிடுவதுமுண்டு. அவர்களுக்கு சமூக உதவிகள் அமைப்பு பிற ஹொட்டல்களில் தங்க சான்றுச்சீட்டுகளைக் கொடுத்தாலும் எம் அடுக்ககத்தில் வடிவான பெட்டையள் இருந்தால் பெடியங்களுக்கு லேசில் அவர்களைவிட்டுப் பிரிய மனசு ஒவ்வாது. அடுப்பைச் சுற்றிவிட்ட கோழிமாதிரி வளைய வந்துகொண்டிருப்பார்கள். அடுக்ககத்தில் பெண்கள் இருப்பதில் எமக்கு என்ன சாதகமென்றால் எங்களுக்கு நேரத்துக்குச் சமைத்துத்தருவதுடன் அங்கே எத்தனைபேர்தான் வந்தாலும் சலிக்காமல் சமைத்தும் போடுவார்கள். இளவட்டங்களுக்கும் சாப்பிட்டுவிட்டுப் பெட்டைகளுடன் சள்ளடிப்பதை விடுத்துக் ஹொட்டல்களில் தனியாய்ப்போய் மொட்டுமொட்டென்று புட்டுக்குத்தி அவிக்க என்ன பைத்தியமா……..?

ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைகள் சொதப்பாமல் அகதிவிண்ணப்பங்கள் எழுதத்தெரிந்தபடியால் அறையில் இருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் வந்து இறங்கிக் கொண்டிருந்த ஏனையவர்களுக்கும் விண்ணப்பம் எழுதிக்குவிக்கும் இந்த ஊழியத்துக்கு ஒருநாளின் 24 மணிநேரம் எனக்குப் போதாமலிருந்தது. விண்ணப்பம் எழுதுவதுபோன்று என் அடுக்ககத்துக்கு ஏதோவொரு தேவையை வைத்துச் சனம் வந்துகொண்டிருக்கும். அவ்வாறு வந்து சனத்தோடு சனமாக ஒரு முகவரினால் அழைத்து வரப்பட்டவர்தான் ஜெனிஃபர். வெய்யில் குடித்துக்கறுத்திருந்த தேகத்தின் மிடுக்கும், ‘பொப்’பாக வெட்டியிருந்த கேசமும், ஜீன்ஸையும் குதிப்பையும் பார்த்தால் அவள் ஏதோவொரு விடுதலை இயக்கத்திலிருந்து நேராக வருபவளைப் போலிருந்தாள், ஆனால் நிஜத்தில் அவளோ போராட்ட இயக்கங்களை வெறுப்பவளாக இருந்தாள். அதுக்கான காரணமும் அவளிடமிருந்தது. வெகுவிரைவில் அச்சமின்றிச் சோஷியலாக எம்முடன் ஒரு பையனைப்போல ஒன்றிவிட்டிருந்திருந்தாள். மெத்திருக்கையில் வேறு இளைஞர்கள் அமர்ந்திருந்தாலும் அதில் கிடைக்கும் ஒரு சிறுநீக்கலுக்குள் பொத்தென்று அமருவாள், இடைகழிப் பாதையை யாராவது மறித்துக்கொண்டிருந்தால் பேருந்துக்குள் செய்வதைப்போல் பக்கவாட்டு ஊடம்பால் ஒரு இடியிடித்துவிட்டு முன்னேறுவாள்.

ஜெனிஃபர் வந்த நாளிலிருந்தே அடுக்ககத்தின் அனைத்து வேலைகளையும் தன்னதுபோல் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தாள், அவள் கவனித்துச் செய்தவற்றுள் அடுக்ககத்தின் சுத்தம் முதலானது. ஸ்டூலைவைத்து ஏறி நின்றுகொண்டு எழினிகளைக் (Curtain) கழற்றிக் கழுவிக்காயவைத்தாள். சாளரங்களின் கண்ணாடியை சோப்பு நீரினால் கழுவி செய்தித்தாளினால் துடைத்தாள். செய்தித்தாளினால் சாளரக்கண்ணாடியைத் துடைக்கலாம் எனும் சூக்குமத்தை அவளே கற்றுத்தந்தாள். குசினி, குளியலறை எல்லாம் அவள் வந்தபின் பளபளத்தன. ஜெனிஃபர் வீட்டின் தரைவிரிப்பு பூராவும் தனியாகத் தூசுறிஞ்சியினால் உறிஞ்சிக் களைத்துப்போயிருந்த ஒரு சமயம் நான் அவளுக்குப் பிடித்தமான முறையில் கடுஞ்சாயத்துடனான பாற்தேநீர் தயாரித்துக்கொடுத்தேன். நன்றிப்பெருக்கில் என்னைக்கட்டி முத்தமிட்டாள். அப்படி அவளுக்கு பிரியம்கூடும்போதெல்லாம் உரிமை எடுத்துக்கொண்டு என்னிடம் ஒருமையில்தான் பேசுவாள்.

குசினியில் நெடுநேரம் நின்றபடி சமைத்திருந்ததாலோ, இதர துப்புரவுப்பணிகளாலோ அவளுக்கு உடம்புக்கு ஓய்ச்சலாயிருந்து அவ்வேளை கட்டில்கள் எதுவும் காலியாயிருக்காவிட்டால் “மெஸூயூ கொஞ்சம் தள்ளிப்படு” என்று என்னை அதட்டிவிட்டு என் கட்டிலின் விளிம்பில் உடம்பை ஒருக்கழித்துச் சாய்ப்பாள். நெடுநாட்கள் பழகிய நாய்க்குட்டிபோல மற்றவர்களிடத்து இருப்பதைவிட அவ்வெகுளிக்கு என்னிடம் துளியும் பயமில்லை.

அடுக்ககத்தில் இருந்தவர்கள் என்னை ‘அண்ணா’ என்றோ மாஸ்டர் என்றோ அழைக்க, ஜெனிஃபர் மட்டும் இலங்கையிலேயே தெரிந்துகொண்டாளோ, அல்லது வரும் வழியில் எங்காவது பொறுக்கினாளோ, என்னை ‘மெஸூயூ’ என்று அழைத்தாள். (அதன் மூலம் ஃப்ரெஞ் என்றறிக) அதுவும் ‘மிஸ்டர்’ என்பதைப்போல் மரியாதையான விளியே என்பதாலும், ஜெர்மனியில் பரிச்சயமான வார்த்தை என்பதாலும் நான் ஆட்சேபிக்கவில்லை.

காலையில் எவரும் இயற்கைக் கடன்களுக்கோ, முகம்கழுவவோ குளியலறையைப் பாவிக்கலாமே தவிர குளிப்பு, துவைப்பு அனைத்தும் இரவில்தான் பண்ணவேண்டுமென்று அவர்களுக்கு நேரசூசிகை போட்டுக்கொடுத்திருந்தேன்.

குளியலறைக்குள் மேலதிகமாக நெகிழியிழைகளைக் கட்டி அவர்கள் உடைகளை உலரவிட வசதிகள் செய்திருந்தேன். கழுவும் உடுப்புகளில் காற்சட்டை, போர்வைகள்போன்ற தடிமனானவற்றைக் குளியலறையிலும், இடைகழியிலும் இருந்த கணப்புகளில் (Heizung-Radiator) போட்டால் அவை விரைவில் உலர்ந்துவிடும்.

ஜெனிஃபரிடம் உயர்ரகத்திலான உடுப்புகள் எதுவும் இருக்கவில்லை. ஷிஃப்ற் வகையிலான சில குட்டைப் பாவாடைககளும், இரண்டோ மூன்று ஜீன்ஸ்களும், 2 கவுண்களும், கொஞ்சம் டீ-ஷேர்ட்டுகளுந்தான் வைத்திருந்தாள். என்ன பூரிப்போ பெர்லினுக்கு வந்த 3 மாதங்களில் கொஞ்சம் சதைபோட்டிருந்தாள், ஆதலால் அவள் ஜீன்ஸ்கள் எல்லாம் உடலோடு ஒட்டிப் பிடித்துக்கொண்டிருந்தன. சோஷலில் கொடுத்த சான்றுச்சீட்டுக்களை வைத்தும் அவள் ஏனோ புது உடுப்புகளை வாங்க வினைக்கெடவில்லை. ‘கஞ்சல்’ என்றுங் கணிக்கமுடியாது, கொஞ்சம் ருசியாகச் சமைக்கவும் சாப்பிடவும் விருப்பம், ஆதலால் தனக்குக் கிடைத்த அத்தனை சான்றுச்சீட்டுகளுக்கும் மளிகைப்பொருட்களும், மீன், இறைச்சி, கறிவகைகளும் சலவைத்தூளுந்தான் வாங்கினாள். யாழ்ப்பாணத்துக்கு பன்றிவிரிச்சானிலிருந்தோ, பரவிப்பாஞ்சானிலிருந்தோ முதல்தடவையாக வந்தவர்களானாலும், மாலையானதும் தாமாகவே அங்கே சராயம்விற்கும் வீடுகளைச் சுட்டிப்பாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதைப்போல் தாமாகவே உடுப்புக்கடைகளைக் கண்டுபிடித்து சோஷல் அலுவலகத்தால் திரும்பும்போதே கிடைத்த சான்றுச்சீட்டுகள் அனைத்துக்கும் உடுப்புக்கள் வாங்கிக்கொண்டுவரும் மாதரசிகளும் இருந்தார்கள். நானும் ஜெனிஃபருக்கு உடுப்புகள் எதையும் வாங்கிக்கொடுக்கவில்லை. அப்படியான அன்பளிப்புகள் பெண்களிடமிருந்து தவறான முன்முடிவுகளையும் பின்விளைவுகளையும் கொணர்ந்து சேர்த்துவிடும். அப்படி நான் ஒருத்திக்கு உடுப்புகளை வாங்கிக் கொடுத்துவிட தனது ஸ்டேசன் போய்ச்சேர்ந்ததும் எனக்கு ஒரு சிப்பம் காதல் இலிகிதங்கள் வரைந்தாள்.

ஒரேயொருநாள் மட்டும் ஜெனிஃபர் “ மெஸூயூ……. இங்கே வெள்ளிச்சாமான்கள் வாங்கக்கூடிய கடைகளும் இருக்கா” என்று கேட்டாள்.

“ஏம்மா…. உன்னுடைய அரைமுடி சலங்கையை விற்கப்போறியோ” என்று நான் தமாஷ்பண்ணவும் கடுப்பானவள், அந்தக்கதையையே ‘தொப்’பெனப் போட்டாள். பிறகொருநாள் அவள் ஒரு சாந்த சொரூபியாக இருந்தபோது நானாகவே “ ஜெனிம்மா வெள்ளிக்கடையில என்னடா வாங்கப்போறாய்” என்றேன் தண்மையாக.

“ இல்லை மெஸூயூ…….. எனக்கு கனநாளாய் வெள்ளிப்பாதசரம் கட்டவேணுமென்று ஒரு சின்னச்சோட்டை (விருப்பம்)………. தெரியுந்தானே எங்க பக்கத்தில கிறிஸ்தவாக்கள் பெரிசாய்ப் ஒருதரும் போடாயினம், நான் தனியக் கொலுசைக்கட்டிக்கொண்டு ‘சிலுங்’‘சிலுங்’கென்று திரியச் சனம் விடுப்பாய்ப் பார்க்குமென்ற கூச்சத்தில விட்டிட்டன், அதுதான் இங்க இருக்குமென்றால் ஒரு செற் வாங்கலாமோவென்று ஒரு சிறு அப்பியாசம்” (அபிப்பிராயம்) என்றாள்.

“ இங்கே சும்மா நிக்கல் ப்ளேற்றிங் செய்த மட்டமான தகரக் கொலுசுகள்தான் இருக்கும், நான் சிங்கப்பூருக்கோ, லண்டனுக்கோ போகும்போது சுத்தமான வெள்ளிப்பாதசரம் செல்லத்துக்கு வாங்கியந்துதாறன்……..சரியா” என்று வாக்குறுதி கொடுக்கவும் ஒரு சிறுமியைப்போல மலர்ந்தாள். அதன்பிறகு அவள் வெள்ளிப்பாதசரக்கதை எதையும் எடுக்கவில்லை.

ஜெனிஃபர் எளிமையாகத்தான் உடுத்துவாள், கண்ணுக்கு மைதீட்டுவதோ, உதட்டுக்கு, நகத்துக்கு சாயங்கள் பூசுவதோ, தளுக்கிமினுக்குவதோ இல்லை, எதிர்வீட்டு, பக்கத்துவீட்டுப்பெண் மாதிரி எளிமையாக இருப்பாள். ஆனால் எத்தனைபேர்தான் கூட இருந்தாலும் தன் கால்களை ஒன்றின்மேல் ஒன்றாகப்போட்டுக்கொள்ள மட்டும் தயக்கமில்லை. அடுக்ககத்தில் இருந்த சிலருக்கு அந்தக்கால்போடுகையும், அவளின் சுதந்திரமும் பிடிக்கவில்லை. அவள் தன் கால்களை எங்கள்மேல் போடாமல் வேறு எங்கே வேண்டுமானாலும் போடட்டுமேன், அதில எமக்கென்ன வியாகூலம்?

வேறொன்றையும் ஜெனிஃபர் செய்தாள். மேற்சொன்ன கணப்புகளில் தன்னுடையை மார்புக்கச்சை, நீர்க்காவியேறிய இடுப்புக்கச்சைகளைத் தயக்கமின்றிப் பரவிக் காயவிடுவாள். மற்றப்பெண்கள் எவரும் இப்படி உள்ளாடைகளை வெளியாகக் காயவிடமாட்டார்கள். தமது பிற உடுப்புக்களினால் சுற்றி மறைத்தோ மூடிஉள்ளாகவோதான் உலரப்போடுவார்கள். இது அவளின் வெள்ளந்தித்தனத்தாலா, தைரியத்தாலாவென ஆராயாமல் ஒருநாள் அவளைத் தனியாக அழைத்து “ஜெனி……… இப்பிடி இத்தனை குத்தியன்கள் இருக்கிற இடத்தில நீ வெட்டையாய் உன்னுடைய ப்றாவை, பொடீஸை, நிக்கரை எல்லாம் காயப்போடாதை.” என்றேன்.

என்னை ஒரு விநோத விலங்கைப்போலப் பார்த்தாள். ஒன்றுஞ்சொல்லவில்லை. ஆனால் அதன் பின்பும் அவள் தன் பரவிப்போடும் சாங்கியத்தை நிறுத்தவில்லை. மீண்டும் ஒருமுறை அவளிடம் அதுபற்றிச் சொன்னபோது………

“இவ்வளவு முற்போக்குக் கதைக்கிற மெஸூயூ…….. ஏன் போடப்படாது என்றதையும் விளப்பமாய்ச் சொல்றது ” என்றாள்.

“ முற்போக்கு ஒருபக்கம் கிடக்கட்டும்……சரி. இங்கே எல்லாரும் இளந்தாரிக்குத்தியன்கள் உன்னுடைய நிக்கரை, பொடீஸை, ப்றாவைப் பார்த்தால் அவங்களை அது ’டிஸ்றாக்ட்’ பண்ணும், ஈஸியாய் ‘எக்ஸைற்’ ஆகிடுவாங்கள் பேபி.

“‘எக்ஸைற்’ ஆக்குமென்றால்”

“அது அவங்களுக்கு உள்ளுக்குக் கிளர்த்துமடி”

“ கிளர்த்துமென்றால்…………..”

“உண்மையாய்த்தான் உனக்குப்புரியல்லையா……….. இன்னும் டீப்பாய் விளங்கப் படுத்திறதென்றால்…….. என்ன கொஞ்சம் பச்சையாயிருக்கும் பரவாயில்லையா……..”

எனக்குத்தெரியாத ‘பச்சையா’ என்கிறமாதிரி என்னை அலட்சியமாகப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

“ அதைப்பார்த்தால் அவங்களுக்கு ஹோமோன்கள் துள்ளிக்குதிக்கும், ஹோமோன்கள் குதிச்சால் இளரத்தம் உறுப்புகள்ல பாய்ந்து உந்தும், மனதின் பாலன்ஸ் அன்ட் கொன்ட்றோல் போயிட்டா…………. உன்னுடைய கன்னிமைக்கு இஞ்சை –க்யாரண்டி- இருக்காது, சரியா…….. ஆபத்துக்கண்ணா.”

சொல்லிவிட்டு ‘வெட்கத்தில் உறைந்துபோயிருப்பாள்’ என்றெண்ணி நான் எதிர்ச்சாளரத்தின் எழினியில் ஓசையில்லாமல் பறந்துகொண்டிருந்த கடற்பறவைகளைப் பார்க்க, ஜெனிஃபரோ

“ அட நீங்கள் ஒன்டு………….. , அவங்கள் நல்லாய் எழுப்பிவைச்சு உலையட்டுமென்டுதானே நான் வெட்டையிலபோடுறன் ” என்று விட்டுக் கண்ணடித்தாள்.

எனக்கு நெற்றிப்போட்டில் கிரனைட்டால் அடித்தமாதிரி அதிர்ந்து கிறுகிறுத்துச் ஸ்வாதீனம் திரும்ப நேரமாச்சு.

இப்படித்தான், எல்லோரிடமும் தமாஷாகவும், வெளிப்படையாகவும் பேசுவாள். ஜெனிஃபர் எம்மோடு இருந்தகாலத்தில் அடுக்ககத்தில் ஜெயசீலி, சிவமலர் என்று இரு இளம்பெண்கள்கூட இருந்தனர். அவர்கள் இருவரிடமும் “கொப்பன் கோத்தாவுக்கு சீதனப்பாரம் குறையும், இங்ஙினையே நல்ல பெடியங்களாய்ப் பார்த்துப் அமுக்குங்கடி” என்றாளாம்.

*

அகதி விண்ணப்பம் செய்துகொண்ட பெண்களிருக்கும் சில ஹொட்டல்களில் நம்மவூர்ப்பெண்களுக்கு மொறொக்கானியர்களும், லெபனான்காரர்களும் ஃபோர்ணோ படங்களைக்காட்டித் தங்கள் அறைக்குள் வந்துபடுக்கச்சொல்லி அழைத்த சம்பவங்கள் எல்லாம் பெர்லினில் நடந்திருக்கின்றன.

