நெருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2024
பார்வையிட்டோர்: 190 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நஞ்சுண்டராவ் அவசரம் அவசரமாக என்னிடம் ஓடிவந்தார். அவருடைய முகத்திலிருந்த பரபரப்பைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று நான் பயந்துபோய் விட்டேன். “என்ன ராயரே, விசேஷம்?” என்று கேட்டேன். 

“ரொம்ப அவசரம், அஞ்சு ரூபாய் கைமாத்து வேணும்” என்றார் ராவ். 

என்னிடம் பணம் இருந்தது. இரண்டொரு நாட்களுக்குக் கைமாத்தாகக் கொடுத்துப் புரட்டக்கூடிய பணம் அது. வாரா வாரம் படியரிசி வாங்கப் பணம் ஒதுக்கிவைக்க வேண்டியிருக் கிறதே! இல்லை என்று சொல்லவும் மனம் இல்லை; கொடுக்கக் கூடிய வசதியும் இல்லை. அடுத்த மாசம் சம்பளம் வாங்கித்தான் நஞ்சுண்டராவ் கொடுப்பார். 

“என்னய்யா, அத்தனை அவசரம்? ரேஷன் வாங்கக்கூட இன்றுதானே திங்கட்கிழமை?” என்று மழுப்பினேன். 

“ரேஷனா, சனிக்கிழமைக்குச் சனிக்கிழமை தானே, ஐயா நமக்கு ரேஷன் பிரச்னை. இன்று ஊரிலிருந்து சில சிநேகிதர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு சினிமாவுக் குப் போகவேண்டும்” என்று அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். 

“சினிமாவுக்கா? என்னிடம் பணம் இல்லை ஐயா, கடன் வாங்கியாவது நண்பர்களைக் குஷிப்படுத்த வேண்டும் என்று என்ன நிர்ப்பந்தம்?” என்றேன் வெடுக்கென்று. 

“பார்த்தேளா ! தங்களிடம் நிஜத்தை சொல்லி இருக்கப் படாது. ரேஷன் வாங்கவேண்டும் என்று கேட்டால் கொடுத் திருப்பீர். ஆபீசில் கூட, தலைவலி என்று லீவு கேட்டால் கொடுத்து விடுகிறான். நண்பர்கள் வந்திருக்கிறார்கள், லீவு வேண்டும் என்று கேட்டேன்!’ வருஷாந்திரக் கணக்குப் பாக்கி யிருக்கிறது, இப்போது லீவு கிடையாது என்று மானேஜர் முறைத்துவிட்டான். நண்பர்களுக்கு நாம் எவ்வளவு கடமைப் பட்டிருக்கிறோம் என்பதை அவன் கண்டானா? நம்மால் பொய் பேசவும் முடியவில்லை” என்று அலுத்துக்கொண்டார் அவர். 

”லீவு கிடைத்துவிட்டதோ இல்லையோ?” என்று கேட்டேன். 

“கிடைத்தது. நிஜத்தைச் சொன்னதுக்காக கிடைத்த பலன், மூணுநாள் சம்பளமில்லாத லீவு. தலைவலி ஜுரம் என்று சொல்லி டபாய்த்திருக்கலாம்.” 

“ஏன் ஐயா, நண்பர்களை உபசரிப்பது பிரயோசனமான காரியம்தானே? அவர்களுடைய ஊருக்கு நீர் போனால் எப்படி உபசாரம் செய்கிறார்கள்?’ என்று இடைமறித்தேன் நான். 

“பிரயோசனம்தான்; ஆனால் பொய்யைச் சொல்லி …” 

”பொய் சொல்ல வேண்டும் என்பதில்லை, ஐயா, சத்தியம் பேச வேண்டியது தான். அப்பட்டமாகப் பேசக்கூடாது. சத்தி யம் என்பது நெருப்பு, தொட்டால் சுடும், நெருப்பு. அதற்காக நாம் ஒதுக்கி விடுகிறோமா? நெருப்பின் சக்தியை நாம் உபயோகிக்க வில்லையா? 

“உம்முடைய வேதாந்தம் இருக்கட்டும், இங்கிதம் தெரிந்த மனுஷர் நீர் என்று உம்மிடம் வந்தேன். நீரோ கதை பேச ஆரம்பித்து விட்டீர்” என்றார் ராயர். 

நஞ்சுண்டராவ் நல்ல மனிதர். வெகுளி, மனிதர். வெகுளி, சத்தியவாதி. ஆனால் பிறர் அவருக்குச் சூட்டுவது அசட்டுப் பட்டம்தான். “ராயரே, காலத்துக்குத் தக்கவாறு நடந்துக்கணும். உமக்குப் பணம் கொடுக்க ஆசைதான், ஆனால்…” 

“உம்முடைய சால்சாப்பு எனக்கு வேண்டாம். பணம் இருந்தால் எடும் வெளியே” என்று அழுத்தமாகக் கேட்டார் அவர். 

“இதனால்தான் நீர் எங்கே போனாலும் கெட்ட பெயர் வாங்குகிறீர். இது என்ன ஊதாரித்தனம், ஐயா? கடன் வாங்கி யாவது சினிமா பார்த்துச் சந்தோஷப்பட வேண்டும் என்று என்ன நியாயம்!” 

என்னுடைய குரலில் கடுகடுப்பு இருந்ததோ என்னவோ, நான் கோபமில்லாமல் தான் பேசினேன். ஆனால் ராயருடைய முகம் சுண்டிப் போயிற்று. 

“அவசியமில்லாவிட்டால் வருவேனா உங்களிடம் ? உம்மிடம் பொய்யைச் சொல்லியிருந்தால்…” 

“கொடுத்திருப்பேன். சத்தியம் பேசுவதுதான் தர்மம். ஆனால் நாம் பழகும் இடமும் சத்தியம் நிரம்பியிருக்க வேண்டும். ஐஸ் குளிர்ந்த வஸ்து. உஷ்ணம் இருக்குமிடத்தில் அது உருகிக் கரைந்து விடுகிறது: குளிர்ச்சி யிருக்குமிடத்தில், அதைத் தொட்டாலே கையைப் பொசுக்கி விடும்.” 

“ஐயோ மறுபடியும் கதை தானா, பணம்…” என்று எழுந்தார் ராயர். 


அவருடைய கெஞ்சும் முகம் என்னை நெகிழச் செய்துவிட்டது. அவருடைய அவசரத்தையும் நான் புரிந்து கொண்டேன்: ஆனால் ஏதாவது கதையைச் சொல்லிப் போக்குக்காட்டி விடவேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டேன். முடிந்தால் என் பேச்சின் வேகத்தில், அவர் உத்தேசித்துள்ள அனாவசியச் செலவு நேர்ந்து விடாமல் தடுத்துவிட வேண்டும் என்று கூட நினைத்தேன். 

“உமக்கு நம்முடைய காந்தி சேட்டைத் தெரியுமோ இல்லையோ?’” என்று கேட்டேன். 

“ஆமாம், சத்தியாக்கிரக காலத்தில் லேவாதேவிக் கடையை மூடிவிட்டு ஜெயிலுக்குப் போனாரே” என்றார் ராயர். 

“அவரை ஊரில் ரொம்பப் பேருக்குத் தெரியும். அவர் காந்தி பக்தர், பொய் பேசமாட்டார், இரண்டு நாளைக்கு முன்னால் நடந்த சம்பவம்…” 

“என்ன நடந்தது?” என்று ஆவலுடன் கேட்டார் அவர். 

“காந்தி ஸேட்டும் நானுமாக அன்று காப்பி சாப்பிடப் போனோம். எண்பது பைசாவோ – என்னமோ பில் கொடுத் தான், சப்ளை செய்த பையன். வெளியே வரும்போது ஐந்து ரூபாய் நோட்டையும் பில்லையும் கொடுத்தார் சேட்ஜி. கடைக்காரர் என்ன நினைத்துக் கொண்டாரோ என்னவோ, ஒரு ஐந்து ரூபாய் நோட்டு, இரண்டு இரண்டு ரூபாய் நோட்டுகள், சில்லறை இவ்வ ளவும் எடுத்துக் கொடுத்தார். சேட்ஜி திகைத்துப் போனார். தாம் கொடுத்தது பத்து ரூபாயா அல்லது ஐந்து ரூபாய் நோட்டா… என்ற சந்தேகம் எழுந்துவிட்டது, அவருக்கு. பையில் கிடந்த பணத்தைக் துழாவிப் பார்த்தார். நிதானப்பட வில்லை. நான் ஒருவேளை கவனித்தேனோ என்று என்னையும் பார்த் தார். ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்தாற் போலத்தான் எனக்கும் தோன்றிற்று. நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. 

என்னுடைய சாட்சியினால் எவருக்கு நஷ்டம் ஏற்படும் என்று சொல்ல முடியாத நிலையில் நான் சேட்ஜியின் சந்தேகத்தை நிவர்த்திசெய்ய முடியாமல் தெருவில் இறங்கினேன். இதற்குள் அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டார். “என்ன ஸார், ஐந்து ரூபாய்தான் கொடுத்தேன், இவ்வளவு சில்லறை தருகிறீர்களே?” என்று கேட்டார் கடைக்காரரைப் பார்த்து. “பார்த்தீர்களா, என்னவோ ஞாபகம்” என்று அவர் அசட்டுச் சிரிப்புடன் ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து பெட்டிக்குள் போட்டுக் கொண்டார். 

சேட்ஜி பாக்கிச் சில்லறையை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினார். “ஆனாலும் இவ்வளவு மறதி கூடாது. நான் எடுத்துக் கொண்டிருந்தால் அவருக்கு ஐந்துரூபாய் நஷ்டமாயிருக்கும்” என்றார் என்னிடம். தம்முடைய நேர்மையிலே அவருக்கு அத்தனை பெருமை. 

“ஒரு வேளை நீங்கள் மறந்து கொடுத்திருக்கலாம் அல்லவா?” என்ற சந்தேகத்தைக் கிளப்பினேன் நான். 

புருவத்தைச் சுருக்கி நிமிர்த்தினார் சேட்ஜி. “இருக்கலாம்; ஆனால் எப்போதும் சந்தேகத்தின் பலனை எதிராளிக்குத்தான் கொடுக்க வேண்டும். அதுதான் அஹிம்ஸா தர்மம்… கோர்ட்டிலே கூட…” 

நான் கடகடவென்று சிரித்துவிட்டேன். “வெற்றிலை போட்டுக் கொள்ளலாமா?” என்று பக்கத்திலிருந்த கடை வாசலுக்கு சென்றார் சேட்ஜி, கடைக்காரனிடம் கால்ரூபாயை நீட்டி வெற்றிலை பாக்குக் கேட்டார். நானும் கடையை நெருங்கி நின்றேன். கடைக்காரன் இரண்டு பேருக்கும் பாக்குக் கொடுத் தான். இதன் நடுவே வெற்றிலைத் தட்டில் பத்துப் பைசாவைப் போட்டுவிட்டு ஒருவன் சிகரெட் வேண்டும் என்றான். கடைக் காரன் அவனுக்கு சிகரெட் எடுத்துக் கொடுத்தான். அப்புறம் யார் யாரோ வியாபாரம் செய்தார்கள். வாயிலிருந்த பாக்கும் கரைந்து விட்டது. “என்ன அப்பா, வெற்றிலை கொடேன்?” என்று கேட்டேன் நான். 

கடைக்காரன் இரண்டு பேருக்கும் வெற்றிலை கொடுத் தான். தட்டில் கிடந்த பத்துப் பைசாவை எடுத்துப் பெட்டி யில் போட்டு விட்டு மற்றவர்களைக் கவனிக்க முற்பட்டான். 

வெற்றிலையைப் போட்டுக் கொண்டே, சேட்ஜி “பாக்கி எங்கே?” என்று கையை நீட்டினார். 

கடைக்காரன் அவரை வெறித்துப் பார்த்தான். “ஐந்து பைசா வெற்றிலை, ஐந்து பைசா பாக்கு, சரியாப் போச்சே?” என்றான் நிதானமாக. 

“சரியாப் போச்சா? உன் கணக்குப்படி பத்துப் பைசா போனாலும், மிச்சம் பதினைந்து பைசா எங்கே?” என்றார் சேட்ஜி. 

“பத்துப் பைசாதானே ஐயா கொடுத்தீர்” என்றான் கடைக்காரன். “இந்தத் தட்டிலே இத்தனை நாழி கிடந்தது?”  என்றான் மறுபடியும். 

“இல்லை. நான் கால் ரூபாய் உன்னுடைய கையில் கொடுத்தேன். பெட்டியில் போட்டுக் கொண்டாய், பாரு. இந்த பத்துப் பைசா, சிகரெட் வாங்கியவர் கொடுத்தது.” 

“பெட்டியிலே உம்முடைய கால் ரூபாய்தானா கிடக்கும்? வேறு கால் ரூபாயே இருக்காதோ? நன்றாய் ஞாபகப் படுத் திக்கிங்க, ஸார். பத்துப் பைசா கொடுத்துட்டு இப்படி…” 

“இந்தாப்பா, உன்னிடம் பொய் பேசி லாபம் சம்பாதிக்க வேண்டாம். நான் கால் ரூபாய் தான் கொடுத்தேன். மிச்சம் பதினைந்து பைசா கொடு.” 

“என்ன ஸார்,மிரட்டிக் கேட்டா ஏமாந்துடுவேனா ? பத்துப் பைசாதான் கொடுத்தீங்க, உங்களுக்கு வெத்திலை பாக்குக் கொடுத்தப்புரம் தான் அந்தக் காசைக்கூட தட்டி லிருந்து எடுத்துப் பெட்டியிலே போட்டேன்.” 

“என்ன அப்பா, கால் ரூபாய் கொடுத்தார். நீ வாங்கி பெட்டியில் போட்டுக் கொண்டாயே! ஒரேயடியாகப் பேசி னால் என்று ஆத்திரம் தொனிக்கக் கேட்டேன் நான். 

“கொடுத்திருக்கலாம் ஸார், கொடுக்கிற காசைக் கவனிக் காமல் வாங்கிப் பெட்டியிலே போட்டுக் கொண்டிருந்தால் நான் வியாபாரம் செய்ய முடியுமா?” என்றான் அமைதியாக. “நீங்கள் சொல்லுங்கள் சாட்சி. ஆனாலும் வாங்கிய காசு எனக்கு ஞாபகம் இருக்கிறது” என்றான் அவன். 

பத்துப் பதினைந்து நிமிஷம் தகராறு நடந்ததுதான் மிச்சம். அவன் பாக்கியைக் கொடுக்கவில்லை. பத்துப் பைசாக் கொடுத்ததாகவே சாதிதான். சேட்ஜிக்குக் கோபம் வந்து விட்டது. “இந்தாப்பா, நீ பாக்கி கொடுக்க வேண்டாம் ; எதிராளியை மட்டும் முட்டாள் என்று எண்ணிவிடாதே. நான் கொடுத்தது கால் ரூபாய் தான். பாக்கி தராவிட்டாலும், ஞாபகப் படுத்தியாவது பார்” என்றார் படபடப்புடன். 

“ஞாபகப் படுத்திக் கொண்டு தான் ஸார் சொல்லுகிறேன்; நகருங்கள்; அனாவசியமாகக் கும்பல் சேருகிறது.” 

“அப்போ நான் பதினைந்து பைசா நஷ்டப்பட வேண்டு மாக்கும்?” 

“கொடுத்தால்தானே ஸார், நஷ்டப்பட?” என்றான் அலட்சியமாக. 

எனக்குக் கோபம் வந்துவிட்டது. “சேட்ஜி, வாருங்கள் போகலாம். பதினைந்து பைசா தானே? வாருங்கள்” என்றேன். 

“கடைசியாகக் கேட்கிறேன், அப்பா. நன்கு ஞாபகப்படுத்திப் பார். நான் கால் ரூபாய் கொடுத்தேன்; பாக்குக் கொடுத்தாய், நடுவில் யாரோ சிகரெட் கேட்டார்கள்” மிகவும் நிதான்மாகவே சேட்ஜி பேசினார். 

“ஸார், இந்தக் கதை யெல்லாம் வேண்டாம், நீங்க பத்துப் பைசாத்தான் கொடுத்திங்க.” 

“சேட்ஜி, வாங்க” என்றேன் நான். கடைக்காரனுடன் வாதம் செய்து கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. கடையை விட்டுக் கீழே இறங்கினோம். 

“ஒருத்தரு காந்தி; மத்தவரு அவருக்கு சீடப்பிள்ளை” என்று ஒரு குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கி நான் வெறுப்புடன் திரும்பினேன். 

“கதர் வேறே போட்டுக்கிட்டாங்க. பத்துப் பைசா வியாபாரத்திலே அசந்தாப் போயிடும் போல இருக்கு” என்று கடைக்காரன் முணுமுணுத்தான். அவனுடைய கன்னத்தில் ஓர் அறை விட்டு விடலாமா என்ற ஆத்திரம் எனக்கு. சேட்ஜி என் கையைப் பிடித்து நிறுத்தினார், நான் இருக்கும் ஆவேச நிலையைக் கவனித்து. 

“கடைக்காரன் கவனிக்காமலே இருக்கலாம். நாம் தான் ஸார், சாமான் வாங்கிக் கொண்டு காசைக் கொடுக்கவேண்டும். எத்தனையோ ஞாபகம் அவர்களுக்கு” என்றார் ஒருவர். 

சேட்ஜி பதில் பேசவில்லை. அதற்குள் அந்த நண்பர் ‘சேட்ஜி பழைய காங்கிரஸ்காரர்: பொய் பேசமாட்டார். நீ அவரோட போய் தகராறு பண்ணாதே’ என்றார் கடைக்காரனிடம். 

“ஆமாம் ஸார், காங்கிரஸ்காரர் வள்ளல்தான் தெரியுதே. அவருடைய பேச்சை நம்பினால் எனக்கு கால் ரூபாய் பச்சாத் தான்” என்றான் கடைக்காரன். 

சேட்ஜி திரும்பிக்கூடப் பார்க்காமல் தெருவில் நடந்தார். அவருடைய காதிலும் அந்த சம்பாஷனை விழுந்தது என்பதைப் பின்னால் என்னோடு பேசும்போது அவரே சொன்னார். என்னு டைய நெஞ்சு குமுறிற்று. அவர் பொய் பேசமாட்டார். அவர் கொடுத்த காசுக்கு நான் சாட்சி இருக்கிறேன். ஆனாலும் இரண்டு பேரும் பொய்யர்களாகிவிட்டோமே என்று எண்ணிய போது நெஞ்சில் எரிச்சல் தான் உண்டாயிற்று. 


அதுவரையில் கதை கேட்டு வந்த நஞ்சுண்ட ராவ் “பார்த்தீர்களா? நீங்களே இப்படி அனுபவப்பட்டுவிட்டீர்களே? நான் அப்பாவி ஸார்,” என்றார் குழைவாக. 

“இல்லை ; உண்மை பேசுவதும் அவசியம்தான். அது நெருப்பு என்றேனே ! சேட்ஜி உண்மை பேசுகிறார், அதற்குக் கடைக்காரன் மரியாதை வைக்கவில்லை. ஆனால் மனச் சாட்சி…” 

“மனச்சாட்சியெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா ஸார்? ஒன்று, போதும் போதும் என்கிறபடி பணம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பரம ஏழையாக இருக்க வேண்டும். இரண்டுங் கெட்டானாக என்னைப்போல வாழ்கிற வனுக்கு மனச்சாட்சி துன்பம் தான் ஸார்” என்றார் நஞ்சுண்ட ராவ். 

“சத்தியம் பேசவேண்டும், ஆனால் இடமறிந்து பேசவேண் டும் என்று று சொல்லவந்தேன். கடைக்காரனோடு அவ்வளவு நேரம் தர்க்கம் செய்யாமல் சேட்ஜி நகர்ந்திருக்கலாம். கால் ரூபாய் ஒன்றும் பெரிய காசில்லை. சத்திய ஸ்தாபனம் செய்ய அவர் வாதாடினார். ஆனால் பண நஷ்டமும் சிறுமையும்தான் கிடைத்தது. அதனால் தான் சொல்கிறேன்…”

“உங்கள் பேச்சிலே நியாயம் இருக்கத்தான் இருக்கு. என் சம்பந்தப்பட்ட மட்டிலே நான் என்ன ஸார் பண்ணுவது? இல்லாவிட்டால் மூணு நாளைக்குச் சம்பளமில்லாமல் லீவு எடுத்திருப்பேனா?” என்றார் நஞ்சுண்ட ராவ். 

பாவம் அவர் அப்பாவி மனுஷர், அசந்தர்ப்பமாகக் கூட பொய் பேச மாட்டார். அவருடைய முகத்தைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனாலும் நான் என்ன சொல்வது? 

“மணி இரண்டடித்து விட்டதே. இன்று எடுத்துக்கொண்ட லீவு வீணாகிவிடும் போல தான் இருக்கிறது. வராத நண்பர்கள் வந்து விட்டார்கள். என் சோதனைக் காலம்” என்று அலுத்துக் கொண்டார் ராயர். 

பேசாமல் உள்ளே எழுந்து சென்றேன். போகும் போதே ஓரக்கண்ணால் நஞ்சுண்டராவைக் கவனித்தேன். நான் எழுந்து போவதைக் கண்டு அவர் ஏமாந்து விடுவார் என்ற நினைப்பு எனக்கு. அவரோ பிரகாசமான முகத்துடன் எழுந்து நின்றார். உள்ளே சென்று ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தேன். 

“தாங்க்ஸ்” என்று கையை நீட்டிப் பணத்தை வாங்கிக் கொண்டார் அந்த அப்பாவி. 

நானும் ஓர் அப்பாவி தான் என்று சமாதானம் செய்து கொண்டேன்.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *