மணியாச்சி ரயில்வே ஸ்டேஷன்.
காலை ஆறரை மணிக்கு பொலபொலவென நன்கு விடிந்து ஸ்டேஷன் மரப் பறவைகள் ஒருசேர கிறீச்சிட்டன.
ரயிலில் திருநெல்வேலி சென்று கொண்டிருந்த நானும் என் மனைவி சரஸ்வதியும் மெதுவாக அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்துகொண்டோம். சரஸ்வதி பாத்ரூம் போய் பல்லைத் தேய்த்துவிட்டு வந்து “என்னங்க, எனக்கு காபி சூடா வேணுங்க…” என்றாள்.
நான் வெளியே எட்டிப்பார்த்து, ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காபி விற்றுக் கொண்டிருந்த ஒரு முதியவரிடம் இரண்டு காபிகள் சொன்னேன். அவர் உடனே அவசர அவசரமாக இரண்டு பிளாஸ்டிக் கப்புகளில் காபியை ஊற்றி என்னிடம் கொடுத்தார். மரியாதைக்குரியவராகக் காணப்பட்டார். நெற்றியில் பட்டையாக திருநீறு அணிந்திருந்தார்.
“எவ்வளவுப்பா?”
“இருபது ரூபா சார்…”
சட்டைப்பையைத் துழாவினேன்… என்னிடம் ஒரேயொரு இருநூறு ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது. அதை எடுத்து அவரிடம் நீட்டினேன்.
“சில்லறையாக இல்லையா?” என்று கேட்டபடியே இருநூறு ரூபாய் நோட்டை வாங்கிக்கொண்ட அந்த முதியவர், பாக்கி சில்லரையை எடுத்து எண்ணிக் கொடுப்பதற்குள் ரயில் கிளம்பிவிட்டது.
அந்த வயதானவர் பாவம் சற்று தூரம் ரயிலுடன் ஓடிவந்தார். ஆனால் அதற்குள் ரயில் வேகமெடுத்து பிளாட்பாரத்தைத் தாண்டிவிட்டது. சரியான சில்லறை என்னிடம் இருக்கிறதா என்று பார்க்கும் முன்பே காபியை நான் வாங்கியது என் தவறு என்று எனக்குப் புரிந்தது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி, “அடக் கடவுளே! இவ்வளவு பெரிய முட்டாளாவா இருப்பீங்க? வயசும் அனுபவமும் இருந்து என்ன பிரயோசனம்? என்னிடம் கேட்டிருந்தால் நான் ஹாண்ட்பேக்கில் இருக்கிறதைப் புரட்டி இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்திருப்பேனே…” என்று பிலுபிலுவென பிடித்துக்கொண்டாள்.
என்னை மட்டம் தட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பத்தை நானே அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன். இனி இதையே இவள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்.
நான் சப்பைக்கட்டு கட்டும் விதமாக, “ஒருவேளை நான் பணம் கொடுப்பதற்கு முன்னாடி ரயில் புறப்பட்டிருந்தா, பாவம் அவர் நஷ்டப் பட்டிருப்பாருல்ல?” என்றேன்.
“என்னது, அவருக்கு நஷ்டமா? காலைலேருந்து உங்களை மாதிரி ஒரு பத்து பேராவது அவர்கிட்டே இப்படி ஏமாந்திருப்பாங்க…இதை அவர் ஒரு யுக்தியாகவே கடைபிடிச்சு உங்களை மாதிரி ஏமாந்த மூஞ்சிகளுக்கு அவர் நாமம் போட்டுவிடுவார். எல்லோரும் உங்களை மாதிரி நியாயம், தர்மம்னு இருப்பாங்கன்னு மட்டும் நினைக்காதீங்க…”
சக பயணிகள் எங்களை வேடிக்கை பார்த்தனர். எனக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. ரயில் கடம்பூர், நாரைக்கிணறு ஸ்டேஷன்களைத் தாண்டி விரைந்தது…
“சரி விடு… இதைப் பெரிசு பண்ணாத…” சரஸ்வதியையும் என்னையும் சமாதானப் படுத்தும் விதமாக சொன்னேன். அவளும் வாயை மூடிக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் ரயில் தாழையூத்து ஸ்டேஷனில் நுழைந்து நின்றது.
அப்போது, “ஸார் மணியாச்சில ரெண்டு காபி வாங்கிட்டு இருநூறு ரூபாய் நோட்டு கொடுத்தது யாரு?” என்று ஒரு குரல் கேட்டது.
குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினேன். எனக்குள் ஒரு நம்பிக்கைக் கீற்று மின்னியது. நான் காபி வாங்கிய வயதானவர் அங்கே இல்லை. மாறாக ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஸ்கூல் யூனியார்மில் புத்தகப் பையுடன் நின்று கொண்டிருந்தான்.
“ஆமாப்பா, அது நான்தான்… ஆனாலும் நான் உன்னிடம் காபி வாங்கவில்லை. அவர் வயதானவர்.”
“உண்மைதான் ஸார். அது என்னோட தாத்தா. அவர்தான் எனக்கு மொபைலில் போன் செய்து S6 பெட்டியில் ஒருத்தருக்கு நீ பாக்கியை தேடிப்போய்க் கண்டுபிடித்து கொடுத்துவிடு…” என்று சொன்னார்.
எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
“மணியாச்சி ஸ்டேஷனில் இப்படி சில சம்பவங்கள் நடந்துவிடும் ஸார். உடனே தாத்தா எனக்கு போன் செய்து கோச் நம்பரை சொல்லிவிடுவார். நான் ஸ்கூலுக்குப் போகும்போது தினமும் காலை தாழையூத்தில் ரயில் ஏறுவேன். அப்போது அவர்களை தேடிச்சென்று பாக்கியை திருப்பிக் கொடுப்பேன்… ஆனா இன்னிக்கி என்னிடமும் இருநூறு ரூபாய் நோட்டுதான் இருக்கிறது. நீங்க திருநெல்வேலி ஜங்ஷனில் மாத்திக் கொடுங்க…” என்று சொல்லி என்னிடம் இருநூறு ரூபாய் நோட்டை நீட்டினான். நான் வாங்கிக்கொண்டேன்.
சரஸ்வதி தன்னுடைய ஹேண்ட்பேக்கில் இருந்து நான்கு ஐந்து ரூபாய் நாணயங்களைத் துழாவி எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
“தம்பி நீ படிக்கிறியா?”
“ஆமாம் பத்தாம் வகுப்பு ஸார். சில சமயங்களில் என் தம்பியும் இதுபோல தாத்தாவுக்கு உதவி செய்வான். தாத்தாவுக்கு வீடு மணியாச்சில. எங்கவீடு தாழையூத்துல… “
அப்போது அவன் மொபைல் சிணுங்கியது. “ஆமா தாத்தா, அவரோட பணத்தை இப்பதான் செட்டில் பண்ணேன்.”
எனக்கு உடனே அவன் தாத்தாவிடம் பேசவேண்டும் என்று ஆர்வம் பொங்கியது. சிறுவனிடமிருந்து மொபைலை வாங்கி அவரிடம், “சார் உங்க பேரன் நீங்கள் தரவேண்டிய பணத்தை செட்டில் செய்துவிட்டான்… நான் உங்கள் செயலைப் பாராட்ட எண்ணிதான் இப்போது பேசுகிறேன்… உங்கள் பேரன்களுக்கு தர்மத்தையும் நேர்மையையும் கடைபிடிக்கும்படி வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர்களே… அதற்காக நிச்சயம் உங்களைப் பாராட்ட நினைத்தேன்.”
“மகிழ்ச்சி ஸார். நான் எட்டாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் பள்ளிப் பாடத்தில் நீதியைப் போதிக்கும் கதைகள் நிறைய இருக்கும். அதனால் நன்மை, தீமை; நல்லது, கெட்டது என்பதற்கான வித்தியாசங்களை நாங்கள் தெரிந்துகொண்டோம். அதுதான் இன்று என்னை நேர்மையாக வழிநடத்திக் கொண்டிருக்கிறது.
“ஆனால் இன்று பள்ளிப் பாடங்களில் இதுபோன்ற நீதிக்கதைகள் இல்லை. நான் என் பேரன்களுக்கு முடிந்தபோது நீதிக்கதைகள் நிறையச் சொல்லுவேன். பிற்காலத்தில் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்க அவர்களை அறிவுறுத்துகிறேன்…”
என் முகம் பிரகாசமாவதை சரஸ்வதி கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். ஆனால் நான் அவளை நேருக்குநேர் பார்த்தபோது முகத்தை பக்கவாட்டில் திருப்பிக் கொண்டாள்.
ரயில் திருநெல்வேலி ஜங்க்ஷனுக்குள் நுழைந்தது. அந்தப் பதினைந்து வயதுச் சிறுவன் புத்தகப் பையுடன் அவசர அவசரமாக இறங்கிக் கொண்டிருந்தான்.
என் மனசு இலகுவானது.