நேர்மையின் நிறம் சிகப்பு….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 23, 2017
பார்வையிட்டோர்: 5,343 
 
 

மத்திய அரசு தணிக்கை அதிகாரி ராஜசேகரன் அறையிலிருந்தபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். கண்ணுக்குக் குளிர்ச்சியாய் வெளியே பச்சைப்பசேல் காடு. அப்படியே வீட்டைச் சுற்றி அச்சு அசலாய் ராணுவ வீரர்;கள் போல் ஏ.கே. 47, பைனாக்குலருடன் தீவிரவாதிகள் காவல்.

இங்கு வந்து இன்றோடு ஒரு மாதம் நான்கு நாட்கள் சிறை ! நினைக்க வியப்புமட்டுமில்லை. துக்கமும் தொண்டையடைத்தது.

அதேசமயம்…..

“சாப் !” அறைக்கு வெளியே குரல் கேட்டது.

திரும்பினார். ராணுவ முறையில் வணக்கம் வைத்தப்படி ஒரு தீவிரவாதி.

“உங்களுக்கு ஒரு சந்தோசமான சேதி. உங்களுக்கு விடுதலை. எங்களை விட்டு பிரியப்போறீங்க.” சொன்னான்.

கேட்ட இவருக்குள் குப்பென்று சந்தோசம் பொங்கி காதை அடைத்தது.

“நேத்திக்கே பேச்சுவார்த்தை முடிஞ்சு போச்சு. இன்னைக்கு எங்க பாஸ் வந்து உங்களைச் சந்திச்சு நேரடியாய் உங்ககிட்ட சேதி சொல்லி எங்களுக்கு உத்தரவிடுறார்.” சொல்லிச் சென்றான்.

குதித்து கும்மாளமிடவேண்டிய ராஜசேகரன் மெல்ல நாற்காலியில் அமர்ந்தார்.

‘எங்கே கொண்டு விடுவார்கள். தன்னைப் பிடித்த இடத்திலேயா. டெல்லியில் எங்காவது ஒரு மூலையிலா. இல்லை.. ஆளை இங்கே விடுகிறோம் அழைத்துச் செல்லுங்கள் பேச்சா. அதுவுமில்லை சினிமா பாணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தீவிரவாதிகள் ஒருபுறம் அதிகாரிகள் எதிர்புறம் நின்று அவர்கள் ஆட்களையும் தன்னையும் செல்லுங்கள் என்று போகச் செய்வார்களா ? எப்படி பேச்சுவார்த்தை ?’

‘எப்படியோ நாளைக்கு விடுதலை. இத்தனை நாட்கள் அஞ்ஞாதவாசத்திற்கு முடிவு. இந்த காட்டிலிருந்து விடுதலையாகி வெளி உலகம் பார்க்கப்போகிறோம். மனைவி மக்கள்களுடன் சேரப்போகிறோம்; நினைக்கும் போது உள்ளுக்குள் ஒரு பூரிப்பு புதுவகையான தெம்பு வந்தாலும் நாளைக்கு இவர்களை விட்டுப் பிரியப்போகிறோம் !’ நினைவு சட்டென்று அவர் மனசுக்குள் கனத்தை ஏற்படுத்தியது.

வெளியே வெறித்தார்.

எப்போதும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் டெல்லியின் இதயம் சாந்தினி சௌக்கில் சாதாரண மக்களோடு மக்களாய் ஏதோ ஒரு கடையில் பொருள் வாங்கியவரின் முதுகில் ஒருத்தன் நெருங்கி யாருக்கும் தெரியாமல் துப்பாக்கி வைத்து… “சாப் ! துப்பாக்கி! இங்கே நான் மட்டுமில்லே. சுத்தி பத்துப் பேர். நாலு மனித வெடிகுண்டு. நீங்க முரண்டு பிடிக்காம எங்ககூட நடந்தீங்கன்னா உங்க உயிருக்கு உத்திரவாதம். மக்களுக்கும் சேதம் இருக்காது ! பிடிச்சா அத்தனையும் நடக்கும்.” கிசுகிசுத்தான்.

ராஜசேகரனுக்கு ஒரே ஒரு விநாடிதான் அதிர்ச்சி. நிலைமையை உள்வாங்கிக் கொண்டபின் மௌனம்.

அடுத்த விநாடி சுற்றி உள்ள எவருக்கும் எந்தவித சந்தேகமும் ஏற்படாதவாறு நெருங்கி நடத்தி வந்து காரில் ஏற்றி… ரொம்ப சுலபம், சாதாரணமாக கடத்தி விட்டார்கள். இரண்டு நாட்கள் பயணத்திற்குப் பின்தான் இந்த நடுகாடு, வீடு.

“ராஜசேகரன் சார் ! உங்களைக் கடத்துறதும், கஷ்டப்படுத்துறதும் எங்க நோக்கமில்லே. எங்களுக்குத் தேவை…திகார் சிறையில் இருக்கிற ஆறு தோழர்;கள். அவர்களை விடுதலை செய்ய நீங்க கருவி. நீங்க இங்கே சிறை வைக்கப்பட்டிருக்க நினைப்பே வேணாம். இந்த வீட்ல எங்கே எப்படி வேணுமின்னாலும் இருக்கலாம். சுதந்திரமாய் எங்க கண்ணுக்கு முன் சுத்தலாம் பேசலாம். இது எங்க விருந்தினர் மாளிகை. தப்பி மட்டும் போகவேணாம். உயிர் இருக்காது.” கடத்தி வந்தவன் சொன்னான்.

அதுவரை கலவரமாய் இருந்தவருக்குள் சின்ன ஆறுதல்.

நான்கு நாட்கள் மனைவி, மக்கள் பிரிவு. அவர்கள் துக்கம், கஷ்டம். அடுத்து வழி இல்லை என்று தெளிந்த பின்தான் இருக்கும் இடத்தோடு ஒன்ற ஆரம்பித்தார்.

கொஞ்சமாய் ஒவ்வொருவரிடமாக பேச்சுக் கொடுத்தார். அவர்கள் சுலபமாக பழகவில்லை. இறுக்கம் காட்டினார்கள். பின் இவரது பேச்சு நடவடிக்கையில்…..திருப்தி ஏற்பட்டபின் மெல்ல பேசி…பின் சரளமானார்கள். பின்தான்…

“தோழா ! உங்க நோக்கம் குறிக்கோள் என்ன ?” அவர்கள் நாடியைப் பிடித்தார்.

“காஷ்மீர் பாகிஸ்தானோட சேரனும்.”

“நீங்க பாகிஸ்தானியா ?”

“இல்லை. இந்தியார். இந்திய நாட்டுப் பிரஜை.!”

“பின் ஏன் இந்த ஆசை. நம்ம நாட்டுப் பகுதியை அண்டை நாட்டோடு சேர்க்கிறது துரோகமில்லையா ?”

“இருக்கலாம். ஆனா இல்லே. காஷ்மீரம் முஸ்லீம்கள் அதிகம் உள்ள இடம். பிரிவினையான ஜி;ன்னா காலத்திலேயே சேர்த்திருக்கனும். தவறிட்டாங்க. இப்போ முயற்சிப் பண்றோம். இனம் இனத்தோட சேர்றது நல்லதில்லையா?”

“ஆக…இன உணர்வுமிக்க இந்தியர்கள் !” புன்னகைத்தார் ராஜசேகரன்.

ஆனால் கேட்டவர்கள், பேசியவர்கள் முகத்தில் இறுக்கம் வந்தது.

“உங்க முயற்சி, லட்சியம் நிறைவேறிட்டா தீவிரவாதத்தைக் கைவிட்டுடுவீங்களா ?

“அது எங்க தலைமை தீர்மானிக்க வேண்டிய விசயம்.”

“தலைவர் யார் ?”

.”இது உங்களுக்குத் தேவை இல்லாத விசயம். நமக்கு அநாவசியம்.”

“இருக்கலாம். தெரிஞ்சிக்கலாமில்லையா?”

“தெரிஞ்சிக்கலாம். நாளைக்கு அது எங்க மொத்த பேருக்கும் ஆபத்து.”

அவர்கள் பயம் இவருக்குப் புரிந்தது.

“இது வீண் பயம். அதாவது நான் விடுதலையான பின் மேலிடங்களுக்கு விபரம் சொல்லி நடவடிக்கை எடுப்பேன்னு பயப்படுறீங்க. தப்பு. நான் அப்படிப்பட்ட ஆளில்லே.” சொன்னார்.

“நாங்க யாரையும் நம்புறதில்லே.”

“நம்பிக்கைத்தானே வாழ்க்கை!?”

“நாங்க பேச்சில் மயங்கமாட்டோம்”.

“நான் உங்ககிட்ட என்னை எப்படி புரியவைக்கிறது, நம்பவைக்கிறது தெரியலை. ஆனா உங்களைக் காட்டிக்கொடுத்து அழிக்கும் நோக்கம் எனக்கில்லே.”

“அதுக்கு உத்திரவாதம் ?”

“தெரியலை….” பரிதாபமாகக் கைவிரித்தார்.

“மக்கள் மேல கொஞ்சமும் அக்கரை இல்லாம கோடி கோடியாய் அதுவும் லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கிற அரசியல்வாதிகளை நினைக்கும்போது எங்க நெஞ்சம் கொதிக்குது சார்.” ஒருத்தன் துடித்தான்.

“உண்மை. அதுக்குத்தான் அடுத்த முறை மக்கள் அவுங்களுக்குச் சரியான தண்டனை கொடுத்திடுறாங்களே.” இவர் பதில் சொன்னார்.

“இல்லே சார். ஆயிரம் ஐயாயிரம் லஞ்சம் வாங்கின அதிகாரிங்களெல்லாம்… முகத்தை மூடிக்கிட்டு சிறைக்கு வர்றான் கைதாகிறான். ஆனா…. லட்சம் கோடியில கொள்ளையடிக்கும் இந்த அரசியல்வாதிங்க….மருந்துக்குக்கூட வெட்கம், அவமானப் படாம சிறைக்குப் போய் அடுத்த நாளே வெளியே வர்றாங்க. பணத்தால வாய்தா வாங்குறாங்க. விசாரணைக் கமிசன் அமைச்சு அதை பேச்சு மூச்சில்லாம சாகடிக்கிறாங்க. எந்த விசாரணைக் கமிசன் குற்றவாளிகளைக் கூண்டுல ஏத்தி இருக்கு சொல்லுங்க பார்ப்போம்.?” ஒரு சிங் கோபப்பட்டான்.
ராஜசேகரனால் வாயைத் திறக்கமுடியவில்லை.

“இப்படி நிறையக் கொதிச்சுதான் சார். நாங்க ஆயுதத்தைக் கையிலெடுத்தோம் எடுக்கிறோம்.”

“இங்கே இன்னொரு சுதந்திரப் போராட்டம் வரும், வரனும் சார்.”

“இந்த சனநாயகம் சாகனும் சார்.” ஆளாளுக்கு ஆவேசப்பட்டார்கள்.

“உங்க தலைவரைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும் ?” ராஜசேகரன் பேச்சை மாற்றினார்.

“நிறையத் தெரியும். அவர் இந்தி;ய நாட்டுப் பிரஜை. மக்களுக்காக நிறைய போராட்டங்கள் நடத்தி இருக்கார். அரசியல்வாதிகள் அதிகாரிகள் கொலை கொள்ளை ஊழல்ன்னா இவருக்கு வெறுப்பு. அதனால் பல போராட்டங்கள் நடத்தி சிறைக்குப் போயிருக்காhர். தப்பிச்சிருக்கார். தண்டனையும் அனுபவிச்சிருக்கார்.”

“நீங்க எப்படி இந்த இயக்கத்தில் சேர்ந்தீங்க ?”

“படிச்சு வேலை இல்லாத விரக்தி, நாட்டோட போக்கு, அரசியல்வாதிகள் அடவாடித்தனம், அட்டூழியம்….. எல்லாம் சேர்ந்து சுனாமியாய்த் தாக்கி எங்களை இங்கே ஒதுக்கிடுச்சு. இந்த இயக்கத்துல இருக்கிற ஒவ்வொருத்தன் தாக்கமும் இதுதான். துப்பாக்கித் தூக்கி ஆயுதத்தால அயோக்கியர்களை துடைச்சி எறிஞ்சி இந்திய நாட்டை சுத்தப்படுத்துறதுதான் எங்க நோக்கம், கொள்கை.”

“உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் இப்போ தொடர்பு இருக்கா ?”

“இல்லே.”

“பிரயோஜனம் ? அதாவது நீங்க குடும்பத்துக்கு உதவுறீங்களா ?”

“இல்லே.”

“குடும்பம் எப்படி எந்த நிலையில் இருக்குன்னாவது தெரியுமா ?”

“தெரியாது.”

“பெத்த தாய் தகப்பன் குடும்பம் மொத்ததுக்கும் நன்றிக்கடன் தீர்க்க முடியாத நிலை உங்க நிலை. இதுதான் உண்மை இல்லையா ?”

“…………………………அஅ ஆமாம்.”

இப்படி கொஞ்சம் கொஞ்சமாய்ப் பேசி….அவர்கள் இளகி வரும் சமயத்தில் விடுதலை. !

நமக்கு விடுதலை தேவையா ? சட்டென்று அவருக்குள்ளே ஒரு மறுப்புக் குரல் எழுந்தது.

மனைவி மக்களுக்கு தன் பிரிவைத் தவிர அவர்களுக்கு குறை ஏதுமில்லை. பி;ள்ளை படித்து ஐ.ஏ.எஸ், பெண் படித்து அமெரிக்காவில் குடித்தனம். மனைவி வாழ்நாள் முழுதும் நிம்மதியாய் இருக்க நியாயமாய்ச் சம்பாதித்த வீடு, பணம், பரம்பரை சொத்து,இவரும் வாழவேண்டியதெல்லாம் வாழ்ந்து வி;ட்டார். இங்கு இருந்து இவர்களைத் திருத்தி….
நினைக்கும் போது….படபடவென்று துப்பாக்கிகள் வெடித்தது. துணுக்குற்றுப் பார்த்தார்.

தலைவர் வருகைக்காக தொண்டர்கள் வரவேற்பு. அவர் படி ஏறினார்.

வந்தார்.

“சாப்! பேச்சு வார்த்தை வெற்றி. எங்க கோரிக்கையை அரசாங்கம் ஏத்துக்கிடுச்சு. எங்க ஆட்களும் தற்போது வெளியே வந்தாச்சு. உங்களைக் கொண்டு போய் சேர்க்கிறதுல சின்ன சிக்கல் !” நிறுத்தினார்.

“சொல்லுங்க?”

“உங்களாலதான் நிறைய ஊழல்கள் வெளியே தெரிஞ்சுதாம். இதுபோல நேர்மையான அதிகாரி எங்களுக்குத் தேவை இல்லே சொல்றாங்க. என்ன செய்யலாம் ?” துப்பாக்கியை எடுத்தார்.

ராஜசேகரன் அதிர்ச்சியில் உறைந்தார்.

“அது மட்டுமில்லே. நீங்க மறுத்து உயிரோட விட்டாலும் நாங்க விடமாட்டோம். பழி உங்க மேல தானா சேரும். அதுக்கு நீங்களே காரியத்தை முடிச்சிடுங்க. உங்க ஆட்களை விட்டதுக்கு நன்றி விசுவாசமாய் இதைச் செய்யுங்க சொல்றாங்க. மன்னிச்சுக்கோங்க.” முடித்து துப்பாக்கியைப் படபடவென்று வெடித்தார்.

Print Friendly, PDF & Email
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *