அந்த புத்தம் புதிய பளபளப்பான எட்டு அடுக்குக் கட்டடத்தின் ஏழா வது தளத்தில், கிட்டத்தட்ட இருபது இளைஞர்கள் டிப்-டாப்பாக உடை அணிந்து, கையில் பைல்களுடன், முகத்தில் எதிர் பார்ப்புடன், ஒரு பெரிய கூடத்தில் அமர்ந்திருந்தனர்.
உதட்டுச்சாய இதழ்களில், நுனி நாக்கு ஆங்கிலம் தவழ, புன்னகை யுடன் அமர்ந்திருந்த வரவேற்பாளினி, ஒவ்வொருவரின் பெயரையும் மென் மையாக அழைத்து, அவர்களின் பைல்களை வாங்கி, அதிலிருந்த சான்றிதழ்களைப் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தாள்.
அவர்கள் எல்லாருமே, அந்தப் புதிய நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் இளைஞர்கள்.
இருபத்தி இரண்டிலிருந்து, முப்பது வயதுக்குட்பட்டவர்கள் தான், அத்தனை பேரும். நாசுக்கான உடை, சிலர் முகத்தில் அசாத்திய தன்னம்பிக்கை, சிலர் முகத்தில் லேசான அச்சம், சிலர் முகத்தில் ஆழ்ந்த சிந்தனை என்ற வகையில், பலவிதமான இளைஞர்கள். அருகருகே அமர்ந் திருக்கும் ஒரு சிலர் மட்டும், சன்னமான குரலில், ஏதோ உரையாடிக் கொண் டிருந்தனர்.
கோட், சூட் அணிந்து, தலை நரைத்து, வழுக்கை விழுந்த சில கனவான்கள் மிடுக் காக, மின் தூக்கியி லிருந்து விடுபட்டு, ஷூ, “டக் டக்’ என்று ஒலிக்க, முகத்தில் கர்வம் தாண்டவமாட, காத்திருந்த இந்த இளம் வாலிபர்களை அலட்சியப் புன்னகையுடன் பார்த்தபடி, நேர்முகத் தேர்வுக்காக ஒதுக் கியிருந்த அறையை நோக்கிச் சென்றனர்.
ரிசப்ஷனிஸ்ட் புன்னகையுடன், அவர் களுக்கு வணக்கம் தெரிவித்து அனுப்பிய பின், காத்திருந்த இளைஞர்களிடம், “”இன்னும் பத்து நிமிடத்தில் இன்டர்வியூ தொடங்கி விடும்,” என்றாள். அப்போது, சாவகாசமாக மற்றொரு இளைஞன் மின்தூக்கி கதவுகள் திறக்க, வந்து ரிசப்ஷனிஸ்ட்டை நெருங்கினான்.
“”யெஸ்…” என்று புன்னகை புரிந்த அந்தப் பெண்ணிடம், “”என் பெயர் அரவிந்த்… நான் வரக் கொஞ்சம், “லேட்’டாகி விட்டது,” என்றான் புன்னகையுடன்.
வனுடைய கடிதத்தையும், இதர சான்றிதழ்களையும் வாங்கிய அந்தப் பெண், “”ஐ ம் சாரி… நீங்கள் கடைசியாக வந்ததால், உங்களைக் கடைசியில் தான் அழைக்க முடியும்…” என்றாள்.
“”ஓ… அதனால் பிரச்னை யில்லை… நான் காத்திருக் கிறேன்…” என்று கூறிய அரவிந்த், அந்த இளைஞர் வரிசையில், காலியாக இருந்த கடைசி நாற்காலியில் அமர்ந்தான்.
அமர்ந்த மறுவினாடியே, “”ஹலோ… ஐ’ம் அரவிந்த்… நீங்கள்?” என்று அருகில் அமர்ந்திருந்த இளைஞனிடம் பேச்சை ஆரம்பித்தான்.
அவர்களின் பேச்சுக் கிட்டத்தட்ட பத்து, பதினைந்து நிமிடங்கள் தொடர்ந்தது. அதை நிறுத்தும் வகையில், “”மிஸ்டர் ரவி…” என்று ரிசப்ஷனிஸ்ட் அழைத்தாள்.
அரவிந்துடன் பேசிக் கொண்டிருந்த இளைஞன், பரபரப்பாக எழுந்து, “”யெஸ்… ஐ’ம் ரவி…” என்றான்.
“”நீங்கள் உள்ளே போகலாம்…” என்றாள் அந்தப் பெண்.
ரவி, அரவிந்தைப் பார்த்து புன்னகை புரிந்து, அவன் சொன்ன, “ஆல் த பெஸ்ட்’யை வாங்கிக் கொண்டு, இன்டர்வியூ அறை நோக்கிச் சென்றான்.
அடுத்து அமர்ந்திருந்த இளைஞனிடம் அரவிந்த் பேச ஆரம்பித்தான்.
தொடர்ந்து வந்த அழைப்புகளில், மாறி மாறி உள்ளே இளைஞர்கள் செல்வதும், சிலர் மலர்ந்த முகத்துடன் வெளியே வந்தபடி இருந்தனர்.
காத்திருந்த இளைஞர்கள், இன்டர்வியூ முடித்து விட்டு வந்தவர்களை ஆவலுடன் நெருங்கி சூழ்ந்து கொண்டு, “உங்களை என்ன கேள்விகள் கேட்டனர்?’ என்று விசாரித்துத் தெரிந்து கொண்டிருந்தனர்.
பத்து பேரின் நேர்முகம் முடிந்த பின், கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள், நேர்முகம் செய்த கனவான்கள், ஓய்வு எடுத்து, பின்னர் தொடருவர் என்று அறிவிக்கப்பட்டது.
கடைசியாக வந்த அரவிந்த் என்ற இளைஞன் மட்டும், சிரித்த முகத்துடன் அநேகமாக ஒவ்வொருவரிடமும் ஏதோ பேசிக் கொண்டி ருந்தான். கடைசியாக அவன் பெயர் அழைக் கப்பட்டதும், உள்ளே சென்றான்.
உள்ளே நுழைந்த அவன், “”குட் ஆப்டர் <<<<<நூன் ஜென்டில் மென்…” என்றபடி வந்தனம் செலுத்தினான்.
கிட்டத்தட்ட இருபது பேரைப் பேட்டி கண்டு, சோர்ந்து போயிருந்த அந்த மூன்று பேரும், அரவிந்தை நிமிர்ந்து பார்த்து, “”ப்ளீஸ் டேக் யுவர் சீட்…” என்றனர்.
“”நன்றி,” என்று கூறிவிட்டு, அமர்ந்த அவனை நேரில் பார்க்காமல், அவனுடைய விண்ணப்பத்தாளில் இருந்த அவனைப் பற்றிய விவரங்களை நுணுக்கமாகப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த மூவரும்.
“”நீங்கள் கெமிகல் இன்ஜினியரிங் முடித்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வேலைக்கு வந்திருக்கிறீர்கள். இடைப்பட்ட இந்த சமயத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”
“”இரண்டு கம்பெனிகளில், தாற்காலிக வேலையில் இருந்தேன்…”
“”ஓ… அது என்ன வேலை?”
“”ஒன்று: ஒரு மென்பொருள் தயாரிக்கும் கம்பெனி… அதில், ஒன்றரை ஆண்டு இருந்தேன். ஆனால், ஒரே மாதிரியான அந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை… அதனால், அதை விட்டு ஒரு நாளிதழில் ஜர்னலிஸ்ட்டாகக் கொஞ்ச நாட்கள் பணியாற்றினேன்…”
மூவரும் ஒருவரை ஒருவர், பார்த்துக் கொண்டனர்.
“”உங்கள் படிப்புக் குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத வேலை என்று உங் களுக்குத் தோன்ற வில்லையா?”
அரவிந்த் புன்னகை செய்தான்.
“”ஆமாம்… ஆனால், இந்தக் கம்பெனியில் நீங்கள் என்னைக் கூப்பிட்டிருக்கும் வேலை மட்டும், என் படிப்புக்கு நேரடித் தொடர்பு உள்ளதா என்ன?”
நடுவில் அமர்ந்தவரின் முகம் சிவந்தது.
“”ஆனால், இது இன்ஜினியரிங் சம்பந்தப் பட்ட வேலை… தெரியுமல்லவா?” என்றார் கடுமையாக.
“இருக்கலாம்… ஆனால், இரண்டு போஸ்ட் மார்க் கெட்டிங்… இரண்டு டிசை னிங்… முதல் வேலைக்குப் பேசத் தெரிய வேண்டும்; இரண்டாவதுக்கு, கம்ப்யூட்டர் உபயோகிக்கத் தெரிய வேண்டும்… அவ்வளவு தானே!”
மற்றவர் நாசுக்காகப் பேசினார்…
“யு ஆர் ஸ்லைட்லி இம்பர்டினன்ட்… பரவாயில்லை… உங்களைக் கெமிகல் இன்ஜினியரிங்கில் கேள்வி கேட்கலாமா?”
“”கேளுங்கள்…”
“”தெர்மோ டைனமிக்சின் விதிகள் என்ன?”
ன்னான்.
“”ஒரு டிஸ்டிலேஷன் கலத்தை டிசைன் செய்ய, என்ன ஈக்வேஷன்கள் தேவை?”
அரவிந்த் புன்னகை செய்தான்.
“”தெரியாது…”
“”ஜர்னலிஸ்டாக வேலை பார்த்தேன் என்கிறீர்கள்… எந்த வருஷம் ரவீந்திர நாத் தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது?”
“”அவர் கீதாஞ்சலிக்காக வாங்கினார் என்று தெரியும்… வருஷம் நினைவில்லை…”
மேலும், சில கேள்விகள் வேண்டுமென்றே, அரவிந்தை மட்டம் தட்டுவதற்காகவே எழுப்பப்பட்டது.
கடைசியில் அரவிந்த், “”நான் உங்களை ஒன்று கேட்கலாமா?” என்றான்.
“”ம்… கேளுங்கள்…”
“”பிதாகரஸ் தீரத்தை அந்த போர்டில் சென்று நிரூபிக்க முடியுமா, உங்களில் யாராவது ஒருவரால்?” என்றான்.
மூவரும் ஒரு கணம் விழித் தனர்.
“”அதை நிரூபிப் பது மிக நீளமான வேலை… ஆனால், அந்த சூத்திரம் எல்லாருக்கும் நினைவி ருக்கும். அது போலத் தான் ஒவ் வொரு விஷய மும்… உங்கள் கேள்வி களில், எனக்குத் தெரியாததை, நீங்கள் கொண்டு வந்து நான் திணற வேண்டும் என்ற நோக்கம் தான் தெரிந்ததே தவிர, எனக்குத் தெரிந்ததை உங்களுக்கு அறிந்து கொள்ள வேண்டும், என்னுடைய குணங்கள், பலம், பலவீனம் எவை என்பதை உணர்ந்து கொள்ளும் எண்ணம் தெரியவில்லை…”
“”மிஸ்டர் அரவிந்த்… நீங்கள் அனாவசியமாகப் பேசுகிறீர்கள்… எங்கள் நிறுவனத்திற்கு, சிறப்பாக நேர்முகப் பேட்டி எடுத்து, சிறந்த இளைஞர்களைத் தேடித் தரும் திறமை உள்ளது…”
“”நீங்கள் இப்போது தேர்ந்தெடுத்திருக்கும் இளைஞர்கள் யார்?”
“”அதைக் கேட்க நீங்கள் யார்… உங்களை நிச்சயமாகத் தேர்வு செய்யவில்லை… செய்யவும் முடியாது…”
அரவிந்த் மீண்டும் புன்னகை செய்தான்.
“”உங்கள் இரண்டாவது வாக்கியம் எனக்குத் தெரியும்… ஆனால், முதல் கேள்விக்கு என் பதில் இதோ…” என்று, தன் சட்டைப் பையில் இருந்து ஒரு அடையாள அட்டை எடுத்து நீட்டினான்.
குழப்பத்துடன் அதை வாங்கிப் பார்த்த மூன்று கனவான்களும் விழித்தனர்.
“என்னது… நாங்கள் வேலைக்கு ஆள் தேர்ந்தெடுக்கப் போகிற கம்பெனியின் ஹ்யூமன் ரிசோர்ஸ் ஆபிசரா நீங்கள்?” என்றார் நடுவில் இருந்தவர் திகைப்புடன்.
“”யெஸ்… நான் இரண்டு வருடம் எம்.பி.ஏ., படித்துவிட்டு, ஒரு ஆண்டு வெளிநாட்டு வேலைக்குப் பின், இந்தக் கம்பெனியில் சேர்ந்து ஆறு மாசமாகிறது…”
“”வாட்…”
“”யெஸ்… நீங்கள் எப்படித் தேர்வு செய்கிறீர்கள் என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளத்தான், நான் என்னையே ஒரு வேலை தேடுபவனாக அறிமுகப்படுத்திக் கொண் டேன்…”
அவர்கள் மூவரும், ஒருகணம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர்.
“நீங்கள் தேர்வு செய்தவர்களின் பெயர்களைக் காட்டுங்கள்…” என்றான் அரவிந்த்.
“”நீங்கள் சொல்வதை நாங்கள் எப்படி நம்புவது?” என்றார் மூவரில் ஒருவர் விரைப்பாக.
“”இதோ என், “பாஸி’ன் கார்ட்… நீங்கள் அவருக்குப் போன் செய்து பேசலாம்…” என்று ஒரு கார்டை எடுத்து நீட்டினான் அரவிந்த்.
அதில் இருந்த மொபைல் எண்ணில் பேசிய அவர், “”ஓ… ஐ.ஸீ… அப்படியா… ஹ… ஹ… நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை… ஓ.கே., சரி… சரி…” என்று அசடு வழிந்தார்.
ஆனால், பேசிய பின் அவர் முகம் இறுகியது.
தாங்கள் தேர்வு செய்த நான்கு பேரின் விண்ணப்பங்களை, அரவிந்த் முன் நகர்த்தினார் அந்தப் பிரமுகர்.
அதைப் பார்த்த அரவிந்த், அந்த மூவரையும் பார்த்து, “”நீங்கள் தேர்வு செய்த நபர்களுடனும் நான் வெளியில் பேசிக் கொண்டிருந்தேன்… நிச்சயம் அவர்கள் நல்ல புத்திசாலிப் பையன் கள். ஆனால், அவர்கள் இந்த வேலையில் நிலைக்க மாட்டார்கள்… அவர்களின் மனப் போக்கு அப்படி… எங்களுக்குத் தேவை… ஓரளவு சராசரி அறிவுடன், அமைதியான, சொன்னதைக் கேட்டு செய்யும் ஆட்கள் தான். அவர்களை நான் வெளியில் பேசும் போதே உணர்ந்து கொண்டு, தேர்வு செய்து விட்டேன். அந்த லிஸ்டில் உங்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் இல்லை…” என்றான்.
மூன்று பேர் முகத்திலும் ஈயாடவில்லை.
“”பின் எதற்காக இப்படி ஒரு நாடகம்?” – மூவரில் ஒருவர்.
“”இன்று நாட்டில் உள்ள நேர்முகம் என்னும் சில அபத்த நாடகங்களைப் புரிந்து கொள்ள, உள்ளே வரும் இளைஞனைப் பயமுறுத்தி, உன்னை விட நாங்கள் மேம்பட்டவர்கள், புத்திசாலி என்பதை உணர்த்துவதில் தான் உங்கள் எண்ணம் இருக்கிறதே தவிர, வந்துள்ள அந்த இளைஞனின் பலம் எது, பலவீனம் எது… அவனுக்கு வாழ்க்கையைப் பற்றி என்ன அபிப்ராயம் இருக்கிறது, எதில் ஆர்வம் இருக்கிறது… மென்டல் ஸ்டெபிலிட்டி உள்ளதா என்று எதையும் பார்க்கும் நோக்கம் இல்லையே ஜென்டில்மென்…
“”ஐம் சாரி… நீங்கள் எல் லாருமே மிகுந்த அனுபவசாலிகள், மிகவும் புத்திசாலிகள். உங்கள் தளத்தில் இருந்து கொண்டே மற்றவர் களை அந்த நிலைக்கு எதிர்பார்க்கிறீர்கள் அல்லது அவர்கள் உங்கள் அறிவிலிருந்தும் எவ்வளவு கீழே உள்ளனர் என்பதை உணர்த்துவதாகத் தான் இருக்கிறது…
“”நீங்கள் என்று இல்லை… இன்று பெரும்பாலான நேர்முகத் தேர்வுகள் இந்த ரீதியில் தான் செயல்படுகின்றன. இந்த உலகம் புத்திசாலிகளுக்கு மட்டுமே அல்ல கனவான் களே… வேலைகளுக்குத் தகுந்தாற் போல் தான் ஆட்கள் வேண்டுமே தவிர, ஆட்களுக்குத் தகுந்தாற் போல் வேலையை மாற்ற முடியாது…”
மூவரும் திகைத்துப் போய் அமர்ந்திருந்தனர். இந்தத் திருப்பம், அவர்கள் எதிர்பாராத ஒன்று.
“”உங்களில் யாருக்காவது சமையல் தெரியுமா? ஆனால், சமையலில் குறை சொல்லத் தெரியும்… முடி திருத்தத் தெரியுமா… ஆனால், தவறாக முடியைத் திருத்தினால், தண்டிக்கத் தெரியும்… எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டியதில்லை. உங்களில் யாருக்காவது மதர் தெரசாவின் நிஜப் பெயர் தெரியுமா? தெரியாதல்லவா… அதே போல் தான், ஒவ்வொரு மனிதனும்…”
திகைத்துப் போயிருந்த அந்த கனவான்களின் தலை, இப்போது குனிந்திருக்கிறது.
“”உங்கள் உதவிக்கு நன்றி… உங்களுக்கான தொகையும், உங்கள் கம்பெனியை, “என்கேஜ்’ பண்ணியதற்கான பணமும் தவறாது வந்து சேரும்… நான் வருகிறேன்…” என்று கிளம்பினான் அரவிந்த். மூன்று பிரமுகர்களும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல், சிலை போல் அமர்ந்திருந்தனர். அரவிந்த் புன்னகையுடன் வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம் கையசைத்து விட்டு நடந்தான்.
அந்தப் பெண், அவன் மலர்ந்த முகத்தைப் பார்த்து, “”யு லுக் வெரி ஹாப்பி… ஆர் யூ செலக்ட்டட்?” என்றாள்.
“”யெஸ்…” என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டி விட்டு, விரைவாக மின்தூக்கியை நோக்கி நடந்தான் அரவிந்த்.
– ஜூன் 2010