இப்பெண்களை பெர்லினில் குளிரில் இதுபோன்ற பென்ஸியோன், டொமிசிலென்று (சுவர்களால் பகுக்கப்படாத பொதுவிடுதிகள்) அலையவிடாமல், என்செலவில் வாடகை, மின்கட்டணங்கள் செலுத்தி காபந்தோடு தங்க அனுமதித்திருந்தால் ‘இவர் ஏஜென்டுகளிடம் கொமிஷன் வாங்கிக்கொண்டுதான் பெட்டையளை அறையில வைச்சு ஆதரிக்கிறார்’ என்கிறமாதிரிக் கதைகளும் காற்றில் இருந்தன, எதிர்த்து எதுவும் பண்ணமுடியாது.

அடுக்ககத்திலிருந்த பெண்ணொருத்தியின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஜெர்மனிக்குவந்து Saarbrücken இல் ஒரு காய்கறிகளைத் தகரத்தில் அடைக்கும் தொழிற்சாலையில் வேலைசெய்துகொண்டிருந்தார். கொஞ்சம் பணம் கையில் புழங்கியதால் திமிரோடிருந்த அம்மணிக்கு எனது இந்த நேரசூசிகையும் ஒழுங்கும் பிடிக்கவில்லை.

ஒருநாள் “நாங்கள் எல்லாம் ஏஜென்ட் கேட்ட காசு கொடுத்துத்தான் வந்தனாங்கள், நீங்கள் சிறைக்கைதியளைப்போல எங்களைக் கட்டுப்பாடுகள் பண்ணத்தேவையில்லை” என்றார். நான் அவரை இருத்திவைத்து விஷயத்தை விளங்கபடுத்தினேன். “ உங்களுடைய ஏஜென்டை எனக்கு யாரென்றுந்தெரியாது…….. நீங்கள் ஏஜென்ட்டுக்கு கொடுத்த பணத்தில ஏதோ எனக்கும் கொமிஷன் வருகுது என்கிற நினைப்பில கதைக்கிறியள் அக்கா, நான் எங்கட பெண்கள் ஹொட்டல்ல தெருவில பாகிஸ்தானியரோடையும், அல்ஜீரியா, மொரொக்கன்களோடையும் கிடந்து மாயவேண்டாம் என்றுதான் என்னுடைய வீட்டில உங்களைத் தங்க அனுமதிச்சிருக்கிறன், நீங்கள் விரும்பினால் எந்த நிமிஷமும் வெளியேறிப்போய் லுக்ஸூறியஸ் ஹொட்டல்களில தங்கலாம்…………. யாரும் உங்களை இழுத்துப்பிடிக்கமாட்டினம்.” என்று கடுமையான ஆவிவிட்டன். ’கப்சிப்’என்று ஒடுங்கிப்போய் அன்று வாயைமூடினவர்தான் மறுபடியும் அவருக்கு ஸ்டேசன் அடிச்சு Saarbrücken க்கு புறப்பட்ட அன்றுதான் என்னிடம் பேசினார்.

*

அடுக்ககத்திற்குள் ஒருநாள் நான் வந்து நுழைகையில் அங்கே ஒரே ஆட்டமும் பாட்டுமாக இருந்தது. இடைகழியில் ஏலக்காயின் சுகந்தமான மணம் மிதந்துகொண்டிருக்க இளைஞர்கள் கையில் வைத்திருந்த வைன்கிளாஸ்களை மறைப்பதற்கு அந்தரப்பட்டனர். “என்னப்பா விஷேசம் இங்கே யாரும் வயசுக்கு வந்திட்டாங்களா” என்றேன். ஜெனிஃபர் “ இல்லை மெஸூயூ இன்றைக்கு எனக்கு 25வது பிறந்தநாள்” என்றாள் வெட்கத்துடன்.

“ அடடா……….. தெரியாமப்போச்சே, தெரிஞ்சிருந்தால் ஒரு கிஃப்ட் வாங்கியாந்திருப்பனே………” என்றுவிட்டு ஏதாவது வாங்கிவரலாமென்று புறப்படவும் என் கையைப்பிடித்திழுத்து. அப்படியொரு செலவுசித்தாயங்களும் உங்களுக்கு வைக்க வேண்டாமென்றுதான் சீக்கிரெட்டாய் வைச்சிருந்தேன்” என்று மறித்தாள். ஆனாலும் அவளுக்கு அடுத்தநாள் ஃப்றீ சைஸில் ஒரு சுடிதார் செட் வாங்கி ஒரு சொக்கிளேட் மட்டையோடும், பூச்செண்ட்டோடும் சேர்த்துக் கொடுத்தேன். ஒரு சிறுமியைப்போலச் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து என்னை கட்டிக்கொண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

அடுத்தநாள் ஜெனிஃபர் “மெஸூயூ உவள் ஆனந்தவல்லி அவர் இங்கிலிஷால குத்தி எல்லாரையும் கவுத்துப்போடுவர்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள், உங்களில நல்லாய் மனப்படுறாள்போல கிடக்கு, பாவம் நல்ல பிள்ளை, பேசாமல் அவளைக்கட்டுங்களன் ” என்றாள்.

“அதெல்லாம் சரிப்பட்டு வாறவிஷயமல்ல, வேற விஷயங்கதை………”

“ ஏன் ஏன் ஏன் மெஸூயூ……..”

“ அவளின்ர மாமனை ஊரிலேயே எனக்குத்தெரியும், யாரோவொரு பெடியனுக்குக் கட்டிக்கொடுக்க இவளைச் செலவழிச்சுக் கூப்பிட்டிருக்கிறான். அந்த ஊட்டுக்குள்ளால என்னை நீ விட்டுக் கிடாவச் சொல்றதென்ன.”

“அவளுக்கு இப்ப என்ன கலியாணமா முடிஞ்சுபோச்சு, கட்டிக்கொடுக்கலாமென்றுதானே கூப்பிட்டிருக்கிறார்………….. இன்னும் கட்டிக்கொடுக்கேல்லயே. பெடிச்சி நல்லாய் உங்களில ஆசைப்படுது மெஸூயூ, நல்ல குணமான பெடிச்சி, சும்மா முயல்குட்டிமாதிரிப் பதுமையாய், அமைதியாய் இருக்கிறதைப் பார்க்க எனக்கே ஆசையாய்க்கிடக்கு, ‘ஓம்’ என்டுசொல்லுங்கோ……. நான் புறொப்போஸ் பண்றன்.”

“உனக்கு ஆசையாய் இருந்தால் நீயே அவளைக் கட்டிக்கொண்டு வைச்சுப்பிசை, இங்கே ஆட்கள் அப்படிக் கட்டீனந்தானே….”

“ப்ளீஸ் மெஸுயூ ப்ளீஸ்….. ப்ளீஸ்….. ப்ளீஸ்…….”

“இப்ப உதைவாங்காமல் எழும்பிப்போறேல்லை என்று இருக்கிறாய்போல………..” என்றபடி மென்னிருக்கையால் எழுந்தேன்.

எழுந்தோடியபடி “ஆனந்தவல்லி மட்டுமல்ல…… மெஸுயூ, இன்னும் சுபாங்கி லதாவென்று இரண்டுமூன்று குட்டீஸ் எனக்குச் சொல்லிப்போட்டினம்………… நீ சச் அன் அட்டிறாக்டிவ் பேர்ஸனாம்……….. ஏண்ணை இத்தனை லட்டுமாதிரிக் குட்டிகள் எல்லாம் உன்ர ஃப்ளாட்ஸில தரிச்சுப்போறாளவையே…….. ஒருத்தியைக்கூடவா உனக்கு மடக்கத்தோணேல்ல……” என்றாள்.

“ வாற வந்த ஒவொருத்தியிலயும் ஜொள்ளுவிட்டிருந்தால் நான் மாசம் ஒருத்தியைக் கட்டவேண்டியிருந்திருக்கும். ஆனால் அது அப்பிடி இல்லடா………. என்னால முடியாது, என்னுடைய பிரச்சனை வேறுவிதம், எங்க வீட்டில எனக்கு மூன்று அக்காக்கள் இன்னும் கட்டுப்படாமலிருக்கினம், அவைகளுக்கு ஒரு வழிபண்ணிய பின்னாலதான் நான் எனக்கான வல்லியைப்பற்றி யோசிக்கலாம்” என்றேன். அவள் நம்பியதுமாதிரித்தான் இருந்தது.

அடுத்தவாரம் ஜெனிஃபருக்கு விஸா புதுப்பிக்கவேண்டியிருந்தது. அன்று எனக்குப்பணி விடுப்பாகையால் அவளை நானே அழைத்துச்சென்றேன். அங்கே அவளுடன் தனிமையில் அதிகநேரம் அமர்ந்திருக்க நேர்ந்தபோது சொன்னாள் “ மெஸுயூ யூ ஆர் குவைற் டிஃபெறென்ட் அன்ட் எ ஜென்டில் பெர்ஷன் ” என்றாள்.

“ தாங்ஸ் டியர், அன்ட் மே ஐ நோ……. த கோஸ் ஒஃப் த கொம்பிளிமென்ட்………….. ”

“நீங்கள் இப்படிச் சொந்தக்காசைச் செலவழித்து தமிழ்ப்பெண்களுக்கு சத்திரம் சாவடி நடத்திறியள்…….. பெர்லினைவிட்டு மாறிட்டா அவையள்ல யார் உங்களை நினைச்சுக்கொண்டு இருக்கப்போயினம்……… எனக்கும் மூன்று அண்ணாக்களும், ஒரு தம்பியும் இருந்தாங்கள்……….. தம்பி சொல்லுக்கேளாமல் இயக்கத்துக்குப்போய் குறுக்கால போயிட்டான். அம்மா அவனுக்கு இரண்டு வயதாயிருக்கும்போதே காயாசுவாதம் கண்டு இறந்துபோயிட்டா. அண்ணாக்கள் எவனுமே ஜெனிஃபருக்கு ஒன்று ஆனபின்னால் நாம கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று காத்திருக்கவில்லை” என்று சின்னதாகப் பெருமூச்சு விட்டுவிட்டு “என்னிலும் ஒரு சின்னப் பிழையிருக்கு வீட்டுக்குவீடு வீடியோவில் படங்காட்டிக்கொண்டு திரிந்த சிவப்பாயிருந்த ஒரு நாதாரி ‘லவ்’வென்று விரிச்ச வலைக்குள் கொஞ்சநாள் விழுந்து தியங்கிப் போய்க்கிடந்தன். தங்கைச்சி ‘லவ்’ பண்றாள், அப்ப மாப்பிள்ளை சீதனம் ஒன்றும் டிமான்ட் பண்ணமாட்டான் என்று அண்ணாக்களும் தங்கள் தங்கள் பாட்டைப்பார்த்து நழுவிவாங்கள். என்ர றோமியோவும் எங்கவீட்டில இருந்து எதுவும் பெயராதென்று தெரிஞ்சவுடன இராப்பகலாய் சினிமா காட்டிக்கொண்டிருந்த தோஷத்தால “ உன்ர நிழலைப் பிரிஞ்சாலே என்னால உயிர்வாழமுடியாது, வதங்கிப்போடுவன் ஹனி” என்று சினிமா வசனம் பேசினவன் நைஸா கழட்டிக்கொண்டு மாறிட்டான். என்னை விட்டுப்போய் கிரேக்கக் கப்பல்லை எங்கேயோ கொழுவினவன் பிறகு வந்து யாரையோ கட்டிக்கொண்டுபோய் இப்போ இத்தாலியிலயோ சைப்பிரஸிலேயோ செற்றிலாயிட்டானாம்.”

தங்கையின் பால்யம் நழுவிப்போவதில் அண்ணன்மாருக்குக் கவலையில்லை. ‘உயிர் நீ,’ ‘மயிர் நான்’ என்று காதலித்தவனும் தருணத்தில் உதறிவிட்டு மேற்செல்வான். ஜெனிஃபர் என்னைவிடவும் ஆழமாக வாழ்க்கையைப் புரிந்துகொண்டிருந்தாள். அவள் சொல்லும் நடைமுறை அனுபவங்களைக் கேட்பதைத்தவிர அவளுக்குச் சொல்ல என்னிடம் பொருத்தமான வார்த்தைகள் இருக்கவில்லை.

நிரம்பச் சோஷியலான ஜெனிஃபரை அவள் சாந்தமாக இருக்கும் நேரங்களில் யாராவது கட்டிப்பிடித்தாற்கூட ‘பாவம்…….. ஆசைப்படுறான், மண்ணுக்கைபோற உடம்பைப் அளைஞ்சிட்டுப் போகட்டும், என்று இலேசாய் எடுத்துப்பாள். அவள் மனம் நொந்தோ உடைந்தோ இருக்கையில் யாரும் சீண்டினால் வெடித்துச் சீறுவவாள்.

ஜெனிஃபரைப் பெரும் ஆசாரசீலி என்றுஞ்சொல்லமுடியாது. நாங்கள் ஒன்றாக மதியம் சாப்பிட மேசையில் அமர்ந்தால் சிலவேளைகளில் மட்டும் ஜெபம் சொல்லுவாள். அவள் ஜெபம் சொன்னாளானால் அதை முடிக்குமட்டும் நாங்களும் சாப்பிடாமல் காத்திருந்து ‘ஆமென்’ சொல்லியே சாப்பிட ஆரம்பிப்போம்.

அப்படி ஒரு நாள் மதியம் நாம் எல்லாம் ஒன்றாக இருந்து கோழியிறைச்சியுடன் சோறு சாப்பிடும்போது ஜெனிஃபருக்கு நல்லபசியோ இல்லை ஜெபம்சொல்லத் தோன்றவில்லையோ உடனே சாப்பிட ஆரம்பித்தாள். நான் “ஜெனி உனக்குப் பதிலாக இன்றைக்கு நான் ஒரு ஜெபம் சொல்லட்டுமா…….. கொஞ்சம் தமாஷாக இருக்கும் அதுக்காக நீ கோபித்துக்கொள்ளமட்டும் கூடாது” என்றேன்.

“அது உங்கள் ஜெபம், உங்கள் வாய்……. அதுக்கு கட்டுப்பாடுகள் போட நான் யார், யூ ப்றொஸீட் மெஸூயூ” என்றாள். முன்னர் எப்போதோ ஒரு பத்திரிகையில் படித்து மனதில் பதிந்துபோயிருந்த அந்தக் கவிஞனின் ஜெபத்தை ஜெபித்தேன்.

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே

நின் நாமங்கள் எல்லா லோகங்களிலும்

ஸ்தோத்தரிக்கப்படுவதாக…………….

இன்றைய கோழிக்குழம்பு

சுவையாக இருந்தது

அக்கோழி தேவரீரின் திருப்பாதங்களை

அடைந்திருப்பின் அதை மீளவும்

எமமிடமே தாரும்.

*

ஆமென்.

ஜெனிஃபர் வெடித்துச் சிரித்தாள். மற்றவர்களும் சிரிப்புத்தான். ஜெனிஃபருக்குச் சிரிப்பில் கண்கள் கலங்கிச்சொட்டவும் மீண்டும் முகங்கழுவிவிட்டு வந்தே சாப்பிடவேண்டியிருந்தது.

பகலில் அவ்வளவு சிரித்தவளை, அன்றிரவு கவனித்தேன். மென்னிருக்கையில் தூங்காமல் நெடுநேரம் விழித்திருந்தாள், “ஏம்மா ஜெனி என்னபண்றாய் இவ்வளவும் ஏன் தூங்கவில்லை” என்றுவிட்டு விளக்கைப்போட்டால் அவள் கண்களிலிருந்து வழிந்துகொண்டிருப்பது தெரிந்தது.

“ஏண்டா……..என்னாச்சு, யாரும் உன்னை ஏதும் சொன்னாங்களா…” என்றேன்.

“ இல்லை மெஸுயூ…… இன்றைக்கு அமலன்ர கீ-பேர்த்டே, அவனை மறந்துவிட்டு என்னால தூங்கமுடியல்லை, ‘அவன் சின்னப்பெடியன் இன்னும் படிக்கவேணும், ஏதோவொரு துடிப்பில தெரியாத்தனமாய் இயக்கத்துக்கு வந்திட்டான்……. தயவுசெய்து அவனை விட்டிவிடுங்கோ………..’ ‘கிட்டு’ம் கிட்டாதென்று அந்த முகாமிலிருந்த ஒவ்வொருத்தனிட்டையையும் எப்பிடிக் கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடின்னாங்கள், அவங்கள் விடவேயில்லை, ஆறுமாதத்தில சூரியக்கதிர் தாக்குதலுக்கு புலியள் வன்னிக்குத் தெறிச்சு ஓடேக்க திருப்பித்தாக்கென்று எங்கட குழந்தையை அனுப்பி வழியிலேயே கொன்றுபோட்டாங்கள் நாதாரியள்……….”

அன்று அவள் ஏன் ஜெபம்செய்யவில்லை என்பதுவும் புரிந்தது. அத்தனை குழப்பத்திலும் கோபத்திலும் கனன்றுகொண்டிருந்தாள். அவளைச் சமாதானப்படுத்தித் தூங்கவைப்பது பாடாக இருந்தது.

பிறகொருநாள் அவள் தனித்திருந்தபோது

“ அது சரி…….. ஜெனி உன் ஜெபங்கள், ஸ்தோத்திரங்கள் எல்லாம் சரிதான், ஆனால் தூஷணைத் தேன்தமிழும் அப்பப்ப எடுத்துவிடுவாயாமே……… உண்மையா………. இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான விஷயங்களாச்சே….” என்றேன்.

“உண்மைதான்…… மெஸூயூ, சொறி…..உங்களுக்கும் வந்திட்டுதே அது, யார் உங்களுக்குச் சொன்னது?”

காந்தன்தான் சொன்னான்.

“ எனக்குத்தெரியும் அந்தப்பன்னாடைதான் சொல்லியிருப்பான்…… அவனை ஒருநாள் பேசின்னாந்தான்”

“ஏன்……..என்ன நடந்தது, உன்னில் ஏதுஞ்சொறிஞ்சானோ……..?”

“ஒருநாள் கிச்சினில சமைச்சுக்கொண்டிருக்க உள்ளவந்தவன் எனக்குக் குண்டியில தடவினான், நானும் தற்செயலாய் பட்டதாக்கும் என்று பேசாமல் இருந்தன். ‘சரக்கு படியுதாக்கும்’ என்று நினைச்சானோ…….. அல்லத் தனிச்சு வெளிக்கிட்டு வந்தவள்தானேயென்ற கணிப்பிலயாக்கும் மற்றநாளும் மெல்லத் தடவிப்பார்த்தான், குடுத்தனே முறையான சங்கீர்த்தனம்…… அதுக்குப்பிறகு காய் நல்ல அடக்கம், ப்ளீஸ் கேட்டுப் போடாதையுங்கோ…. மெஸுயூ இப்ப ஆள் நல்ல மடக்கமும் மரியாதையும். நீங்கள் சொன்னமாதிரி எல்லாம் ஹோமோன் குளறுதான். பெடி என்ன செய்யும். ஒன்றும் கண்டுக்காதையுங்கோ, விட்டிடுங்கோ திருந்திடுவான். ஒருநாள் என்னுடைய கோவம் தணிஞ்சபிறகு அவனைக்கூப்பிட்டுச் சொன்னன்: ‘தம்பி கையில விரலுள்ள மனுஷர் எல்லாராலேயும் தடவலாம், நீங்க சும்மா……. தடவினாப்போல ‘சரக்குகள்’ உங்கட மடியில வந்து பொத்தென்று விழுந்திடாளவை காணும்………. அவளவை மனசிலயும் இடம்பிடிக்கவேணும்’ என்று. ‘ஐயோ……… அக்கா ஒரு உணர்ச்சித்தளம்பல்ல தெரியாமல் பண்ணிட்டன், மன்னிச்சிடுங்கோ’ என்று அழுதான், இனித்திருந்திடுவான்.” என்றாள்.

*

எனக்கும் அநேகமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிவிடுப்பிருக்கும். ஒரு சனிக்கிழமை ஜெனிஃபர்:

‘மெஸூயூ நான் மட்டன் பிரியாணி செய்யிறதில எக்ஸ்பேர்ட் கண்டியளோ…………, நாளைக்கு உங்களுக்கும் லீவு, நான் மட்டன் பிரியாணி போடப்போகிறேன், நீங்கள் ஒரிடமும் டேற்றிங்ஸ் வெளிக்கிடாமல் அடக்கத்தோட வீட்டில இருந்து என்னுடைய பிரியாணி லஞ்சை அவசியம் சாப்பிட்டே ஆகவேண்டும்’ என்று அறிவித்தாள். ‘வேண்டிய சாமான்கள் எல்லாம் நான் வாங்கியாறன், எனக்கும் மட்டன் பிரியாணி சாப்பிட்டு நாளாச்சு…………… யூ ப்றொசீட்டா உன் கைவல்யத்தை முழுக்க எடுத்துவிடு செல்லம்………. எதுக்கும் அதுக்கிடையில நான் அவசரமா இன்ஸ்ரன்ட் லைஃப் இன்ஸூரன்ஸ் பண்ண வழிகள் ஏதும் இருக்கோவென்று அறிஞ்சுகொண்டு வந்திடிறன்” என்றேன், உருட்டுக்கம்பை எடுத்துக்கொண்டு என்னைத் துரத்த ஆரம்பித்தாள்.

ஞாயிறுமாலை எங்கள் வீட்டில் மட்டன் பிரியாணி என்கிற கதைபரவ அயல் அடுக்ககங்களிலிருந்தும் ஆட்கள் வந்துசேர அங்கே இரண்டு மூன்று ஷாம்பேன் போத்தல்களும் திறக்கப்பட்டன.

ஷாம்பேனுக்கு ஏலவே பரிச்சயமானவர்போல ஜெனிஃபர் தானும் ஒரு கிளாஸைத் தூக்கிக்கொண்டு ‘சியர்ஸ்’ சொல்லி அனைவர் கிளாஸ்களிலும் முட்டினாள். யாழ்ப்பாணம் – குருநகர்ப்பிள்ளை அல்லவா…………. எல்லாத்தையும் கற்று வந்திருந்தது எங்களுக்குக் கொஞ்சம் ஆச்சர்யம்.

அன்றிரவு ஒரு சிந்துநடையோடும் சிருங்கார அடவுகளோடும் பல தென்மோடி நாட்டுக்கூத்துப்பாடல்களைப் ஜெனிஃபர் பாடிக்காட்டினாள். இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும் என்றதுக்கு “என் நயினா நீக்கிலாஸ்பிள்ளை நாடறிஞ்ச நாட்டுக்கூத்துக் கலைஞராக்கும்” என்றாள். அதன் பின்னாலும் அவளைப் பலதடவைகள் அப்பாடல்களைப் பாடச்சொல்லி இரசித்தோம்.

“உன் நயினா இப்ப இன்னா பண்றாப்பல………..”

“எங்க நயினா றோலர்களில மீன்பிடிக்கு உதவிக்குப்போய் வந்து கொண்டிருந்திச்சா…………. இப்ப அவருக்குப் பென்ஷன் வயதாச்சு மெஸூயூ அறுபதோ அறுபத்திரண்டு, அமலனையிட்டான தகராறில புலியள் ஒருக்கால் அவருக்கு வயசையும் பாராமல் எங்கவீட்டுவாசல்ல வைச்சே அடிச்சு முட்டியை உடைச்சுப் போட்டாங்கள், அப்ப அங்கே ஆன வைத்தியமுமிருந்தாத்தானே, அதிலயிருந்து முழங்காலைச் சரியா மடக்க நிமித்தக் கயிட்டம், உடம்பும் நல்லா நைஞ்சுபோச்சா, தொழிலுக்கும்போகேலா………….. என்ன வீட்டில கொஞ்சம் கள்ளுக்கு வசதியிருந்தால் வார்த்துப்போட்டு வந்து கூத்துப்பாட்டுகளைத்தான் எழுப்பிக்கொண்டிருக்கும்.”

*

அடுத்த நாள் காலைச் சாப்பாட்டு நேரம். எங்களுக்கு ‘பண்’களை அரிந்து சலாட்டும், ஹாமும், சீஸும் வைத்துப் பரிமாறிக்கொண்டிருந்த ஜெனிஃபர் திடீரென தொலைக்காட்சித் தொடர்களில், சினிமாக்களில் வருவதைப்போல ஒரு காட்சியை அரங்கேற்றினாள். “ஊவாக்…….” என்று வாந்தி எடுப்பதைப்போல வாயைப்பொத்திக்கொண்டும் ஓசை எழுப்பிக்கொண்டும், குளியலறையை நோக்கி ஓடினாள். எமக்கு ஒன்றுமாய்ப் புரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். குளியலறைக்குள்ளிருந்தும் பலவிதமான ஓங்களிப்பு ஓசைகள் எழுப்பியவள் வெளியே வந்து “வயித்தைக்குமட்டுது………… மசக்கைபோலக்கிடக்கு ” என்றாள் வெகு இயல்பாக.

“ என்னடி சொல்லுறாய் லூஸ்” என்றேன்.

ஒரு மணித்துளி மௌனமாக இருந்துவிட்டுச் சிரித்துக்கொண்டு

“என்ன ஜெனிஃபருக்கு ஆரோ ஊன்றியிட்டாங்கள் என்றா பதைக்கிறியள்” என்றாள்.

“என்னடி ஊன்றதும் முளைக்கிறதும்……… என்டிறாய் கூத்தி, என்னதான் பிரளயம்……. சொல்லித்தொலையன்”

பிறகு என்னைப் பார்த்துக் கண்ணடித்துவிட்டு “சும்மா இன்றைக்கு ஒரு ட்ராமா பண்ணலாமோவென்றிருந்துது…….. அதுதான்” என்றவள் “இன்றைக்கு என்ன திகதியென்று பாருங்கோவன்” என்று கண்களைச் சுழற்றிக் கலண்டரைக் காட்டினாள், பார்த்தோம் அது April 1st, April Fools day!

* பாவனாவுக்கு வதிவிடஅனுமதி நீடிக்க வேண்டிய ஒருநாள். ஜெனிஃபரே அவளைக்கூட்டிப்போவதாக இருந்தது. வெளியே பனிமூட்டமும் பல்லுகள்கிட்டும் குளிராகவும் இருந்தது. பாவனா அடித்த அலாரத்தை அமுக்கிவிட்டு மேலும் படுத்திருந்தாள். ஜெனிஃபர் மீண்டும் தட்டித்தட்டி எழுப்பவும் அவளோ சுகம் சுகமெனப்படுத்திருந்தாள். ஜெனிஃபர் பாட்டியைப்போல ஒரு நடுங்கல் குரலில் சொன்னாள்: “குளிர்தான்கிளி……… என்ன செய்யிறது…… அசவுக்கை தாவடிப்பொயிலை கிடக்காச்சி……… கிழிச்சொரு சுத்தைப்பத்திக்கொண்டு இறங்குகடா……… விஸாக்கந்தோரல்லே பூட்டப்போறாங்கள்……”

அரைவிழிப்பில் இருந்தவர்கள்கூடச் சிரித்தோய்ந்தனர்.

(அசவு:> ஓலையால் வேய்ந்த குடிசைவீடுகளில் பாய்கள், தலையணை, சார்வோலை என்பன வைப்பதற்காகவுள்ள ஏணையையொத்த அமைப்பு)

*

அதொரு வசந்தகாலம். பாவம் இந்தப்பெண்கள் என் அடுக்ககத்துள்ளேயே சதா மண்டிக்கிடக்கிறார்களேயென்று ஒருநாள் இவர்களை Wannsee க்கு கூட்டிப்போனேன். நூடில்ஸ் பிரியாணியும், பானங்களும் எடுத்துக்கொண்டு எனது மகிழுந்திலும், நண்பரொருவரின் மகிழுந்திலுமாக நிறைத்துக்கொண்டு 10 பேர்வரையில் ஒரு பிக்னிக் போல அங்கே சென்றிருந்தோம். அது பெர்லினின் காஷ்மீர் என்று சொல்லக்கூடிய அழகுப் பிரதேசம். அங்கேயுள்ள நன்னீர்க்கடலேரியிலும் அதனோடு சேர்ந்த கால்வாய்களிலும் அலைச்சறுக்கு விளையாட்டுக்களும், படகோட்டப் போட்டிகளும் சுற்றுலாப் பயணிகளுமாக அந்த இடம் கோலாகலமாயும் உற்சாகமாயுமிருக்கும். அந்த Wannsee கடலேரியைக்கண்டதும் 25 வயது ஜெனிஃபர் ஒரு குட்டி பபாவைப்போல குதூகலத்தில் கிறீச்சிட்டுத் துள்ளிக்குதித்தாள். எம்வீட்டுநாய்க்குட்டி எம் பிள்ளைகளோடும் அயல்வீட்டுப் பிள்ளைகளுடனும் சேர்ந்து ஓடிவிளையாடுமே அதேபோல் Wannsee யின் புற்றரைகளிலும் மணலிலும் நடைகழிகளிலும் (Promenades) ஜெனிஃபரும் கூடச்சென்றவர்களோடும் தெரிந்தவர் தெரியாதவர்கள் எல்லோருடனும் ஓடிப்பிடித்து விளையாடத் தொடங்கிவிட்டாள். அவள் கால்களை எட்டிவைத்த பாங்கும் உடல்மொழியும் ஓடியவேகமும் ஒரு பயிற்றப்பட்ட தடகள வீராங்கனையதைப் போலிருந்தன. பையன்களுக்கே அகப்படாமல் துள்ளித்தெறித்தாள்.

“ ஐயோ………. நாவாந்துறை கொழும்புத்துறைச் சேற்றுக்கடலையே கதியென்டு கிடந்த எனக்கு இங்கே இப்படியொரு சொர்க்கமிருக்கென்று முன்னையே ஏன் சொல்லேல்லை மெஸூயூ” அங்கலாய்த்தாள்.

அந்திசாயத்தொடங்கவும் எல்லோருக்கும் பசியெடுக்கத்தொடங்கியது. புற்றரையில் வட்டமாக அமர்ந்து சாப்பிடலானோம். சாப்பாடானதும் எம்மிடையிருந்த கானக்குயில்கள் சில கீதம் எழுப்பலாயின.

காற்றில் ஈரப்பதங்கூடி குளிரவாரம்பித்தது. முகில்கள் கீழே இறங்கிவருவதைப் போலிருந்தன. திடுப்பென ஒரு மழைகூட இறங்கலாம். ஜெனிஃபரோ “இன்னுமொரு ஆட்டம் ஓடிப்பிடித்து விளையாடலாம்” என்றாள். எனக்கு சாப்பிட்டபின் நடக்கவோ ஓடவோமுடியாது, சற்றே ஓய்வெடுக்கவேண்டும். “குளிரத் தொடங்குது……… எல்லோரும் புறப்படுவோம்” என்றேன். “ இல்லை இன்னும் ஒரு ஆட்டம் ஓடினால் குளிர் பறந்துவிடும்” என்று ஜெனிஃபர் அடம்பிடித்தாள்.

“எல்லோரும் முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பலாம்” என்று அதட்டலாகச் சொன்னேன். ஜெனிஃபருக்கு மூக்கில் புல்லுக்குத்திக்கொள்ளக் கோபித்தில் விசுக்கிக்கொண்டு மேற்குநோக்கி நடக்கலானாள். ‘நல்லாய்ப்போயிட்டுத் திரும்பிவரட்டும்’ என்றுவிட்டுவிட்டேன். எல்லோரும் மகிழுந்து நிறுத்தத்துக்கும் வந்தாயிற்று, ஜெனிஃபரைக் காணவில்லை. அவள் ஐநூறு மீட்டர் தூரம்வரை நடந்துபோய் ஒரு லின்டன் மரத்தின்கீழ் அமைந்திருந்த ஒரு சாய்வுவாங்கில் அமர்ந்துகொண்டு கடலேரியையே இன்னும் ஆச்சர்யம் தாளாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். மற்றவர்கள் அவளைத்தேடிப்போய் ‘என்னடி என்ன இங்கே பண்ணிக்கொண்டிருக்கிறாய்’ எனக்கேட்கவும் “நான் இன்னும் இந்தக்கடலைப் பார்த்துமுடிக்கேல்லை………. வடிவாய்ப்பார்த்திட்டு நடந்தென்றாலும் வீட்டைவாறன்……… நீங்கள் எல்லோரும் போங்கோ………. ” என்றாள். கூட்டப்போன பெண்கள் அவளிடம் “ ஜெனிஃபர் மென்டலாடி……..நீ பார்த்துமுடிக்காட்டி நாளைக்கு வந்துபார்………. இப்ப வா போவம்” என்றனர். எழும்ப மனதின்றி அடம்பிடித்துக்கொண்டு வாங்கிலேயே அமர்ந்திருந்தாள். அவர்கள் திரும்பிவந்து “அண்ணே………. நீங்கள்போய்க்கூட்டி வாங்கோ…… நீங்கள் சொன்னால்த்தான் கேட்பாள்” எனவும் நானும்போய் “ ஏய் ஜெனி…….. இருட்டவிட்டு இதிலே இருந்தியானால்……… ஊர் உழட்டிற அல்ஜீரியாக்காரங்கள் வந்து உன்னைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக்கொண்டுபோடுவாங்கள்……..” என்று மிரட்டினேன்.

கண்களை உக்கிரமாக விரித்து முழிசிக்கொண்டு “ ஒரு பயல் ஜெனிஃபரில கைவைக்கமுடியாதாக்கும் பொசுங்கிடுவாங்கள்………. நான் உக்கிரப்பிரபாகினி அம்மனாக்கும்” என்றாள். அவள் சிவந்தகண்களிலும் ஒரு உக்கிரம் தெரிந்தது. இவளுக்கு எப்படி ‘உக்கிரப்பிரபாகினி’ அம்மன் பற்றியெல்லாந்தெரிந்தது என்பது எனக்கின்னும் புதிர்தான்.

நான் அவள் நாடியைத்தடவி “ ஒருநாள்ல யாராலும் Wannsee ஐப் பார்த்துமுடிக்கேலாதுதான்………. அது சரியான அகலம், எழும்பு கண்ணா, நாங்கள் அடுத்தவாரமும் இங்கே பிக்னிக் வருவோம்…. அடம்பிடிக்காதை எழும்பிவா……. குஞ்சுக்கு இண்டைக்குப் பிட்ஸா ஹவாய் வாங்கித்தாறன்” எனவும் “கூட்டித்தான் வந்தீங்கள்……… கடலைச்சரியாய்ப் பார்த்துமுடிக்கவும் விடுகிறியளில்லை” என்றபடி காலை நிலத்தில் குத்தி உதைத்துக்கொண்டு எழும்பிவந்தாள்.

ஜெனிஃபரின் பெர்லின்வாசம் மூன்று மாதங்களாகிவிட்டன. அவளுக்கான ஸ்டேசனை அடிக்காமல் விஸா அலுவலகம் மேலும் இழுத்தடித்துக் கொண்டிருந்தது. எம் சட்டத்தரணியிடம் ஒருமுறை அதுபற்றி உசாவியபோது அவர் ‘விஸா வழங்குவதையும், ஸ்டேசன்களுக்கு அனுப்புவதையும் இருவேறு தீர்ப்பாயங்கள் கவனிப்பதனாலும், அகதிகளின் எண்ணிக்கை கட்டுமீறி இருப்பதனாலும் இந்தத்தாமதம்’ என்பதைவிளக்கி அவளை மேலும் கொஞ்சம் பொறுமைகாக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஒரு நாள் என்னைக்கேட்டாள்: “ மெஸுயூ நீங்கள் என்ர அப்பிளிக்கேஷனில ஜெனிஃபருக்கு நல்லாய் இழுத்தடிச்சுப்போட்டு பெர்லினையே கொடுக்கச் சொல்லியும் இரண்டுவரி சேர்த்து எழுதிப்போட்டியளோ……………..” .

“ அம்மாடியோவ்……… இந்தக் குருநகர்க்குத்துமாட்டை பெர்லினில மறிச்சுப்போட்டு உனக்கு மாப்பிள்ளை பிடிக்க………. நான் எங்கேயடிபோவேன்?” என்றேன்.

“ எனக்கு நாணயம்பிடிக்கிற படிமாத்தான்கள் எவனும் எனக்கினி வேண்டாம்” என்றபடி என்னை அடிப்பதற்கு விரட்டினாள்.

அவளுக்கு ஸ்டேசன் அடிபடாதது கவலையாக இருந்தாலும் அவள் அடுக்ககத்தில் எங்கூட இருப்பது எங்களுக்கு பம்பல், உதவிகரம் சந்தோஷமாகவுந்தான் இருந்தது. வானம்வெளுத்தும், சூரியர் மினுங்கும் நாட்களிலும் முன் அந்திவேளைகளில் சாளரத்தினூடாக மஞ்சள் வெய்யில் எதிரிலிருக்கும் கட்டிடத்தில் மேற்பாதியில் மட்டும் விழுவதையும், அந்தி சாயச்சாய வெளிச்சம் மெல்லமெல்ல மேலே எழும்பி ஒடுங்கி இல்லாமல்போவதையும் ஒரு குழந்தையைப்போலக் கண்டு குதூகலிப்பாள். சிலவேளைகளில் வெய்யில் மினுங்கிக்கொண்டிருக்கையில் மழையும் பெய்தால் துள்ளிக்குதித்துக் கைகொட்டிச்சிரிப்பாள். ஒரு இலைகூட அதன் வழமையான அமைப்பில் இல்லாது வித்தியாசமாயிருந்தால் அதை பர்ஸிலேயோ எங்கேயோ பத்திரப்படுத்திவைத்து நினைத்தநேரம் எடுத்துவைத்துக் கண்களை உருட்டியுருட்டிப் பார்த்துக்கொண்டிருப்பாள். நானும் அவதானித்ததில் சிலவேளைகளில் அவள் பார்ப்பது ஒரு சிங்கம் பார்ப்பதைப் போலவே இருக்கும், வெறும் எனதான பிரமையோ என்னவோ, அவளது முகத்தில் சிங்கத்தை நினைவுறுத்தும் ஏதோவொரு அம்சம் இருப்பதாகப்பட்டது. எனக்கு இராசிகள், கணங்களில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் “ ஜெனி…… நீ சிலவேளைகளில ஒரு சிங்கத்தைப் போலப்பார்க்கிறாய் உனக்கு அது தெரியுமோ…………… என்ன ராசியடி நீ” என்று கேட்டதுக்கு

“அதுதான் என்னைக்கண்டு எல்லோரும் பயத்தில பறக்கிறாங்களோ….. ராசியும் கணமும் குருநகர் கிறிஸ்துவிச்சிக்கு ஏது மெஸுயூ, நல்லகாலம் பாம்புமாதிரிப் பார்க்கிறாய் என்று சொல்லாமல் இருந்ததுக்கு தாங்ஸ்” என்றாள். பிறகு சற்று நேரத்தால் “ நான் முன்ன சொன்ன அந்தச் சிக்கலில இருந்தபோது, என்ர துஷ்யந்தனை அடையவிதி இருக்கோவென்று வீட்டில உச்சிப்போட்டு, யாழ்ப்பாணச்சந்தைக்குள் இருந்த மார்க்கண்டுச் சாத்திரியிட்டையும் போன்னான்.”

“ யார் அந்தக் கண்ணடிக்கிற சாத்திரியோ………..”

“ ஓமோம் பெண்டுகள் என்றால் கையைப்பிடிச்சபடி மூஞ்சையைப் பார்த்துப்பார்த்துக் கண்ணை அடிச்சுக்கொண்டே கதைப்பர்……. அவர்தான் என்னுடைய டேட் ஒஃப் பேர்த்தைக்கேட்டுவிட்டு என்னை இராக்ஷதக்கணம் என்று சொன்னது மட்டும் ஞாபகத்தில இருக்கு, மற்றக் கிடாய் சிங்கம் கரடி விஷயங்கள் தெரியேல்லை பொஸ்.” சிலவேளைகளில் இப்படித் திடுப்பெனப் “பொஸ்” ஆகவும் பதவி உயர்த்தப்பட்டேன்.

*

மூன்றோ நாலு மாதங்கள் இப்படி என் அடுக்ககத்தில் கலகலத்துக்கொண்டிருந்த ஜெனிஃபர் ஒருநாள் விஸாவுக்குப் போனபோது அவளுக்கு Stuttgart என்று ஸ்டேசன் அடித்துக் கொடுத்துவிட்டார்கள். அவளது பிரிவு தவிர்க்க முடியாததாகியிருந்தது. அவள் Stuttgart க்கு புறப்படமுதல் ‘ஜெனிஃபர் இன்னொரு முறை Wannsee க்கு பிக்னிக் போவோமா’வெனக் கேட்டபோது “வேண்டாம் மெஸூயூ ஸ்டேசன் அடிக்கேல்லை அடிக்கேல்லை என்று கவலையா இருந்துது……….. இப்ப அடிச்சாப்போல உங்களை எல்லாம் பிரியப்போறேனே என்கிற துக்கம் தொடையை அடைக்குது……… ஜொலியோ ‘பிக்னிக் மூட்’டோ இல்லை” என்றாள் கண்களில் நிறைய. பேருந்தில் ஏறிப்பிரிகையில் அன்று வாத்சல்யத்துடன் என்னைக்கட்டி முத்தமிட்டாள். கண்கள் நிறைந்துசொரிய “ இனி எந்த ஜென்மத்தில் உங்களை எல்லாம் பார்ப்பேனோ” என்று துடிக்கும் உதட்டுடன் சொல்லி விடைபெறவும் நானுந்தான் உடைந்துபோனேன். அயல்வீட்டிலிருந்து எங்கள்வீட்டில் வந்தொரு குழந்தை எல்லோருடனும் ‘மாமா’ ‘மெஸூயூ’ என்று ஒட்டிப்பழகி குதித்துக் கும்மாளங்கொட்டிவிட்டுத் திடுப்பெனத்தாயிடம் ஓடிவிட்டால் உண்டாவதைப்போலவொரு வெறுமை சூழவும் எம் அடுக்ககம் பேரமைதியானது. அவளது குலுங்கல் சிரிப்பும், பொழிப்பும், அதகளமும், அட்டகாசங்களும் விடைபெற்றான துக்கத்தின் சாம்பர் அனைவரின் முகங்களிலும் தடவியிருந்தது.

*

ஊறிய கண்களோடு Stuttgart போனவள் அங்கேயும் இரண்டு மூன்று மாதங்கள்தான் இருந்தாள். ஏனோ பின்னர் அங்கிருந்து ஃப்ரான்ஸுக்குப் போனாள். முன்பொருமுறை பாரீஸில் யாரோ தூரத்துச் சொந்தக்காரர் இருக்கிறார்கள் என்று சொன்னது மட்டும் எனக்கு லேசான ஞாபகம், இன்னும் ஃப்ரான்ஸில் லியோனில் அவளது சகோதரன் ஒருவனும் இருந்தான், ஜெனிஃபர் பெர்லினில் இருக்கிறாள் என்று தெரிந்திருந்தும் அவன் ஒருநாளாவது போனில்க்கூட ஜெனிஃபரை விசாரித்ததில்லை. ஆகையால் அவள் அந்தச் சகோதரனிடம் லியோனுக்கு போகமாட்டாள் என்பது மட்டும் தெரிந்தது. மேலும் ஐந்தாறு மாதங்கள் கழித்து அவளது எளிமையான திருமண வரவேற்பிதழ் வந்தது. அதுவும் ஒருவகையிலான சீர்திருத்தக்கல்யாணந்தான். மாப்பிள்ளை திருநெல்வேலிச் சைவப்பையன், காலையில் செயின்ட். மேரீஸ் தேவாலயத்தில் திருப்பலியின் பின்னர் மோதிரம் மாற்றுதல் என்றும், மாலையில் பாரீஸ் அம்மன்கோவிலில் மாங்கல்யதாரணம் என்றும், அழைப்பிதழில் இருந்தது. அது காதல்திருமணம் என்றும், பெற்றோரால் ஒழுங்குசெய்யப்பட்ட திருமணம் என்றும் பேச்சுக்கள் வந்தன. பையன் சைவனாக இருப்பதால் அநேகமாக காதல்திருமணமாக இருக்கலாமென்பது என் ஊகம். அதுக்கும் மேலே எதுவும் ஆராய இயலாதபடிக்கு நானும் என் ஊழியங்களும் அமைந்திருந்தன.

ஒரு தசாப்தம் கடுகி உருண்டது. இடைக்கிடை போன்பண்ணி “ எதுக்கு மாமா இன்னும் முற்றவைச்சுக்கொண்டிருக்கிறீங்க, சீக்கிரம் கல்யாணம் ஒன்றைக் கட்டித்தான் பாருங்களேன்………….அதுக்குப் பிறகு சும்மா ஜொலியாயிருக்கும் வாழ்க்கை” என்றெல்லாம் என்னைக் கலாய்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் ஒருநாள் தன் மகளின் போட்டோவொன்றை அனுப்பியிருந்தாள். அவள் அணிந்திருந்த பெரிய சிவப்பு,கருப்பு,வெள்ளைக் கட்டங்கள் போட்ட துணியில் மடிப்புகள் வைத்த அரைப்பாவாடையும், வெள்ளை மேற்சட்டையும் எடுப்பாயிருக்க, ஒரு ஃப்ரெஞ் பிள்ளையைத்தான் ஜெனிஃபர் தத்தெடுத்திருக்கிறாளோவென்று எண்ணும்படி அவளது நிறமிருந்தது. வயசைமீறி வளர்ந்து பெரிசாகிவிட்ட பெண்ணைப்போலிருந்த அவளுக்கு அகவைகள் பத்துக்குள்ளாகத்தான் இருக்கமுடியும். படத்தின் பின் புறத்தில் சிறிய எழுத்தில் பச்சைநிறத்தில் – சுகன்யா நன்றாகப்படிக்கிறாள், பெரிய கலவிப்பின்புலமில்லாத எங்கள் குடும்பத்திலிருந்து இவளை ஒரு டாக்டராகப் பார்க்கும் கனவொன்று எனக்கு இருக்கிறது. ஆதலால் இவளுக்காகவேனும் இன்னும் கொஞ்சம் வாழ்ந்துதொலைக்கலாம் போலிருக்கு மெஸூயூ – என்று பந்துமுனைப்பேனாவினால் எழுதியிருந்தாள்.

ஒருநாள் முகநூலில் வெளியான பாரீஸ் – மேலைமருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனின் ஆடிப்பூரத்தன்றைய சிறப்புப் பூஜாபுனஸ்காரங்களின் படமொன்றில் ஜெனிஃபர் தனது பெயரையும் திரிசூலி என்று மாற்றிவைத்துக்கொண்டு பட்டுச்சேலைகட்டிய பக்தைகளில் ஒருத்தியாக அர்ச்சனைத்தட்டை ஏந்திக்கொண்டு நின்றாள். ஜெனிஃபரை முதன்முதலாகச் சேலையில் கண்டபோது பெர்லினில் இருந்த ஜெனிஃபரைவிடவும் வேறொரு மனுஷியாகத் தெரிந்தாள்.

*

மேலுமொரு தசாப்தம் உருண்டபோது ஒருநாள் –லங்காஸ்ரீயில்- அகாலமரணமென்று ஜெனிஃபரின் மரண அறிவித்தலைக் காணநேர்ந்தது. அப்போதும் அவள் கணினித்திரைக்கு வெளியே தலையை நீட்டி “ சும்மா நெத்துக்கு விட்டுக்கொண்டிராமல் சீக்கிரம் கல்யாணம் செய்துக்கோ மாமா……… சும்மா ஜொலியாயிருக்கும்” என்று என்னைக் கலாய்ப்பதைப் போலிருந்தது. அறிவித்தலின் அடியிலிருந்த தொலைபேசி இலக்கத்துக்குப் போன்செய்து அவளுக்கு என்ன நடந்தது என்று விசாரித்தேன். யாரோ ஒரு பெண்மணி பேசினார்.

“அவள் மகள் சுகன்யாவுக்கு பதினாறு வயசுதான்…….. தன்கூடப்படித்த மொரக்கோப்பெடியன் ஒருத்தனோடபோய் இருக்கப்போகிறேன் என்று தாயிடம் சண்டைபோட்டு அடம்பிடித்தாளாம். ஜெனிஃபரின் புத்திமதிகள், கெஞ்சல்கள், மன்றாட்டங்கள், அழுகைகள் எதுக்கும் மகள் மசியேல்லைப்போலை. ‘அப்போ நீ உன்வழியில் போறதென்றால்……… நானும் என்வழியைப் பார்த்துப்போகிறேன்’ என்று வீட்டைவிட்டுப் போனவள் நாலைஞ்சுநாளாய் அலைஞ்சு திரிஞ்சுபோட்டு கடைசியாய்போன திங்கள் விடிகாலையில சைன்நதி மேலயொரு பாலத்திலயேறிப் பாய்ஞ்சிட்டாள்” என்றார்.

என்னவொரு அசட்டுப்பெண். ஜெனிஃபர் தன் பிறந்தநாளைக் கொண்டாடியபோதுகூட அவளுடன் சேர்ந்து நான் படம் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை, அதுவே பின்னாளில் அவளையொரு வம்புதுப்பின் மாட்டுவதற்குக் கால்கோளாக அமைந்துவிடலாம். அவளுக்காக நான் சிங்கப்பூரில் வாங்கிய வெள்ளிப்பாதசரங்களையே அனுப்பிவைக்க ஒரு முகாந்தரமும் தென்படாமல் இருந்தேன். நான் அதை அஞ்சல் செய்தால் அது அவளுக்கு ஏதும் சங்கடங்களை உருவாக்கலாம். ஜெனிஃபருடன் நான் போனிலாவது தொடர்புகளைப் பேணிக்கொண்டு இருந்திருக்கலாம். ஜெனிஃபர் தன் நெருக்கடிகளில் எதையாவது என்னுடன் பகிர்ந்திருப்பாளானால் ஒருவேளை இவ்விபரீதமுடிவுகளை எட்ட விடாமல் வேறுதீர்வுகளை நோக்கி நாம் நகர்ந்திருப்போம். வேகமாக வளர்ந்திருந்த அவளது ஆசைமகள் தனக்கான புது உறவைச்சேர்ப்பதிலும், இருந்த உறவை அறுப்பதிலுங்கூட வேகமாகவே இருந்திருக்கிறாள். அவளை வாழ்வோடு பிணைத்திருந்த ஒரே கண்ணி சுகன்யாதானே, அந்த உறவை நேசித்து அதுக்காகவே வாழ்கிறேன் என்றாளே……….. அக்கண்ணியும் நியாயமான கனவும் தெறித்துப்போவதை அந்தத்தாயினால் தாங்கமுடியவில்லையோ. அசடாய், குழந்தையாய், முரடாய், முரண்டுபிடிப்பதாய், நடிகையாய், ‘மாமா’, ‘மெஸூயூ’, ‘பொஸ்’ என்றெல்லாம் கலாய்த்துக்கொண்டிருந்த அந்தக்கலகக்குரல் இனிக்கேட்காது. அவளை நேசித்த, அவள்மேல் அன்புபாராட்டக்கூடிய மனிதர்களின் நெருக்கத்தை அவள் விரும்பினாள், அவளது தொடுகை, அவளின் அருகாமை ஒரு சிறுமியினதைப்போல, எப்போதும் அவை ஒரு சலனத்தையோ விகற்பத்தையோ எனக்குத்தரவில்லை.

மறுபிறப்பில் நம்பிக்கை இருந்திருக்குப்போலும் “ இந்தப்பிறப்பு எனக்கு என்னவோ சரியாய் அமையேல்ல மாமா……….. ஆனால் இதையேதான் கனநாளைக்குத் தொடரவேணும் என்பதை நினைக்கச் சலிப்பாயிருக்கு” என்று எனக்குப் பலதடவைகள் ஜெனிஃபர் சொல்லியபோதும் நான் அவள் சலிப்பைப் பொருட்படுத்தவே இல்லை, ஆனால் தன் வாழ்வின் எல்லா முடுக்குகளையும் ஒரு நல்ல நண்பனிடம் சொல்வதைப்போல என்னிடம் பகிர்ந்தவள், வைரமான கட்டுடலும் மனதும் கொண்ட பெண்ணவள் ‘உங்கள் எல்லோரையும் ஒருநாள் இப்படியொரு ஆச்சரியத்தில் ஆழ்த்துவேன்’ என்பதைச் சொல்லவே இல்லை. வாழ்வின் நித்திய அநித்யங்களை இளமையிலேயே தெளிந்துவிட்டதனாற்போலும் அப்பறவை ‘கிறீச்’சிட்டுக்கொண்டு சுதந்திரமாய்ப் பறந்து திரிய விரும்பியிருக்கு. ஜெனிஃபரை மணந்தவனுக்கும் அன்பெனும் கள்ளைப்பருக்கி அவளை அணைவிக்கும் வித்தை தெரிந்திருந்ததா, அவளுக்கு மூக்கணாங்கயிறு பிடித்தானா இல்லை அவளுள்ளான விடுதலைவேட்கையை நயந்தானா, எப்படி அவளைத் தாங்கினான், அனுசரித்தான் ஒன்றுமே தெரியவில்லை.

ஜெனிஃபரின் வாழ்க்கையோடு பிணித்த அவள் தாயின், நயினாவின், அவரது முட்டியை உடைத்த மறவரின், அண்ணாக்களின், காதலனின், கைப்பிடித்தவனின், அருமைமகள் சுகன்யாவின் கதைகளை எல்லாம் சுமந்து திரியும் காற்று காலத்தையும் கடந்து வீசும். ஆனால் அப்போதெல்லாம் அதைப்புரிந்துகொள்ளும் மனிதர்களும் ஜீவித்து இருப்பார்களென்று சொல்லமுடியாது.

ஜெனிஃபரின் வார்த்தைகள்கூட பொதுப்புத்தியின் நியமங்களுக்கு ஒருவேளை கெட்டதாய் பச்சையாய் இருந்திருக்கலாம், வாழ்க்கைபற்றிய ஒரு தேவதையின் நியமங்களும் எம்முடையதைப்போலவே இருக்கவேண்டுமென்ற நியதியில்லைத்தானே……….

இலையுதிர்காலம் – பாரீஸ் . 22 செப்டெம்பர். நடு இணையைதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *