அன்று காலை எழுந்தவுடன் ரமணிக்கு மனது சோர்வாக இருந்தது, காரணம் அவர் மனதுக்கு தெரியும், இருந்தாலும் அதை நினைக்கக்கூடாது என வலுக்கட்டாயமாக மனதுக்குள் திணித்தார்.மற்றபடி வழக்கம்போல காலைக்கடன்கள் முடித்து மனைவி லட்சுமியின் சமையலை கிண்டல் செய்து அலுவலக காருக்காக காத்திருந்து, வந்தவுடன் மனைவியின் கன்னத்தை தட்டி “பை” என்று சொல்லி காரில் ஏறினார்.விடை கொடுத்த மனைவி லட்சுமிக்கும் மனது வருத்தமாகத்தான் இருந்தது.தன் கணவன் மன நிலை இன்று எப்படி இருக்கும்? அவர்களை பொருத்தவரை ஓரளவு வசதியுடனே உள்ளார்கள், குழந்தைகள் இருவரையும் கரையேற்றி இருவரும் தனித்தனியாக குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர் கடும் உழைப்பாளி, இவரால் தன் மனசையும் உடலையும் கொஞ்ச நேரம் கூட சும்மா வைத்திருக்க விரும்பாதவர், அப்படிப்பட்டவர் இன்று எந்த மனநிலையில் வருவாரோ? மனதில் பலதும் எண்ணி கலங்கினாள் லட்சுமி!
காரை விட்டு இறங்கிய ரமணி அதே வேகத்தில் தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார், அவரைக்கண்டவுடன் அலுவலக ஊழியர்கள் சட சடவென எழுந்து வணக்கம் சொல்ல இவர்
வரிசையாக தலையசைத்துக்கொண்டே தன் அறைக்குள் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்தார்.
மேசையின் மேல் இருந்த அழைப்பு மணியை அமுக்க உதவியாள் எட்டிப்பார்த்தான், அக்கவுண்டண்டை வரச்சொல்! பத்து நிமிடத்துக்குள், “நான் உள்ளே வரலாமா” என்ற குரலுடன் அக்கவுண்டண்ட் உள்ளே வந்தார். இன்றைய அலுவல்கள்,அனுப்ப வேண்டிய கடிதங்கள்,அனைத்தையும் மள மள வென சொல்லி முடித்தவர், வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? என்பது போல அக்கவுண்டட்டை பார்த்தார். சார் நம்ப டிரைவர் சீனி விசயமா விசாரணை ஒண்ணு இன்னைக்கு பத்து மணிக்கு இருக்கு, ஆமா ஆமா..எனக்கு ஞாபகம் இருக்கு, நான் சொன்ன வேலைகளை எல்லாம் பத்து மணிக்குள்ள முடிச்சிடுங்க சரியா பத்து மணிக்கு நாம இரண்டு பேரும் போய்ட்டு வந்துடலாம்.
டிரைவர் சீனி கைகட்டி நின்று கொண்டிருந்தார், நல்ல அனுபவசாலி, பொள்ளாச்சியில் இருந்து மலைப்பாதையில் வந்துகொண்டிருந்த பொழுது வண்டி வளையும் போது வலது புறம் உள்ள மண் திட்டில் உரசி வண்டியின் வலது புறம் பெருத்த சேதாரம் ஆகியிருந்தது, இதன் காரணமாகவே விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.ரமணன் கேள்விக்கு சீனி அமைதியாக பதிலளித்துக்கொண்டிருந்தார், அக்கவுண்டண்ட் குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார். பின் ஓட்டுனர் சீனியை போகச்சொல்லிவிட்டு நான்கைந்து அதிகாரிகளுக்குள் விவாதம் நடத்திவிட்டு ரமணனும், அக்கவுண்டன்டும், வெளியே வந்தனர், சீனி அவர்களை கை எடுத்து கும்பிட்டு தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தார்,அக்கவுண்டன்ட், சீனியின் தோளை தட்டிக்கொடுத்து உன்னுடைய அனுபவத்தைக்கொண்டு இனிமேல் இம்மாதிரி நடக்காது என்ற உறுதிமொழி கொடுத்ததால் இரண்டு நாட்கள் ‘”சஸ்பென்சனுடன்” முடிக்கலாம் என அறிக்கை கொடுத்துள்ளோம் பார்க்கலாம்,இனிமேலாவது ஒழுங்காக இரு! என்று சொல்லி இருவரும் கிளம்பினர்.சீனி இவர்கள் இருவரையும் பார்த்து கும்பிட்டு நன்றி கூறினார்.
அலுவலகதுக்குள் நுழையுமுன் காண்ட்ராக்டர் பரமசிவம் இவருக்காக காத்திருந்தார்.
ரமணன் உள்ளே வந்தவுடன் அவருக்கு வணக்கம் போட ரமணன் மெல்லிய தலை அசைப்புடன்அவ்ர் அறைக்குள் சென்று அமர்ந்தார். பரமசிவம் மெல்ல அவர் அறையின் கதவை தட்டி உள்ளே வந்தவர் இவர் எதிரில் நின்று சார் என் “பில்” ஒண்ணு நிக்குது, கடைசியா கையெழுத்து போட்டுட்டீங்கண்ணா நல்லா இருக்கும், தலையை சொறிந்தார்.நீங்க எதுனாலும் எதிர்பார்த்தீங்கன்னாலும் செஞ்சு கொடுத்திடறேன். மெல்ல சிரித்தார்.
“பரமசிவம்” எங்கூட நீங்க வேலை செய்ய வந்து இருபது வருசமாச்சு, இது வரைக்கும் எனக்கு என்னைக்காச்சும் உங்க காண்ட்ராக்டர் வேலைக்காக பணம் கொடுத்திருக்கீங்களா?
அப்படி இருக்கையிலே கடைசியில மட்டும் எப்படி உங்ககிட்ட பணம் கேட்பேன்னு எதிர் பார்த்தீங்க? இப்ப கூட என் கூட வாங்க, நான் சொல்ற வேலை எல்லாம் செய்ய ஏற்பாடு
செய்யுங்க, நான் உடனே கையெழுத்து போட்டுடறேன்.
பரமசிவத்துக்கு இவரைப்பற்றி நன்றாகத் தெரியும்,இவருடன் இருபது வருடமாக இருக்கிறார், அவரைப்பொருத்தவரை சொன்ன வேலையை சரிவர செய்திருந்தால் போதும்,
எதையும் எதிர்பார்க்க மாட்டார், அது போல காண்ட் ராக்டர்களின் சிரமங்களையும் எண்ணிப்பார்ப்பார்.மன்னிச்சுங்குங்க சார்,இப்பவே போலாம் சார், என்று ரமணனை அழைக்க இருவரும் வேலை நடக்கும் இடத்துக்கு வந்தனர், ரமணன் ஒரு சில வேலைகளை சொல்ல பரமசிவம் ஆட்களை ஏற்பாடு செய்து அந்த வேலைகளை செய்ய வைத்தார்.பின் இருவரும் அலுவலகம் வந்து பரமசிவத்தின் ஒப்பந்த வேலைக்கான “ஆணைகளை” கையெழுத்திட்டு மேல் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார்.பரமசிவம் நன்றி கூறி வெளியேறினார்.
ரமணனுக்கு பசிக்க ஆரம்பித்தது, மனைவி கட்டிக்கொடுத்த சாப்பாட்டை பிரித்து சாப்பிட்டார், மனைவி கொடுத்த சாப்பாட்டை இங்கிருந்து சாப்பிடுவது இன்றோடு கடைசி என நினைத்துப்பார்க்கையில் அவருக்கு கண்ணீர் வந்தது, மனதை திட்டி அடக்கினார். வாழ்க்கை என்பது எங்காவது ஓரிடத்தில் நின்றுதான் ஆகவேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொண்டார்.
அடுத்த அலுவலக வேலைகளில் பரபரப்பாக இருந்தார். மாலை நான்கு மணி இருக்கும், அவரது அறைக்கதவு தட்டப்பட்டது, ‘யெஸ் கமின்” என்று கம்பீரக்குரலில் சொல்ல அவரது அலுவலக ஊழியர்கள் அனைவரும் உள்ளே வந்தனர், சார்..இன்னைக்கு ஐஞ்சு மணிக்கு மேல ஒரு பார்ட்டி உங்களுக்காக வச்சிருக்கோம். இதைக்கேட்ட ரமணனின் உள்ளம் விழுந்துவிட்டது, இரத்தங்களும் சுண்டினாற்போலிருந்தது, அவ்வளவுதானா? எனது பணி இன்னும் ஒரு மணி நேரந்தானா? இருந்தாலும் மனதை திடப்படுத்திக்கொண்டு “ஆல் ரைட்”
வந்திடறேன், என்று அவர்களை சமாளித்து அனுப்பினார்.
அந்த ஒரு மணி நேரத்தை ருசித்து அனுபவிக்கவேண்டும் என முடிவு செய்தார். ஒவ்வொரு “பைலாக” எடுத்து அவர் எழுதிய அலுவலக குறிப்புகளை எப்படி எழுதினோம் என நினைவு கூர்ந்து மகிழ்ந்தார், அவரது ஒவ்வொரு கையெழுத்தையும் தடவிப்பார்த்து மகிழ்ந்தார்.சுமார் முப்பத்தி மூன்று வருடங்கள்அவ்ர் கை பட்டு புழங்கிய காகிதங்கள், பைல்கள், ஒவ்வொன்றாய் அவருக்கு சம்பந்தமில்லாமல் போகப்போகிறது. அப்படியே கண்ணை மூடி அமர்ந்திருந்தார்.
சரியாக ஐந்து மணி அடிக்க பத்து நிமிடங்களுக்கு முன்னால் கதவு தட்டப்பட்டு அவரது உயர் அதிகாரி மாலையுடன் உள்ளே வந்தார்.வாழ்த்துக்கள் என்று சொல்லி அவருக்கு
மாலை போட்டு கை குலுக்கினார், உயிர் உடலை விட்டு பிரிந்தால் கை எப்படி செயல்படும் என்பதைப்போல கையை குலுக்கினார் ரமணன்.வாங்க போலாம் வெளிய எல்லா
“ஸ்டாப்களும்”காத்துகிட்டிருக்காங்க, அழைத்தார்.இருவரும் வெளியே வர எத்தனிக்க போன் அடித்தது, இனிமேல் நான் போன் எடுப்பது நன்றாக இருக்காது என நினைத்து
ரமணன் தயங்க அவர் தயக்கத்தை புரிந்துகொண்ட அதிகாரி தானே போனை எடுத்தார்.
போனை எடுத்து “ஹலோ” சொல்லி போனை எடுத்து காதில் வைத்தவரின் முக பாவங்கள் மாறிக்கொண்டே இருந்தன, ஓஹொ அப்படியா.. என பல்வேறு ஆச்சர்ய முகபாவத்துடன் போனை கீழே வைத்தவர் “கங்கிராட்ஸ்” மிஸ்டர் ரமணன், உங்களுக்கு மூன்று வருசம் எக்ஸ்டன்சன் கொடுத்திருக்காங்க, அது மட்டுமல்ல உயரதிகாரியாக போஸ்ட் பண்ணி சென்னைக்கு வரச்சொல்லியிருக்காங்க, “வாழ்த்துக்கள்” மறுபடியும் கை குலுக்கி ‘ஓகே” இந்த பார்ட்டியை உங்க புரமோசனுக்காகவும்,டூட்டி எக்ஸ்டன்சனுக்காகவும்,எங்களை
விட்டு சென்னைக்கு போறதுக்காகவும் நடத்திடலாம்.