அவசரமாக பஸ்ஸை பிடித்து, அந்த கம்பெனி வாசலை நான் அடையும் பொழுதே காலை மணி 9.45 ஆகி விட்டது.
இன்று காலை 10 மணிக்கு வரவேண்டும் என நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
செக்யூரிட்டி அதிகாரியின் விசாரிப்பு, அடையாள அட்டை, அனுமதி என்ற அனைத்து வித சடங்குகளுக்கு பிறகே…
வரவேற்பு அறையில் பத்தோடு பதினொன்றாக அமர்ந்தேன்.
ஆம், உண்மையாகவே எனக்கு முன்பே…அங்கு பத்து பேர் வெவ்வேறு விதமான முக பாவங்களுடன் அங்கு இருந்தார்கள்.
என் பெயர் வந்தியத்தேவன். பெயர் காரணம் :
அம்மாவின் விருப்பம்.
‘நீங்க நினைப்பது சரியே.!’
அம்மா ஒரு புத்தக பிரியை, அதனால் பொன்னியின் செல்வன் கதையின் தாக்கத்தில் வந்தது தான் எனது பெயர். ஆனால் நந்தினி என்று யாரும்… எந்த இளவரசியும்…இன்னும் என் வாழ்க்கையில் வந்திருக்கவில்லை.
அதனால் நான் ஏற்கனவே ஒரு தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் மென் வேலையிலிருந்தாலும், எனக்கு இந்தக் புகழ் பெற்ற கம்பெனியில் சேரவேண்டும் என்பது நீண்டநாள் கனவு.
இரவு பகலாக தேவையான தகவல்கள் திரட்டி, என்னை நானே தயார்படுத்திக் கொண்டு வந்திருக்கேன்.
‘என்ன மாதிரியான கேள்விகள் வரக்கூடும். எந்த மாதிரி பதிலை எதிர்பார்கிறார்கள் என்பது கூட ஊகம் செய்யுமளவுக்கு தயாராகி இருந்தேன்’.
‘மேலும்,இதுமாதிரி இன்னும் நாலு அல்லது ஐந்து இன்டெர்வியூ பார்த்தால் போதும் …”நேர்முக தேர்வில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி ?” என்று நானே ஒரு புத்தகம் வெளியிட்டு விடுவேன்.’
‘வந்தியத்தேவன்’ என்பதற்குப்பதிலாக எனது பெயரை ‘வாந்தியாதேவன்’ என்று, ஒரு வடஇந்திய பொம்மை அழைத்ததும் எழுந்து நின்றேன்.
படபடக்கும் இதயத்துடன் நடந்து சென்று, அந்த பெண் கைகாட்டிய அறைக்குள்…. பதட்டம் தெரிவிக்காக புன்னகையோடு, அனுமதி கேட்டு விட்டு நுழைந்தேன்.
அங்கே அமர்ந்திருந்த மூவர் குழு படு சீரியசான முக பவானையோடு எனது காலை வணக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
மரிக்கொழுந்து சென்ட் வாசனை அந்த அறையில் லேசாக வந்தது.
இந்த இன்டெர்வியூலே நமக்கு வெற்றி கிடைக்குமா ?!…
டென்த், ப்ளஸ்டூவில் ஆரம்பித்த எக்ஸாம் பயம் போலவே…
ஒரு படபடப்பான பீலிங் , இந்த மாதிரி சூழ்நிலைகளில்…இன்று வரை தொடர்கிறது.
வழக்கம் போல படிப்பு சம்பத்தப்பட்ட கேள்விகள்,பொது அறிவு மற்றும் பகுத்தறிவு கேள்விகள் கேட்டுவிட்டு…
எனது ஒவ்வொரு பதிலுக்கும் பின்புலம் என்ன, மூலம் எது.. என எல்லாம் கேட்டு, நெளிய வைத்துக் கொண்டே இருந்தார்கள்.
இறுதியாக, ஒரு அதிர்ச்சி தரும் கேள்வி கேட்கப்பட்டது.
‘மிஸ்டர் வந்திய தேவன், இந்த இன்டெர்வியூல உங்களோடு சேர்ந்து நான்கு பேர்களை முதல் கட்டமாக தேர்வு செய்து இருக்கிறோம். அதில் இருந்து, இரணடு பேரை மட்டுமே இந்த வேலைக்குச் செலக்ட் செய்ய போகிறோம்’
என்று சொல்லி நிறுத்தி…
என்னோடே ரியாக்சனை எதிர் பார்த்துட்டு..
நான் ஏதோ புரிந்த மாதிரி தலையை ஆட்டியதும்…
நேர்வகுடு எடுத்து சீவிய தலைக்குச் சொந்தக்காரர் தொடர்ந்து பேசினார்.
‘எக்ஸ்பீரியன்ஸ், குவாலிபிகேஷன் தவிர…மற்றவர்களுக்கும் உங்களுக்கும் பர்சனல் லைப்ப ஒப்பிட்டுப் பார்த்தால்…நீங்க ஓரளவுக்கு வசதியாக இருக்கிறீங்க.! உங்களுக்கு பெரிய அளவில கடன் எதுவும் இல்லை. ஆனால்… மற்ற மூன்று பேரில, ஒருத்தருக்கு அப்பா இல்லை. இவர் சம்பதித்துத்தான் இரண்டு தங்கைகளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும். இன்னொருத்தருக்கு அப்பா ஹார்ட் பேஷண்ட், உடல் நலமில்லாம ‘வி ஆர் எஸ்’ ல வீட்டில இருக்கார். மூன்றாவது ஆள் அவருடைய விவசாய நிலத்தை அடமானம் வைத்து தான் படித்திருக்கிறார். அவருடைய அப்பா கூலி வேலை செய்து தான் குடும்பம் நடத்த வேண்டியிருக்கு. இப்ப நீங்க எங்களுடைய இடத்தில் இருந்தால்….என்ன முடிவு எடுப்பீங்க…? யாரை செலக்ட் பண்ணுவீங்க?! அதுக்கு காரணம் என்ன?! உங்க பதிலை சொல்லுங்க!’
அவர் அப்படி கேட்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.!
எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
‘என்ன?! யாரை செலக்ட் பண்ணனுமின்னு நானே சொல்லணுமா!? இது என்னடா சோதனை…
அதை அவங்களே முடிவு பண்ணிக்க வேண்டியது தானே! எனக்கு இந்தவேலை வேண்டாமின்னு, என் வாயிலே சொல்ல வைப்பதில் இவங்களுக்கு என்ன லாபம்.!?’
இதை மூளைக்கு வேலை தருகிற கேள்வி என்றுச் சொல்ல முடியாது. இங்கே வேலை தர முடியாது என்பதற்கு பதிலாக இப்படி சொல்கிறார்கள் என்று எனக்குத்தோன்றியது.
‘நான் சுயநலமாக யோசிக்கிறவனா…இல்லே..மத்தவங்களுக்கு இந்த வேலையை விட்டுக் கொடுக்க சொல்லுவேன்னு…என் இரக்க சுபாவத்தை சோதனை பண்ணறாங்களோ?!’
மனதுக்கு குழப்பமாகதான் இருந்தது.
‘ஏற்கனவே சொன்னது போல, இந்தக் கம்பெனியில் சேரவேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் கனவு. அதற்காக, இரவு பகலாக கஷ்டப்பட்டு, என்னை தயார்படுத்திக் கொண்டு வந்திருக்கேன்’.
“சீக்கிரம் இந்தமாதிரி பெரிய கம்பெனில சேர்ந்து நல்லா சம்பாதி. நாமும் இந்த வாடகை வீட்டை விட்டு,சொந்த வீடு கட்டி போகலாம். கால காலத்திலே உனக்கு கல்யாணம் காட்சி பண்ணலாம்”
அப்படின்னு ‘எங்க வீட்டுலயும் புலம்பறாங்க.’
‘நானும் இன்டெர்வியூல இதை சொல்லியிருக்கணுமோ?’
‘எனக்கும் இந்த வேலை வேணும்! யார்க்கு கொடுக்கணுமின்னு நீங்கதான் முடிவு செய்யணும்! அப்படின்னு சொல்லி விடலாமா…’ என்று மண்டைக்குள் நிறைய ஓடிக்கொண்டிருந்தது.
‘எஸ் சார். உங்க பதில் என்ன ?! வி ஆர் வெயிட்டிங்’
மூவர் குழுவிலிருந்த சிகப்பு நிற சட்டை போட்ட குறுந்தாடி ஆசாமி… கரகர குரலில் கேட்டார்.
‘உங்க பதில் எதுவாக இருந்தாலும் சொல்லுங்க. ஆனால் அதுவே தான் எங்க முடிவாகவும் இருக்குமுன்னு நினைக்க வேண்டாம். உங்க கருத்தை மட்டுமே எதிர்பார்க்கிறோம்’
மீண்டும் மூவர் குழுவில் வெளுத்த தலை முடியுடன்..
தல தோனியுடைய சாயலில் இருந்த கறுப்புக் கோட்டுகாரர் முக்கலுடன் பேசினார்.
அப்போது சட்டென்று எங்கிருந்தோ ஒரு துணிச்சல் எனக்குள் வந்த மாதிரி இருந்தது.
இலேசாக தொண்டையை கனைத்துக் கொண்டு…
எச்சிலை முழுங்கி விட்டு சொன்னேன்.
‘சார். எனக்கும் இந்த வேலை வேணும்! என் குடும்ப முன்னேற்றத்திற்கும் இந்த வேலை அவசியம். அதேசமயம் உங்க கேள்விப்படி உங்க இடத்தில இருந்து பார்த்தால்…என் பதில் இதுதான்…இந்த வேலை ஒரு விற்பனையாளர் வேலை. அதிக கிளைகள் மற்றும் அதிகமான லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த கம்பெனி மேலும் முன்னேற்றம் அடைய திறமையான ஒருவர் தான் தேவை! இந்த வேலைக்கு தேவையான திறமை யாரிடமிருக்கிறதோ…அதுவே அவருடைய தகுதியாகவும் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். மனிதாபிமான அடிப்படையில், குடும்ப பின்னணியைப் பொறுத்து… இந்த வேலையை கொடுப்பதாக இருந்தாலும்…இந்த கம்பெனியின் வேலை அவருக்குப் பொருந்துமா..?! இந்த வேலையை அவரால் சிறப்பாக செய்ய முடியுமா..?! என்பதையும் சோதித்துப் பார்த்துட்டுத்தான்…முடிவு எடுக்க விரும்புவேன். அதனால் அந்த மூன்று பேரையும் நான் இன்டெர்வியூ பண்ணுவதற்கு ஒரு வாய்ப்பை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று முடித்தேன்.
என்னுடைய பதில் சரியா ?!..அவர்களுக்கு திருப்தி அளித்ததா! என்று தெரியவில்லை.
முக இறுக்கத்தை குறைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கறுப்புக் கோட்டுகாரர் மட்டும் லேசாக புன்முறுவல் பூத்ததாக …அல்லது அப்படி எனக்கு மட்டும் தோணியாதா என்று தெரியவில்லை.
‘நல்லது. நாங்கள் எங்கள் முடிவை, நிர்வாகத்தோடு கலந்து விட்டு விரைவில் தெரியப்படுத்துகிறோம்’ என்றார்கள்.
எனக்கு இங்கே வேலை கிடைக்குமா என்று தெரியாது…ஆனால் பொய்யாக பேசி நடிக்காமல், எதார்த்தமாக மனதில் தோன்றியதை பேசியதில்…மனசுக்கு நிறைவாக இருந்தது.