நேற்று என்பது வெற்று வார்த்தையல்ல

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 9,659 
 

’அறிவிக்கப்படாத’ நெருக்கடிநிலைப் பற்றி எதிர்கட்சிகள் புலம்பித்தீர்க்கும் காலமிது. ஆனால் நான் சொல்லப்போகும் காலகட்டமோ ’அறிவிக்கப்பட்ட’ நெருக்கடிநிலை கோலோச்சிய காலம். சட்டப்பூர்வமாகவே, இந்திய அரசியலமைப்பு விதி 352-ன் படி நெருக்கடிநிலையை பிரதமர் இந்திராகாந்தி, குடியரசு தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களின் மூலம் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதி அறிவித்தார்.இது 21 மாதங்கள் அமுலில் இருந்தது, அதாவது 1977, மார்ச், 21-ஆம் தேதி வரை.

எனக்கு அப்போது பதினான்கு வயது. நாடுமுழுவதும் நெருக்கடி நிலை தீவிரமாக அமுல்படுத்தப்பட்டிருந்த நேரம்.  உணவுவிடுதிகளின் வாசல்களில் உணவுப்பண்டங்களின் விலைப்பட்டியல் எழுதிவைக்கப்பட்டிருந்ததையும், ரயில்வண்டிகள் சரியான நேரத்திற்கு நடைமேடைகளில் வந்துநின்றதையும் வைத்தே நெருக்கடிநிலையை ஆதரித்தவர்கள் அநேகம். ஆனால் சிறைச்சாலைகளும், காவல்கொட்டடிகளும் நெருக்கடிநிலையின் உண்மையினை உணர்த்திக்கொண்டிருந்தன. அரசு எதை மறைக்கப்பார்த்ததோ அந்த உள்ளார்ந்த சாரத்தை மக்களிடம் எடுத்துச்சொல்ல, அந்த கடுமையான அடக்குமுறை காலகட்டத்திலும் எண்ணற்றோர் பாடுபட்டுக் கொண்டிருந்தனர்.

எங்களூருக்கும் பல தலைவர்கள் இரவுநேரத்தில் ரகசியமாக வந்து அரிசி ஆலைகளிலும், கோயில்களிலும், மக்களை கூட்டி நாட்டின் நிலையை விளக்குவர். அதைப்போன்றதொரு கூட்டத்திற்கு அப்பா சென்றபோது, அடம்பிடித்து நானும் ஒட்டிக்கொண்டேன். அந்தக்கூட்டத்திற்கு காமராஜருக்கு நெருக்கமான பெரியவர் பா.ராமசந்திரன் தலைமை தாங்கினார். பெட்ரோமாக்ஸ் விளக்குகளின் மங்கிய வெளிச்சத்தில், அரிசிஆலையில் அவித்த நெல்லை காயப்போடும் களத்தில் சொற்பமாக கூடியிருந்த மக்களிடையே அவர் உரையாற்றினார்.மென்மையான குரல் அவருடையது என்பதுதான் நினைவிலுள்ளது. மற்றபடி என்னுடைய பதினான்கு வயதுக்கு வேறெதுவும் தீவிரமாக புரிந்திருக்கவில்லை. ஆனாலும் கூட்டத்தின் தன்மை இறுக்கம் நிறைந்து அசாதாரணமாக இருந்ததை என்னால் உணரமுடிந்தது. பக்கத்தில் அமர்ந்திருப்பவரை அந்த இருட்டில் நீண்டநேரம் உற்றுப்பார்த்து தெரிந்தவர்தானா என உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றது அந்த காலகட்டத்தின் தன்மையை எடுத்துக்காட்டியது.

இரண்டு மணிநேரத்தில் கூட்டம் முடிந்துவிட்டது. திரும்பும்போது அப்பாவிடம் நிறைய கேள்விகளை கேட்டுக்கொண்டே வந்தேன். அவரும் சளைக்காமல் விளக்கினார். அம்பத்தூரில், ஒரு தொழிற்சாலையில் அப்பா வேலை பார்த்து வந்தார். அவருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தது. பகல் ஷிப்ட் இருக்கும் வாரங்களில், இரவு உணவுக்குப் பிறகு பல்வேறு விஷயங்களை சுவையாக எங்களுக்கு கூறுவார்.
தொழிற்சங்கத்தில் மிக தீவிரமாக பணியாற்றி வந்தார். நிறைய பேர் வீட்டிற்கு வருவார்கள். தொழிற்சாலை வேறு, குடும்பம் வேறு என பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்கு தொழிலாளர்களின் குடும்பங்கள் உண்மையான வர்க்க உணர்வுடன் வாழ்ந்த காலமது. தொழிலாளர்களுக்காக பாடுபடும் தலைவர்கள், தொழிலாளர்களின் குடும்பங்களாலும் தலைவர்களாகவே மதிக்கப்பட்டனர். எங்களது குடும்ப பிரச்சினைகளைக் குறித்தும் அவர்களிடம் கலந்தாலோசிப்பது வழக்கமாக இருந்தது. அன்று இருந்த தலைவர்கள் தொழிற்சங்கத்தைப்பற்றி மட்டுமல்லாமல், சமூகத்தைக் குறித்தும்,வாழ்க்கையைக் குறித்தும், உலக விஷயங்கள் குறித்தும்கூட தொழிலாளர்களுக்கு போதித்தார்கள்- இதுவே நெருக்கடிநிலை அவர்களை வேட்டையாட போதுமான காரணமாக இருந்தது- அந்த போதனை அப்பாக்கள் மூலமாக, குடும்பங்களுக்கும் இயல்பாகவே வந்து சேர்ந்தது. என்னை இந்த போதனைதான் நூல்நிலையத்தை நாடவைத்தது. பாடபுத்தகங்களுக்கு அப்பால் அறிவைத் தேடவைத்தது. உழைத்து பிழைப்பவர்கள் அனைவரும் உலக அளவில் ஒரே குடும்பம்தான் என்பதை உணரவைத்தது.
வழக்கமாக, களைப்புடன் வீடு திரும்பும் அப்பா அன்று மிக உற்சாகமாக இருந்தார். முகத்தைக் கழுவிக்கொண்டு துண்டால் துடைத்தபடியே, ’இன்னைக்கு உங்களுக்கு நிசமாகவே நடந்த ஒரு சம்பவத்தைப்பற்றி சொல்லப்போகிறேன்’ என்றார். அம்மா உள்பட அனைவரும் அவரைச் சுற்றி அமர்ந்துக் கொண்டோம்.

இன்று எங்கள் தொழிற்சாலை முழுவதும் இதைப்பற்றித்தான் பேச்சு. போன வாரம் நடந்த உண்மை சம்பவம் இது. எங்களோட தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரு, செயலாளரு எல்லோரும் இப்போ தலைமறைவா இருக்காங்க என்கிற சங்கதி உங்களுக்குத் தெரியும்தானே’
‘தலைமறைவுன்னா என்னாப்பா’ இது எனது தங்கையின் கேள்வி.

அப்பா பதில் சொல்வதற்கு முன், ’எனக்குத் தெரியுமே, ரகசியமா ராத்திரிநேரத்தில கூட்டம் நடத்துவாங்களே, அதுதானேப்பா’ என்று நான் முந்த, ’அதில்லடா, அரசாங்கத்தை எதிர்க்கறவங்களை போலீசு புடிச்சு ஜெயில்ல போட பார்க்கும்.ஆனா அவங்களோ, போலீசுக்கு டிமிக்கி கொடுத்துட்டு, ரகசியமா அவங்க வேலைய தொடர்ந்து செஞ்சுகிட்டே இருப்பாங்க. அவங்களத் தான் தலைமறைவா இருக்கறவங்கன்னு சொல்லுவாங்க’.

’அதுக்கு ரொம்ப தைரியம் வேணும்தானே’ என்று அம்மா கேட்டாள்.

’பின்ன, வீட்டுக்குள்ள கும்மியடிக்கிற விஷயமா இது.’

’சரி சரி சொல்லவந்ததை முடிங்க’

’இப்போ எங்க தலைவருங்கள்ளாம் தலைமறைவா இருக்கறாங்க இல்லியா, போன வாரம் ஒரு ரகசிய கூட்டத்தில கலந்துக்கறதுக்காக எங்க தலைவரு வீராசாமி திருச்சி போயிருந்தாராம்’.

’நம்ம வீட்டுக்குக்கூட போன மாசம் வந்திருந்தாரே அவரா’ என அம்மா கேட்டபோதுதான், எனக்கும் அவரது முகம் ஞாபகத்துக்கு வந்தது.

அன்று நாங்கள் இரவு உணவுக்குப்பிறகு படுக்க பாய் விரித்துக் கொண்டிருந்தபோது, கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, யாரென்று பார்க்க கதவைத்திறந்தேன். இதற்குமுன் பார்த்திராத ஒருவர் நின்றிருந்தார். என்னவென்று கேட்க, எனது அப்பாவை கூப்பிடச்சொன்னார். நானும், ’அப்பா, உங்களை கூப்பிடறாங்க’ என குரல் கொடுத்தேன்.

அப்பா அவரைப் பார்த்தவுடன், ’அடடே.. வாங்க தலைவரே வாங்க’ என்று வரவேற்ற கையோடு, ’ஏண்டா, வந்தவரை வாசலிலேயே நிக்கவைப்பியா, உள்ள வாங்கன்னு கூப்பிடமாட்டியா’ என கோபித்துக்கொண்டார். உடனே அவரோ, ’லோகு, அவன் மேல ஒரு தப்புமில்ல, சும்மா தேவையில்லாம திட்டாதே’ என்றார். ’சரிங்க தலைவரே’ என அப்பா பணிவாக பதில்சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வந்தவர் அப்பாவைவிட பெரியவர் என்பது புரிந்தது.

’சாப்பிட்டீங்களா தலைவரே’ என்று கேட்டவர், ’எங்க சாப்பிட்டு இருக்கப்போறீங்க, புஷ்பா, சட்டுன்னு தலைவருக்கு சாப்பாடு போடு’ என்று அம்மாவுக்கு குரல் கொடுத்தார்.

‘அதெல்லாம் வேண்டாம், இப்பத்தான் சாப்பாட்டை முடித்து படுக்க பாய் போட்டிருக்கீங்க, அவங்கள சும்மா தொந்தரவு பண்ணாத’ என்றார். அப்பா பேச வாய் திறக்கும்முன்னே, ’அதெல்லாம் ஒரு சிரமமுமில்லீங்க, கையை கழுவிக்கிட்டு வாங்க’ என அம்மா பதிலுரைத்தது, அப்பாவின் முகத்தை பிரகாசமாக்கியது. எப்போதும் எத்தனைப் பேர் வந்தாலும் சாப்பிடாமல் அம்மா அனுப்பியதேயில்லை, என்றும் வற்றாத அமுதசுரபி அவளது மனது. உணவுக்குப்பிறகு அப்பாவும், அவரும் இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.காலையில் எழுந்துபார்க்கும்போது அவர் இல்லை.

அப்பா தொடர்ந்தார்..’திருச்சிக்குப் போனவரு, அங்க இருக்கிற தலைவருங்கள பார்த்து பேசிட்டு திரும்பும்போது ராத்திரி பத்து மணி. பஸ்ஸோ,லாரியோ எது கிடைக்குதோ அதைப் புடுச்சி வந்திடலாமுன்னு நினைச்சிகிட்டிருந்தப்போ, போலீஸ் வண்டி ஒண்ணு சர்ருன்னு வந்து நின்னுச்சாம். அங்க இருந்த ஒவ்வொருத்தரையும் போலீசார் விசாரிச்சு, சந்தேகமானவங்கள போலீஸ்வண்டில ஏத்திகிட்டுப் போனாங்களாம். இதுல நம்ம தலைவரும் ஒருத்தராம். எப்பவும் ஒரே அலைச்சல்ல இருக்கற மனுஷனாச்சே, அழுக்குத்துணி, சவரம் பண்ணாத மூஞ்சி,பரட்ட தல. பின்ன, போலீசுக்கு சந்தேகம் வராம இருக்குமா.’

இத்தனைக்கும் நம்ம தலைவர போலீசு வலவீசி தேடிக்கிட்டிருக்குது. யாரு செஞ்ச புண்ணியமோ, அங்க இருந்த போலீசுக்கு அவரைத் தெரியல.இவரு என்னென்னமோ சொல்லிப் பார்த்திருக்கறாரு, யாரும் காதுல போட்டுக்கவே இல்ல. ’எல்லாம் காலையில பேசிக்கலாம். இப்போ ஒழுங்கு மரியாதையா அந்தமூலையில போய் உட்காருன்னு’ கறாரா சொல்லிட்டாங்களாம். மறுபடியும் போய் அங்க இருந்த இன்ஸ்பெக்டருகிட்ட போய், ’அய்யா, அவசரமா மெட்ராசுக்கு போகணுமுங்க, ஒரு துக்க காரியமுங்க’ன்னு பவ்யமா கேட்டிருக்குறாரு. ’அதெல்லாம் எனக்குத் தெரியாது, வேணுமின்னா, பன்னெண்டு மணிக்கு எங்க சர்க்கிள் வருவாரு, அவருகிட்ட கேட்டுக்கோ’ன்னு தீர்த்து சொல்லிட்டாராம்.

’அய்யா, டீ எடுத்துட்டு வரட்டுமா’

’யோவ், எந்த நேரத்திலும் சர்க்கிள் வந்திடுவார்யா, அவர் வந்தப்பிறகு எடுத்துட்டு வா’. ‘இப்ப வந்திருப்பவர், பழைய அய்யா போலிருப்பாருங்களா சார்’ ’யோவ், இவரு மெட்ராசுக்காரரு. பேரு பாண்டித்துரையாம். ரொம்ப ஸ்டிரிக்ட்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன், புரமோஷன்ல இப்பதான் வந்திருக்கிறாரு.’

இவங்க பேச்ச கேட்ட நம்ம தலைவருக்கு, இங்கிருந்து இனிமே தப்பறது கஷ்டமுன்னு புரிஞ்சுபோச்சு. ஏன்னா, அந்த பாண்டித்துரைக்கு நம்ம தலைவர ரொம்ப நல்லா தெரியும். பின்ன, அவன் சும்மா விடுவானா. மணியோ ராத்திரி பதினொண்ணு. சர்க்கிள் எந்த நேரமும் வரலாம்.

என்ன செய்யலாமுன்னு யோசிச்சவரு, சட்டுனு, தன்னோட துண்ட எடுத்து தனக்கு முன்னால விரிச்சு மாருலயும், தலையிலயும், தரையிலும் ரெண்டு உள்ளங்கைகளாலயும் மடார், மடாரென அடிச்சுக்கினு ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டாராம். ’அய்யோ,அம்மா, என்னை பத்துமாசம் சுமந்தவளே, உன்ன கடேசி நேரத்தில பார்க்க முடியாத பாவியாயிட்டேனே’ன்னு ரொம்ப சத்தமா ஒப்பாரி வெச்சு அழவே, எல்லோரும் திகைச்சுப்போயிட்டாங்களாம். இன்ஸ்பெக்டருக்கு என்ன செய்யறதுன்னே தெரியல.
அந்த ஏட்டுதான், ’டேய், இப்போ, வாய மூடறயா,இல்லியா. அடிச்சு மூஞ்சுமுகரைய பேக்கவா’ன்னு மிரட்டியிருக்கான்.அந்த இன்ஸ்பெக்டருதான், ’யோவ் சும்மா இருய்யா, அவனே அம்மா செத்துட்டாங்களேன்னு ஒப்பாரி வெச்சுகிட்டிருக்கான், அவனப்போய் மிரட்டறயே’ன்னு அதட்டினாராம்.
ஒப்பாரி ஓயறதா தெரியல, ’கோழிக்குஞ்சைப்போல பொத்தி பொத்தி வளர்த்தியே, என் ஆத்தா, கடைசிப்பால் வார்க்கற பாக்கியம் கூட எனக்கில்லாம போச்சே, என்னைப் பெத்தவளே, அப்பனா இருந்து என்னை வளர்த்து ஆளாக்கினியே, உன்ன எமனோட வாய்க்கு இரையாக்கிட்டனே. வாய்க்கரிசி போடக்கூட வாய்ப்பு கிடைக்காது போலிருக்கே. போகாதே, போகாதேன்னு கடைசி வரை கதறனியே, கல்லுநெஞ்சுக்காரனா உன்னை உதாசீனம் பண்ணிட்டு கிளம்பி வந்ததுக்கா எனக்கிந்த தண்டன..அய்யோ என்னை பெத்தவளே, உன் பேச்சை நான் இனிமே தட்டவே மாட்டம்மா.. உன்னை ஒரு தடவை இந்த பாவக்கண்ணால பாத்தா போதுமே, என்னை படைச்ச சாமி.. என் ஆத்தாவை பார்க்கற பாக்கியத்த தாருமய்யா.. புண்ணா புழுத்துப்போன என்னை, இடுப்புல தூக்கிக்கினு நாலுமைலு நடந்துபோய் ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியா அலைஞ்சு என்னை காப்பாத்தினியே.. உன்ன கடைசியா சுமக்கிற பாக்கியமில்லாம போயிடுச்சே..அய்யோ..என்னை பெத்த ஆத்தாவே..சாமிக்கு கண்ணில்லியா..பெத்தவளை பறிகொடுத்துட்டு குத்துக்கல்லா இங்கிருக்கேனே. இந்த ஏழையோட கூக்குரல கேக்கக்கூட எந்த கடவுளுக்கும் காதில்லயா. அய்யோ.. இப்படி நாதியத்துப்போயிட்டேனே’. போகப்போக பெருங்குரல்ல ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டாரு. நடுநிசியில வைக்கப்படும் ஒப்பாரி எந்த கல்மனசுக்காரனையும் கரைச்சுடுமே.

மூக்க சிந்தறதும், முகத்துல, மார்ல அடிச்சுக்கிட்டே ராகத்தோடு ஒப்பாரி வெக்கறதுமா நம்ம தலைவரு எல்லாரையும் அழவெச்சுட்டாரு. அந்த நடுநிசியில், காவல்நிலையத்தையும் தாண்டி ஊருக்குள் பரவ ஆரம்பித்தது, இவரது கணீரென்ற ஒப்பாரி.மாரில் அவர் அடித்துக்கொள்ளும் ஒவ்வொரு அடியும் இடி போல அனைவரது செவிகளையும் தாக்கியது. மனசையும்தான்.

ஒருகட்டத்துக்குமேல இந்த இம்சையை தாங்கமுடியாத இன்ஸ்பெக்டர், ஏட்டைப் பார்த்து, ’யோவ், இவன் ஒப்பாரி ஊரையே கூட்டிடும் போலிருக்கே. சுத்த காட்டுப்பயலா இருக்கான். மார்ல இப்படி அடிச்சுக்குறானே, ஏதாவது ஏடாகூடமா ஆயிடப்போவுது. சர்க்கிள் வரதுக்குள்ள, அவன விரட்டிவிடுய்யா’ன்னு ஆர்டர் போட்டாராம்.

அவ்வளவுதான், தல தப்பிச்சது தம்பிரான் புண்ணியமுன்னு, அவருக்கு அழுதுகிட்டே பெரிய கும்பிடு போட்டுட்டு சவாரி விட்டாராம். நம்ம தலைவரோட நிழலைக்கூட அரசாங்கத்தால தீண்டமுடியாது, அவரு காத்து மாதிரி, எங்கேயும் புகுந்து வேலையை முடிச்சுகிட்டு வந்துடுவாரு’ என்று அப்பா சொல்லிமுடித்தபோது, உடனே எனது தம்பி ராஜு, ’நான்கூட பெரியவனாகி, நம்ம தலைவரப் போலவே, தலைமறைவாகி போலீசுக்கு டிமிக்கி கொடுக்கப்போறேனே’ என பெரிய மனுஷத்தோரணையில் அறிவித்ததும், எங்களால் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

’ஒழுங்கா படிக்கறதுக்கு வக்கு இல்ல, தலைமறைவா போகப்போறாராம், போலீசுக்கு டிமிக்கி கொடுக்கப்போறாராம், உன்னை இப்போ….’ என்றபடியே கையை ஒங்கிக்கொண்டு ராஜுவை நோக்கி பொய்க்கோபத்தோடு பாய்ந்த அம்மாவிடமிருந்து தப்பிக்க,அப்பாவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு தன் ரோஜாநிற நாக்கை நீட்டி அழகுகாட்டினான்.

***இந்த சிறுகதை கல்வெட்டு பேசுகிறது இதழில் வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *