முன்சில்லின் வேகத்திற்கு ஏற்றவாறு முடிந்த வரையில் பள்ளம் மேடுகளைத் தவிர்த்து வீதியை உற்றுநோக்கியபடி மோகன் தன் சீபீ சற் வண்டியை லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான். சக்கரங்கள் செம்மணி காப்பெற் வீதியைத் தொட்டதும் அவன் எண்ணக் குதிரைகள் வீதியை விடுத்து விதியின் விளையாட்டை எண்ணத்தொடங்க நேரம் சரியாக 7.30 மணி. இந்த இராப்பொழுதின் பூரண நிலவொளியில் அவன் நிழல் காப்பெற் வீதியில் கரைந்துகொள்ள மைல்கற்களைக் கடந்தது பயணம்.
கோவிலாக்கண்டியில் மீள்குடியேற்றத்திற்கு இந்திய அரசநிதியுதவியால் அமைக்கப்பட்ட நூறு வீட்டுத் திட்டம் நாளையதினம் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட உரிமை யாளர்களுக்கு வைபவ ரீதியாக கையளிக்கும் விழாவாகும். முழுப்பொறுப்பும் மோகன்வசமே. உள்நாட்டு அபிவிருத்தி இடர் முகாமைத்துவ அமைச்சின் வடமாகாணப் பொறுப்பதிகாரி என்கின்ற பொறுப்பான பதவி, பவிசு, பணி என்று நேரங்காலமில்லாமல் அவன் சுற்றிக் கொண்டிருப்பான். வீதி அலங்காரம் முதற்கொண்டு வீட்டிற்குரியவரிடம் அமைச்சர் துறப்புக்களை ஒப்படைப்பது வரை எல்லாவற்றையும் கனகச்சிதமாக ஆற்ற வேண்டும் என்கின்ற ஆர்வம் அவனை ஆட்கொள்ள அந்தவேளையில் அவனின் மோட்டார் சைக்கிள் கைதடி தெருப்பிள்ளையாரின் சன்னிதியின் முன்நிற்க கைகள் பாக்கெட்டில் சில்லறையைத் துளாவி எடுத்து உண்டியலில் இட்டதும் சந்தனப் பொட்டில் அவனும், வண்டியும் வயல்வெளியில் வளைந்த வீதிகளிலிறங்கி வளைவு சுழிவுகளில் வண்ணக்கோலம் போட அவன் தன் வாழ்வுக்கோலம் வரையப்பட்ட புள்ளிகளை எண்ணுகின்றான்.
ரீச்சர்! இவன் என்ன மண்ணுக்க தள்ளிப் போட்டான்! நல்லா அடியுங்கோ ரீச்சர் என்று சொன்ன அந்த ஐந்துவயது மழலையின் விரல் மோகனைச் சுட்டி நிற்கின்றது. வகுப்பிலேயே மோகன்தான் அதிக குழப்படி. ரீச்சரின் சம்பளத்துக்குமேல் அவரிடம் வேலை வாங்குபவனும் அவன்தான். எல்லோருடைய பொறுமையின் மைக்கல்லாக இருப்பவனும் அவனே. மோகனை மட்டும் சமாளித்தால் மற்றெல்லா மாணவர்களையும் சமாளிக்கலாம் என்று அந்த நேசரி ஆசிரியைகள் தங்கள் ஆதங்கச் செய்தியை தினமும் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டனர்.
ஆறு வயதானதும் அவன் கல்லூரியில் தரம் ஒன்றில் கால்பதித்த முதல்நாளே தலைமை ஆசிரியர்முன் சினிமாப் பாடலிசைத்து அனைவரையும் சிரிக்க வைத்தான். ஆனால் அது நீடிக்கவில்லை. தண்ணீர்க் குழாயை உடைத்து அதற்கான தண்ட னையை கல்லூரி வந்த முதல்நாளே பெற்றுக் கொண்டான். சீழ்வடிந்த மூக்கும், சிதறிய தலை மயிரும், பட்டன் இழந்த சட்டையும், சகதியான சப்பாத்துமாக அவன் வரும் கோலம் எல்லோரையும் அவன் மீது வெறுப்புக்கொள்ள வைத்து ஒதுங்க வைத்தது. தன்னைவிட்டு ஒதுங்குகிறார்கள் என்று அவனுக்குத் தெரிந்தால் அவன் சீண்டலும் அதிகமாகும். எல்லா வெள்ளை உள்ளங்களும் அவனைச் சிவப்புப் பட்டியலில் சேர்த்துக் கொண்டன.
எண்ணிக்கொள்ள முடியாத அளவு அவனின் வேலைகள் பட்டியலிட்டு பைல்களில் பதுங்கிக் கிடந்தன. பைக்கை ஸ்ரான்டில் விட்டு பைல்களைக் கையிலிடுக்கி அவன் அந்த அழகிய கோவிலாக்கண்டி கிராமத்தில் கால்பதிக்க கரண்ட்டும் கட்டாக சரியாக இருந்தது. ராரா… ராரா..சரசு…ராரா…தாம்த தீம்த…தோம்…த..தா….சந்திரமுகியின் ஹிட் பாடல் அவன் செவிப்பறை சேர செல்போனை அவன் கிட்பாக்கில் தேடினான். ஓ..! நான் ஸ்பொட்டில் தான் நிக்கிறன் சேர்…! எல்லாம் நல்லபடி அரேஞ்பன்னிறான்..இல்ல இல்ல சொன்ன ரைமுக்கே பங்க்ஷன் தொடங்கலாம். மீடியா எல்லாம் ரைமுக்கு வந்திடுவாங்கள். ஓ.கே சேர் ஓகே…ஓகே….குட்நைட்.
அந்த இருட்டிலும் அவன் தன் அதிகாரியின் மதிப்பிற்கு ஒளியேற்றினான். நம்பிக்கை என்பதும், செயற்பாடு என்பதும் உள்ளத்தின் உறுதியில்தான். அவன் பூட்ஸ் கால்கள் அந்த ஒழுங்கையின் மணலில் தடம்பதிக்க ஒளியும் உயிர்பெற்றுக் கொண்டது. களத்திலிருந்த முப்பது பணியாளரும் இவனையே அமைச்சராகப் பார்த்து வரவேற்று ஆரவாரப்பட்டனர். எல்லோருடனும் இயல்பாகப் பழகி அன்பாக அவரவருக்குரிய வேலைகளைப் பணித்துத் தானும் ஒரு பணியாளென இணைந்து கொண்டான். அந்தப் பிரதேசமெங்கணும் பதாகைகளும், மாவிலை தோரணங் களும், கட்சிக் கொடிகளுமாக மின்அலங்கார விளக்கொளியில் மின்ன இனி மேடை அலங்கரிப்பு. நேரம் சரியாக 10.30 மணி தேவகி கட்டித் தந்த தோசையின் ஞாபகம்வர அவன் தண்ணீர் போத்தலோடு இந்திய அரசின் சிறிய வீட்டு விறாந்தையில் முதன்மை விருந்தினரானான்.
சேர்த்துக் கொண்ட பெயர்களில் மோகனின் பெயர் இடம்பெறவில்லை. எந்தப் போட்டியானாலும், எந்தவொரு விழாவானாலும், நிகழ்வானாலும் அவனை ஒதுக்கியே வைத்தது கல்லூரிச் சமூகம். அவன் தனிமைப்பட தனிமைப்பட அவன் குழப்படிகள் இன்னுமின்னும் கூடிக்கொண்டு போக தண்டனைகளும் அதிகமானது. அதனால் தண்டணை கூட அவனுக்குத் துரும்பானது. புலமைப்பரிசில் பரீட்சையில் வெறும் 70 புள்ளிகள் மட்டுமே பெற்றான். அவன் எப்போதும் கடைசி வாங்கிலேதான் அமர்வான். இதனை அவதானித்த ஆசிரியர்கள் அனைவரும் பின்வாங்கான் எந்தக் காரியம் செய்யவும் பின்வாங்கான் எனத் தமக்குள் பேசிக்கொண்டனர். பக்கத்து வாங்கு மாணவனின் அவித்த முட்டையை யாரும் பாக்கா வண்ணம் அமுக்குவான் , பெண்பிள்ளைகளின் சட்டைக்கு மைதெளிப்பான், ஆசிரியரின் கதிரைக் காலை உடைத்துவைத்து அவர் விழுவதைப் பார்த்து ரசிப்பான், மரம், செடி, கொடி தாவித்திரிந்து அழிப்பான், கல்லெடுத்து கல்லூரியின் யன்னல் கண்ணாடியைப் பதம் பார்ப்பான். எல்லாமே அவன் மனம் போனபடி தான்.
பாடவேளை மணியடிப்பது போல பருவங்கள் மாற பதினாறு வயதில் மோகன் ஓ.எல் மாணவன் என காலம் பிரகடனப்படுத்தியது.
பருவ மாற்றத்தில் அவன் திக்குமுக்காட காதல் கால்வாயில் கரை புரண்டது அவன் உள்ளம். வகுப்பில் படுசுட்டிப் பெண் தாரணி. அவளுக்கு இவன்தான் காவலன். வீட்டிலிருந்து கல்லூரி, ரியூஷன் என்று அவனின் ஒருதலைக் காதல் இரண்டு சில்லு சைக்கிளில் தினம்தினம் காவல் சவாரி தான். தாரணி மசியவேயில்லை. சீ சீ…இந்தப் பழம் புளிக்கும் என்று அவன் மறக்கவும் இல்லை. மண்றாடினான், மிரட்டினான், தவம்கிடந்தான் எதுவும் கைகூடவில்லை . மதில்களும், மரங்களும் அவளைப் பற்றிய வசைவரிகளைச் சுமக்க கழுத்தில் சுருக்கிட்டு அவள் தன் அறையின் கப்பில் சுமையாகத் தொங்கினாள். ஆயினும் அவள் மோகனைப் பற்றி ஒரு குறிப்பும் எழுதவில்லை. உலகத்திற்கே தெரிந்த விடயம், ஆனால் ஊரே வாய் மூடிக்கிடந்தது. பொலீசார் மோகனை அழைத்து விசாரித்ததோடு சரி. ஊரவர் அனைவர் வாய்களும் ஏன்? ஏன்? ஏன்? என்று பல கேள்விகள்.
முதன்மை விருந்தினர், கௌரவ விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள் என்ற ஒழுங்கிலே மேடையிலே ஆசனங்களை ஒழுங்குபடுத்துதல், ஆசனங்களுக்கு இலக்கமிடல், அதிதிகளின் வருகை, ஆலாத்தி, வரவேற்பு, விளக்கேற்றல், கொடியேற்றல், உரைகள், கலை நிகழ்வுகள், புதிய வீட்டுப் பிரவேசம், துறப்புக்கள் வழங்கல் என நிகழ்ச்சிகள் ஒரு ஒழுங்கிலே மோகனின் மூளையில் அடுக்கப்பட அவன் விரல்கள் அடிக்கடி கைபேசியின் பட்டன்களை அழுத்திக் கொண்டன. நேரம் சரியாக 12.00 மணி. ஆங்கில தேதியில் அடுத்த நாள் ஆயினும் சூரியனின் விடியலில் தானே அனைவரின் எழுச்சியும். எல்லா ஒழுங்கும் சரி, மோகன் சேர். நீங்க வீட்டபோய்ற்று நாளை வாங்க…!!
“இல்லலலல்ல…நான் இனி வீட்ட போகத்தேவல. நாளை ஈவினிங்போனா போதும். இந்த பங்ஷன் நல்லபடி முடிஞ்சா சரி” என்று கூறியபடி மேடையின் ஓரத்திலேயே சாய்ந்து உறங்கிவிட்டான்.
நேரம் சரியாக 5.00 மணி, நேரடி அஞ்சல் சாதனங்களுடன் பதினெட்டுச் சில்லு வாகனங்கள் அந்தப் பகுதியை வந்தடைந்த சத்தத்தில் எழுந்தவன் அவர்களைக் கைலாகு கொடுத்து வரவேற்று, நிகழ்ச்சி ஒழுங்குகளைப் பகிர்ந்து கொண்டான். நித்திய கடமைகள் முடித்துக் களமிறங்கினான். அரங்கு எங்கனும் மக்கள் கூட, காவல்கள் பெருக வாகனங்களின் வருகையோடு வாண வேடிக்கைகள் எட்டுத் திக்கும் ஒளியோடு இடியென முழங்க வந்திறங்கிய அமைச்சரும் பட்டாளங்களும் பான்ட்வாத்திய இசையோடு வருகைதர கிராமம் களைகட்டத் தொடங்கியது. தேநீர், சிற்றுண்டி, சாப்பாடு, கூல் என்று மோகன் சுழன்றுகொண்டே எல்லோரையும் வரவேற்று உபசரித்து, கடமைகளைச்சுட்டி தன் ஆளுமையை அரங்கேற்றினான். அரங்கில் பேசிய அனைவரும் அந்த விழாவின் நேர்த்தி, சிறப்பு, ஒழுங்கமைப்பு பெருமைபற்றிப் பேசி மோகனுக்கு புகழ்மாலை சூட்டிக் கொண்டிருந்தனர்.
கேள்விகள் பல அவனைக் குடையத் தொடங்க பக்குவ நிலையின் முதற்படியில் தெளிவு பெற்றான் மோகன். ஓ.எல் பரீட்சையில் சகல பாடங்களிலும் ஓரளவில் சித்தியெய்தி அனைவரையும் வியக்க வைத்தான். இவன் எப்படி?!!…அதுவும் ஓ.எல்…குதிரை ஓடினானோ!! அணு உலையொன்று அடங்கிய அமைதி மோகனிடம். குறும்பும், விளையாட்டும் குடிபெயர்ந்து விட்டது. அமைதியும், அடக்கமும் பற்றிக் கொள்ள அவன் புதுமனிதனானான்.
எல்லோருக்கும் ஆச்சரியம். புலி பதுங்குவது பாய்வதற்கோ என எண்ணினர். ஏ.எல். பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று அசத்தி பெற்றோருக்கும், கல்லூரிக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்தான். ஊரே அவனை உள்ளங்கையில் வைத்துக் கொண்டாடியது. மோகனின் கண்கள் பனித்தன. ஆனந்தக்கண்ணீர் என ஊரவர் எண்ணினர். அது தாரணிக்கான அஞ்சலிக் கண்ணீர் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த மனத்தின் வெளிப்பாடு.
பரிசில்களோடும், பாராட்டுக்களோடும் பல்கலைக்கழகம் புகுந்தான். கல்வி ஒரு கண் குடும்பம் மறுகண் என அவன் பல்கலைக் காலம் செல்லும் வேளையில் பல காதல் பூக்கள் அவனுக்காக மலர்ந்தன. அவன் ஒன்றையும் பாராட்டாமல் தன் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்தி மற்றெல்லா விடயத்தையும் தூரத்தில் வைத்தான்.
“ஏன்ரா!! மச்சி…நல்ல பிகரெல்லாம் மாட்டுது. நீ என்னண்டா விஸ்வாமிதிரராட்டம் ரம்பையோ, மேனகையோ வருவாளெண்டு தவம் கிடக்கிறா போல….இது எங்கட சீசன்ரா மச்சி…பாசவுட் பண்ணினா உடன வேலை. பிறகென்ன கலியாணம் தானே…இப்பவே ஒரு பிகர கொழுவு மச்சி…”
சக பாடிகளின் பேச்சிலும் அவன் மயங்கவில்லை . சூடுகண்டது பூனையல்ல, இது புலி. நேசரி முதல் ஓ.எல் வரை கலக்கிய புலி இப்போ பசு போல சாதுவானதன் பின்னணி?!! சிறந்த பெறுபேறும், பதக்கமும், கலாநிதிப் பட்டமும் பெற்று தந்தை தாயுடன் சகோதரிகளுமாக நின்று எடுத்த புகைப்படம் இப்போ அவர்கள் வீட்டுச் சுவரை அலங்கரித்தது.
சூட்டிக்கொண்ட எண்களின் ஒழுங்கின்படி உரிமையாளர் அனைவரும் வீட்டின் துறப்புக்களை அமைச்சரின் கைகளினால் பெற்றுக் கொண்டனர். எல்லோரது கரகோஷங்களும் வானைப்பிளக்க வைபவம் இனிதே நிறைவுறும் வேளையில் மோகனை இறுகத் தழுவிக்கொண்டார் அமைச்சர்.
வெறிகுட் மை சண்!! வண்டர்புல் வேக் அன்ட் அரேஞ்மன்ட்…வெறி பைன்…
அமைச்சர் இராமனா? ஹனுமனா? பாராட்டில் திளைத்த மோகனுக்கு இப்போதும் கண்கள் பனித்தன. யாரும் அறியாத அந்தக் கண்ணீர் தாரணிக்குக் காணிக்கையானது.
எல்லாம் சிறப்புற நிறைவடைய ஒழுங்கமைத்த பணிகளை பார்த்துப்பார்த்து மீண்டும் பழைய நிலையில் கிராமத்தை விட்டு வெளியேறும் வேளை அத்தனை வீட்டுக்காரரும் உறவினர் ஒருவனைப் பிரியும் வேதனையில் அவன் கரங்களைப் பற்றி ஆசுவாசப்பட்டனர். மக்கள் சேவை மகேசன் சேவை என்பார்கள். இப்போ அனைவர் வாழ்விலும் மோகன் கடவுளாக இந்திய காந்தீய கொள்கைக்கு இவன் சொந்தக்காரனாக எல்லோரிடமும் விடைபெற்றான். வசந்தகிராமம் அவனை வழியனுப்ப சைட் கண்ணாடியில் அவர்களோடு கிராமமும் மறைந்து போனது. சீரணித்தாயின் திருக்கோலத்தைத் தரிசித்து சண்டிலிப்பாயிலுள்ள தன் வீட்டிற்கு விரைந்தான்.
அப்பா! எனக்கு என்ன கொண்ணந்தனி? என்ற ஒன்றரை வயது சஹானாவும், அம்மா எனக்கு அடிச்சவா! என்ற நாலுவயது கௌதமும், அப்பா நாளைக்கு ஸ்கூலுக்கு றோயிங்புக் கொண்டு போவேணும்! என்ற அனோஜனும் அவனைச் சூழ்ந்து கொள்ள அடுக்களையிலிருந்து அம்பென வந்தாள் தேவகி.
அப்பா களைச்சுப்போய் வந்திருப்பார் அப்பா முதல்ல குளிச்சு சாப்பிடட்டும் அப்புறமா எல்லாம் கதைக்கலாம். நீங்க போய் ரீ.வீ பாருங்கோ.
வீட்டுச் சுவரில் தொங்கிய தந்தையின் படத்திற்கு மாலை சூட்டி, வேலைக்கான நியமனக் கடிதத்தையும் வைத்து மண்டியிட்டு வணங்கினான். காலம் யாருக்காகவும் காத்திருக்காது. காலனும் அப்படித்தான். தந்தையை அழைத்துவிட்டான். பக்குவ நிலையின் இரண்டாம் படியில் அவன். ஓர் உறவின் இழப்பும் ஏனைய உறவுகளின் பொறுப்பும் அவனைப் பக்குவப்படுத்தியதில் ஆச்சரியமொன்றுமில்லை. வேலை ஒருபுறம், வீட்டுச்சுமை ஒருபுறமாக உழன்று திரிந்து ஓடியாடி மூன்று சகோதரிகளையும் கரை சேர்த்து ஊரிலே ஒரு கண்ணியமானவனாக உயர்வு பெற்று எல்லோருக்கும் உதவும் அபயக்கரமாக அவன் பணிகள் நீண்டுசென்றன. தொழில் என்பது கடமை மட்டுமல்ல, அதையும் தாண்டி ஈடுபாடு, விசுவாசம், சேவை, நேர்த்தி என பல கோணங்களில் பார்க்கப்படும் போது அது புனிதமானது.
சேவைகளின் விரிவினாலே மோகனுக்கு அமைச்சுடனான நேரடித் தொடர்பு, அழைப்பு, ஆலோசனை என அவன் பணியிலும் பல ஏற்றங்கள். கலவரத்தில் சிக்கித்தப்பி வந்த மக்களை இடம்பெயர் முகாம் அமைத்து சகலவசதிகளும் செய்து கொடுத்தான், சுனாமியில் சிக்குண்டவர்களை மீட்டு பற்பல உதவிகள் புரிந்தான்.
நிசாப்புயலால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்றி வேண்டிய ஒத்துழைப்புக்களைச் செய்தான். விவசாயத்தில் பாதிப்பு என்றாலும் சரி, வீடு தீப்பற்றியது என்றாலும் சரி, விபத்து என்றாலும் சரி, உடனடியாக அந்த இடத்தில் மோகன் நிற்பான். பின்வாங்கான் என அப்போ எல்லோரும் பழித்த சொல் இப்போ அவனின் தாரக மந்திரமாக. இவன் பெருமைகளை உணர்ந்த ராசுமாமா தன் மகள் தேவகியை அவனுக்குத் தாரைவார்த்தார். ஊரே விழாக்கோலம் பூண்டு அவன் மணவிழாவைத் திருவிழாவாக்கியது.
ரீ.வீ.யில் அந்தச் செய்தி கேட்டதும் தேவகிக்குக் கைகால் ஓடவில்லை. தரை அவளை விட்டு நழுவும் உணர்வு. உயிரைத் துச்சமென மதித்து வீரதீர செயல்கள் புரிந்து மக்களுக்குத் தன்னலமற்ற சேவை புரிந்த அரசசேவையிலுள்ளோர்களுக்கு வருடாவருடம் அரசாங்கத்தால் வழங்கப்படும் “வீரதீரசூரிய” என்னும் விருதிற்காக இம்முறை உள்நாட்டு அபிவிருத்தி இடர் முகாமைத்துவ அமைச்சின் வடமாகாண அதிகாரி திரு.சோமசேகரம் மோகன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கான விருது எதிர்வரும் நாலாம் திகதி சுதந்திர தினத்தன்று மாலை இடம்பெறும் சிறப்புநிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் வழங்கப்படவுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி.
நான்காவது வரிசையில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் குடும்பசகிதமாக மோகன் அமர்ந்திருக்க அவன் சிந்தை சிறகடித்தது. நேசரி முதல் அறிவு தெளியும் வரையில் அவன் செய்த குழப்படிகள், மற்றவர்களைக் கஷ்டப்படுத்திய தீய செயல்கள், மனங்களைப் புண்படுத்திய காரியங்கள், ஏற்படுத்திய இடர்கள் – இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னுடைய முரட்டுச் சுபாவம் தாரணியைத் தற்கொலை செய்ய வைத்தது. அதேவேளை அவனை அவள் காட்டிக் கொடுக்கவில்லை என எல்லாச் சம்பவங்களையும் ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்கின்றான். அவனுக்குக் கற்பித்த ஆசிரிய ஆசான்களும், ஊர்ப் பெரியவர்கள் சிலரும் விசேட அனுமதி பெற்று விழாவுக்கு வந்திருந்தனர். நேரம் சரியாக 7.00 மணி தேசியகீதம் இசைக்க மோகனின் பெயர் அழைக்கப்பட மேடையில் விருதுபெறும் சமயம் அவன் கண்கள் பனிக்க, அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர். கண்ணீரில் எத்தனை எத்தனை சம்பவங்கள் காவியமாகியது. ஊறுகாயில் ஓர் பக்குவம். உயிர் நிலையில் உணர்வு பக்குவம். மனிதன் பக்குவமாக வாழ உறவுகளின் இழப்புக்கள் ஒருவனைப் பதப்படுத்துகின்றன. பக்குவத்தின் மூன்றாம் படியில் மோகன் நிலைத்து நின்று இனி உலகை ஆளுவான்.
– என் மாதாந்திர ஓய்வூதியம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2012, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.