கதையாசிரியர்:
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 10,544 
 

நேர்முகத் தேர்வுக்குத் தயாராகி தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அனிதா. ‘‘என்னடி இது! தலையில் கொஞ்சம் எண்ணெய் தடவி சீவி சடை போட் டுக்கொண்டால் என்ன!’’ – ஆதங்கத்துடன் நான் கேட்க, ‘‘அம்மா! என்னை பெண் பார்க்கப்போகிறார்களா என்ன? எப்போதும்போல் இருந்தால் போதும்’’ என்றபடி கிளம்பினாள்.

‘‘சாமியிடம் வேண்டிக்கொண்டாயா? அப்பா உன்னுடன் வரவேண்டாமா?’’ என்றேன். அவளோ, ‘‘சாமி கும்பிட்டாச்சு. நீ இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்கிறாய். அப்பா கூடவே வந்தால் அங்கு உள்ளவர்கள் கிண்டல் செய்வார்கள்’’ என்று கூறிவிட்டு, டாட்டா காண்பித்து வெளியேறினாள்.

மென்பொருள் நிறுவனத்தின் நேர்முகத்தேர்வுக்கு அவளது முதல் முயற்சி இது. புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமாம். அதனால் தகுந்த முன்னேற்பாட்டுடன் செல்கிறாள்.

நேர்முகம்

பெண் உரிமை பற்றிய கனவுகள், கற்பனைகள் மெய்ப்பட வேண்டுமென்றால், தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்கி முழுசுதந்திரத்தையும் கொடுத்துத்தான் ஆகவேண்டும். நானும் வேலைபார்த்து விருப்ப ஓய்வு பெற்றவள்தான் என்றா லும், அனிதாவின் பார்வையில் நான் பத்தாம்பசலி!

நான் அப்பாவுடன்தான் சென்றேன் நேர்முகத் தேர்வுக்கு. அதில் வெற்றி பெற்றது விந்தையான அனுபவம். நிழலாடும் நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்காதவை.

படிப்பில் நான் சராசரி. அது அரசுத் துறை நிறுவனம்.தேர்வாளர்கள் மூன்று பேர். அவர்களுக்கு எதிரே அமர்ந்தவுடன் எனக்கு ஒரே உதறல். தெரிந்த வினாக்களுக்குக்கூட தப்புத்தப்பாக விடையளித்தேன். மனப்பதற்றத்தை சிரமத்துடன் சமாளித்தேன். என் விண்ணப்பத்தைப் புரட்டிக் கொண்டே வந்தவர், மேலும் கேட்க ஆரம்பித்தார். நல்லவேளையாக நான் ஈடுபாடு செலுத்தும் தளம்.

‘உங்கள் பொழுதுபோக்கு?’

‘இசை.’

‘வாய்ப்பாட்டா, கருவிசார்ந்த சங்கீதமா?’

‘வாய்ப்பாட்டு.’

‘ஆர்வம் கேட்பதிலா, பாடுவதிலா?’

‘பாடுவதில்.’

‘முறையாக கற்றுக்கொண்டீர்களா?’

‘இல்லை. சிறுவயதில் ஆரம்பித்து தொடரமுடியவில்லை. கேள்வி ஞானம் உண்டு. சமீபத்தில்தான் பாட ஆரம்பித்தேன்.’

‘இப்போது பாடுவீர்களா?’

‘ஊம். பாடுவேன்.’

‘சரி. உங்களுக்குப் பிடித்த பாடலைப் பாடுங்கள்.’

‘தரையில் உட்கார்ந்து பாடினால் தான் பாட்டு நன்றாக வரும்.’

இன்னொருவர் நக்கலாக, ‘ஜமுக்காளம், ஸ்ருதிப்பெட்டி, தம்புரா எல்லாம் ஏற்பாடு செய்யவில்லையே!’ என்றார்.

‘இல்லை ஐயா! அதெல்லாம் தேவையில்லை. சம்மணமிட்டு உட்கார்ந்து பாடுகிறேன்.’

‘விருப்பப்படி பாடுங்கள். வெளியில் உள்ளவர்களும் கேட்க ஏதுவாக ஜன்னல்களைத் திறந்து வைக்கலாமா?’

‘ஊம். திறக்கச்சொல்லுங்கள்.’

‘குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா!’ – ராஜாஜி எழுதி சுப்புலட்சுமி அம்மா பாடியதை முழுவதும் பாடினேன். வெளியே சலசலப்பு. சிலர் சிரித்துக்கொண்டிருந்தனர்.

‘இது நேர்முகத் தேர்வா, பாட்டுக் கச்சேரியா?’

‘நம்மைக் கூப்பிட்டிருப்பது பெயரளவுக்குத்தான். முரண்பாடாக எதையாவது கேட்டு, எல்லோரையும் அனுப்பிவிட்டு, அவர்கள் முன்னதாகவே தேர்வு செய்தவர்களின் பெயர்களை அறிவிப்பார்கள். எல்லாம் கண்துடைப்பு.’

இதுபோல சிலர் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.

‘நீங்கள் பாடியது பிரமாதம். வாழ்த்துக்கள்!’ என்றனர் தேர்வாளர்கள். என் தன்னம்பிக்கைக்குப் பரிசாக அந்த வேலை கிடைத்தது என்பதையும் சொல்லவேண்டுமா என்ன! அங்கு 20 ஆண்டுகள் வேலை பார்த்தேன்.

குடும்பத்தில் நாங்கள் நான்கு பேரும் வேலை, படிப்பு என்று ஒவ்வொரு இடத்தில் இருப்பதும், எப்போதாவது பார்த்துக்கொள்வதும்.. ‘இதுதான் நல்ல குடும்பத்துக்கு இலக்கணமா?’ என்ற கேள்வி மனதில் அடிக்கடி எழுந்தது. விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு வந்து விட்டேன்.

மணி 3. அனிதா திரும்பிவிட்டாள். முகம் சற்று வாட்டத்துடன் இருந்தது.

‘‘என்னடி? என்ன ஆயிற்று?’’ என் கேள்விக்கு ஒரு வெள்ளை கவரை நீட்டினாள். பிரித்துப் பார்த்த நான் உற்சாகத்துடன், ‘‘வாழ்த்துக்கள் மகளே! மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லாமல், ஏன் கடுகடுவென்று இருக்கிறாய்? என் பெண்ணுக்கு எல்லாவற்றிலும் வெற்றிதான்!’’ என்று அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன்.

‘‘அடுத்த வாரமே வேலையில் சேரச் சொல்கிறார்களே. என்றைக்கு என்று முடிவு செய்துவிட்டாயா?’’ என்றேன் ஆவலாக.

அவளோ, ‘‘இந்த வேலையில் சேர்ந்தால்தானே? நான் போகப்போவதில்லை’’ என்றாள். ‘‘மிக நல்ல நிறுவனம் என்று நீதானே ஆர்வத்துடன் சென்றாய்?”

‘‘நல்ல நிறுவனம்தான். நிறைய சம்பளமும்தான். ஆனால், திறமையை சோதிக்க கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. ஆனால், நிறைய நிபந் தனைகள். அவர்கள் சொல்வதைக் கேட்கவே தர்மசங்கடமாக இருந்தது. ‘குறைந்தது 2 ஆண்டுகளுக்கு திருமணத்தை தள்ளிப்போடவேண்டுமாம். உடனே குழந்தை பெற்றுக் கொள்ளக்கூடாது. இது மிக முக்கிய புராஜெக்ட் என்பதால் அடுத்த மூன்று ஆண்டுகள் இரவுபகல் பார்க்காமல் வேலை செய்ய வேண்டும். வாரவிடுமுறை தவிர மற்ற நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது. தவிர்க்க முடியாமல் எடுத்தால்கூட, வீட்டில் இருந்தே பணியாற்றல் (Work From Home) என்ற பெயரில் வீட்டிலேயே வைத்து மடிக்கணினியில் வேலை களை முடித்துக்கொடுக்க வேண்டுமாம்.’’

அவள் சொல்லச் சொல்ல எனக்கே பற்றிக்கொண்டு வந்தது. தனிமனித உரிமையைப் பறிகொடுத்துதான் இதுபோன்ற முன்னேற்றத்தை அடைய வேண்டுமா என்ன!

‘‘சரியான முடிவுதான் எடுத்திருக்கிறாய் அனிதா’’ என்று மனதார வாழ்த்தினேன்!

– 20/12/2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *