கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 25, 2023
பார்வையிட்டோர்: 2,134 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடைசியில் அன்னம்மாக்கிழவியின் உடல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்ற பதில்தான் வந்தது.

ஒரு கிழமைக்கு முன்பு, கிளாலிக்கடலேரியில் – படகு கவிழ்ந்ததில் அன்னம்மா ஆச்சி உட்பட ஐந்துபேர் மரணமானார்கள்.

இருளிற்குள் தலையைச்சுவர்மீது முட்டி மோதி, கால்களை பரப்பிச் சுய நினைவற்றுக் கிடந்தாள் பவானி.

உலகம் அழிந்தொழிந்து போனபின் ஏற்பட்டிருக்கும் மயான அமைதியைக் குலைத்துக் கொண்டு -புதிதாகப் பிறந்துவிட்ட ஏவாளெனக் குழந்தை வீரிட்டு அலறியது. அந்த அழுகுரல் காட்டிற்குள் வழிதவறிப் போய்விட்ட ஒரு குழந்தையின் அழுகுரலென பவானியின் காதில் விழுந்தது. கால்கள் தானாகவே எழுந்து, இருளிற்குள் நடந்து, அச்சொட்டாகக் குழந்தை இருக்குமிடம் நோக்கியது. இங்கு இருளிற்குள் நடப்பதற்கு மனிதர்கள் எல்லாம் எப்போதோ பழகிக் கொண்டுவிட்டார்கள். குழந்தை தெப்பமாக நனைந்ததில் உடம்பு விறைத்துப் போயிருந்தது. முதன் முதலாக அன்னம்மா ஆச்சி இல்லாத வெறுமையை உணர்ந்தாள் பவானி.

ஒவ்வொரு இடப்பெயர்வின் போதும், ஏதாவதொன்றை இழந்து கொண்டே வந்திருக்கிறாள் பவானி. இழப்புகள் மீளப்பெற முடியாதவை என்றாகும்போது, அதனால் ஏற்படுகின்ற வலி, துயரப்படிமமாகி நெஞ்சினுள் வடுவாகி விடுகிறது.

பெண் திருமணம் செய்யாவிடில் பேயாகி விடுவாள் எனப் பவானியின் தாயார் நினைத்தாளோ என்னவோ – பவானிக்கு ஒரு திருமணத்தைச் செய்து வைத்தாள். கலியாணம் முடிந்து களையாற முன்னர் அவனும் காணாமல் போய்ச் சேர்ந்தான். பவானியின் கணவன் காணாமல் போகும் போது, அவள் மணிவயிறு இன்னொரு உயிரைக் கண்டுகொண்டது. அதன் பிறகு அம்மாவும் ஒருநாள் சொல்லிக் கொள்ளாமல் சட்டெனவே போய் விட்டாள். அந்த இறப்பின் போது ஒரு புதியபிறப்பு அம்மாவின் அச்சாக பூமியில் வந்து விழுந்தது. அதுவே இப்போது வீரிட்டு அலறியது. எல்லாமே நேற்று நடந்தது போன்ற ஞாபகம்.

அன்னம்மா ஒன்றும் பவானிக்குத் தொப்புள்கொடி உறவல்ல; தெல்லிப்பழையில் இருக்கும்போது பிறந்த ஊரின் பரிச்சயம். முதலில் தெல்லிப்பழையிலிருந்து சங்கானைக்கு இடம்பெயர்ந்தாள் பவானி. பின்பு சங்கானையிலிருந்து நாவற்குழிக்கு. ஒரு பெயர்வின்போது பிரிந்து, மறு பெயர்வின்போது சந்தித்து, விட்டகுறை தொட்ட குறையென வாழ்ந்து கொண்டவர்கள். பெயர்வினால் சின்னாபின்னமாகிச் சிதறிப் போகும் உறவுகள் எல்லாம் மீண்டும் சந்தித்துக் கொள்வார்களா என்பதையும் யாரறிவார்?

விரும்பியோ விரும்பாமலோ சதுரங்க விளையாட்டை ஆரம்பித்தாகி விட்டது. இழப்புக்கள் கட்டாயம் ஏற்படத்தான் செய்யும். காய்கள்தான் தந்திரமாக நகர்த்தப்பட வேண்டும்.

அன்னம்மா ஆச்சி ஜேர்மனியிலிருக்கும் தனது மகன் அனுப்பும் காசை எடுத்து வருவதற்காக அடிக்கடி கொழும்பு செல்வாள்.அப்படியே வவுனியாவில் இருக்கும் பவானியின் தமையன் சுகந்தனிடமும் மறக்காமல் சந்தித்துவிட்டு வருவாள். இந்த முறையும் அப்படித்தான். கொழும்பு சென்று காசை எடுத்துக் கொண்டாள். சுகந்தனையும் சந்தித்துக் கொண்டாள். ஆனால் திரும்பித்தான் வரமுடியவில்லை. போய்ச் சேர்ந்து விட்டாள்.

வரிசையாக வந்த அதிர்ச்சிகளில், பற்றுக்கோடுகள் ஒவ்வொன்றாக அகல, பிரமை பிடித்தவள் போல அந்தப் பெரிய வீட்டில் சின்னஞ்சிறு குழந்தையுடன் முடங்கிக் கிடந்தாள் பவானி.

கையினில் பிள்ளை உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கூடவே கனத்த பூட்ஸ் ஒலிகள் நடை பழகின. பவானி பிள்ளையை இறுக அணைத்து நித்திரை குழம்பிப் போகாதவண்ணம் கவன மெடுத்தாள். வடபகுதி முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிற்பாடு நித்தமும் மரண வேதனைதான்.

“அன்னம்மா! அன்னம்மா!!” இராணுவத்தின் மிடுக்கான குரல் கேட்டது. கதவைக் கைகளால் அடித்தார்கள். ஒருவித பதிலும் வராதுபோகவே காலால் உதைந்தார்கள். ஊரில் எத்தனை கிழவிகள் இருக்கிறார்கள்! எல்லோருடைய பெயர்களும் இராணுவத்தினருக்கு நினைவில் இருக்குமா? அன்னம்மா இவர்களுக்கு எதற்கு வேண்டும்?

“பவானி!ஏய் பவானி” அடைச்ச தொனியில் மறுகுரல் கரகரத்தது.

“பவானி லக்சனய” சொன்னவன் சோமரத்தினாவாகத்தான் இருக்க வேண்டும். ஊரில் எத்தனை இளம்பெண்கள் இருந்தும், பவானி என்ற பெயர் எப்படித்தான் மறக்காமல் இருக்கிறது அவனுக்கு. பார்ப்பதற்குச் செழுமையாக இருந்தால் யாருக்குத்தான் உறுத்தாது. கணவனைத் தொலைத்து விட்டுக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பதால் கழுகுகள் சுழன்று வட்டமிடுகின்றன.

நாலைந்து மாதங்களுக்கு முன்னர், அன்னம்மா ஆச்சி இருக்கும்போது அது நடந்தது. அப்போது இராணுவத்தினர் ஊருக்குள் நகர்வலம் வந்து சோதனை போடுவார்கள். அப்போதுதான் முதன்முறையாகப் பவானியின் கதையும் அவர்களுக்குத் தெரிய வந்தது. பவானி திருமணம் செய்து நாலைந்து மாதங்களின் பின்பு, வேலைக்குச் சென்று கொண்டிருந்த கணவன்

விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற சண்டையின் போது காணாமல் போய் விட்டான்.

நகர்வலத்தில் வந்தவர்களில் சோமரத்தின என்ற சிங்களச் சிப்பாய் – தான் பவானியின் கணவனைத் தேடித் தருவதில் உதவிபுரிவதாகக் கூறினான். சோமரத்தின நன்றாகத் தமிழ் கதைப்பான் என்பதால் பவானி அவனை நம்பிவிட்டாள்.

ஒன்றரை வருடத்தில் எத்தனையோ இராணுவத்தினர் மாறி மாறி நாவற்குழிக் ‘காம்’பிற்கு வந்து போய்விட்டார்கள். சோமரத்தினாவாவது கண்டுபிடிக்கிறதாவது! ஆரம்பத்தில் பவானி அவனை நம்பினாள்தான் – என்றாலும் போகப் போக அவனைப் புரிந்து கொண்டாள். வரும்போதெல்லாம் சோமரத்தினாவின் கண்கள் தீவிரமாக இவள்மீது மேயத் தொடங்கின. இப்போதெல்லாம் எதையும் நம்புகின்ற தன்மை வலுவிழந்து குறைந்து வருகிறது. அவன் தனது கணவனைத் தேடிக் கண்டுபிடிப்பதைக் காட்டிலும், தன்னில் ஏதோ ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பதில் முனைகின்றான் என்பதைப் புரிந்து

துரத்தே வீடு நோக்கிவரும் செல்லமுத்துக்கிழவருடன் பேச்சுக் கொடுத்துவிட்டு நகர்ந்தார்கள் இராணுவத்தினர். செல்லமுத்துக்கிழவரின் வீட்டில்தான் பவானி வாடகைக்கு இருந்து வருகின்றாள். கிழவரின் குரல் கேட்டு கதவைத் திறந்தாள் பவானி.

“தாத்தா! உள்ளுக்கை வந்து இருங்கோ. திரும்பவும் சிலவேளை வருவான்கள்.” கிழவர் உள்ளே புகுந்ததும் கதவைத் தாழிட்டு மூடினாள் பவானி.

“தாத்தா, இஞ்சையிருக்க எனக்கு பயமாக்கிடக்கு தாத்தா.”

“நான் வந்து உன்னோடை இருக்கலாம்தான். ஆனால் எத்தினை நாளைக்குப் பிள்ளை? அன்னம்மாவும் செத்துப் போனாள்! பெம்பிளையா தனிச்சிருந்து என்ன செய்யப் போறாய்? கொண்ணனோடை போய் வவனியாவிலை இருக்கிறதுதான் எனக்குச் சரியெண்டு படுகுது.”

“அதுதான் தாத்தா,அண்ணாவுக்கு கடிதம் போட்டிருக்கிறன். மறுமொழி வந்தாப் போல போவம் எண்டிருக்கிறன். முந்தி ‘வா வா’ எண்டு கடிதத்துக்கு மேலை கடிதமா போடேக்கை பேசாமல் இருந்திட்டன். இப்ப என்ன நினைக்கிறாரோ தெரியாது.”

“அவன் ஒண்டும் நினையான். உன்ரை பிள்ளையைப் படிப்பிச்சு நல்லா ஆளாக்கி விடு. அதுதான் இப்ப முக்கியம்.”

எவர் குறித்தும் எவருக்கும் கவலை கொள்ளவும் அக்கறைப்படவும் நேரமில்லாத போது செல்லமுத்துக் கிழவரின் ஆறுதல் வார்த்தைகள் பவானிக்கு இதமாக இருந்தன. அன்றிலிருந்து பவானியுடன் வந்து இருப்பதாக உறுதியளித்தார் செல்லமுத்தர்.

இரவு நள்ளிரவைத் தாண்டிவிட்ட அந்த அகாலத்தில் வாழைமரத் தோட்டத்துக்குள் ஆளரவம் கேட்டது. முன்பொருநாள் அன்னம்மா ஆச்சி இருக்கும்போது அகாலத்தில் வந்து கதவைத் தட்டினார்கள். மீண்டும் இப்போது அகாலத்தில் வாழைமரத்தோப்புக்குள் சத்தம். சினேகித பாவத்துடன் அடிக்கடி அவர்கள் வந்ததன் நோக்கம் இப்போது பவானிக்குத் தெளிவாகப் புரிந்தது. செல்லமுத்துக் கிழவரை எழுப்பினால் விஷயம் விபரீதமாகிவிடும் என நினைத்தாள் பவானி. கிழவரையே அடித்துக் கொன்று விடுவார்கள். இருளிற்குள் எழும்பிக் குந்தி இருந்தாள். மூளை சுறுசுறுப்பாகியது. கத்துவதற்கு வாயெடுத்தாள். நா வறண்டு சத்தமே வரவில்லை. கைகள் குழந்தையின் தோள்பட்டையை நோக்கி நகர்ந்தன. அந்நேரம் பார்த்து தேங்காய் ஒன்று சதுப்பு நிலத்தினுள் விழுந்து ஓசை எழுப்பியது. பலம் கொண்ட வரை குழந்தையின் தோள்பட்டையைத் திருகினாள். அது பலத்துக் கத்தத் தொடங்கியது.

“ஐயோ! குழந்தைக்கு என்னவோ செய்யுது. ஆராவது ஓடி வாருங்கோ?” என்று சத்தமிடத் தொடங்கினாள். ஆழ்ந்த உறக்கத்திலிருந்த செல்லமுத்துக் கிழவருக்கு ஒன்றும் புரியவில்லை. தானும் சேர்ந்து சுருதி கூட்டினார். அருகே இருந்த வீடுகளிலிருந்து ‘அரிக்கன் விளக்கையும்’ துாக்கிக் கொண்டு ஒருசிலர் ஓடி வந்தனர். வாழைத் தோப்பிற்குள் நின்றவர்கள் அரவம் கேட்டு மறைந்து கொண்டார்கள். இரவு முழுவதும் பவானிக்கு ஒரே கவலையாகிப் போனது. தேக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்து வழிந்தது

***

அதிகாலை மூன்று மணியளவில் பவானி தயாராகி விட்டாள். அத்தியாவசியமான பொருட்களை சூட்கேசில் எடுத்து வைத்துக் கொண்டாள். இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. எப்படியாவது கிளாலிக் கடலைத் தாண்டிப் போய் விடவேண்டும் என்ற வேகம் இருந்தது. ஆனால் துணிவு இல்லை. இவ்வளவு காலமும் தங்கியிருந்த வீட்டைப் பார்த்தாள். வாடகை வீடு என்றாலும் வளர்ந்த இடம். அவள் கணவனுடன் இருந்த காலங்களில் கை கோர்த்துக் கொண்டு உலாவிய பூந்தோட்டம். ஆனாலும் தாயும் கணவனும் அன்னம்மா ஆச்சியும் இந்த வீட்டிலிருக்கும் போதுதானே தொலைந்தார்கள்.

செல்லமுத்துக் கிழவர் அரிக்கன் விளக்கைத் துாக்கிப் பிடித்து குழந்தையைப் பார்த்தார். நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது குழந்தை. சுருட்டைப் புகைத்து புக்குப் புக்கு என்று புகை விட்டார்.

“கவனம் பவானி. பச்சைக் குழந்தை. குளிர் காத்துப் பட்டுக் காய்ச்சலாக்கிப் போடும்.” கிழவரின் குரல் கேட்டு, கம்பளிப் போர்வைக்குள்ளிருந்த குழந்தை கண் விழித்துப் பார்த்தது. கிழவர் மொச்சென்று அதன் உச்சியில் இதழ் பதித்தார். பவானிக்கு கண்களில் நீர் துளிர்த்துக் கொண்டது.

“போட்டு வாறன் தாத்தா” சொல்லிவிட்டு நிலத்தில் கிடந்த ‘பாக்’கைத் துாக்கிக் கொண்டு வாசல்வரை நடந்தாள். பின்னாலே விளக்கைப் பிடித்தபடி தொடர்ந்தார் கிழவர்.

வாசலில் ‘மோட்டார்பைக்’ தயாராகியிருந்தது. இரண்டொரு நாய்கள் குரைத்துக் கொண்டு படலை வரை வந்தன. அருகருகேயிருந்த வீடுகளிலிருந்து ஒரு சிலர் சொல்லி வைத்தாற் போல் இருளிற்குள் வந்து அவ்விடத்தில் கூடினார்கள்.

“கவனமா போ பிள்ளை. போனவுடனை கடிதம் குடுத்துவிடு” என்று சொல்லிக் கொண்டே, ஒருத்தி தான் கொண்டுவந்த திருநீற்றை பவானியின் நெற்றியில் பூசி, பின் குழந்தைக்கும் பூசினாள். இன்னொரு இளம்பெண் பவானியின் கைகளைப் பொத்தி அழுத்திக் கொண்டே சிணுங்கிக் கொண்டாள். பொத்திய கைகளுக்குள் காசு

டம்மாறியது.

“மற்றக்கரையிலை கொண்ணன் வந்து நிற்பான்தானே! பயப்பிடாதை பவானி” என்று சொல்லிக் கொண்டே அவளைக் கட்டிப் பிடித்து கவலை தெரிவித்தாள்.

“எட பெடியா! பாவம் குழந்தையோடை வாறாள். அலுங்காமல் குலுங்காமல் வாகனத்தை ஓட்டி பத்திரமா கொண்டுபோய் சேர்த்து விடடா” செல்லமுத்துக்கிழவர் முனகிக் கொண்டார். செல்லமுத்தருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. பவானி போன திக்கிலேயே இருளிற்குள் பார்த்துக் கொண்டு நின்றார்.

பவானி பிற ஆடவன் ஒருவனுடன் வெளிக்கிளம்புவது இதுதான் முதல்தடவை. வேலிகளுக்குள் முடங்கி சிறகுகளிற்கு விலங்கிட்ட காலம் போய்விட்டது.

மோட்டார் சைக்கிள் வளைந்து வளைந்து ஓடியது. பச்சை வயல்களிடையே வளர்ந்த ஊர் முதலில் மறைந்தது. அது வெறும் மண் அல்ல; அவர்களை ஆளாக்கிவிட்ட ஆதர்ச பூமி. வீசும் புழுதிக்காற்று ஊரெல்லாம் படர்ந்து போயிருக்கும் ‘கெமிக்கலின்’ மணத்தை வாரி இறைத்தது. அச்சம் தரும் சருகுகள் சமுத்திரமாக விரிந்து கிடந்தன. வாழைமரங்கள் கருகிப்போய் மருந்துக்கும் இல்லாமலிருந்தன. பனைமரங்கள் பாதி பாதியாக பிளந்து நிற்கும் கொடுமை நெஞ்சைப் பற்றி எரித்தது. கனரக வாகனங்கள் ஓடி பாதை கிழிந்திருந்தது. மனித உழைப்பின் மகத்துவம் தெரியாத மிருகங்கள் செய்த வேலை ஒற்றையடிப்பாதை, கள்ளியும் இலந்தைப்புதர்களுமென மாறி மாறி வந்து மறைந்து போயின.

திடீரெனக் கடும் குளிர்காற்று வீசுவதை பவானி உணர்ந்த போது, அந்தப்பாதை ஓர் கடற்கரையில் போய் முடிவடைந் திருந்தது. மெலிதாக வெளிச்சம் பரவிக் கிடந்தது. சிறு சிறு கூட்டம் கூட்டமாக மக்கள் படகில் ஏறிக் கொண்டிருந்தார்கள். ஆறேழு படகுகள் கரையில் தரித்து நின்றன. மக்கள் குழுக்களாகப் பிரிந்து நின்றனர். அந்தப் பிரதேசம் அமைதியாகக் காணப்பட்டது. தான் வந்து சேர்ந்த இடம் எதுவெனப் பவானியால் தீர்க்கமாக அறிந்து கொள்ள முடியவில்லை. தேவை இல்லாமல் ஒருவரும் ஒருவருடனும் கதைக்கவில்லை. படகை ஓட்டுபவர்களும் தங்களுக்குள் ஏதோ குறியீட்டுப் பாஷையிலே பேசினார்கள்.

பவானி கொண்டு வந்த ‘புட்டிப்பாலிலே’ குழந்தைக்கு சிறிதளவு ஊட்டினாள். அருகே இருந்த காரியாலயத்தில் காசைக் கட்டி பெயரைப் பதிந்து கொண்ட பின் வரிசையில் சேர்ந்து கொண்டாள். வானம் மின்னிற்று. மழை வரும்போல இருந்தது. ஒவ்வொரு படகோட்டியும் தத்தமக்குரிய மோட்டரை காரியாலத்திலிருந்து எடுத்துக் கொண்டு போய் தமது படகுகளில் வைத்துப் பூட்டினார்கள். வெவ்வேறு வயதினரும், ஆண்களும் பெண்களுமாக கலந்து இருக்கக் கூடிய வகையில் – ஓரளவுக்குத் தரம் பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தான் ஒருவன். படகின் பின்புறம் துடுப்புகள் போல பெரிய தடிகளை கடலிற்குள் ஊன்றிக் கொண்டு இரண்டு ஆண்கள் எழும்பி நின்றார்கள். முழங்கால் வரையும் கடல்நீர் நின்றபடியால், ஒரு கையால் உடுப்புகளைத் துாக்கிப் பிடித்தபடியே படகு வரையும் போக வேண்டியதாயிற்று. பவானியின் பரிதாப நிலையைக் கண்டு, முன்னமே படகுக்குள் ஏறியிருந்த ஒருவன் ஓடிவந்து அவளிடமிருந்த பொதியை வாங்கிக் கொண்டான்.

கால்கள் குளிர் நீரில் சில்லிட்டன.

வயதில் முதிர்ந்தவர்களும் பெண்களும் படகிற்குள் இருக்க, ஆண்கள் படகின் பின்புறமும் பக்கவாட்டிலும் நின்றார்கள்.

படகுக்குள்ளிருந்த பொன்னுக்கிழவி என்ற மூதாட்டி பவானி படகிற்குள் ஏறுவதற்கு வசதியாக – பவானியிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள். உள்ளே ஏறிக் கொண்டதும் தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது உடனிருக் கிறார்களா என்று பவானி நோட்டம் விட்டாள். ஏறக்குறைய இருபது பேர் மட்டில் இருந்தார்கள்.

பவானியின் ஒருபுறம் மூதாட்டியும், மறுபுறம் இராணுவச் சீருடை அணிந்த, பவானியின் வயதையொத்த, இரண்டு பெண்களும் இருந்தார்கள்.

படகோட்டி கடலின் திசை வழி துதித்துவிட்டு இஞ்சினை முடுக்கி விட்டான். பின்புறம் நின்று கொண்டிருந்த இருவரும் மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டார்கள். படகிற்குள்ளிருந்த கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் ஜெபித்தார். அங்கு ஒருவித பயம் கலந்த மௌனம் நிலவியது. எல்லா ஆண்களும் படகைச் சுற்றிவர நின்று தள்ளினார்கள். படகு நகரத் தொடங்கியதும், உள்ளே ஏறிக் குதித்துக் கொண்டார்கள். கரையோரமாக நின்ற ஒரு தொழிலாளி படகோட்டியின் பெயரையும் புறப்படும் நேரத்தையும் குறித்துக் கொண்டான்.

“தம்பி எவ்வளவு நேரத்திலை குஞ்சுப்பரந்தனுக்குப் போகலாம்?”

“ஒருவித பிரச்சனையுமில்லாட்டி அரைமணித் தியாலம் போதும் ஐயா.’

“அதோ தெரியுதே நாலு வெளிச்சங்கள். அதிலை நாலாவது வெளிச்சம் இருக்கிற இடம்தான் நாங்கள் போக வேண்டியது. அந்தத் திசை நோக்கித்தான் இப்ப படகு போய்க் கொண்டிருக்கு.”

“அப்ப தம்பி, ஆனையிறவு எந்தப்பக்கம் இருக்கு?”

“ஆனையிறவு நாங்கள் நிக்கிற திசைக்கு இடப்பக்கமாக இருக்கு. ஆனால் இப்ப தெரியாது. நடுக்கடலுக்கை போன வுடனை ஆனையிறவு ‘காம்’ வெளிச்சம் வடிவா தெரியும். அப்ப நாங்கள் புறப்பட்ட இடமும் தெரியாது, போய்ச் சேர வேண்டிய இடமும் தெரியாது. இரண்டு பக்கமும் நல்ல இருட்டாயிருக்கும்.”

படகோட்டி காட்டிய திக்கில் நான்கு வெளிச்சப் பொட்டுகள் பனிப்புகாரினுள் மங்கலாகத் தெரிந்தன.

“சின்னப் பிள்ளையள் படகைக் கெட்டியாக பிடிச்சுக் கொள்ளுங்கோ. தயவு செய்து ஒருத்தரும் பிலத்துக் கதை யாதையுங்கோ. குழந்தையளுக்கு சாப்பாடு குடுத்து துாங்க வையுங்கோ”.

பவானியின் கைக்குழந்தையைத் தவிர, படகிற்குள் வேறு ரண்டு சிறுவர்கள் மாத்திரமே இருந்தார்கள். அவர்களும் குளிரால் நடுங்கி விறைத்து ஒடுங்கிப் போய் பெற்றோரின் அடியில் புதைந்து கிடந்தார்கள். பவானியின் குழந்தை, அருகே இருந்த இளம்பெண்ணின் மடியில் – இராணுவ உடைக்குள் தவழ்ந்து விளையாடியது. பவானி கொண்டு வந்த பிஸ்கற்றில் ஒன்றை பாலிற்குள் பிசைந்து குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.

ஊர் இன்னமும் விழித்திருக்காது.

படகு கடல் நீரைக் கிழித்துக் கொண்டு வேகம் எடுக்கத் தொடங்கியது. நுங்கும் நுரையுமாகக் கரைபுரண்டு ஓடியது தண்ணீர். இந்நேரம் மறுகரையில் சுகந்தன் அண்ணா தனக்காகக் காத்திருப்பான் என்ற எண்ணம் பவானிக்கு வந்தது.

கடல்நீர்த்திவலைகள் காற்றில் பறந்து தெறித்தன. குழந்தை வானத்து நிலாவிற்கு கை காட்டியது. அன்னம்மா ஆச்சி முன்பெல்லாம் குழந்தைக்கு வானத்து நிலாவைக் காட்டித்தான் சாப்பாடு ஊட்டுவாள். இப்போது அவளே அங்குபோய் குந்திக் கொண்டு விட்டாள். சாப்பாடு உள்ளுக்குப் போக குழந்தை குதூகலமானது. வேக வேகமாக நிலாவிற்கு கை காட்டியது. குழந்தையையும் நிலாவையும் மாறி மாறிப் பார்த்தாள் பவானி. நிலவிற்குள் தனது கணவன் இருந்து கொண்டு கை காட்டிச் சிரிப்பது போலிருந்தது.

பவானி கணவன் மீது கொண்ட நினைவலைகளில் மூழ்கினாள். அவள் தனது கணவன் வருவான் என்று காத்திருக் கின்றாள். ஆனால் காலம் யாருக்காகவும் காத்திருப்பதாகத் தெரியவில்லை.

கடலிற்குள்ளிருந்து துள்ளிக் குதித்த மீன்களிலொன்று பவானியின் முதுகைப் பதம் பார்த்துவிட்டுக் கடலிற்குள் விழுந்து கொண்டது. பவானியின் நிலவின் மீதிருந்த நினைவுப் படலம் அறுந்தது. மீன்கள் கடலிற்குள் அதிகம் இருக்கின்ற பகுதியாக இருக்க வேண்டும். படகுடன் போட்டி போட்டுக் கொண்டு துள்ளிப் பாய்ந்தன. குழந்தை பவானியின் கைகளில் உறங்கிப் போய்விட்டது. குளிர்காற்று முகத்தில் விசுக் விசுக்கென்று அடித்தது. பொன்னுக்கிழவி தான் வைத்திருந்த துணியை பவானியிடம் குடுத்து, குழந்தையை இறுக்கிச் சுற்றும்படி சொன்னாள்.

படகு புறப்பட்ட இடத்தைப் பார்க்க முடியாமல் இருந்தது. அந்த வெளிச்சம் இப்போது மறைந்து போயிருந்தது. சேர வேண்டிய இலக்கு மாத்திரம் தெரிந்தது. ஏறக்குறைய நடுப்பகுதியை அண்மித்து விட்டோம் என்று எல்லோரும் புரிந்து கொண்டார்கள். இடையிடையே மழை துாறிக் கொண்டிருந்தது.

படகின் பின்புறம் நின்று கொண்டிருந்த இருவரில் ஒருவன், படகோட்டியைக் கூப்பிட்டு கைகளால் ஏதோ ஜாடை செய்தான்.

படகின் வேகம் தணிந்து மெதுவாக ஓடத் தொடங்கியது. படகு இயந்திரத்தின் சத்தம், கடலலைகளின் குமுறல் இவற்றி னிடையே போய்ச் சேரவேண்டிய இலக்கின் வெளிச்சமும் மறைந்து போயிற்று.

அகண்ட ஆகாயம். பரந்த கடல். எங்கும் ஒரே இருள். மின்னும் நட்சத்திரங்களையும் நிலவொளியையும் தவிர எங்குமே இருள் அப்பிக் கிடந்தது. விரிக்கப்பட்டிருக்கும் வானும் கடலும் மாயத் திரைகளாயின.

‘எத்தனையோ பேருடன் பிறந்து வளர்ந்தேன். இப்போது தனித்துப் போனேனே!’ என்று ஏக்கமடைந்தாள் பவானி. அவள் விழிகள் கலங்கியிருந்தன. அருகே இருந்த பெண் எப்படி இவள் கவலையைப் புரிந்து கொண்டிருப்பாள்? ஒருவேளை அவளுக்கும் இதே மாதிரிக் கவலைகள்தானா? தனது கையை நீட்டி, பவானியின் கரம்பற்றி தேற்றினாள் அவள். படகுக்குள்ளிருந்து ஒரு கிழவரின் குரல் தீனமாக ஒலித்தது. அவர். அழுகின்றாரா? கடலை வெறித்துப் பார்த்தபடி அவர் அழுது கொண்டிருந்தார். அவர் கவலை அவருள் பொதிந்து கிடந்தது.

வானில் மின்னற்கோடுகள் வெடித்தன. மழை பலக்கத் தொடங்கியது. அந்த மூட்டத் தினுள்ளே திக்கு திசை ஒன்றுமே தெரியவில்லை.

“பாலா அண்ணை! இஞ்சினை நிப்பாட்டுங்கோ. ‘போட்’ டிறெக்சன் மாறிப் போகுது” என்று கூக்குரலிட்டான் பின்னாலே நின்றவர்களில் ஒருவன்.

மற்றவன் இரண்டு கைகளையும் இமைகளுக்குமேல் வைத்து தொலைதுாரம் பார்த்துவிட்டு “ஆனையிறவுக் ‘காம்’புக்கு கிட்ட வந்திட்டோமப்பா!” என்று சலித்தான். அவன் நோக்கிய திக்கில் ஆனையிறவு தடுப்புமுகாமின் வெளிச்சம் மெல்லியதாகத் தெரிந்தது. படகிற்குள் இருந்தவர்கள் பதட்டப்பட்டார்கள். ‘குய்யோ முறையோ’ என்று கூக்குரலிடத் தொடங்கினார்கள்.

“தயவு செய்து ஒருத்தரும் சத்தம் போடாதையுங்கோ.பாலா அண்ைைண முதலிலை இஞ்சினை ஓஃப் பண்ணுங்கோ. உந்தச் சத்தத்துக்கு அங்கையிருந்து வெடி வைப்பான்கள்.”

“நான் இஞ்சினை நிற்பாட்டிறன். நீங்கள் படகைத் திருப்புங்கோ” என்றான் பாலா என்கின்ற படகோட்டி.

இருவரும் கடலிற்குள் தடிகளை ஊன்றி, படகை நெம்பித் தள்ளினார்கள். படகு திசை திரும்பியது. அப்படியே வந்த வழியே கொஞ்சத் துாரம் தண்டு வலித்துப் போனார்கள்.

எல்லோரும் தத்தமது இஷ்ட தெய்வங்களை வணங்கி னார்கள். சிலர் அழுதபடியே படகோட்டியை திட்டித் தீர்த்தார்கள். மழையில் தெப்பமாக நனைந்து போனவர்கள் திராணியற்று புறுபுறுத்தபடியே இருந்தார்கள்.

இயந்திரத்தை நிற்பாட்டி விட்டதால், படகு நடுக்கடலில் நின்று தள்ளாடத் தொடங்கியது. எங்கு போவது என்று தெரியாமையால் படகு நடுக்கடலில் நின்றது. படகோட்டியும் கூட வந்த இருவரும் தங்களுக்குள் வாக்குவாதப் படத் தொடங்கினார்கள்.

“தம்பியவை, முதலிலை எங்களுக்கு ஒரு வழியைக் காட்டிப் போட்டு நீங்கள் சண்டை பிடியுங்கோ.”

“எங்களுக்குப் பின்னாலை வெளிக்கிட்ட படகுகளும் இந்த வழியாத்தான் வரும். கொஞ்சம் பாத்திட்டுப் போகலாம் எண்டுதான் நிக்கிறம்” என்றான் படகோட்டி.

“தம்பி, அதிலை தெரியிறது ஆனையிறவுக் ‘காம்’தானே!”

“ஓம் பெரியவரே!”

“அப்படியெண்டா என்னண்டு இதிலை நிக்கிறது. ‘நேவி’ போய்வாற் இடமில்லையோ? கெதியிலை படகை எடுங்கோ”

“எங்களை நம்பி வந்தனியள். நீங்கள் சொல்லுறபடி ஒண்டும் செய்யேலாது. எங்களுக்கு எப்படி உங்களைக் காப்பாற்றி கொண்டுபோய்ச் சேர்க்கிறது எண்டு தெரியும்.”

“ஓஓ!! ஏதேனுமொண்டெண்டால் நீங்கள் கடலுக்கை குதிச்சு நீந்திப் போயிடுவியள். நாங்கள், இந்தப் பிஞ்சுகள்?”

“நாடு சகோதரச் சண்டையினாலைதான் இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கு. அண்ணன் விடுதலைக்காகப் பாடுபட்டால், தம்பி எதிராளியோடை போய் சேர்ந்து விடுறான். பின்னை நாடு எப்படி உருப்படுறது?”

“வீட்டிலை இருக்கேக்கை ஆகாயத்தாலை வந்து குண்டு போட்டால் ஓடித்தப்பலாம் அல்லது பங்கருக்குள்ளை ஒளிக்கலாம். கடலில் பயணம் மேற்கொள்ளும் போது ‘நேவி’க் கப்பல் வந்தால், அல்லது ஆகாயத்தாலை தாக்குதல் நடந்தால் எங்கே ஓடிப்போவது?”

கொஞ்ச நேரமாக அந்தப் பக்கம் எந்தப்படகும் வரவில்லை.

“நீங்கள் படகுகள் போய்வாற வழியை விட்டு கனதுாரம் தள்ளி வந்திட்டியள் போல கிடக்கு” என்றார் மத போதகர்.

அப்போது சமீபமாக இயந்திரப்படகொன்றின் ஒலி கேட்கத் தொடங்கியது.

“ஐயோ ‘நேவி’ப்படகு போல கிடக்கு” என்றபடி ஒரு பெண் தலையில் அடித்தாள். படகில் உள்ளவர்கள் கலவரப்பட்டார்கள். எதிர்த்திசையில் இவர்கள் நிற்குமிடத் திலிருந்து தொலைதூரம் வழியாக ஒரு விசைப்படகு நிறைய பொருட்களை ஏற்றிக் கொண்டு விரைந்தது. அந்தப் படகு வந்த திசை நோக்கி படகைச் செலுத்தினார்கள். படகிலிருந் தவர்கள் கூக்குரலிட்டார்கள். இவர்களின் சத்தம் அவர்களுக் குக் கேட்கவில்லை. அது விரைந்து தன்பாட்டில் போய் விட்டது.

பவானியின் கையிலிருந்த குழந்தை நன்றாக உறங்கியிருந்தது. மற்றைய இரண்டு சிறுவர்களும் படகிற்குள் குனிந்து ஒளித்திருந்தார்கள். மழை விட்டபாடில்லை. தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தது. அனேகமாக எல்லோருமே தெப்பமாக நனைந்து விட்டார்கள். அலைகளின் நீர்த்திவலைகள் இப்பொழுதும் தெறித்துக் கொண்டிருந்தன. கடலின் குளிர் வாட்டி எடுத்தது. பேரலை ஒன்று கப்பலில் மோதி பவானியின் மேல் பட்டுத் தெறித்தது. உள்ளேயிருந்து அன்னம்மா ஆச்சி அவளைப் பிடித்து இழுப்பது போல இருந்தது. நெஞ்சு திக்கென்றது அவளுக்கு.

விடிந்துவிட்டது.

விடிந்தது இரவுதான், வேறொன்றுமில்லை.

ஆனையிறவுக்கு எதிர்த்தாற்போல ஏதோ வெளிச்சம் தெரிய, அதன் திசை நோக்கி படகு வேகமாக நகர்ந்தது. இருந்தாற்போல் எங்கேயோ ‘சடசட’வென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

மறுபடி இயந்திரத்தை முடுக்கிவிட்டான் பாலன். எல்லாரையும் ஒருமுறை குலுக்கிவிட்டு படகு நீரைக் கிழித்துக்கு கொண்டு மின்னி மறையும் வேகத்தில் போனது. படகின் வேகத்தைக் காட்டிலும் படகிலிருந்தவர்களின் இருதயம் வேகமாக அடித்தது. எங்கு போய்ச் சேர்ந்தாலும் பரவாயில்லை, உயிர் தப்பினால் போதும் என்ற நிலமை.

வெளிச்சம் படரத் தொடங்கும் நேரத்தில் அந்த நான்கு வெளிச்சப் பொட்டுகளும் மெதுவாகத் தெரியத் தொடங்கின. படகிலிருந்தவர்களுக்கு தெம்புவரத் தொடங்கியது. அரைமணி நேரத்தில் போய்ச்சேர வேண்டிய படகு, கடலிற்குள் இரண்டு மணிநேரமாக கண்ணாமூச்சி காட்டி விட்டுக் கரையைச் சேர்ந்தது.

எல்லையற்ற ஆனந்தத்தில் எல்லோரும் துள்ளிக் குதித்தார்கள். பவானி படகுக்குள்ளிருந்த படியே தனது அண்ணன் வந்திருக்கிறானாவென நாலாபுறமும் பார்வையைச் செலுத்தினாள்.

படகின் அருகே வந்த இராணுவச் சீருடைப் பெண், வந்து சேர்ந்த எல்லோருக்கும் கனிவோடு உதவிக் கொண்டிருந்தாள். ‘இனி டிராக்டரிலை காட்டு வழிப்பயணம். அரைமணித் தியாலம் எடுக்கும்” என்றாள் அந்த இராணுவச் சீருடைப் பெண். அவள் இப்போது பவானியுடன் மிகவும் சினேகிதமாகிவிட்டாள். அவள் காட்டிய திக்கில் கடற்கரையை அண்டிய பற்றைகளுக்குள் ஆறேழு டிராக்டர்கள் ஒழிந்து நின்றன. படகிலிருந்து இறங்கியவர்கள் சேற்றுக்குள் புதைந்து புதைந்து ஊர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

“குளிருக்கை குழந்தை விறைச்சுப் போயிருக்கும். உடம்பை உலர்த்திவிட்டு ஏதாவது உடுப்புகள் கொண்டு வந்தா மாத்தி விடவேண்டும் தெரிந்ததோ!” என்றாள் பொன்னுக்கிழவி.

குழந்தை என்றுமில்லாதவாறு பவானியின் கைகளில் கனப்பதுபோல இருந்தது. குழந்தையின் தேகத்தை தொட்டுப் பார்த்தாள் பவானி. தேகம் சில்லிட்டுக் கிடந்தது. நீலம் நரம்பிழைகளாக எங்கும் படர்ந்திருந்தது.

“ஐயோ! பிள்ளைக்கு மூச்சு வருகுதில்லைப் போல கிடக்கு. விறைச்ச மாதிரிக்…”

பதற ஆரம்பித்தாள் பவானி. அப்படியே மணலிற்குள் குந்தி விழுந்தாள். குழந்தையின் மூக்கருகில் கையைக் கொண்டு போனவள், சந்தேகம் வரவே குழந்தையின் கை கால்களை தனது கைகளால் தேய்த்து உஷ்ணம் ஏற்படுத்தினாள். பின் குழந்தையின் மார்புமீது பலமாக தனது கைகளினால் அடித்தாள். ஒன்றும் பயனில்லாது போக நிமிர்ந்து “ஐயோ” என்றாள்.

வானோக்கி எழுந்தது அந்த அவல ஒலி. அந்த அலறல் வெற்று வெளியில் ஓடி தேய்ந்து உருவழிந்து போகிறது. குழந்தையை நன்றாகப் படிப்பித்து ஆளாக்க வேண்டும் என்று வீறுடன் சடைத்தெழுந்த அவா சருகாகிக் போனது. உலகத்தில் மனிதர்கள் நினைக்கிறபடியோ, விரும்புகிறபடியோ என்னதான் நடக்கிறது?

டிரக்டர் ஓட்டுபவர்கள் எல்லாரையும் வந்து ஏறும்படி கத்தினார்கள். பவானி, பொன்னுக்கிழவி, இரண்டு இராணுவச் சீருடைப்பெண்கள் இவர்களைத் தவிர எல்லோரும் டிரக்டரில் ஏறிவிட்டார்கள்.

“இனி என்ன பிள்ளை செய்யிறது. வா வந்து ஆகவேண்டிய காரியங்களைப் பார்ப்பம்” என்றாள் பொன்னுக்கிழவி.

“நானும் உங்களுடன் கூட வரலாமா?” பவானி, இராணுவச் சீருடை அணிந்த அந்தப் பெண்களைப் பார்த்துக் கேட்டாள்.

அந்த இருபெண்களுக்கும் அந்தக் கேள்வியின் உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குழந்தையின் சடலத்தை பவானியிடமிருந்து ஒரு பெண் வாங்கிக் கொண்டாள். மறுபெண் பவானியை ஆதரவாக அணைத்துக் கொண்டாள்.

பவானி அந்தப் பெண்களுடன் தன் குழந்தையின் சடலம் சகிதம் தீர்க்கமாக நடந்தாள். அந்த நடையில் இப்போது ஒரு வீரம், ஆவேசம், தீர்க்கம் தெரிந்தது. அது விடுதலையை நோக்கிய நடை.

– மரத்தடி இணையம், 2004

– எங்கே போகிறோம் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மார்கழி 2007, அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம், அவுஸ்திரேலியா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *